Loading

நட்சத்திரம் 10

அந்த ஆள் அரவமற்ற அமானுஷ்யம் நிறைந்த காட்டின் அருகே இரு நங்கைகளும் பயந்தபடி நின்றிருக்க,

“மகிழ் தீரனை வரச் சொல்லலாமா..? நம்ம தனியாப் போய் எதிலாவது மாட்டிகிட்டா என்னடி பண்றது?” எனப் பயந்தபடி மகிழினியை பார்க்க,

“இல்லை வேண்டாம் தாரி, என்ன பிரச்சனை வந்தாலும் சரி, நாமே ஃபேஸ் பண்ணிக்கலாம், இவ்வளவு நேரம் தைரியாமா தானேடி என்கிட்ட பேசிட்டு வந்த, இப்ப என்னடி உனக்குப் பயம்” எனத் தனக்குள்ளிருந்த பயத்தை மறைத்தபடியே அவளிடம் பேசினாள் மகிழினி. இவளின் பயத்தால் தாரிகாவும் பயந்து விடக் கூடாதென மறைத்தாள் மகிழினி. அதுமட்டுமில்லாமல் தீரனிடம் உதவியென்று கேட்டு நிற்க கூடாதென்ற பிடிவாதம் வேறு..

“என்ன தான் தைரியமான ஆளாயிருந்தாலும் இந்தத் தேக்கு மரத்தையும் பனை மரத்துக்கு நடுவுலையும் பாரேன் யாரோ நிக்குற மாதிரியே இருக்குடி” என விழி அகல சொன்னாள் தாரிகா.

தன்னுடைய வீடியோ கேமராவை ஆன் செய்தவள் அவர்கள் நடக்க நடக்க வீடியோ எடுத்துக்கொண்டே சென்றாள் தாரிகா உள்ளூற பயம் இருந்தும் தோழிக்காகத் தன்னைத் தேற்றிக்கொண்டாள் தாரிகா.

​வெண்ணிலவு மறைந்த காரிருள் ஆகாயம்,கண் சிமிட்டி மாயங்கள் செய்யும் விண்மீன்கள்!அண்ணார்ந்து நோக்கிய பார்வையிலே,அளவில்லா ஆச்சரியம்…சில்லெனத் தழுவும் தென்றலின் வழியே,சிலிர்க்க வைக்கும் இரவின் வனப்பு!அழகின் பின்னே மறைந்திருக்கும்அமானுஷ்யம் அறியாது நின்றனர் இருவரும்.

“மகிழ் ஏரிக்கு இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும் “

“கிட்ட வந்துட்டோம் நினைக்குறேன்டி குளிர் அதிகமா இருக்கு பார்த்தியா” எனப் பேசியபடி ஏரி இருந்த இடத்தை அடைய ஆனால் அங்கே அவர்கள் எதிர்பார்த்தபடி ஏரி நிரம்பியிருக்கவில்லை மாறாக வறண்ட பாலைவனம் போல் காட்சியளிக்க ஏரி இருந்த இடத்தில் சில மண் வெடிப்புகளும் இருந்தது.

“ஏய் மகிழ் என்னடி விளையாடுறியா? அம்மாவாசை பௌர்ணமிக்கு ஏரி நிரம்பி இருக்கும்னு சொன்ன, இதென்னடி பாலைவனத்தை விட மோசமா இருக்கு சரி வந்ததுக்கு ஒரு ஃபுட்டேஜாவது தேறும்னு பார்த்தால், ஒன்னத்துக்கும் ஆகாது போல, டோட்டல் டைம் வேஸ்ட் டி. உன்னால எனக்கு, உன்னை நம்பி அமானுஷ்யமான இடம்னு வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என அவள் வாய்க்கு வந்ததைப் பேச,

“தாரி இதெல்லாம் நான் என் கண்ணால பார்த்தேன்டி ஆனா என்கிட்ட ஆதாரம் இல்லை அவ்ளோ தான்” என அவள் எதோ சொல்ல வர,

“இங்க பாரு மகிழ் உன்னோட ப்ராப்ளம் என்ன தெரியுமா அதீத கற்பனைடி. உனக்கு, நீயா எதையாவது நினைச்சுக்கிட்டு அது தான் உண்மைன்னு எல்லாத்தையும் நம்ப வைப்ப, எனக்கு என்னமோ உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தோணுது. அதுக்காகத் தான் தீரன் மேல எதோ பெரிய பழியைப் போட்டு அவர் லைஃப்ல இருந்து வெளிய வர ட்ரை பண்ற போய் நல்ல டாக்டரா பாரு உன் பைத்தியம் தெளிய, என்னை ஆள விடு” எனச் சொல்லியபடி அவள் கிளம்பத் தயாரான போது மகிழினி தேகம் சிவந்து அதீத கோபத்தில் நின்றிருக்க,

