Loading

காலம் தாண்டிய பயணம் 25 

 

 

அவனது போராட்டம் இனியாவுக்கும் புரிய, பேசுவதை விடவில்லை அவள்…

 

“உங்க மேல காதல்னு எல்லாம் எனக்குத் தோணல மகிழ், ஆனா நீங்க சொன்ன மாதிரி நிச்சயம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பறம் உங்க காதலால என்னையும் காதலிக்க வைப்பீங்கனு நம்பிக்கை இருக்கு. நீங்க, நான், மாமா அப்பறம் அத்தை எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கலாம், வாங்க மகிழ்” என்றவளின் குரலில் ஒரு நொடி மகிழ் வெளியே வந்தே விட, அவன் விழிகளே அதனைக் காட்டிக் கொடுத்தது.

 

ஆனால் இந்த முறையும் மீண்டும் ஆத்ரீகன் சட்டென அவனை அடக்கிவிட, மீண்டும் மகிழ் மறைந்து போனான்.

 

அந்த நேரம் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்க, அகன்ற கண்களில் கருப்புப் பெருங்கதிர் வெளியிட்டபடி, முடிவில்லா நேரத்தின் அடையாளமாக, காலபைரவர் அங்கே தோன்றினார்.

 

வான்மீகியையும், மார்த்தாண்டனையும், ஆத்ரீகனையும் தவிர, யாரின் கண்களுக்கும் அவர் தரிசனம் கிட்டமல் போனது.

 

வான்மீகியோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதை போல அங்கே வருகை தந்திருந்த பைரவனின் உருவதிலேயே பார்வையை நிலைக்க விட்டிருந்தார்.

 

இனிமேல் அசம்பாவிதம் ஏதும் நிகழாது என்று ஆசுவாச பெருமூச்சு அவரிடம்.

 

அவர் வருகையை உணர்ந்து கொண்ட ஆத்ரீகனோ சத்தமாய் சிரித்தபடி, “பைரவா, எதை திருத்தி எழுத இங்கே வந்தாயோ? என் தந்தையே உன்னை கை கட்டி வேடிக்கை பார்க்க வைத்திருக்க, யான் எப்படி விடுவேன் என்று நினைத்தாய்” என்றவன், கண்களை மூடி எதையோ உச்சரிக்க, தன்னால் பைரவனின் அரூபம் அவனால் அணையிடப்பட்டது.

 

கூடவே அத்ரீகனின் செந்நிற விழிகளில் மேலும் பளப்பளப்புக் கூட, கடும் கோபத்தில் தீயாய் எரிந்த அந்த கண்களிலிருந்து தோன்றிய பலலட்சம் ஒளிக் கதிர்கள் அவனைத் தன்னால் இரண்டு உருவமாய் பிரித்திருந்தது.

 

அங்கிருந்தோருக்கு இன்னும் அதிர்ச்சி, ஒரு ஆத்ரீகனையே இவ்வுலகால் சமாளிக்க முடியாது இதில் இன்னொரு ஆத்ரீகன் என்னும் பொழுது சொல்லவும் வேண்டுமா???

 

மார்த்தாண்டன் உவகையின் உச்சியில் இருந்தான். மகனால் இவை எல்லாம் முடியும் என்று அவனுக்கே தெரியாதே!

 

ஏன் அவை ஆத்ரீகனுக்கும் தெரியாதது தானே! வளர்ந்த ஒருவரின் உடலில் இருந்தாலும் அவன் அன்று  பிறந்த குழந்தை தான். ஒவ்வொற்றையும் அப்போது தான் தெரிந்து பழகிக் கொண்டிருந்தான்.

 

அவனை மிஞ்சிய அவன் கோபம் அவனுக்கு ஒவ்வொன்றாய் தீய சக்திகளை கற்றுக்கொடுத்தது.

 

மார்த்தாண்டனுக்கோ, தான் கரு கொடுத்து, இத்தனை தூரம் போராடி மகனை இவ்வுலகுக்கு கொண்டு வந்தது வீண் போகவில்லை என்பது அவன் சக்திகளைப் பார்க்கும் போது புரிந்தது.

 

கூடவே இனி யாரால் தங்களை அடக்க முடியும் கர்வமும்…

 

“பார்த்தாயா பைரவா, என் இத்தனை நாள் தவத்துக்கு கிடைத்த வரத்தைப் பார்த்தாயா? உன்னால் முடியாததைக் கூட அவனால் நொடிப்பொழுதில் முடிக்க முடியும். பைரவன் என் மகனிடம், ‘இந்த பார் போற்றும் அகோராதிபதியிடம் போராடி தோற்றான்’ என்ற நாமம் உனக்கு வேண்டாம் என்றால் இங்கிருந்து வந்த வழியே சென்றுவிடு” என்று அவன் உரைக்க, பைரவனின் கண்களில் புன்னகை.

