Loading

திமிர்-10

 

தனக்கான அறையில் அமர்ந்து, நேற்று மாலை எடுத்த மஞ்சள் நீராட்டுவிழா படங்களை மடிக்கணிணியின் உதவியுடன் எடிட் செய்துக் கொண்டிருந்தான்.

 

 

 

“கட்டக் கடைசியில் சடங்கு வீட்டுக்கு உன்னைய ஃபோட்டோ புடிக்க வச்சுப்புட்டாய்ங்களே? மீசைக்காரனுங்க பலே கில்லாடிங்கதேன்.!” என சிரித்தபடியே சொன்னான் காத்தவராயன்.

 

 

“நான் ஒண்ணும் அவிங்களுக்காக சரின்னு சொல்லலை. எல்லாம் என் மயிலம்மாவுக்காகதேன்.!”

 

 

 

“ம்க்கும்! அந்தப் புள்ளை உன்னை வெட்டவா.. குத்தவான்னு பார்க்குது. நீ மயிலம்மாவுக்க ஃபோட்டோ புடிச்சியாக்கும்.!”

 

 

 

“எனக்கு அவளைப் பிடிக்கும், அதனால் அவளுக்காக ஃபோட்டோ பிடிச்சேன்.!” என பதில் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

“இப்போ சொன்ன பார்த்தியா.. இது நூற்றுக்கு நூறு உண்மை டா! சடங்கு வீட்டுக்கு ஃபோட்டோ பிடிக்க போறேன்னு சொல்லிப்புட்டு, வயசுக்கு வந்த பிள்ளையை ஃபோட்டோ பிடிக்காமல் மயிலு புள்ளையை எடுத்து வச்சிருக்கிறே? ஆல்பம் வாங்க வர்ர அன்றைக்கு, ஆப்படிக்க போறாய்ங்க.. சூதானம் டா வீரபத்ரா.!”

 

 

 

“அதெல்லாம் நாங்க பக்காவா எடிட் பண்ணி பதுக்கிருவோமே!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, படபடவென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

 

 

 

“என்னடா, இம்புட்டு சத்தமா தட்டுறாய்ங்க? பயந்து வருது டா, மயிலோட அண்ணேங்களா இருப்பாய்ங்களோ?” 

 

 

“தெரியலையே காக்காவிரட்டி!”

 

 

“அடேய்! அரசி மயனே! உன்னை கொண்டேபுடுவேன். உங்க அக்கப்போருக்குள்ளே என் உசிரை ஏன்டா எடுக்கிறீங்க? உன் வருங்கால மச்சானுங்க தானே? போய் தைரியமாய் கதவைத் திற. ஆனால் ஒண்ணுடா! நாளைப் பின்னே உங்களுக்கு புள்ளை பொறந்துச்சுன்னா, மூணு மாமனுங்களும் உன் புள்ளைக்கு வளைச்சு வளைச்சு சீர் செய்வாய்ங்க! கொடுத்து வச்சவன் டா நீ!”

 

 

 

“அதெல்லாம் நடக்க எம்புட்டு காலம் ஆகுமோ தெரியலை! அப்போ செய்முறை செய்றதெல்லாம் இருக்கட்டும்.. இப்போ என்ன செய்ய காத்திருக்காய்ங்களோ தெரியலையே! நட்ட நடுவில் உட்கார வச்சு நலுங்கு வச்சிருவாய்ங்களோ? பயமா இருக்கு காக்காவிரட்டி!”

 

 

 

“இப்போ பயந்து.. உங்க ஆத்தா சொன்ன அன்றைக்கே கேட்டிருக்கணும். என்னமோ வீர ஆவேசமா கிளம்பி வந்தே? மூணு பேரும் சுத்தி நின்னு உன் முகரையிலேயே நலுங்கு வைக்கப் போறாய்ங்க! இவிங்கக் கிட்டே சிக்கி சின்னா பின்னமாகுறதுக்கு எகிறி குதிச்சு ஓடிருவோமா?”

 

 

 

“ம்க்கும்! சீலிங்கை பிளந்துக்கிட்டுதேன் போகணும்.! ஒத்தைக் கதவைத் தவிர, இந்த அறைக்கு பின்னால் வழியும் இல்லை. நாம ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது காக்காவிரட்டி!”

 

 

 

“ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாதா? என்னத்துக்கு கதவைத் தட்டுறாய்ங்கன்னு தெரியலையே? இவன் வேற புடிச்சு வச்ச புள்ளையாராட்டம் அசையாமல் நிக்கறான். அடேய் அரசி மயனே.. போய் கதவைத் திறடா!”

 

 

 

“நீயே திறயேன் காக்காவிரட்டி!”

