Loading

திமிர்-13

வீரபத்ரனோ, அவசரத்தில் தந்தையின் முன் வந்து நின்றுவிட்டாலும், இப்போது என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றான். தந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. 

 

 

“அது வந்து.. நான்..!” எதையோ சொல்ல வந்து தடுமாறி வீரபத்ரன் நிற்க, அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ளலாமா? என்றுதான் தோன்றியது அரசிக்கு.

 

 

 

“இவனையும் புள்ளைன்னு பெத்துருக்கேனே? சமாளிக்க தைரியமில்லாதவன் இங்கண என்னத்துக்கு வரணும்? சின்னப் புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு.” எனத் தனக்குள் புலம்பிக் கொண்டவர் வீரபத்ரனை விட்டுவிட்டு சுற்றத்தை ஆராய்ந்தார்.

 

 

 

இத்தனை நேரமாய், சண்டை சச்சரவுமாய் இருந்த இடம், இலை விழுந்தால் கூட, துல்லியமாய் கேட்கும் அளவிற்கு அமைதியாய் மாறியிருந்தது. நாச்சியப்பனின் மூன்று மகன்களின் பார்வையும், கதிர்வேலின் மீதும், வீரபத்ரனின் மீதும், கேள்வியாய் படிந்திருந்தது. அவர்கள் வெளிப்படையாய் கேட்காவிட்டாலும், அவர்களின் முகத்திலிருந்தே, வீரபத்ரனை சந்தேகிக்கிறார்கள் என்பதை அரசியால் உணர முடிந்தது. ஆனால் இப்போது மட்டும், எதையாவது சொல்லி சமாளிக்காமல் போனால், எல்லாம் முடிந்துவிடும் என்பதை உணர்ந்துக் கொண்டவர்,

 

 

 

“இது என்னங்க கேள்வி? தம்பிக்கு ஆயிரம் வேலை இருக்கும், அதில் எதாவது ஒரு வேலைக்காக வந்திருக்கும்! நம்மளை மாதிரி மருதைக்குள்ளேயே உட்கார முடியுமா? தம்பியோட தொழில் அப்படி!” என அரசி சொல்ல, புரியாமல் திருதிருவென விழுத்தார் கதிர்வேல்.

 

 

 

 

“என்னத்தடி கூறுகெட்ட தனமா சொல்லிக்கிட்டு திரியுற? இவரு அப்படியே கலெக்டரு வேலை பார்க்கிறாராக்கும்? அப்படியே வேலை வெட்டின்னு செஞ்சு உருகிக் கரைஞ்சு போய்ட்டாரு பாவம்!” எனக் கதிர்வேல் பேச,

 

 

 

“இந்த மனுஷன் காரியத்தையே கெடுத்துடுருவாரு போல!” என முனகிய அரசி, அவசரமாய் கணவனின் அருகில் வந்தார்.

 

 

 

“ஒரு நிமிஷம் இருங்க! இந்தப் பயலை உங்களுக்குத் தெரியுமா?” அரசியின் செயலைக் கண்டு அவசரமாய், அதே நேரம், சந்தேகமாய் இடையிட்டது போஸ்பாண்டியின் குரல்.

 

 

 

“சொந்தக்காரய்ங்களாய் இருப்பாய்ங்களோன்னு தோணுது போஸ்! அவரு ரொம்ப உரிமையாய்ப் பேசின மாதிரித்தேன் இருக்கு!” என முத்துப்பாண்டி சொல்ல, 

 

 

அதே நேரம், கோபமாய் எதையோ சொல்ல வாயைத் திறந்தக் கணவனின் கரத்தை யாருமறியா வண்ணம் அழுந்தப் பற்றி, அவரைப் பேசவிடாமல் தடை செய்தார் அரசி.

 

 

 

“ஏன் தெரியாம? இந்தப் பயலை எங்களுக்கு நல்லா தெரியும். நம்ம அழகர் பொண்டாட்டி கருவிழி வளைகாப்புக்கு, இந்தப் பயலை தானே வரச் சொல்லியிருக்கோம். தம்பி நல்லா ஃபோட்டோ பிடிப்பாரு போஸூ! ஒரு வாரமா ஃபோன் போட்டு போட்டு பார்த்து தம்பி எடுக்கலையா, அதேன் மாமா கோபத்தில் சுருக்குன்னு பேசிப்புட்டாக!” எதையோ பேசி சமாளிக்க முயன்றார் அரசி.

