Loading

நாள் 5

அலாதியான

அல்லல்கள் கூட 

சில சமயங்களில்

வேண்டப்படுகின்ற 

ஊக்கமருந்தாகின்றது.

வீட்டிற்கு நடந்தே வந்த ஷாத்விக்கின் சட்டை வியர்வையில் மொத்தமாக நனைந்திருந்தது. 

வியர்வையில் முழுதாய் குளித்து வீட்டிற்குள் நுழைந்தவனை பார்த்த இந்திராணி

“வெளியில மழை பெய்யிதாடா?”என்று கேட்க தன்னை மேலும் கீழும் பார்த்த ஷாத்விக்கோ தன் தாயை முறைத்தான்.

“என்னைப்பார்த்தா உன் புருஷன்ல இருந்து அத்தனை பேருக்கும் நக்கலா தெரியிதுல்ல?” என்று கேட்க 

“டேய் எதுக்குடா கோபப்படுற? தொப்பலா நனைஞ்சிருக்கியேனு கேட்டேன்.”என்று இந்திராணி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க

“நானே வெயில்ல வத்தலாகி வந்திருக்கேன். ஏதாவது கேட்டு வாங்கி கட்டிக்காத”என்று தன் அன்னையை கடிந்துகொண்டு நேரே துணியை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான் ஷாத்விக்.

அரைமணிநேர குளியலுக்கு பின் வெளியே வந்தவன் தன் அன்னையை தேடிக்கொண்டு சமையலறைக்கு சென்றான்.

அங்கே அவனது அன்னை தோசை சுட்டுக்கொண்டிருக்க திட்டின் மேல் அமர்ந்தவன் 

“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்றபடியே பார்வையை சுற்றி மேய விட

“புதினா சட்னி அரைச்சிருக்கேன்டா.”என்று இந்திராணி கூற

“தோசை ஸ்பெஷல்?”என்று ஷாத்விக் கேட்க

“முட்டை தோசை, பொடி தோசை, மசாலா தோசை” என்று கூற 

“ம்ம்ம்… மெனு இன்னைக்கு அசத்தலா இருக்கே… ஆமா நம்ம வீட்டு லியோனி எங்க ஆளையே காணோம்?” என்று இந்திராணி கொடுத்த தட்டை கையில் வாங்கிக்கொண்டு ஷாத்விக் கேட்க

“அவரு இன்னும் வரல. ஆமா எதுக்கு இப்போ சாதம் வேணாம். தோசை வேணும்னு சொன்ன?” என்று இந்திராணி கேட்க

“நைட்டுக்கு பிரியாணி சொல்லியிருக்கேன்.” என்று சொல்ல இந்திராணியின் வாயோ ஆவென்று பிளந்தது.

“நெசமாவாடா?”என்று ஆவலுடன் கேட்க அவரை கேலி செய்யும் நோக்குடன்

“இப்போ நான் ஆமானு சொல்லனுமா இல்லைனு சொல்லனுமா?”என்று கேட்க

“வர வர உன் சேட்டை ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு டா.”என்றவர் திருப்பிக்கொள்ள

“அது எப்படி இந்திரா பிரியாணினா மட்டும் இப்படி வாய பொழக்குற?”என்று தன் அன்னையிடம் ஷாத்விக் தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்க

“இந்த பிரியாணி ஒன்னை தவிர மத்த எல்லாத்தையும் சமைச்சிடுவேன்டா. ஆனா எனக்கு புடிச்ச இந்த பிரியாணிக்கு மட்டும் கைபக்குவம் வரவே மாட்டேங்குதுடா.”என்று இந்திராணி சோகமாக சொல்ல

“ஆமால்ல நீ இதுவரைக்கும் பிரியாணி செஞ்சு நான் பார்த்ததே இல்ல. நம்ம வீட்டு தலைக்கு கூடாதுனு நீ சமைக்கலையோனு நினைச்சேன். ஆனா உனக்கு சமைக்க தெரியாதுங்கிறது தான் விஷயமா?”என்றவனிடம்

“ஆமாடா. ஆமா என்ன பிரியாணி சொல்லியிருக்க? சிக்கனா மட்டனா?” என்று இந்திராணி கேட்க

“இன்னைக்கு சிக்கன் பிரியாணி தான் சொல்லியிருக்கேன். இன்னொரு நாள் மட்டனுக்கு சொல்லுறேன்.”என்று ஷாத்விக் கூற சிறு பிள்ளை போல் குதூகலமானார் இந்திராணி.

