
அத்தியாயம் 31
என்றும் இல்லாமல் நெற்றி வகுட்டில் குங்குமம், தலையில் பூ என்று வந்த பார்கவியை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது கண்மணி மற்றும் மாளவிக்காவிற்கு
மாளவிகாவோ “என்னடி அதிசயமா அழகா இருக்க?…” என்று கேட்க
“என்ன அதிசயத்த கண்ட.. ஒரு பொண்ணு பொட்டும் பூவும் வைக்க கூடாதா…?” என்று கேட்டவள் அங்கு நிற்காமல் தனது வகுப்பறைக்கு செல்ல
“நீ வைக்கிறது அதிசயம் தான் டி…” என்று மாளவிகா சொன்னது கேட்டாலும் நின்று பதில் சொல்லவில்லை பார்கவி.
அடுத்த நாள் காலையில் குளித்து தயாரானவள், அவளாகவே நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டாள். உண்மையாகவே முகத்திற்கு ஒரு புது பொலிவு வந்திருந்தது. கண்ணாடியில் தன்னையே சில நொடி ரசித்தாள்.
அவளின் தோற்றத்தில் மாற்றத்தை கண்ட அஸ்வந் மனது சந்தோஷத்தில் நிறைந்தது.
பார்கவி கொஞ்சம் கொஞ்சமாக அஸ்வந்துடன் நெருங்கி இருந்தாள். ஆனால் கணவன் மனைவிக்கான அடுத்த கட்ட அன்னியோன்யம் இல்லாமல் இரண்டு மாதங்கள் கடந்து இருக்க,
அன்றும் ஓர் வெள்ளிக்கிழமை தான். அஸ்வந், பார்கவி, கண்மணி, மாளவிகா நால்வரும் கேண்டீனின் பின்புறம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க,
மாளவிகா “கண்மணி நாளைக்கு பார்லர் போக வருவதானே…” என்று கேட்க
“ம்ம்.. நாளைக்கு காலைல 9 மணிக்கு வீட்ட வா…” என்று பதில் சொன்ன கண்மணி
“பார்கவி நீயும் வாயேன்…” என்று அழைக்க
“இல்லடி.. நீங்க போங்க.. நான் வரல…” என்று பார்க்கவி சொல்ல
“ஏன்டி?.. போன முறை கூப்பிட்டப்போவும் வரலன்னு சொல்லிட்ட..பொண்ணுங்கனா பியூட்டி பார்லர் பாக்கம் போகணும்மா…” என்று மாளவிகா சொல்ல
“அது என்னமோ நான் இதுக்கு முன்னாடி போனதும் இல்ல.. இனியும் போக மாட்டேன்…” என்று சொல்ல அஸ்வந் கண்கள் அவளை ஆச்சரியமாகவும் ரசனையாகவும் பார்த்தது.
அடுத்த நாள் காலை அறையில் இருந்து வெளியே வந்த பார்கவி பார்த்தது, செவ்வந்தியை சோஃபாவில் அமர வைத்து, தரையில் அமர்ந்து அவர் காலுக்கு பெடிகீயூர் செய்து கொண்டிருந்த அஸ்வந்தைத்தான்.
‘இவனுக்கு இது வேற தெரியுமா…’ என்று மனதில் நினைத்தவள் அவர்களை கடந்து செல்ல
“அம்மாடி பார்கவி இங்க வாம்மா…” என்று செவ்வந்தி அழைக்க
“சொல்லுங்க அத்த…” என்று அவர் அருகில் சென்றவளை, இழுத்து தன்னருகில் அமர வைத்தவர் அஸ்வந்திடம் இருந்து தன் கால்களை உருவிக்கொண்டு
“என் கால விடுடா.. இத்தன நாள் எனக்கு பண்ணுனது போதும்.. இப்போ உன் பொண்டாட்டிக்கு பண்ணி விடு…” என்று சொல்ல
“ஐயோ! அத்த அதெல்லாம் வேணாம்…” என்று பார்கவி பதற
“அட கால குடுமா பார்லர் எல்லாம் போகவே வேணாம் இவனே அருமையா பண்ணிவிடுவான்.. நானே வேணாம்ன்னாலும் மாசத்துக்கு ஒரு தடவ என்ன இழுத்து வச்சு பண்ணிடுவான்…”
“ஆனா எனக்கு.. எப்படி…” என்று அவள் தயங்க
“இதுல என்ன இருக்கு.. ஏன்டா உன் பொண்டாட்டிக்கு பண்ணி விட மாட்டியா என்ன?…” என்று அஸ்வந்திடம் கேட்க
அவன் ஏன் முடியாது என்று சொல்ல. அவளுக்கு செய்ய வேண்டும் என்பதால் தானே, செவ்வந்திக்கு எப்போதும் இரவில், அவர் அறையில் செய்து விடுபவன், நடு ஹாலில் அமர வைத்து சொய்கிறான்.
