Loading

முன்பனிக்காலமாம் தை மாதம் தனில் தமிழகத்தின் தூங்காநகரம் என்றழைக்கும் சிறப்புக்குரிய மதுரை மாவட்டத்தில் விடிந்தும் விடியாத அக்காலைப் பொழுதில் வானொலியில் கந்த ஷஷ்டி கவசம் ஒலிக்க அதனை உடன் சேர்ந்து பாடியவாறே பூஜை செய்து கொண்டிருந்தார் அபிராமி. வீடு முழுக்க தீபாராதனையைக் காண்பித்து விட்டு தன் கணவன் கேசவன் முன் தீபாராதனைத் தட்டைக் காண்பிக்க அப்பொழுது தான் குளித்து முடித்து வந்தவர் தன் மனையாளின் மங்களகரமான தரிசனத்தைக் கண்டு அகமகிழ்ந்து சிறு சிரிப்புடன் தீபாராதனையைக் கண்களில் ஒற்றி கொண்டு அபிராமிக்கும் ஒற்ற கணவனின் அன்பில் வழக்கம் போல் பூரித்து போனார் அபிராமி. 

“ஏங்க அவ இன்னும் எழுந்திருக்க மாட்டேங்குறா.. இன்னைக்கு தைப் பூசம் கோவிலுக்கு போகணும்னு நேத்தே சொன்னேன் தான அவகிட்ட.. இப்போ எழுந்துக்காம அடம்பிடிச்சா என்ன செய்ய.. நீங்க என்னன்னு பாருங்க கொஞ்சம்.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. முடிச்சா தான் கோவிலுக்கு வர முடியும்” என்று தன் மகளைப் பற்றி குறைபாட,

“அபிராமி.. மணி நாலரை தான ஆகுது.. நம்ம ஊருல இருக்க கோவில் தான.. கொஞ்ச நேரத்துல அவ எழுந்துக்குவா” என்றவர் சமயலறைக்கு சென்று ஏற்கனவே தன் மனையாள் தயாரித்து வைத்த தேநீரை மீண்டும் சூடுபடுத்தி இரண்டு டம்ளரில் ஊற்றி எடுத்து ஹாலுக்கு வந்தவர்,

“இந்தா அபிராமி.. இதை குடிச்சுட்டு டென்ஷன் இல்லாம வேலைய பாரு”  என்று தன் மனைவியிடம் ஒரு டம்ளரை நீட்ட அவரும் சிறு சிரிப்புடன் வாங்கி பருகலானார். சரியாக அப்பொழுது தான் எழுந்து வந்தாள் அவர்களின் அருமைப் புதல்வி. 

“தினமும் சீக்கிரம் எந்திச்சா இந்த கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கலாம் போலயே” என்றவள் கண்களைக் கசக்கிக் கொண்டு வந்தமர்ந்தாள் அரைத் தூக்கத்தில்.

“எழுந்திட்டியா வா.. இரு உனக்கு டீ கொண்டு வரேன்” என்று எழுந்த கேசவனைக் கரம்பற்றி அமரவைத்தவள்,

“நான் ப்ரஷ் பண்ணிட்டு குடிச்சுக்குறேன்.. நீங்க உக்காருங்க பா” என்றவள்,

“என்ன அபிராமி.. இன்னைக்கு எக்ஸ்டரா பொலிவோட இருக்கியே என்ன விஷயம்” என்று கேட்க அவளின் காதைத் திருகியவர்,

“இந்த வாய் மட்டும் இல்லனா உன்னை எல்லாம் நாய் தூக்கிட்டு போய்டும்” என்க,

“என்ன அபிராமி இப்படி சொல்லுற.. நாய் எல்லாம் தூக்கிட்டு போக வேணாம்.. என் மருமகப்புள்ள வந்து தூக்கிட்டு போகட்டுமே” என்று கேசவன் கூற அவர் கூற்றில் சலித்தவளோ,

“ஐயோ அப்பா.. காலைலயே இந்த பேச்ச ஆரம்பிக்காதீங்க.. இப்போ என்ன குளிச்சு கோவிலுக்கு கிளம்பனும் அவ்ளோ தான.. நான் போய் கிளம்புறேன்” என்றவள் ஓடியே விட்டாள்.

செல்லும் தன் மகளையே சிரிப்போடு பார்த்தவரின் மனதில் இன்னும் சில நாட்களில் மகள் தன்னைவிட்டு பிரிந்து அவளின் புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவாளே என்ற ஏக்கம் இருந்தாலும் ஒரு தந்தையாக கூடிய சீக்கிரம் அவளுக்கு ஏற்ற ஒருவன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கவும் தவறவில்லை. 