 

 

 

“ஏங்க! விஷேஷத்திற்கு ஃபோட்டோ எடுக்க புக் பண்ணிட்டு, ஃபோன் எடுக்கலைன்னா என்னங்க அர்த்தம்? நீங்க வருவீங்களா? இல்லை நாங்க வேற யாரையாச்சும் ஃபிக்ஸ் பண்ணணுமான்னு எப்படிங்க முடிவு பண்ணுறது?” என அழகர் தன் பங்குக்கு பேச,

 

 

 

“அடேய்! அரசி மயனே.. கில்லாடி ஃபேமிலிடா நீங்க.. ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒட்டுக்கா நடிக்கிறீங்க! இப்படி நடிக்கிறீங்களே டா? பேசாமல் மொத்தக் குடும்பமும் மெகா சீரியலில் நடிக்கப் போகலாம்.” என வீரபத்ரனின் காதுக்குள் முணுமுணுத்தான் காத்தவராயன்.

 

 

 

“ம்க்கும்! எங்க அம்மாவையும் அழகரையும் விட்டுட்டு, என்னைப் பெத்தவரைப் பாரு! இவரு முறைக்கிற முறையில், நான் அரையடி குள்ளமாகிருவேன் போல.. நாடகம் முடிஞ்சு, இவரு ஆடப் போற ஆட்டத்தை நினைச்சால் திக் திக்ன்னு இருக்கு!” என வீரபத்ரன், காத்தவராயனுடன் பேசிக் கொண்டிருக்க,

 

 

 

“என்ன தம்பி நாங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்கோம்! நீங்க இப்படி கல்லாட்டம் நின்னுக்கிட்டே இருந்தால் என்ன அர்த்தம்? எங்க வீட்டு விஷேஷத்திற்கு வருவீக தானே?” நீட்டி முழக்கினார் அரசி.

 

 

 

 

“அதெல்லாம் வந்துடலாம்மா! இங்கண கொஞ்சம், வேலை இருந்தது. அதனால்தேன் இங்கண வந்தேன். வந்த இடத்தில், டவர் இல்லை! அதேன் ஃபோன் எடுக்க முடியலை!” தாயின் செயல்களைப் புரிந்துக் கொண்டு, தன் நடிப்பைத் தொடர்ந்தான் வீரபத்ரன்.

 

 

“போதும்.. உங்கப் பஞ்சாயத்தெல்லாம் உங்க வீட்டில் போய் வச்சிக்கோங்க! இப்போ இடத்தைக் காலி பண்ணுங்க! தயவு செய்து, தம்பி, தொம்பின்னு உரிமை கொண்டாடிட்டு இந்த வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க! சும்மா நடுவீட்டில் உட்கர்ந்துக்கிட்டு, நாட்டாமை பண்ணிக்கிட்டு..!” எரிச்சலுடன் போஸ்பாண்டி சொல்ல,

 

 

“போஸூ! இருய்யா! என் தம்பி வரட்டும். அவன்கிட்டே சொல்லிட்டு புறப்படுறோம். என்னை வரக் கூடாதுன்னு சொல்றதுக்கெல்லாம் உனக்கு உரிமை இல்லை டா! என் தம்பி வந்து சொல்லட்டும். மறு நிமிஷமே, நான் இந்த வீட்டைவிட்டு வெளியேறிடுறேன்.!” என நாச்சியப்பன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

 

 

 

“இந்தா உன் தொம்பி வந்துட்டான்ல்ல? கிளம்புறோம்ன்னு சொல்லிப்புட்டு வா! வேணாம், வேணாம்ன்னு விரட்டுறவுங்க வீட்டு வாசலில் நிக்கிறதுக்கே கூசுது.!” அரசியைப் பார்த்து சத்தமாய் முணுமுணுத்தார் கதிர்வேல்.

 

 

“நாங்க உங்க வீட்டு வாசலில் வந்து நின்னப்போவும், இப்படித்தானே விரட்டுனீக? எல்லாம் அவனவனுக்கு வந்தால் தானே தெரியும்? நீங்க செஞ்சதுக்கு தானே நீங்க அனுபவிக்கிறீங்க?” நக்கலாய் போஸ்பாண்டி சொல்ல,

 

 

 

“வாயை மூடு போஸூ! அரசி என் உடம் பொறந்தவளா இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த வீட்டில் அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. எவனாவது நாக்கு மேல பல்லு போட்டு ஒத்தை வார்த்தை பேசினீங்க அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன். நான் இந்த வீட்டில் இருக்கணும்ன்னு நினைச்சீகன்னா வாயை மூடிக்கிட்டு நில்லுங்க!” எனக் கண்டிப்பான குரலில் சொன்னவர் அரசியை நோக்கித் திரும்பினார்.

