
நட்சத்திரம் 11
அந்தப் பழமையான வீட்டின் மரஜன்னல் சல்லடைகள் வழியே புகுந்த இளங்காலை வெயில், அறையின் தரையில் தங்கக் கோலமிட்டுக் கொண்டிருந்தது
இனிமையான காலை பொழுதின் குளிர் தன் தளிர் மேனி எங்கும் படர புத்துயிர் கொண்ட ரோஜா மலரைப் போல் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்ந்தவள் தன் எழில் கொஞ்சும் அழகை கண்ணாடியின் பிம்பத்தில் ரசித்துக் கொண்டிருந்தாள். தன் அழகை ஆள போகும் தன்னவனைப் பார்த்து விழியால் பருகியவளின் அதரங்கள் உச்சரித்தது அவனின் பெயரை
“துருவா..!” அவளின் செவ்விதழ் உச்சரித்தபடி தன் பிம்பங்கள் தெரியும் கண்ணாடிகளைத் திரைச்சீலை கொண்டு மறைத்துக் கொண்டிருந்தாள் மகிழினி.
”மஹி..”அவனது குரல் காற்றில் கசிய, படுக்கையில் எழுந்து அமர்ந்தவனின் பார்வையில் விழுந்தாள் மகிழினி.
தன் கார்குழலை விரல்களால் மெல்ல வருடியபடி, ஒருவித மர்மப் புன்னகையோடு அவனை எதிர்நோக்கியவளின் அதரங்கள் அசைந்தன.
”நக்ஷத்ரானும் கூப்பிடலாம் துருவா…”
அந்தப் பெயர் காற்றலைகளில் மோதி அவனது செவிகளை அடைந்த நொடி, பிரகதீரனின் நெஞ்சில் ஒரு மெல்லிய அதிர்வு. அவள் முகத்தையே உற்றுப் பார்த்தபடி வினவினான்.
”என்னது துருவா வா? என்ன நீ வித்தியாசமா கூப்பிடுற?”
அவனது விழிப் பார்வையின் அழுத்தத்தைத் தாங்க முடியாதவள் போல, தன் முகபாவனையைச் சட்டென மாற்றிக் கொண்டு மழுப்பலாய் மொழிந்தாள்.
”துருவன்… வாய் தவறி வந்திருச்சு.”அவளது பதற்றத்தை உணர்ந்தாலும், அதைக் கடந்து அவனது பார்வை அறையின் சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடிகளின் மீது விழுந்தது. திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்த அந்தப் பிம்பங்களை நோக்கிக் கேள்வியாய் விரலை நீட்டினான்.
”சரி அதெல்லாம் இருக்கட்டும்… ஏன் கண்ணாடி மேல துணி போட்டு வச்சிருக்க?”அவள் சில நொடிகள் மௌனமானாள். அவளது பார்வையில் ஒரு விசித்திரமான இருள் படர, நிதானமாகக் கூறினாள்.
”அது வந்து துருவன்..? எனக்கும் மகிழினிக்கும் சில வித்தியாசங்கள் இருக்கு… அதைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை.”
அவளது வார்த்தைகளில் பொதிந்திருந்த மர்மத்தின் ஆழம் புரியாமல், ஒரு பெருமூச்சோடு எழுந்தான் பிரகதீரன்.
”சரி, வீட்ல இருக்க எல்லாக் கண்ணாடியும் மூடி வைக்கச் சொல்றேன்…”
அமைதியாகச் சொல்லியபடி குளியலறைக்குள் புகுந்தான் பிரகதீரன், அவனுள் ஏதோ ஒரு புதிரின் தொடக்கம் மெல்ல உருவாவதை உணர்ந்தவாறே!
அவன் சென்றபின் தீரைச்சீலையை விலக்கி தன் அழகை ரசித்தவள் “என் அழகுக்கு ஈடு ஆவாளா இந்த மகிழினி” என செவ்விதழ்கள் அசைந்து அந்த வார்த்தைகளைச் செருக்கோடு உதிர்க்க, அறையின் காற்றே ஒரு கணம் குளிர்ந்து போனது போல் இருந்தது.
தன் கார்குழலைச் செல்லமாகச் சிலிர்த்துவிட்டு, கம்பீரமான நடைபோட்டு அவளது அறைக்கதவைத் திறந்து வெளியேறினாள்.