குளித்து முடித்து கிளம்பியவள் தன் அறைக் கதவைத் திறக்க புடவை அணிந்த தன் மகளை பெற்றவர்கள் கண்குளிர கண்டனர். இளங்கத்தரிப்பு நிற புடவையில் லேசான ஒப்பனையில் தேவதையாக காட்சியளித்தாள் அந்த மாநிற அழகி. 

“என் கண்ணே பட்டரும் போல இருக்கு டி” என்று தன் மகளை நெட்டி முறித்தார் அபிராமி. அவளோ,

“இந்த புடவைய தான் கட்டணும்னு பிளான் பண்ணி எனக்கு எடுத்து குடுத்துட்டு போய்ட்டு இதுல காம்ப்ளிமென்ட் வேற.. என்னை என்ன இப்போ பொண்ணா பாக்க வராங்க.. எதுக்கு புடவைக் கட்ட சொன்ன” என்று முறைத்தபடி அவள் கேட்க கேசவனோ,

“இப்போ எதுக்கு மா அவளை முறைக்குற.. கோவிலுக்கு புடவைக் கட்டிட்டு போறது நார்மல் தான.. சரி வாங்க கிளம்புவோம்” என்று மூவரும் கிளம்பினர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு. 

முருகனின் விசேஷ நாளாதலால் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காலைலயே காணப்பட்டது. வரிசையில் நின்று கும்பிட்டு முடித்ததும் பிரசாதத்தை வாங்கியபடி மூவரும் வந்து அமர்ந்தனர். கேசவனோ சந்நிதி நோக்கி அமர்ந்தபடி கண்களைமூடி தியானம் செய்யலானார். 

‘அப்பனே முருகா.. இதுவரை ஏகப்பட்ட ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சு.. எந்த பையனும் என் பொண்ணுக்கு பொருத்தமா வரல.. அப்படியே பொருந்துனாலும் என் பொண்ணுக்கு பிடிக்காம போயிடுது.. நீ தான் எப்படியாச்சு ஒரு நல்ல வரனை என் பொண்ணுக்கு அமைச்சுக் கொடுக்கணும்..’ என்று மனதுருகி வேண்ட அவரது வேண்டுதல் முருகனின் செவியை எட்டியதோ என்னவோ,

“நீங்க கேசவன் தான” என்ற குரல் மூவரின் கவனத்தை ஈர்த்தது. 

“ஆமாங்க நான்  கேசவன் தான்.. நீங்க கணபதி தான” என்று கேட்ட கேசவனின் முகம் மலர்ந்தது. 

“நானே தான்.. எப்படி இருக்கீங்க” என்க,

“ரொம்ப நல்ல இருக்கேன்..” என்றவர் தன் மனையாளிடம்,

“அபிராமி.. நான்  போன வருஷம் கோவில் யாத்திரை போயிருந்தபோ ஒருத்தர் பழக்கமானாருன்னு சொன்னேன் நியாபகம் இருக்கா.. அவர் தான் இவரு” என்று அறிமுகப்படுத்த அபிராமி வணக்கம் கூறினார். பின்பு அங்கு நின்னிருந்தவளைக் கண்ட கணபதியோ,

“யாருங்க… நம்ம பொண்ணுங்களா” என்று கேட்க,

“ஆமாங்க.. பேங்க்ல வொர்க் பண்ணுறா.. மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம்” என்று கூடுதல் தகவலைக் கொடுக்க அதில் தன் தந்தையை லேசாக முறைத்தவள் கணபதியிடம் சிறு புன்னகையை உதிர்த்தாள். 

“லட்சணமா இருக்க மா நீ” என்றவர் திரும்பி சற்று தூரம் நின்றிருந்த தன் மனைவியை,

“இந்திரா” என்று சத்தமாக அழைத்தார். அவருடன் சேர்ந்து ஒரு ஆடவனும் வந்து நின்றான். 