 

 

 

 

“நீ எதுவும் சங்கடப்பட்டுக்காதே அரசி! அவிங்க விவரம் தெரியாமல் பேசுறாய்ங்க! வீட்டுக்கு வந்த பிள்ளையை வெறுங்கையோட எப்படி அனுப்புறதுன்னு, டவுனு வரை போயிருந்தேன், அதுக்குள்ளே இவனுங்க ஆரம்பிச்சுட்டானுங்க! போய் சோலியைப் பாருங்க டா!” என தான் பெற்றப் பிள்ளைகளை அடக்கினார்.

 

 

 

“நீங்க செய்றது ஒண்ணும் சரியா படலை சொல்லிப்புட்டேன். ஊரு உலகத்தில் ஒட்டிப் பிறந்தவங்களுக்குக் கூட, இம்புட்டு சலுகை இல்லை. நீங்க செய்றதெல்லாம் ரொம்ப ஓவராத்தேன் போகுது. நானும் பார்க்கிறேன் இதெல்லாம் எத்தனை நாளுக்குன்னு..!” இதழ் வளைந்தப் புன்னகையுடன் கேட்டான் போஸ் பாண்டி.

 

 

 

 

“உன் உடம் பொறந்தவளுக்கு நீ செய்ய மாட்டியா? போடா பொழப்பைப் பார்த்துக்கிட்டு!” என நாச்சியப்பன் மகன்களை விரட்ட, 

 

 

“எதைப் பார்த்துட்டு இவன் இப்படி நக்கலாய் சொல்லிப்புட்டு போறான்?” என யோசனையோடு வாசலிலிருந்து எட்டிப் பார்த்த அரசி அதிர்ந்துதான் போனார். 

 

 

 

 

 

“ஏன் தம்பி, என்னத்துக்கு இம்புட்டையும் லாரியில் ஏத்தி கொண்டாந்திருக்கே? வியாபாரம் எதுவும் பண்ணப் போறியா?”

 

 

 

“ம்க்கும்! இருக்கிறதையே பார்க்க முடியலை. இதில் வியாபாரமாக்கும், எல்லாம் உனக்குத்தேன் அரசி. எல்லாம் உனக்காக நான் கொடுக்கிற பொறந்த வீட்டு சீரு! சீரும் சிறப்புமா, அழகர் பொண்டாட்டிக்கு புள்ளை பொறக்கட்டும்,இன்னும் நிறைய செஞ்சுபுடுவோம்.!” என நாச்சியப்பன் சொன்னதில், அரசியின் மனம் தன்னால் நெகிழ்ந்துக் கரைந்தது.

 

 

 

 

“ம்க்கும்! இதெல்லாம் அங்கண இல்லாமலா கெடக்கு? என்னமோ அதிசயத்தைக் கொடுத்துட்ட மாதிரி, தற்பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை!” கதிர்வேலின் முணுமுணுப்பு தெளிவாகவே நாச்சியப்பனின் செவிகளில் விழுந்தது.

 

 

 

 

“இருக்கலாம்ங்க மச்சான்! எல்லாப் பொருளும் உங்க வீட்டில் சல்லிசா புழங்கற பொருளா இருக்கலாம். ஆனாலும் பொறந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசி கொடுத்தாலும், அந்தப் பொருளுக்கு மவுசு இருக்குதேன். அதெல்லாம் உங்களுக்கு விளங்காது.!”

 

 

 

“ஆமா! எனக்கு விளங்காது.. விளங்காமல்தேன் குடும்பம் நடத்தி ரெண்டு புள்ளையும் பெத்துருக்கோம். வாய் இருக்குன்னு என்னத்தையாவது பேச வேண்டியது. உங்க கூடப் பொறக்காத, அக்காளை நாங்க நல்லாதேன் வச்சிருக்கோம். கல்யாணம் கட்டின இத்தனை வருஷமா நீங்க வண்டி கட்டி அனுப்பிதேன் எங்க வீடு நிறைஞ்சுச்சாக்கும்? இந்த வாழையும், பலாவும் அங்கே இல்லாமலா கிடக்கு?” வேண்டுமென்றே பேசினார் கதிர்வேல்.

 

 

 

 

“போதும்! நிப்பாட்டுங்க! உங்க வீட்டில் எல்லாமே நிறைஞ்சு வழிஞ்சாலும், என் பொறந்த வீட்டு சீரு எனக்கு பெருசுதேன். அஞ்சு ரூபாய்க்கு துணி எடுத்துக் கொடுத்தாலும், அது ஐம்பதாயிரத்திற்கு சமம்தேன்! தம்பி வண்டியைப் பின்னாலேயே அனுப்பிவிடு. அவர் என்னமோ சொல்லிக்கிட்டு கிடக்கட்டும்!” என கணவனிடம் துவங்கி, உடன் பிறவா தம்பியான நாச்சியப்பனிடம் முடித்தார் அரசி.