படியிறங்கி வந்தவளை எதிர்நோக்கி, தன் மகளின் முகம் காணத் தவித்த நெஞ்சோடு, வாசலிலேயே பதற்றத்துடன் காத்திருந்தார் விஜயலட்சுமி .
—
“அம்மாடி மகிழ் ராத்திரி பூரா எங்கடிமா போன தவிச்சுப் போயிட்டேன் “ எனப் பேசியபடி மகிழினியின் தலையை வருடி கொடுக்க,
“நான் நல்லா தான் இருக்கேன், நீ என்னமா மருமகன் வீட்லயே தஞ்சம் ஆகிரலாம்னு நினைச்சியா, விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குத் தான்னு தெரியாதா உனக்கு” ஒவ்வொரு சொல்லிலும் தீயை அள்ளி தாயின் மீதே வீசினாள் மகிழினி.
“நீ தானே உன் கூட என்ன இருக்கச் சொன்ன,உனக்காகத் தான நான் வந்தேன்”என அவர் பேசிக்கொண்டிருந்த போதே இடை நிறுத்தியவள்,
“நான் தான் சொல்றேன்னா உனக்கு எங்க போச்சு அறிவு, மூணு வேளையும் மூக்கு முட்ட சாப்பிட்டு இங்கயே குடியிருந்தரலாம் நினைச்சியா.?” என அவள் சொன்ன சுடு சொல் தாறுமாறாய் விஜயலட்சுமி மனதைத் தாக்க,
“இனி இந்த வீட்ல ஒரு நிமிசம் இருக்க மாட்டேன் மா, உன்ன பெத்து வளர்த்ததுக்கு என்ன நன்றி கடன் காட்டணுமோ நல்ல காட்டிட்டமா” எனச் சொன்னவரின் வழியில் நீர் இடை விடாமல் வழிய அதே சமயம் அறையிலிருந்து தீரன் வெளியே வர உடனே கண்ணீரை துடைத்தவர்,
“வாங்க மாப்பிளை” எனச் சொன்ன நொடியில் மகிழினியின் முகம் இதமாய் மாறி,
“பாருங்க தீரன் அம்மா அவங்க வீட்டுக்குப் போறாங்களாம், போகதீங்கன்னு சொன்ன அழறாங்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு தீரன்” என அவன் தோள் சாய்ந்து அழுவது போல் பாவனைச் செய்தாள் மகிழினி,
விஜயலட்சுமி புரியாமல் வழித்து நிற்க,
“அத்தை மஹிகாக இங்க இருங்க, அங்க போய்த் தனியாயாகத் தானே, இருக்கணும்” எனத் தீரன் சொல்ல,
“இல்ல மாப்பிள்ளை என்ன பார்த்துக்கப் பவுணு இருக்கா, நான் பெறாத பொண்ணு அவ” எனச் சொல்லி அந்த அரண்மணை போன்ற வீட்டிலிருந்து கிளம்பினார் விஜயலட்சுமி.
தீரன் வருந்தி நிற்க மர்மமாய்ச் சிரித்தாள் மகிழினி.