 

 

 

“என்னத்துக்கு நான் திறந்ததும், என்னைய சிக்க வச்சிட்டு, நீ எஸ்கேப் ஆகுறதுக்கு ப்ளான் பண்ணுறியா? வா! ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம்.!” வீரபத்ரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு கதவை நோக்கி நகர்ந்தான் காத்தவராயன்.

 

 

 

“அடேய்! எருமைங்களா! கதவைத் திறக்காமல் உள்ளே என்னடா பண்ணுறீங்க?” என்ற மேகவர்ணாவின் குரல் கேட்க,

 

 

 

“தங்கச்சிதேன் கதவைத் தட்டுது! யாரு என்னன்னு விசாரிக்காமல் பயந்துட்டு கிடந்திருக்கோமே?” எனப் புலம்பியபடியே கதவைத் திறந்தான் காத்தவராயன்.

 

 

 

“லூசு பக்கிங்களா! எம்புட்டு நேரமா கதவைத் தட்டுறது.? கதவைப் பூட்டிக்கிட்டு, தொல்பொருள் ஆராய்ச்சியா பண்ணுறீங்க?” எனக் கோபமாய் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

“நாங்க என்னமோ பண்ணிட்டு போறோம்! அது எதுக்கு உனக்கு? வீட்டை வாடகைக்கு தானே விட்டுருக்கீங்க? நாங்க என்ன செய்யறோம்ன்னு உங்கக் கிட்டே சொல்லணுமாக்கும்? லூசு கீசுன்னு சொன்னே அம்புட்டுதேன் பார்த்துக்கோ!” விரல் நீட்டி மிரட்டினான் வீரபத்ரன்.

 

 

 

“உன் அப்பனும் ஆத்தாவும் வந்துட்டாக! கார் வாசல் கிட்டே வந்துடுச்சு. உன்கிட்டே போய் சொல்ல வந்தேன் பாரு.. என்னைய சொல்லணும். இப்போ உன்னைப் பெத்தவரு பார்த்துட்டு, நீ என்னத்துக்கு இங்கிட்டு திரியறன்னு கேட்பாரு, நீ மாட்டிக்கிட்டு முழி! உனக்குப் போய் நல்லது செய்ய வந்தேனே என்னைய சொல்லணும். இந்த உலகத்தில் நல்லதுக்கே காலம் இல்லை.!” என சலித்தபடியே அவள் வெளியேற,

 

 

 

“போச்சு! போச்சு! எல்லாம் போச்சு! அவிங்க என்னத்துக்கு இங்கண வந்தாய்ங்க? என்னைய மட்டும் எங்க அப்பன் இங்கண பார்த்தாரு, உரிச்சுப்புடுவாரு.. உரிச்சு.!” எனப் புலம்பியபடி நின்றிருந்தான் வீரபத்ரன்.

 

 

 

“நான்தேன் சொன்னேன்ல்ல? உங்க வீட்டில் இருந்து வாராய்ங்கன்னு சொன்னேன் தானே? நீ எங்கேயாச்சும் போய் பதுங்கியிருக்க வேண்டியது தானே? எதிர் எதிரில் வீடு இருக்கு. அங்கே இருந்து எட்டிப் பார்த்தாலே.. இங்கண யாரு இருக்காகன்னு தெரிஞ்சு போவும். உன் பாடு இன்னைக்கு திண்டாட்டம்தேன்!” என மேகவர்ணா சிரித்தபடியே சொல்ல,

 

 

 

“எம்மா தங்கச்சி! என்னம்மா பல்லைக் காட்டிட்டு நிக்கிறே? ஒளிஞ்சுக்க எதாச்சும் இடம் சொல்லும்மா! நான் மட்டும் போய் ரகசியமா ஒளிஞ்சுக்கிறேன். இவன் மாட்டுனா மாட்டிட்டு போறான்.!” எனப் பதறினான் காத்தவராயன்.

 

 

 

“அது எனக்கு தெரியாது சாமி! இந்நேரம் அவங்க வந்திருப்பாங்க!” இன்னும் ரெண்டு நொடியில் கார் இங்கண வந்து நின்னாலும் நிற்கும்.!” என மேகவர்ணா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் மகிழுந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 

 

 

“ஆத்தி! வந்துட்டாய்ங்க! வந்துட்டாய்ங்க! வீரபத்ரா.. ஓடிருவோம் டா! ஓடிருவோம்!” காத்தவராயன் வீரபத்ரனை இழுத்துக் கொண்டு வீட்டின் பின்புறமாய் ஓட, வீரபத்ரனோ, மேகவர்ணாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கியிருந்தான்.

