Loading

அத்தியாயம் – 13

சீறிச் சினந்து, இப்படி சிவந்து போன விழிகள் கொண்டு ருத்ரத்தின் மொத்த ரூபமாய் நிற்கும் ராகவை இதற்கு முன் மணி எப்போதுமே பார்த்ததே இல்லை. அவள் திக்பிரம்மை கொண்டு எழுந்து நிற்க, ராகவோ கோபத்துடன் தொடர்ந்தான்.

“என்ன? விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற? கேவலமானவன்.. கேவலமானவன்னு சொல்லிட்டு இருக்கயே.. நான் உண்மையாவே கேவலமானவனா இருந்தா இந்நேரம்..” என்றவன், ஓரெட்டு முன்னே வர, நடுங்கிப் போன மணியோ மழையில் நனைந்த சிறு பறவையாய் தன்னையறியாமல் பின்னே செல்ல, மீண்டும் படுக்கையிலேயே விழுந்தாள்.

அவள் விழுந்ததையும், அவள் முகத்தில் தென்பட்ட பயத்தையும் பார்த்த ராகவோ, தன்னைத் தானே நெற்றியில் அறைந்து கொண்டான்.

‘ச்சே.. பொறுமை.. பொறுமைன்னு யோசிச்சுட்டு.. இப்படி ஒத்த வார்த்தைல எல்லாத்தையும் கெடுத்துட்டனே..’ என்று நினைத்தவன், உள்ளடக்கிய மூச்சில்..

“உஃப்ப்ப்ப்ப்.. இங்க பாரு மணி.. நான் முடிஞ்சளவுக்கு நல்லவனா தான் இருக்கணும்னு நினைக்கறேன். ஆனா, நீ என்ன கேவலமானவன்னு சொல்லிச் சொல்லி என்ன நிஜமாவே கேவலமானவனா மாத்திடாத.

அது உனக்குத் தான் நல்லதில்லை.” என்று இறுகிய குரலில் கூற, இப்பொழுது உயர்த்தப்படாத அந்தக் குரலுமே மணிக்கு உள்ளுக்குள் பயத்தைக் கொடுத்தது தான்.

இவளிடம் பேசிவிட்டு, விறுவிறுவென வெளியே வந்தவன், தனது நெற்றியில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

“ச்சே.. நான் எவ்வளவு பொறுமையா இவளுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்க நினச்சேன்.. என்ன மனுஷனா இருக்க விடறாளா இவ?” என்று வாய்விட்டே புலம்பியவன், அதற்கு மேல் வீட்டில் இருந்தால் பிரச்சனை பெரிதாகும் என்று எண்ணியவன், பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான், மணியிடம் எதுவும் கூறாமலேயே!

இப்படி அலைப்புறுதலாய் இருக்கும்பொழுது காரைவிட, பைக் பயணத்தையே கேட்டது அவன் மனம்.

சீறும் காற்று முகத்தில் மோத, வெகுதூரம் பைக்கில் சென்று கொண்டிருந்தவனுக்கு, மனது சமாதானப்பட ரொம்ப நேரம் ஆனது!

வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தால், அறைக்குள் கால்களில் முகத்தைப் புதைத்து அமர்ந்துகொண்டிருந்தாள் மணி.

பார்க்கப் பார்க்க, உள்ளுக்குள் ரத்தம் வடிந்தது ராகவுக்கு! ஆனால்.. பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம் என்றால்.. அதற்குச் சற்றும் இறங்கி வரமாட்டேன் என்கிறவளை என்ன தான் செய்வது என்று சலித்துப்போனது அவனுக்கு.

அவளைக் கண்டுகொள்ளாத பாவனையுடன், அறையில் இருந்த சோபாவிலேயே சென்று படுத்தவன், நெற்றியின் மீது வலக்கையை மடக்கி வைத்துக்கொண்டு உறங்க முற்பட்டான்.

இவன் வந்த அரவம் கேட்டுத் தலை நிமிர்ந்தவளோ, தன்னைக் கண்டுகொள்ளாது இருக்கும் ராகவைப் பார்த்து உள்ளம் குமைந்தாள்.

‘இவனால தான்.. இவனுக்காகத் தான் எல்லாரும் என்ன விட்டுட்டுப் போய்ட்டாங்க.. கல்யாணமான உடனே ரெண்டு பேரும் பெட்டுல புரண்டு, அடுத்த பத்து மாசத்துல இவங்களுக்கு வாரிசைப் பெத்துக் கொடுத்துடனுமா?