“முடியாதுன்னு யார் சொன்னா..உங்க மருமகளுக்கு கண்டிப்பா பண்ணி விடுறேன்.. முதல்ல உங்க கால குடுங்க நெயில் பாலிஷ் போட்டு விடுறேன்.. பைனல் டச் இல்லனா எப்படி…” என்றவன்
அவர் காலை எடுத்து, தன் தொடையில் வைத்து, நேர்த்தியாக அழகாக அவர் நகங்களுக்கு பாதாம் வண்ண நகபூச்சை பூசி விட. அவனையும் அவன் கைவண்ணத்தில் ஜொலித்த செவ்வந்தியின் பாதங்களையும் ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
செவ்வந்தியின் நகங்கள் அனைத்திற்கும் நகபூச்சை பூசி முடித்தவன், அவர் பாதத்தை மெதுவாக தரையில் எடுத்து வைத்துவிட்டு,
பார்கவியின் பாதத்தின் அருகே ஒற்றைக் கையை நீட்ட, அவளோ சங்கோஜமாக செவ்வந்தியை பார்க்க
“குடு பார்கவி..இப்ப என்ன நான் பாக்கல போதுமா…” என்றவர் எழுந்து செல்ல
“அய்யோ அத்த அப்படி இல்ல…” என்று அவள் அவரை தடுத்து நிறுத்த பார்க்க,
பார்கவியின் பாதத்தில், நடுவிரலில் ஜொலித்த, வெள்ளி மெட்டியின் முத்தை தட்டி விட்ட அஸ்வந் “இத, நான் தானே போட்டுவிட்டேன்…” என்று சொல்ல
அவன் அவள் மெட்டியை தொடவும் புடவையினுள் பாதங்களை இழுத்துக் கொண்டவள் “அது அவசியம் இருந்துச்சு பண்ணுன…”
“இது ஆசைக்காக பண்றேன், குடுடி…” என்றவன், அவள் பாதங்களை மெதுவாக தூக்கி ஒரு பாத்திரத்தில் உள்ளே வைத்தான்.
சேலையை அவன் கொஞ்சம் மேலே தூக்கி விட,
“அய்யோ!” என்று அவள் பதற
அவன் முறைத்துப் பார்த்து “மேல தூக்கி பிடி நனஞ்சிடும்…” என்று சொல்ல
“ம்ம் என்றவள் கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் நடுவில் தூக்கிப் பிடிக்க, அவள் பாத அழகை பார்த்ததற்கே அவன் நெஞ்சை பிடிக்க வேண்டியதாய் இருந்தது.
‘பலான நினைப்ப ஓரம் கட்டிட்டு பாத பூஜைய ஆரம்பிடா…’ என்று தனக்கு தானே மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டவன்,
இதமான வெந்நீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி, உப்பும் எலுமிச்சை துண்டுகளும் கலந்து, அவள் பாதத்தை சிறிது நேரம் ஊற வைத்து, அதன் பின் பீர்க்கங்காய் நாரை கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி,
அதன் பின் மூலிகை பொடியை பூசி மசாஜ் செய்து, சிறிய பூந்துவாலையால் அவள் பாதங்களை துடைத்துவிட்டு,
நகம் வெட்டுவதற்காக தன் தொடையில் அவள் பாதங்களைத் அவன் தூக்கி வைக்க, இருவருக்குமே உடல் சிலித்தது.
அவனுக்கோ ரசாயன மாற்றங்கள் என்றால், அவளுக்கோ கூச்சமும் சங்கஜமும் சேர்ந்து வந்தது.
