Loading

ஆட்சியர் கனவு – 25 💞

திவி தன் காதலை ஆதியிடம் தெரிவித்து விட்டாள்.  இருவரும் ஒவ்வொரு மன நிலையில் தத்தமது அறைக்கு சென்றனர். ஆனால், இருவருக்கும் தூக்கம் என்பது தூரம் ஆனது…

எதையோ மனதில் நினைத்து உழன்று கொண்டு இருந்தவளிடம் மனசாட்சி பல வித கேள்வி கணைகளை தொடுத்தது.

“இன்னும் ஏன் நீ சில விஷயங்களை ஆதிக்கிட்ட சொல்லல திவ்யா? “

“வந்துடியா? எங்க டா இன்னும் காணோமேன்னு நினைச்சேன்.!” என்றால் நக்கலாக.

” என்ன டி, இந்த கேள்வியை நான் தானே உன்கிட்ட கேட்பேன். இன்னைக்கு நீ கேக்குற.?”

“நீ கேட்டா என்ன நான் கேட்டா என்ன, நீயும் நானும் ஒன்னு தானே.. அத விடு, இப்போ எதுக்கு நீ வால்யன்டிரியா ஆஜர் ஆகுற மிஸ் மனசாட்சி.?”

“ஹான்.. சில விஷயங்களை உன்கிட்ட கேக்கணும் அதான்..”

“உனக்கு தெரியாததயா நான் சொல்லிட போறேன்?”

“எனக்கு தெரியும். ஆனா புத்திக்கும் எனக்கும் தான் ரொம்ப தூரமாச்சே. பாவம் இந்த மனுசங்க தான் என்கிட்டேயும் புத்திக்கிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்குறாங்க..!” என்றது பாவமாக.

“இப்போ என்ன வேணும் உனக்கு.?”

“நீ ஏன் முழுசா அவன் கிட்ட எதையும் சொல்லல.?”

“எனக்குள்ள இருக்க பல கேள்விகளுக்கு ஆதிக்கிட்ட மட்டும் தான் விடை இருக்கு. அத தெரிஞ்சிக்கிட்டு நான் எல்லாமே அவன் கிட்ட சொல்றேன். அண்ட் எனக்கு வர போன் கால் யாரோடதுன்னு நான் இன்னும் கண்டு பிடிக்கலயே. அதயும் கண்டு பிடிக்கணும்.”

“ம்ம், அதுவும் சரி தான். ரொம்ப கன்ப்யூஸ் ஆகாத. ஸ்டே ரிலாக்ஸ். பாத்துக்கலாம்”
என்று அவள் மனசாட்சி அவளுக்கு உரம் அளிக்க, நிலவை ரசித்து கொண்டே நித்திரையை ஆட்கொண்டாள் திவி.

இங்கு ஆதியோ மகிழ்ச்சியின் பிடியில் இருந்தான். “அய்யோ, கடவுளே.. விநாயகா.. உனக்கு எவ்ளோ சக்தி… நான் நினைச்ச மாதிரியே அவளே என்கிட்ட வந்து சொல்லிட்டா. ஆனா, அவ இன்னும் ஏதோ குழப்பத்துல இருக்கா. என்ன இருந்தாலும் இனிமே அவளுக்கு துணையா நான் இருப்பேன்.” என்று உறுதி எடுத்து கொண்டு உறங்கினான்.

கீச்சிடும் குருவிகளின் ஓசை காதுகளில் இசையாய் ஒலிக்க, மலர்களின் மணம் மனதுக்குள் சாரல் தூவ, தன் இரவு காதலியின் வேலை சுமை குறைக்க, பகல் காதலன் தன் கதிர்களை பரவ செய்தான். உலகமே தன்னை எதிர்நோக்கி தான் துவங்குகிறது என்ற பெருமிதம் அவனுக்கு, ஆனால் ஆதியோ அவனவளின் வதனத்தை எதிர்நோக்கியே நாளை துவங்குகிறேன் என்று பறைசாற்றினான்.