 

“ஆரம்பம் ஒன்று இருந்தால் அழிவு நிச்சயம் உண்டு மார்த்தாண்டா? உன் மகனுக்கும் அழிவு உண்டு” என்று புன்னகையுடன் மொழிய,

 

மார்த்தாண்டனோ ஆக்ரோஷமாய் “அழிவா அதுவும் என் மகனுக்கா, சொப்பனம் ஏதேனும் காணுகிறாயா பைரவா?” என்று மார்த்தாண்டன் பேசிக்கொண்டிருக்கையிலேயே, அத்ரீகனின் ஒரு உருவம், பைரவனின் அரூபத்தின் முன்னே நின்றிருக்க, பைரவன் என்னவென்று உணரும் முன்னரே அவர் அரூபம் தூக்கி வீசப்பட்டிருந்தது.

 

சற்று தடுமாறிப் போன பைரவரும் அடுத்து எங்கும் தேயவில்லை, ஆத்ரீகனை எதிர்த்து அவர் பார்வை அம்பை வீச, அவன் சற்று எதிரே இருந்த மரத்தில் மோதி இருந்தான். அடுத்து அவன் உணரும் முன்பே மீண்டும் ஒரு பாறை அவனைத் தாக்க, அந்த இடமே புகை மூட்டமாய் தான் காட்சி அழித்தது.

 

அங்கு நின்றிருந்த மற்றவர் பார்வைக்கு பைரவர் தெரியவில்லை என்றாலும், மார்த்தாண்டன், ஆத்ரீகன் இருவரும் மாறி மாறி உச்சரித்த பைரவன் என்ற அந்த பெயர் ஒன்றே இப்போது அவர்களுக்கு  ஒரு தைரியத்தைக் கொடுத்திருந்தது.

 

மிதரன் இது எதனையும் உணரும் நிலையில் இல்லை, மொத்த கரும்புகைகளுடன் போராடுவதே அவனுக்கு பெரும் போராட்டமாய் இருந்தது.

 

வான்மீகியோ புன்னகையுடன் அவன் அழிந்தான் என்று எண்ணி இருக்க, பூகைமூட்டம் மொத்தமாய் அங்கிருந்து அகல, ஆத்ரீகனுக்கோ சிறு கீறல் கூட இருக்கவில்லை…

 

எழுந்தவனோ அதனை விட தன் உருவத்தை பெரிதாக மாற்றி, “இவ்வளவு தான் உன் சக்தியா பைரவா, உன்னை கடவுள் என்கின்றனரே இந்த அப்பாவி மக்கள். நான் காட்டித் தருகிறேன் கடவுள் என்பவன் எப்படிப்பட்ட சக்தியுடன் இருக்க வேண்டும் என்பதை” என்று ஏளனமாய் சிரித்தவன், கரங்கள் இரண்டையும் ஒன்றாக்கி ஏதேதோ மந்திரங்களை உச்சரித்து காற்றில் எதையோ வீச, அவன் சக்தி பெரிய ஒளிக் காற்றையாய் பைரவனைத் தாக்கியது.

 

இங்கே அவனது ஒரு உருவம் இப்படி சண்டையில் இருக்க, இன்னொரு உருவமோ இனியாவது முன்னே அமர்ந்து பூஜையை தொடந்து கொண்டிருந்தது.

 

அவனது மூளை ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் ஆதிக்கத்தை செலுத்தி இருக்க, இங்கே இனியா பேசும் பேச்சுகள் எல்லாம் அவனுள்ளே அடியாளத்துக்குச் சென்றிருக்கும் மகிழுக்கு கேட்காமல் போனது தான் அந்தோ பரிதாபம்.

 

தன்னை நோக்கி வந்த தாக்குதலை பைரவன் தடுத்து மீண்டும் ஆத்ரீகனைத் தாக்கவென மாறி மாறி இரண்டு சக்தி பிளம்புகள் ஆக்ரோசத்தில் இருக்க, இங்கே வான்மீகியோ எம்பெருமானார் ஈசனிடம் மன்றாடலில் இறங்கி இருந்தார்.

