
அத்தியாயம் 34
அடுத்த நாள் காலை, புதிய புத்தகத்தின் தொடக்கமாக, மெல்லிய மழைச்சாரலுடன் இனிதே புலர்ந்தது அஸ்வந் பார்கவிக்கு.
அறையில் கேட்ட தட்டுமுட்டு சத்தத்தில் தான் கண் விழித்தான் அஸ்வந். அந்த சத்தம் என்னவென்று அறிய நேரம் எடுக்கவில்லை. பார்கவி தான் அறையை தலைகீழாக திருப்பிப் போட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்து இருப்பாள் போலும். அவள் நெடிய கூந்தலில் நீர் துளிகள் ஒன்றும் இரண்டுமாக சொட்டிக் கொண்டிருந்தது.
புடவையை ப்ளீட்ஸ் எடுத்து பின் குத்தாமல், அள்ளி சுருட்டி போட்டிருந்தாள். நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருக்க, தலையில் இருந்த நீரினால் அது லேசாக கரைந்து, ஒற்றைக் கோடாக நெற்றியின் பாதி வரை இறங்கி இருந்தது.
காலை பொழுதின் ரம்யமும், கலைந்தும் கலையாத அவள் கோலமும், கொண்டவனை சும்மா இருக்க விடுமா என்ன.
எழுந்து அமர்ந்து கைகள் இரண்டையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவன், “அடியே பொண்டாட்டி!, எத காணோம்னு இந்த தேடு தேடுற…” என்று கேட்க
சோஃபாவை மல்லுக்கட்டி நகர்த்திக் கொண்டிருந்தவள் “அதெல்லாம் சொல்ல முடியாது..நீ முதல்ல எந்திருச்சு அறைய விட்டு போ.. நான் தேடணும்…” என்று சொல்ல
“என்னனு சொன்னா நானும் தேடுவேன் இல்ல…” என்று அவன் கேட்க
சோஃபாவிற்கு அடியிலும் இருக்குமோ என்று தேடிக் கொண்டிருந்தவள், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “தொலைச்ச நான் தான் தேடணும்.. டேபிள்ல உனக்கு காஃபி வச்சிருக்கேன் பாரு.. எடுத்துட்டு அறைய காலி பண்ணு…” என்று சொல்ல
மேஜையை பார்த்தான், சிறிது மணி நேரம் சூடு தாங்க கூடிய வெக்யூம் இன்சுலேட்டெட் கப்பில் காஃபி மூடி வைக்கப்பட்டிருந்தது.
“ஏய் என்னடி ஆச்சு உனக்கு.. கேட்டாலே உடனே காஃபி கிடைக்காது.. இன்னைக்கு கண் முழிக்க முன்னாடியே போட்டு வச்சிருக்க…” என்று கேட்க
“அதெல்லாம் அப்படித்தான்..நை நைங்காம உன் வேலையை பாரு…” என்றவள், கண்ணாடி மேஜையை நகர்த்தி அதன்பின் பார்த்துவிட்டு திரும்ப,
அவளை உரசி விடும் தூரத்தில் அஸ்வந். பார்கவியின் இதயம் தாளம் தப்பி துடிக்க, உடலில் சிறிய நடுக்கம் பிறக்க, அவன் விழிகளை பார்த்தாள்.
அதிலோ அவளை ஒட்டுமொத்தமாக வீழ்த்தக்கூடிய காதலும், மோகமும் ஒழுங்கே சேர்ந்து, காந்தம் என அவளை கட்டி இழுக்க.
உதடு கடந்து வரமாட்டேன் என்ற வார்த்தைகளை வற்புறுத்தி இழுத்து மெதுவாக “என்ன…” என்றாள்.
அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் பார்வை அவளிலேயே மையலாக படிந்திருந்தது.
கை இரண்டையும் அவன் மேலே தூக்க, என்ன செய்யப் போகின்றான் என்று கண்களை விரித்து, அவன் கைகளை அவள் உற்றுப் பார்க்க, இதயமோ தொண்டைக் குழியில் வந்து துடித்தது.