நான் என்ன மெஷினா? இவங்க கல்யாணம் செய்து வச்சுட்டாங்கன்ற ஒரே காரணத்துக்காக இவங்களுக்கு வாரிசைப் பெத்துப் போட?’ என்று உள்ளுக்குள் குமைந்தவள், காரணமேயின்றி மேலும் மேலும் உள்ளுக்குள் ராகவின் மேலிருக்கும் ஆத்திரத்தை அதிகப்படுத்திக் கொண்டாள்.

அடுத்த நாள் முழுவதுமே ராகவும், மணியும் பேசிக்கொள்ளவில்லை.

சமையலம்மாவும் வந்து சாப்பாடு மட்டுமே செய்துவிட்டு சென்றிருக்க, ராகவோ சாப்பிட்டுவிட்டு கடைக்குச் சென்றவன் தான், இரவு கடை மூடியபிறகும் கூட வெகுநேரம் பைக்கில் சுற்றியலைந்துவிட்டுத் தான் வீடு வந்து சேர்ந்தான்.

அவன் வந்த அப்பொழுதும் கூட, மணி இன்னமும் அவளது அறையிலேயே, இந்தப்பக்கம்.. அந்தப்பக்கம் நகரக் கூட இல்லாது அமர்ந்திருப்பதைக் காணவும் உள்ளுக்குள் அதிர்ந்தான் ராகவ்.

அவளையே பார்த்தபடி குளியலறைக்குள் சென்றவன், உடல் கழுவிவிட்டு வேறு உடைக்கு மாறி வந்தபிறகும், அவள் அப்படியே உட்கார்ந்திருக்கக் காணவும், மெல்ல.. “மணி..” என்று அழைத்தான்.

மெதுவே தலை நிமிர்ந்தவளின் விழிகளில் இப்பொழுது ஈரம்! அதைக் கண்டவனது இதயமோ குருதியைக் கொப்பளித்தது!

“ஏன் மணி இப்படி? என்னாச்சு உனக்கு? நான் வேணும்னா போன் பண்ணி அம்மாவையும், பாட்டியையும் திரும்ப வரச் சொல்லட்டுமா?” என்றவன் கரங்கள், இப்படி வேதனையுறுவதைப் பார்த்து இழுத்து அணைத்துக்கொள்ளத் துடித்தது.

ஆனால் முந்தைய தினம் அவளது சீறலைக் கேட்டபிறகு, அவள் வாயால் தன்னை மற்றுமொருமுறை கேவலமானவன் என்ற வார்த்தையைக் கேட்கப் பிடிக்காது, உள்ளெல்லாம் ரணமாகத் தவித்தாலும் அதை அடக்கிக் கொண்டு தள்ளி நின்றே பேசினான்.

ஆனால் அவனது கண்களில் தெரியும் வலியைக் கவனிக்கவில்லை மணி. மாறாக, அவன் கேட்டதற்கு வேண்டாம் என்று அவள் தலையசைக்க.. அவளது வெறுமையான பார்வை ராகவின் உயிர் தின்றது.

“வேற என்ன தான் வேணும் உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்று அவன் ஆயாசத்துடன் கேட்க.. மணியோ வாயைத் திறந்தாள்.

“என்னால முடியல ராகவ்.. இது நரகமா இருக்கு..” என்ற வலியுடன் கூடிய அவளது வார்த்தைகளில் ராகவின் உள்ளுக்குள் அத்தனையும் மொத்தமும் அழிந்தது!

‘என்கூட இருக்கறது நரகமா இருக்கா இவளுக்கு? நான்.. நான் இவளுக்காக என்னவெல்லாம் யோசிச்சுருக்கேன்.. இவளை எபப்டியெல்லாம் பார்த்துக்கணும்னு நினைச்சிருக்கேன்.. ஆனா.. இவளுக்கு?

இவளுக்கு என் இருப்பு நரகமா இருக்கா?’ என்று வேதனையுற்றவன், சற்றும் யோசிக்காது அந்த வார்த்தையை விட்டுவிட்டான்!

“சரி மணி.. லெட்ஸ் கெட் டிவோர்ஸ்..” என்று முகம் திரும்பிச் சொல்ல, மணியின் உடலோ ஒரு கணம் அதிர்ந்துவிட்டது!