இருவரும் இரவு தாமதமாக உறங்கியதால் காலையில் சற்று தாமதமாக தான் எழுந்தனர்.

காலையில் எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலிற்கு வந்தான்.

தெய்வானை “என்ன டா எழுந்திரிச்சிட்டியா.? என்ன ஆதி கண்ணுலாம் ரெட்டா இருக்கு.?” என்று பதறியபடி கேட்க,

ஆதி “ஒன்னும் இல்ல மா.! நைட் சரியா தூங்கல. 12 மணிக்கு தான் தூக்கம் வந்துச்சு.. அதான் மா.” என்றான்.

பெருமாள் “ஏன், நைட் தூங்கல? என்ன ஆச்சு ஆதி.?”

ஆதி “ஒன்னும் இல்ல ப்பா..!”

தாத்தா “தெய்வா..! அவனுக்கு எண்ணெய் தேச்சு குளிப்பாட்டி விடு மா.. சரி ஆகிடும். “

ராஜா “ரோஜா ஆதிக்கு சுடுதண்ணி வை மா!”

ரோஜா “முதல்ல இந்த காஃபிய குடி ப்பா.. அண்ணி கொஞ்ச நேரத்துல தண்ணி காஞ்சிடும்.. நீங்க அதுக்குள்ள எண்ணை தேச்சி விட்ருங்க”

ஆதி தான் இவர்களின் அன்பில் பூரித்து போனான். இத்தனை நாள் இதனை எல்லாம் இழந்து விட்டோம் என்று ஒருபக்கம் வருந்தினாலும், மறுபக்கம் மகிழ்ந்து தான் போனான்.

தேவ் “ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கும் தான் கண்ணு ரெட்டா இருந்துச்சு. யாருமே கண்டுக்கல, ஹ்ம்ம்..” பவியிடம் சலித்துக் கொண்டான்.

பாரதி “இனிமே உன்னை இங்க யாருமே கண்டுக்க மாட்டாங்க” என்றாள் சிரித்துக்கொண்டே.

தேவ் “பவி, என்ன யாருன்னு தெரியாதுன்னு சொன்னவங்க எல்லாம் என்கிட்ட பேசனும்னு அவசியம் இல்லை”

பாரதி “நீயும் தான சொன்ன, என்ன யாருன்னு தெரியாதுன்னு” என்று சண்டையிட,

பவி “அட, கொஞ்ச நேரம் உங்க சண்டையை மூட்டைக்கட்டுங்க.  மாம்ஸ் அங்க பாருங்க என் அக்கா வராங்க..”

பாரதி “என்ன டா இது, அக்காக்கும் கண்ணு சிவப்பா இருக்கு.?”

தேவ் “சரி இல்லயே.” என்று விட்டு, திவியிடம் சென்றவன் “என்ன திவி? உன் கண்ணும் சிவப்பா இருக்கு. நைட் தூங்கலயோ?” என்றான் கேலியாக,

திவி “ப்ச்.. இல்ல டா. தூக்கமே வரல. அண்ட் இது புது இடம்ல. வேற ஒன்னும் இல்ல.”

பாரதி “அப்போ ஏதோ இருக்கு.? சொல்லுங்க நைட் எத்தனை மணிக்கு தூங்குனீங்க.?” என்று கேட்க,

திவி “ஒரு 12 மணி இருக்கும், பாப்பா. அப்போ தான் தூங்குனேன் ஏன் ?”

தேவ்வும் பாரதியும் நமட்டு சிரிப்புடன் அவளை பார்க்க, பவி “ஆதி மாமாவும் 12 மணிக்கு தான் தூங்கினாங்களாம் அக்கா. ரெண்டு பேருக்கும் என்ன ஒரு வேவ்லெந்த்” என்று கலாய்க்க,

திவிக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவர்களின் உரையாடலை பெரியவர்கள் கேட்டும் கேட்காதது போல் சென்று விட,  ஆதி தான் திவியை ரசனையுடன் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் பார்வையை சமாளிக்க இயலாது, திவி சென்று விட,

அவனருகில் வந்த தேவ் “அண்ணா, போதும் திவியை சைட் அடிச்சது. போய் குளிங்க” என்று கூறினான்.

