Loading

அத்தியாயம்- 14

 

           தேன்மலர், ஸாமும் கின்ஸியும் கூறிய செய்திக் கேட்டுக் கட்டுக்கடங்காதக் கோபம் கொண்டவள், அவர்களிடம் மேலும் பலக் கேள்விகள் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொண்டாள். பின் கின்ஸி அவள் இப்போது எங்கிருக்கிறாள் எப்படியிருக்கிறாள் என்று பேச்சை மாற்ற தேன்மலர் சற்றே இறுக்கம் விடுத்து இளகினாள். 

 

    தேன்மலர் “ரொம்ப தேங்க்ஸ் ஸாம்…. தேங்க்ஸ் கின்ஸி… நீங்க ரெண்டு பேரும் ஹெல்ப் பண்ணலனா இந்நேரம் என்ன பண்ணிருப்பேனே தெரில…” என்று உணர்ச்சிகள் மேலோங்கிப் பேச, 

 

    ஸாம் “ஹே ஸ்வீட்டி பை… என்னதிது புதுசா… சீரியஸா பேசறது உனக்கு செட்டாகல… அந்த சேட்டர் பாக்ஸ் தேன்மலர் தான் எங்களுக்கு வேணும்…” என்று கூற தேன்மலர் இதழ்கள் விரிந்தது.

 

      கின்ஸி “டோன்ட் பி பார்மல் ஸ்வீட்டி பை… ஆக்ஷீவலி நீ குடுத்த வேலகூட இன்ட்ரஸ்ட்டிங் தான்… ரிசர்ச்சரா எங்க மூளைக்கு பல தீனி போடுது… அப்டியே கொஞ்சம் டிடெக்டிவ் ஆன ஃபீலிங்… வீ ஆர் ஸோ தீரில்ட்…” என்று பரவசத்தோடு கூறினாள். 

 

    தேன்மலர் “ஹ்ம்ம்… நீ டிடெக்டிவ்வா ரிசர்ச்சரா ஃபீல் பண்ணது போதும் எப்போ ஸாமோட பெட்டர் ஹாப்பா ஃபீல் பண்ணலான்னு இருக்க… ஏற்கனவே ஸாம் என் மேல செம கடுப்புல இருப்பான்… உங்க வெட்டிங் என்னால தள்ளி போய்டுச்சு… இப்ப நீ வேற இப்டி சொல்ற… அவனுக்குனு கொஞ்சம் டைம் ஒதுக்கு டி ஜேம்ஸ் பாண்ட்…” என்றாள். 

 

         கின்ஸி சிரித்து “அவனுக்கு என்ன தனியா டைம் ஸ்பென்ட் பண்றது… 24/7 நானும் அவனும் சேந்து தானே வேல பாக்றோம்…” என்றாள். 

 

     தேன்மலர் “அடியேய் வேலயும் லவ்வும் ஒன்னா டி ஜேம்ஸ் பாண்ட்…” என்று கூற, 

 

    கின்ஸி க்ளுகென்று சிரிக்கும் ஒலி கேட்கவும் தேன்மலர் “ஹேய்… ஸாம வெறுப்பேத்த தான் அப்டி சொன்னியா… ஏன்டி எப்ப பாரு என்னை அவன்ட்ட கோத்து விட்ற…” என்று கோபித்துக் கொண்டாள். 

 

     ஸாம் “ஸ்வீட்டி பை…. இதுக்கெல்லாம் சேத்து எங்க ஹனிமூன் செலவு பூரா நீ பண்ற… வீ ஆர் ப்ளானிங் ஃபுல் யூரோப் ட்ரிப் ஃபார் ஹனிமூன்… ஸோ அதுக்கு தகுந்த மாறி நீ ப்ளான் பண்ணிக்கோ… அவ்ளோ தான்… டாட்…” என்றான். 

 

      தேன்மலருக்கு தலை சுற்றாத குறை “பேட்மேன்… நீ ரொம்ப பேட்றா… அவ்ளோ பணத்துக்கு நா எங்கடா போவேன்…” என்று கேட்க, 

 

      கின்ஸி “ஹே ஸாம் அவகிட்ட என்ன விளையாட்டு… ஸ்வீட்டி பை நாங்க பேரீஸ் அன்ட் ஸ்விஸ் தான் ப்ளான் பண்ணிற்கோம்…” என்றாள். 

