
பூகம்பம் – 40
வீரச்சாமி விடாமல் கேட்டதில் “இப்ப என்ன தான் பண்ணனும்ங்கறீங்க.?” என்று சற்று கோவத்துடனே பாண்டியன் கேட்டு விட, “உன் புள்ள காதலிக்கற பையன்கிட்ட என்ன குறையை கண்ட நீ.?” என்று பொறுமையாகவே கேட்டார்.
“எனக்கு பிடிக்கல..”
“ஏன் பிடிக்கல.?”
“காதலிக்கறேனு வந்து நின்னா சம்மதம் சொல்லிரணுமா.?”
“சொன்னா என்ன குறைச்சல் வந்தர போகுது.?”
“அந்த ஒன்னுமில்லாதவனை எல்லாம் என் மருமகனா ஏத்துக்க முடியாது.. அந்த கழுதை கல்யாணம் பண்ணாம காலம் பூரா அப்படியே கிடக்கட்டும்..”
“அவன் கிட்ட ஒன்னுமில்லனு நீ பார்த்தீயா.? ஏதாவது பேசணும்னு பேச கூடாது.. அவன் அப்பன் துணையில்லாம உழைச்சு இந்தளவுக்கு அவன் உயர்ந்து இருக்கறதுக்கே பாராட்டணும்.. நீ உன் புள்ளையை அவனுக்கு கட்டி குடுத்தாலும் அவன் உன்கிட்ட அதைய வாங்கிட்டு வா இதைய வாங்கிட்டு வான்னு உன் புள்ளையை அனுப்பி விட மாட்டான்..
எல்லாத்தையும் அவனே பார்த்துப்பான்.. தங்கமான பையன்.. ரெண்டு பேருக்கும் பிடிச்சுருச்சு.. இனி என்ன பண்றது.? இப்ப நம்ம புள்ளையை வேறவனுக்கு கட்டி குடுத்தாலும் அது அங்க நிம்மதியா வாழுமா.?” என்று எடுத்து கூறிட, பாண்டியனின் முகத்தில் மாற்றமே இல்லை.
“நம்மளும் நல்ல பையனா தானே அவளுக்கு பார்த்தோம்.. அவன்கிட்ட என்ன குறையை கண்டா அவ.?” என்று காண்டாகினார்.. அவருக்கு ரூபனை விட ரஞ்சித் தான் அனைத்திலும் உயர்ந்தவன் என்ற எண்ணம். அதுவும் உண்மை தான்.. ரஞ்சித்தையும் ரூபனையும் வைத்து பார்த்தால் ரஞ்சித் தான் முன்னால் வருவான்..
ரஞ்சித்திடமும் ஒரு குறையுமில்லை.. ஆனால் ஆதிராவிற்கு ரூபனை பிடித்திருக்கிறது என்றால் வேற என்ன செய்ய வேண்டும்.? வேறு வழியில்லையே அவளின் முடிவுக்கு தான் தலையாட்ட வேண்டுமே.? வாழ போறதும் அவள் தானே.?
“ப்ச் மாமா.. நீங்களும் பிடிவாதம் பிடிக்காதீங்க.. அவளுக்கு ரூபனை தான் பிடிச்சுருக்குனு சொல்றா.. உங்களுக்கு ரஞ்சித்தை பிடிச்சா நீங்களா அவன் கூட வாழ போறீங்க.? வாழ போறவ தானே முடிவு பண்ணனும்.. அவ இப்படி பண்ணுனது எனக்கே கோவம் தான்..
அதற்காக உங்களைய மாதிரி நானும் பிடிவாதம் பிடிச்சா என்னவாக போகுது.? அவ நல்லா இருந்தா போதும்.. கொஞ்சம் கோவத்தை விட்டுட்டு நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க..” என்று சிவாவும் கூறினான்.
ஆதிராவின் அன்னையும் இப்போது மனமாறி இருந்தார்.. காரணம் தன் மகள் இப்படியே இருந்து விடுவாளோ.? என்ற பயம் தான்.. அதனால் தான் இப்போது எதுவும் பேசாமல் நிற்பதே.!! மகள் நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மாறியதன் விளைவு தான் இந்த மனமாற்றமும்.
