Loading

 

 

வாயில் இரத்தத்துடன் அமர்ந்து இருப்பவனை பார்த்து கல்யாணிக்கு கவலையாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன் திட்டி விட்டு வெளியே சென்றவன் காயத்துடன் திரும்பி வந்திருக்கிறான். என்னவென்று கேட்டாலும் வாயை திறந்து பேச மறுக்கிறான்.

செந்தில் குமார் மகனிடம் பேசிப்பார்க்க முகத்தை திருப்பிக் கொண்டான். கல்யாணி காயத்தை துடைத்து மருந்து போட்டு விட்டார்.

அந்நேரம் மீண்டும் மீன் குழம்போடு அன்பரசி வந்தார்.

“கல்யாணி.. யாரோ வந்துருக்கதா அம்ரு சொன்னாளே” என்று கேட்டுக் கொண்டே வர “யாரும் இல்லங்க.. அர்ஜுன் அப்பா தான் வந்துருக்காரு” என்றார்.

“அப்படியா.. சரி சரி.. நீ மீன் குழம்பு வைக்கிறது எப்படினு கேட்டுட்டே இருந்தியா.. அதான் அம்ரு கேட்டானு இன்னைக்கு வைச்சேன். உனக்கும் கொடுக்க வந்தேன்” என்று குழம்பை கொடுக்க கல்யாணி வாங்கிக் கொண்டார்.

உதட்டில் காயத்துடன் அர்ஜுன் ஓரமாக அமர்ந்து இருக்க “என்ன காயம்? என்ன ஆச்சு பா?” என்று விசாரித்தார்.

“அத தான் நானும் கேட்குறேன். வாய திறக்க மாட்டுறான். சரி வலிக்குது போல பேச முடியல ஹாஸ்பிடல் வாடானா வர மாட்டுறான்”

“ஏன் பா.. ஆஸ்பத்திரிக்கு போகலாம்ல.. காயம் பெருசா இருக்கே” என்று கேட்கும் போது “ம்மா..” என்று அம்ரிதா ஓடி வந்தாள்.

அவளை திரும்பி பார்த்தான். வாயில் ப்ளாஸ்திரியோடு அமர்ந்து இருப்பவனை பார்த்து விட்டு அம்ரிதா உதட்டை சுழித்தாள்.

“பெரிய காயம் இல்ல. ஆனா ரத்தம் வந்துடுச்சு. என்ன நடந்துச்சுனு சொன்னா தான தெரியும்?” என்று கல்யாணி கூற அர்ஜுன் அம்ரிதாவை கண் சிமிட்டாமல் பார்த்தான்.

செந்தில் குமார் இப்போது தான் மகனுக்கு மருந்தை போட்டு விட்டு குளிக்கச் சென்றார். அவருக்கு வேண்டியதை கொடுத்து விட்டு கல்யாணி வந்து அமர்ந்தார்.

அம்ரிதாவை சில நொடிகள் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளோ எந்த பயமும் இல்லாமல் நின்று இருந்தாள்.

“க..‌ கல்லு தட்டி..” என்றதோடு பேச முடியாமல் நிறுத்தி விட்டான். உதட்டை அசைத்தால் வலித்தது. அதனால் அவன் நிறுத்தி விட “கீழ விழுந்திட்டுயா? இனிமே பார்த்து போ சரியா” என்று கல்யாணி கூறினார்.

“ஏன் பொய் சொல்லுற? பொய் தப்பு.. நான் தான் அத்த கல்ல எறிஞ்சேன். அதான் இப்படி காயமாகிடுச்சு”

அம்ரிதா பட்டென போட்டு உடைத்து விட அங்கிருந்த எல்லோருக்குமே ஆச்சரியம் தான். அர்ஜுனுக்கோ அவளது தைரியத்தை நினைத்து தலையே சுற்றியது.

