Loading

அத்தியாயம் – 2

கம்பீரமும் சாந்தமும் சிரிப்பும் ஆக அந்த அறையில் அமர்ந்திருந்தவரை பார்த்ததும் சற்றுமுன் இருந்த அனைத்து உணர்வுகளும் மறைந்து போய் மனதில் ஒரு நிம்மதி பரவியது. அவளைக் கண்டதும் சிரிப்பு இன்னும் பெரிதாக விரிந்தது.

“வா ருத்ரா! நேரமாவே வருவேன்னு எதிர்பார்த்தேன்” என்றவர் குரலில் எதிர்பார்ப்பு வெளிப்படையாக தெரிந்தது.

அறையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, “அங்கிள் பீலிங் சோ டவுன். எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல. ஐ பேர்லி நீட் அ காபி” என்று உரிமையாக அமர்ந்தாள்.

“என் செல்ல பொண்ணு இப்படி டயர்டா வருவான்னு உங்க ஆண்டி டிபன் சேர்த்து அனுப்பி இருக்கா. முதல் இதை சாப்பிடு அப்புறம் பிளாஸ்க்குல இருக்க காபியை ஊத்தி தரேன். “

“ஆன்ட்டி எப்பவும் என் மேல ஒரே மாதிரி தான் பாசம் காமிக்கிறாங்க” என்றவளுக்கு அழையா விருந்தாளியாக இன்னும் ஒருவனது நினைவும் வந்தது. கண்ணில் நீர் சுரக்க அதை செங்கோட்டையன் அறியாமல் பார்த்துக் கொண்டாள்.

“உன் ஆன்ட்டிக்கு உன் மேல எப்பவும் தனி பாசம்” என்றவர் அதற்கு மேல் பேசாமல் அவளை சாப்பிட வைத்தார்.

அவள் சாப்பிடும் வரை எதுவும் பேசாமல் இருந்தவர் அவளுக்கு குழம்பியை ஊற்றிக் கொடுத்தவாரே பேச ஆரம்பித்தார்.

“தொகுதியில திடீர்னு ஏற்பட்ட சூழ்நிலையை ரொம்ப அழகா கையாண்டு இருக்க ருத்ரா. ஞானவேல் பொண்ணுனா சும்மாவா? அப்படியே அவனோட கூர்மையான புத்தி உனக்கும் இருக்கு. அதனால தான் சாகும்போது அவனுடைய அரசியல் வாரிசுன்னு உன்னை அறிவிச்சுட்டு செத்துப் போனான்.

அந்த சேனல்ல ஏன் ருத்ராக்கு ரொம்ப முக்கியத்துவம்ணு கேட்டாங்க இல்ல. அதுக்கு ஒரே பதில் நீ ஞானவேல் பொண்ணு. இந்த கட்சி தூணோட பொண்ணு.

பதவி வேணாம். என் மக்களுக்கு சேவை செய்யணும். என்னோட அரசியல் திட்டத்தை மட்டும் செயல்படுத்துங்க அது போதும். கட்சிக்காக உயிரை கூட கொடுப்பேன்னு கடைசிவரை உழைத்தானே அவனோட பொண்ணு” என்று அவர் அந்த அறை அதிரும்படி கத்திய போதே அவளுக்கு புரிந்தது. அவரும் அந்த செய்தியை பார்த்திருக்கிறார் என்று.

“அங்கிள் நீங்க ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க? அவன் வேணும்னு பேசிருக்கானு உங்களுக்கு தெரியும் தானே.”

“அவன் என்னோட பையனா இருந்தாலும் அவன் இன்னைக்கு பேசினதை எப்பவும் மறக்க மாட்டேன். அப்படி என்ன வன்மம் உன்மேல? அவன் கேட்ட கேள்வி தப்பில்ல ஆனால் கேட்ட விதம் ரொம்ப தப்பு.

பொதுக்கு வந்தால் ஆண் என்ன பெண் என்ன ரெண்டு பேரையும் விமர்சிக்கும் உலகம் தான் இது. மத்தவங்க இயலாமையில் ஆதாயம் தேடும் கேடுகெட்ட மீடியா. அங்க குப்பை கொட்டுறதால் அவன் உடம்புல என் ரத்ததுக்கு பதில் சாக்கடை ஓட ஆரம்பிருச்சு” என்று பேசும் போதே இருமல் வந்து அவரை தடை செய்தது.

“நீங்க எதுக்கு இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? யாரை எப்படி அடிக்கனும்னு செங்கோட்டையன் பையனுக்கு மட்டுமில்லை, ஞானவேல் பொண்ணுக்கும் தெரியும்னு சீக்கரம் காட்டுறேன். நான் இந்த தேர்தலில் ஜெயிக்கனும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று அவர் காலில் விழுந்தாள்.

“இப்ப மட்டுமில்ல வர எல்லா தேர்தலிலும் நீ வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்”
“உங்க வாக்கை மறக்காமல் விசிறி சின்னதிற்கு போட்டிருங்க அங்கிள். ஆர்வத்தில் ஏசி சின்னத்தில் போட்டுற போறீங்க” என்று அவரை இயல்புக்கு கொண்டு வர பேசினாள் ருத்ரா.

“வாலு! எல்லாம் இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான். நாளைக்க நீ ஒரு எம்.எல்.ஏ. மனசில் இருக்க எல்லாத்தையும் சொல்லவும் முடியாது, செய்யவும் முடியாது. இன்னைக்கு நண்பன்னா இருக்கிறவன் நாளைக்கு எதிரி ஆகலாம். நாளை கழிச்சு துரோகியா மாறலாம்.”