சிவாவிடமும் ரூபனை பற்றி விசாரித்திருக்க அவனும் நல்லவிதமாகவே கூறியதில் இவரின் மனதும் திருப்தியடைந்து கணவன் சம்மதம் கூற வேண்டுமே என்று வேண்டுதலுடனே அவரின் முகம் பார்த்து நிற்கிறார் தவிப்புடனே.!!
மகளின் பிடிவாதமும் கணவனின் பிடிவாதமும் இவரை தான் தாக்குகிறது.. யாராவது ஒருவர் விட்டு குடுத்தால் தான் என்ன.? என்று புலம்பவும் செய்கிறார்.. ‘இந்த கழுதைக்கு இவ்ளோ ஏத்தம் இருக்க கூடாது.. நீ தான் விட்டு குடுத்தா என்னடி.?’ என்று மகளை வசைபாடவும் மறப்பதில்லை. வேறு என்ன செய்ய முடியும் அவரால்.!!
தந்தையும் மகனும் பேசி பேசியே பாண்டியனை சம்மதிக்க வைத்திருக்க, விருப்பமே இல்லாமல் போனாலும் அவர்களின் வற்புறுத்தலுக்கும் மகளின் பிடிவாதத்திற்கும் “அந்த பையனை வந்து பேச சொல்லுங்க..” என்று விட்டார்.
கடவுளே.! என்று மகிழ்ந்த ஆதிராவின் அன்னை “எப்படியோ இவரு சம்மதம் சொல்லிட்டாரு.. எங்க சம்மதிக்க மாட்டாரோனு பயந்துட்டேன்.. அந்த கழுதையும் அதோட முடிவுல உறுதியா இருக்கு.. இவரும் இவரோட பிடிவாதத்துல உறுதியா இருக்காரு.. ரெண்டா பேருக்கும் நடுவுல மாட்டிட்டு என்னால முடியல..” என்று அண்ணனிடம் புலம்பி தள்ளி விட்டார்.
“ரூபன் வர்றப்ப நாங்களும் வர்றோம்.. அவனுக்கு சித்தப்பானு ஒருத்தன் இருந்தாலும் அவன் வர மாட்டான்.. அவன் என் அண்ணன் பையன்.. அவன் கல்யாணத்தை நாங்க தான் நடத்தணும்.. உன் புருசன் ஏதாவது பண்ணனும்னு நினைச்சான் பார்த்துட்டு அமைதியா இருக்க மாட்டேன்..” என்று விட்டு கிளம்பினார் வீரச்சாமி.
ரூபனின் அன்னை வீரச்சாமிக்கு அழைத்து “நான் வேணா அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசட்டுமாங்க.? என் புருஷன் இருந்துருந்தா என் பையனை இப்படியே விட்டுருக்க மாட்டாருல்ல.? இவன் சித்தப்பன்கிட்ட சொன்னா உன் மவனுக்கு நீ என்ன வேணாலும் பண்ணு.. என்கிட்ட ஏன் சொல்லிட்டு இருக்கேனு மரியாதை இல்லாம பேசுவான்..
என் பையனுக்கு நான் இருக்கறப்ப ஏன் அடுத்தவங்க உதவியை நாடணும்.? அந்த பொண்ணோட அப்பா என்ன தப்பா பேசுவாரா.? பேசட்டும்.. என் பையனுக்காக நான் வாங்கிக்கறேன்ங்க..” என்று புலம்பி அழுகவும் செய்திருந்தார்.
அதில் வீரச்சாமியின் மனதும் இளகி இருக்க, ஆதிராவும் போன் செய்து ‘மாமா எனக்கு ரூபன் தான் வேணும்’ என்று அழுது முழுவதுமாக அவரை கரைந்திருந்தாள்.. அதன் விளைவு தான் பாண்டியனை சம்மதிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் கிளம்பி வந்தவர் இதோ பாண்டியனை சம்மதிக்க வைத்து விட்டே கிளம்பி இருக்கிறார்.