அவன் கூறியதில் அவனை ஆதி முறைக்க,   அதை புரிந்துக் கொண்ட தேவ் “ஸ்ஸ்ஸ்… சாரி, அண்ணியார் கிளம்பியாச்சு. நீங்களும் போய் குளிங்க” என்றான்.

பாரதி “என்னது அண்ணியாரா.? இது எப்போல இருந்து.?”

தேவ் “அதுலாம் அப்டி தான்..”

பவி “அப்போ முடிவே பண்ணிட்டீங்களா? ஆதி மாமாக்கு தான் திவி அக்கா வா?”

ஆதி குறும்புடன் தலையசைக்க,

பாரதி “அச்சோ பாவம்.” என்றாள் தலையில் கை வைத்து கொண்டு.

ஆதியும் தேவ்வும் புரியாமல் “ஏன் பாவம்.? யாரு பாவம்?” என்று கேட்டிட,

பவி “அக்கா தான் பாவம்..”

பாரதி “அக்கா இல்ல, மாமாவும் இந்த லூசும் தான் பாவம்” என்றாள் உச்சிகொட்டி கொண்டே.

ஆதி “ஏய், என்ன சொல்றீங்க.. ஒழுங்கா சொல்லுங்க.” என்று அதட்டிட,

பவி “நீங்க எப்டி இருக்கீங்க? எங்க அக்கா எப்டி இருக்காங்க.?”

தேவ் “ஏன் ஏன்.. ஏன்.. என் அண்ணாக்கு என்ன கொரச்சல்.?”

பவி “கொரச்சல்லாம் இல்ல. நீங்க ஃபிட்டா இருக்கீங்க. அக்கா உங்கள விட கொஞ்சம் ஷார்ட்டா இருக்காங்க. எப்டி ரெண்டு பேரும் லவ் பண்ணி… கல்யாணம் பண்ணி…” என்று இழுத்து பெரு மூச்சு விட,

ஆதி தான் அவளின் காதை திருகி, “வாய் வாய் வாய்.. அதுலாம் நான் பாத்துக்குறேன். நீ போய் படி போ.” என்று கூறினான்.

பவி “ஸ்ஸ்ஸ்ஆஆஆ… மாமா விடுங்க வலிக்குது. நான் சொன்னத்துக்கே இப்டினா அவ சொல்றதையும் கேளுங்க” என்று பாரதியை மாட்டி விட்டாள்.

ஆதி “ஹான்.. நீ சொல்லு, நான் ஏன் பாவம்.?”

பாரதி “அக்கா, ரொம்ப பொஸஸிவ். முன்னலாம் அடிக்கடி அழுவாங்க. இப்போலாம் அக்கா அழுகுறது கிடையாது. காரணம் யது அக்காவோட இழப்பு தான் என்றவளின் குரல் கமறிட, தன்னை சரிப்படுத்தி கொண்டவள், அடிக்கடி அக்காக்கு கோவம் வரும். சின்ன சின்ன விஷயத்துக்கு கோவம் வரும். நீங்க தான் பாத்துக்கனும். அக்கா கிட்ட இருந்து ஒரு விஷயம் வாங்குறது அவ்ளோ ஈஸி கிடையாது. ரொம்ப கஷ்டம். சோ நீங்க தான் பாவம்.” என்றாள்.

தேவ் “ஏய், முட்டக்கன்னி. நீ கவலைப்படாத.. ரெண்டு பேருக்கும் சண்டை வந்தா, சமாதானம் பண்ண என் அண்ணா உன்னை தேடி வர மாட்டாங்க போதுமா.!”

