Loading

“எப்போ யக்ஷூ?” என்று ஆர்வத்தோடு கேட்டான் அற்புதன்.

 

“நாங்கச் சின்னப் பிள்ளைகளாக இருந்தப்போ” என்றாள் யக்ஷித்ரா.

 

“என்ன சம்பவத்தில்?” என்றான்.

 

“முதல் முதலில் ஸ்கூலுக்குச் சேர்த்து விடும் போது, என் கூட அவர் தான் வந்தார். கையை அழுத்திக் கொடுத்து, நல்லாப் படிக்கனும்! அப்படின்னு சொன்னார்! அது தான் அவர் எங்கிட்டப் பேசின அனுசரணையானப் பேச்சு” 

 

“அப்போ மட்டுமா? அதெல்லாம் ஞாபகம் இருக்கா உனக்கு? எனக்கெல்லாம் அந்த வயதில் நடந்த எதுவுமே நினைவில் இல்லை! இருக்கவும் செய்யாதே! அவ்வளவு சின்னவங்களாக இருப்போமே!” என்று வினவினான் அற்புதன்.

 

“ம்ஹூம்! உங்க அப்பா உங்ககிட்ட எப்பவும் இப்படித் தான் நடந்துப்பார். எங்களுக்கு அப்படி இல்லையே? எப்போதாவது தான், இதையெல்லாம் உணர முடியும்! அதான்!” என்று நிதானமாக கூறினாள் யக்ஷித்ரா.

 

“ம்ம்” 

 

“லெவன்த் டியூஷனும் என்னை நல்லா கவனிச்சப் பிறகு, நாங்க ட்வெல்த் வந்தோம். அந்த ஒரு வருஷம், பார்க்கிற எல்லாமே பயமுறுத்தும்! ஏன்னா, அதில் எடுக்கிற மார்க்கை வச்சுத் தான நல்லக் காலேஜில் சேர முடியும்?” என்றாள்.

 

“ஆமாம். நீ தான் டியூஷன், ஹோம் டெஸ்ட்ன்னு ஒரு கை பார்த்திருப்பியே?” என்று புன்னகைத்தான் அற்புதன்.

 

“எங்க கிளாஸில் டியூஷனுக்கும் போகாமல், இப்படி டெஸ்ட்ஸ்ஸூம் எழுதாமல், ஒரு பொண்ணு ஃபர்ஸ்ட் மார்க் வாங்கியிருக்கா!” என்று கூறினாள் யக்ஷித்ரா.

 

“அதனால் என்ன? அது அவங்களோட திறமை. அதையும் மதிப்போம். நம்ம என்னப் படிக்கிறோம், மார்க் வாங்கிறோம்ன்றது தான் விஷயமே?” 

 

அது தானே! மற்றவருடைய சூழ்நிலையும் வேறு, அவர்கள் படிக்கும் முறையும் வேறாக இருக்கும் போது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்விதத்திலும் நன்மையில்லை. தன்னுடைய ஏற்றத்திற்கும், எதிர்காலத்தில் நல்லக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காகவும் தான், படிக்க வேண்டுமே தவிர, அவளது மதிப்பெண்களை நான் முறியடிக்கிறேன் பேர்வழி என்று படிக்கக் கூடாது!

 

“உன்னோட ட்வெல்த் ஸ்கூல் லைஃப், அதுவும், உன்னோட ஃப்ரண்ட்ஷிப், பப்ளிக் எக்ஸாம், எல்லாரையும் விட்டுப் பிரியும் போது, என்ன நடத்ததுன்னுக் கேட்க ஆர்வமாக இருக்கு!” என்று தன் விருப்பத்தைக் கூறினான் அற்புதன்.

 

“சொல்லத் தானே போறேன்” என்றாள் யக்ஷித்ரா.

 

இரவு நேரம் வரைப் பேசியவர்களுக்கு, உணவருந்தும் ஞாபகமே இல்லை. கொறித்துக் கொண்டிருந்தப் பதார்த்தமும் தீர்ந்து விடும் நிலையில் இருந்தது.

 

“போய்க் கூப்பிடலாமா ங்க?” எனக் கணவனிடம் கேட்டார் கீரவாஹினி.