சிவா அழைத்து ஆதிராவிற்கு விசயத்தை கூறிட, மகிழ்ச்சியில் துள்ளி “தேங்க்ஸ் மாமா.. தேங்க்ஸ்.. நீ சம்மதிக்க வெச்சுருவேனு எனக்கு தெரியும்.. ரெம்ப தேங்க்ஸ் மாமா..” என்றிட, “உன் சந்தோசம் தான் முக்கியம்னு சொல்லுவேனு நினைக்காத.. உன் மேல கொலைக்காண்டுல இருக்கேன்.. நேர்ல மட்டும் வந்தராத..” என்று சீறினான் சிவா.
“மாமா ப்ளீஸ் மாமா.. சாரி சாரி..”
“சாரி கேட்டா மன்னிச்சரணுமா.?”
“ஏன் மன்னிச்சா என்னவாமா.?”
“எனக்கு எப்ப தோணுதோ அப்ப தான் மன்னிப்பேன்..”
“இப்ப தோணாதா என்ன.?”
“தோணலயே..”
“என்னைய பார்த்தா பாவமா தெரில.?”
“உன்னைய பார்த்தா செம கேடியா தான் தெரியற.. பேசாம போனை வெய்யு.. அது தான் நல்லது..” என்றதோடு அழைப்பை துண்டிக்க, மறுபடியும் அவனுக்கு அழைத்த ஆதிரா “அப்ப… அப்ப.. என் மேல பாசமில்லையா.?” என்று அழுகும் குரலில் கேட்டாள்.
“சுத்தமா இல்ல.. போனை வெய்யு.. வந்துட்டா பாசம் பாயாசமும்னு.. உனக்கு பாசமிருந்திருந்தா என்கிட்ட சொல்லாம இருந்துருப்பீயா.?”
“யோவ் மாமா.. இப்ப நான் லவ் பண்ணுனது தப்புனு சொல்றீயா.? இல்ல உன்கிட்ட மறைச்சதை தப்புனு சொல்றீயா.?”
“பேசாம போனை வெய்யு..”
“நீங்க கட் பண்ணுனா மறுபடியும் மறுபடியும் நான் கூப்பிடுவேன்..”
“…..”
“உங்ககிட்ட சொல்லிட்டு லவ் பண்ணிருந்தா நாங்க தனியா பேச நீங்களே ஹெல்ப் பண்ணிருப்பீங்க.. ப்ச் இதைய நான் யோசிக்காம விட்டுட்டனே.? இப்படியொரு மாமா யாராவதுக்கு கிடைக்குமா.? நான் தான் மாமா மிஸ் பண்ணிட்டேன்.. நாங்க வேணா உங்ககிட்ட சொல்லிட்டு மறுபடியும் முதல்ல இருந்து லவ் பண்ணட்டுமா.? அப்ப கோவப்பட மாட்டிங்க தானே.?” என்றாள் சிரிப்பு கலந்த கிண்டலுடன்.
“அடிங்ங்கககக.. என்னைய மாமா வேலை பார்க்க சொல்றீயா நீ.?”
“ஆமா மாமா.. மாமா தானே மாமா வேலை பார்க்கணும்..”
“மிதி வாங்க போற நீ.?”
“ஏன் என்னைய அடிச்சு அடிச்சு உங்களுக்கே சலிச்சு போய்ருச்சா.?”
இவளிடம் பேச முடியாமல் “எம்மா தாயே.. போனை வெய்யுமா..” என்று சிவா கூறிட, “மன்னிச்சுட்டேனு சொல்லுங்க.. அடுத்த நிமிசமே போனை வெக்கறேன்..” என்றாள் விடாமல்.
“சொல்ல முடியாது..”
“அப்ப நானும் விடாம நீங்க மன்னிச்சுட்டேனு சொல்ற வரைக்கும் பேசிட்டே இருப்பேன்..”
