Loading

“இங்க பாருங்க… என்னால் இனி முடியாது… அவங்களை முதலில் வெளியே அனுப்புங்க” என்ற சிந்து,

“எதுக்காக நாம மட்டும் இவங்களைப் பார்த்துக்கணும்? அதுதான் உங்க தம்பிங்க ரெண்டு பேர் இருக்காங்க இல்லை அங்க அனுப்புங்க சங்கர்” என கோபத்தில் கத்தவும்.

சங்கர், “அவனுங்களும் எங்களால் பார்த்துக்க முடியாதுங்கிறாங்க சிந்து… இதில் என்னை மட்டும் என்ன செய்யச் சொல்ற? நான் போய் அவனுங்க வீட்டுக்கு போங்கன்னு சொன்னா தப்பா நினைப்பாங்க” என்றவன்,

“அப்பாவும் அம்மாவும் நம்ம வீட்டில் இருக்கக்கூடாது, அதே மாதிரி நம்ம பெயரும் கெட்டுடக்கூடாது… அந்த மாதரி ஏதாவது நடந்தது நம்ம பிஸினஸ் ஸ்பாயில் ஆகிடும்… புரியுதா?” என மனைவியிடம் கேட்க.

சிந்து, “நல்லா புரியுது சங்கர்” என்றவள்,

“உங்க அப்பாவும் அம்மாவும் இனி இந்த வீட்டில் இருக்கக்கூடாது, அதே மாதிரி நமக்கும் கெட்டப்பெயர் வந்திடக்கூடாது… சரியா?” என சிரிப்புடன் கேட்க.

சங்கர், “கரெக்ட் சிந்து” என்றவன்,

“இந்த ஒரு காரணத்திற்காகத் தான் இதுங்களை இங்க வச்சுயிருக்கேன், இல்லைனா எப்பவோ அதுங்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டிருப்பேன்… இனி இவங்களால் என்ன பிரயோஜனம் இருக்கு? செல்லாக் காசுங்க” என தாயையும் தந்தையையும் கேவலமாகப் பேசினான்.

சிந்து, “தெண்டமா சோறு போடுவதும் இல்லாமல் சும்மா சும்மா அதைப் பண்ணாதே இதைப் பண்ணாதேனு டார்ச்சர் பண்ணுதுங்க… அது போதாதுனு அங்க போகாத, இங்க போகாதன்னு ஓவரா பேசுதுங்க… அப்படியே பத்திக்கிட்டு வருது சங்கர்” என கடுப்புடன் கூற.

அவனோ, “விடுடி… நாளைக்கே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்றேன்… நீ நிம்மதியா இரு டார்லிங்” என்று கூறி சிரிக்கவும் அவளும் எதையோ சாதித்தது போல் சிரித்துவிட்டாள்.

இது எதுவும் தெரியாத சங்கரின் அன்னை ரேகா, “ஏங்க இந்த பசங்க இப்படி இருக்காங்க? எப்பப்பார் வேலை வேலைனு ஓடறாங்களே தவிர அடுத்த கட்டத்திற்கு முன்னேறாமல் அப்படியே இருக்காங்க” என கணவனிடம் புலம்ப.

இளவரசன், “ஒரு வயசு வரை தான் ரேகா பசங்களுக்கு புத்திமதி சொல்லமுடியும் அதற்கு மேல் நாம தான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விலகிடணும், இல்லைனா நமக்குத் தான் அனர்த்தம்… ஏனா இப்ப அவனுங்க நமக்கு மட்டும் பசங்களில்லை இன்னொரு பொண்ணுக்குப் புருஷன்” என மனைவியிடம் கூறினார்.

அதற்கு ரேகா, “நான் என்ன அவங்களிடமா இதெல்லாம் சொல்லப்போறேன்? உங்களிடம் தான என்னுடைய மனசை சொல்றேன்” என்றவர்,

“பசங்க தப்பு பண்ணும் போது நாம தாங்க புத்தி சொல்லணும்… அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அதைவிட நான் என்னங்க அப்படி சொல்லிடப்போறேன்? நீங்க சொன்ன மாதிரியே கல்யாணம் ஆகி பொண்டாட்டினு ஒருத்தி வந்ததும் பசங்க நம்ம கையை எதிர்பார்க்கக்கூடாதுனு நினைத்துத் தான் நாமும் சொத்தைப் பிரித்து கொடுத்து அவங்கங்க பொழப்பைப் பார்த்துக்கோங்கனு விட்டுட்டோம், இன்னும் எப்படி ஒதுங்கி இருப்பது?” என மனம் தாங்காது கேட்டார்.