“ஹே மஹி அத்தை மனசு வருத்தபட்டு கிளம்புறாங்க, நீ என்ன அமைதியா இருக்க, போ போய் அத்தைய ட்ராப் பண்ணு, இனி அவங்களுக்கு நாம தான எல்லாமாய் இருந்தாகணும், அவங்களை நல்ல படியா பாத்துக்குற பொறுப்பு நமக்குத் தான இருக்கு மஹி” எனத் தீரன் சொல்ல எதையும் காதில் வாங்காதவள்,
“தீரன் அம்மாவ நான் பார்த்துக்குறேன் அதைப் பத்தி நீங்க கவலைபட வேண்டாம், நம்ம காதலை இந்த நாலு சுவத்துக்குள்ள மட்டும் தான் பகிர்ந்துக்கணுமா.. யுகங்கள் கடந்து நம் காதல் இணைந்ததை நம்ம கொண்டாட வேண்டாமா.?” கேள்வியாய் அவன் விழி கலந்தவள் தன்னவனின் மார்பில் சாய்ந்தபடி அவன் இதயத்துடிப்பின் இனிமையை ரசித்தபடி கேட்க,
“மஹி எனக்கும் உன்ன கையில ஏந்திக்கிட்டு உலகம் சத்தணும்னு ஆசை தான் ஆனா நம்ம காதல் காவியத்தை நான் திரைப்படமா எடுத்துக்கிட்டு இருக்கேன் அதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கிறது அதை விட்டு விட்டு எங்கும் செல்ல முடியாது மஹி” எனத் தீரன் சொல்ல, இதைக்கேட்டு உடன் மார்பில் சாய்ந்து நின்றவள் அவனிடமிருந்து விலகி அவன் முகம் பார்த்து நின்றாள்,
“அப்போ நம்ம எங்கேயும் போக முடியாதா தீரன், சரி பரவாயில்லை எனக்கு உங்க கூட இருந்தா மட்டும் போதும், என்னையும் உங்க கூடச் சூட்டிங் கூட்டிட்டுப் போங்களேன்” எனக் கெஞ்சலாய் நிற்க, சம்மதமாய்த் தலையசைத்து அங்கிருந்து நகர முற்பட இடையில் கை வைத்து தடுத்து நிறுத்தியவள்,
“தீரன் அப்படியே போனா எப்படிக் கொஞ்சம் கவனிச்சுட்டு போங்க” என அவனைக் கட்டிக்கொள்ள,
“ஹே மஹி கீழ பாட்டியும் அம்மாவும் இருக்காங்க, வேலைக்காரமா வேற இப்ப தான் இந்தப் பக்கமா போனாங்க நீ மொத விலகி நில்லு” என அவன் சொல்ல,
“ஏன் புதுசா கல்யாணம் ஆனாவங்க அப்படி இப்படி இருப்பாங்கன்ற இங்கிதம் கூட உங்க வீட்ல யாருக்கும் இருக்காதா, இதெல்லாம் ஒரு குற்றம் மாதிரி பேசுறிங்க” என அவள் சொன்ன வார்த்தைகள் அவனுள் அவளிடம் அந்நியத்தை ஏற்படுத்த எதுவும் பேசாமல் படியிறங்கி சென்று விட அவன் சென்ற திசையைப் பார்த்து வருந்தி நின்றாள் மகிழினி.
படியிறங்கி வந்தவன் நேர உணவருந்தும் மேஜை மேல அமர்ந்திருக்க அவன் பின்னே விரைந்து இறங்கி வந்தவள் அங்கிருந்த ஹாட் பாக்ஸிலிருந்த இட்லிகளை வேகமாகத் தீரன் தட்டில் எடுத்து வைக்க அதே சமயம் அங்கே வந்த நீலவேணி,
“மகிழ்மா எப்பயும் குளிச்சுட்டு தானே கீழே வருவ, இதென்ன புதுப் பழக்கம் குளிக்காம டைனிங் டேபிள் வரை வர பழக்கம்” எனக் கேட்க,
“அய்யோ! இந்த வீட்ல எனக்குக் கொஞ்சம் கூட. சுதந்திரமே இல்லை. எப்ப பாரு இதைப் பண்ணு அதைப் பண்ணுனு, இன்னக்கி குளிக்கணும்னு தோனலை அதான் குளிக்கலை, தீரனுக்கே இதுல பிரச்சனை இல்லை உங்களுக்கு என்ன இதுல பிரச்சனை வந்துச்சு” எனக் கடுகை போல் பொரிந்து தள்ளியபடி இட்லியை எடுத்து தன் தட்டில் வைத்து சாப்பிட அமர்ந்தவளின் தலையில் நங்கென்று கொட்டு வைத்தார் விஜயலட்சுமி.