அவனுக்கு தோசையை சுட்டு அடுக்கியபடியே இரவு சாப்பிடப்போகும் பிரியாணியின் சுவை பற்றி அவர் பேசிக்கொண்டே போக ஷாத்விக்கோ அதனை கேட்டபடியே உணவை முடித்தவன் கைகழுவி வந்தான்.

சாப்பிட்டு முடிந்ததும்

“என்னோட கபோர்ட்டுல இரண்டாவது தட்டுல பச்சை கலர் சட்டைக்கு கீழ பணம் வச்சிருக்கேன்.” என்று ஷாத்விக் கூற

“ஏன்டா கோடி கோடியா சம்பாதிக்கலைனாலும் நீயும் சம்பாதிக்கிற தானே? இத உங்க அப்பா கையில கொடுத்தா கரிச்சு கொட்டுறதையாவது நிறுத்துவாருல்ல?”என்று இந்திராணி ஆற்றாமையுடன் கேட்க

“நான் எதுக்கு சொல்லனும்? நான் சொன்னதையெல்லாம் அவரு காது கொடுத்து கேட்டாரா? இப்போ எதுக்கு சொல்லனும்?” என்று ஷாத்விக் கேட்க

“அது உன் மேல இருந்த அக்கறையில தான் அவரு ஏதேதோ பேசிட்டாரு. அதையே மனசுல வச்சிட்டு இப்படி பேசிட்டு இருந்தா எப்படிடா?”என்று இந்திராணியும் தன் மகனை சரிகட்ட பார்க்க

“பெத்ததுக்காக அக்கறை மட்டும் இருந்தா போதாது. நம்பிக்கையும் வேணும்.”என்று ஷாத்விக் தன் எதிர்பார்ப்பை கூற

“அந்த மனுஷனுக்கு தான் அது புரிஞ்சி தொலையமாட்டேங்கிதே. இவரை இப்படியே விட்டா உன் வாழ்க்கையில கல்யாணம் காட்சிங்கிறதையே இல்லைனு செஞ்சிடுவாரு போல.” என்று இந்திராணியும் தன் மனவருத்தத்தை கூற ஷாத்விக் இப்போது இந்திராணியை சந்தேகமாக பார்த்தான்.

“தரகர் வந்தாரா?”என்று சாதாரணமாக கேட்பது போல் ஷாத்விக்கும் கேட்க

“அவரு தான் இனி இந்த ஜென்மத்துக்கு இந்த பக்கமே தலை வச்சி பார்க்கமாட்டேனு தலைதெறிக்க ஓடிட்டாரே.”என்று கடந்த கால சம்பவத்தை நினைத்து இந்திராணி கூற

“அப்போ நான் வீட்டுல இல்லாதப்போ என்ன நடந்துச்சு?” என்று கேட்க அமராவதி அழைத்ததிலிருந்து அனைத்தையும் இந்திராணி கூறினார்.

அதை கேட்டவனது முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போலானது.

” உன் வீட்டுக்காரர் இதுவரைக்கும் என்னென்னமோ செய்திருக்காரு. ஆனா இன்னைக்கு தான் தரமான ஒரு சம்பவம் செஞ்சிருக்காரு.” என்று ஷாத்விக் மகிழ்ச்சியுடன் கூற இந்திராணியோ அவனை புரியாமல் பார்த்தார்.

“என்னடா சொல்லுற?”என்று அவர் கேட்க

“அந்த லேடி கேங்கஸ்ட்டாரை கட்டிக்கிட்டு தெனமும் அடிவாங்க சொல்லுறியா?” என்று ஷாத்விக் கேட்க இந்திராணிக்கோ எதுவும் புரியவில்லை.

