Loading

காலம் தாண்டிய பயணம் 33

 

 

அடுத்த நாள் புலர்ந்ததும் அவர்களது பயணம் காலபைரவன் கோட்டையை நோக்கிப் புறப்படக் காத்திருந்தது.

 

எங்கே அவர்கள் வாழ்வு நேரானதோ அதனைத் தேடி மீண்டும் ஒரு பயணம்…

 

இந்த முறை பயணம் நன்றி செலுத்துவதற்காகவோ என்னவோ!

 

வீட்டினைப் பூட்டிவிட்டு  வெளியே வந்த யாழினியோ, “மகி, இந்த அசோக்  இதோட நாலு வாட்டி கூப்பிட்டு இன்னும் ஃபைவ் மினிட்ஸ்னு  சொல்லிட்டே இருக்கான். லேட்டாகிடிச்சு சீக்கிரம் வர்றேன்னு புள்ளத்தாச்சி புள்ளையையும் வெச்சிட்டு வேகமா வரப்போறான். கால் பண்ணி சொல்லு மெதுவா வரச்சொல்லி” என்று சொன்னபடி அவர்கள் அருகில் வர,

 

“ம்மா, அவன் வண்டி  ஓட்டல. அவனைப் பத்தி தான் தெரியுமே கும்பகர்ணன் சீக்கிரம் எழும்பவே மாட்டான்னு, டிரைவர் ஒருத்தர் பேசி  நேத்தே செட் பண்ணிட்டேன். இப்போதான் அவரு பேசினாரு. இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்க” என்றான் மகிழ்.

 

அவன் சொன்னது போல் அடுத்த பத்து நிமிடத்தில் அசோக்கின் வாகனம் வந்து விட, சில பல அர்ச்சனைகளை சரமாரியாக வாங்கிய பின்னே அவர்களது பயணம் கால பைரவன் கோட்டையை நோக்கி ஆரம்பித்தது.

 

சில மணி நேர பயணத்தின் பின், அவர்களது வாகனமானது ‘கால பைரவன் கோட்டை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற வாசகம் அடங்கிய பலகையைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தது.

 

நேரே ஊர் தலைவர் வீட்டின் முன்னே கார் நிற்க, வரவேற்போர் தான் அங்கே இருக்கவில்லை…

 

எப்போதும் இவர்களை வரவேற்கும் விஜயா தான் இப்போது குழந்தை பெற்று ஓய்வில் இருந்தாளே!

 

அவர்களது வரவேற்பை இவர்கள் யாரும் எதிர்பார்த்தது போலவும் தெரியவில்லை, ஆளாளுக்கு அவர்கள் உடை அடங்கிய பை மற்றும் கொண்டு வந்த பொருட்களுடன் வீட்டின்னுள் நுழைந்தனர்.

 

அங்கே கூடத்தில் அமர்ந்திருந்த வள்ளியோ முகத்தைத் திருப்பிக் கொள்ள, அதனைக் கருத்தில் எடுப்போர் தான் அங்கே யாருமில்லை…

 

மற்றவர்கள் அது பழக்கப்பட்டது என்பதைப் போல ஒதுங்கிப் போக, மகிழோ புதிய நிகழ்வு என்பதால் ஒதுங்கிப் போனான்.

 

காசிநாதனும் எதுவுமே பேசாமல் எழுந்து சென்று விட, பெண்கள் ஆறு பேரும் விஜயாவின் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

 

“அடேய் கிருஷ் குட்டி, அத்தைய பாருங்க” என்றபடி குழந்தைய இனியா கொஞ்சத் தொடங்கிவிட, பூவிழியும் கவிலயாவும் குட்டி கை கால்களுடன் இருந்த குழந்தையை அதிசயமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தனர்.

 

ஷில்பாவுக்கோ அந்தப் பிஞ்சுக் குழந்தையை பார்க்கும் போது கருவில் இருக்கும் அவர்கள் குழந்தை எண்ணி கனவு கண் முன் விரியத் தொடங்கி இருந்தது.

 

படுக்கையில் சாய்ந்து அமர்ந்த விஜயாவோ “வாங்க சித்தி, வாங்க அத்தை” என்று யாழினி மாலதி இருவரையும் வரவேற்றாள்.