“நீ லூசு.. நீ பாட்டுக்கு தனியா பேசுவ.. நான் அப்படியா.?”
“மாமா..” என்று இவள் பல்லை கடிக்க, “போனா போகுதுனு மன்னிச்சு விடறேன் அத்தை மகளே.. இனி எனக்கு தொல்லை இல்லை.. அதற்காகவே மன்னிக்கலாம்..” என்று கூறி அவளின் ரத்த அழுத்தத்தை உயர்த்தி விட்டே அழைப்பை வைத்தான் சிவா.
இவனிடம் சிரிப்பே மலர்ந்தது.. அவளின் மேலுள்ள கோவம் தான் எப்போதே கரைந்து விட்டதே.!! அத்தை மகள் என்பதையும் கடந்து அவளின் மேல் தனிபிரியம் இவனுக்கு.. ஒற்றை பிள்ளையாக இவனிருக்க, அவனிடம் தனிமை என்ற ஒன்றே நெருங்காமல் அவனின் முழு நேரத்தையும் களவாடி கொண்டவள் அவளல்லவா.!
அளவில்லாத பாசத்தை வைத்திருப்பவன் எப்படி அவளின் மீதான கோவத்தை மட்டும் இழுத்து பிடித்து கொண்டே இருப்பான்.. கோவமா.? பாசமா.? என்று வரும் போது பாசமே வென்று அவனின் கோவத்தையும் மறக்கடித்தும் விட்டிருந்தது.
பாண்டியனை சம்மதிக்க வைத்தற்காக தாயும் மனைவியும் அவனை கடிந்து கொள்ள, “இது அவ வாழ்க்கை.. அவளுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போகட்டும்.. நம்ம விருப்பத்திற்கு அவளை வாழுனா எப்படி சரினு சொல்லுவா.? தைரியமிருந்தா ஏன் மாமாகிட்ட பேச போனீங்கனு அப்பாகிட்டயே கேட்டுக்கங்க..” என்றதில் தாற் பெண்கள் இருவரும் வாயை மூடினர்.
ரூபனுடன் அவனின் அன்னையும் ஆதிராவின் வீட்டிற்கு வர, அவர்களுக்கு முன்னே வந்திருந்த சிவாவும் வீரச்சாமியும் தான் அவர்களை வரவேற்றனர்.
ஆதிராவின் அன்னை சிறு புன்னகையை உதிர்த்து விட்டு ஓரமாக நின்று கொண்டார்.. ரூபனை கண்டதும் துருவினி கண்சிமிட்டி தாராளமாக புன்னகையை விரித்திட, அதற்கும் சன்னமாக சிரிப்பை சிந்திய ரூபனோ பாண்டியனை பார்த்ததும் இதழுக்குள் மறைத்து கொண்டான்.
பொதுவான விசயங்களையே பேசினர்.. வீரச்சாமி இருப்பதால் பாண்டியனால் எதுவும் பேச முடியவில்லை.. ரூபனின் அன்னை சிம்பிளாக கோவிலில் கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்றிட, அதற்கும் தலையசைக்க வேண்டிய கட்டாயம் பாண்டியனுக்கு.!
மற்ற விசயங்களையும் பேசி விட்டு அவர்கள் கிளம்பிட, அவர்கள் செல்லும் வரையிலும் அமைதியாக இருந்த பாண்டியன் எடுத்து நடத்த சொந்தக்காரன் இல்லாதவன் எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணனும்.? அந்த பையனை ஏத்துக்கவே எனக்கு மனசு வரல.. இவன் என்னத்த காட்டி என் பொண்ணை மயக்கி வெச்சுருக்கானோ.?
என் பொண்ணு கல்யாணத்தை பெரிசா நடத்தணும்னு நினைச்சுருந்தேன்.. இப்ப அதுலயும் மண்ணள்ளி போட்டுட்டாங்க.. எவளுக்கோ கல்யாணம்னு நினைச்சுட்டு கல்யாணத்துல ஓரமா நான் நின்னுக்கறேன்.. அவங்க பண்றதை பண்ணிக்கட்டும்..” என்று மனைவியிடம் தான் கத்தி விட்டு சென்றார்.