அவரின் குழப்பத்தை புரிந்துகொண்ட ஷாத்விக்

“சமுத்ராவுக்கு இந்த ஊரு வச்ச பேரு அது.”என்று கூற தன் கையிலிருந்த கரண்டியால் ஷாத்விக்கிற்கு ஒரு அடி வைத்தார் இந்திராணி.

“என்னடா ஒரு பொம்பளபுள்ளையை பத்தி இப்படி பேசுற? அவ இந்த வீட்டு மருமக ஞாபகம் வச்சுக்கோ.”என்று இந்திராணி கண்டிக்க

“அதுக்கு எதுக்கு என்ன அடிக்கிற? நான் உண்மைய தானே சொன்னேன். ஊருல உள்ள அத்தனை பேரையும் அந்த பொரட்டு பொரட்டுனா வேற எப்படி சொல்லுவாங்க? ஒன்னா இரண்டா… மொத்த ஊரும்ல அவகிட்ட அடிவாங்கியிருக்கு.” என்று ஷாத்விக் கூற

“அன்னைக்கு நீங்க அடிச்ச கூத்துக்கு கை காலை உடைக்காமல் விட்டாளேனு சந்தோஷப்படு.”என்று இந்திராணியும் தன் பங்கிற்கு எச்சரிக்க 

“ஒரு பொம்பளப்பிள்ளைங்கிற நெனப்பு வேணாம்?”என்று ஷாத்விக் தன் பக்கமே நியாயம் என்பதுபோல் பேச

“அது நீங்க ஆம்பிளைங்கங்கிற நெனப்போட நடந்துக்கிறதை பொறுத்து.”என்று இந்திராணி அவன் அடுத்து பேச முடியாதபடி பதிலொன்றை சொல்ல

“இப்படியே நீயும் உன் வீட்டுக்காரரும் அந்த லேடி கேங்க்ஸ்டாருக்கு கேங்க் அமைச்சு கொடுத்து ஊருல உள்ள அப்பாவி பசங்க எல்லாரையும் அடிவாங்க வைக்கிறீங்க.”என்று ஷாத்விக் முறுக்கிக்கொள்ள

“அவ ஆலமரம் மாதிரி ஆணிவேரை உறுதியாக நிலத்துல பதிச்சு ஊருக்கு முன்னாடி இவ்வளவு கம்பீரமாக நிற்கிறா. அதுக்கு அவ வாங்குன அவமானம் கொஞ்ச நஞ்சமில்லை‌‌. அந்த தைரியம் தான் அவளோட இந்த நிமிர்வுக்கு காரணம். அதுனால தான் உங்க அப்பா அவ விஷயம்னு வரும் போது ரொம்ப கவலைப்படுறாரு.” என்று இந்திராணி யதார்த்தத்தை சொல்ல 

“போதும் போதும் அவ புராணம் பாடுனது‌. என்னை அவ துரத்தி துரத்தி அடிக்கும் போது நீயும் கைதட்டி சிரிச்சிட்டு தானே இருந்த. ஒருநாள் அவ விஸ்வரூபம் தெரியும் போது தான் உனக்கு அவளை பத்தி முழுசா தெரியும்.” என்று ஷாத்விக் மீண்டும் எச்சரிக்க

“சும்மா ஏதாவது பேசிட்டு இருக்காமல் ஏதாவது வேலை இருந்தா போய் பாரு‌.”என்று கூறிய இந்திராணி தன் வேலைகளை கவனிக்க ஷாத்விக்கும் வெளியே செல்வதாக கூறி தன் நண்பர்களை பார்க்க சென்றான்.

வீட்டிலிருந்து கிளம்பி நேரே தன் உயிர்த்தோழனான சிவநேசனை பார்க்க அவனின் கடைக்கு வந்தான்.

மறுபுறம் சமுத்ராவோ தன் வேலையில் மூழ்கியிருக்க அவளது இன்டர்காம் ஒலிர்ந்தது.

அதை எடுத்து பேசியவளது முகமோ அதில் கேட்ட வார்த்தைகளால் கறுத்தது.

“உள்ள அனுப்புங்க.”என்று மட்டும் கூறியவளின் எண்ணங்களோ சில கசப்பான நினைவுகளை அந்த சில கணங்களில் அசைபோட்டு முடித்திருந்தது.