“ஹே மகிழ் நீ கோபப்படுறியா, கோபப் பட வேண்டியது நான், சரி வா கிளம்பலாம்” எனத் தாரிகா அழைக்க,

“நான் பைத்தியமாவே இருந்திட்டு போறேன், இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னோட வீடியோ கேமரா மட்டும் கொடுத்திட்டு போ, நான் உனக்கு உண்மைய நிரூபிக்கிறேன் ” என மகிழினி சொல்ல,

“ஏய் மணி ஒன்னாகுது இதுக்கு அப்பறமும் எந்த மாற்றமும் வரப் போறதில்லை மகிழ் பெட்டர் நம்ம இங்கேயிருந்து கிளம்புறது நல்லது தீரன்கிட்ட வேற சொல்லாமல் வந்திருக்க வீட்ல உன்னைத் தேடிட்டு இருக்கப் போறாங்க” தாரிகா அவள் கைபற்றி இழுக்க,

“நான் வர மாட்டேன் தாரி, நீ கிளம்பு. இது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்குறேன் நீ கிளம்பு, இனி இந்தப் பைத்தியக்காரியே கூப்பிட்டாலும் வராதே” என உட்சபட்ச கோபத்தில் கத்தினாள் மகிழினி.

“போடி பைத்தியகாரி, நீ என்னமோ செய்” என அங்கிருந்து விரைந்து கிளம்பியவள் தீரனின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க மறுமுணையில் பதட்டத்தில் தீரன் அழைப்பை ஏற்றான்.

“பிரகதீரன் நான் மகிழினி ப்ரெண்ட் தாரிகா பேசுறேன் “ என அவள் சொல்ல,

“மகிழ் உங்க கூட இருக்காளா.? ப்ளீஸ் அத மட்டும் சொல்லுங்க”

“இவ்வளவு நேரம் இருந்தா இப்போ தான் அவளை அந்தக் காட்டில தனியா விட்டு வந்தேன் என அவள் சொல்ல

“என்ன காரியம் பண்ணீங்க, அவளை ஏன் அந்தக் காட்டில தனியா விட்டு வந்தீங்க சரி அங்கேயே இருங்க நான் வர வரைக்கும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன் “ என அழைப்பைத் துண்டித்தவன் சொன்ன பத்தாவது நிமிடத்தில் தாரிகாவின் காரின் அருகே தன் காரை நிறுத்திவிட்டு,

“நீங்க இங்கேயே இருங்க தாரிகா, நான் அவளைக் கூட்டிட்டு வந்தறேன்” எனச் சொல்லியபடி தேக்கு மரக்காட்டுக்குள் அடியெடுத்து வைக்க,

“மிஸ்டர் தீரன் நானும் வரலாமா “ கேள்வியாய் தாரிகா.

“நோ நீட்” எனச் சொல்லியபடி விரைந்து உள்ளே சென்றான்

“மஹி …” என அலறிய படி அந்த ஏரி இருக்கும் திசையை நோக்கி ஓடினான் தன்னவளிடமிருந்து பதில் வராமல் இருப்பது அவனுள் பயத்தை அதிகரிக்க,

“மஹி .. என்னோட குரல் உனக்குக் கேட்குதா”

“துருவன்” என்ற அவளின் அழைப்பு அவனின் செவிமடலைத் தீண்ட

“மஹி எங்கடி இருக்க” என அவன் அலற

“துருவன் நான் உங்க நக்‌ஷத்ரா வந்திருக்கேன்” என்ற மகிழினியின் குரல்

“எனக்கு என்னோட மஹி தான் வேணும் ப்ளீஸ் அவளை என்கிட்ட அவளாவே கொடுத்திரு” என அவன் பேச,

எங்கிருந்தோ ஓடி வந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தவள் “உங்கள் மஹியும் நானே , உங்கள் நக்‌ஷத்ராவும் நானே” எனத் தன்னவன் முகம் பார்த்துக் கண் சிமிட்டினாள் மகிழினி.