இவர் ரூபனை ஏற்று கொள்வாரா.? மாட்டாரா.? இதை கேட்டால் ஆதிராவின் பதில் என்னவாக இருக்கும்.?
திருமதி. ஆதிரா அபி ரூபனாக பெண்ணவள் மாறி இருக்க, பாண்டியனை தவிர மற்ற அனைவருக்கும் மனநிறைவாக தான் இருந்தது இவர்களின் திருமணத்தில்.!!
கோவத்தில் நிவேதா வர மாட்டேன் என்றிட, பின்பு கஸ்தூரியின் அதட்டலில் தான் கிளம்பி வந்திருந்தாள் அதுவும் சரியாக முகூர்த்த நேரத்தில்.!! மகனையும் ஆதிராவிடம் விடாமல் பிடித்து வைத்து கொண்டிருக்கிறாள்.. இவளின் வீண் பிடிவாதம் எதற்கென்று புரியவில்லை.
இது ஆதிராவின் வாழ்க்கை.. அவள் தான் முடிவெடுக்க வேண்டுமே.? இவளுக்காக அவள் ஏன் அவள் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டும்.? பிடிவாதம் என்ற ஒன்று நம்மை தாக்கி விட்டால் யாரின் சமாதான வார்த்தைகளையும் நம் மனது ஏற்று கொள்ளவே கொள்ளாது.. அது தான் நிவேதாவின் விசயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.!
கணவனின் வார்த்தையும் சரி மாமனாரின் வார்த்தையும் சரி அவளின் செவிக்குருத்தை சென்றயடையவே இல்லை எனலாம்.. அப்போதைக்கு தலையை மட்டும் அவர்களிடம் ஆட்டி விட்டு ஆதிராவின் மேல் கோவத்தை வளர்த்து கொண்டிருக்கிறாள் காரணம் அவள் பார்த்த மாப்பிள்ளையை அவள் வேணாம் என்று விட்டாள் என்பதற்காக.!!
இத்தனைக்கும் ரஞ்சித்தின் குடும்பமே ஆதிராவின் திருமணத்திற்கு வந்திருந்தது. அதிலும் ரஞ்சித் சிலபல வேலைகளையும் உரிமையுடன் செய்திட, அதை பார்த்து எரிச்சலுற்ற நிவேதா தான் “உன்னைய எல்லாம் என்னடா சொல்றது.? முதல்ல உன்னைய லவ் பண்ணிட்டு இப்ப அவனை கல்யாணம் பண்ண ரெடியாகிருக்கா.. ச்சைக் நினைக்கவே அருவெறுப்பா இருக்கு.. அவ கல்யாணத்துக்கு வந்ததும் இல்லாம ஓடியாடி வேலை செஞ்சுட்டு இருக்க.?” என்று சீறினாள்.
இது துருவினியின் காதிலும் விழுந்து தொலைக்க, வேகமாக அவர்களிடம் வந்து “என் அக்கா இவனை லவ் பண்ணவே இல்லை.. இவன் தான் அவ பின்னாடி சுத்திருக்கான்.. அதுக்கு அவ என்ன பண்ணுவா.? பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க.. இல்லனா நான் அமைதியா இருக்க மாட்டேன்..” என்று அவளை விடவே சீறி கத்தினாள் அந்த பாசமிகு தங்கையவள்.
ரஞ்சித்தும் “நிவே தப்பு என் மேல தான்.. ஆதிரா என்னைய லவ் பண்ணவே இல்லனு பலதடவை உன்கிட்ட சொல்லிட்டேன்.. மறுபடியும் மறுபடியும் அதையவே ஏன் பிடிச்சு தொங்கிட்டு இருக்க.? உனக்கு பிடிக்கலனா அமைதியா உட்காரு.. அதைய விட்டுட்டு என்னையும் ஏன் அப்படி இருக்க சொல்ற.?” என்று கொஞ்சம் கோவமாகவே கூறினான்.