ஆதி “இதுலாம் இவ கூட இருந்த கொஞ்ச நாள்லயே நான் தெரிஞ்சிக்கிட்டேன் டா. என்ன ஆனாலும் திவி தான் என் பொண்டாட்டி. உன் அக்காவ நான் நல்லா பாத்துகுவேன்” என்றான்.

பாரதி சிரித்துக்கொண்டே “ஓகே மாமா.. மாமா அக்கா வராங்க.. நான் சொன்னதை எதுவும்”

ஆதி “கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன்.”

தேவ் “இரு இரு நான் உன்னை மாட்டி விடுறேன்” என்று விட்டு, “அண்ணி..” என்று ஆரம்பிக்க,

பாரதி “அக்கா.. தேவ்க்கு மேத்ஸ் ஏதோ டௌப்ட்டாமா அக்கா” என்று கூறினாள்.

தேவ் தான் விழி பிதுங்கி “அதுலாம் ஒன்னும் இல்ல. எனக்கு ஸ்பெசல் க்ளாஸ்க்கு டைம் ஆச்சு” என்று விட்டு ஓடியே விட்டான்.

பாரதியும் பவியும் விழுந்து விழுந்து சிரிக்க, ஆதி “அவன் ஏன் இப்படி ஓடுறான்.?”

திவி “அவனுக்கு மேத்ஸ் வராது.. அதான். சரி சரி.  நீங்க இன்னும் கிளம்பல.? நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. வீட்டுக்கு போய்ட்டு அப்டியே ஸ்கூல்க்கு போங்க. ஆதி உனக்கு தனியா சொல்லனுமா? நீ ஆபிஸ் கிளம்பு.” என்று விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அவள் கூறும் தோரணையே, நான் கூறியதை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். ஆதி சிரித்து கொண்டே சென்று விட, பவியும் பாரதியும் கிளம்பினர்.

உள்ளே சென்றவள் “அத்தை, நான் சொன்ன மாதிரியே உங்க பையன உங்க கிட்ட சேத்துட்டேன். நான் செஞ்சது எல்லாமே உங்களுக்காக மட்டும் தான் அத்தை.” என்றாள் பெருமாளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே.

ரோஜா “சரி.. எல்லாமே நல்ல படியா முடிஞ்சது. இனிமே எல்லாம் நல்லத்துக்கு தான். நாங்க கிளம்புறோம் அண்ணா!” என்க,

அதற்குள் அனைவரும் ஹாலிற்கு வந்து விட்டனர்.

தாத்தா “என்ன மா, இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்ல. அதுக்குள்ள போனுமா.?”

ராஜா எதுவும் பேசாமல் திவியை பார்க்க, திவி “டார்லிங்க்.. என்ன டார்லிங்க்.. நாங்க இனிமே அடிக்கடி வருவோம். நீங்க கவலைப்பட வேண்டாம், சரியா? எங்களுக்கும் கொஞ்சம் வேலை இருக்குல்ல. அப்ரோம் கூடவே இருந்தா நம்ம அருமை யாருக்கும் தெரியாது டார்லிங்க்..” என்று ஆதியையும் பெருமாளையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கூறினாள்.

பெருமாளிடம் இவள் காட்டும் ஒதுக்கம் இப்போது தான் ஆதியின் கண்ணிற்கு புலப்பட்டது..

தெய்வானை “என்ன திவி இப்டி சொல்லிட்ட.? அப்டிலாம் யாரும் இங்க இல்ல திவி. அவங்க அப்டி நினைச்சாலும் நான்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா.?” என்று ஏக்கத்துடன் கூறியவரை, அணைத்துக் கொண்டாள் திவி.

திவி “தினமும் நான் இங்கே ஆஜர் ஆகிடுவேன் அத்தை, ஓகே.? நீங்க கவலைபடாதீங்க.” என்றாள்.