“கேசவன்.. இவங்க என் வொய்ஃப்.. இது என் மூத்த பையன்.. மாதவன்..” என்று அறிமுகப்படுத்தியவர் தன் மனைவியிடம் கேசவனை அறிமுகம் செய்து வைத்தார். வந்ததில் இருந்து இந்திராவின் கண்கள் அவளைத்தான் அளவெடுத்தது. அதனைக் கண்டவர்,

“இது அவங்க பொண்ணு..” என்றவர் அவளிடம்,

“உன் பெயர் என்னமா” என்று கேட்க அவளோ,

“ஆதினி” என்றாள். இந்திராவோ,

“அழகான பெயர் மா உன்னைபோலவே” என்று கூறவும் தான் மாதவன் அவளை ஏறிட்டான். எதையோ சிந்தித்தபடியே அவன் அவளைப் பார்க்க இங்கு கணபதியோ,

“அவளுக்கும் வரன் தேடிட்டு தான் இருக்காங்கலாமாம்” என்று கூற இந்திராவோ,

“எங்க பையனுக்கும் நாங்க பொண்ணு தேடிட்டு இருக்கோம்” என்று கூறியபடி அதினியையே வாஞ்சையாக பார்த்தார். அதனைக் கண்டவள்,

‘என்ன இது.. இவங்க பார்வையே சரியில்லையே.. விட்டா இங்கயே சம்மந்தம் பேசிடுவாங்க போலயே.. எஸ்கேப் ஆயிடுடி ஆது’ என்று தனக்கு தானே யோசித்தவள் சட்டென,

“அப்பா.. நான் பிரகாரத்தை சுத்திட்டு வரேன்” என்று கூறிவிட்டு நழுவ எத்தனிக்க அதுவரை அவளை யோசனையுடன் ஏறிட்டவன் அவள் செல்லும் முன்,

“ஏங்க ஒரு நிமிஷம்..” என்று தடுத்தவன் தன் தாய் தந்தையிடம்,

“ம்மா.. ப்பா.. எனக்கு இவங்கள ரொம்ப பிடிச்சுருக்கு.. அவங்களுக்கும் ஓகேன்னா நாம அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு போகலாம்” என்று பட்டென கூறிவிட கணபதியும் இந்திராவும் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. கேசவன், அபிராமி மற்றும் ஆதினியின் நிலையைக் கூறவா வேண்டும்.. கணபதியோ சங்கடமாக கேசவனை ஏறிட்டார்.

“அது வந்து நீங்க எதுவும் நெனச்சுக்காதிங்க.. எதுனாலும் இப்படி வெளிப்படையா அவன் பேசி பழகிட்டான்.. ரொம்ப நல்லவன்.. இவ்ளோ நாள் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தான்.. நாங்க தான் வலுக்கட்டாயமா இப்போ வரன் பார்க்க ஆரம்பிச்சோம்.. ஆனா உங்க பொண்ண அவனுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு போல.. உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க.. நாம மேற்கொண்டு பேசுவோம்..” என்று அவர் நாசுக்காக கூற கேசவனோ தயக்கமாய் ஆதினியைப் பார்த்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட மாதவனோ,

“சாரி அங்கிள்.. உடனே எதுவும் சொல்ல வேணாம்.. நான் உங்க பொண்ணு கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்.. அதுக்கு அப்புறம் நீங்க வீட்டுக்கு போய்ட்டு நிதானமா கூட உங்க பதிலை சொல்லுங்க.. எதுவா இருந்தாலும் அக்செப்ட் பண்ணிப்பேன்..” என்று கூற கேசவன் ஆதினியைப் பார்க்க அவளோ சரி என்றாள். பிறகு பெற்றவர்கள் இங்கயே நிற்க மாதவனும் ஆதினியும் பேசியபடியே கோவிலை சுற்றிவர சென்றனர். 

“ஹாய் ஆதினி.. என் பேரு மாதவன்.. மாதவன் மகிழேந்தி.. அப்பாவோட சேர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பார்த்துட்டு இருக்கேன்.. வாழ்க்கைல நெறய அடிகள் வாங்கியிருக்கேன்.. இனிமேவாச்சு நல்ல சந்தோஷமான ஒரு வாழ்க்கையை நிம்மதியா வாழணும்னு ஆசைப்படுற ஒரு சராசரி மனுஷன்.. என்னைப்பத்தி சொல்லிக்க இவ்ளோ தான்” என்று அவன் முடித்துவிட்டு அவளை நோக்க அவளோ லேசாக கடமைக்கென புன்னகைத்தவள்,

“ஐம் ஆதினி.. ஆதினி அரியநாச்சி.. சென்னைல ****** பேங்க்ல வொர்க் பண்றேன்.. ” என்று கூறி சுருக்கமாக முடித்துக் கொண்டாள். 

“ரொம்ப ஷார்ட்டா முடிச்சுட்டிங்க.. ஃபைன்.. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா..” என்று கேட்க அவளோ வேறு சிந்தனையில் இருந்தாள். 