அஸ்வந்தோ கைகளை அவள் தோளில் வைத்து கண்ணாடியில் அவள் விம்பம் தெரியும் வண்ணம் திருப்பினான்.
அந்த கண்ணாடியில் அவளுடன் அவனும். இருவரின் ஜோடி பொருத்தத்தை கூற வார்த்தைகள் தேட வேண்டும். அத்தனை இயல்பான, இணக்கமான, இளம் ஜோடிகள்.
கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை அஸ்வந் ஆழ்ந்து பார்க்க,
எங்கே என்றே தெரியாமல் பார்கவியின் உடலினுள் மென் மலர் மொட்டுக்கள் வெடித்துப் பூக்க, உடலில் கொஞ்சம் கொஞ்சமாக நாணச் சிவப்பு ஏறியது.
அவள் தோளில் இருந்த ஒற்றை கையை அவள் நெற்றியின் அருகே கொண்டு சென்று, கலைந்து இருந்த நெற்றி வகுட்டு குங்குமத்தை அழுத்தி துடைக்க,
பார்கவி உடல் சிலிர்க்க, கால் விரல்களை நிலத்தில் ஊன்றி, கைகளை இருக பொத்திக் கொண்டாள்.
அவள் பின் உடலில் பட்டும் படாமலும் அவன் நெருங்கி நின்று இருக்க, அவன் சூடான மூச்சுக்காற்று அவள் வெற்றுத் தோளில் மோத,
பெண்ணவளின் தகிப்பு குறைய வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை அவள் குளிக்க வேண்டும் போல.
அஸவந்தின் நிலையோ அவளைவிட மோசமாக இருந்தது. அவளிடம் இந்த அளவு மோகமாக முன்னேற எது பிடித்து தள்ளியதோ.
இந்த நொடி வரை அவளை அணைத்து விடத்தான் கைகள் பரபரத்தன. முத்தமிட்டு விடத்தான் உணர்வுகள் உந்தி தள்ளியது. அவளை மொத்தமாக கொள்ளையிட தான் மனது கூறியது.
ஆனால் பார்கவியின் முழு சம்மதம் வேண்டும். அவள் காதல் வேண்டும். அதனாலேயே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
பொட்டை சரி செய்தவன், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பால்வண்ண முகத்தில் பன்னீர் துளிகள் போல் ஆங்காங்கே வியர்வை துளிகள்.
முக்கியமாக உதட்டிக்கு மேல் பூத்திருந்த முத்துக்கள் அவனை விரகதாபத்தில் வாட்ட போதுமானதாக இருந்தது. எச்சிலைக்கூட்டி விழுங்கிக் கொண்டான்.
அவளை மெதுவாக தன் புறம் திருப்பினான். சூரியனின் சொல் கேட்கும் சூரியகாந்தி மலராய் திரும்பி நின்றிருந்தவளின் முகத்தை தன் கை கொண்டு துடைத்து விட்டான்.
உதட்டிற்கு மேல் இருந்த வியர்வை துளிகளை துடைத்தான, இல்லை அவள் இதழ்களை அளவெடுத்தானா என்று அவனுக்கே வெளிச்சம்.
பார்கவியோ தன்னவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது போன்று கண்முடி நின்றிருந்தாள்.
அவனோ “பொறுமையா தேடுடி…” என்று மென்மையாக மெதுவாக சொன்னான். வேகமாக குளியலறையினுள்ளும் புகுந்து கொண்டான்.
“ஐயோ கொல்றாளே!.. உனக்கு இது தேவையாடா.. எதுக்கு அவள நெருங்கணும், இப்ப எதுக்கு அவதிப்படணும்.. வயர் கனெக்ஷன் குடுக்க வேண்டிய அவசியமே இல்ல.. பாத்தாலே பத்திக்குது..தூஉ…” என்று பாத்ரூம் கண்ணாடியில் தன்னை பார்த்து துப்பி கொண்டவன்,
“இவ்ளவு வீக்காடா நீ…” என்று கேட்டுவிட்டு குனிந்து தன்னைப் பார்த்தவன் “ஐயோ! இன்னும் அடங்க மாட்டேங்குதே.. நல்லவேள அவ பாக்கல…” என்று சொல்லிக் கொண்டவன்
உள்ளிருந்த உஷ்ணக் காற்றை கன்னம் நிரப்பி உதி தள்ளினான். அப்படியே சென்று நீருக்கடியில் நின்று கொண்டான்.
