Loading

“என்ன கண்டிஷன் தூயவா..” என்ற கணபதியிடம்,

“மாதவனுக்கு முன்னாடி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அவனுக்கு அப்புறம் வேணா நான் கல்யாணம் பண்ணிக்குறேன்.. பாட்டிக்கு தான் இப்போ ஹெல்த் இம்ப்ரூவ் ஆகிட்டுன்னு டாக்டர் சொன்னாங்க தான.. அப்புறம் எதுக்கு இவ்ளோ அவசரமா பண்ணனும்.. முதல்ல மாதவனுக்கு கல்யாணத்தை முடிப்போம்.. அதுக்கு அப்புறம் எனக்கு பண்ணி வைங்க” என்று கூற கேசவனோ,

“ஆமா சம்மந்தி.. அவர் சொல்றதும் சரியா தான இருக்கு.. பெரிய பையன விட்டுட்டு சின்ன பையனுக்கு கல்யாணம்னு சொன்னா ஊர் உலகம் தப்பா பேசும்.. நீங்க உங்க சின்ன பையனுக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னதே எனக்கு சந்தோஷம்.. மாதவன் தம்பிக்கு கல்யாணம் முடிஞ்ச அப்புறம் இவங்களுக்கு பண்ணிக்கலாம்..” என்று தூயவனுக்கு சார்பாக கூற கணபதியும் ஆமோதித்தார். தன் திட்டம் நிறைவேறியதை நினைத்து வெற்றி களிப்பில் அவன் ஆதினியைப் பார்க்க அவளோ இவனை கண்டுகொள்ளாமல் நின்றது மேலும் எரிச்சலை கிளப்பியது. பிறகு கேசவனோ,

“சரி அப்போ நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்றபடி கிளம்ப மீனாட்சியோ,

“மணி இப்போ மூணரை.. பொம்பளை பிள்ளையைக் கூட்டிட்டு இந்த சாமத்துல போயே ஆகணுமா.. விடிஞ்சதும் கிளம்புங்க” என்று கூற கணபதியும்,

“ஆமா சம்மந்தி பக்கத்துல நீங்க அட்மிட் ஆகியிருந்த ரூம் நாளைக்கு வரைக்கும் சும்மா தான் இருக்கும்.. அங்க இருந்துக்கோங்க.. காலைல தூயவன டிராப் பண்ண சொல்றேன்” என்று கூற மீனாட்சி பாட்டியின் பேச்சைத் தட்ட மனம் வராத கேசவனும் சரி என்றபடி தன் மனைவி மகளோடு பக்கத்து அறைக்கு சென்றுவிட்டார். கணபதியும் இந்திராவும் மீனாட்சி பாட்டியை அனுமதித்துள்ள அறையின் சோபாவில் அமர்ந்துவிட இளசுகள் நால்வரும் வெளியே வந்தனர்.

நடப்பதை எல்லாம் பிரம்மிப்போடு பார்த்து கொண்டிருந்த மாதவன், மாதவி மற்றும் சமருக்கு சற்று நேரம் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அதுவும் தூயவன் ஆதினியைத் திருமணம் செய்ய சம்மதம் கூறியது அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று.  மூவரும் தூயவனையே பார்க்க அதில் எரிச்சலுற்றவன்,

“இப்போ என்ன இதுக்கு இப்படி பார்க்கறீங்க.. அங்க எனக்கு சார்பா பேச ஒருத்தருக்கு கூட தோணலைல..” என்றவன் மாதவனிடம்,

“நீ ஆரம்பிச்ச விளையாட்டு இப்போ எனக்கு வினையா வந்து முடிஞ்சுருக்கு.. அப்போ கூட எனக்காக பேச நீ முன் வரலைல நீயெல்லாம் அண்ணனா டா” என்று எகிற மாதவனோ,

“டேய் தூயவா சாரி டா.. அப்பாவை எதிர்த்து நான் என்னைக்கு டா பேசியிருக்கேன்..” என்று பாவமாக முகத்தை வைக்க,

“ஓஹோ.. உன் நல்ல நேரம் ஜாதகம் மாறிடுச்சு நீ தப்பிச்சுட்ட.. ஆனா மாறாம இருந்திருந்தா.. அப்பா சொல்றாங்கன்னு அவ கழுத்துல தாலி கட்டிருப்ப அப்படி தான.. பார்த்துக்கோ டி உன் ஆளோட லட்சணத்தை” என்றபடி மாதவியிடம் கூற மாதவனோ,

“ஏன் டா இப்படியெல்லாம் பேசுற.. உன்ன நம்பி தான் டா நான் இருக்கேன்..”