உள்ளே கதவை தட்டிக்கொண்டு அந்த நபர் வந்ததும்

“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?”என்று குரலில் கடுமையுடன் கேட்க

“வந்தவங்களை உட்காரச்சொல்லாமல் இப்படி நிற்க வச்சு கேட்கிறது தான் உங்க வீட்டு வழமையோ?”என்று உள்ளே வந்த அந்த நபர் கேட்க

“வந்த எல்லாரையும் உட்கார விட்டேன்னா தெரு நாய் கூட என்னோட கேபின்ல வந்து உட்கார்ந்துக்கும்.”என்ற சமுத்ராவின் வார்த்தைகளிலேயே அனல் தெறித்தது.

“நாய்க்கு அவசியம் இருந்தா அது உன் கேபின்ல வந்து உட்காருவதில் தப்பில்லையே”என்று அந்த நபரோ அவள் சொல்வதை தான் கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லையென்பதை போல் அவளெதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அந்த நபரின் செயல் சமுத்ராவின் பொறுமையை மேலும் சோதிக்க

“சீக்கிரம் விஷயத்தை சொல்லிட்டு கிளம்புனீங்கனா என்னோட வேலையை பார்க்க எனக்கு வசதிப்படும்.”என்று சமுத்ரா கூற அவளெதிரே இருந்த நபரோ கேலியாய் சிரித்தபடி

“எனக்கு வசதிப்படனும்னு தானே வேலை மெனக்கெட்டு இங்க வந்திருக்கேன். சரி நேரா விஷயத்துக்கே வரேன். என்ன முடிவு செய்திருக்கீங்க?”என்று அந்த நபர் கேட்க

“எதை பத்தி?”என்று சமுத்ராவும் எதுவும் அறியாதவளை போல் கேட்க அதற்கும் சிரித்த அந்த நபர்

“வேற எதை பத்தி கேட்க போறேன்? எல்லாம் அந்த சொத்து விஷயமா தான்.”என்று அந்த நபர் கேட்க

“அதான் கோர்ட்டுல கேஸ் போகுதே.” என்று சமுத்ராவும் சற்று ஆணவத்தொனியில் சொல்ல

“அதை பேசி முடிச்சுக்கலாமே.” என்று அந்த நபர் சொல்ல சமுத்ராவும் தானும் சளைத்தவலல்ல என்பதை போல்

“அதை கோர்ட்டு முடிவு பண்ணி எப்படி முடிக்கலாம்னு சொல்லட்டும்”என்று கூற

“இங்க பாரு சமுத்ரா நாங்க அமைதியாக இருக்கிறதால அடங்கிப்போறதாக அர்த்தமில்லை” என்று அந்த நபர் கூற

“அதையே தான் நானும் சொல்றேன். நானும் பொறுமையாக இருக்கிறது நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறதுக்கில்ல”என்று சமுத்ராவின் பேச்சிலும் சூடு பறக்க இப்போது எதிரிலிருந்த நபரின் பொறுமை முற்றாக பறந்தது.

“சின்னபொண்ணுனு பொறுமையாக பேசலாம்னு பார்த்தா திமிரெடுத்தா பேசுற நீ?” என்று அந்த நபர் கொதித்தெழ

“இந்த நீ வா போவெல்லாம் இங்க வேணாம். இப்போ நீங்க என் இடத்துல இருக்கீங்கனு மனசுல வச்சிட்டு பேசுங்க”என்றவளின் குரலில் அலாதியான மிரட்டல் குவிந்து கிடந்தது.

“கொஞ்சம் பணம் கையில நிறைஞ்சிடுச்சுனு ஆட்டம் போடுறீங்கல்ல… போடுங்க. கூடிய சீக்கிரம் உங்க ஆட்டத்துக்கெல்லாம் ஒரு முடிவு வரும். இதே வாய் எங்கிட்ட வந்து கெஞ்சிட்டு நிற்கும். அன்னைக்கு பார்த்துக்கிறேன் உன்னை.”என்று அந்த நபர் ஆக்ரோஷமாய் கர்ஜிக்க சமுத்ராவோ அதனை சட்டை செய்ததாய் தெரியவில்லை.