“மஹி உனக்கு ஒன்னுமில்லையே “ என அவள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் கால் வரை ஆராய்ந்து பார்த்தவன்,

“மஹி உனக்கு வேற எதும் குரல் கேட்க்கலையே” எனப் பேசியபடி அவன் கட்டிவிட்ட மந்திர நாண் அவள் கையில் இருப்பதை உறுதி செய்தவன்,

“இனி நான் இல்லாமல் இந்த இடத்துக்கு வரவேக்கூடாது மஹி” என அவன் செல்லக் கட்டளையிட,

“இனி இங்கு வருவதற்கான அவசியம் இல்லை துருவன்” என அவள் சொல்ல,

“மஹி இந்தப் பேர் உனக்கு எப்படி?” என அவன் வியந்து பார்க்க,

“எனக்கு நம்ம பூர்வ ஜென்ம நினைவுகள் வந்திருச்சு தீரன்” எனச் சொன்ன பின்னே அவன் புத்தியில் உரைத்தது இவ்வளவு நேரம் தன் அணைப்பில் இருந்தவள் மயங்கி விழவில்லை என்று,

“உங்க நக்‌ஷத்ரா உங்ககிட்டயே மறுபடியும் வந்துட்டா துருவன்” என அவன் தோள் சாய்ந்தாள் மங்கையவள்.

“இனி வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம் மஹி கிளம்பு” எனச் சொன்னவனின் பார்வை அங்கு நிரம்பி வழிந்த ஏரியை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் தோள் சாய்த்த நொடியில், அவன் நெஞ்சில் அடங்கியது யுகங்களின் தவிப்பு!தொலைந்த காதல் கைசேர்ந்த பூரிப்பில்அவன் அந்த இருள் அடவியைக் கடந்து வர…இரவின் மௌனத்தோடு போட்டிபோட்டுஅவர்களுக்காகக் காத்திருந்தன தாரிகாவின் விழிகள்!

“மகிழ் சாரிடி உன்னைத் தனியா விட்டு வந்துட்டேன், என்னோட தப்பு தான் உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே” என அவள் விழி பார்த்து அவள் விசாரிக்க,

“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, பைத்தியக்காரிக்கு என்ன பிரச்சனை வந்திட போகுது” எனச் சொன்னவள் தாரிகாவின் முகம் பார்த்துக் கூடப் பதில் சொல்லாதவளாய் பார்வையிலே தாரிகாவை சுட்டெரித்தாள் மகிழினி.

“தீரன் எனக்கு ரொம்பக் குளிருது நம்ம வீட்டுக்குப் போகலாம் இங்கே என்ன வெட்டியா பேச்சு” எனத் தீரனை பார்த்து சொன்னவள் தீரனின் காரினுள் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.

“சாரி தாரிகா, அவ எதோ அப்செட்டா இருக்கா போல அவளைத் தப்பா எடுத்துகாதீங்க மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்கா வேற எதுவும் இல்லை” எனச் சமாளித்தவன் மனதில் குழப்பமே மிஞ்ச,

தூரத்தில் கார் சத்தம் அடங்கிய மறுநொடி,பயத்தை விழுங்கிக்கொண்டு அந்த அமானுஷ்யக் காட்டுக்குள் நுழைந்தாள் தாரிகா.ரகசியமாய் ஒளித்து வைத்திருந்த தன் கேமராவின் திரையில்,நிரம்பிச் சலசலக்கும் ஏரியைக் கண்டதும் இமைக்க மறந்தன அவளது விழிகள்!மகிழினி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை எனத் தெளிந்த அந்தக் கணமே,இரவின் காரிருளைப் பிளந்துகொண்டு அங்கிருந்து தப்பித்தாள் தாரிகா!

*******************************

​இரவின் அமைதியில் சுழலும் சக்கரங்களுக்கு நடுவே,தன்னவளுடனான அந்தப் பயணம் ஒரு கவிதையாய் மெல்ல நகர்ந்தது!சொல்ல நினைக்காத சொற்களை அவளது விழிகளே மொழிபெயர்க்க,முன் ஜென்மத்து நினைவுகளோடு தன் காதல் தேவதையாய் அவள் நின்ற தருணம்…காலம் தாண்டிய காதல் கைகூடிய நிம்மதியில்,கடவுளுக்கு முன் தலைவணங்கி நின்றது தீரனின் மனம்!