அதற்கு இளவரசன், “எல்லாம் சரிதான் ரேகா… அவங்களுக்கு நம்முடைய பேச்சு வெறுப்பா மாறாமல் இருக்கணும்னா பசங்களாக நம்மிடம் கேட்கும் வரை நாம எல்லாத்தையும் கண்டும் காணாமல் தான் இருக்கணும்… அதற்காகத் தவறான வழியில் போகும் போது பார்த்துக்கிட்டு இருன்னு சொல்லலை” என்றவர்,

“நமக்கும் பசங்களுக்கும் இடையில் இடைவெளி அவசியம்னு சொல்றேன்… எந்த அளவுக்குனா அவங்களுக்கு நாம இம்சையா தெரியாத அளவுக்கு” என்றார்.

“என்னது இம்சையா? நாமா? என்னங்க பேச்சு இது?” என ரேகா கோபமாக கேட்க.

“எனக்கு அப்படித் தான் தோணுது ரேகா… பசங்க நம்ம கையை எதிர்பார்த்தப்போது தான் நாம அவங்களுக்கு அப்பா, அம்மா, என்னைக்கு நாம அவங்க கையை எதிர்பார்க்க ஆரம்பித்தோமே அப்பவே நாம அவங்களுக்கு சுமையாகிட்டோம்… அது சுகமா? பாரமான்னு அவங்களுக்குத் தான் தெரியும்” என்று உணர்ந்து கூற.

ரேகா, “நல்ல கதையா இருக்கே… நாம அவங்களுக்கு இம்சையா? இந்த சொத்து சுகம் அத்தனையும் உங்க உழைப்பு… அப்படி இருக்க எப்படி நாம அவங்களுக்கு சுமையாவோம்?” என நிதர்சனத்தை உணராமல் கேட்க

இளவரசன் சிரிப்புடன், “அடிப்போடி பைத்தியக்காரி… உன்னுடைய பேச்சைக் கேட்டு எப்ப உன் பெயரில் இருந்த மொத்த சொத்தையும் மூணா பிரித்தேனோ அப்பவே நாம செல்லாக் காசாகிட்டோம்… அவ்வளவு ஏன் இப்ப இந்த வீடு கூட நமக்கு சொந்தமில்லை… கிட்டத்தட்ட நம்ம நிலை அகதிகள் போல்… எப்பவேணாலும் இந்த இடமும் இல்லாமல் போகலாம்” என மகன்களின் மனதை தெளிவாக கூறினார்.

ரேகா, “என்னங்க என்னனென்னமோ சொல்றிங்க? அப்ப நம்மை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிடுவாங்களா?” என அதிர்ச்சியுடன் கேட்க.

இளவரசன், “நாளைக்கேக் கூட அது நடக்க வாய்ப்பு இருக்கு ரேகா… எதற்கும் தயாராக இருந்துக்கோ… வாழ்க்கை நம்மை எங்க கொண்டு போகுதோ அப்படி அந்த வழியிலேயே பயணிக்கலாம், அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி” என்க.

அதில் கணவனை ஆழ்ந்து பார்த்த ரேகா, “என்ன நடந்தது?” என கேட்க.

இளவரசன், “நேற்று உனக்கு சுகர் மாத்திரை வாங்க பெரியவனிடம் காசு கேட்டேன்… அவன் ரொம்ப பேசிட்டான் ரேகா” என கலங்கிய குரலில் கூறினார்.

அதில் அதிர்ந்த ரேகா, “என்ன சொன்னான் மாமா? மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்க?” என அழுத்தமாக கேட்க.

அதில் கட்டுண்டவர் போல் அனைத்தையும் கூறினார்.

நேற்று இரவே ரேகாவின் சுகர் மாத்திரை தீர்ந்துவிட காலையில் எழுந்ததும் இளவரசன் மகனிடம் மாத்திரை வாங்க பணம் கேட்டார்.

அதற்கு சங்கர், “நான் சம்பாதிக்கிற காசு முழுக்க உங்களுக்கே சரியா போயிடும் போல்… எப்பப் பார்த்தாலும் அது இல்லை இது இல்லனு நச்சு பண்ணிக்கிட்டே இருக்கீங்க” என்றவன்,

“உங்களுக்கு நான் மட்டும் தான் பையனா? மத்த ரெண்டு பேர் இருக்காங்க தான அவனுங்ககிட்ட போய் கேட்க வேண்டியது தான” என கத்தவும்.

இளவரசன், “போன மாசமும் அதற்கு முதல் மாதமும் அவனுங்க தான் வாங்கிக்கொடுத்தானுங்க இந்த மாதம் நீ தான் வாங்கணும்” என அழுத்தமாக கூறினார்.

இதை கேட்ட சிந்து, “எங்களுக்குத் தெரியாமல் இது எப்ப நடந்தது? இன்னும் எங்களை அவமானப்படுத்தும் படி என்னென்ன சொல்லிவைத்திருக்கிங்க?” என சம்பந்தமே இல்லாமல் கூறினாள்.

அதற்கு இளவரசன், “இதில் உங்களுக்கு என்ன அவமானம்? அது அவனுங்க முறை அதுதான்மா சின்னவனுங்ககிட்ட கேட்டோம்” என அழுத்தமாக கூறினார்.