அனைவரும் கிளம்ப, ஆதி திவியிடம் கண்களாலேயே கெஞ்சி கொண்டு இருந்தான். திவியின் அலைபேசி அடிக்க, அதை புன்னகையோடு ஏற்றவள், பேசி விட்டு வருவதாக ஓரமாக சென்றாள்.

ஆதி தன் அறையின் பால்கனியில் நின்று கொண்டு பேச, திவி தோட்டத்தில் நின்றாள்.

அலைபேசியை காதில் வைத்த இருவரும் எதுவும் பேசாமல், ஒருவர் முகத்தை ஒருவர் விழிகளால் பருகி கொண்டு இருந்தனர்.

அந்த மௌன மொழியை ஆதியே கலைத்தான். “அவசியம் போனுமா.?”

திவி “அப்ரோம் இங்கேயே இருக்க நான் என்ன உன் பொண்டாட்டியா?”,

ஆதி “நீ என் பொண்டாட்டி தான்டி.. யார் இல்லன்னு சொன்னா.?”

அவன் கூறிய வார்த்தைகள் வெட்கத்தை தந்தாலும் அதை வெளிக்காட்டாது, திவி “சார்க்கு ரொம்ப ஆசை தான். நான் இப்போ கிளம்பனும் தியா. டைம் ஆச்சு டா.!” என்று கெஞ்ச,

ஆதி அரை மனதுடன் “ம்ம் சரி பாத்து போய்ட்டு வா டி” என்றான்.

திவி “என்ன வரவர உரிமை ஜாஸ்தி ஆகுது..?”

ஆதி “அதுலாம் அப்டி தான். இப்படியே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இரேன்”

திவி “டேய் உனக்கு என்ன ஆச்சு.? ஆபிசுக்கு டைம் ஆகுது.. கிளம்பு நீ.” என்று அதட்ட,

ஆதி “ஏய் குட்டச்சி..  ரொம்ப பண்ணாத. எனக்கு சிரிப்பு தான் டி வருது. யது, சீக்கிரம் உன்னை கல்யாணம் பண்ணி என்கூடவே வச்சிகனும் டி”

திவிக்கு வார்த்தைகள் வராமல் இருக்க, “ம்ம் சரி.. நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு அவனிடம் பார்வையாலேயே விடைபெற்று சென்றாள்.

ஆதியும் தன் ஆபிஸிற்கு புறப்பட்டான்..

இங்கு கல்லூரியில் பாடம் நடந்து கொண்டு இருக்க, திவியின் கவனமோ பாடத்தில் இல்லை.. எதையோ சிந்தித்து கொண்டு இருந்தவளை, ரவீயின் அழைப்பு தான் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

ரவீ “திவி… திவி…”

திவி “ஹான் சொல்லு ரவீ.”

ரவீ “ரொம்ப நேரமா உன் போன் அடிக்குது. நீ எந்த நினைப்புல இருக்க.?”

திவி “ப்ச்.. அத ஏன் டி கேக்குற..? தியா கிட்ட என் லவ்வ ஏன் டா சொன்னேன்னு இருக்கு.. முடியல டி. அந்த லூசு.. என்ன என்னமோ பன்றான்டி”

ரவீ “ஏய், என்ன சொல்ற.. நீ சொல்லிட்டியா.?” என்று கண்களில் ஆச்சர்யம் பொங்க கேட்டாள் ரவீணா.

திவி ஆம் என்பது போல் தலையசைக்க,

ரவீக்கோ இருப்பு கொள்ள வில்லை.. “செம டி.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. சூப்பர்.. எப்போ சொன்ன.? ஆமா, ஆதி என்ன பன்றான்.?” என்று அவளை ஓட்ட,

திவி தான் எதுவும் கூறாமல் புன்னகையை பதிலாக தந்தாள்.

திவி எவ்ளோ கூறியும் அதை காதில் வாங்காமல், ரவீ இதை நண்பர் பட்டாளமிடம் பரப்பிவிட்டாள்.