அவனோ அவள் பாதங்களை இறுக்கமாக பற்றி பிடித்து நகங்களை வெட்டி விட்டவன், பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து, ஒவ்வொரு நகத்தையும் துடைத்து எடுத்தவன்,
அவள் பாதங்களை ஆசையாக ரசித்துக் கொண்டிருந்தான். பார்கவி கால்களை எடுக்கவில்லை. அவள் பார்வையும் அவன் முகத்தில் தான் இருந்தது.
இருவரும் தங்களை மறந்து இருந்த வேளை செவ்வந்தி அங்கு வர, அந்த அரவத்தில், மனமே இல்லாமல் அவள் பாதங்களை மெதுவாக கீழே எடுத்து அவன் வைக்க,
செவ்வந்தி அவள் பாதங்களை பார்த்துவிட்டு “என்னடா பார்கவிக்கு நெயில் பாலிஷ் போட்டு விடலயா…” என்று கேட்க
“தேவையில்ல ம்மா…” என்றவன் பார்கவி முகத்தை பார்க்க,
செவ்வந்தி புரியாமல் “ஏன்டா?..” என்று கேட்க
பார்கவி கண்களில் இருந்து பார்வையை கீழே இறக்கி, அவள் பாதத்தைப் பார்த்தவரே “வைரத்த உருக்கி முலாம் பூசினாப்போல பளபளனு இருக்கு.. இதுக்கு எதுக்கு நெயில் பாலிஷ்…” என்று அவன் தன்னையும் மறந்து சொல்ல
இரு பெண்களும் அவனை ஆழ்ந்து பார்க்க, “ம்க்..அது..நேச்சுரல் லுக்கே நல்லா இருக்கேனு சொன்னேன்…” என்று சொல்லி கண்ணை உருட்டியவன் நைஸாக நழுவி கொண்டான்.
அவன் தன் பாதங்களை தான் வர்ணித்தான் என்று பார்கவிக்கு புரியாமல் இல்லை. அவளுள் சொல்ல முடியாத ஒரு பரவச உணர்வு.
அவனை மெல்லிய புன்னகையுடன் ஆதூரமாக பார்த்த செவ்வந்தி, பார்கவி அருகில் அமர்ந்து,
“பெரியவன் குடும்பத்த பாத்துக்கணும்னு எப்பவுமே ஓடிட்டே இருப்பான்.. ஆனா இவன் அம்மா அம்மானு என்னையே சுத்தி வருவான்.. ஒரு பொண்ணு இருந்து என்ன பாத்துக்கிட்டா எப்படி பாத்திருந்துப்பாளோ, அப்படியே என்ன பாத்துப்பான்…” என்று இளைய மகனை சிலாகித்து சொல்ல, பார்கவியின் கண்களும் அவன் சென்ற திசையில் தான் இருந்தது.
*********
மணி இரவு ஏழு தான் ஆகி இருந்தது. வேக வேகமாக தோசையை வாயில் தினித்துக் கொண்டிருந்தாள் பர்விதா. அங்கே ஒருவன் உறங்காமல் இவளின் தரிசனத்திற்காக காத்திருப்பானே, அதுதான் இத்தனை அவசரம்.
“ஏன்டி என்னதான் படிப்புனாலும் இப்படியா அவதி படுவ.. பொறுமையா சாப்பிடு.. கொஞ்ச நாளாவே இருட்டுன பிறகு அறைய விட்டு வெளியவே வர மாட்டேங்குற…” என்று சங்கரி கடிந்து கொள்ள,
திரு திருவென விழித்தவள் “நான் என்ன பண்ண..ஜூம் கிளாஸ் நடக்குது.. டைமுக்கு அட்டென்ட் பண்ணலேன்னா எதுவுமே புரியாது…” என்று ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு, வேறு கேள்வி கனைகள் தொடுக்கும் முன் அறைக்கு வந்திருந்தாள் .
கண்ணாடியில் தன்னை ஒன்றுக்கு பத்து தடவை சரி பார்த்தவள், கட்டிலில் அமர்ந்து, தலையணையை மடியில் வைத்துக்கொண்டு, ஃபோனை கையில் எடுக்க,
சரியாக அவனிடமிருந்து வீடியோ கால் வந்தது. ஆசையாக அழைப்பை ஏற்றுக் கொள்ள, அந்தப் பக்கம் ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்து தன் வெற்று மார்பை அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவாறு, தொடுதிறையில் மின்னினான் அபர்ஜித்.