“ஆமாம்! இங்க எல்லாம் முறைப்படியா நடக்குது? இதுக்கு மட்டும் முறை வந்திடுத்து” என எடக்காக சிந்து பேச.

கடுப்பான இளவரசன், “இங்க எதில் சிந்து முறை தவறி நடந்துக்கிட்டோம்? சொல்லு பார்க்கலாம்” என கூறியவர்,

“செய்ய மனச இல்லாதவங்க தான் தவறு கண்டுபிடிக்க பேசுவாங்க” என மருமகளுக்கு குட்டுவைத்தவர்,

மகனிடம் திரும்பி, “நாங்க கொடுத்த எல்லாம் வேணும் ஆனால் இன்று எங்களுக்கு செய்ய வலிக்குதா?” என்றவர் சங்கரை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்களின் அறைக்கு சென்றுவிட்டார்.

கணவன் சொன்னதைக் கேட்ட ரேகா, “அந்த அளவுக்குப் போயிடுச்சா?” எனக் கேட்டவர்,

“இவன் மட்டும் தான் இப்படியா இல்லை ஹரியும் ஹரனுமா?” என சந்தேகமாக்க கேட்க.

இளவரசன், “அவனுங்களுக்கும் நாம அவங்க வீட்டுக்கு போவது பிடிக்கலை ரேகா… அப்பப்ப அவனுங்க பேச்சிலேயே தெரியுது” என கவலையுடன் கூறினார்.

“ஓ!” என்ற ரேகா அதிர்ச்சியில் எதுவும் பேச முடியமல் கண்ணீருடன் படுத்துவிட்டார்.

மனைவியின் கலங்கிய கண்களைக் கண்ட இளவரசன், “வருத்தப்படாதடி… எவன் என்னமோ செய்துக்கட்டும் உனக்கு நான் எனக்கு நீனு இருப்போம்… அனேகமா நாளைக்குத் தான் நமக்கு இந்த வீட்டில் கடைசி நாளாக இருக்கும், மனசைத் தேற்றிக்கோ” என்று கூறவும்.

ரேகா, “எல்லாம் என்னால் தானங்க?” என கேட்க.

இளவரசன், “உன் மீது ஏன் ரேகா பழியைப் போட்டுக்கிற? எல்லாம் விதி… அதை மீறி எதும் நாம செய்ய முடியாது… விடு, நடப்பது நடக்கட்டும்” என்றவர் தானும் படுத்துக்கொண்டார்.

இருவரும் படுத்திருந்தார்களே தவிர தூங்கவில்லை… மகன்களைப் பற்றி தெரிந்ததும் இருவரின் தூக்கமும் தூரப் போய்விட்டது.

அவர்கள் நினைத்தது போல் அடுத்தநாளே பிரச்சனை வெடித்தது.

எப்பொழுதும் விடியலிலேயே எழுந்துவிடும் ரேகா மனது சரியில்லாததால் எழ விருப்பமின்றி படுத்தே இருந்தார்.

இளவரசன் தான் மனைவியைக் கட்டாயப்படுத்தி குளிக்க அனுப்பிவைத்தவர் தானே டீ போட்டு கொண்டுவந்து கொடுத்தார்.

அதைப் பார்த்த சிந்து, ‘என்ன பெருசுங்க ரெண்டும் அடக்கமா ரூம்குள்ளவே இருக்கு? ஏதாவது ஸ்மெல் பண்ணியிருக்குங்களோ?’ என நினைத்தவள்,

“தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போகட்டும்… நமக்கென்ன? இதுங்க இங்க இருந்து போனாப் போதும்” என வாய்விட்டு கூறியவள் தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள்.

டிபன் சாப்பிட வந்த கணவனிடம் சிந்து, “அவங்கக்கிட்ட சொல்லிட்டிங்களா? எப்ப வராங்களாம்?” எனக் கேட்க.

“மதியமா வரானுங்க… எப்படியும் சாயந்திரம் கொண்டு போய்விட்டுடலாம்… சந்தோஷமா?” என மனச்சாட்சியே இல்லாமல் பேசியவன் தனது அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான்.

தனது அறைவாயிலில் இருந்து இதையெல்லாம் கேட்ட இளவரசன் மனதில் ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்றார்.

சொன்னது போலவே இளவரசனின் இளைய மகன்கள் இருவரும் தங்களின் மனைவியுடன் வந்திருந்தனர்.

அவர்களைக் கண்ட சிந்து மனதில், ‘இவளுங்களும் வந்திருக்காளுங்களா? பெருசுங்களை துரத்திவிடமட்டும் வந்துட்டாளுங்க, எதுக்காவது வாங்கனா அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்குன்னு சமாளிப்பாங்க… இப்பப்பார்? எது எப்படியே இதுங்க ரெண்டும் தொலைந்தால் போதும்… இன்னிக்கு பிரச்சனை வெடிக்கப்போகுது’ நினைத்தவள்,

வெளியே சிரித்த முகத்துடன், “வாங்க” என வரவேற்றாள்.