“நீ சொன்னால் நான் இந்த வீட்ட விட்டு போயிறணுமா.? என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியாதா, இப்படிக் குளிக்காம சாப்பிடத் தான் என்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னீயா, எந்திரி டி” என விஜயலடசுமி அதட்ட,
“விடுங்க சம்மந்தி, அவளுக்குப் பிடிச்ச மாதிரி இருந்திட்டு போகட்டும், மகிழ்மா நீ சாப்பிடுமா” என நீலவேணி சொல்ல,
“என் பொண்ணு எப்படினு எனக்குத் தெரியும் சம்மந்தி இவளுக்கு என்னமோ ஆயிருச்சு போல எந்திரி போய்க் குளிச்சுட்டு வாடி” என விஜயலட்சுமி அதட்ட,
“மா உனக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையா?, இவ்வளவு சொல்லியும் ரோசமே இல்லாம துரத்திவிட்ட வீட்டுக்குள்ளயே வந்து நிக்குற, உனக்குத் தான் பெறாத பொண்ணு பவுணு இருக்காங்களே?” எனச் சொன்னவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்க,
“அடியே உன்கிட்ட எனக்கு எதுக்குடி வெட்கம் மானம் சூடு சொரணையெல்லாம், மாப்பிளை உங்களுக்கு நான் இருக்குறதுல எதாவது பிரச்சனையா.?” எனத் தீரன் பக்கம் கேள்வியைத் திருப்பினார் விஜயலட்சுமி.
“அத்தை நீங்க இல்லைனா தான் பிரச்சனை, நீங்க இங்க இருந்தா மட்டும் போதும்” எனத் தீரன் சிரித்தபடி சொல்ல,
“மாப்பிளை சைட் க்ளியர்” என்ற விஜயலட்சுமி “சம்மந்தி , மீரம்மா நான் இந்த வீட்ல இருக்குறதுல உங்க ரெண்டு பேருக்கும் எதாவது பிரச்சனையா.? ” எனக் கேள்வியாய் பார்க்க,
“அய்யோ சம்மந்தி நீங்க வாங்க சாப்பிடுங்க, நீங்க இந்த வீட்ல இருக்குறதுல எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என மீரம்மா சொல்லியபடி அமரச் சொன்னார்
“இந்தாடி எந்திரி குளிச்சுட்டு வந்து சாப்பிடு, இதையா நான் உனக்குச் சொல்லி கொடுத்தேன், உன் மாமியார் வீட்டுக்கு வந்துட்டா எப்படி வேணும்னாலும் நடந்துப்பியா” என மகிழினியைத் திட்டிய படி சாப்பிட அமர்ந்தார் விஜயலட்சுமி.
“இதுக்குத் தான் மா உன்னைப் போகச் சொன்னேன், சும்மா எதாவது சொல்லிகிட்டே இருப்ப” எனப் பேசியபடி தன் அறைக்குச் செல்ல முற்பட அவளைத் தடுத்து நிறுத்தும் பொருட்டுத் தீரன் மகிழினியின் கைப்பற்ற பொல பொலவெனக் கண்ணீர் வந்த படி அவள் கண்கள் ஆயிரம் மொழிகள் பேச,
“தீரன்” மென்மையாய் உச்சரித்தாள் மகிழினி.
“மஹி, உனக்கு என்ன ஆச்சு ஏன் வித்தியாசமா நடந்துக்குற?” எனத் தன்னவளை உலுக்கத் திடீரென அந்தக் குரல்.
“துருவா” என அழைத்தவளின் கண்களில் ரௌத்திரம் நிறைந்திருக்க, இத்தனை நேரம் கொட்டிக்கொண்டிருந்த கண்ணீர் நிறுத்தபட்டிருக்க, தீரனின் கையை உதறிவிட்டு தன் அறைக்குள் சென்றாள். மகிழினி. அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த மீராம்மா அவள் அறையை நோக்கி துளசி தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு செல்ல கூடவே வேப்பிலையும் கொண்டு செல்ல படியேற,
“பாட்டி இப்ப வேண்டாம், நான் பார்த்துக்குறேன்” எனத் தடுத்தான் பிரகதீரன்.
“தீரா நான் பாத்துக்குறேன்னு சொல்லி சொல்லி தான் பிரச்சனையை இவ்வளவு தூரம் இழுத்து விட்டிருக்க, இதை எப்படிச் சரி பண்ணணும்னு எனக்குத் தெரியும்” என மீரம்மா சொல்ல,
“மீரம்மா மாப்பிளை பார்த்துப்பாரு நீங்க கவலைபடாதீங்க, எல்லாத்துக்கும் ஒரு முடிவு கடவுள் வச்சிருப்பான், என் பொண்ண என்னை விட மாப்பிளைக்குத் தான் நல்லா தெரியும் அவரு பார்த்துபாரு, நீங்க அவளைச் சமாதனபடுத்துங்க மாப்பிளை” என விஜயலட்சுமி சொல்ல சரியென்பது போல் அங்கிருந்து நகர்ந்தார் மீராம்மா, நீலவேணியும் சம்மதமாய்த் தலையசைக்கத் தன் அறையை நோக்கி நடந்தான் பிரகதீரன்.