“அம்ரு.. நீயா அடிச்ச? இப்படி தான் ரத்தம் வர்ர அளவு அடிப்பியா?”

“அவன் தான் மா.. என் சடைய பிடிச்சு இழுத்தான்”

“அவன் இவன்னு சொன்ன பிச்சுபுடுவேன். பெரிய பையன். ஒழுங்கா அண்ணன்னு கூப்பிடு”

“மாட்டேன்”

“அம்ரு.. சொன்னா கேட்க மாட்ட? மன்னிப்பு கேளு முதல்ல”

“மாட்டேன் மாட்டேன் மாட்டேன்”

“உனக்கு சேட்ட கூடி போச்சு” என்று அன்பரசி கை ஓங்க “பொறுங்க.. அடிச்சா என்ன ஆக போகுது.. சின்ன பசங்க சண்டை. பேசி தீர்க்கலாம்” என்று கல்யாணி தடுத்தார்.

“அம்ரிதா.. இங்க வா” என்று கூப்பிட்டதும் வேகமாக அருகில் வந்தாள்.

“ஏன் இப்படி பண்ண? இவன் உன்ன என்ன பண்ணான்?”

“அத்த.. நான் எதுவுமே பண்ணல அத்த.. இவன் தான் செந்தில் சார திட்டிட்டே இருக்கான். அவரு பாவம்ல. வயசுல பெரியவங்கள திட்ட கூடாதுல. அதான் ஏன் திட்டுற உனக்கு அறிவு இல்லையானு கேட்டேன்”

அம்ரிதா முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கையை ஆட்டி பேசும் போது வலியை மறந்து அர்ஜுனுக்கு புன்னகை வந்தது.

‘என்னமா விளக்கம் சொல்லுறா!’ என்று ஆச்சரியபட்டுக் கொண்டான்.

“அறிவு இல்லையானு கேட்டியா? அது சரி.. அதுக்கு இவன் என்ன சொன்னான்?”

“அவரு என் அப்பா அப்படி தான் திட்டுவேன்னு சொல்லுறான். அப்பாவ போய் யாராவது திட்டுவாங்களா? அப்பறம் என்ன முருங்கைக்காய்னு சொல்லி சடைய பிடிச்சு இழுத்துட்டான். அதான் கல் எடுத்து எறிஞ்சுட்டேன்”

கல்யாணி தன் மகனை பார்த்தார்.

“இப்படி தான் சின்ன பிள்ள சடைய பிடிச்சு இழுக்குறதா?” என்று அதட்ட அர்ஜுன் அம்ரிதாவை மட்டுமே பார்வை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அவ டா சொன்னத மட்டும் விட்டுட்டா பாரேன். உனக்கு ஒரு நாள் இருக்குடி’ என்று அவன் நினைத்ததை அம்ரிதா அறியவில்லை.

“அதுக்காக கல்ல எடுத்து எறியுறதா? கண்ணுல பட்டுருந்தா என்ன ஆகுறது? மன்னிப்பு கேளு முதல்ல” என்று அன்பரசி அதட்ட “போ மா” என்று அங்கிருந்து ஓடி விட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ஜுன் வாய் திறந்து பேசவில்லை. சும்மாவே அதிகம் பேச மாட்டான். வாயில் இருந்த காயம் மொத்தமாக அமைதியாக்கி விட்டது.

காயம் முழுவதுமாக ஆறவில்லை என்றாலும் பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. அர்ஜுனும் பள்ளி சென்று விட்டு வந்தான். அம்ரிதா தெருவில் மற்ற பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க அர்ஜுன் அவளை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.

உடைமாற்றி விட்டு வந்து வாசலில் அமர அம்ரிதா அவனை கவனித்தாள். ஆனாலும் அவனை விட விளையாட்டு முக்கியமாக இருந்தது.

மணி ஆறைக் கடந்ததும் எல்லோரும் வீட்டுக்கு சென்று விட அம்ரிதாவை அழைத்தான்.