 

 

 

 

“என்னடி வீம்புக்குன்னு எல்லாமே செய்றியா? நீயும் உன் மயனும் சேர்ந்து என்ன நாடகம், நடிச்சுட்டு இருக்கீகன்னு தெரியலை. இதில் சீரு, மண்ணாங்கட்டின்னு எரிச்சல் படுத்தறியா?” அதீத கோபத்தின் உச்சியில் கதிர்வேல் பேசிக் கொண்டிருக்க, 

 

 

 

 

‘டேய்! வீரபத்ரா! உங்க அப்பன் எதையும் சொல்லும் முன்னே, ஓடிப் போய் பதுங்கிருடா!’ என மனதில் நினைத்தபடியே மகனுக்கு சைகை காட்டினார்.

 

 

 

 

“அடேய்! அரசி மயனே.. உங்க அம்மா இங்கண இருந்து எஸ்கேப் ஆகச் சொல்லுது! வா, ஓடிருவோம்!” என்ற காத்தவராயன், வீரபத்ரனை இழுத்துக் கொண்டு நகர்ந்திருக்க,

 

 

 

 

“போதும்! பேசிப் பேசி ஒரண்டை இழுத்ததெல்லாம் போதும்! உங்களுக்குதேன் தலைக்கு மேல சோலி கிடக்குதே! வாங்க புறப்படுவோம். இப்போவே கிளம்பினால்தேன், பொழுதோடப் போய்ச் சேர சரியா இருக்கும். இல்லை, என் தம்பியோட வம்பு வளர்க்கிறதுதேன் உங்களுக்குப் பிடிச்சுருக்குன்னா, நீங்க இங்கணையே இருங்க! நானும் அழகரும் கிளம்பறோம்!” என அரசி அவசரப்படுத்த, அரசியை முறைத்தபடியே மகிழுந்தில் ஏறி அமர்ந்திருந்தார் கதிர்வேல்.

 

 

 

“ஆத்தாடி! எந்தச் சேதாரமும் இல்லாமல், உங்க அப்பனை மலையேத்துறது பெரும் பாடாய் இருக்குடா அழகரு! முடியலை டா! என்னத்தையாவது வாயைத் திறந்து உளறியிருந்தாரு, சோலி முடிஞ்சிருக்கும்!” என அழகரிடம் புலம்ப,

 

 

 

 

“அதேன், எப்படியோ சமாளிச்சாச்சே! இனி மருதைக்குப் போய் ஒரு பஞ்சாயத்தை முடிக்கனும்மா! இதுக்கே ஓய்ஞ்சு போய் உட்கார்ந்துட்டா என்ன செய்யறது? வாங்க புறப்படுவோம்!” என அழகர் சொல்ல, 

 

 

 

 

“அதுவும் சரித்தேன்! எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு கிளம்புவோம்!” என்றவர், நாச்சியப்பனிடமும், மேகவர்ணாவிடமும் விடைப்பெற்று கிளம்பினார். 

 

 

 

 

“தம்பி, நாச்சியப்பா! எம்புட்டு சண்டை சச்சரவு வேணும்னாலும் இருக்கட்டும், அதையெல்லாம் மறந்துட்டு, குடும்பத்தோட விஷேஷத்திற்கு வரணும். இது உன் வீட்டு விஷேஷம். நீதேன் வந்து முன்னே நிக்கனும்!” என நாச்சியப்பனிடம் சொன்ன அரசி,

 

 

 

 

“வர்ணா! உங்க அப்பன் நேரத்துக்கு ஒண்ணு ரோசனை செஞ்சுகிட்டு கிடப்பான். நீதேன் அவனை பத்திரமா மருதைக்கு கொண்டாந்து சேர்க்கணும்.!” என வர்ணாவிடம் சொல்ல, தலையசைத்து சிரித்தபடி நின்றாள் மேகவர்ணா.

 

 

 

“ராசாத்தி! நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துடா! கன்னத்தில் கூட கிள்ளிப் பிடிக்க சதையில்லாமல் இருக்க! அத்தை கிளம்புறேம்மா!” என முகம் வழித்துக் கொஞ்சி அரசி விடைபெற, கண்களில் அனல் பறக்க, எரிச்சலுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர் போஸ்பாண்டியும், அவனது தம்பிகளும்.