 

அவர்களை உணவருந்தச் செய்ய வேண்டுமே? என்ற பரபரப்பில் இருந்தார் அற்புதனுடையை அன்னை.

 

“பசிச்சா அவங்களே வருவாங்க ம்மா. நீ எதுக்குப் பதட்டப்பட்ற?” என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினார் அகத்தினியன்.

 

“டின்னர் சாப்பிட்றதுக்கு வயிற்றில் இடம் இருக்கான்னு வேற தெரியலையே?” என்று கணவன் கூறியதும் தான், இவ்வளவு நேரமாக அறையில் இருக்கின்றோம் என்பதையும், மாமியாரும் தங்களை அழைக்கவில்லை என்பதையும் அறிந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

“நான் முதலில் போய், அத்தைக்கு ஹெல்ப் பண்றேன் ங்க. உங்களுக்குப் பசிக்குதா?” என்றவாறு கட்டிலை விட்டுக், கீழிறங்கினாள்.

 

“மசால் கடலையே பாதி பசியைப் போக்கிடுச்சு. இனி, மூனு இட்லிக்குத் தான் இடமிருக்கு” எனவும்,

 

“அப்போ இருங்க. நான் சட்னி அரைச்சுட்டு, உங்களைக் கூப்பிட்றேன். இல்லைன்னா, டைனிங் டேபிளில் வந்து உட்காருங்க. மாமாவும் அங்கே தான் இருக்கார். பேசிக்கிட்டு இருங்க. அதுக்குள்ள ரெடியாகிடும்” என்று திட்டமிட்டாள் யக்ஷித்ரா.

 

“இந்நேரம் அம்மாவே சட்னி அரைச்சிருப்பாங்க” என்று கூறியவாறு, தானும் அறையை விட்டு வெளியேறி வந்தான் அற்புதன்.

 

அங்கே உணவருந்தும் மேஜையின் பின் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார் அகத்தினியன்.

 

அவருக்குப் பக்கத்தில், கீரவாஹினியும் இருக்க,

 

“இந்த ஸ்நாக்ஸே போதும் போலன்னு இருக்கு ம்மா” என அவரிடம் தெரிவிக்கவும்,

 

“அடி தான் வாங்குவ! ஒழுங்காக சாப்பிடு” என்றவர்,

 

மருமகளிடம்,”நான் சட்னி அரைச்சுட்டேன் யக்ஷி” என்றார் கீரவாஹினி.

 

“டேய்! நீ பார்க்கிற வேலைக்கு இன்னும் நிறைய தான் சாப்பிடனும். ஸ்நாக்ஸைக் கொறிக்கிறா மாதிரி, சாப்பாட்டையும் கொறிக்கக் கூடாது!” என்று மகனிடம் அறிவுறுத்தினார் அகத்தினியன்.

 

அடுக்களையில் இருந்து, சிறிது நேரத்திற்கு எல்லாம், மாமியார் மற்றும் மருமகளின் கைப்பக்குவத்தில், சுடச்சுட, உணவுகள் தயாராகி விட்டிருக்க, மூவரும் உண்டு முடித்து எழுந்தனர்.

 

வயிற்றை அமைதிப்படுத்த, வெந்நீர் வைத்துக் குடித்து விட்டு உறங்கினர்.

 

🌸🌸🌸

 

நிதானமாகக் கிளம்பிக் கல்லூரிக்குத் தயாராகிய யாதவியின் கண்களுக்கு, கிரில் கேட்டுக்கு உட்புறமாகச் சங்கிலி போட்டுக் கட்டிப் பூட்டப்பட்டு இருந்த, அந்த இரு மிதிவண்டிகளும் தென்பட்டது.

 

அக்காவின் பழைய மிதிவண்டி தனக்கு வேண்டாமென யாதவி மறுத்து விட்டதால், அதை அப்படியே வீட்டின் வாயிலில் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.அதனை நகர்த்தி வைக்கக் கூடத் தன் கையால் தீண்டவில்லை அவள்.