சித்துவிடம் ஹரியின் மனைவி தியா, “எங்களால் முடியாததை நீங்க பண்ணிட்டீங்க போல்? இருந்தாலும் உங்க சாமர்த்தியம் எங்களுக்கு வராது” என நக்கலாக பேச.

ஹரனின் மனைவி சுபி, “அது என்னமோ உண்மை தான் தியா… நாமும் தனியாப் போகவே பல நாளா முயற்சி பண்ணி மெல்ல இப்பதான் இந்த வீட்டைவிட்டுப் போனோம்… ஆனால் அக்கா நினைத்ததை சட்டுனு முடிச்சுட்டாங்க… அதற்கெல்லாம் நீ சொன்ன மாதிரி சாமர்த்தியம் வேணும்” என கேலியாக கூற.

சிந்து, “இதற்குத் தான நீங்களும் ஆசைப்பட்டிங்க? அப்புறம் என்ன பெருசா பேசறிங்க?” என கேட்டவள்,

“உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா? ஹரியோட ஆபீஸ் பணத்தை நீ லவட்டிக்கிட்டு அந்தப் பழியை மாமா மேல் போட்டதோடில்லாமல், அந்த விஷயம் அவர் காதுக்குப் போகாமல் மறைத்து கேம் விளையாடினவ தான என தியாவைக் கேட்டவள்… சுபியிடம் திரும்பி, நீ மட்டும் என்ன சாதாரணமானவளா? வந்த அன்னைக்கே புருஷனுக்கு வேப்பிலை அடித்து மந்திரிச்சு தான தனியாப் போன?” என இளக்காரமாக்க கூற இருவரின் முகமும் காற்று போன பலூன் போலாகிவிட்டது.

அதில் திருப்தியடைந்த சிந்து நல்லவள் போல், “நம்மை நாமே வாரிக்கிட்டே இருந்தா எப்படி காரியத்தை முழுசா முடிப்பது? நாம நம்ம குடும்பம்னு இருக்கணும்னா இந்தப் பெருசுங்களை துரத்தினால் தான் முடியும்… அப்புறம் அவங்க அவங்க வேலையைப் பார்க்க வேண்டியது தான்” என்க மற்ற இருவரும் தங்களின் சம்மதத்தை தெரிவித்தனர்.

எதில் மூவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் பெரியவர்கள் இருவரையும் வெளியே விரட்டும் விஷயத்தில் அதீத ஒற்றுமையோடு இருக்கின்றனர்.

இவர்களின் உரையாடலை தூரத்திலிருந்து பார்த்த ஹரி ஹரனிடம், “என்னடா முப்பெரும் தேவிகளும் கூடிக்கூடி பேசறாங்க? யாரை கவுக்க இந்த கூட்டணி?” என நக்கலாக கேட்க.

ஹரன், “உனக்குத் தெரியாதா? சும்மா சும்மா நசநசங்காமல் வேலையப் பார்க்கச் சொல்… மொத்தமா தலை முழுகிட்டு கிளம்பலாம்” என்க.

அனைவரின் முன் சங்கர், “இனி என்னால் அப்பாவையும் அம்மாவையும் வைச்சுக்க முடியாது… நீங்க கூட்டிக்கிட்டு போகப் பிரியப்பட்டா தாராளமா கூட்டிக்கிட்டு போங்க… என்னுடைய பங்கு மூணாவது மாதம் ஆனதும் வந்திடும்” என்றவன் தனது வேலை முடிந்தது போல் அமைதியாக மற்றவர்களைக் கண்டான்.

அதற்கு ஹரன், “என்னால் முடியாது… நான் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள மொத்தமா தொழிலை லண்டனுக்கு சிப்ட் பண்றேன்… சோ நீங்க யாரவது பொறுப்பெடுத்துக்கோங்க, என்னுடைய பங்கும் கரெக்ட் டைம்க்கு வந்திடும்” என்று கூற.

சிந்து, “என்னது லண்டனுக்கு சிப்ட் ஆகறிங்களா? சொல்லவே இல்லை?” என கேட்க.

“நாங்க எதுக்கு உங்களிடம் சொல்லணும்? நீங்க என்ன எங்களிடம் சொல்லிட்டா செய்றிங்க?” என சுபி வெடுக்கென கூறினாள்.

அதற்கு ஹரன், “ஏங்க அண்ணி… நீங்க போன வாரம் மூணாரில் எஸ்டேட் வாங்குனிங்களே அது என்ன எங்களிடம் சொல்லிட்டா வாங்குனிங்க? சோ… எங்களை உங்களுக்கு கீழ நினைப்பதை விட்டுவிட்டு ஆகவேண்டியதை மட்டும் பாருங்க… காரியம் முடிந்தவுடன் அவங்க அவங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்கலாம்” என கட்டன்ட் ரைட்டாக கூறினான்.