 

 

 

“ஏய்! லூசுப்பயலே! என்னைய என்னத்துக்குடா இழுத்துக்கிட்டு ஒடுறே? இது எங்க வீடுடா எருமைமாடு! நீ ஓடுறதில் ஒரு காரணம் இருக்கு! நான் என்னத்துக்குடா ஓடணும்? அடேய் அரை மெண்டலுங்களா! உங்களைக் காப்பாத்த வந்தால், என்னைய ஓட வைக்கிறீங்க?” என மூச்சு வாங்க புலம்பியபடியே, அந்த பெரிய ஜன்னலின் ஓரமாய் பதுங்கி நின்றாள் மேகவர்ணா.

 

 

 

“எனக்கு துணைக்கு யாராச்சும் வேணும்ல்ல? அதேன் உன்னையும் சேர்த்து இழுத்துக்கிட்டு வந்தேன். என்ன இருந்தாலும், கடைசியில் நானும் நீயும்தேன் சேரப் போறோம் மயிலம்மா!”

 

 

 

“ம்க்கும்! ரொம்பத்தேன் ஆசை! ஆசையே துன்பத்திற்கு காரணம்ன்னு புத்தர் சொல்லியிருக்கார். பார்த்து தம்பி! அந்த ஆசையே உன்னை அழிச்சுடப் போகுது.!” நக்கலாய் அவள் சொல்ல,

 

 

 

“என் மயிலம்மா! என்னை உனக்குப் பிடிக்கலையா? வேலை வெட்டி இல்லைன்னு யோசிக்கிறியா? நான் நல்லா ஃபோட்டோ பிடிப்பேன் தெரியுமா? அது மட்டுமில்லாமல் யூ ட்யூப் சேனல் வச்சிருக்கேன். நீ ம்ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு. கப்பிள் வீடியோஸா போட்டு நிறைச்சுடுவோம்.!”எனச் சொன்னான் வீரபத்ரன்.

 

 

 

“ஐ! அப்போ வீட்டிலேயே இருப்பியா? ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டியா?!” என உற்சாகமாய் கேட்டாள் மேகவர்ணா.

 

 

 

“மாட்டேன்! ஏன் கேட்கறே? வீடியோ ஷூட் பண்ண மட்டும் வெளியே போக வேண்டியிருக்கும்.”

 

 

 

“நாம நினைச்ச நேரம் லீவ் போட்டுக்கலாம் தானே?”

 

 

“ஆமா!”

 

 

“நாளைக்கே நமக்கு புள்ளைங்க பிறந்தால், ஸ்கூலில் விடறது, கூட்டியாறது, இந்த பேரண்ட்ஸ் மீட்டிங் எல்லாமே நீயே பார்த்துப்பியா?” வரிசையாய் அவள் கேள்விகளை கேட்டுக் கொண்டே போக,

 

 

 

“இதெல்லாம் என்னத்துக்கு கேட்கிற?” புரியாமல் அவள் முகம் பார்த்தான் வீரபத்ரன்.

 

 

 

“வேற என்னத்துக்கு? கட்டிக்கலாமா? வேணாமான்னு முடிவு செய்யத்தேன்!”

 

 

 

“ஆத்தாடி ஆத்தா! இதென்ன புது ட்ராக்கில் கதை போவுது! எம்மா தங்கச்சி, நானும் இங்கணதேன் இருக்கேன். பார்த்து பேசுங்க!”

 

 

 

“உலகத்தில் நடக்காததையா பேசிப்புட்டேன். கொஞ்ச நேரத்திற்கு காதை மூடிக்கண்ணே!” எனச் சொன்னவள்,

 

 

 

“நெசமாவே.. நாள் முச்சூடும் வீட்டில்தேன் இருப்பியா?” என மீண்டும் அவள் கேட்க,

 

 

 

“ஆமாடி! என்னத்துக்கு நொய் நொய்ங்கிற? நீயும் அவளை மாதிரி, நீ இன்னும் டைரக்டர் ஆகலை, வெறும் யூ-ட்யூபில் சம்பாதிக்கிறதை வச்சு, எப்படி சமாளிக்க முடியும்? உன்னை நம்பி வேற என்ன சோர்ஸ் (Source) இருக்குன்னு கேட்க போறியா? அம்மா தாயே நான் ஒண்ணும் இதை விரும்பி பண்ணலை! என் சூழ்நிலை. எனக்கு கேமிரா வழியா இந்த உலகத்தைப் பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். என் கண்ணுக்கு அழகா தெரியற விஷயங்களை, நான் வீடியோவா போடுறேன் அம்புட்டுதேன்!” என உணர்ச்சி வேகத்தில் அவன் சொல்லிவிட, அவனை ஆழ்ந்து பார்த்தபடியே நின்றிருந்தாள் மேகவர்ணா.