இதை காதில் வாங்காத துருவினி “உங்களைய யாரும் வேலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தல மிஸ்டர்.. போய் கொட்டிக்கற வேலையை பார்த்துட்டு கிளம்புங்க.. தேவையில்லாம என் அக்கா பேரை கெடுத்து விட்டுட்டு இப்ப அக்கறைல வேலை செய்யறாராமா.. உங்க அக்கறையை யாரு இப்ப கேட்டது.?” என்று ரஞ்சித்திடம் கத்தி விட்டு சென்றாள்.
தலையை பிய்த்து கொண்டவன் “உன் வாய் அடங்கவே அடங்காதா.? உனக்கு பிடிக்கலனா ஆதிரா ஏன் வேணாம்னு சொல்லணும்.? அவளுக்கு பிடிச்சுருக்கு.. அதைய விட்டுட்டு சும்ம்மா எல்லாரையும் டென்சன் படுத்திட்டே இருக்க.? இனி என்கிட்ட பேச வந்தராத.. துருவினியை விட மோசமா திட்டிருவேன்..” என்று கடிந்து விட்டு நகர்ந்தான்.
அவனின் அன்னையிடமும் இதை கூற அவன் மறக்கவில்லை.. அவன் தான் துருவினியை பிடித்திருப்பதை அவனின் பெற்றோரிடம் மறைக்காமல் கூறி விட்டானே.? ஆதிராவின் விருப்பத்தை அறியாமல் நான் தான் அவசரப்பட்டு விட்டேன் என்று தன் மேலுள்ள தவறையும் அவர்களிடம் ஒப்புக் கொண்டான்.
அதற்கு அவர்கள் திட்டியதையும் வாங்கி கொண்டு துருவினியின் விருப்பத்தையும் இப்போது அவள் மறுப்பதற்கான காரணத்தையும் கூறிட, அவர்களோ முதலில் ஆதிராவின் திருமணம் முடியட்டும் பின்பு அவளின் பெற்றோரிடமே நேரடியாக பேசி கொள்ளலாம் என்று அவனின் விருப்பத்திற்கு செவி சாய்த்திருந்தனர்.
அதனால் அவர்களின் மனதிலும் எந்த வித கோவமும் இல்லை.. வருத்தமும் இல்லை.. வந்ததில் இருந்து வருங்கால மருமகளையே நோட்டமிட்டிருந்தவர்களுக்கு துருவினியின் செயல்கள் அனைத்தும் அவர்களை கவர்ந்து விட, மனநிறைவுடனே ஆதிராவையும் ரூபனையும் வாழ்த்தி விட்டு வந்து அமர்ந்திருந்தனர்.
ரஞ்சித்தை வேணாமென்று துருவினி கூறினாலும் அவனின் பெற்றோர்களை பார்த்தபோது எதற்கு மன்னிப்பு கேட்கின்றோம் என்றே புரியாமல் மன்னிப்பு வேண்டி அவர்களின் மனதில் பஜக்கென்று தன்னை ஒட்ட வைத்தும் விட்டாள் துருவினி..
வேறு வேலையில் இருந்தாலும் அவ்வப்போது அவனின் பெற்றோர்களையும் இவள் கவனிக்க தவறவில்லை.. அதிலே தங்களுக்கேற்ற மருமகள் இவள் தான் என்று இவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த போது நிவேதாவின் செயலை கேட்டு கொஞ்சம் கடுப்புறவே செய்தனர்.. இப்போது தாங்கள் பேசினாலும் வீண் வேலை தான் என்று அவள் அப்படியே இருக்கட்டும் என்று விட்டனர்.
“துரு.. துரு.. நிவே பேசுனதுக்கு நான் என்னமா பண்ண முடியும்.? அவ ஒரு லூசு.. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்..” என்று தன்னவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான் ரஞ்சித்.