அங்கே அவள் குளித்துமுடித்துத் தூவலை வைத்து தலை துவட்டியபடி செம்பவள நிற புடைவையின் ஓரத்தில் தங்க நிற பூக்கள் பூத்திருக்க அழகு சிலையாய் காற்றில் கலைந்த கார்குழலை ஒதுக்கியபடி அவன் முன் வந்து நின்றவள் அவன் எதிர்பாரா சமயம் அவன் இதழை சிறையெடுத்தவள் அவன் விழி கலந்து தன் அரங்கேற்றத்திற்குத் தொடக்கப்புள்ளியை ஆரம்பிக்க அவளைத் தள்ளிவிட்டு அதே இடத்தில் முற்றுபுள்ளியை வைத்தான் தீரன்.. அவன் தள்ளிவிடுவான் என எதிர்பாராதவள்,
“துருவா, கூடல் இல்லா காதலுக்காகத் தான் இந்த மறுஜென்ம்மா?” என ஆத்திரத்தில் கத்தினாள் மகிழினி.
“மஹி ஒரு நிமிசம் கவனி, இதெல்லாம் நமக்குள்ள கண்டிப்பா நடக்கும், எனக்குத் தெரியும் ஆனால் அதுக்காக நம்ம செந்நிலவுக்குக் காத்திருக்கணும் மறந்துட்டியா நக்ஷத்ரா” என அவளின் ஈரம் சொட்டிய சிகையைக் கோதி விட அவனுள் பாந்தமாய் அடங்கியவள்,
“செந்நிலவா.? துருவா என்ன சொல்றீங்க.? இதைப் பற்றி எனக்கு எந்த நினைவும் இல்லையே, நாம் தான் அந்தப் பௌர்ணமி அன்றே ஒன்று சேர்ந்து விட்டோமே” எனக் கேள்வியாய் தீரன் முகம் பார்க்க
“நம்ம எப்போ சேர்ந்தோம் மஹி, அது உனக்கு வந்த கனவா இருக்கும், உனக்கு வந்த கல்யாண கனவு மாதிரி” எனச் சொல்லியவன் அவளை விட்டு விலக,
‘கனவா..! இல்லையே அது மெய் தானே?’ என அவளின் ஆழ்மனதில் இருந்து எதோ ஒரு குரல் எழும்ப நிதானித்துக்கொண்டவள்,
“நீங்க சொன்னா சரி தான்” எனச் சொல்லிவிட்டு அவன் தோள் சாய்ந்தாள் அவளின் கண்கள் செந்நிறம் கொள்ள அந்த அறையில் மூலையில் எதையோ பார்த்து ஏளனமாய்ச் சிரித்தாள் மகிழினி.
அதன் பின் வந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் அந்த அறைக்குள்ளே அடைந்து கிடக்கும் மகிழினியை பார்த்துக் கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது தீரனுக்கு, மகிழினியும் செந்நிலவுக்காகக் காத்திருந்து வீட்டுகுள்ளே அடைபட்டு கிடக்க,
—
மகிழினியைப் பார்க்க தாரிகா தீரனின் வீட்டிற்கே வந்து விட,
“மகிழ், உன்னை பார்த்து பேச தான் டி வந்தேன்” தாரிகா சொல்ல,
அவளைப் பார்த்தவுடன் ஆக்ரோஷம் பொங்க அவள் முகம் காணாது திரும்பி நின்றுக்கொண்டாள் மகிழினி.
“என்னைப் பார்க்க வந்தியா? இல்லை ஏன் புருசனை உன் அழகில் மயக்க வந்தியா.?” எனச் சுவற்றைப் பார்த்து திரும்பியபடி பேச,
“மகிழ்.. சாரி சாரி, உன்னை மகிழ்னு கூப்பிடக்கூடாது இருளின் ஒளி” என அவள் சொன்ன மாத்திரத்தில் கண்கள் சிவக்க அவளின் கார்குழல் காற்றில் தாண்டவமாட, கைகளை முறுக்கியபடி நின்றிருந்தாள் மகிழினி.