அஸ்வந் அவளை விட்டு விலகியதும் தான் காதல் மயக்கத்தில் இருந்து தெளிந்தாள் பார்கவி. உதட்டில் வெட்க புன்னகை.
அப்படியே திரும்பிய கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். அவளின் கோலமே அவளை மேலும் மேலும் நாணச் செய்தது.
அவன் அழுத்தி துடைத்த தன் இதழ்களை மெதுவாக தடவிப் பார்த்தாள். (ஒரு முத்தம் கொடுத்து இருக்கலாம்) என்று அவள் மனது சொல்ல, ஒற்றைக் கையால் முகத்தை மூடிக்கொண்டாள்.
*******
சிறிது நேரம் கழித்து வெளியே செல்ல தயாரான அஸ்வந் “கவி கண்மணிய பாக்க போகணும் நீ வரலயா?..” என்று கேட்க,
“ஹா, இதோ நானும் வாரேன்…”
“சரி கிளம்பு, நீ தேடுனது கிடைச்சுதா?…”
“இல்ல வந்து தேடிக்கலாம் வா…” என்றவள் அவனுடன் கண்மணியைப் பார்க்கச் சென்றாள்.
கண்மணியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் கொண்டு விட்டனர். கண்மணியை பார்க்க வேண்டும் என்று செவ்வந்தியும் உடன் சென்றிருந்தார்.
கண்மணியின் பெற்றோரிடம் நன்றி கூறி, கண்மணிக்கு உடல் தேறிய பின்னர் வீட்டிற்கு வருமாறு அழைத்து விட்டு, அஸ்வந், பார்கவி, செவ்வந்தி மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
****
மாலை 4 மணி இருக்கும். விமான நிலையத்தில் நின்று இருந்தாள் பர்விதா அபர்ஜித்தின் வருகைக்காக.
அவளுடன் அவன் பேசியே ஒரு மாதங்கள் இருக்கும். நேற்று மாலை 4 மணிக்கு அவளுக்கு அழைத்திருந்தான். சந்தோஷத்தில் மனது துள்ளி குதிக்க அழைப்பை ஏற்க
“ஓய் அம்லு எப்படி இருக்க?…” என்று அவன் கேட்க, வார்த்தைகளுக்கு பதிலாக கண்களில் கண்ணீர் தான் வந்தது அவளுக்கு.
அவள் அழுகையில் விசும்புவது அவனுக்கு கேட்டு விட, “ஏய் பரவி ஊருக்கு வரத்தான் ஏர்போர்ட்ல இருக்கேன்.. அழுதனு வை திரும்பி ரூமுக்கே போயிடுவேன்…” என்று அவன் சொல்ல
ஆனந்த அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் கண்ணீர் மட்டுப்பட்டு இருக்க, உற்சாகமான குரலில் “உண்மையாவா! ஊருக்கு வர போறீங்களா?…” என்று கேட்க
“ஆமாடி பொண்டாட்டி..புருஷன ரிசிவ் பண்ண நாளைக்கு இதே நேரத்துக்கு ஏர்போர்ட் வந்துரு.. அதுவும் உன்ன கடைசியா நேர்ல பார்த்த நம்ம கல்யாண ட்ரெஸ்ஸ போட்டுட்டு வா…” என்று சொன்னான்.
“ம்ம், சரி..” என்க
“சரி இப்ப சொல்லு.. எப்படி இருக்க…?” என்று கேட்க
“ரொம்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?…”
“எனக்கு என்ன, என் பொண்டாட்டிய பாக்க பறந்து வரப் போறேன்..அம்லு ஃப்ளைட்க்கு டைமாச்சு ஃபோன வைக்கிறேன்.. நாளைக்கு நேர்ல பாக்கலாம்…” என்று அழைப்பை துண்டித்தான்.