“ஹலோ மிஸ் ஆதினி..” என்று அவன் கையசைக்க அப்பொழுது நிகழுக்கு வந்தவள்,

“ஹான் என்ன கேட்டீங்க” என்க,

“என்னங்க ஏதோ ரொம்ப யோசனைப் பண்றீங்க.. இவன் நல்லவனா கெட்டவனான்னு யோசிக்குறீங்களா.. ” என்று கேட்க,

“அயோ இல்ல.. உங்கள இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் யோசிச்சேன்” என்று கூற அவனோ,

“அப்படியா.. ஆனா எனக்கு உங்கள புதுசா பார்க்குற மாதிரி தான் இருக்கு.. வெல்.. உங்க வயசு என்ன” என்று கேட்க அவளோ சட்டென அவனைப் பார்க்க அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவன்,

“ஓ சாரி.. பொண்ணுங்க கிட்ட வயசு கேட்க கூடாதோ.. பட் உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கும்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்” என்று அவன் கூற அவளோ,

“ஐம் ட்வெண்ட்டி ஃபைவ்” என்றாள். அதனைக் கேட்டவன்,

“ஓ.. ஐம் ட்வெண்ட்டி நைன்.. சரி ஓகே உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா வீட்டுல சொல்லி பேச சொல்லுங்க” என்று கூறி முடிக்கவும் பிரகாரத்தை சுற்றி முடித்து பெற்றவர்கள் நிற்கும் இடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. கணபதியோ,

“என்ன மாதவா பேசிட்டியா..” என்றவர், பிறகு கேசவனிடம்,

“சரிங்க.. நீங்க வீட்டுல போய் பேசி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க.. இது என்னோட கார்ட்” என்றவர் தனது விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுக்க கேசவனோ,

“சரிங்க.. நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்” என்று கூற,

“நல்லது.. அப்போ நாங்க கிளம்புறோம்” என்றபடி கணபதி செல்ல இந்திராவோ,

“வறோம்ங்க.. வரேன் மா ஆதினி” என்றவர் அவளின் நாடியைப் பிடித்து செல்லம் கொஞ்சிவிட்டு சென்றார். அவர்கள் மூவரும் சென்றுவிட இவர்கள் மூவரும் அவ்வாறே அமர்ந்துவிட்டனர். ஆதினியோ அமைதியாக இருக்க கேசவனோ,

“ஆது மா.. என்ன டா அமைதியா இருக்க.. உன் முடிவு என்ன” என்று கேட்க அவளோ,

“தெரியல பா.. என்கிட்டே இவரை ரிஜெக்ட் பண்ண எந்த காரணமும் இல்ல தான்.. ஆனாலும் ஏதோ ஒன்னு…” என்று அவள் இழுக்க அதில் கடுப்பான அபிராமி,

“என்ன டி ஏதோ ஒன்னு.. பையன் நல்லா தான இருக்கான்.. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குடும்பமா தான் தெரியுது.. இதுக்கு மேல என்ன வேணும்..  உனக்கு பிடிக்கலைன்னா நேரடியா பிடிக்கலன்னு தான் நீ சொல்லிடுவியே.. ஆனா இப்போ அப்படி சொல்லல.. அதனால உனக்கும் பிடிச்சுருக்கு.. அதுவும் இல்லாம கோவில்ல வச்சு பேசிருக்காங்க.. அந்த முருகன் தான் இதை செய்ய வச்சிருக்கான்” என்று அவரே கூற அவரை முறைத்த ஆதினி,

“நீயே எனக்கும் சேர்த்து பேசிடுறியா” என்று கேட்க கேசவனோ,

“அபிராமி.. நீ சும்மா இரு.. அவ அவளோட பதிலை சொல்லட்டும்” என்றுவிட்டு ஆதினியைப் பார்க்க அவளோ கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட அவளின் மனக்கண்ணில் ஒருவனின் பிம்பம் வந்து போனது. அக்கணம் இதயத்தின் அதிர்வுகள் வழக்கத்தைவிட வேகமாக அதிர சட்டென கண்களைத் திறந்தவள்,

‘இவனா.. இந்த உர்ராங்குட்டான் மூஞ்சி எதுக்கு இப்போ நமக்கு நியாபகம் வருது’ என்று நினைத்தபடி குழம்பினாள். கேசவனோ அவளின் கரத்தைப் பற்றி,

“ஆது உன்கிட்ட தான் கேக்குறேன்.. உன் முடிவு என்ன” என்று கேட்க அவளோ,

“உங்க இஷ்டம் பா.. அம்மாக்கும் உங்களுக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே தான்” என்க கேசவனோ,

“நன்றி முருகா.. நல்லவழிய காட்டிட்ட” என்று வேண்டிவிட்டு பிறகு மூவரும் வீட்டிற்கு சென்றனர்.

 

தொடரும் அதிர்வுகள்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
15
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்