அனைவருக்கும் சந்தோசம் என்றாலும் சுப்ரியாவிற்கோ பேரதிர்ச்சி. ‘என்ன, என் வாழ்க்கைல எல்லாரும் விளையாடுறீங்களா.? உங்கள சும்மாவே விட மாட்டேன். இது வரை எவ்ளோ விசயம் செஞ்சாலும் எப்படியாவது தப்பிச்சு வந்த. இனிமே உன்னை தவிர உன்னை சுத்தி இருக்குறவங்களை காப்பாத்த முடியாம நீ தவிக்கணும் திவி. மேடம் இதுல எப்டி ஐ.ஏ.எஸ் ஆகுறீங்கன்னு பாக்குறேன்’ என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.

விஷ்ணுவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் இதை தன்னிடம் முதலில் கூற வில்லை என்று அவன் திவியிடம் பேசவே இல்லை.. திவி எவ்ளோவோ சமாதானம் செய்து பிறகு தான் தன் திருவாய் மலர்ந்தான் அவளின் அண்ணன்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் திவிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை பதற்றத்துடன் எடுத்தவள், முகத்தில் எந்த உணர்வும் காட்டாது அதை அழுத்தி பேசினாள்.

“என்ன திவ்யா, கோகுல் இருக்க இடம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா.? எப்டி எப்டி.. அவனுக்கு உண்மைய சொல்லி அந்த ஆதி கூட சேத்து வைக்க போறியா?” என்றான் நக்கலாக,

திவி “நீ முதல்ல யாருன்னு சொல்லு. இப்போ என்ன நீ கோகுல கண்டு பிடிச்சிட்டியா..? அவன் எனக்கு தேவையே இல்லை. நீ யாரா வேணா இரு. ஆனா இனிமே ஆதிய ஏதாவது பண்ணனும்னு நீ நினைச்சாலே அவன காப்பாத்த நான் ஆயிரம் வழி யோசிச்சு வச்சி இருப்பேன். உன்னால் முடிஞ்சது பன்னு. நேர்ல உன்னை சந்திக்க நான் ரொம்ப ஆவலோட இருக்கேன்” என்றாள் திமிராக,

அவள் கூற்றில் மேலும் வெறியானவன் “இன்னும் கொஞ்ச நேரத்துல ஆதியே உனக்கு கால் பண்ணுவான். அப்போ தெரியும். நான் எவ்ளோ தூரம் போவேன்னு. வெய்ட் அண்ட் வாட்ச் தி கேம் திவ்யதர்ஷினி.”

திவி உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அவனிடம் “மூடிக்கிட்டு போனை வைடா. பொறுக்கி” என்று அழைப்பை துண்டித்தாள்.

இவன் கூற்றில் யோசனையில் ஆழ்ந்தவள், மீண்டும் அழைபேசி அடிக்க எடுத்து பார்த்தவள் அதிர்ந்தாள்.

ஆதி தான் அழைத்து இருந்தான். அதனை எடுத்தவள் கடவுளிடம் எதுவும் விபரீதம் இருக்க கூடாது என்று வேண்டி கொண்டே எடுத்தாள்.

திவி “ஆ.. ஆதி”

ஆதி “யது.. யது..”

திவி “ஹான்.. சொல்லு ஆதி”

ஆதி “தேவ்.. பாரதி…..”

திவி “என்ன ஆச்சு.. அவங்க ரெண்டு பேருக்கும்.  சொல்லு டா.. “என்று கத்த, அவளின் கத்தலில் நண்பர்கள் பதறித்தான் போயினர்.

விஷ்ணு அவளிடம் போனை வாங்கி ஸ்பீக்கரில் போட,

ஆதி “அவங்கள கடத்தீட்டாங்க டி..” என்றான் இறுக்கத்தோடு.

அதில் அனைவரும் அதிர்ந்திட, திவி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

கனவு தொடரும்.🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்