இதோ கண்கள் கூட்டத்தின் நடுவில் அவனை தேடி அலைந்து ஒரு வழியாக கண்டு கொண்டது.
மெரூன் கலர் டீ ஷர்ட், கருப்பு ஜாக்கெட், கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து, கையில் சூட்கேஸை தள்ளிக்கொண்டு வந்தான்.
உடையில் இருந்த பொலிவு அவன் முகத்தில் இல்லை.
அவனை கண்டதும் வாயில் கையை வைத்தவளது காட்சியை கண்ணீர் மறைத்தது.
அவனும் பர்விதாவை கண்டு கொண்டான். உள்ளம் நெகிழ கையை விரித்து (வா) என்று தலையை ஆட்ட, ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டாள்.
அவனும் அவளை இருக கட்டிக் கொண்டவன், அப்படியே சற்று மேலே தூக்கி, தன் முகத்தருகே அவள் முகத்தைக் கொண்டு வந்தவன், அவள் நெற்றியோடு தன்நெற்றி முட்டி, அவள்நாசி நுழைந்து உயிர் தொட்டு, மோட்சம் அடைந்து வெளியேறிய மூச்சுக்காற்றை, ஆழ்ந்து சுவாசித்து தனக்குள் செலுத்தி, தன் உடல் கூட்டிற்கு உயிர் கொடுத்தான்.
சில நொடி அப்படியே இருந்தவன் அம்லு கிஸ் வேணும்டி…” என்று சொல்ல
அப்போது தான், இருக்கும் சுற்றம் உணர்ந்தவள் “அச்சோ இறக்கி விடுங்க.. இங்க எப்படி வீட்டுக்கு போவோம்…” என்று சிணுங்க,
“சிணுங்காதடி.. அப்புறம் இங்கேயே உதட்ட கடிச்சு வச்சிடுவேன்…” என்றவாறே அவளை இறக்கி விட்டான்.
அவளை அழைத்துக் கொண்டு பீச் ஹவுஸ் வந்து சேர்ந்தவன்,வீட்டினுள் வந்ததும் அவளை இழுத்து அணைத்தவன், அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்.
“உன்ன எவ்ளவு மிஸ் பண்ணுனேன் தெரியுமா..? உன்னோட வாசம், உன்னோட ஸ்பரிசம் இல்லாம உணர்வுகள் செத்த மரக்கட்டையா தான் சுத்தி வந்தேன்…” என்று அவன் உருக்கமாக பேச
அவளுக்குமே கண்கள் கலங்க “சரி விடுங்க.. அதான் வந்துட்டீங்களே, இனி எப்பவும் உங்க கூடவே இருக்கேன்…” என்று சொன்னவள்
“குளிச்சிட்டு வாங்க.. சாப்பிடலாம்…” என்று சொல்ல
“சாப்பாடா, ஆர்டர் போட்டியா?…” என்று அவன் கேட்க
“இல்ல,இல்ல நானே சமைச்சேன்…”
“நீயே சமைச்சு எடுத்துட்டு வந்தயா…? என்று அவன் ஆச்சரியமாக கேட்க
“நான் தான் சமைச்சேன்.. ஆனா இங்க வந்து…” என்று அவனை அழைத்துக்கொண்டு அறைக்கு வர,
“இங்க சமைச்சியா, எப்படி?…”
“என்ன எப்படி.. இந்த வீட்டோட இன்னொரு சாவிய என்கிட்ட தானே தந்துட்டு போனீங்க…” என்று சொல்லவும் தான், ஆஸ்திரேலியா போகும்போது அவனிடம் இருந்த சாவியை அவளிடம் கொடுத்தது நியாபகம் வந்தது.