திருமணமாகி ஒரு மாதம் கூட இன்னமும் முழுவதாக முடியவில்லை.. அதற்குள் விவாகரத்தா? என்று எண்ணியவள், “இல்..” என்று ஏதோ கூற முனைய, அவளை இடைவெட்டியவனோ..

“நீ எதுவும் பேசாத மணி.. இந்த நரகத்திலிருந்து உனக்கும், எனக்குமான விடுதலை, விவாகரத்தா மட்டும் தான் இருக்க முடியும்.” என்று கூற, தலைசுற்றியது அவளுக்கு.

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம், ராகவைக் கண்ணில் பார்ப்பதே அரிதாகிப் போனது.

காலையில் அவள் விழிப்பதற்கு முன்பு விழித்து, இரவு அவள், அவனுக்காகக் காத்திருந்து களைத்த பிறகு வீடு திரும்பி, அவள் தன்னையும் மீறி, அவனுக்கு போனில் அழைக்கும் போதெல்லாம் அழைப்பைத் தவிர்த்து என்று மொத்தமாய் வெறுத்த நிலைக்குப் போய்விட்டிருந்தான் அவன்.

அவனது இந்தப் பாராமுகத்தில் மணியின் மொத்த தைரியமும் அழிந்துவிட்டிருந்தது.

‘அப்போ.. அவனுக்கு நான் வேணாம்னு நினைச்சுட்டான்.. என்ன சமாதானப்படுத்தல.. இந்தக் கல்யாணத்த, என்ன.. தக்கவச்சுக்க நினைக்கல.. என்ன வேணாம்னு நினைக்கறான் அவன்..’ என்று கண்ணீருடனே காலம் கழித்திருந்தாள் அவள்.

அப்பொழுது தான் ஒரு வார விடுமுறை தினத்தன்று, வீட்டில் இருந்தான் ராகவ்.

அன்று மணி கண்விழிக்கையில் அவளது படுக்கைக்கு எதிர்ப்புறம் இருந்த சோபாவில் இன்னமும் ராகவ் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் உற்சாகம் கொண்டவள்..

‘ஹப்பா.. எவ்வளவு தான் சண்டை போட்டாலும், இந்த மூஞ்சிய பார்க்காம மட்டும் இருக்கவே முடியல..’ என்று மனதுக்குள் நிம்மதியாக உணர்ந்தாள்.

என்ன தான் இந்தத் திருமணம் பிடிக்கவில்லை, அவளுக்கு இது சரிபட்டுவராது என்று அவளது வெளி மனம் பிதற்றினாலும், உள்ளுக்குள் அவன் அவளருக்காக இருப்பதே இதமாய் இருந்தது!

எழுந்து குளித்துவிட்டு அவள் வெளியே வருகையில், ராகவ் தன் படுக்கையில் எழுந்து அமர்ந்திருப்பப்த் தெரிந்தது.

‘இப்போ இவன எப்படி சமாதானம் செய்யறது?’ என்று யோசித்தவளுக்கு இந்தச் சில நாட்களில் அவனது பாராமுகம் அவளது மனநிலையை முற்றிலும் மாற்றியிருந்தது.

‘இவனுடன் கணவனாக உறவு கொண்டாட முடியுமோ இல்லையோ அது தெரியாது.. ஆனால் இவனது பாராமுகத்தை.. இவன் தன்னை விட்டுச் சென்றுவிடுவானோ என்ற ஐயத்தைத் தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது..’ என்ற நிலைக்கு இறங்கியிருந்தாள் அவள்.

எனவே தான் ராகவை எப்படி சமாதானம் செய்வது என்ற யோசனையில் இருந்தவள், கீழே சென்று சமையலம்மாவிடம் ராகவுக்கு என்னென்ன பிடிக்குமோ அது அத்தனையும் சமைக்கச் சொன்னாள்.

சரியாக உணவு தயாராகும் வேளையில் ராகவ் கீழிறங்கி வர, இப்பொழுதும் அவனுடன் சகஜமாகப் பேச இயலாதவளுக்கு அவனை எப்படி சாப்பிட அழைக்க என்று தெரியவில்லை.

எனவே சமையலம்மாவிடமே கூறி அவனைச் சாப்பிட வருமாறு அழைக்கச் செய்தவள், அவன் வந்து அமர்ந்ததும், தானும் அவனுடன் உணவு மேஜையில் சென்று அமர, குனிந்து உணவருந்திக் கொண்டிருந்தவன், தன் முன்னாள் அமர்ந்திருந்த மணியை ஆச்சர்யம் கொண்டு பார்த்தான்.