“மஹி, இத்தனை நாளா என்னை நீ வில்லன் மாதிரி தான பாத்திருப்ப, பிடிக்காத திருமணப் பந்தம் அப்படித் தான நினைச்சிருப்ப” கார் ஓட்டியபடி அவன் கேட்க,

“துருவன், நீங்க எல்லாமே எனக்காகவும், நம்ம காதல் இப்பிறவியிலாவது கைகூடணும் செஞ்சது தானே” எனச் சொன்னவள் ஆக்ஸிலட்டரில் இருந்த அவன் கரங்களில் தன் கரங்களைப் பொருத்தியவள் அவன் விழி பார்க்க,

“மஹி இப்போ நீ எனக்கு ரொம்ப வித்தியாசமா தெரியுற, என்ன தான் இருந்தாலும் என் கூடச் சண்டை போட்டுகிட்டே இருந்த அந்தத் துறு துறு மஹிய மிஸ் பண்ணுறேன்” என அவன் சொல்ல படக்கெனத் தன் கரங்களை விலக்கியவள்,

“தீரன் ஒரு காலத்துல நீங்க நக்‌ஷத்ரானு ஒருத்திய உருகி உருகி காதலிச்சிட்டு இருந்திங்கன்றத நினைவுபடுத்திக்க விரும்புறேன் அந்த நக்‌ஷத்ரா வேணும்னு தான் மகிழினியை திருமணம் செய்துக்கிட்டிங்க மறந்துறாதீங்க” எனச் சொன்னவள் சாலையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கத் தீரன் அமைதியாய் வாகனத்தை லாவகமாகச் சாலையில் செலுத்திக்கொண்டிருந்தான் சிறுது நேரத்தில் மகிழினியும் உறங்கி போனாள்.

அப்பொழுது தீரனின் தொலைப்பேசி அலற அதை ஏற்று ஒற்றைக் கையில் காதில் வைத்தபடி “ஹோலோ தீரன் ஸ்பீக்கிங்”

“தீரன் நீங்க மகிழினி கூட இருந்தா ப்ளீஸ் எஸ் ஆர் நோ மட்டும் பதில் சொல்லுங்க ஒரு முக்கியமான விசயம் பேசணும் முடிஞ்சா அவகிட்ட இருந்து தள்ளி வந்து பேசுங்க” எனப் பதட்டதில் தாரிகா பேச,

“ம்ம்ம்” என்றான் தீரன்

“மகிழினி பக்கத்துல இருக்காளா?”

“எஸ்”

“நார்மலா இருக்காளா வியர்டா பிகேவ் பண்றாளா”

“நார்மல்”

“நான் சொல்ல போற விசயத்தைக் கவனமா கேளுங்க”

“ஷி இஸ் நாட் யுவர் வொய்ஃப்”

“வாட்” அதிர்ச்சியை வெளிப்படுத்தாது கேட்டான் தீரன்

“ஆமா தீரன் மகிழினி உடம்புல இருக்குறது வேற என்னமோ”

“ஹே தாரிகா, நீங்க காட்டுக்குள்ள போய்ட்டு வந்ததால் எதோ புரியாம பேசுறீங்க மஹி நார்மலா தான் இருக்கா எந்த ப்ராப்ளமும் இல்ல ஷி இஸ் பைன், நல்லா தூங்குங்க மார்னிங் சரியாகிடும் நான் வைக்குறேன் பாய் டே கேர்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தான் தீரன்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்தவளின் இமைகள் மூடியிருக்க இதழ் மட்டும் மர்ம்மாய் வளைந்தது.

‘உனக்கு நக்‌ஷத்ரா தான் வேண்டுமா எல்லாவற்றையும் கவனித்தாயே என் விழிகளைக் கவனித்தாயா முட்டாள் துருவா’ எனத் தனக்குள் பேசியபடி அவனருகே அமர்ந்திர்ந்தது அது மஹியியை ஆட்கொண்டிருந்த அந்தச் சக்தி.

காதல் தீயில் அவன் கரைய,

பகை நிழலில் அது சிரிக்க…

​பூர்வ ஜென்மப் புதிர்களுக்குள்

தன் முகவரியை இழந்தாள் அவள்!

தன் உயிருக்குள் புகுந்தஹ

விஷமறியாது அணைத்துக் கொண்டான் அவன்!

​நிழலை நிஜமென்று தேடியவன்,

தன் நிஜத்தையே தொலைத்து நிற்கிறான்…

மஹியின் தீரன்!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தாரி சொன்னதை கேட்கவில்லை. மகிழ் கூட பேசியது ஆணா பெண்ணா உடம்பில் புகுந்தது பெண் தான் போல.