 

      தேன்மலர் “அப்பாடா… அப்ப ஓகே… எவ்ளோ நாள் வேணா அங்க ஸ்டே பண்ணுங்க… மொத்த செலவும் நா பாத்துக்றேன்… பேட்மேன் உன் ப்ளான் புஸ்ஸா…” என்று கூறி சிரித்தாள். 

 

     ஸாம் “கின்ஸி… யூ ஆர் ட்டூ பேட்… கொஞ்ச நேரம் அவள புலம்ப விடலான்னு நினச்சா… நீ காப்பாத்திவிட்றியா… நீ இன்னிக்கு உன் அப்பார்ட்மெண்ட் போகமுடியாது…. பை ஸ்வீட்டி பை…” என்று கூறி அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டு ஸாம் கின்ஸியிடம் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க, தேன்மலர் சிரிப்போடு கைப்பேசியை அணைத்தாள்.

 

                  ஸாமும் கின்ஸியும் சிதம்பரத்திற்கு கொடுத்த மருந்தைப் பற்றி கூறிய தகவல்களால் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும் தற்போதைக்கு அதை புறந்தள்ளி, அவற்றைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள். பின் மடிக்கணினியில் மும்முரமாக எதையோ தேடிப் படித்தவள், மடிக்கணினியை மடக்கி வைத்துவிட்டு புருவ முடிச்சுகள் விழ, சிந்தனை ரேகைகளை முகத்தில் படர விட்டாள். யோசித்து யோசித்து தலை வலிப்பதுப் போலிருக்க, அப்படியே ஸோஃபாவில் கண்மூடி சாய்ந்தமர்ந்தாள். ஸாம் மற்றும் கின்ஸியிடம் பேசியது வெகு நாட்கள் கழித்து மனம் லேசானது போல் உணர, அப்படியே 

உறங்கிப் போனாள். 

 

     வெளியேச் சென்று விட்டு திரும்பிய தேவா, தேன்மலர் அமர்ந்துக் கொண்டே உறங்குவதைக் கண்டவன், தன் கையிலிருந்த பைகளை அவளருகே ஸோஃபாவில் வைத்தான். அவள் தூக்கம் கலையா வண்ணம் அவள் கையிலிருந்த மடிக்கணினியையும் கைப்பேசியையும் எடுத்து டீபாயின் மேல் வைத்தவன் சில நொடிகள் அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் தன்னறைச் சென்று கை, முகம் அலம்பி உடை மாற்றி கீழே வர, தேன்மலர் உறக்கம் கலைந்து அமர்ந்திருந்தாள். 

 

      தேவாவை கண்ட தேன்மலர் “எப்போ சார் வந்தீங்க… சாரி சார் நீங்க வந்தது தெரில… தலை வலிக்ற மாறியிருந்துச்சு அப்டியே தூங்கிட்டேன்… ஒரு ஹாப் அண்ட் ஹார்ல சமையல் முடிச்சர்றேன்…” என்று விட்டு அடுக்களைக்குச் செல்ல முற்பட, தேவா அவள் கைப்பிடித்துத் தடுத்தான். 

 

    தேவா “மலர்… உன்ட்ட காலைல தான் சொன்னேன்… ரொம்ப பார்மலா பேசாதனு… தூக்கம் வந்தா தூங்கு… இப்டி சும்மா சும்மா சாரி கேக்காத…” என்று கடிந்துக் கொள்ள, 

 

   தேன்மலர் தலையைக் குனிந்துக் கொண்டு “சரி சார்… இனி அப்டி பேசல…” என்றாள். 

 

          அவளைக் கண்ட தேவா அவளதுக் கையை விடுவித்துத் தணிவாக “சரி மா… அந்த கவர்ல ட்ரெஸ் இருக்கு… உனக்கு புடிச்சுருக்கான்னு பாரு… இல்லனா மாத்திக்கலாம்… நீ தலை வலியோட சமைக்க வேணாம்… இப்பவே மணி ஒன்னுக்கு மேல ஆச்சு… நா சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன்… நீ பொறுமையா ட்ரெஸெல்லாம் பாரு…” என்றான். 

 

     தேன்மலர் நிமிர்ந்து அவனை நோக்கியவள், ஏதும் கூறாது தலையசைத்து விட்டு ஸோஃபாவிலிருந்த பைகளிலிருந்து ஆடைகளை எடுத்துப் பார்த்தாள். ஆடைகளைப் பார்த்த தேன்மலர் அவன் ஏழெட்டு வாங்கி வந்திருக்கவும் மறுபடியும் கடிந்துக் கொள்வானோ என்று தயங்கிக் கொண்டே “சார்… ஏன் இவ்ளோ… ரெண்டோ மூனோ எடுத்துருக்கலாமே… வீண் செலவு தானே…” என்றாள். தேவா முறைக்கவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள். 