“இப்படி சொல்லி சொல்லியே என்னை சிக்க விடுற நீ.. மனசுல ஒருத்திய நெனச்சுட்டு இப்போ எனக்கு பிடிக்காதவளுக்கு நான் சம்மதம் சொல்லிருக்கேன்.. யாரால உன்னால” என்று ஆதங்கமாய் கூற மாதவியோ,

“டேய் தூயவா நான் ஒன்னு சொல்லவா.. எங்கயோ இருக்க மித்ராவை லவ் பண்றதெல்லாம் முட்டாள் தனம் டா.. ஆதினி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. பேசாம மித்ராவை மறந்துட்டு ஆதினிய கல்யாணம் பண்ணு.. அவளோட நல்ல மனசுக்காக நான் மாதவனையே இழக்க தயாரா இருந்தேன்.. என்னால செய்யமுடியும் போது உன்னால ஏன் செய்ய முடியாது” 

“உன்மேல இதுவரை நான் கைய நீட்டுனது இல்ல.. நீட்ட வச்சுராத மாதவி.. ஏன் டி.. நீ உன் காதலை விட்டு கொடுக்க துணிஞ்சதையே முட்டாள் தனம்னு சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்னை என் காதல விட்டுக்கொடுக்க சொல்ற.. மாதவன் அவ கழுத்துல தாலி கட்டிருந்தா உனக்கு புரிஞ்சுருக்கும் அந்த வலி.. போங்க எப்படியோ உங்க காதலுக்கு இப்போ பாதகம் இல்ல தான.. நல்ல இருங்க போங்க” என்று விரக்தியாக கூற மாதவனும் மாதவியும் பாவமாக நிற்க சமரோ,

“டேய் மச்சான்.. விடு டா.. நீ தான அடிக்கடி ஒன்னு சொல்லுவ என்கிட்ட.. இங்க நடக்குற எல்லாமே ஏற்கனவே பிளான் ஆகி தான் நடக்குன்னு.. உன் காதல் உண்மைனா நீ ஆதினி கழுத்துல தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை வராது.. அப்படி வந்துச்சுன்னா உன்னோட காதல் உனக்கானது இல்ல.. அவ்ளோ தான்..” என்று கூற,

“என் பொருளை வச்சு என்னையே போடுற.. என்னை மீறி என்ன நடக்குதுன்னு நானும் பாக்க தான போறேன்” என்று தூயவன் கூறிமுடிக்கும் முன்னரே,

“டாக்டர்.. டாக்டர்.. கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்” என்ற கணபதியின் குரல் அதிர அவரின் குரலைக் கேட்டு கேசவன் முதல் சமர் வரை அனைவரும் அதிர மீனாட்சி பாட்டியின் அறைக்கு விரைந்தனர் அனைவரும். படுக்கையில் படுத்திருந்த மீனாட்சியின் உடல் வேக மூச்சுடன் ஏறி ஏறி இறங்கியது. மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு,

“கொஞ்சம் எல்லாரும் வெளிய இருங்க” என்று அனுப்ப முயல மருத்துவரை வேலை செய்யவிட மீனாட்சி ஒத்துழைக்கவில்லை. அனைவரையும் போக வேண்டாம் என்று சைகை செய்ய மருத்துவரோ,

“இவங்க கோஆப்ரேட் பண்ண மாட்டேங்குறாங்க.. ஏதோ சொல்ல நெனைக்குறாங்கன்னு நினைக்குறேன்” என்று மருத்துவர் கூற கணபதியோ,