“பேசவேண்டியதை பேசி முடிச்சிட்டீங்கனா இடத்தை காலி செய்யலாம்”என்று சமுத்ரா அந்த நபரிடம் கதவை காட்ட கோபத்தின் உச்சியிலிருந்த அந்த நபர் தன் பாக்கெட்டிலிருந்த ஒரு பேப்பரை எடுத்து மேஜையில் வீசிவிட்டு அங்கிருந்து விருட்டென்று கிளம்பினார்.

அத்தனை நேரம் ஒருவித கடினத்தன்மையோடு அமர்ந்திருந்தவளின் உடல் இப்போது தளர்ந்திருந்தது‌.

அவள் அப்படியொரு நிலையில் தான் இருப்பாளென்று உணர்ந்தோ என்னவோ அவளிற்கு தேநீர் எடுத்து வந்தாள் இதயா.

அதனை நன்றியோடு பெற்றுக்கொண்ட சமுத்ரா அதனை அருந்தியதும் இதுவரை நேரம் இருந்த தலைவலி சற்று குறைந்ததை போல் உணர்ந்தாள்.

“மேடம் வேற ஏதாவது வேணுமா?”என்று இதயா கரிசனத்துடன் கேட்க

“இல்ல இதயா. நீங்க உங்க வேலையை கவனிங்க. தேங்க்ஸ் பார் தி காபி.”என்று நன்றி கூறி இதயாவை அனுப்பி வைத்தாள் சமுத்ரா.

ஏதோ யோசித்தவள் உடனே யாருக்கோ அழைத்தாள்.

மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டதும்

“அடுத்த ஹியரிங் எப்போ ?” என்று கேட்க மறுபுறமிருந்த உதயின் நண்பனான அமரோ

“நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன். வர்ற புதன்கிழமை அடுத்த ஹியரிங் இருக்கு. எப்படியும் கேஸ் நம்ம பக்கம் தான்.”என்று ஒரு வழக்கறிஞராய் அவருக்கு சாதகமாக பேச

“அமர் இந்த கேஸ் இன்னும் எக்டெண்ட் ஆக ஏதும் வாய்ப்பு இருக்கா?”என்று கேட்க

“ஏன் சமுத்ரா திடீர்னு இப்படி கேட்குறீங்க?”என்று அமர் குழப்பத்தோடு கேட்க

“அந்த பக்கம் ஏதோ குள்ளநரி திட்டம் நடக்குதோனு எனக்கு சந்தேகமாகவே இருக்கு.” என்று சமுத்ரா தன் சந்தேகத்தை கூற

“அப்படி இந்த கேஸ்ல ஏதாவது டுவிஸ்ட் நடக்கனும்னா ஒன்னு உங்க மாமா அந்த குடும்ப வாரிசில்லைனு எவிடன்ஸ் சப்மிட் பண்ணனும். இல்லைனா உங்க மாமா பொண்ணு அவரோட வாரிசில்லைனு சொல்லனும். இதை தவிர உங்க மாமாவுக்கு அந்த சொத்தில் எந்த உரிமையுமில்லைனு அவரே சைன் போட்டு கொடுத்து ரெஜிஸ்டர் செய்திருக்கனும்.”என்று அமர் கூற சமுத்ராவிற்கோ இது மூன்றும் நடக்க வாய்ப்பில்லாத போதிலும் மறுபுறம் ஏதாவது தகிடுதத்தம் செய்கின்றனரோ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

“நாம இந்த லூப்ஹோல்சை ஒருதடவை கன்போர்ம் செய்து கிட்டா என்ன?” என்று சமுத்ரா கேட்க

“ம்ம்ம் செய்திடலாம். நீங்க உங்க மாமா பொண்ணோட டி.என்.ஏ டெஸ்டுக்கு ரெடி பண்ணுங்க. மத்ததை நான் இன்வெஸ்டிகேட் பண்ணுறேன்.”என்று அமரும் உறுதி கூறிட மேலும் சிலவற்றை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் சமுத்ரா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
5
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்