 

 

 

*****

 

 

 

மதுரையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, மகிழுந்தில் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனைப் பார்க்கவே, அரசிக்குப் பயமாக இருந்தது. மனதின் ஒரு பக்கம் பயம் இருந்தாலும், 

 

 

 

“எவ்வளவோ பார்த்துட்டோம், இதை சமாளிக்க மாட்டோமா?” என்ற நம்பிக்கையும் இருந்தது. வாகனத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்தே எதுவும் கேட்காமல், கதிர்வேல் அமர்ந்திருப்பதைப் பார்த்ததுமே அரசிக்குப் புரிந்துவிட்டது. இவர் வீட்டில் போய் பெரிய பஞ்சாயத்தாய் கூட்டப் போகிறாரென்று.

 

 

 

“ஏங்க! காபி, டீ எதாச்சும் குடிக்கிறீகளா? நேரம் ஆகிருச்சே?” பேச்சைப் போட்டுப் பார்த்தார் அரசி.

 

 

“போதும், உன் அக்கறையெல்லாம் இதோட நிறுத்திக்க! காபி வேணுமா? டீ வேணுமா? காபி வேணுமான்னு கேட்டு மனுஷனைக் கடுப்பேத்துறியா?!”

 

 

 

“உங்களைக் கடுப்பேத்தி நான் என்ன செய்யப் போறேன். வேணும்ன்னா யூ ட்யூபில் கப்புள் ரீல்ஸ் பண்ணலாம். ஆனால் நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீக!” என அரசி சொல்ல, 

 

 

 

“வீட்டுக்கு தானே போறோம், அங்கே போய்ட்டு பேசிக்கிறேன் உன்னைய.. வீட்டில் யாருக்கும் தெரியாமல் தானே ஆத்தாளும் மயனும் திருட்டுத்தனம் பண்ணுறீக? இந்த நக்கல், நையாண்டியெல்லாம் இன்னையோட முடிச்சுப்புடுறேன்.!” என கதிர்வேல் கோபமாய் சொல்ல,

 

 

 

‘இவருக்கும், இவரு அண்ணனுக்கும் மட்டுந்தேன் விவரம் தெரியாது. வீட்டில் அம்புட்டு பேருக்கும் தெரியும்ன்னு தெரிஞ்சால் இவர் என்ன செய்வாரு? வீட்டில் போய் நடுக்கூடத்தில் நின்னுகிட்டு குதிக்கப் போறாரு!” என மனதில் நினைத்துக் கொண்டார் அரசி.

 

 

 

அடுத்த அரைமணி நேரப் பயணம் மிகவும் அமைதியாகவே நகர்ந்தது. யாரும் எதுவுமே பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால் அரசியின் மனதிற்குள், எப்படியாவது இந்தத் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்கிற உறுதி மட்டும் இருந்தது.

 

 

 

ஒருவழியாய் வீட்டிற்கு வந்து இறங்கியதும், அவசரமாய் உள்ளே நுழைந்தார் கதிர்வேல்.

 

 

 

“என்ன அழகரு, உங்க அப்பன் இம்புட்டு வேகமா போறாரு?”

 

 

 

“யாருக்கும் தெரியாதுன்னு போறாரு! எல்லாருக்கும் தெரியும்ன்னு தெரிஞ்சுச்சு அம்புட்டுதேன்.!”

 

 

 

“சரி வா! நாமளும் போவோம்! உள்ளார என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ?” என முணுமுணுத்தபடியே வீட்டினுள் நுழைந்தார் அரசி. 

 

 

 

“இங்க என்னதேன் நடக்குது? என்னையும் இந்த வீட்டில் ஒரு மனுஷனா மதிக்கிறீகளா இல்லையா?” என அரசி எதிர்பார்த்தது போலவே, நடுக்கூடத்தில் நின்று கத்திக் கொண்டிருந்தார் கதிர்வேல்.

 

 

 

“இந்தாருங்க! என்னத்துக்கு இப்படி கத்திட்டு கிடக்குறீக? பொறுமையாய் உட்கார்ந்து பேசுவோம்!”

 

 

“ஏய்! வாயை மூடிக்கிட்டு போடி! உன் இஷ்டத்திற்கு பொறுமையாய் பேசவெல்லாம் முடியாது!”

 

 

 

“என்ன ஆச்சு அரசி? ஏன் இவன் இப்படி கத்திக்கிட்டு நிக்கிறியான்.?” என்றபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார் அங்கயற்கண்ணி.

 

 

 

“எம்மா! என்னதான்ம்மா நடக்குது இங்கே?” அரசியைப் பேச விடாமல் கத்தினார் கதிர்வேல்.