 

     தேவா “ரெண்டு ட்ரஸையே தொவச்சு தொவச்சு போட்டுப்பியா… நா சம்பாரிக்றதெல்லாம் சும்மா தான் அக்கௌன்ட்ல இருக்கு… அம்மா, அப்பா, அம்மு இருந்த வரைக்கும் அவங்களுக்கு வாங்கிக் குடுத்தேன்… இப்போ தான் அவங்க யாரும் இல்லையே… நீ கடனா தானே வாங்கிக்கப் போற அப்றம் என்ன…” என்று வேதனையோடு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவனின் குடும்பப் புகைப்படத்தை வெறித்தவாறு கூறினான்.

 

                தேன்மலர் “ஏன்டி அவர வேதனை படுத்ற மாறியே பேசித் தொலைக்கிற…” என்று தன்னைக் கடிந்துக் கொண்டவள், “சார் ப்ளீஸ்…. நீங்க கஷ்டபடாதீங்க… நா ஏதோ லூஸு தனமா பேசிட்டேன்…” என்று வருத்தத்தோடப் பேசினாள். 

 

    தேவா திரும்பி அவளைப் பார்த்தவன் “சரி… ட்ரஸ் சைஸ் கரக்ட்டா இருக்கான்னு பாரு… இல்லனா வேற மாத்திக்கலாம்…” என்றான். 

 

    தேன்மலர் “கரக்ட்டா இருக்கு சார்… அப்றம் உங்க செலக்ஷன்ஸ்லாம் ரொம்பவே சூப்பரா இருக்கு…” என்று உடைகளைத் தடவியவாறுப் புன்னகையோடு கூற, தேவா மென்னகைப் புரிந்தான். 

 

     பின் தேன்மலர் ஒரு பைக்குள் சிறிய பை ஒன்றிருக்க அதை எடுத்துப் பார்த்தவள் தேவாவை பார்த்து விழித்தாள். தேவா முகத்தில் எவ்வுணர்வுமின்றி “அது… உனக்கு தான்…. தேவைப்படும்னு தான் வாங்குனேன்…” என்றான்.

 

      தேன்மலர் இதற்கும் எதாவது கூறினாள் அவன் வேதனைக் கொள்வானோ என்று அமைதியாகத் தலையசைத்து சங்கடமாக அவனை நோக்கினாள். 

 

     அவளின் சங்கடம் புரிந்த தேவா “மலர்… கடைல உள்ள பொண்ணு கிட்ட உன் ட்ரஸ் சைஸ் சொல்லி தான் கேட்டேன்… அந்த பொண்ணு தான் இது சரியாயிருக்கும்னு எடுத்து குடுத்தா… சைஸ் பத்தலனா சொல்லு மாத்திக்கலாம்… அம்மாவும் அம்முவும் கடைக்கு போகும்போது வாங்குவாங்க அப்போ பாத்துருக்கேன்… அதான் உனக்கும் தேவப்படுமேன்னு வாங்குனேன்…” என்று எச்சலனமுமின்றி அவளின் கண்களைப் பார்த்துக் கூறினான். 

 

       அவன் கண்களிலும் பேச்சிலுமிருந்த கண்ணியம் கண்டு தன் சங்கடம் விடுத்து மென்னகையோடு அவன் கண்களை நோக்கியவள் “நீங்க இவ்ளோ விளக்கம் தர தேவயில்ல சார்… நீங்க எப்டி பட்டவருன்னு என்ன காப்பாத்தி, உங்க வீட்ல தங்க இடம் குடுத்து, எனக்கு உதவி செய்றேன்னு சொன்னதுலயே நா புரிஞ்சுகிட்டேன் சார்… அப்பா பாரின்லயே இருந்தனால எனக்கு தேவையானத அம்மாவோ, அப்பாயியோ இல்ல நானோ தான் வாங்குவோம்… அருள் ட்ரஸ் வாங்கிக் குடுத்துருக்கான்…. ஆனா இதுவரைக்கும் ஒரு ஆண் இன்னர்ஸ்லாம் வாங்கி தந்ததில்லை… அதான் சார் கொஞ்சம் சங்கடமா ஃபீல் பண்ணேன்… நீங்க இத பெருசா எடுத்துக்க வேணாம்… நீங்க வாங்கி குடுத்ததுல எந்த பிரச்சனையும் எனக்கில்ல…” என்றாள். 