“அம்மா எனக்கு பயமா இருக்கு மா.. அவங்க வேலைய செய்ய விடுங்க.. உங்களுக்கு எதுவும் ஆக கூடாது” என்க அதையெல்லாம் காதில் வாங்காத மீனாட்சியோ தூயவனையும் ஆதினியையும் கைநீட்டி அழைத்தவர் தன் முந்தானையில் முடிச்சிட்டிருந்த அவரின் மாங்கல்யத்தைத் தூயவனிடம் கொடுத்து ஆதினியின் கழுத்தில் அணிய சொல்ல அனைவரும் அதிர்ந்தனர். மீனாட்சிக்கு மூச்சு மேலும் பலமாக வாங்க மருத்துவரோ,

“சிட்டுவேஷன் ரொம்ப மோசமாகுது.. சீக்கிரம் ஏதாச்சும் செய்ங்க” என்று கூற கணபதியோ,

“என்ன டா பார்க்குற.. சீக்கிரம் கட்டு தூயவா.. அவங்களுக்கு ஏதாவது ஆகிட போது..” என்று கண்ணீர் வடிக்க வேறு வழியின்றி பெருமூச்சொன்றை வெளிவிட்டவன்,

‘ஐம் சாரி மித்ரா’ என்று மானசீகமாக மன்னிப்பு வேண்டியவன் ஆதினியின் கண்களைக் கொலைவெறியோடு பார்த்து அவர்களின் பாரம்பரியமான பரம்பரை மாங்கல்யத்தை அந்த பிரம்ம முகுர்த்த நேரத்தில் அணிவித்து அவளைக் கட்டாயத்தின் பெயரில் தன்னவளாக்கிக் கொண்டான். ஆதினியும் வேறு வழியின்றி விழியின் ஓரம் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அவனவள் ஆகிக்கொண்டாள் கையறு நிலையில். அதன்பின்னர் மருத்துவர் மீனாட்சி பாட்டிக்கு வைத்தியம் பார்க்க.. அனைவரும் வெளியே வந்தனர்.

எதிரெதிரே நின்றிருந்த தூயவன் மற்றும் ஆதினி இருவரின் இதயங்களும் இயலாமையில் அதிர அவள் இதயக்கூட்டின் அருகே தொங்கிக்கொண்டிருந்த அந்த மாங்கல்யம் அவர்களைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்ததோ என்னவோ.. இருவருக்குமே சற்று முன்பு நிகழ்ந்தது கனவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது.  

‘உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது டா.. அப்படியே ஆனாலும் சேடிஸ்டான பொண்டாட்டி தான் கிடைப்பா..’ என்று நேற்று கூறிய ஆதினியின் குரல் அவன் செவியில் ஒலிக்க அடக்கப்பட்ட கோபத்துடன் அவளை தான் பார்த்திருந்தான். மாதவன், மாதவி மற்றும் சமர் ஏற்கனவே அவன் திருமணத்திற்கு சம்மதம் கூறிய அதிர்ச்சியில் இருந்தே வெளிவராத பட்சத்தில் இப்பொழுது திருமணமே நடந்துமுடிந்தது பேரதிர்ச்சியாக இருந்தது. அதைவிட ஆதினியுடனான அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்க போகிறதோ என்ற பயமும் எழுந்தது. கணபதியோ கேசவனிடம்,

“சம்மந்தி என்னை மன்னிச்சுருங்க.. அம்மாக்கு அப்படி ஆனதும் சட்டுன்னு உங்ககிட்ட கூட கேட்காம தாலியைக் கட்ட சொல்லிட்டேன்.. “

“ஏற்கனவே பேசி வச்சது தான சம்மந்தி இருக்கட்டும்.. முதல்ல அம்மாக்கு என்னாச்சுன்னு பார்ப்போம்.. அப்புறமா இதைப் பத்தி பேசிக்கலாம்.. நீங்க தைரியமா இருங்க..” என்று ஆறுதல் கூறியவர் ஆதினியை தனியே அழைத்து சென்று,

“ஆதுமா.. அப்பாவை மன்னிச்சுரு டா.. உன்கிட்ட எதுமே கேட்காம நான் அவங்க கிட்ட சம்மதம் சொல்லிட்டேன்.. நீயும் சம்மதம் சொல்லிட்ட.. இருந்தாலும் எதுவும் கேட்கலையேன்னு மனசு உறுத்தலா இருக்கு” என்க அவளோ,

“நீங்க சந்தோஷமா இருக்கீங்களா பா..”