அவன் தன்னைப் பார்த்ததும், லேசாக முறுவலிக்க முயன்றவளுக்கு, சிறு தயக்கம் எட்டிப்பார்க்க, அவள் அந்தத் தயக்கத்தை மீட்டு அவனைப் பார்த்து லேசாக முறுவலிக்க, அதற்குள் அவன் மீண்டும் தட்டை நோக்கிக் குனிந்து உன்ன ஆரம்பித்துவிட்டான்.

தன்னையே நொந்துகொண்டபடி அவள் உண்டு முடிக்க, அதற்குள் ராகவும் உண்டுவிட்டு கையைக் கழுவ எழுந்துவிட்டான்.

அவனிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று இவள் யோசித்துக் கொண்டிருக்க, “மணி..” என்று ராகவே அழைத்தான்.

அவனே தன்னை அழைக்கவும், ‘ஹப்பாடி.. இவனே சமாதானமாகிட்டான்..’ என்று நிம்மதியுற்றவள் சற்று மலர்ந்த முகத்துடனே.. “சொல்லு ராகவ்..” என்று கேட்க அவனோ..

“உனக்கு ஓகேன்னா.. நாம கொஞ்சம் வெளில போயிட்டு வரலாமா?” என்று இவள் முகத்தை பார்த்துக் கேட்க, மணியின் தலையோ சந்தோசமாய் சம்மதம் தெரிவித்தது.

அதற்கு மேலும் அவன் எங்கே, எப்போது செல்கிறோம் என்று கேட்பான் என்று எண்ணிய மணியோ, அவன் வேறு எதுவுமே பேசாது திரும்பிச்செல்லவும் சற்று முகம் வாடினாள்.

‘சரி.. எப்படி இருந்தாலும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகறதுக்குத் தான வெளில கூப்பிடறான்.. வெளில போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும்..’ என்று மனதுக்குள் தைரியமடைந்தாள்.

கருநீலப் பட்டு சுடிதாரும், அதற்குப் பொருத்தமாக வெள்ளியில் கழுத்தணியும், குடை ஜிமிக்கியும், மூக்கில் சற்றுப் பெரிதாக ஒற்றைக் கல் வைத்த மூக்குத்தியும் போட்டுக் கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு, மெல்லிய காற்றில் விரித்து விடப்பட்டிருந்த கேசம் அலையாய் அசைந்தாட, கவிதை பாடத் தோன்றியது.

தனக்குள்ளாகவே மெல்லப் படியிறங்கி வந்தவள், ராகவ் தன்னை இப்படிப் பார்த்தால் புரிந்துகொள்ளுவானா?

தன் மனம் சமாதானமடைய நினைக்கிறது என்பதை அறிந்துகொள்ளுவானா?

தான், இதுவரை அவனிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்த சண்டைக்காரியல்ல என்று உணர்ந்து கொள்ளுவானா? என்றெல்லாம் எண்ணியபடி அவன் தன்னைப் பார்க்கையில் அவன் கண்கள் தன்னைப் புரிந்து, விரியும் அழகைத் தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் அவனையே பார்த்தபடி படிகளில் கீழிறங்கி வர, ராகவோ சற்றுத் திரும்பி அவளது கால் அளவில் மட்டும் பார்வையைப் பதித்து..

“கிளம்பிட்டியா? போலாம் வா..” என்று கூறியபடி முன்னே வேகமாக நடந்தான்.

அவன் இப்படி எதையுமே கண்டுகொள்ளாது செல்லவும், மணிக்குக் கொஞ்சம் மனதுக்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு சென்றவள், அவனுக்கருகாக காரின் முன் சீட்டில் அமர்ந்தாள்.

கார் முதலில் சென்றது என்னவோ அவளுக்கு மிகவும் பிடித்தமான முருகர் கோவிலுக்குத் தான்.

அதுவரை அவன் தன்னைக் கவனிக்கவில்லையே என்று உள்ளுக்குள் விசனப்பட்டுக் கொண்டிருந்தவள், இப்படி அவன் தனக்கு இஷ்டப்பட்ட கோவிலுக்குக் கூட்டி வரவும், அதுவரை இருந்த சுணக்கம் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி கொப்பளிக்க, கீழிறங்கினாள்.