 

 

 

அதே நேரம்,மேகவர்ணாவை முன்னால் அனுப்பிவிட்டு, பின்னால் மகிழுந்தில், கணவனுடனும், தன் மூத்த மகன் துடிவேல் அழகருடனும் வந்து இறங்கினார் அரசி. 

 

 

 

“இந்தாருங்க! வர்ணாவை வழியில் பார்த்தோம்ன்னு உளறி வச்சிறாதீங்க! அப்பறம் அந்தப் புள்ளையை வஞ்சிட்டு கிடப்பாய்ங்க! அழகரு உனக்கும் சேர்த்துதேன் சொல்றேன்.!”

 

 

 

“நான் வாயையே திறக்க மாட்டேன்ம்மா!” என அழகர் சொல்லிவிட, கணவனை ஏறிட்டுப் பார்த்தார் அரசி.

 

 

 

“பண்ணுறதெல்லாம் திருட்டுத்தனம். இதில் சொல்லக் கூடாதுன்னு வார்னிங் வேற! உருப்புட்ட மாதிரிதேன்!” எனச் சலித்துக் கொண்டார் கதிர்வேல்.

 

 

 

“நாங்க உருப்படுறோம், உருப்புடாமல் போறோம்.! அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். இப்போ நீங்க எதுவும் சொல்லாதீங்க அம்புட்டுதேன்!”

 

 

 

“ஆத்தாளும் மயனும் சேர்ந்து என்னமோ செஞ்சு தொலைங்க! இப்போ வீட்டுக்குள்ளே போவணுமா? இல்லை இங்கணையே பிச்சைக்காரன் மாதிரி நிக்கணுமா?” எனக் கதிர்வேல் கேட்க,

 

 

 

“யாராவது வீட்டில் இருக்கீகளா?” எனக் குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தார் அரசி.

 

 

 

“தம்பி! நாச்சியப்பா!” என்ற அவரின் குரல் கேட்டு அவசரமாய் வெளியே வந்த நாச்சியப்பனின் விழிகளில், முகத்தில் பளிச்சிடலும், புன்னகையும் நிறைந்திருந்தது.

 

 

 

“அரசிம்மா!” என அவசரமாய் வெளியே வந்து, உதடு விரிந்த புன்னகையுடன் அரசியைப் பார்த்தவரின் முகம்,

 

 

 

 

“இவங்களை யாரு இங்கண வரச் சொன்னது? நம்ம கருப்பன் இருந்தால் உள்ளே விட்டுருக்க மாட்டானே?” என அவர் முதுகுக்கு பின்னால் கேட்ட, போஸ்பாண்டியின் குரலில் சட்டென மாறியது.

 

 

 

“உங்களை யாரு இங்கண வரச் சொன்னது? வலிய வந்தப்போவெல்லாம் விரட்டி அடிச்சுப்புட்டு இப்போ என்னத்துக்கு இங்கண வந்து நிக்கிறீக? கல்யாணம் கருமாதின்னு இங்கண வந்து நிக்காதீக! டேய், முத்து, இராஜா, கண்டவங்களும் நடுவீடு வரைக்கும் வர்ர வரை என்னத்தடா புடுங்கிட்டு இருந்தீக?” போஸ்பாண்டியின் குரல் உயர,

 

 

 

“போனதெல்லாம் போனதாவே இருக்கட்டும்ய்யா! என்னத்துக்கு வந்திருக்கோம்ன்னு கேட்காமல் கூட, விரட்டுறீயே ராசா?” எனக் கேட்டார் அரசி.

 

 

 

“எங்க அப்பனும் இப்படித்தேன் உங்க வீட்டு வாசலில் வந்து நின்னாரு! தங்கச்சி மயங்களுக்கு ஊரே மெச்ச செய்முறை செய்யணும்ன்னு நினைச்சாரு. அந்தக் கிழவன் சொக்கேசன், உரிமை இல்லை! உருத்து இல்லைன்னு சொன்னாரு! இப்போ என்ன உருத்தில்? என்ன உரிமையில் இங்கண வந்து நிக்கிறீக?” என போஸ்பாண்டி முடிக்கும் முன்னமே, 

 

 

 

“யாரைடா கிழவன்னு சொன்னே? நேத்து பெஞ்ச மழையில், முட்டி முளைச்ச காளான் நீ! நீ எங்கப்பனை பேசுவியா? நீ கிழவனாகமல் இளந்தாரிப் பயலாவே திரிவியோ?” என போஸ்பாண்டியின் சட்டையைப் பிடித்திருந்தார் கதிர்வேல்.