“எனக்கென்ன டா.. கல்யாணம் நின்னுரும்னு சொல்லும் போது வலிச்சது தான்.. எப்போ தூயவன் தம்பிக்கும் உனக்கும் சம்மந்தம் பேசுனோமோ அதுலயே என் கவலை பறந்துட்டு.. இப்போ சொல்லவா வேணும்.. என்னடா இப்படி ஒரு இடத்துல வச்சு கல்யாணம் பண்ண வேண்டிய நிலைமை ஆயிருச்சேன்னு ஏதும் நினைக்காத..”

“அதெல்லாம் இல்ல பா.. உங்களுக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம் தான்” என்றவள் தன் தந்தையறியாதவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

வாழ்க்கை என்பது நாம் எதனை வேண்டாம் என்கிறோமோ அதனை நமக்கு செய்து முடிப்பதிலேயே தான் முனைப்புடன் செயல்படுகிறது. அதில் அதற்கென்ன ஆனந்தமோ.. அதற்குத்தான் வெளிச்சம்.. வேண்டாமென்று நினைத்ததை வேறு வழியின்றி வேண்டுமென்று கூறும் நிலையில் இருக்கும் தூயவனும் ஆதினியும்.. ஒருவரையொருவர் வேண்டுமென்று நினைக்கும் சமயத்தில் வேறு வழியின்றி வேண்டாமென்று கூறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள் என்று எப்பொழுது அறிந்துக் கொள்ள போகிறார்களோ..? பொறுத்திருந்து பார்ப்போம்..

“அடியே நான் படிச்சு படிச்சு சொன்னேன் தான இந்த கல்யாணம் வேணாம்.. சம்மதம் இல்லன்னு சொல்லுன்னு.. என் பேச்சை கொஞ்சமாச்சு மதிச்சியா டி நீ.. அப்போ உன் மனசுல என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை இருக்கு அப்படி தான.. அப்போ நான் செய்ற கொடுமையையும் நீ அனுபவிச்சு தான் ஆகணும்.. ஆரம்பிக்கலாமா..” என்றபடி தூயவன் ஒவ்வொரு அடியாக முன்னேற ஆதினியின் கால்கள் ஒவ்வொரு அடியாக பின்னேறியது,

“வேணாம்.. ப்ளீஸ்.. என்னை ஏதும் செஞ்சுராதா.. உன்ன இஷ்டப்பட்டெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கல..” என்றபடி. அதையெல்லாம் காதில் வாங்காத தூயவன் ஆதினியின் முகத்திற்கு வெகு அருகில் தன் முகத்தைக் கொண்டு செல்ல அதில் பதறியவள்,

“ஐயோ என்னை ஏதும் செஞ்சுராத.. விட்டுரு ப்ளீஸ்..” என்ற அலறலுடன் வேர்க்க விறுவிறுக்க எழுந்து அமர்ந்தாள். அச்சமயம் அந்த அறையின் வெளியில் அமர்ந்துக் கொண்டிருந்த தூயவனின் காதில் அவ்வலறல் விழ ஏதேனும் பிரச்சனையோ என்றபடி உள்ளே பார்க்க அதற்குள் கேசவனும் அபிராமியும் கூட வந்து சேர்நதனர். கேசவனோ,

“ஆது என்னாச்சு டா.. கெட்ட கனவு ஏதும் கண்டியா” என்றபடி அவர் அருகில் செல்ல அவளது கண்களோ மிரண்டபடி தூயவனின் மீது தான் படிந்தது.