 

இப்போது தமக்கையுடன் உரையாட வேண்டுமென்ற ஆவல் பிறந்தது அவளுக்கு. ஆனால், தனக்கும் கல்லூரி உள்ளது, அவளும் வேலைக்குக் கிளம்பி இருப்பாள் என்று அன்னையிடம் சொல்லி விட்டுப் பேருந்து நிலையத்திற்கு விரைந்தாள் யாதவி.

 

🌸🌸🌸

 

“இன்னும் ஒரு மாதத்தில் யார், யாருக்கு நைட் ஷிஃப்ட் கிடைக்கப் போகுதுன்னுத் தெரிஞ்சிடும்” எனச் சக ஊழியர்கள் பேசிக் கொண்டு இருக்க,

 

“ஹப்பாடா! அதுக்குள்ளே நான் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சிடுவேன்!” என்று நிம்மதியடைந்தான் அற்புதன்.

 

அந்த ஒரு மாதத்திற்குள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கிய பிராஜக்ட் ஒன்றை முடித்து, ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கெடு வைத்திருந்தார் மேலதிகாரி.

 

அதனால், இனிமேல், வீட்டிலும் கணிணியுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதும் அற்புதனுக்கு உறைத்தது.

 

அப்படியானால், மனைவிக்குக் கொடுத்த வாக்கு, நம்பிக்கை என்னவாகும்? அவளிடம் பேசும் நேரமே மிக மிகக் குறைந்து போய் விடும்! என்று உணர்ந்தான் அற்புதன்.

 

அவைக் கொடுத்த அழுத்தம் தன்னைப் பாதித்தது மட்டுமில்லாமல், தன்னுடைய குடும்பத்திலும் எதிரொலிக்கப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவில்லை அவன்.

 

இந்த அழுத்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனிடம் எதையோ கேட்க வந்த மனைவியிடம்,”இன்னைக்குக் கதையெல்லாம் வேணாம் யக்ஷித்ரா! மனுஷனுக்கு வேலையைப் பார்க்கவே நேரமில்லையாம்!” என்று அவளிடம் கூறியிருந்தான் அற்புதன்.

 

அதைக் கேட்டு மாறியிருந்த, முகத்தை, இயல்பாக வைத்துக் கொண்டு,”நீங்கக் கேட்கனும்னு நிர்பந்தம் இல்லை!” என்றுரைத்த அவனது மனைவி, தன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

 

மடிக்கணினியுடன் போராடிக் கொண்டு தான், கிடைக்கும் நேரத்தில், கணவனிடம் தன் கதையைச் சொல்லிக் கொண்டு இருந்தாள் யக்ஷித்ரா.

 

அப்படியிருந்த நிலையில், அவனுக்குத் தேவையில்லை எனும் போது, தான் மட்டும் கணவனைக் கட்டாயப்படுத்துவது நியாயமற்றது எனப் புரிந்து கொண்டு, அன்றிலிருந்து, அவனிடம் கதைச் சொல்வதை நிறுத்தி விட்டாள்.

 

முன்பை போலவே, யக்ஷித்ராவின் ஒதுக்கமும் தொடங்கி விட்டது.

 

அவற்றை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாததால், கீரவாஹினிக்கும் கூட, மகன் மற்றும் மருமகளின் நடவடிக்கைகள் தெரியவில்லை.

 

அற்புதனிடம் செல்லாததை எல்லாம் எண்ணிப் பார்க்கும் மனநிலையும் யக்ஷித்ராவிற்கு இல்லை. அவற்றை மனதிலேயே புதைத்து விட்டு, மீண்டும் தோண்டிப் பார்க்கும் அவகாசம் கிடைத்தாலும் கூட, அதைப் பற்றிக் கொள்ளத் தயாரில்லை அவள்.

 

“நீ எப்போ லேட் ஆகப் போனாலும் உன் ஹஸ்பண்ட் கால் செய்து கேட்பாரே! இப்போ ஏன் அப்படி எந்த ஃபோன் கால்ஸூம் வர்றது இல்லை யக்ஷி?” என்ற நேஹாவிற்கு என்னப் பதில் கூறுவது எனத் திடுக்கிட்டுப் போனாள் யக்ஷித்ரா.

 

  • தொடரும் 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்