 

 

 

“என்ன நடக்குதா? நான் நடக்கறேன், நீ நடக்கற, வேற என்ன நடக்கணும்? வந்ததும் வராததுமாய் இப்படி கத்திக்கிட்டு கிடக்கிறே?” என அங்கயற்கண்ணி பதில் சொல்ல,

 

 

 

“ம்மா! விளையாடாதீங்க, நான் ஏற்கனவே கடுப்பில் இருக்கிறேன். நீங்க வேற என்னத்தையாவது பேசிட்டு கிடக்காதீங்க!” என எரிந்து விழுந்தார் கதிர்வேல்.

 

 

 

 

“ஏன்டா கதிரு, என்னைப் பார்த்தால் விளையாடுற மாதிரி இருக்கா? உன் இஷ்டத்திற்கு வந்த, உன் இஷ்டத்திற்கு விளையாடாதீங்கன்னு சொல்ற? என்னதான்டா உன் மனசில் நினைச்சுட்டு இருக்கிற?” என அங்கயற்கண்ணி கோபமாய் வினவிய அதே நேரம்,

 

 

“என்ன ஆச்சு மாமா? ஏன் சத்தம் போடுறீக?” என்றபடியே, மெதுவாய் படிகளில் இறங்கி வந்தாள் கருவிழி.

 

 

 

“இந்தக் கிறுக்கச்சி என்னத்துக்கு இங்கண வந்தாள்? இவரே எரிமலை உச்சியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி, கொதிச்சுட்டு இருக்கார். இவ வேற..!” என அழகர் முணுமுணுக்க,

 

 

 

“ஏய்! என்னத்துக்கு இம்புட்டு சத்தம்? வாசலுக்கு வரும் முன்னே சத்தம் கேட்குது? ஏன்டா கதிரு இப்படி கத்துற?” என்றபடி சரவணனும் பூங்கொடியும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

 

 

“அரசி! என்னத்துக்கு கொழுந்தனாரு இப்படி குதிக்கிறாரு? என்ன சங்கதி?” என இரகசியமாய் அரசியின் காதுக்குள் வினவினார் பூங்கொடி.

 

 

 

“அதை ஏன்க்கா கேட்குறீங்க? என் தம்பியை அழைக்கப் போனதிலிருந்தே, இவரோட ஒரே இம்சைதேன். ஒரு வழியாய் எல்லாத்தையும் சமாளிச்சு, அழைச்சுட்டு புறப்டும் நேரத்தில், ரெண்டாவதா நான் பெத்து வச்சிருக்கேனே ஒரு அவசரக் குடுக்கை, அதேன் நம்ம வீராதேன்.. இவர் முன்னுக்க வந்து நின்னுட்டான். நல்ல வேளை, எதையோ சொல்லி சமாளிச்சு வச்சிட்டு வந்துட்டோம். அதுக்குதேன் இங்கண வந்து இப்படி குதிக்கிறார்.!” என பூங்கொடியிடம் கிசுகிசுப்பாய் அரசி சொல்லவும்,

 

 

 

 

“ஆத்தி! கொழுந்தனே இம்புட்டு குதிக்கிறாரு. என் புருஷனுக்கு தெரிஞ்சுச்சு அம்புட்டுதேன். நேராய் அம்மாபட்டியில் போய் ஒரண்டையை இழுத்துட்டு வந்துருவாரே?!” எனப், புலம்பியவர்,

 

 

“ஆமா, அந்தப் புள்ளை மேகவர்ணா எப்படி இருக்கா? பார்க்க லட்சணமா அழகா இருக்காளா?” எனக் கேட்டார்.

 

 

 

“அவளுக்கு என்னக்கா? மகாராணியாட்டம் இருக்கா! அந்த வீட்டு ஆம்பிள்ளைங்களை பாசத்தால் கட்டி வச்சிருக்கா! நல்ல பொண்ணு. நம்ம வீராவுக்கு நல்ல பொருத்தமா இருப்பா! நம்ம வீட்டில் இருக்கிறவிங்கதேன் என்ன சொல்லுவாய்ங்களோ தெரியலை. நான் என் தம்பிக்கிட்டே உறுதியாய் சொல்லிப்புட்டு வந்துட்டேன். வர்ணாவுக்கும், வீராவுக்கும்தேன் கல்யாணம்ன்னு சொல்லிட்டுதேன் வந்தேன். என்ன நடக்கும்ன்னு தெரியலை. பார்ப்போம்.!” என அரசி பூங்கொடியிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம்,

 

 

 

“எம் மயன் வீரா, அம்மாபட்டியில்தேன் இருக்கான்னு இங்கே யாருக்காவது தெரியுமா?” எனக் கதிர்வேல் கேட்க, அனைவருமே அதிர்ந்து விழித்துக் கொண்டு நிற்க,

 

 

 

“என்னடா கதிரு சொல்ற? நம்ம வீரபத்ரன் என்னத்துக்கு அங்கண போயிருக்கான். எங்க யாருக்குமே தெரியாதுடா கதிரு!” அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மேலோங்க, சொன்னார் சரவணன்.