“ஓஹோ, அப்ப புருஷனுக்கு விருந்து ரெடி பண்ணி இருக்கனு சொல்லு…” என்றவன் அறைக் கதவை அடைத்துவிட்டு டி-ஷர்டை கழட்ட,
பர்விதா வெட்கத்தில் முகத்தை திருப்பிக் கொண்டவள் “சரி நீங்க குளிச்சிட்டு வாங்க.. நான் வெளிய இருக்கேன்…” என்று சொல்லி விலகப் போக,
அவள் கையைப் பிடித்து சுவற்றில் சாய்த்தவன், “எங்க ஓடுற.. எனக்கு நீ சமைச்ச விருந்தெல்லாம் வேணாம்…” என்றவன் கண்கள் கீழ் இருந்து மேல் அவளை ஆசையாய் வருடி, என்ன வேண்டுமென்று உணர்த்த,
திகைத்து கண்களை விளித்தவள் “அது..அது.. இப்போ.. எப்படி…” என்று திணற
“சரி மொத்தமா வேணாம்.. என்ன மாதிரியே நீயும் இரு அது போதும்…” என்று சொல்ல
“என்ன” என்றவளுக்கு அவன் வெற்று மார்புடன் இருப்பது புரிய “ச்சீ.. என்னால முடியாது…” என்று அவள் முகத்தை திறப்ப
“அதெல்லாம் முடியாதுடி.. இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்.. ஓ இப்போ ஈவ்னிங்கா சரி ஃப்ர்ஸ்ட் ஈவ்னிங் நடந்தே ஆகணும்.. அதுக்காகத்தான் நம்ம கல்யாணம் பண்ணும் போது போட்டிருந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு வர சொன்னேன்.. நீயா கழட்டுறயா இல்ல நானா கழட்டவா…” என்றவன்
அவள் ஷர்ட்டின் முதல் பட்டனில் கையை வைக்க, கண்களை இறுக மூடி, உதடு துடிக்க, கையால் பாவாடையை இறுகப்பற்றி நின்றிருந்தாள் பர்விதா.
சிறிது நேரம் கழித்து எதுவும் நடக்காமல் போக கண்களை திறந்தாள். மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்திருந்தான் அபர்ஜித்.
அவள் அவனை புரியாமல் பார்க்க “சும்மா விளையாடினேன்டி.. நீ எனக்கு வேணும் தான் ஆனா இப்படி இல்ல…” என்றவன்
அவளை இழுத்து, தன்மார்பில் அவள் தலையை சாய்த்துக் கொண்டவன், “நீயும் நானும் சேரும் போது உன் மனசுல சின்ன நெருடல் கூட இருக்கக் கூடாது.. முறைப்படி நம்ம கல்யாணம் நடந்து, முழு மனசா நீ உன்ன எனக்கு தந்து, என்ன ஏத்துக்கணும்.. அதுவரைக்கும் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்…” என்று சொல்ல
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “ஏதோ மாற்றம் தெரியுதே…” என்க
புன்னகை சிந்தியவன் “ரொம்ப யோசிக்காத.. சாப்பாட எடுத்து வை குளிச்சிட்டு வாரேன்…” என்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
*****
குளித்து விட்டு வந்தவனுக்கு அவள் ஆசையாக சமைத்து வைத்திருந்ததை பரிமாறினாள்.
முதல் கை பிடியை வாயில் வைத்து ருசித்தவன் முகம் விகாசிக்க, அவளை நிமிர்ந்து பார்த்தான். ஆறு மாதங்கள் கழித்து வீட்டு சாப்பாடு சாப்பிட்ட மகிழ்ச்சி.
கூடவே செவ்வந்தியின் நினைவும். எப்போதும் சாப்பிட சொல்லி அவனை தொந்தரவு செய்வார். அவரது சமையலில் அவரின் பாசமும், அக்கறையையும் தான் தெரியும். இதோ அவரின் இடத்தில் அவனின் அவள்.
அவன் எதுவும் கூறவில்லை, ஆசையாக வேகமாக சாப்பிட்டான். அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் கனிவுமே அவனுக்கு அவள் சமையல் எவ்வளவு பிடித்திருக்கின்றது என்று கூறியது.