“ஓய்.. கொலைகாரி.. இங்க வா” என்று அழைக்க “நான் ஒன்னும் கொலை காரி இல்ல” என்று கத்தினாள். அர்ஜுன் எழுந்து சென்று அவளது கையை பிடித்துக் கொண்டான்.

“கைய விடு” என்று அவள் விடுவிக்கப்போராட “சாரி சொல்லு விடுறேன்” என்றான்.

“சாரியா?”

“ஆமா மன்னிப்பு கேட்டா விட்ரேன்”

“அதெல்லாம் கேட்க முடியாது விடு”

“சொல்லாம விட மாட்டேன்”

அம்ரிதா அவன் கையை கடிக்கப்போக வேகமாக விட்டு விட்டான்.

“பிச்சுடுவேன்” என்று அம்ரிதா விரல் நீட்டி மிரட்ட மீண்டும் கையை பிடித்துக் கொண்டான். திரும்ப கடிக்கப் போக மற்றொரு கையால் அவள் தலையை பிடித்துக் கொண்டான்.

“விடுடா..” என்று அம்ரிதா இருந்த இடத்திலேயே குதிக்க “சாரி சொல்லு” என்றான்.

“மாட்டேன்..”

“நானும் விட மாட்டேன்”

சில நிமிடங்கள் போராடியவள் அதற்கு மேல் முடியாமல் ஓய்ந்து போனாள்.

“நான் சாரி சொல்லுறேன். விடு”

“நீ சொல்லு விடுறேன்”

“நான் சாரி சொல்லனும்னா நீயும் செந்தில் சார் கிட்ட சாரி சொல்லு”

“அவர் என் அப்பா. நான் எப்ப வேணா சொல்லிக்குவேன். உனக்கு நான் யாரு?”

“நீ எனக்கு சித்தப்பா.. நானும் எப்ப வேணா சொல்லிக்குவேன்”

‘சித்தப்பாவா?’ என்று அதிர்ந்தது என்னவோ அர்ஜுன் தான்.

“அடிங்க.. கொலை காரி”

“நான் யார கொலை பண்ணேன்?”

“என்ன‌ கொல்ல பார்த்தியே”

“அய்ய… கொலை எல்லாம் கத்தியால குத்தனும் இல்லனா துப்பாக்கில சுடனும். படமெல்லாம் பார்த்தது இல்லையா நீ?”

“ஓஹோ… நான் பார்த்தது இல்ல. இப்ப சாரி சொல்லல என்ன‌ கொல்ல பார்த்தனு போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன். அவங்க உன்ன‌ பிடிச்சுட்டு போய் அடிப்பாங்க”

“நான் நம்ப மாட்டேன்.”

“ஏன்?”

“போலீஸ் தப்பு பண்ணா தான் பிடிக்கும். நான் தப்பே பண்ணல. சினிமா படத்துல எல்லாமே இப்படி தான் வரும்”

“சரியான சினிமா பைத்தியம்” என்று முணுமுணுத்தவன் “இப்ப சொல்ல முடியுமா முடியாதா?” என்று கேட்டான்.

“நீ உன் அப்பா காட்ட சாரி சொல்லு… நான் என் சித்தப்பா கிட்ட சாரி சொல்லுறேன்”

“திமிரு… சித்தப்பானே முடிவு பண்ணிட்டியா… சரி நான் அப்பா கிட்ட சாரி சொல்லுறேன். நீயும் சொல்லு” என்று வீட்டுக்குள் இழுத்துச் சென்றான்.

மீண்டும் படப்பிடிப்புக்காக கிளம்பிக் கொண்டிருந்த செந்தில் குமாரை நிறுத்தினான். அம்ரிதாவை ஒரு முறை பார்த்து விட்டு “சாரி பா.. நான் பேசுனதுக்கு” என்றான்.