 

     அவள் கூறியதைக் கேட்ட தேவா “எப்டி என்னை இப்டி நம்புற…” என்று குரலில் ஆச்சர்யம் காட்டிக் கேட்டவன், அவளின் விழி விட்டு விழி அகற்றவில்லை. 

 

     அவனின் விழிகளைக் கண்ட அவளும் “என் உள்ளுணர்வு பொய் சொல்லாது சார்…” என்று குறுநகைப் புரிந்து பைகளை எடுத்து அறையில் வைக்கச் சென்றாள். 

 

    தேவா அவள் செல்வதையே விழி விரித்துப் பார்த்தவன் வீட்டின் காலிங் பெல் சத்தத்தில் தன்னிலை அடைந்தான். திடுக்கிட்டுத் தலை சிலுப்பியவன் தலையைக் கோதிக் கொண்டே வாசல் பக்கம் விரைந்தான். 

 

        தேவா மீண்டும் உள்ளே வருகையில் சாப்பாட்டுப் பையோடு வர, அறையில் அனைத்தையும் வைத்துவிட்டு வந்த தேன்மலர் சாப்பாட்டு மேசையில் சாப்பிடத் தட்டுகளை எடுத்து வைத்தாள். இருவரும் அமைதியாக உணவு உண்டு முடித்துக் கூடத்தில் வந்து அமர்ந்தனர். 

 

    தேன்மலர் அவனிடம் ஸாம் கூறிய தகவல்களைக் கூற, அதைக் கவனமாகக் கேட்ட தேவாவிற்கும் கோபம் வர, தன்னைக் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தான். 

 

     தேன்மலர் “சார்… நா கூகுள் சேர்ச் பண்ணி ஏ ஆர் பார்மசுடிக்கல்ஸ் யாரோடதுனு தெரிஞ்சுகிட்டேன்… ஆர்யன், ரகு பாபு ன்னு ரெண்டு பேர் பார்ட்னர்ஷிப்ல அந்த கம்பெனி ரன் பண்றாங்க…. அதோட அவங்க என்னென்ன மெடிசின்ஸ் தயார் பண்றாங்கன்னு சேர்ச் பண்ணி தெரிஞ்சுகிட்டேன்… எனக்கு குடுத்த மயக்க மருந்து எவ்ளோ நேரம் தாக்கு புடிக்கும்னு லிங்கம் அவன் ஆள்கிட்ட சொல்லும்போதே கெஸ் பண்ணேன்… ஏன்னா இந்தியால ஒரு மூனு நாள் கம்பெனிங்க தான் அந்த மருந்த தயாரிக்றாங்க…. அதுல ஏ ஆரும் ஒன்னு அத வச்சு பாத்தா தான் எனக்கு என்னை கடத்துனது, அப்பாவ இப்டி பண்ணது அவங்கதான்னு கன்பார்ம் ஆகுது… அதோட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க ரிசர்ச் பண்ணி கண்டுபுடிச்ச ரெண்டு மருந்து டேன்ஜரஸ்னு சொல்லி க்ளினிக்கல் ட்ரையலோட செகன்ட் ஸ்டேஜ்லயே cdsco( மத்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு) அத ஸ்டாப் பண்ணி, அப்ரூவல் தரமாட்டோம்னு சொல்லி அந்த ரிசர்ச்க்கு தடை விதிச்சுருக்காங்க… பட் அது என்ன மருந்து எந்த நோய்க்காக கண்டுபுடுச்சதுன்ற டிட்டெய்ல்ஸ் தெரில… ஸோ ஸாம் சொன்னத வச்சு பாத்தா… அவங்க மறுபடியும் ஏதோ மருந்து கண்புடிக்க ஆரம்பிச்சுருக்கனும்… அத பத்தி அப்பாவுக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு… அதான் அப்பாவ வேணும்னே இப்டி பண்ணி அப்பா மேல அந்த மருந்த டெஸ்ட் பண்ணீற்காங்க… நல்ல வேளை டவுட் வந்து நாங்க அந்த மருந்த ஒரு மூனு வாரத்துக்கு மேல அவருக்கு குடுக்கல…. குடுத்துருந்தா…” என்று நிறுத்தி உடல் நடுங்கிய மறுகணம் கோபத்தில் அவள் உடல் விரைத்து முகம் இறுகியது. தன் கோபத்தைக் கட்டுப்படுத்திய தேவா, தேன்மலர் கூறியதைக் கேட்டு அவள் புறம் திரும்ப, அவளது இறுக்கம் கண்டு இறுகியக் குரலில் “ம்ம்… நானும் சில விஷயம் விசாரிச்சேன்… அதுல ஆர்யன் அப்றம் ரகு எப்டி பட்டவனுங்கனு தெரிஞ்சுகிட்டேன்…” என்றான். தேன்மலர் அதே இறுக்கத்துடன் அவனை ஏறிட, தேவா அழுத்தமாக அவளின் விழி நோக்கினான்.