வயிறார சாப்பிட்டு முடித்தவன் “சரி வா, உன்ன வீட்ல விட்டுட்டு வந்து தூங்கணும்.. செம டயட்…” என்று கூப்பிட
“இல்ல வேணாம்.. நான் போயிக்குறேன்..நீங்க வீட்டுக்கு போய் தூங்குங்க…” என்று சொல்ல
“வீட்டுக்கா, நோவே.. நான் வந்தது உனக்கும் என் ஜூனியருக்கும் மட்டும் தான் தெரியும்.. வீட்டுக்கு தெரியாது.. தெரியவும் வேணாம்..அஸ்வந்துக்கு பிசினஸ்ல ஒரு ப்ராப்ளம், அத சரி பண்ண தான் யாருக்கும் சொல்லாம வந்தேன்.. நீயும் யாருக்கும் சொல்லாத…”
“என்னங்க சொல்றீங்க.. அப்போ ப்ராப்ளம் சோல்வானதும் திரும்பவும் ஆஸ்திரேலியா போய்டுவீங்களா?…” என்று பர்விதா கவலையாக கேட்க
அவளை நெருங்கி அவள் கன்னம் தாங்கியவன் “இனி எங்கேயும் போக மாட்டேன்.. அதே சமயம் பார்கவி வாழ்க்கை சீராகுற வரைக்கும், நான் ஊருக்கு வந்தது யாருக்குமே தெரிய வேணாம்.. நம்மளும் இனிமேல் அடிக்கடி மீட் பண்ண வேணாம்.. நமக்கான காலம் வார வரைக்கும் விலகியே இருக்கலாம்…” என்று அவன் சொல்ல
“சரி அப்போ நான் கிளம்புறேன்.. நீங்க தூங்குங்க…” என்று அவள் சொல்ல,
அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன் “பத்திரமா போ…” என்று சொல்ல
“அவ்ளவு தானா நான் கிளம்பவா?..” என்று அவள் கேட்க
“ம்ம், கிளம்பு…”
“உண்மையா கிளம்பிடுவேன்…”
“ஏய், என்ன ஆச்சு உனக்கு…” என்று அவன் சிரிக்க
” உங்களுக்கு என்னாச்சு.. இங்க முத்தம் தரவே இல்ல…” என்று அவள் உதட்டை தொட்டு காட்ட
“இப்போதைக்கு குடுக்க வேணாம்னு தோணுது.. லிப்ல கிஸ் பண்ணுனா என்ன என்னாலயே கண்ட்ரோல் பண்ண முடியாது.. சோ, மேரேஜ் வரைக்கும் நோ லிப் கிஸ்.. என் உணர்வுகள கொட்ட உன்ன தேடுன காலம் மாறிடுச்சு பர்வி..
…நீ கூட அப்போ கேட்டியே.. எப்ப பாரு முத்தம் கொடுத்துட்டே இருக்கீங்க இது காதலானு.. அப்போ உன்னோட ஃபீலிங்ஸ் புரியல.. ஒரு முத்தம், அதுதான் உன்ன தேட வெச்சது, ஆனா முத்தத்துக்காக மட்டுமே உன்ன தேடுவேன்னு நீ நினைக்க கூடாதுல..
…எங்க நீ எனக்கு கிடைக்காம போயிடுவனுதான் உன் கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்.. இப்போ அந்த பயம் இல்ல.. அதனால இப்போ என் மனசுல இருக்கிறது ரெண்டே ரெண்டு விசயம் தான்..
…ஒன்னு பார்கவி அஸ்வந்தோட சந்தோஷமான வாழ்க்கை, ரெண்டாவது எந்த கலங்கமும் இல்லாம உன்ன எனக்கு முறையா சொந்தமாக்கிக்கணும்.. இது ரெண்டும் நடக்குற வரைக்கும் நான் கட்டுபாடா தான் இருக்கணும்…” என்று சொல்ல
“ம்ம் புரியுது, நான் கிளம்புறேன்…” என்வள் யோசனையுடனே வீடு வந்து சேர்ந்தாள்.