 

அடுத்து பைரவன் புன்னகையுடன் ஆத்ரீகனிடம் “உன் அழிவு உன் தந்தையின் கையில் என்பதை மறந்தாயோ ஆத்ரீகா” என்று புன்னகையுடன் கேட்க,

 

ஒரு நிமிடம், ‘தனக்கு அழிவா?’ என்று திகைத்த ஆத்ரீகன் சுதாகரிப்பதற்குள் பைரவனின் அரூபம் அங்கிருந்த மித்ரனின் உடலினுள் இணைந்து கொண்டது.

 

அதுவரை கரும்புகைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த மித்ரன் விழிகளை உயர்த்தி வாளைச் சுழற்ற, அத்தனை கரும் புகைகளும் தன்னால் பொசுங்கி காற்றோடு கலந்திருந்தது.

 

அவன் கரத்தில் இருக்கும் ஆயுதமோ மார்த்தாண்டனை அழிக்கும் வாள், கண் இமைக்கும் நொடியில், உலகின் தீய சக்தியை ஒன்றாக கொண்ட ஆத்ரீகனின் முன்னாள் வந்திருந்தான்.

 

“என்ன பார்க்கிறாய் ஆத்ரீகா, இந்த நொடிக்காக தான் என் பொறுமையும் காத்திருப்பும்.  ஜென்ம ஜென்மமாய் உன் தந்தை இவனும் தானே, உன் உத்திரத்துக்கு சொந்தக்காரனால் மட்டுமே உனக்கு ஆக்கமும் அழிவும். காலம் என் கட்டுப்பாட்டில் நீ இவன் கட்டுப்பாட்டில், புரிகிறதா? உடையவனின் கரங்களில் தான் உன் ஆன்மாவின் அழிவு. வீரவேந்தன் உன் பிறப்பை தடுத்தார். இதோ இந்த மித்ரன் உன் ஆன்மாவை அழிப்பான். இதுதான் உன் விதி” என்று நிறுத்த,

 

‘அத்தனை தீய சக்திகளையும் அடைக்கலமாய் கொண்டிருந்தோம்’ என்று இறுமாப்புடன் இருந்தவனுக்கு சட்டென அத்தனையும் உடைந்து நொறுங்கும் உணர்வு, கூடவே ஏதோ தவறாய் போவதைப் போல் ஒரு பிரம்மை ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

 

“என்ன பைரவா உளறுகிறாய். என்னை எதிர்க்க உனக்கு ஒரு மானிடனின் உதவி தேவையா? அத்தனை பயமா என்னிடம்” என்று சத்தமாய் சிரித்தவன்,

 

“என்னை இவன் அழிப்பானா? இவனே என் தந்தையின் கருணையில் உருவானவன்” என்று மீண்டும் முன்பை விட சத்தமாய் சிரித்தான்.

 

மித்ரனின் உருவில் இருக்கும் பைரவனோ “உன் அழிவை ருசிக்க தயாராக இருந்து கொள் ஆத்ரீகா. அதற்கான நேரம் இதோ…” என்றவர் கைகளை உயர்த்த, தன்னால் காலம் பின்னோக்கி ஓடத் தொடங்கியது.

 

மித்ரன் உருவில் இருக்கும் பைரவனும் எதிரே மகிழ் உருவில் இருக்கும் ஆத்ரீகனும் மட்டுமே கால சக்கரத்தில் சுழல, பைரவன் முகத்தில் புன்னகை, மாறாக நடக்கப் போகும் விபரீதம் புரிந்த ஆத்ரீகனுக்கோ கண்கள் விரிந்து கொள்ள “வேண்டாம் பைரவா” என்றான் கோபமாய்.

 

நேரே காலம் தன்னால் சுழன்று மோகினியையும் கூடவே அன்றைய ஆத்ரீகனின் பிறப்பையும் வீரவேந்தன் அழித்த நாளில் வந்து நின்றது.

 

என்று ஆத்ரீகன் உண்மையில் பிறக்க இருந்தானோ? என்று பிறப்பு தடுக்கப்பட்டு ஆன்மாவாக்கப்பட்டானோ அதே நாள்…

 

கால சக்கரம் ஆதிரீகனை தன்னுள் சிறை வைத்துக்கொள்ள அவனால் அசைய முடியாமல் போனது.

 

மித்ரன் உருவில் இருக்கும் பைரவனோ அந்த நொடிக்காய் காத்திருக்க, இதோ அந்த நொடியும் வந்தது.

 

ஆம் அது மார்த்தாண்டன் வெறும் சதை பிண்டமான ஆத்ரீகனை கையில் ஏந்தியபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்த அந்த நொடி.