 

               பின் அவளின் விழி பார்த்தவாறு “ஆர்யன், ரகு ரெண்டு பேரோட நேட்டிவ் ஹைத்ராபாத் தான்… ஆனா படிச்சதெல்லாம் சென்னைல… ஆர்யனும் ரகுவும் (வசதியான பல பெரிய வீட்டு பிள்ளைகள் பயிலும் சென்னையிலிருக்கும் ஒரு பிரபலமான தனியார் பல்கலைகழகத்தின் பெயர் சொல்லி) யுனிவர்சிட்டில கெமிக்கல் இன்ஞ்சினியரிங் படிச்சாங்க…. அங்க தான் ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆனது… ரெண்டு பேரு குடும்பமும் ஹைத்ராபாத்ல பேர் சொல்ற அளவுக்கு பெரிய வசதியான குடும்பம்…. ரெண்டு பேரோட அப்பாவுக்கும் நிறைய பிஸ்னஸ் இருக்கு அங்க… ரெண்டு பேரும் காலேஜ்ல படு பேமஸான ஆளுங்க…. ஆர்யன் மேல பொண்ணுங்களுக்கு அவ்ளோ க்ரேஸ்… அவனுக்கு ஒரு ரசிக கூட்டமே இருந்துருக்கு… ஆர்யன் கோவக்காரன் எதுக்கும் பயப்படாதவன்… ரகு அப்டியே அவனுக்கு அப்போஸிட் அமைதியானவன் ஆனா ரொம்ப தெளிவானவன்… எதா இருந்தாலும் யோசிச்சு கரக்ட்டா செய்வான்… எந்த பிரச்சனைனாலும் இவனுங்க ரெண்டு பேரும் முன்னாடி நின்னா எதிர்ல இருக்றவங்க அமைதியா போய்டுவாங்க… ஸ்டூடன்ட்ஸ்லேர்ந்து லெக்ச்சரர்ஸ், பிரின்ஸிபல் வரைக்கும் இவனுங்க மேல மரியாதை உண்டு… ஏன்னா ரெண்டு பேரும் படிப்புல அவ்ளோ கெட்டி… ரெண்டு பேரும் அனாவசியமா எந்த பிரச்சனைக்கும் போக மாட்டாங்க… ஆனா அவங்கள தேடி பிரச்சனை வந்தா… அவங்ககிட்ட ஏன்டா பிரச்சனை வச்சுகிட்டோம்னுன்ற அளவுக்கு எதிர்ல இருக்றவன் நொந்து போற அளவுக்கு அவனுங்க ரியாக்ஷன் இருக்கும்… ஆர்யன் வீட்ல அவன் சொல்றது தான் எல்லாமே… ரகு வீடு கொஞ்சம் ஆர்தடாக்ஸ்… ஆனா ஆர்யன் கூட அவன் பழகுறத அவங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க… ஆர்யன் பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப வீக்… அதுக்காக அவன் எந்த பொண்ணையும் இதுவர தேடி போனதில்ல…. ஆனா இவன தேடி வர்ரவங்கள விட்டதேயில்ல… ரகுவுக்கு ஆர்யன் கிட்ட புடிக்காத ஒரு விஷயம் இது மட்டும் தான்…. இவனுங்க ப்ரண்ட்ஷிப் பத்தி சுருக்கமா சொல்லனுனா மகாபாரதத்துல வர துரியோதனன், கர்ணன் மாறினு சொல்லலாம்…. ரெண்டு பேரும் சேந்து ஒரு விஷயத்துல இறங்குனா அத சக்சஸ் புல்லா முடிக்காம விட மாட்டானுங்க…. ரெண்டு பேத்துக்கும் ரிசர்ச்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்… காலேஜ்ல நிறைய ப்ராஜக்ட்ஸ் புதுசா புதுசா பண்ணி லெக்ச்சரர்ஸ அசரடிச்சுருக்கானுங்க… ரெண்டு பேருக்கும் ஒரு பார்மா கம்பெனி ஆரம்பிக்கனுன்றதுதான் ட்ரீம்… அதனால சென்னைல யூஜி முடிச்சுட்டு… லண்டன்ல பயோ மெடிக்கல்ல பிஜி பண்ணானுங்க… அப்றம் ஒன்றை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்க்காக அங்கேயே ஒரு பார்மா கம்பெனில வொர்க் பண்ணி தொழில் நுணுக்கத்த கத்துக்கிட்டு அங்க சம்பாரிச்ச காச முதலீடா வச்சு நாலு வருஷத்துக்கு முன்னாடி ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ ஆரம்பிச்சானுங்க… கொஞ்ச நாள்லயே அவனுங்க கம்பெனிய பெரிய லெவல்ல டெவலப் பண்ணி பல பெரிய கம்பெனிங்கள திரும்பி பாக்க வச்சானுங்க… அவனுங்க ரிசர்ச்க்கு நிறைய பணம் தேவப்பட்டதால சைட்ல போதை மருந்து விக்றது, கடத்றதுனு பண்றானுங்க… அது மூலமா தான் நாராயணசாமி அவனுக்கு அறிமுகமானான்…. அவனுங்களோட ரிசர்ச்ச சக்ஸஸ் பண்ண எந்த லெவலுக்கும் இறங்குவானுங்க… ஆர்யனுக்கு கோவமும் லேடிஸும் வீக்னஸ்… ஆனா ரகு ரொம்ப தெளிவா சாணக்கியத்தனமா யோசிக்க தெரிஞ்சவன்… அவனோட மூளையால தான் இவ்ளோ பெருசா இவ்ளோ கம்மி டைம்ல வளந்துருக்கானுங்க… ரகுக்கு அவன் குடும்பம்னா ரொம்ப புடிக்கும்…. அவங்க அம்மா, அப்பா பாக்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியோட இருக்கான்…. ஸோ இவனுங்கள டீல் பண்ணனுனா… நாம இவனுங்கள விட புத்திசாலித்தனமா யோசிக்கணும்… அதே சமயம் ரொம்ப கேர்புல்லா இருக்கணும்…. அப்றம் மலர் உன்னை லிங்கம் ஆளுங்க தீவிரமா தேட்றானுங்கனு இன்பர்மேஷன் கெடச்சுருக்கு…” என்றான்.