‘இவ ஏன் நம்மள இப்படி பார்க்குற’ என்ற யோசனையில் அவளின் ‘ஐயோ என்னை ஏதும் செஞ்சுராத.. விட்டுரு ப்ளீஸ்’ என்ற  அலறலையும் அவள் முகத்தில் இருந்த பயத்தையும் தன் மீது படிந்த பார்வையையும் தொடர்பு படுத்திப் பார்த்தவனுக்கு அவள் என்ன மாதிரி கனவு கண்டிருப்பாள் என்று மிக தெளிவாகவவே புரிந்தது. புரிந்த கணத்தில் அவனுக்கு கோபம் தலைக்கு ஏற காட்ட வேண்டிய சூழ்நிலை இதுவல்ல என்று புரிந்தவன் அவளை அழுத்தமாக கோபப்பார்வைப் பார்த்தபடி வெளியில் வந்து அமர்ந்துவிட்டான்.

இரவு தாலி கட்டிய சம்பவத்திற்கு பிறகு மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்த பொழுதும் தூயவனுக்கும் ஆதினிக்கும் கண்களை சுழற்றிக்கொண்டு தூக்கம் வர இருவரும் ஆளுக்கொரு அறையில் மருத்துவமனையில் நன்கு உறங்கிவிட்டனர். பயண களைப்பாக இருக்கும் என்று பெரியவர்களும் குழப்பத்தில் இருப்பர் என்று இளசுகளும் நினைத்தபடி அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட்டனர். படுத்த உடனேயே இருவரையும் நித்ராதேவி தழுவிக்கொண்டாள். சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டோம் என்ற நிம்மதியோ என்னவோ..?

காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் கொண்ட தூயவனுக்கு ஆறு மணிக்கே முழிப்பு தட்ட எழுந்து முகம், கை, கால்களை இரண்டு மூன்றுமுறைக் கழுவிவிட்டு கேன்டீன் சென்று காபி அருந்திவிட்டு அமைதியாக அறையின் வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தபடி நேற்றைய நிகழ்வையே அசைபோட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் ஆதினியின் அலறலைக் கேட்டவன் இப்பொழுது இன்னும் அதிகமான அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

‘என்ன தைரியம் இருந்தா இவளுக்கு இப்படியெல்லாம் வேற கனவு வரும்.. என்னைப் பார்க்க அவளுக்கு எப்படி தெரியுதாம்.. இவ பெரிய அழகி.. இவள ரேப் பண்ண வேற நான் வறேனாக்கும்.. இருக்கட்டும் எல்லாத்துக்கும் சேர்த்து என்கிட்ட நீ வாங்கி கட்டுவ.. உன்னைக் கட்டுனதுக்கு நான் தான் டி அலறனும்.. எல்லாம் தலை எழுத்து’ என்றபடி மனதினுள் அவளை அர்ச்சிக்க மீனாட்சி பாட்டியை அனுமதித்திருந்த அறையில் சலசலப்பு கேட்க யோசனையுடன் அங்கு சென்றான்.

அங்கோ மீனாட்சி பாட்டி திடகாத்திரமாக கட்டிலில் அமர்ந்து வெற்றிலையை இடித்து வாய்க்குள் அமுக்கிக் கொண்டிருந்தார். கணபதியோ,

“ம்மா இப்போ வெத்தலை எல்லாம் போடலாமா என்னன்னு தெரியல.. டாக்டர் வந்ததும் கேட்டுட்டு எல்லாம் பண்ணுங்க” என்று கத்திக் கொண்டிருக்க அதையெல்லாம் காதில் வாங்காத மீனாட்சி அவர் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட தூயவன் விறுவிறுவென சென்று பாட்டியின் கழுத்தைப் பற்றியவன்,