 

 

 

“யாராவது வாயைத் திறக்குறாய்ங்களான்னு பாரு சரவணா! அப்போ அம்புட்டு பேருக்கும் தெரிஞ்சிருக்கு, நம்ம ரெண்டு பேரைத் தவிர..!” எனக் கதிர்வேல் சொன்ன பின்னரே, சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தார் சரவணன்.

 

 

 

 

“ம்மா! என்னம்மா இதெல்லாம்? உனக்குத் தெரியாமல் இதெல்லாம் எப்படி நடந்திருக்கும்?” எனக் கேட்டார் சரவணன்.

 

 

 

“ம்க்கும்! உன் தம்பி மயன் போறேன்னு சொன்னான்னா நான் என்ன செய்ய முடியும் சரவணா? அவனைப் போய் கேட்க வேண்டியது தானே? என்னமோ நான்தேன் அவனை வலுக்கட்டாயமா அனுப்பின மாதிரி பேசிட்டு நிக்கிறே? உன் தம்பி மயன், என்னமோ வீடியோ புடிக்கப் போறேன்னுதேன் அங்கிட்டு போனான். வீம்பு பிடிச்சுட்டுப் போறவனை கட்டிப் போடவா முடியும்?!”

 

 

 

 

“அவன் போகும் போது, யாரும் ஒத்தை வார்த்தை பேசாதீங்க! இப்போ வந்து ஆளுக்கொரு நியாயம் பேசுங்க! அவன் என்னடான்னா அங்கண போய் உட்கார்ந்துக்கிட்டான். உங்க ஆசை மருமவ அவளோட தம்பி மவளுக்கும் வீராவுக்கும்தேன் கல்யாணம் பண்ணனும்னு பரிசம் போடாதக் குறையாய் பேசிட்டு வர்ரா! என்னதேன் நடக்குது இந்த வீட்டில்?” குரல் சூழல் அதிர உயந்தது கதிர்வேலுவுக்கு.

 

 

 

“இப்போ என்னங்கிறீங்க? என் தம்பி மவதேன் இந்த வீட்டுக்கு ரெண்டாவது மருமகள். வீராவை வேணாம்னு சொல்லிட்டுப் போன பொண்ணை நீங்க தானே பார்த்து வச்சீங்க? இனி வீரா கல்யாணத்தில் நீங்க ஒத்தை வார்த்தைப் பேசக் கூடாது. அம்புட்டுதேன் சொல்லிட்டேன். இன்னொரு விஷயமும் நல்லா தெரிஞ்சுக்கிடுங்க, ஒரு சின்ன மனமாற்றத்திற்காகதேன் அவன் அந்த ஊருக்கு போனான். வர்ணாவைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, திட்டம் போட்டெல்லாம் அவனை யாரும் அனுப்பலை. இப்போவுமே என் தம்பி மகள் மேலே அவனுக்கு ஒரு பிடித்தம் இருக்குன்னு எனக்குத் தெரியுது. இந்த வழியிலாவது குடும்பம் ஒண்ணு சேர்ந்து, என் பிள்ளைங்க வழியிலாவது இந்தச் சொந்தம் தொடரட்டுமேன்னு ஒரு நப்பாசைதேன்.!” என அரசி பேச, அந்த இடத்தை சில நொடிகள் அடர்த்தியான மௌனம் மட்டுமே ஆட்கொண்டது.

 

 

 

“அப்போ உன் தம்பி மயனுங்க முன்னால், இவன்தேன் எங்க மயன்னு போட்டு உடைச்சிருக்க வேண்டியது தானே? என்னத்துக்கு இந்த நாடகமெல்லாம்? துணைக்கு இந்த காக்காவிரட்டி பய வேற.. வரட்டும் காலை உடைச்சுப்புடுறேன். போன வாரம் ஃபோன் போட்டு எங்கே டா இருக்ன்னு கேட்டால், தொடர்பு எல்லைக்கு அந்தப் பக்கமா இருக்கேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான் வரட்டும் வச்சிக்கிறேன் அவனை.!” நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வதைப் போல, வீரபத்ரன் மீதான கோபம் காத்தவராயனின் மீதும் கொஞ்சமாய் திரும்பியது.