உள்ளே ஒவ்வொரு பிரகாரமாகச் சென்று வழிபடுகையில் மனது கொஞ்சம் நிதானப்பட்டது.

‘ச்சே.. ஒன்னுமே இல்லாத விசயத்துக்கு ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் செஞ்சோம்?’ என்ற அளவுக்குத் தெளிந்தாள் அவள்.

முருகன் சன்னிதானத்தில் கண்மூடி நின்று அவள் பிரார்த்தித்துக் கொண்டிருக்க, இறுகிய முகத்துடன் கைகட்டி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ராகவ்.

சந்தோசத்துடன் இவள் விழி திறக்க, எதிரே வெறுமையான முகத்துடன் ராகவ் நின்றிருப்பது தெரிய, என்ன என்று விழிகளாலேயே கேட்டதற்கு, அவன் ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.

அடுத்ததாக அவளை ஒரு பெரிய வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தான்.

“இது.. இது யார் வீடு?” என்று அவள் சிறு தயக்கத்துடன் கேட்க,

“தெரிஞ்சவங்க வீடு தான்..” என்று மொட்டையாகப் பதிலுரைத்தான் அவன்.

ஆனால் ஏனோ மனதிற்குள் ஏதோ சரியில்லை என்று மட்டும் அவளுக்குத் தோன்றியது.

உள்ளே சென்று ஹாலில் அவனுடன் அமர்ந்தவளுக்கு, மனம் படபடக்கத் தொடங்கியது.

உள்ளிருந்து கன கம்பீரத்துடன் ஒரு பெண் வந்தார். மணியைவிட, ஒரு ஏழெட்டு வயது மூத்தவராக இருப்பார்.

“உன் ப்ரெண்டா இவங்க?” என்று அவள் ராகவ் காதோரம் கிசுகிசுக்க, அவனோ ஆம் என்று தலையசைத்தான்.

அதற்கு மேல் அவள் ஏதோ கேட்கப்போக, அதற்குள் அந்தப் பெண் பேச ஆரம்பித்தார்.

“வா ராகவ்.. ஏதாவது சாப்பிடறியா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டவரது குரலும், முகமும் சந்தோஷத்தைக் காட்டவில்லை.

‘ஏன் இவங்க இப்படி இறுகிப் போய் இருக்காங்க? இவங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?’ என்று இவள் யோசித்தபடி இருக்க, ராகவோ அந்தப் பெண்ணின் உபசரிப்பிற்கு மறுப்பாய் பதில் கூறி மெளனமாக அமர்ந்திருந்தான்.

‘என்ன நடக்கிறது இங்கே?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண் மேலும் பேச ஆரம்பித்தார்.

“நல்லா யோசிச்சுட்டியா ராகவ்? கல்யாணமாகி ஒரே மாசம் தான் முடிஞ்சுருக்கு.. அதுக்குள்ளே மியூச்சுவல் டிவோர்ஸ்ன்னு வந்துருக்கீங்க ரெண்டு பேரும்.. பாட்டி, அம்மா, அப்பா பத்தியெல்லாம் யோசிச்சு பார்த்தியா?” என்று அவர் கூறக் கூற, மணிக்கு இடியிறங்கியது போலானது!

அவளது தலை சுற்றியது.. பேசிக்கொண்டிருந்த அவர்கள் இருவரும் சுற்றினார்கள், அந்த வீடு சுற்றியது.. மொத்த உலகமும் சுற்றியது!

இவள் கண்கள் இருள அமர்ந்திருக்க, ராகவ் பேசுவது அவள் காதில் விழுந்தது.

“மத்தவங்களுக்காகன்னு எடுத்த முடிவு தான் இந்தக் கல்யாணம்.. அது எவ்வளவு தப்புன்னு தான் இப்போ தெரிஞ்சுடுச்சே.. இனிமேல் எடுக்கற முடிவாவது எங்களுக்காக நாங்க எடுத்துக்கறோம்..

இனிமேலாவது சந்தோசமா இல்லாட்டியும், நிம்மதியாவது இருப்போமான்னு பார்க்கலாம்..” என்று கூற, இதயம் பிளந்தது மணிக்கு!

‘இவன் நினைக்கறானா? இந்தக் கல்யாணம் தப்புன்னு இவனே நினைக்கறானா?’ என்று அதிர்ந்தாள் அவள்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்