அதில் சிந்து வாயை மூடிக்கொண்டு நிற்பதைக் கண்ட தியா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

ஹரி, “நீங்க ரெண்டு பேரும் கடமையை தட்டிக்கழிக்கும் போது நான் மட்டும் ஏன் தேவையில்லாமல் அவங்களைச் சுமக்கணும்?” என கேட்க.

தியா, “நாமும் அவங்க மாதரியே மாசம் மாசம் பணத்தை அனுப்பிடலாம்” என்றாள்.

இதையெல்லாம் தனது அறையிலிருந்து கேட்ட ரேகாவும் இளவரசனும் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டனர்.

ஆக மொத்தத்தில் தங்களின் பொறுப்பை மகன்கள் ஏற்க விரும்பவில்லை என்றதும் இருவரும் எதற்கும் தயாராக இருந்தனர்.

சங்கர், “வந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுங்க தேவையில்லாமல் எதையும் பேசாதிங்க” என்றவன்,

மனைவியிடம் திரும்பி, “நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன் இல்லை… குறுக்க பேசி பிரச்சனையைப் பெருசாக்காமல் அமைதியா இரு சிந்து” என கண்டித்தவன்,

தம்பி மனைவிகளிடம், “உங்களுக்கும் அதே தான்” என்றான்.

ஹரன், “அடுத்து என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்க? அதையும் நீயே சொல்லிடு” என்க.

சங்கர், “நான் ஒரு ஆசிரமம் பார்த்திருக்கேன்… பேசாமல் அங்கேயே விட்டுடலாம்… நாம வீட்டில் வைத்து பார்த்திருக்கிற மாதிரி தான் அங்கேயும் பார்த்துக்கிறாங்க… மாசாமாசம் பணம் கட்டிட்டாப் போதும்… நம்ம தலைவலியும் மிச்சம்… சும்மா சும்மா அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டே இருக்க வேண்டியது இல்லை” என கல்நெஞ்சுக்காரனாக கூறினான்.

அதற்கு மற்ற இருவரும் விட்டது தொல்லை என்பது போல் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தனர்.

சிந்து, “அதுதான் முடிவு பண்ணியாச்சு இல்லை… பேசாமல் இப்பவே கொண்டு போய்விட்டுட்டு வந்திடுங்க” என இரக்கமே இல்லாமல் கூறினாள்.

அதற்கு சுபியும் தியாவும் தங்களின் சம்மதத்தை உடனடியாகத் தெரிவித்தனர்.

சங்கர், “அவங்களை கூப்பிட்டு பேசிடலாமா?” என அனைவரிடமும் கேட்டவன்,

“அம்மா, அப்பா” என இருவரையும் அழைத்தான்.

சங்கர் அழைக்கவும் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு ரேகாவும் இளவரசனும் வெளியே வந்தனர்.

அறையிலிருந்து வந்தவர்களைக் கண்டதும் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.

பின்னே இருக்காதா? விட்டைவிட்டுத் துரத்த மணிக்கணக்காகப் பிளான் போட்டவர்களுக்கு எந்த சிரமமும் வைக்காமல் கணவனும் மனைவியும் வந்தால் அதிர்ச்சியாகாமல் என்ன தான் செய்வார்கள்.

இவர்களின் அதிர்ச்சியைக் கண்டுகொள்ளாத இளவரசன் மகன்களிடம், “நீங்க கொண்டு போய்விடறிங்களா? இல்லை நாங்களே போயிடவா? அதை மட்டும் கொஞ்சம் சொல்றிங்களா?” என கேட்க.
சங்கர், “நாங்களே கொண்டு வந்து விடறோம் ப்பா” என்றவன்…

அவரின் கைகளிலிருந்த பெட்டியை வாங்கப் போக மூஞ்சியிலடித்தது போல் தடுத்த இளவரசன், “எங்க சுமையை நாங்களே தூக்கிக்கிறோம் உங்களுக்கு அந்தக் கஷ்டம் வேண்டாம்” என்று கூறியவர்,

“வா ரேகா நமக்கான இடத்திற்குப் போகலாம்” என்றவர் மனைவியின் கையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் பெட்டியை எடுத்துக்கொண்டு கம்பீரமாக முன்னே செல்ல மகன்களும் மருமகள்களும் நீங்காத அதிர்வுடன் பின் சென்றனர்.

இவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இயற்கையுடன் ஒன்றி அமைக்கப்பட ஆசிரமத்தில் மகன்கள் மூவரும் பெற்றவர்களைச் சேர்த்தனர்.

பெரியவர்கள் இருவரும் அவர்களின் முகத்தைக்கூட பார்க்கப் பிடிக்காமல் திரும்பி சென்றுவிட்டனர்.