 

மெல்ல தன்னருகே நின்றிருந்த ஆத்ரீகனை பார்த்த வைரவனோ “இதோ உன் ஆன்மா வெளியேறப் போகும் நொடி வந்துவிட்டது ஆத்ரீகா, அன்று உன் தந்தை மார்த்தாண்டன் இவ்வுலகுக்குச் செய்த தவறை, உன் தந்தை மித்ரன் திருத்தி எழுதப் போகிறான். அதுவும் என் உதவியுடன்” என்றவன் அந்த காலத்தினுள் நுழைய,

 

ஆத்ரீகனோ காலத்தின் பிடியில், இல்லை இல்லை பைரவனின் பிடியில்…

 

எதுவும் செய்யமுடியாமல் “பைரவ்வாஆஆஆ” என்று கோபமாய் கத்தினான்.

 

காலம் பைரவனின் கட்டுப்பாட்டில் இருக்க, அதனை ஆத்ரீகனால் தகர்க்க முடியாமல் போனது.

 

காலத்தையே ஆள்வது பைரவன் என்னும் போது எங்கனம் அதனைத் தகர்ப்பது???

 

அங்கே மார்த்தாண்டன் பூஜை செய்து மனைவி மகன் இருவரின் ஆன்மாவையும் வெளியே கொண்டு வர,

 

பைரவனோ கண்களை மூடி மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்க, அங்கே ஆத்ரீகனின் ஆன்மா வானில் கலக்க ஒரு நொடி நேர இடைவெளிக்குள் உயர்த்திய மித்ரனின் கரத்தில் மொத்தமாய் அந்த ஆன்மா குடி புகுந்து கொண்டது.

 

அன்று அந்த ஆன்மாவை  வைரவனால் அடக்க முடியாமல் போனது போல் இன்று இல்லையே! வெளியேறிய ஆத்ரீகனை  அவன் தந்தையால் மட்டுமே அழிக்க முடியும்.

 

மார்த்தாண்டன் அதனை என்றும் செய்யப்போவதில்லை. ஆனால் இன்று இருக்கும் மித்ரனால் அது முடியும், அதுவும் பைரவனின் கட்டுப்பாட்டில்…

 

இந்த நொடிக்காகத் தானே பைரவர் காத்திருந்ததும் கூட…

 

மீண்டும் கண்களைத் திறந்த பைரவர் சொடுக்கிட, தன்னால் காலம் வேகமேடுத்து, ஆத்ரீகன் பைரவனுடன் காலப்பயணத்தை ஆரம்பித்த ஐந்தாம் நூற்றாண்டுக்கு  வந்து நின்றது.

 

இதோ அதே ஆத்ரீகன் பைரவனின் முன்னே நின்றிருந்தான். அதுவும் பலவீனமாக, அடுத்த நொடி இரண்டாக பிரிந்திருந்த அவன் உடலோ ஒற்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள, இப்போது பூஜை முன் அமர்ந்திருக்கும் ஆத்ரீகன் மட்டுமே, அந்த ஆன்மாவும் பலமிழந்து உள்ளே இருக்கும் மகிழுக்கு உயிர்ப்புக் கொடுக்கக் காத்திருந்தது.

 

புன்னகையுடன் அதனைப் பார்த்திருந்த பைரவனோ சட்டென மித்ரனின் உடலில் இருந்து வெளியேறி, இப்போது தன் உள்ளங்கையை உயர்த்த, ஆத்ரீகனுள் சேர்ந்திருந்த அந்த மிகுதி உயிரின் பலவீனமான ஆன்மாவானது பெரும் சத்தத்துடன் தன்னால் விலகி அவர் கரத்தினுள் அடைக்கலம் ஆகி இருந்தது.

 

அந்தச் சத்தத்தைக் கேட்கும் ஞானம் அங்கிருந்த யாருக்கும் இல்லை.

 

“மார்த்தாண்டனின் அழிவு எப்போதோ விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டவை விதியின் படி நிகழ்ந்தே தீரும். காலம் அதன் ஆட்டத்தை என்றும் அடுத்தவர் கரத்தினுள் நுழைக்காது அதற்கான நேரத்துக்காய் காத்திருக்கும்” என்று மொழிந்தவர் அங்கிருப்பவர்களைப் பார்த்துப் புன்னகையுடன் மறைய, அடுத்த நொடி அங்கே கோயிலில் சிலையின் கண்கள் மூடிக்கொண்டது.

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்