“அட.. என்னபா திடீர்னு சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு. எதோ கோபத்துல தான பேசுன” என்றார் செந்தில் குமார்.

உடனே அம்ரிதாவின் பக்கம் திரும்பினான்.

“நானும் சாரி சித்தப்பா.. கல் எறிஞ்சதுக்கு”

முகத்தை போனால் போகிறது என்பது போல் வைத்துக் கொண்டு அம்ரிதா கூற “அடிங்க” என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

“ஆஆஆ…. “என்று கத்திக் கொண்டே அம்ரிதா அங்கிருந்து ஓடி விட அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது. அவனது சிரித்த முகத்தை பார்த்து விட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட அதை கவனிக்காமல் சென்று விட்டான்.

*.*.*.*.

அடுத்த நாள் தூக்கம் வராமல் அர்ஜுன் இரவு வெளியே வந்தான். அது ஒரு கிராமம். இரவு பத்து மணிக்கே நல்லிரவு போல் ஊர் மொத்தமும் அமைதியாகி விடும்.

அர்ஜுன் பத்தரை மணிக்கு வெளியே வந்து அமர்ந்தான். தெருவில் யாருமே இல்லாத அமைதியும் குளிர் காற்றும் அவனுக்கு பிடித்து இருந்தது.

சுற்றியும் பார்த்துக் கொண்டே வந்தவன் அம்ரிதாவின் வீட்டில் எதோ அமர்ந்து இருப்பது தெரிய பயந்து விட்டான்.

அடித்து பிடித்து எழுந்து பார்க்க யாரோ அங்கு அமர்ந்து இருப்பது போல் தோன்றியது.

ஊருக்குள் சுற்றும் பேய் கதையெல்லாம் ஞாபகம் வந்து விட எச்சிலை விழுங்கினான்.

உள்ளே ஓடி விடுவதா அல்லது அங்கு சென்று யாரென்று பார்ப்பதா என்று மனதில் பட்டிமன்றம் நடந்தது.

உள்ளே ஓடி விடு என்று கூறிய மனதை தைரிய படுத்தி ஒரு அடி எடுத்து வைக்க அந்த உருவம் அசைந்தது. அப்படியே அசையாமல் நின்று விட்டான்.

அந்நேரம் தெருவிளக்கு அம்ரிதாவின் முகத்தில் பட அவன் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை. கூடவே தன்னை பயமுறுத்தி விட்டாளே என்ற கோபம்.

“இவள… நடுராத்திரில வாசல்ல உட்கார்ந்து பயமுறுத்திட்டா இருக்க” என்று வேகமாக இறங்கி அவள் வீட்டின் அருகே சென்றான்.

அவன்‌ வருவதை கவனிக்காமல் அம்ரிதா படித்துக் கொண்டிருந்தாள். அருகில் சத்தமில்லாமல் வந்தவன் “பே” என்று கத்தி விட அம்ரிதா பயந்து கத்த ஆரம்பித்து விட்டாள்.

“ஹா ஹா…” என்று அர்ஜுன் சிரிக்க அம்ரிதா பயந்து போய் நன்றாக பார்த்தாள். அர்ஜுனின் முகம் தெரிந்த பின்பே அவளுக்கு பயம் விலகியது.

கையிலிருந்த புத்தகத்தை ஓங்கி விட அர்ஜுன் கையை பிடித்துக் கொண்டான்.

“அடிச்ச.. பிச்சுடுவேன். இந்நேரத்துல இங்க உட்கார்ந்து என்ன பண்ணுற?”

அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் திரும்பவும் படிக்க அமர்ந்து விட்டாள்.

“என்ன படிக்குற?” என்று புத்தகத்தை வாங்க பார்க்க கையை தட்டி விட்டாள். அவளை பயமுறுத்தி விட்டதில் அவ்வளவு கோபம். முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு படித்தாள்.

அவள் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பறித்து பெயரை படித்தான்.