அவனை முதல் முறையாக அப்படி பார்ப்பது போன்று நாணம் கொண்டவள், “பெரிய கட்டுடல் மேனி.. இப்ப எல்லாம் கவர்ச்சி போஸ்ட் தான் கொடுக்கிறது…” என்று வாய்க்குள்ளாக முணுமுணுக்க
அவளைப் பார்த்ததும் அவன் கண்கள் முதலில் சொல்வது அவள் இதழ்களுக்கு தானே,
இதழின் அசைவு அவனுக்கு விளங்கிவிட, “உன்ன மாதிரி குறுகிய மனப்பான்மை எனக்கு இல்லடி.. தாராளமான மனசு.. அதுதான் பொண்டாட்டி சந்தோஷமா ரசிக்க என் பரந்த மர்ப காட்டுறேன்…”
“ஆஹா!.. ஆச தான்.. உங்கள பாத்து நான் ரசிக்கிறேனாக்கும்.. நீங்க ஒன்னும் பொண்டாட்டிய சந்தோஷப்படுத்த வேணாம் டீ ஷர்ட்ட போடுங்க…”
“நீயும் புருஷன சந்தோஷப்படுத்த மாட்டேங்குற.. நான் பண்ணாலும் வேணாங்குற.. ரசனையே இல்லாத ஆள் டி நீ…” என்று அவன் சொல்ல
“அப்படியே இருந்துட்டு போறேன் உங்களுக்கு என்ன…?”
“எனக்கு ஒன்னும் இல்ல.. நீ கொஞ்சம் அந்த டி ஷர்ட்ட கீழே இருக்கு…” என்று அவன் சொல்ல
“அடிங்க! வீடியோ கால்ல குடும்பம் நடத்துற பொண்ணு நான் இல்ல.. இன்னொரு தடவை ட்ரெஸ்ஸ அட்ஜஸ்ட் பண்ணு, கழட்டிட்டு வானு அது இதுனு சொல்லுங்க நான் வீடியோ காலே வரமாட்டேன்…” என்று அவள் முகத்தை சுருக்க,
அவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான். அவன் சிரிக்கவும் அவள் அவனை முறைக்க,
“லவ் பண்ணுடி லவ் பண்ணுடின்னு சொன்ன நேரமெல்லாம் அம்மாஞ்சி பாப்பா மாதிரி இருந்துட்டு.. லவ் பண்ணுனதும் அடல்ஸ் ஒன்லி மட்டும்தான் உன் மூளை யோசிக்குது அமலும்..
…நான் டி-ஷர்ட்ட கொஞ்சம் இறக்க சொன்னது, நான் உனக்கு கட்டுன தாலி எனக்கு தெரியல.. அத பாக்கத்தான் டி-ஷர்ட்ட கொஞ்சம் கீழ இறக்கி விடுனு சொன்னேன்.. வேற எதையும் பாக்கிறதுக்கு இல்ல..