அவளோ வீம்புடன் “உன்னால தான் என் அக்காக்கு கெட்ட பேரு.. அவ உன்னைய லவ் பண்றேனு சொன்னாளா.? நீ தான் பைத்தியக்காரன் மாதிரி சொன்னதுக்கு அவ திட்டு வாங்கிட்டு இருக்கா.. சொன்ன நீ நல்லவன்.. ஆனா என் அக்கா கெட்டவளா.? அவ உன்னைய லவ் பண்றேனு சொன்னாளா.?” என்று அங்கிருந்த கத்தியை எடுத்து அவனின் முன்னே ஆட்டி கடுங்கோவத்துடன் பெண்ணவள் வினவியதில் அலறி போய் முழித்து நிற்கிறான் இவன்.!!
“சொல்லு அவ உன்னைய லவ் பண்றேனு சொன்னாளா.?” என்று கத்தியை அவனின் விழிகள் மேல் குத்துவது போல் கொண்டு சென்று கேட்க, இ..இல்ல என்று திணறலுடன் இவன் பதிலுரைக்க, அப்பறம் எனத்துக்குடா அந்த லூசுகிட்ட அப்படி சொல்லி தொலைஞ்ச.?
விடாம அதையவே பிடிச்சுட்டு அத்தனை பேரையும் சாகடிக்குது.? நீ என்ன அவ்ளோ அப்பாட்டக்கரா.? உன்னைய வேணாம்னு சொல்லிட்டானு அந்த நிவே லூசு ஒப்பாரி வெச்சுட்டு இருக்கு.?
உன்னைய விட ரூபன் மாமாவே எவ்வளவோ பரவால்லனு இவங்களுக்கு தெரியல போல.. நீயே சொல்லு ரூபன் மாமா தானே பெஸ்ட்டு.?” என்று கத்தியை கீழ் இறக்காமலே அவள் கேட்டதில் “ஆமா ஆமா” என்று வேகமாக தலையை ஆட்டியும் வைத்தான் எங்கு அவள் தன் விழிகளை குத்தி விடுவாளோ.? என்ற சிறு அச்சத்தில்.!!
“போய் இதைய அந்த லூசுகிட்ட சொல்லு.. பே.. இனி இப்படி பேசிட்டு இருந்துச்சு கண்டிப்பா பேசற வாய்லயே இந்த கத்தியை இறக்கிருவேன்..” என்றதில் அவன் பதறி “எம்மா.. நிவே பாவம்..” என்று விட, அவனை ஒரு மாதிரியாக பார்த்த இவள் தான் “அந்த லூசு வாய்ல இல்ல.. உன் வாய்லடா என் வெண்ணை..” என்றாளே பாருங்கள் இவன் தான் அரண்டு விட்டான்.
பின்பு குரலை தணித்து “இந்த நிவே அக்கா பாட்டுக்கு இப்படி சொல்லிட்டு இருந்தா இது ரூபன் மாமாவோட அம்மா கேட்டா என்ன நினைப்பாங்க.? என் அக்கா அங்க நிம்மதியா வாழ வேணாமா.?” என்று நியாயமான கேள்வியை துருவினி கேட்டதும் “நானும் இப்ப திட்டி விட்டுட்டு தான் வந்துருக்கேன் துரு.. இனி இப்படி பேச மாட்டாங்க.. என்னைய நம்பு” என்றான் ஆறுதலாக.!!
“இருந்தாலும் நிவே உனக்கு மாமன் மனைவி.. அவளை போய் வார்த்தைக்கு வார்த்தை லூசுனு சொல்ற.?” என்றதும் இவள் முறைக்க, அதில் “அது லூசு தான்மா.. லூசுனு சொல்றதுல தப்பே இல்ல.. எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி பேசிட்டு கிடக்கட்டும்..” என்று அவளுக்கு ஆதரவாகவே பேசியதில் தன்னை மீறி சிரித்து விட்டாள் துருவினி.
எம்மா நிவேதா இவனை வேணாம்னு சொன்னதுக்காகவா ஆதிரா கிட்ட கோவப்பட்டுட்டு இருக்க.? இங்க இவன் அவ தங்கச்சியையே கரெக்ட் பண்ணி அவ கூட சேர்ந்து உன்னைய லூசுனு சொல்லிட்டு கிடக்கறான்..