 

 

 

“ஓ! உங்கப்பனை பேசவும் வலிக்குதா? அன்னைக்கு எனக்கும் என் உடம் பொறந்தவிங்களுக்கும், இப்படித்தேன் வலிச்சுச்சு! இந்தா நிக்கிறாரே.. இந்த ஆளு வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தேன் வாயை மூடிக்கிட்டு நின்னோம். அன்னைக்கு மட்டும், இவர் எங்களை அடக்காமல் இருந்திருந்தால், நடந்திருக்கிறதே வேற! சொந்தமாச்சு மண்ணாச்சு வெட்டிப்போட்டுட்டு போயிருப்பேன்.!” எனக் கோபமாய் பேசினான் போஸ்பாண்டி.

 

 

“இந்தா நான் உன் கண்ணு முன்னாலேதேன் நிக்கிறேன். தைரியமான ஆம்பிள்ளையா இருந்தால், மூணு அண்ணே தம்பிங்களும், என்னை வெட்டுங்கடா பார்ப்போம்!” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கதிர்வேல் சொல்ல, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப் போல் திமிறிக் கொண்டு நின்றான் போஸ்பாண்டி.

 

 

 

“போஸு! இந்தாரு! கோபத்தில் எடுக்கிற எந்த முடிவும் பிரச்சனைக்கு தீர்வாகாது! நம்ம வீடு தேடி வந்தவிங்கக் கிட்டே, இப்படி நடந்துக்கிறது சரியில்லை சொல்லிப்புட்டேன்.!” என நாச்சியப்பன் சொல்ல,

 

 

“என்னங்க! கொஞ்சம் அமைதியாய் நில்லுங்களேன். நீங்களே ஏன் அவனை வெறியேத்தி விடுறீக?!” என அரசியும்,

 

 

 

“ப்பா! இருக்கிற சண்டையை இன்னும் கொஞ்சம் பெருசாக்காதீங்க!” என சொன்னபடியே, கதிர்வேலின் கையை போஸ்பாண்டியின் சட்டையிலிருந்து அகற்றினான் அழகர்.

 

 

“யோவ்! வாயை மூடுய்யா! உன்னால்தேன் இம்புட்டும். இங்கே நடக்கிற அம்புட்டு விவகாரத்திற்கும் நீதேன் காரணம்! தொங்கச்சி, தொங்கச்சி புள்ளைங்கன்னு நீ உருகி வழிஞ்சதால் தான் இம்புட்டும். விழுந்து விழுந்து முறை செய்ய, இவிங்க உன்னோட ஒட்டிப் பொறந்த பொறப்பா என்ன?” என நாச்சியப்பனைப் பார்த்து, போஸ்பாண்டி கேள்வி கேட்ட அதே நேரம்,

 

 

 

“உன் தொம்பி மயனை வாயை மூடிக்கிட்டு போகச் சொல்லுடி! இந்த இம்சைக்குதேன் நான் வர மாட்டேன்னு சொன்னேன். இம்புட்டு எகத்தாளம் பிடிச்சவிங்களை, முறைப்படி அழைக்கணுமாக்கும்?” எனப் பொருமியபடியே போஸ்பாண்டியை முறைத்தார் கதிர்வேல்.

 

 

 

“ஒட்டிப் பொறந்த பொறபப்பாகத்தேன் இருந்தோம் போஸூ! என்ன செய்ய? காலமும் நேரமும் எங்களை விலக்கி நிறுத்திடுச்சு. பொட்டப் புள்ளையைக் கட்டிக் கொடுத்த பிறகு, நமக்கு இருக்கிற உரிமை, உருத்தெல்லாம் குறைஞ்சிடும் போஸூ! என்ன விஷயமா வந்திருக்காகன்னு முதல்ல கேட்போம். அப்பறம் முடிவு பண்ணுவோம்!” என பொறுமையாகவே பேசினார் நாச்சியப்பன்.

 

 

 

“அது எப்படிப்பா? ஒவ்வொரு வட்டமும் அந்த வீட்டு வாசலுக்குப் போய் அவமானப்பட்டுக்கிட்டே நிக்கணுமா? அவிங்க செருப்பைக் கழற்றி மூஞ்சிலேயே அடிப்பாய்ங்க, சிரிச்சுக்கிட்டே வாங்கிக்கணுமா? போஸ் அண்ணே சொல்றதுதேன் சரி, இவிங்களை வாசலிலேயே வச்சு விரட்டி விடுறதுதேன் சரி!” என முத்துப்பாண்டி சொல்ல,

 

 

 

“இவிங்க சங்காத்தமே வேணாம்ன்னு தானே, நம்ம தங்கச்சி பெரிய பொண்ணா ஆனப்போ கூட, நாம இவிங்களைக் கூப்பிடவே இல்லை. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். திரும்ப புதுப்பிக்க வேணாம்.!” என இராஜபாண்டி சொல்ல, தன் முடிவுக்கு எதிராய் நிற்கும் மகன்களை ஆற்றாமையுடன் பார்த்தார் நாச்சியப்பன்.