தாய், தந்தையின் ஒதுக்கம் கல்லாய்ப் போன மகன்களின் மனதை சிறிதும் கூட அசைக்கவில்லை… அந்த அளவுக்கு இவர்கள் சுயலவாதிகளாக மாறிப்போயிருந்தனர்.

முதல் ஒரு வாரம் இருவரும் மற்றவர்களுடன் ஒன்ற வெகுவாக சிரமப்பட்டனர்.

நாட்கள் செல்லச் செல்ல அனைவருடனும் கலந்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.

தங்களுடன் வசிப்பவர்களின் கதையைக் கேட்ட பிறகு இவர்களின் நிலை எவ்வளவு பரவாயில்லை என நினைத்து தங்களைத் தேற்றிக்கொண்டனர்.

ஒரு நாள் தனிமையில் ரேகா, “என்னால் தானங்க நீங்க இவ்வளவு கஷ்டப்படறிங்க? நான் மட்டும் சொத்தைப் பசங்க பெயரில் மாற்றலாம்னு சொல்லாமல் இருந்திருந்தா இவ்வளவு சிரமம் இல்லையில்லை?” என கேட்டவர்,

“நம்பினேங்க… அவனுங்களை ரொம்ப ரொம்ப நம்பிட்டேன்… அதுதான் என்னுடைய தவறு… சிறு வயதில் மாடா உழைத்துப் பசங்களுக்காக சேர்த்து வைத்திங்க, இன்னிக்கு அதுவே நமக்கு எமனா மாறிடுச்சே” என்று கூற கண்ணீர் வடித்தார்.

அதற்கு இளவரசன், “பசங்களுக்காக உழைத்தது இப்ப அவனுங்களுக்கே போயிடுச்சுனு நினைத்துக்கோ ரேகா” என்க.

“முடியலைங்க… மனசு ரணமா வலிக்குது” என ரேகா கூற இளவரசனின் இதயத்தில் சிறுவலி உண்டானது.

“நம்ம விதினு விடு… இப்ப வந்து தூங்கு காலையில் பேசிக்கலாம்” என்று கூறி மனைவியை அழைத்துச்சென்றார்.

அடுத்தநாள் காலையில் முதலில் எழுந்த ரேகா கணவனை எழுப்ப அவரோ மீள எண்ணமில்லாமல் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றுவிட்டார்.

ஆம்! ஆறுயிர் மனைவியை இந்த நரகத்தில் தனித்து விட்டுவிட்டு இளவரசன் மட்டும் கடவுளின் பாதத்தில் சரணடைந்துவிட்டார்.

விஷயம் கேள்விப்பட்டு நிர்வாகி சங்கரனுக்கு அழைத்துக் கூறினார்.

அவனோ, “நான் வர நேரமில்லைங்க சார்… நீங்களே பார்த்து எடுத்து போட்டுடுங்க” என்றதோடு போனை வைத்துவிட்டான்.

ஹரிக்கு அழைத்து விஷயத்தைக் கூற அவனோ, “நான் வேலை விஷயமா வெளியே வந்திருக்கேன் சார் நீங்களே தூக்கிப் போட்டுடுங்க… இல்லைனா மத்தவங்களிடம் பேசுங்க” என்றவன் அவரின் பதிலைக்கூட கேட்காமல் வைத்துவிட்டான்.

இவர்கள் இருவரின் பதிலில் மனம் வெறுத்த நிர்வாகி ஹரனுக்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

பின் ஆசிரமத்திலிருந்தவர்களே ஆகவேண்டிய காரியங்களை செய்து முடித்தனர்.

கணவனை இழந்த சோகத்திலிருந்த ரேகாவிற்கு அன்று நடந்ததெல்லாம் தெரியாமல் போனது.

அடுத்தநாள் அங்கிருந்தவர்கள் தாங்கள் கேள்விப்பட்ட விஷயத்தை ரேகாவிடம் கூறவும் முற்றிலுமாக மனமுடைந்து போய்விட்டார்.

அன்று மாலை சங்கரின் வீட்டிலிருந்து கார் டிரைவர் நிர்வாகியிடம் சென்று பேசிய பின் சங்கருக்கு கால் செய்து கொடுத்தார்.

அவரிடம் பேசியவன், “நீங்க அம்மாவை அனுப்பிவிடுங்க” எனக் கூற அவரும் வேறு வழியிலாமல் ரேகாவை டிரைவருடன் அனுப்பினார்.

தனிமையிலிருந்தவருக்கு மகனின் அழைப்பு இருளில் கிடைத்த தீக்குச்சியின் ஒளியாக இருக்கத் துளியும் யோசிக்காமல் கிளம்பிவிட்டார்.

ரேகா மட்டும் சிறிது யோசித்திருந்தால் பின்னால் நடக்கவிருக்கும் விபரீதங்களைத் தடுத்திருக்கலாம்.