 

அதற்கு இனியாவோ “என்னண்ணி  உங்க அத்தைக்கும் சித்திக்கும் மட்டும் தான் வரவேற்பு உண்டா, அப்போ நாங்க எல்லாம்?” என்று விளையாட்டாய் விஜயாவை சீண்ட,

 

அவளோ “வந்ததும் வேலைய ஆரம்பிச்சிட்டியா? என்னை ஆள விடு தாயே!” என்று அவளிடம் சரணடைய,

 

அவளோ “அது அந்த பயம் இருக்கணும்” என்று கெத்துக் காட்டி, “என்ன கிருஷ்குட்டி உன்ன அத்தை கெத்துல” என்று அவனிடமும்  சட்டையில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

 

இப்படியே சிறியவர்கள் கவனம் குழந்தை பால் குவிய, பெரியவர்கள் புன்னகையுடன் அடுத்த பேசுச்சுக்குத் தாவி இருந்தனர்.

 

அவர்களது பேச்சு அப்படியே விஜயாவின் பிரசவம் பற்றிச் சென்றது. அவள் உடல் நலத்தையும் ஆராய்ந்து கொண்டது.

 

அப்போது விஜயாவின் தாய் அவசரமாய் குடிக்க மோர் கொண்டு வந்திருந்தார்.

 

“நீங்க வந்திருக்கீங்கனு தெரியலமா? மன்னிச்சிக்கங்க, இப்போதான் நம்ம தோட்டக்காரன் சொன்னான். இத குடிங்க முதல்ல, மதியத்துக்குக் கோழி அடிச்சு குழம்பு வெச்சிடுறேன்” என்று அவர்களுக்கு மோரைக் கொடுக்க, அவரைப் பார்த்துப் புன்னக்கைத்தாள் யாழினி.

 

“எதுக்குக்கா இந்தப் பதட்டமும் அவசரமும், நான் இங்க என்ன புதுசாவா வரேன் எப்போவும் போலத் தானே! இதுக்காக வீட்டு வேலை எல்லாம் விட்டுடு வந்தீங்களாக்கும்” என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே,

 

விஜயா, “அம்மா இங்கதான் இருக்காங்க சித்தி, என்னப் பார்த்துக்க வந்திருக்காங்க” என்றாள் உள்ளே சென்ற குரலில்…

 

“என்ன விஜயா சொல்லுற? அக்கா எதுக்கு இங்க தங்கிப் பார்த்துக்கணும் நீ அங்க போய் இருக்கலாம்ல, வீட்டையும் பார்த்து அங்கயும் இங்கையுமா கவனிக்கிறது கஷ்டம் தானே? ஏம்மா அம்மாக்கு கஷ்டம் கொடுக்குற” என்று கேள்வியாய் அவள் நிறுத்த, விஜயாவோ அம்மாவைப் பார்த்து தயக்கத்துடன் பதில் பேசாமல் இருக்க, யாழினிக்கு ஏதோ இருக்கிறது என்று புரிந்தது.

 

“விஜயா அங்க என்ன பார்வை, உன்கிட்ட கேள்வி கேட்டது நான். போன வாரமே நீ அங்க போய் இருக்கணுமே! நானும் நாள் பார்த்து காத்திருக்கீங்கன்னு நினைச்சா இது என்ன?” என்று கேட்க,

 

தன்னிடம் வந்த நேரடிக் கேள்வியில் பதில் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் விஜயா தவித்துத் தான் போனாள்.

 

யாழினி மீண்டும் “விஜயா” என்று அழுத்தமாய் அழைக்க,  அவளோ தன்னால் அத்தனையையும்  ஒப்பித்திருந்தாள்.

 

“அவங்க குடும்ப ஆண் வாரிசு அந்த வீட்டுல இருக்கக்கூடாதாம் சித்தி, எங்க வீட்டுல எல்லாம் அவங்க வம்ச வாரிச வளர விடமாட்டாங்களாம். பொட்ட பிள்ளையா இருந்தா அனுப்பி இருப்பாங்களாம்” என்று வள்ளி பேசிய அனைத்தையும் கவலையுடன் சொல்லி முடித்தாள்.

 

அதில் நிச்சயம் கவலை தான் அவளிடம்…

 

தாய் வீட்டில் சீராட்ட வேண்டும் என எவ்வளவு ஆசையாய் இருந்திருப்பாள்??