 

              தேன்மலர் முகத்தில் இறுக்கம் மறைந்து சிந்தனை ரேகைகள் படர, தேவாவும் அவள் கூறிய விடயம் பற்றி யோசிக்கலானான். தேன்மலர் சிறிது நேர யோசனைக்குப் பின் புருவங்கள் முடிச்சிட “சார்…. நீங்க சொன்னத வச்சு யோசிச்சா…. ஆர்யனையும் ரகுவையும் புடிக்கணுனா முதல்ல அவனுங்களோட பினாமியா இருக்ற நாராயணசாமிக்கு வலை விரிக்கணும்….” என்றாள். 

 

     தேவா “முட்டாள் மாறி பேசாத மலர்… முதல்ல நாராயணசாமி மேல கை வச்சா… பல பெரிய தலைங்களோட தலையீடு வரும்… அப்றம் ஈஸியா தப்பிச்சுருவான்…. ஆர்யனும் ரகுவும் உஷாராயிடுவானுங்க…. எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நாமேள அவனுங்க நம்மள தேடி வர க்ளூ குடுத்த மாறி ஆயிரும்….” என்றான். 

 

      அதன்பிறகே இதை சிந்தித்த தேன்மலர், சில நொடிகள் யோசனைக்குப் பின் ஏதோ நினைவு வந்தவளாக முகம் பிரகாசிக்க “சார்… எனக்கு ஒரு யோசனை… சொல்லட்டா…” என்று கேட்டாள். 

 

    தேவா அவளின் முகப் பிரகாசத்தை வைத்தே அவள் ஏதோ தெளிவாக யோசித்திருக்கிறாளென்று ஊகித்தவன் “ம்ம்… சொல்லு..” என்று ஊக்கப் படுத்தினான். 