…சொல்லப்போனா நீ கண்ணாடி முன்னாடி கூட ட்ரெஸ் இல்லாம இருக்க கூடாது.. என் கண்ணு மட்டும் தான் உன்ன அப்படி பாக்கணும்.. கேமரா கண் பாக்கிறதுக்கு கூட நான் அலோ பண்ண மாட்டேன்…” என்று அவன் சொல்ல
நாக்கை கடித்தவள் “சாரி.. என்ன பண்ண சொல்றீங்க நீங்க பேசுறது எல்லாமே பச்சையும், நீலமுமா அப்புறம் என் மைண்ட் அப்படித்தான் யோசிக்கும்…” என்று சிறுபிள்ளையாய் மூக்கை சுருக்க,
“இப்படி எல்லாம் பண்ணாத அம்லு.. தாலி கட்டிட்டு பொண்டாட்டிய பிரிஞ்சு இருக்குறது எவ்ளவு கொடுமை தெரியுமா..? ஃபர்ஸ்ட் நைட்டாவது கொண்டாடிட்டு வந்து இருக்கலாம்.. ஏங்க வைக்கிற டி அம்லு…” என்று அவன் கிறக்கமாக சொல்ல
“வந்துடலாம் இல்ல…” என்றாள் பர்விதா குரலில் ஏக்கத்தையும் ஆசையையும் தேக்கி,
இழுத்து பெருமூச்சு விட்டவன் “பார்கவி எப்படி இருக்கா?…” என்று கேட்க
“அக்கா இப்போ கொஞ்சம் ஓகே தான்.. என்கிட்ட நல்லா பேசுறா.. வீட்டுக்கு கூட போன வாரம் வந்திருந்தாள்.. ஆனா அஸ்வந் மாமாவோட பெருசா இணக்கம் இல்லாத மாதிரி தான் தெரியுது.. நீங்க அஸ்வந் மாமா கிட்ட எதுவும் கேட்கலையா?…”
“இல்ல அம்லு.. நான் ஃபோன் பண்ணும் போது பார்கவி பக்கத்துல இருந்துட்டா தேவையில்லாத நினைவுகள கிளறி விட்ட மாதிரி போயிறும்.. அம்மா கிட்ட மட்டும் அங்க மதிய டைமுக்கு ஃபோன் பண்ணி பேசுவேன்.. அவங்க கிட்ட இதெல்லாம் நான் கேட்க முடியாது இல்ல …”
“ம்ம், புரியுது…”
“என்னடி மொட்டையா புரியுதுன்னு சொல்ற.. அஸ்வந்த மட்டும் மாமான்ற என்ன மாமான்னு கூப்பிட மாட்டியா?…”
“அக்கா புருஷன மாமானு கூப்பிடலாம்.. உங்கள எதுக்கு மாமானு கூப்பிடனும் …”
“அக்கா புருஷன மட்டும் இல்ல அத்தானையும் மாமானு கூப்பிடலாம்.. நீ அப்போ மாமானு கூப்பிடுவ அதுல ஒரு உரிமை உணர்வு இருந்துச்சு.. என்னால அப்போ பீல் பண்ண முடியல அம்லு.. இப்ப கூப்பிடேன்…” என்று அவன் ஆசையாக கேட்க
“முடியாது…” என்று அவள் முறுக்கிக் கொள்ள,
“கூப்பிடலைன்னு வை, இனிமேல் வாரம் ஒரு முறை தான் ஃபோன் எடுப்பேன்னு சொன்னேன் அப்படி இல்லாமல மாசம் ஒரு முறைதான் எடுப்பேன் பாத்துக்க…” என்று அவன் மிரட்ட
“என்னங்க இது, போன புதுசுல டெய்லி எடுத்தீங்க.. இப்போ வாரம் ஒரு முறை தான்னு சொல்றீங்க ஏன்…?” என்று கேட்க
“நீ படிக்கணும் பர்வி.. அங்க இருக்கிற வரைக்கும் எதுவும் புரியல.. இப்பதான் சில விஷயம் புரியுது.. என்னோட ஆசைக்காக உன்ன தப்பு மேல தப்பு பண்ண வைக்கிறேன்..
…இனிமேல் எதுவும் வேணாம்.. வாரத்துக்கு ஒரு முறை ஜஸ்ட் ஹாஃப் அண்ட் ஹவர் எனக்கு உன்ன பாத்தா போதும்.. அதுக்கு மேல எதுவும் வேணாம்.. நீ படிக்கிறத மட்டும் கவனி…” என்று அவன் சொல்ல
“ரொம்ப கஷ்டமா இருக்காங்க…” என்று அவள் கவலையாக கேட்க, அவனிடம் இருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.
‘தலைக்குமேல தூக்கி வச்சு கொண்டாடுன உறவுகள விட்டுட்டு வந்து, தனிமையில இருக்கேன் கஷ்டமா இருக்காதா…’ என்று மனதில் நினைத்தவன்
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ நல்லா படி, சரியா சாப்பிடு, நேரத்துக்கு தூங்கு.. பாய், நான் நெக்ஸ்ட் மண்டே கால் பண்றேன்…” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
தன் ஆளுமையின் கீழ் இருந்த வீடு, ஆசைப்பட்டு படித்து பேரும் புகழும் எடுத்த தொழில், முட்டி மோதி கஷ்டப்பட்டு காதலிக்க வைத்த காதலி எல்லாத்தையும் விட்டுட்டு தனிமையின் பிடியில் அபர்ஜித்.