 

அதிலும் அவள் தாய் கோமதி, எத்தனை கனவுகளுடன் காத்திருந்திருப்பார்??? எல்லாம் அவர் ஒருவரால் முடியாமல் போனதே!

 

இப்போதும் தாய் தான் பார்த்துக்கொள்கிறார். ஆனால் உரிமையாக அல்லவே! அதற்கும் தினம் எத்தனை வசவுகளை வாங்க வேண்டி இருக்கிறது.

 

தன்னால் தாய்க்கு மரியாதை குறைவு என்று வருகையில் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…

 

யாழினியின் மிரட்டலில் வள்ளி இப்போதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் அவரது மருமகள் விடயத்தில் இன்னும் கெடுபிடிதான்.

 

இன்னும் அவர் குணம் மாறவே இல்லை. அவரெல்லாம் மாறும் மனித ஜென்மமா??

 

விஜயா சொன்னதிலேயே அது யார் வேலை என்பது புரிந்து போக, கோபத்துடன் எழுந்து செல்லப் போன யாழினியைத் தடுத்தார் விஜயாவின் தாய் கோமதி…

 

“அட உக்காரு கண்ணு, இப்போ தானே வந்திருக்க, இப்போ போய் அவங்க கிட்ட வாய் குடுக்கணுமா? என் பொண்ணுக்கு நான் செய்யாம யாரு செய்வா? எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை. இந்தா இருக்கு வீடு ஓடிப்போய் ஓடி வந்துட மாட்டேன். என் பேரன் கண்ணுக்கு முத்தா பூத்து கிடக்கும்போது அவனைப் பார்க்காம என் கட்ட வேவுமா!”  என்றவர் விஜயாவையும் கண்களால் மிரட்டினார்…

 

தாங்கள் என்ன கஷ்டப்பட்டாலும் புகுந்த வீட்டில் மகள் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணும் சமான்ய தாய்களில் ஒருவர் தானே அவர்…

 

யாழினியும் அவர் பேச்சுக்கு அந்த நேரம் கொஞ்சம் தழைந்து போகவே செய்தாள்.

 

நிச்சயம் இதற்காக வள்ளி அவள் இங்கிருந்து செல்வதற்கு இடையில் வாங்கிக்கொள்வது உறுதி…

 

அடுத்து கடந்த அவர்களது பொழுதுகள் குட்டிக் கிருஷ் உடனும் அரட்டையுடனுமே கழிந்தது.

 

அங்கே வீட்டின் பின்னே தோட்டத்தில் நின்றிருந்தார் காசிநாதன்.

 

இன்றும் அவர் அதே காசிநாதன் தான். ஆனால் யாழினி எதுவும் செய்யத் துணிந்தவள் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

 

அதுவும் அவர் மானம் மரியாதை என்று சொல்லிக்கொண்டு திரியும் டேஷ்களுக்காகத்தான்.

 

யாழினியை பார்க்கும் போதெல்லாம் உள்ளே பற்றி எரியும் கோபத்தை அடக்க வழி தெரியாமல் ஒதுங்கி நிற்கப் பழகிக்கொண்டார்.

 

தான் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்தி, ஊருக்கு வேலை என்று வந்து தங்கிய ஒருவனை திருமணம் செய்து கொண்டு வந்து தைரியமாய் அன்று தன் முன்னே நின்றளே, அன்றே அவளை வெட்டிப் போடும் வேகம் அவருள்…

 

அவளைத் தாக்கச் சென்ற முரட்டுக்காளையைக் காவல் அதிகாரிகள் பிடித்துச் சென்ற போதே அவள் எதற்கும் தயாராக வந்திருப்பது புரிந்தது.

 

மானம் மரியாதை என்று பினாத்துபவர் காவல் நிலையம் செல்லவா விரும்புவார்?? அடக்கி வாசிக்க வேண்டிய நிலை அவருக்கு…

 

பல்லைக் கடித்துக் கொண்டு இல்லாத பொறுமையைக் காத்தால்,  அடுத்து சொத்தில் பங்கு என்று வந்து நின்றாள்.

 

அதில் அவருக்குக் கோபம் தான், ஆனாலும் அவரிடம் மிரட்டி வாங்கிய சொத்து அத்தனையும் அவரின் மகளின் பெயரில் எழுதி வைத்திருந்ததில் கொஞ்சமே கொஞ்சம் உள்ளே மனம் திருப்தி அடைந்திருந்தது.