“ஏய்.. கொடு..”

“ஓ.. கதை புக்கா”

“ப்ச்ச்.. கொடுடா”

“முடியாது… உன் பேர சொல்லு தரேன்”

அவனிடம் பேசாமல் புத்தகத்தை வாங்க பார்க்க அவன் உயரமாக தூக்கிப்பிடித்துக் கொண்டான்.

“கொடுக்க போறியா இல்லையா?”

“நீ பேர சொல்லு தரேன்”

“அம்ரிதா.. இப்ப கொடு” என்று கேட்டதும் உடனே கொடுத்து விட்டான்.

அவனை பிடித்து ஓரமாக தள்ளி விட்டு விட்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

“கதை படிக்குறதுல அவ்வளவு ஆர்வமா?” என்று‌ கேட்டவன் அவளருகே அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். சில பக்கங்களிலேயே அவனுக்கு பயம் வந்துவிட வேகமாக படிப்பதை நிறுத்தி விட்டான்.

“ஏய்..‌ பேய் கதையா இது?” என்று கேட்க “உஸ்ஸ்…” என்றாள்.

அதன்‌ பிறகு அர்ஜுனை கவனிக்கவே இல்லை. அர்ஜுனுக்கு பேய் கதை படித்ததில் சுற்றி எதை பார்த்தாலும் பயமாக இருந்தது. எழுந்து சென்று விடலாமா என்று யோசித்தவன் அம்ரிதாவை பார்த்தான். மமளமளவென வாசித்துக் கொண்டிருந்தாள்.

அவளது வாசிப்பின் வேகம் அவனை ஆச்சரியபடுத்தியது. வாசித்து முடிக்கும் வரை இருக்கலாம் என்று முடிவு செய்தான். சிறு பெண் அவளே தைரியமாக இருக்கும் போது தான் ஓடக்கூடாது என்று முடிவு செய்தான்.

பத்து நிமிடத்திற்கு பிறகு அம்ரிதாவிற்கு கொட்டாவி வந்துவிட புத்தகத்தை மூடி விட்டாள்.

“பேய் கதையா இது?”

“ஆமா..”

“இந்நேரத்துல வாசல்ல உட்கார்ந்து படிச்சுட்டு இருக்க”

“ஏன்னா காலையில அம்மா படிக்க விட மாட்டாங்க. பாடம் படிச்சுட்டு தான் இத எடுக்கனும்னு சொல்லுவாங்க”

“எத்தனாவது படிக்கிற நீ?”

“ஆறு”

“இந்த வயசுல உனக்கு பேய் கதை கேட்குது? ஆமா புக் எங்க இருந்து எடுத்த?”

“ஸ்கூல்க்கு பின்னாடி ஒரு லைப்ரரி இருக்கு. அங்க இருக்க அக்கா என் ஃப்ரண்ட். அவங்க கிட்ட கேட்டுட்டு வாங்கிட்டு வந்தேன்.”

“பேய் கதை படிக்கிறியே பயமா இல்ல?”

“பேய் எல்லாம் சும்மா. வெறும் கதை தான். ஆனா அதுல நிறைய ஆர்வம் இருக்குமா.. அதுனால எனக்கு பிடிக்கும்”

“ம்ம்ம்.. நல்லா வருவ”

“எனக்கு தூக்கம் வருது.. டாடா” என்று உள்ளே ஓடி விட்டாள்.

அர்ஜுனுக்கு அவளை என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேய் கதையை படித்து விட்டு தூக்கம் எப்படி வரும்? அவள் போன திசையை ஆச்சரியமாக பார்த்து விட்டு வீட்டுக்கு வர அவனை தேடி கல்யாணி வந்து விட்டார்.

“இந்நேரத்துல எங்க போன?”

“பேய் படிக்க”

“என்னது பேய் புடிக்கவா?”