இது புரியாம நீ வேற.? யாரை வேணாலும் நம்பு ஆனா காதலிக்கறவனை மட்டும் நம்பாத.. இது உனக்கு தேவையா.? தேவையா.? உனக்கு தேவைனு தான் நான் நினைக்கிறேன்..
பின்பு ரஞ்சித்தே “அம்மாகிட்டயும் உன்னைய பிடிச்சுருக்குனு சொல்லிட்டேன்.. அவங்களும் சரினு சொல்லிட்டாங்க” என்றவனை பொய் கோவத்துடன் முறைத்து “நான் தான் சரினு சொல்லணும்.. அவங்க இல்ல.. நான் முடியாதுனு சொல்லிட்டேன்..”
“ஏன்மா.?”
“எனக்கு பிடிக்கணும்ல.?”
“அதான் பிடிச்சுருக்குனு சொல்லிட்டியே.?”
“நான் எப்ப சொன்னேன்.?”
“சரி போக போக பிடிச்சுரும்னு நம்பி எனக்கு வாழ்க்கை குடுமா..”
“ஹான் போடா லூசு..”
“உன் அம்மா, அப்பாகிட்ட சாதாரணமாக உன்னைய பொண்ணு கேட்கற மாதிரி தான் அம்மாவை கேட்க சொல்லிருக்கேன்.. கண்டிப்பா உன் அப்பா சரினு சொல்லுவாங்க பாரு..” என்று கூறியவனின் தலையை தட்டி “அவரு எப்பவோ சம்மதம் சொல்லியாச்சுடா மெண்டலு.. நீ தான் ரொம்ப லேட்டு.. எல்லாத்துலயும் டியூப்லைட்டு” என்று விட்டு சிட்டாக பறந்தாள்.
அவள் சொன்னது புரியாமல் இவன் தான் “ஏய் துரு என்ன சொன்ன.? எனக்கு தான் தப்பா புரிஞ்சுருச்சா.?” என்று கத்த, “அவ சரியா தான் சொல்லிருக்கா.. நீதான் தப்பா புரிஞ்சுருப்ப ரஞ்சித்..” என்று அவனின் தோளை தட்டினான் அசோக்.
அசடு வழிந்து தலையை சொறிந்து “நீங்க ஏன் அசோக் குழப்பறீங்க.? அவ என்ன சொன்னானே எனக்கு புரியல.. இதுல நான் ஏன் தப்பா புரிஞ்சுக்கணும்..” என்றவனை மேலும் கீழுமாக பார்த்து ‘இவனை வெச்சுக்கிட்டு துருவினி தான் பாவம்’ என்று அவளுக்காக வருத்தப்பட்டு “சாப்பிட போக கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.. வாங்க ரஞ்சித் போலாம்..” என்றழைத்தான்.
ஆனால் ரஞ்சித்தோ “அவ என்ன சொன்னானு தெளிவா சொல்லுங்க அசோக்.. இல்லனா எனக்கு பைத்தியமே பிடிச்சுரும்..” என்று பாவமாக கேட்டிட, “உண்மையாவே நீ டியூப்லைட்டு தான்டா.. துருவினியோட அப்பாவே உங்க காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்கனு சொல்லிட்டு போறா அவ.. அது கூட உனக்கு புரியலயா.? என்னடா டேய்.? நீ ஏன்டா இப்படி இருக்க.?” என்று தெளிவாக கூறி அவனை திட்டவும் மறக்கவில்லை.
“என்னது.?” என்று அதிர்வை வாய்விட்டே கூறியவன் அதீத சந்தோசத்தி
ல் அசோக்கை அணைத்து கொண்டு சுற்றினான் சிறு பிள்ளையாக.!!!
இந்த அதிசயம் எப்ப நடந்துச்சு.? நம்ம பார்க்கவே இல்லையே.? சரி அடுத்த யூடில பார்ப்போம்.. போய்ட்டு வாங்க.. நானும் கிளம்பறேன்.!!!!