 

தங்கையை இப்படி வளர்த்து விட்ட தந்தையை திட்டாத நாளே இல்லை… ஏனோ அவள் தான் திமிருப்பிடித்தவள் தவறானவள் என்ற எண்ணம் அவருக்கு…

 

அவளையே சமாளிக்க முடியாமல் தவிப்பவருக்கு அவள் குணத்திலேயே ஒரு மகள்…

 

இனியா வளர வளர, அவள் குணம் அத்தனையும் அத்தையின் வார்ப்பு தான்.

 

இன்னொரு யாழினியாகத் தைரியமாகவே வளர்ந்தாள்.

 

இனியா மீது யாழினியின் ஆதிக்கம் அதிகத்துக்கும் இருந்தது, வள்ளியின் குணம் அறிந்தவள் அவரிடம் குழந்தை பாழாக விடுவாளா என்ன?

 

திருமணம் முடிந்ததிலிருந்து மாதம் ஒரு முறையென இங்கே வந்து இங்கிருபவர்களை  ஒரு கலக்கு கலக்கி விட்டே தான் செல்வாள்.

 

தன் தாயையே வாயடைக்க வைக்கும் யாழினி அத்தை என்றால் இனியாவிற்கு கொள்ளைப் பிரியம்…

 

அவர் போலவே தன்னையும் தைரியமான பெண்ணாய் உருவாக்கிக் கொண்டாள்.

 

இதோ பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டினர் அத்தனை பேரின் தடையையும் மீறி மேற்படிப்பிற்காகச் சென்னையில் அத்தை வீட்டிலிருந்து படிக்கிறாள்.

 

வள்ளியோ “அவளப்போலவே இவளையும் திமிரு எடுத்தவளாட்டும் வளர்த்து வெச்சிருக்கா அந்தச் சிறுக்கி, என்னங்க நீங்க இவ இவ்வளவு நாள் ஆடுன ஆட்டம் காணாதாமா? மாசத்துல ஒரு நாள் அங்க போய் இருக்குறதுக்கே இந்தத் திமிரு இவளுக்கு… இப்போ மொத்தமா அங்கேயே போறேன்னு நிக்கிறா நீங்களும் எனக்கென்னனு இருக்கீங்க” என்று கணவனிடம் ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்து விட்டார்.

 

காசிநானுக்கும் இது பிடிக்கவில்லை தான். ஆனால் அங்கே அவர் தங்கை என்று ஒருத்தி இருக்கிறாளே! அங்கிருந்து அவள் சாவி போடுகிறாள் இங்கே இவள் ஆடுகிறாள் என்பது அவர் அறியாததா???

 

இந்த முறை மிரட்டல் கொஞ்சம் பலம் தான், வழமையாக ‘போலீஸ், கேஸ்’ என்று மிரட்டுப்பவள் இந்த முறை இனியாவின் பெயரில் இருக்கும் சொத்தை வைத்துப் பேரம் பேசி இருந்தாள்.

 

அவர் பங்குச் சொத்தை மகன்கள் இருவரும் சிறிது சிறிதாக அழித்திருக்க, மகள் பெயரில் உள்ள தங்கையின் சொத்து தான் அவள் கணவன் தலையீட்டில் பல்கி பெருகி இருந்ததே!

 

அதனை விட்டுக் கொடுக்க மனசு இல்லாதவரோ அரை மனதாய் கண்டும் காணாமல் இருக்க பழகிக்கொண்டார்.

 

அத்தையின் ஆதரவில் இனியா எண்ணும் மொட்டு பூவாய் மலரக் காத்திருந்தது.

 

இத்தனைக்கும் காசினாதனும் அவரின் அத்தையின் வாளர்ப்பு தானே!

 

இதைத்தான் வளர்ப்பவர்கள் கையில் குணம் இருக்கிறது என்பார்களோ???

 

காசிநாதன் எவ்வளவு நேரம் தோட்டத்தில் நின்றரோ, பின்னே வந்தவனின் குரலில் கோபமாய் அங்கிருந்து கிளம்பப் போக, அவன் குரலில் இருந்த தீர்க்கம் அவரை தடுத்து நிறுத்தி இருந்தது…

 

 

காதலை அணைக்கும்…

 

ஆஷா சாரா…

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்