 

 

 

அவருக்கும் கோபம் இருந்தது தான். தன்னுடன் பிறந்த உடற்பிறப்பாய் சகோதரியாய் ஒன்றாய் வளர்ந்த அரசியின் பிள்ளைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே? என்ற கோபம் இருந்தது தான். முக்கியமாய் சொக்கேசன் மீதும், கதிர்வேலின் மீதும், அளவிற்கு அதிகமாகவே கோபம் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அந்தக் கோபமெல்லாம் கரைந்து ஆற்றாமையாய் உருமாறியிருந்தது.

 

 

 

 

 தன் காலம் முடிவதற்குள் ஒருமுறையாவது, அரசியையும் அவள் பிள்ளைகளையும் கண்ணாற கண்டுவிட வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதின் அடியாழத்தில் தேங்கிக் கிடந்தது. சற்று முன் கூட, அரசியை நெடுநாளின் பின் கண்டதில், அவரின் அகமும் முகமும் மலரத்தான் செய்தது.

ஆனால் உடன் பிறவா சகோதரியின் மேலுள்ள பாசத்தில் நாச்சியப்பன் நடந்தவற்றை மறக்கலாம். ஆனால், அவர் பெற்ற பிள்ளைகளோ, முன்னால் நடந்தவைகளைப் பிடித்துக் கொண்டு தகப்பனின் குறுக்கே நின்றனர்.

 

 

 

“ஐயோ! என்ன இப்படி சண்டை போடுறாய்ங்க? வாசலில் வந்து நின்னதுக்கே இம்புட்டு அக்கப்போரா கிடக்கு? இன்னும் நீதேன் அரசி மயன்னு தெரிஞ்சுது அம்புட்டுதேன்!” என காத்தவராயன் சொல்ல,

 

 

 

“பெருசா என்ன ஆகிடப் போவுது.? எங்கண்ணே கண்ணு காட்டினதும், கருப்பன் ஒரே குத்தாக குத்தி தூக்கி வீசுவியான். இல்லையா, என் மூணு அண்ணேய்ங்களும் உன் கழுத்தில் அரிவாளை வச்சு ஒரே சீவு!” எனப் பதில் சொன்னாள் மேகவர்ணா.

 

 

 

“ஆத்தாடி! என்னமோ இளநீர் சீவுற மாதிரி சொல்லுதே இந்தப் புள்ள! எம்மாடி தங்கச்சி, இந்த அண்ணனை மட்டும் பாவம் பார்த்து விட்டுடக் கூடாதா?”

 

 

 

 

“அதெல்லாம் என் அண்ணேங்கதேன் முடிவு செய்யணும். நம்ம கையில் ஒண்ணுமே இல்லை!”

 

 

 

“அடேய்! உன் அப்பனையும் ஆத்தாளையும் நிக்க சொல்லு! இப்போவே உசிரைக் காப்பாத்திக்கிட்டு ஊரு போய் சேருவோம்.!” 

 

 

 

 

“சும்மா இரு காக்காவிரட்டி! நானே அடிச்சு மல்லுக் கட்டுறாங்களே! நாம போய் விலக்கி விட முடியலையேன்னு கவலையில் கிடக்கேன். நீ வேற நொய் நொய்ன்னு உசிரை எடுக்குற!” எனச் சலித்துக் கொண்டான் வீரபத்ரன்.

 

 

 

“அப்போ இந்த மூணு கரடி குட்டிகளும் தலையை சீவுறதைப் பத்தி உனக்கு கவலையே இல்லை?”

 

 

 

“சீவினா சீவிட்டு போறாய்ங்க! கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வாங்கிக் கொடு, எண்ணெய் தேய்ச்சு சீவட்டும்!” பார்வை முழுவதையும், அந்த ஜன்னலில் வைத்தபடியே பேசினான் வீரபத்ரன்.

 

 

 

“எப்பா, ராசா! விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன் டா!” என காத்தவாரயன் சொல்ல, 

 

 

 

“ஹலோ மிஸ்டர்.வீரபத்ரன். என்ன லந்தா? என் அண்ணேங்களைப் பார்த்தால் சொம்பையாட்டம் தெரியுதா? அரிவாளை வச்சு ஒரே அழுத்து அழுத்தினாய்ங்ன்னா நீ அம்புட்டுதேன் தெரிஞ்சுக்க! உன்னை மாதிரி காமெடி பீசுக்கெல்லாம் நானும், என் செல்லக் குட்டி கருப்பனுமே போதும். சோலியை முடிச்சு விட்டுருவோம்.!” என பதிலுக்கு பதில் தந்தாள் மேகவர்ணா.

 

 

 

“எம்மா தங்கச்சி! அவன்தேன் இந்தக் கதைக்கு ஹீரோ! கதைக்கு மட்டுமில்லை! உனக்கும்தேன்.!”