 

       தேன்மலர் “சார்…. டி ஒரு தடவ சொல்லிற்காரு…. அப்பாவோட நிலைமைக்கு அப்பாவோட இந்தியா வந்த டீம்ல யாரோ ஹெல்ப் பண்ணதா சொன்னாரு…. அந்த ஆளு யாருனு தெரிஞ்சு அவர லாக் பண்ணா ஆர்யனும் ரகுவும் ஆட்டோமேட்டிக்கா சிக்குவாங்க… அப்றம் நாராயணசாமிய ஈஸியா அதுல சம்பந்தபடுத்தலாம்…. அப்டி பண்ணா இது இன்டர்நேஷ்னல் விவகாரம் ஆகும்… நாராயணசாமியால ஈஸியா எஸ்கேப் ஆக முடியாது….” என்றாள். 

 

       அதைக் கேட்ட தேவா சிறிது யோசனைக்குப் பிறகு அவளை மெச்சுதலோடுப் பார்த்து “நல்ல ப்ளான் தான்… இதுல ரிஸ்க் அதிகம் தான்… ஆனா வேற வழியில்ல பண்ணுவோம்… அதுக்கு முன்னாடி ஆர்யனுக்கும் ரகுக்கும் ஹெல்ப் பண்ற எப் டி ஏ ஆபிஸர எப்டி கண்டுபுடிக்றது…” என்று வினவினான். 

 

      தேன்மலர் மர்மப் புன்னகைப் புரிந்து “அதுக்கு ஒரு ஆளிருக்கு… அத என்கிட்ட விட்ருங்க சார்…” என்றாள். 

 

     தேவாவும் மென்னகைப் புரிந்து “ம்ம்… ஓகே… நானும் ஆர்யன், ரகுவ பத்தி வேற எதாவது க்ளூ கெடைக்குமான்னு என் சைட்ல விசாரிக்றேன்….” என்று கூற, தேன்மலர் தலையசைத்தாள்.

 

      பின் இருவரும் அவரவர் அறைக்கு சிறிது ஓய்வெடுக்கச் சென்றனர். தேன்மலர் மடிக்கணினியை உயிர்ப்பித்து யாருக்கோ மின்னஞ்சல் அனுப்பிவிட்டு சிறிது நேரம் கண்கள் மூடி படுத்தாள். தேவா தன்னறையில் யாருக்கோ அழைத்து பேசியவன் விரைவாகத் தகவல் கூறுமாறு கூறி துண்டித்தான்.

 

                 இங்கு இவர்கள் இருவரும் ஆர்யனையும் ரகுவையும் சிக்க வைக்கத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, அதுயறியாத ஆர்யனும் ரகுவும் அவரவர் தனிப்பட்ட வேலைகளில் மூழ்கியிருந்தனர். ரகு அலுவலக வேலைகளிலும் தற்சமயம் அவர்கள் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியிலும் தேன்மலரை தேடுவதிலும் கவனம் பதித்திருக்க, ரகுவிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு ஆர்யன் தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். 

 

     ஆர்யனிற்கு பார்த்திருக்கும் பெண் சாருமதி, சென்னையின் பெரிய தொழிலதிபரின் மகள். சாருமதியின் தந்தைக்கு அரசியல் செல்வாக்கு அதிகம், மத்தியில் வரை அவரது பேச்சு எடுபடும். சாருமதி ஒருமுறை தொழில்முறை விழா ஒன்றிற்கு அவள் தந்தையோடுச் சென்றபோதுதான் ஆர்யனை கண்டாள். அவனது அழகும் மிடுக்கும் அவன் தொழிலில் வளர்ந்துவரும் விதமும் அவளைக் கவர்ந்தது. மேலும் ஆர்யனை பற்றி தன் தந்தை வாயால் பல விடயங்கள் கேட்டவள் அவன்மீது ஈர்ப்புக் கொண்டாள். ஆர்யனை பற்றி தன் தோழிகளிடம் கூற, அதில் அவனுடன் கல்லூரியில் பயின்ற ஒருவள் அவன் கல்லூரியில் அப்படி இப்படி என்றும் அவனுக்கு பல பெண் ரசிகைகள் இருந்தனர் என்றும் கூற, சாருமதிக்கு அவன்மீது காதல் அரும்பத் தொடங்கியது. ஆர்யன் தன் தந்தையின் தொழில் விடயமாக ஒருமுறை சாருமதியின் தந்தையை சந்தித்தான். அதன்பின் ஆர்யனின் தந்தையும் சாருமதியின் தந்தையும் தங்கள் தொழிலில் ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொள்ள, அதன்பின் சாருமதிக்கு ஆர்யனை அடிக்கடி பார்க்க, அவனுடன் பேசிப் பழக பல சந்தர்ப்பங்கள் அமைந்தது. அதோடு ஆர்யனின் மீதான அவள் காதலும் வளர, ஒருக்கட்டத்தில் ஆர்யனிடம் அவள் தன் காதலைச் சொன்னாள். 