“ஆமா ஆமா.. “

“டேய்.. என்ன விளையாட்டு இது”

“ம்மா.. எங்கயும் போகலமா.. அந்த பக்கத்து வீட்டு பொண்ணு எதோ கதை படிச்சுட்டு இருந்தா. அத நான் வேடிக்கை பார்த்தேன்”

கல்யாணி ஆச்சரியமாக பார்க்க அர்ஜுன் அறைக்குச் சென்று விட்டான்.

*.*.*.*.*.*.

வார‌ விடுமுறை என்று தெருவில் இருக்கும் அத்தனை குழந்தைகளும் விளையாட ஆரம்பித்து விட்டனர். அதில் அம்ரிதாவும் மஞ்சுளாவும் அடக்கம்.

“ஏய் கொலை காரி” என்று அர்ஜுன் கூப்பிட திரும்பி முறைத்து பார்த்தாள்.

“உன்ன தான் இங்க வா”

“யாரு அது?” என்று மஞ்சுளா கேட்க “அவன் அந்த வீட்டுல இருக்கவன்” என்றாள்.

மஞ்சுளாவிற்கு சொந்த ஊரே இது தான். அம்ரிதாவும் மஞ்சுளாவும் பள்ளியில் தோழமை கொண்டு விட்டனர்.

விடுமுறையில் விளையாடலாம் என்று அம்ரிதா தான் மஞ்சுளாவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்.

“இப்ப வரப்போறியா இல்லையா?” என்று அர்ஜுன் அதட்ட கோபமாக வந்து நின்றாள்.

அவளோடு மஞ்சுளாவும் வந்து நின்றாள்.

“இது யாரு கொலை காரி‌… உன் ஃப்ரண்டா?”

“என் பேரு ஒன்னும் கொலைகாரி இல்ல… அம்ரிதா.. அம்முரு”

“ஓ.. ரெண்டு பேரா?”

“ஒன்னு தான்”

“அதென்னா அம்மு…ரு அம்முனு மட்டும் கூப்பிட்டா பத்தாதா?”

“நான் என்ன குட்டி பாப்பாவா? அம்மு குட்டி பொம்மு குட்டினு சொல்ல?”

“அப்போ அம்மு குட்டி பொம்மு குட்டினு சொன்னா உனக்கு பிடிக்காது?”

முகத்தை சுருக்கிக் கொண்டு வேகமாக தலையாட்டினாள்.

“அப்போ இனி நீ அம்மு தான். நான் அப்படி தான் கூப்பிடுவேன்.”

“நான் திரும்ப மாட்டேன்”

“அதையும் பார்க்கலாம்”

அம்ரிதா முறைத்து விட்டு நடக்க “ஏய் அம்மு” என்று கூப்பிட்டான்.

அவளது காதில் அம்ரு என்று அழைத்தது போல் விழ வேகமாக திரும்பி விட்டாள்.

“ஹா.. ஹா.. திரும்பிட்ட பார்த்தியா” என்றதும் அம்ரிதாவிற்கு கோபம் கோபமாக வந்தது.

“ஆஆஆ… போடா” என்று கத்தி விட்டு அவள் ஓட அர்ஜுன் சிரித்து விட்டான். பல நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தான்.

மஞ்சுளா இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அம்ரிதா ஓடிய பக்கம் போக “ஏய்.. நில்லு.. உன் பேரு என்ன?” என்று கேட்டான்.

“மஞ்சுளா”

“அவ உனக்கு ஃப்ரண்டா?”

“ஆமா.. உனக்கு இல்லையா?”

“எனக்கும் ஃப்ரண்ட் தான். ஆனா பார்த்து பத்திரமா இரு.. அவ கொலைகாரி”

“இல்ல அம்ரிதா நல்ல பொண்ணு”

“சப்போர்ட்டு?”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அம்ரிதா மீண்டும் ஓடி வந்தாள்.