 

 

 

 

“அங்கே வச்சே போட்டு உடைச்சிருந்தால், அவனும் நம்மக் கூடவே ஊரைப் பார்த்து வந்திருக்க வேண்டியதுதான். அவனை அரசி மயன்னு தெரிஞ்சு யாருக்கும் பிடிக்க வேண்டாம்ங்க! அவனை அவனோட குணத்தால் பிடிச்சு, அரசியோட மயன்னு தெரிஞ்சாலும், அவனை விட்டுக் கொடுக்க முடியாத நிலை வரணும். அதுக்குதேன் அவன் யாருன்னு சொல்லாமல் அங்கண இருக்கான். போதுமா விளக்கம்? இல்லை இன்னும் வேணுமா?” அரசி கணவனுக்கு நிகராக குரலுயர்த்திக் கேட்க, அரசியைக் கோபத்தோடு முறைத்தபடியே அறைக்குள் நுழைந்து, கதவைப் பட்டென அடித்துச் சாற்றினார் கதிர்வேல்.

 

 

 

 

“என் மேலே காட்ட முடியாதக் கோபத்தைக் கதவுக்கிட்டே காட்டுறீங்களாக்கும்?” என்ற அரசியின் குரல் கதவிடுக்கின் வழியே கதிர்வேலின் செவிதனில் விழுந்தது.

 

 

****

 

அதே நேரம்..

 

 

“என்ன நாச்சியப்பன் எப்படி இருக்கீக? கடலை இந்த வருஷம் நல்ல விளைச்சலோ?” என்ற அந்தப் புதிய நபரின் கேள்விக்கு,

 

 

 

“ஏதோ, அந்த மீனாட்சி புண்ணியத்தில், நல்ல விளைச்சல்தேன். விளைச்சலில் முதல் மூட்டை மீனாட்சிக்குதேன்னு எடுத்து வச்சிருக்கிறேன். அப்பறம் நீ எப்படி இருக்க செந்தில்?” எனக் கேட்டார் நாச்சியப்பன்.

 

 

 

“எனக்கென்ன குறை நல்லா இருக்கேன் நாச்சியப்பன்.!”

 

 

 

“அப்பறம் உங்க சோலியெல்லாம் எப்படி போகுது? கவர்மெண்ட் அதிகாரி, அம்புட்டு லேசில் இந்தப் பக்கம் வர மாட்டீகளே? என்ன சங்கதி.? வீட்டுக்கு வாங்களேன் காபி சாப்பிட்டுட்டு போகலாம்!”

 

 

 

 

“காபி சாப்பிட்டு போறாதாக இருந்தால், நான் வீட்டுக்கே வந்திருப்பேனே நாச்சியப்பன். இது நம்ம தம்பிங்க முன்னாடி பேசக் கூடிய விஷயமில்லை. நீங்க எங்க இருக்கீங்கன்னு தேடிப் பிடிச்சு வந்திருக்கேன்னா விஷயம் என்னன்னு உங்களுக்கே தெரிஞ்சுருக்குமே?” என செந்தில் சொல்லவும், நாச்சியப்பனின் புருவம் யோசனையாய் இடுங்கியது.

 

 

 

“என்ன சொல்ல வர்ரீக? பசுபதி விஷயமா வந்தீகளா?”

 

 

 

“ம்ம்! நிச்சயம் இது உங்களுக்கு கெட்ட செய்திதான் நாச்சியப்பன்.!”

 

 

 

“நீங்க சொல்ற தோரணையைப் பார்த்தால், பசுபதி ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டானா?” எனக் கேட்டபடியே அதிர்வுடன் செந்திலைப் பார்த்தார் நாச்சியப்பன்.

 

 

 

“ம்ம்!” என செந்தில் சொன்ன ஒற்றை வார்த்தை நாச்சியப்பனின் இதயத்தில் பேரிடியாய் இறங்கியது.

 

 

 

“நல்லவேளை, எம் மயனுங்க முன்னால், நீங்க இந்த விஷயத்தை சொல்லலை! விவரம் புரியாமல், ஆளுக்கொரு அரிவாளைத் தூக்கிட்டு கிளம்பியிருப்பானுங்க!” 

 

 

 

 

“அதனால் தான் உங்களைத் தனியாய் பார்த்து சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்தேன் நாச்சியப்பன். நீங்களும் உங்கக் குடும்பமும் கொஞ்ச நாளைக்கு, கொஞ்சம் கேர்ஃபுல்-ஆ இருங்க! முக்கியமா வர்ணாவைப் பத்திரமாகப் பார்த்துக்கோங்க! வரேன் நாச்சியப்பன்.!” என செந்தில் விடைபெற்று சென்றுவிட, யோசனையாய் புருவத்தை நெறித்தபடி, நின்றிருந்தார் நாச்சியப்பன்.

 

 

 

தித்திக்கும் 🔥

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 3.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்