 

         ஆர்யன் சிரித்து பின் தன்னைப் பற்றி அனைத்தும் கூறி, ஒருவேளை அவளைத் திருமணம் செய்தால் அதன் பிறகும் தன்னைத் தேடி வரும் பெண்களை அவன் நிராகரிக்க மாட்டான் எனவும் அதில் அவள் தலையிடக் கூடாதெனவும் மற்றும் தன்னுடையத் தொழில், பிற சொந்த விடயங்களிலும் அவ்ளோ அவளது குடும்பமோ தலையிடக் கூடாதென்றான். சாருமதிக்கு ஆர்யனை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தாலும் அதை அவன் வாயால் கேட்க அவளுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அதனால் அவனிடம் ஏதும் கூறாது அமைதியாக வந்தவள், நிறைய யோசித்து தன் காதல் அவனை மாற்றும் என்ற நம்பிக்கையில் அவனை சந்தித்து தனது சம்மதம் கூறினாள். அவள் சம்மதிக்க மாட்டாளென்று நினைத்த ஆர்யன் அவள் சம்மதிக்கவும் பின் தனக்கு இடைஞ்சல் தராத இணை தானாக கிடைக்கும் போது ஏன் விடவேண்டுமென்று சரியென்றான். அதன்பிறகு இருவரும் அவரவர் வீட்டில் பேசி நிச்சயம் முடித்து தற்போது இரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் வந்து நிற்கிறது அவர்களது விவகாரம். 

 

      ஆர்யன் சம்மதித்தற்கு அது மட்டும் காரணமல்ல, சாருமதி என்ன தான் வசதியான வீட்டு பெண்ணாக இருந்தாலும் வெளிநாட்டிற்கு சென்று படித்திருந்தாலும் வெளியுலக அனுபவம் நிறைய இருந்தாலும் கலாச்சாரத்தை மதிப்பவள், குடும்பம் என்று வரும் போது மிகுந்த உணர்ச்சி வசப்படக் கூடியவள், அதோடு அவனுக்கும் அவளை, அவள் அழகைப் பிடித்திருந்தது. ஆர்யன் அவன் நினைத்ததை சாதிக்கிறானா? இல்லை சாருமதி தன் காதலினால் அவனை மாற்றுகிறாளா? என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.

 

             அங்கு அருள் தினம் தினம் தேன்மலரை நினைத்துக் கோபமும் கவலையும் கொண்டான். ராகவி மற்றும் சுரேஷ் அவளைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ஏதேதோ கூறி அவர்களை சமாளித்தான். அருளின் கவலை நாளாக நாளாக தேன்மலருக்கு ஏதேனும் ஆபத்தோ என்ற பயமாக உரு மாறியது. அருள், தேன்மலர் தன்னைத் தொடர்பு கொள்வாள் என்று காத்திருந்தவன், அவனுள் பயமெழவும் என்னவானாலும் சரி என்று தன் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் மூலம் தேன்மலரை தேட ஆரம்பித்தான். 

 

     அருள் ஒருபுறம் அவளைத் தேட, அவளைப் பிடிக்காமல் ஆர்யனை காண வரமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு லிங்கம் ஒருபுறம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தான். லிங்கம் தேடலின் முதற்கட்டமாக தேன்மலர் மீண்டும் பெங்களூர் சென்றிருப்பாளோவென்று அங்குத் தேட அங்கும் அவள் இல்லாமல் போகவும் திருச்சிக்கு சென்றாளா என்று விசாரிக்க அங்கும் அவள் செல்லவில்லையென தெரிய, அவள் சென்னையை விட்டு வெளியேச் செல்லவில்லை என்ற முடிவிற்கு வந்தான். அதனால் அவளை சென்னைக்குள் தேடும் படலத்தை மும்முரமாக முடுக்கி விட்டான். தானே களத்திலிறங்கி போரூரில் அவள் தப்பிச் சென்ற குடோனிற்கு அருகேயிருந்தக் குடியிருப்புப் பகுதியில் தன் விசாரணையை ஆரம்பித்தான். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் வேலைகளில் முனைப்பாகவும் தீவிரமாகவுமிருக்க, யார் யாரிடம் சிக்குகிறார்கள்? யார் நினைத்ததை சாதிக்கிறார்கள்? என்று போகப் போகப் பார்ப்போம்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்