இவர் இருந்த ஆசிரமத்திற்கு அருகில் இருந்த இன்னொரு ஆசிரமத்திற்கு கார் சென்றது.

இப்பொழுது எதற்காக இங்கே வந்தோம் என்று புரியாமல் விழித்தவரைக் கண்ட டிரைவருக்கே கண்கள் கலங்கிப் போய்விட்டது.

கமறிய தொண்டயை சரி செய்த டிரைவர், “சங்கர் சார் தாங்க மேடம் உங்களை இங்க விடச் சொன்னாங்க” என்றார்.

அதில் ரேகாவின் அழுகை முட்டிக்கொண்டு வர, “ஐயோ! கடவுளே இன்னும் என்னென்ன கொடுமையை நான் பார்க்கப்போகிறோனோ தெரியலையே… இதையெல்லாம் பார்ப்பதற்கு பேசாமல் என்னையும் கூப்பிட்டுக்கோ ஆண்டவா” என கண்ணீருடன் கதறினார்.

ரேகாவின் கதறல் அங்கே இருந்த அத்தனை உள்ளங்களையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

ஏனெனில் இந்த இடம் பணம் கட்டாமல் முதியவர்கள் வசிக்கும் ஆசிரமம்.

பெற்ற தாயிற்கு சோறு போடாமல் ஆசிரமத்தில் விட்டு பாவத்தை சம்பாதித்தவர்களுக்கு இது போதாதென மேலும் மேலும் பாவங்களை தங்களின் தலையில் போட்டுக்கொண்டனர்.

தந்தை இருந்தவரை பணம் கட்டி பார்த்துக்கொண்டவர்களின் மனதில் அன்னையை என்ன செய்தாலும் கேட்க ஆட்கள் இல்லை என்ற நினைப்பு தோன்றியதும் இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டனர்.

“இதுக்காகத் தான் என்மேல் அத்தனை சொத்தையும் எழுதிவச்சிங்களா?” என புலம்பியவர் வெகுநேரம் அழுதார்.

தன் முதலாளியின் கதறலைக் கேட்க முடியாமல் டிரைவர் கிளம்பிவிட்டார்.

டிரைவர் சென்றதும் நிதர்சனம் புரியவும் அழுதபடியே ரேகா அமர்ந்திருந்தார்.

சாப்பிடாமல் சாப்பாட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவரின் மனம் தீவிரமாக எதையோ சிந்தித்தது.

அதன் விளைவு அடுத்த நாள் காலையில் ரேகா வாயில் நுரைதள்ளியபடி பிணமாகக் கிடந்தார்.

ரேகாவின் முடிவைக் கண்ட அனைவரும் ஆடிப்போய்விட்டனர்.

தனியே இருந்து சித்ரவதை படுவதைவிட அன்பு கணவனிடமே சென்றுவிடலாம் என முடிவெடித்தவர், தான் உபயோகிக்கும் தூக்கமாத்திரை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

ரேகாவின் முடிவில் அதிர்ந்து போய் மகன்களும் மருமகள்களும் ஆசிரமத்திற்கு ஓடிவந்தனர்.

தாயின் உடலைக்கூட அவர்கள் பார்க்கக்கூடாது என கடவுள் நினைத்திருப்பார் போல், அதனால் தான் இவர்கள் வருவதற்குள் ரேக்காவின் உடல் நெருப்பில் எறிந்து போய்விட்டிருந்தது.

பெற்றவர்கள் உயிரோடு இருக்கிற காலங்களில் உதாசினம் செய்தவர்கள், அதுவே இறந்தபின் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டால் எல்லாம் சரியாகிடுமா?.

சொந்தங்கள் இருந்தும் அன்பில்லாமல் கல்லாய் போனவர்களிடம் பாசத்தை எதிர்பார்த்து வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்துத் தற்கொலை செய்துகொண்ட ரேகாவும் இரும்பு மனுஷி தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    18 Comments

    1. Sahira Safraz

      Romba sogama irukku than panradhuthan pitkaalathula thanakku nadakkumn7 theriyama aaduraanga paavam anda vayasanavanga 🥺🥺🥺🥺🥺🥺🥺

      1. உண்மைதான் சொன்னவிதம் அருமை இன்றைய காலகட்டத்தில் பெற்றவர்களை ஒரு பாரமாக தான் நினைக்கிறார்கள் இந்தக் கதையை இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் சகி முடிந்தவரை இளைஞர்களுக்கு இந்த கதையை கொண்டு சேர்க்கவும் படிக்கும் போது கண்கள் கலங்கி விட்டது வாழ்க்கைக்கு தேவையான படைப்பு அருமை.