 

 

 

“நாலு இடத்தில் போஸ்டர் அடிச்சு ஒட்டச் சொல்லுங்கண்ணே! சொன்னாத்தேன் தெரியுது இவர் ஹீரோன்னு..!” நக்கலாய் அவள் சொன்னாள் அவள்.

 

 

 

“அம்மாபட்டிகாரிக்கு திமிரு அதிகந்தேன். மூணு அண்ணேங்களுக்கு பின்னால் வந்து பொறந்த திமிருதேன்.! இந்தத் திமிரை ஒருநாள் இல்லை ஒருநாள் நான் அடக்கறேனா இல்லையான்னு பாருடி! அடியே எம் மாமன் மவளே.. சும்மா விளையாட்டுக்கு சொல்றேன்னு மட்டும் நினைச்சுக்காதே! ஊரு மெச்ச உன் கழுத்தில் தாலிகட்டி, உன் அணகோண்டா அண்ணேங்க ஆசையா பறிமாற தலைவாழை இலைபோட்டு, நடுவீட்டில் உட்கார்ந்து நான் விருந்து சாப்பிடலை என் பேரு வீரா இல்லைடி!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

 

 

 

“அடேய்! அரசி மயேனே! இந்த சினிமா டையலாக் பேசுறதெல்லாம் இன்னொருநாள் வச்சுக்கடா! முதலில் அவிங்க சண்டையை விலக்கி விடணும்டா! அடிதடி ஆகிப் போவும் டா!” என காத்தவராயன் பதற்றமாய் சொல்ல,

 

 

 

“என்ன நடந்தாலும் நடக்கட்டும் காக்காவிரட்டி! நானே போறேன். நான்தேன் அரசி மயன்னு தெரிஞ்சாலும் பரவாயில்லை!” எனச் சொன்னபடியே வீரபத்ரன் நகர முற்பட, அவன் கரத்தினை அழுத்தமாய் பிடித்திருந்தாள் மேகவர்ணா.

 

 

 

 

“நான் போறேன்!” என அவன் விழி பார்த்து அவள் சொல்ல, அவளின் முதல் தீண்டலில், அனலில் உருகும் மெழுகாய், அசையாமல் பார்த்தபடி நின்றான் வீரபத்ரன்.

 

 

 

“உங்க அப்பாரு சொன்னாலே கேட்க மாட்டேங்கிறாய்ங்க! நீ சொன்னதும், எப்படி தங்கச்சி கேட்பாய்ங்க?”

 

 

 

 

“உங்க வீட்டில் வேணும்ன்னா சொக்கர் ஆட்சியாய் இருக்கலாம் எங்க வீட்டில் எப்போவும் மீனாட்சி ஆட்சிதேன்!” எனச் சொன்னவள், இத்தனை நேரமாய் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்த, வீட்டின் பின்புறத்திலிருந்து, விறுவிறுவென வீட்டின் நுழைவாயிலை நோக்கி நடந்தாள்.

 

 

 

“இந்தாருங்க! ஒழுங்கா இங்கண நிக்காமல் போயிருங்க!”

 

 

 

“கைகலப்பு ஆகிப் போச்சுன்னா நாங்க பொறுப்பில்லை!”

 

 

 

“ப்பா! உங்க கூடப் பொறக்காத அக்காவை போகச் சொல்லுறீங்களா? இல்லையா? நம்மளை வேணாம்ன்னு தூக்கி எறிஞ்ச இந்த உறவு நமக்கு வேணாம்!”

 

 

 

“இந்தாரு அழகரு! உங்க ஆத்தாளுக்காக நான் சத்தம் காட்டாமல் நின்னுட்டு இருக்கேன். இந்தப் பய அவன் இஷ்டத்துக்கு பேசிட்டே போறான். அப்பறம் கை நீட்டிட்டேன்னா நான் பொறுப்பில்லை சொல்லிப்புட்டேன். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வெறியேத்துறானுங்க! என்ன ஏதுன்னு விசாரிக்கக் கூட பொறுமையில்லை!” எனக் கதிர்வேல், அழகரிடம் உறுமிக் கொண்டிருந்த அதே நேரம்,

“என்னத்துக்கு இப்படி கத்திட்டே கிடக்குறீங்க? நிறுத்துங்க!” எனச் சத்தமாய் அதட்டினாள் மேகவர்ணா.

 

 

 

“மயிலு! நீ உள்ளே போ! இது பெரியவங்களுக்கு இடையே நடக்குறது. இதெல்லாம் உனக்குப் புரியாது.!” என தங்கையை உள்ளே அனுப்ப முயன்றான் போஸ்பாண்டி.