“நீ மகிழினி இல்லைன்னு எனக்குத் தெரியும், நீ யாருன்னு தீரனுக்குத் தெரியபடுத்த தான் இங்க வந்திருக்கேன், என்னோட மகிழ் இப்படிப் பேசமாட்டா, அவ வெகுளி, அவ உடம்புகுள்ள இருந்துக்கிட்டே அவளை நீ ஆட்டி படைக்குறியா, இன்னையோட உன்னோட வேசம் கலையப் போகுது” எனத் தாரிகா பேச
“உன்னால முடிஞ்சதைப் பாரு, தீரன் இப்ப நான் ஆட்டி வைக்குற பொம்மலாட்ட பொம்மை பாக்குறியா..?” எனப் பேசியது மகிழினியின் குரல் அல்ல அது வித்யாசமான குரல் என்பதை உணர்ந்தவள் மகிழினியை தன் புறம் திருப்ப அவளின் ஒரு கண் சிவந்து ரௌத்திரத்தை வெளிபடுத்தினாலும் மறு கண்ணில் தாறு மாறாகக் கண்ணீர் ஊற்றெடுக்க,
“மகிழ் நான் பேசுறது உனக்குக் கேட்கும்டி அதால உன்னை முழுசா அடைய முடியலை இதை மீறி உன்னால வெளிய வர முடியும்டி, உன் ஒரு கண்ணுல வர கண்ணீரே சொல்லுதுடி என் மகிழ் வெளிய வர தவிச்சிக்கிட்டு இருக்காள்னு இந்தத் தீயசக்தியை மீறி வெளிய வாடி மகிழ் உன்னோட தீரனுக்காக வாடி” எனத் தாரிகா கத்த,
“தாரி.” என மகிழினியின் கை தாரிகாவின் கைபற்ற அதே சமயம் தீரன் அங்கே வர பளார் என்ற சத்ததுடன் தாரிகாவின் கன்னத்தில் பதிந்தது மகிழினியின் கை.
“மகிழ்..” அதிர்வுடன் தாரிகா பார்க்க நமட்டுச் சிரிப்பு சிரித்த மகிழினி,
“துருவா” என ஒடிப்போய்த் தீரனைக் கட்டிக்கொண்டாள்.
“மஹி, என்ன ஆச்சு, எதுக்காகத் தாரிகாவை இப்படி அடிச்ச?” எனக் கன்னத்தைத் தாங்கி பிடித்தபடி நின்ற தாரிகாவை காட்டி தீரன் கேட்க
“அவ என்ன வார்த்தை சொன்னா தெரியுமா துருவா, என்ன உங்ககிட்ட இருந்து பிரிச்சு உங்களை அடைஞ்சே தீருவேன்ணு என்கிட்டயே சவால் விடுறா” என மகிழினி பேச தாரிகா சிலையாய் சமைந்து நின்றாள்.
‘துருவா மகிழினியின் உடலை முழுவதும் ஆட்கொள்ள நீ எனக்குத் தேவை இந்த இருளின் ஒளியை சாதாரணமாக நீயும் நக்ஷத்ராவும் எண்ணி விட்டீர்கள் இனி அந்த நக்ஷத்ராவின் துளி நினைவுக் கூட இந்த மகிழினிக்கு வராது வரவும் விட மாட்டேன்’ எனத் தனக்குள் பேசியவளின் விழி ரத்த சிவப்பாக இருந்தது.
நிழல் படரும் இருளின் ஒளியாய்
அவளை ஆட்கொண்டாலும்,
காலம் தாண்டியும் கலையாத
தீரனின் தீராக் காதல்…
தன் மஹியை மீட்டெடுக்கும்!
முன்ஜென்ம நினைவுகளின்
திரை மறைவில் தவிக்கும்
இக் காரிகையை,
தன் விழிகளின் மொழியால்…
ஆழ்மன அன்பின் வழியால்…
மீண்டும் காதலால் சிறை செய்வானா?
விதியின் கணக்கைத் தன் அன்பால் மாற்ற…
காத்திருக்கிறான்…
மஹியின் தீரன்!