        1. அஞ்யுகா ஶ்ரீ
          Author

          நன்றி சிஸ் 😍

          பெற்றவர்கள் மாடாக உழைத்துக் கொடுத்த சொத்து சுகம் அத்தனையும் வேணும், ஆனால் அவர்கள் வேண்டாம்… அதுவும் தள்ளாடும் வயதில் இருக்கு முதியவர்கள் என்றால் வேண்டாவே வேண்டாம் என்ற அளவுக்கு தற்போதைய நிலை உள்ளது சிஸ்… இது மறுக்க முடியாத உண்மை… தினம் தினம் எத்தனையோ இளவரசனும் ரேகாவும் ஆசரமத்தில் விடப்படுகிறார்கள்.

      2. அஞ்யுகா ஶ்ரீ
        Author

        நன்றி சிஸ் 😍😍
        சமீபகாலமாக இந்த மாதிரியான நிகழ்வுகள் அதிகமா இருக்கு.

        என்னதான் படித்தாலும் பணம்னு வந்தா எல்லாம் மூன்றாம் பட்சமாகிடுது…

    2. s.sivagnanalakshmis

      சில பேர் இப்படி தான் இருக்கிறார்கள்.பணம் இருந்தால் மதிப்பு.கணவன் இல்லை என்றவுடன் அதுவும் போச்சு அம்மாவுக்கு .

      1. அஞ்யுகா ஶ்ரீ
        Author

        நன்றி சிஸ் 😍.

        100% உண்மை சிஸ்…

        துணிச்சலானவங்களா இருந்தா போடானு போயிடுவாங்க, இல்லைனா ரேகாவின் கதிதான்

    3. Romba kashtama pochu sago. Romba azhuthamaana kadhai. Unga writing arumai sago. All the best ❤️

      1. அஞ்யுகா ஶ்ரீ
        Author

        எனக்கும் எழுதும் பொழுது கஷ்டமாதான் சிஸ் இருந்தது… நோய் தீரணும்னா கசப்பான மருந்து சாப்பிட்டு தான் ஆகணும் சிஸ்.

        நன்றி சிஸ் 😍.

    4. ஏய் அஞ்சு! அழுதிட்டேன்மா உன்னோட கதைய வாசிச்சு. ரொம்ப சோகம் பா.. ஆனால் நிஜமான சம்பவத்தை கண்முன்னே படம் போல காட்டி விட்டாய்.

      ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனக்கென்று சிறிதேனும் வைத்துக் கொண்டு தான் மகவுக்கு ஈய வேண்டும்.
      இல்லையேல் இவர்களின் கெதி தான்…

      இளவரன் என்னும் பெயரை வைத்து விட்டு இப்படி ஒரு முடிவை கொடுத்திட்டியே…

      அவரது மனைவியின் முடிவு நல்ல முடிவே என்பேன் நான் பாவம் …

      போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

      1. அஞ்யுகா ஶ்ரீ
        Author

        உண்மை தான் சிஸ்… தனக்கு
        போகதான் தானமும் தர்மமும்…

        இளவரசனா இருந்தாலும் ஒருவரை நம்பி வாழ்ந்தால் இதுதான் கதி சிஸ்.

        நன்றி சிஸ் 😍😍😍

    5. அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    6. மிகவும் எதார்த்தமான ஒரு படைப்பு அக்கா. வார்த்தைகளில் அவ்வளவு வலி. இந்த கொடுமை இன்னும் பல வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

      வாழ்க்கை சக்கரம் சுழல நாளை அவர்களுக்கும் இதே நிலை தான் என்று அவர்களுக்கு யார் கூறுவது.?

      1. அஞ்யுகா ஶ்ரீ
        Author

        நன்றி துர்கா 💝💝💝…

        உண்மை தான்மா… யார் சொல்லியும் தெரியாது ம்மா… தானா வரணும்… ஒரு நாள் நமக்கும் இதே நிலை தான்னு

    7. எனக்கு படிக்கவே கஷ்டமா இருந்துச்சு..ஸ்கிப் பண்ணிரலாம்னு கூட தோணுச்சு..ஆனாலும் படிச்சிட்டேன்..சங்கர்,சிந்து எல்லாம் என்ன ஜென்மங்கள்..கடுகளவு இரக்கம் இல்லாம நடந்துருக்குதுக🙂🙂🙂..தனக்குனு கொஞ்சமாவது சொத்து வைச்சிட்டுத்தான் பிள்ளைகளுக்கு கொடுக்கணும்..ரேகாவோட முடிவு சரிதான்…மூன்று மகன்களுக்கும் இதைவிட நிச்சயம் மோசமான நிலையே கிட்டும்.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐

      1. அஞ்யுகா ஶ்ரீ
        Author

        நன்றி சிஸ் 😍.

        பல பெற்றவர்களின் நிலை இதுதான் சிஸ்…

        அதிலும் தந்தையான பட்டவரின் நிலை படு மோசமா இருக்கு.

        தெருக்களில் நாம பார்க்கும் பல பிச்சைக்காரர்கள் பிள்ளைகளால் விரட்டியடிக்கபட்டவங்க தான்…

        கண்டிப்பா கொடிய தண்டை கிட்டும் சிஸ்