 

 

 

“நான் இன்னும் பச்சைக் குழந்தை இல்லைண்ணே!”

 

 

 

“மயிலு!”

 

 

 

“நம்ம வீடு தேடி வந்தவிங்களை இப்படித்தேன் அசிங்கப்படுத்துவியாண்ணே?”

 

 

 

“இந்தாரு மயிலு! இவிங்கதேன் நம்ம அப்பா பொழுதுக்கும் புலம்பிட்டே திரிவாரே, அவர் கூடப் பொறக்காத உடம்பொறப்பு. அரசி அத்தையும் அவிங்க குடும்பமும்.இவிங்க என்ன செஞ்சாய்ங்கன்னுதேன் உனக்கு தெரியுமே? தெரிஞ்சும் இவிங்களை உள்ளே விடச் சொல்லுறியா?”

 

 

 

“அதுக்குன்னு.. அவங்க நமக்கு பண்ணினதை, நாம திருப்பி அவங்களுக்கு பண்ணினால், நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

 

 

 

“மயிலு! நீ புரியாமல் பேசுறே!”

 

 

 

“நல்லா புரிஞ்சுதேன் பேசுறேன். நம்ம வீடு தேடி வந்தவிங்களை, வாசலோட நிறுத்தி இப்படி அசிங்கப் படுத்துறது தப்புண்ணே! அவங்க என்னத்துக்கு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கவாவது உள்ளே கூப்பிடணும்ண்ணே!”

 

 

 

 

“இவிங்க மூச்சுக்காத்து கூட, இந்த ஊரில் படக் கூடாது. இவிங்களை வாசலோட விரட்டுறதுதேன் சரி.!”

 

 

 

“என்னப்பா! பார்த்துட்டே நிக்கிறீக? அத்தையை உள்ளே கூப்பிடுங்க!”

 

 

 

“மயிலு! நீ எதிரில் நிற்கிறதால் ரொம்பப் பொறுமையாய் பேசுறேன். முதலில் நீயே அவிங்களைப் போகச் சொல்லு!”

 

 

 

“முடியாதுண்ணே! நான் அவங்களை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு வச்சு பேசத்தேன் போறேன். அப்பா எத்தனை நாள், அத்தையை பார்க்க முடியலைன்னு விசனப் பட்டிருப்பாரு! அவரு மூஞ்சிக்காகவாவது உள்ளே கூப்பிட மாட்டியாண்ணே? நம்மளைப் பெத்தவரோட உடம் பொறந்தவிங்க இப்போ உயிரோட இருக்காய்ங்களா? இல்லை அவங்க பெத்த புள்ளைங்கக் கூட, நமக்கு சுமுகமான உறவு இருக்கா? இப்படி இருக்கும் போது, வந்தவிங்களை வாசலோட விரட்டுறது தப்புண்ணே!” என அவள் சொல்ல, அப்போதும் கூட கொஞ்சமும் இளகாமல், விரைப்பாய் நின்றான் போஸ்பாண்டி.

 

 

 

“போஸூ! தங்கச்சி சொல்றது சரிதான்ய்யா! நால்லா ரோசணை பண்ணி பாரு. ஊரு பேரு தெரியாதவிங்களுக்குக் கூட, வாடகைக்கு வீடு கொடுத்து, வீட்டுக்குள்ளே உட்கார வச்சிருக்கோம். சொந்தம்ன்னு நம்மளை நம்பி வந்தவிங்களை விரட்டுறது தப்புய்யா!” என நாச்சியப்பன் சொல்ல,

 

 

 

“என்னமோ பண்ணித் தொலைங்க! உங்க சொந்த பந்தத்தோட நீங்க, கொஞ்சுங்க, குலவுங்க! என்னமோ செய்ங்க! என்னையும் என் தம்பிங்களையும் இதில் இழுத்தீங்க, அப்பன்னு கூட பார்க்க மாட்டேன். அம்புட்டுதேன் சொல்லிட்டேன்.!” என தகப்பனையே எச்சரித்தபடி, தன் தம்பிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்  போஸ்பாண்டி.

 

 

 

“அண்ணே! எப்பவுமே அப்படித்தேன்! நீங்க உள்ளே வாங்கத்தே!”

 

 

 

 என மேகவர்ணா அரசியை வீட்டினுள் அழைத்துப் போவதை ஜன்னல் வழியாய் இமைக்காமல் பார்த்திருந்தான் வீரபத்ரன். அவனின் மாமன் மகள், அவனின் மனச் சுவர்களில் கொஞ்சம், கொஞ்சமாய் வர்ணம் தீட்டத் துவங்கியிருந்தாள்.

 

 

தித்திக்கும் 🔥

 

அடுத்த அத்தியாயம் திங்களன்று மக்களே.. உங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்