“ஏய் கிழவி.. உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்.. நேத்து அவ்ளோ தூரம் சாகுற நிலைமைக்கு போயி என்னையும் சேர்த்து சவடிச்சுட்டு இப்போ குத்துக்கல்லாட்டம் உக்காந்து வெத்தலை இடிச்சுட்டு இருக்க.. உன்ன” என்றவன் வெற்றிலை இடிக்கும் உரலைக் கொண்டு அவரின் மண்டையைப் பதம் பார்க்கும் அளவுக்கு தன் சிந்தையில் காட்சியை ஓடவிட்டவன் நிகழில் வேறுவழியின்றி அமைதியாக நின்று மனதினுள் மட்டும் மீனாட்சி பாட்டியை அர்ச்சித்தான். அவனைக் கண்ட மீனாட்சி பாட்டியோ,

“தூயவா.. வா டா .. ஏன் அங்கேயே நிக்குற.. பாட்டிக்கு ஒன்னும் இல்ல இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்.. நீ கவலைப்படாத.. ஆமா உனக்கும் ஆதினிக்கும் எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று கேட்க அங்கிருந்த கணபதி, இந்திரா, தூயவன் மட்டுமன்றி அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்து மாதவன், மாதவி மற்றும் சமருக்கும்,

“எதேய்.. எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாமாவா..” என்ற ரீதியில் பார்த்தனர். சமரோ,

“ஏன் பாட்டி.. அப்போ நேத்து என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு நிஜமாவே தெரியாது அப்படி தானே..” என்று கேட்க மீனாட்சியோ,

“தூயவனுக்கும் ஆதினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஒரு நல்ல ஐடியாவை நான் குடுத்தேன்.. அதுவரை நியாபகம் இருக்கு.. அதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே சமரு.. இந்த தூயவன் பைய கல்யாணம் பண்ணமாட்டேன்னு எதுவும் சொல்லி தொலைஞ்சானா” என்றபடி தூயவனை முறைக்க இதற்குமேல் இங்கிருந்தால் உள்ளிருக்கும் கோபம் வெளியில் சிதறிவிடும் என்றறிந்த தூயவன்,

“எல்லாம் என் தலையெழுத்து” என்று தலையிலடித்தபடி வெளியில் சென்றுவிட்டான். சமரோ,

“அவன் உங்களைக் கொல்லாம விட்டானேன்னு சந்தோஷப்படுங்க பாட்டி.. நல்லவேளை அமைதியா வெளிய போய்ட்டான்” என்க பிறகு கணபதி நடந்த அனைத்தையும் மீனாட்சி பாட்டிக்கு எடுத்துரைத்தார்.

“அப்போ ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா.. எங்க என் பேத்தி” என்றவர் எழுந்து விறுவிறுவென்று பக்கத்து அறைக்கு செல்ல அவரைத் தொடர்ந்து அனைவரும் செல்ல ஆதினியோ கழுத்தில் தாலியுடன் சோகமாக அமர்ந்திருந்தாள்.

“அம்மாடி ஆதினி” என்றபடி மீனாட்சி பாட்டி உள்ளே வர அவளோ,

“ஐயோ பாட்டி நீங்க எங்க இங்க.. சொல்லிருந்தா நானே அங்க வந்திருப்பேன்ல.. முதல்ல வந்து உட்காருங்க” என்றபடி பதற அவரோ,

“எனக்கு எல்லாமே சரி ஆயிடுச்சு கண்ணு.. எங்க நீ எங்க வீட்டு மருமகளா ஆகாம போய்டுவியோன்னு நெனச்சு பயந்தேன் தெரியுமா..” என்றவர்,

“டேய் சமரு.. தூயவன் பையல கூப்பிட்டு வா டா” என்க அவனும் சென்று அழைத்து வந்தான். அவனைக் கரம் பற்றி இழுத்த மீனாட்சி ஆதினியின் அருகில் நிற்கவைத்து இருவரையும் ஜோடியாக கண்குளிர பார்க்க,

“என் கண்ணே பட்டுரும் போல” என்று நெட்டி முறிக்க இருவருக்குமே எங்கு சென்று முட்டிக் கொள்ளலாம் என்று தான் இருந்தது.

 

தொடரும் அதிர்வுகள்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்