“மஞ்சு.. இவன் கூட பேசாத.. திட்டிட்டே இருப்பான்..” என்றவள் “இவ என் ஃப்ரண்ட்.. உனக்கு என்ன பேச்சு?” என்று கேட்டாள்.

“உன் ஃப்ரண்ட நீயே வச்சுக்க”

“பின்ன உனக்கா தருவேன். உனக்கு தான் ஒரு ஃப்ரண்டும் இல்லையே”

“அப்படினு யாரு சொன்னா? எனக்கு ஃப்ரண்ட் இருக்கான்.”

“நம்ப மாட்டேன்”

“அவன வரச்சொல்லட்டா?”

“வரச்சொல்லு”

உடனே கிளம்பிய அர்ஜுன் பக்கத்து தெருவில் இருந்த லெனினை அழைத்து வந்தான்.

லெனின் அவனாகவே அர்ஜுனிடம் தோழமையை ஏற்படுத்திக் கொண்டான். அர்ஜுன் பள்ளியில் எல்லோரிடமும் ஒதுங்கி இருக்க அவனது வாய் காயத்தை பார்த்து விட்டு லெனின் என்னவென்று விசாரித்தான்.

அர்ஜுன் பதில் சொல்லவில்லை என்றாலும் லெனின் அவனது முயற்சியை விடவில்லை. சீக்கிரத்தில் அர்ஜுனின் நட்பை சம்பாதித்து விட்டான். அவனை தான் அர்ஜுன் சைக்கிளில் அழைத்து வந்தான்.

“ஐ.. லெனின் அண்ணா” என்று மஞ்சுளா கூற “உன் அண்ணனா?” என்று அம்ரிதா கேட்டாள்.

“இல்ல.. ஆனா.. சுத்தி வளைச்சு அண்ணன் தான்”

“அப்ப சுத்தி வளைக்கலனா தம்பியா?”

அம்ரிதா கேட்ட கேள்வியில் மஞ்சுளா முழிக்க அர்ஜுன் அவளது சடையை பிடித்து இழுத்தான்.

“உன் வாயாடி வேலைய இந்த பச்ச பிள்ளை கிட்டயும் காட்டாத” என்று கூற “முடிய விடுடா” என்று கத்தினாள்.

உடனே அவனும் விட்டு விட்டு “இவன் தான் என் ஃப்ரண்ட். லெனின்”

“லெனின்..”

“ஓய்.. என்ன பேர சொல்லுற? பெரிய பையன் அவன்”

“நான் அப்படி தான் சொல்லுவேன்.. ஆமா உன் பேரு அர்ஜுனா தான?”

“அர்ஜுனா இல்ல அர்ஜுன்”

“இல்ல.. எங்கம்மா பயம் வந்தா அர்ஜுனா அர்ஜுனானு சொல்ல சொல்லுவாங்க. அந்த பேரு தான் உனக்கும். எனக்கு தெரியும்”

“அது இல்ல என் பேரு”

“ஆமா.. அர்ஜுனா”

“அம்மு”

“அர்ஜுனா”

“அம்மு”

“அர்ஜுனா”

இருவரும் மாற்றி மாற்றி கத்த லெனினும் மஞ்சுளாவும் முழித்தனர். கடைசியில் லெனின் இடையில் புகுந்தான்.

“விளையாடலாம்னு தான கூட்டிட்டு வந்த.. சண்டை போடாதீங்க. வாங்க எதாவது விளையாடலாம்” என்று கூற அவன் தயவால் தற்காலிகமாக இருவரின் சண்டையும் ஓய்ந்தது.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Meenakshi Subburaman

      💞அட பக்கிங்களா முதல் அறிமுகத்தில் ஆரம்பித்த சண்டை இன்றளவும் தொடருதா டா , நல்லா வயுவீங்க டா நீங்க

      💞 மோதல் மோதல் மோதல் அது ஆனதே காதல் காதல் காதல் 😜😜😜😜

      😜👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி

    2. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.