” இது உண்மை தான் அங்கிள் யாரு எப்போ எப்படி மாறுவாங்கனு சொல்ல முடியாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூட கணிக்க முடியாது. அதை விதின்னு சொல்றதா இல்லை சதின்னு சொல்லுறதானு தெரியல” என்றாள் ஏதோ ஒரு எண்ணத்தில்.

அவளது எண்ணம் தெரிந்ததோ இல்லையோ தனக்கான கடமையை செங்கோட்டையன் தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

“ருத்ரா எல்லாத்துக்கும் மனசை இப்போ இருந்தே பக்குவ படுத்திக்கோ. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனால் கூட தனியா இந்த கட்சியில் நீ உன்னை நிலை நாட்டணும்.”

“இப்போ எதுக்கு தேவையில்லாமல் பேசுறீங்க?”

“கட்சிக்கு அப்பறம் தான் பெத்தவங்க மத்தவங்க எல்லாம். இதை முதல் பதிய வைச்சுக்கோ. உனக்கு உண்மையா இரு, எல்லார்கிட்டயும் உண்மையா இருக்காதே!”

“ம்ம்” என்று தலையை ஆசைதவளுக்கு இங்கு யார் உண்மையாக இருக்கிறார் பொய்யாக நடிக்கிறார்கள் என்று சிறு கணிப்பு இருந்தது.

“உன் அப்பா பேரைச் சொல்லி உன்னை நெருங்கிறவன் எவனா இருந்தாலும் நாலடி தள்ளியே வை. உன்னை முறை தவறி பார்த்தாளோ நடக்க முயற்சித்தாலும் யோசிக்காமல் வெளியே சொல்லு.

உன் கூட உனக்கு விசுவாசியா இருக்க நாலு பேரை வைச்சுக்கோ. வெற்றியோ தோல்வியோ இங்க உனக்கான இடத்தை தக்க வைக்க எந்த எல்லைக்கு வேணாலும் போ!

அரசியலில் தர்மம் அதர்மம்னு தனி தனியா எதுவும் இல்லை. அவங்க அவங்களும் ஒரு நியாயம் ஒரு கோட்பாடு அவ்வளவு தான்”

“ப்பா பேச்சாளர்னு நிரூப்பிச்சிட்டிங்க அங்கிள். எல்லாத்தையும் முதலில் ஞாபகம் வைச்சுக்கிறேன் அப்பறம் கடைப்பிடிக்கிறேன். டைம் ஆச்சு நான் எல்லாம் பூத்துக்கும் போய் பார்க்கிறேன். நீங்க வரிங்களா?”

“நீ முன்னாடி போ ருத்ரா. நான் சாயங்காலம் வரேன்”.

“ஒ.கே அங்கிள் . பை!” என்று வாக்குபதிவு செய்யும் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு சென்று அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தாள்.

*************

“நேயர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். சென்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பிற்காக மெய்யொளி தொலைக்காட்சி சார்பாக மன்னிப்பு வேண்டுகிறேன்.

நாடே எதிர்பார்க்கும் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஆரம்பித்து நான்கு மணி நேரம் ஆகியிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் உற்சாகமாக தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

வெயிலின் காரணமாக அனைவரும் நேரத்தோடு வந்து பதிவு செய்வதாக களத்தில் இருக்கும் செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இன்றே தபால் வாக்குகள் பெறுவதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம் சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கை பதிவு செய்ய வாக்கு சாவடிக்கு வருகை தருகிறார்கள்.

எப்பொழுதும் புதுமை செய்யும் இளைய தளபதி முறை சாலிக்கிராமத்தில் இருக்கும் சாவடிக்கு பேட்டரி பொருத்திய மிதிவண்டி மூலம் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் அவரை பின்பற்ற, ‘ அந்த பகுதியில் சில நிமிடங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இளைய தளபதி அவர்கள் தன்னுடன் வருபவர்களிடம் அமைதியாகவும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் வருமாறு வேண்டியதாக களத்தில் இருந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவரது பயணத்தையும் வாக்கு பதிவு செய்த காட்சியையும் இப்போது காணொளியில் காணலாம்.”

“அவரை தொடர்ந்து சியான் விக்ரம் ரெமோ ஸ்டைலில் வாக்குச்சாவடிக்கு நடந்து வந்து வாக்குப்பதிவு செய்து காட்சி இதோ”

“மேலும் பல பிரபலங்கள் கூட்டம் சற்று குறையும் சமயம் வர இருப்பதாக தகவல் வந்துள்ளது”

“பிரபலங்களின் வாக்கு பதிவு காட்சிகளை காண மெய்யொளி தொலைக் காட்சியுடன் இணைந்திருங்கள். உங்களிடம் இருந்து விடைபெறுவது சினிமா செய்தி நாகேஷ்”.

*************

சாவடியில் வாக்குப்பதிவு செய்ய வருபவர்களை நன்முறையில் வரவேற்று அவர்களது கையில் இருக்கும் சீட்டிற்குரிய அறைக்கு அழைத்து சென்றனர்.
அதற்காகவே ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட நபர்களை ஏற்பாடு செய்து நிறுத்தியிருந்தனர் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும்.

பிரச்சாரம் முடிந்த பிறகு அதுவும் வாக்குப் பதிய வரும் சமயம் கட்சிக்காக எதுவும் செய்யக்கூடாது என்ற நிலையிலும் ஆங்காங்கே சிலர் தங்கள் கட்சிக்காக வாக்குப்பதிவு செய்யக்கோரி பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

இது இயல்பு என்றாலும் ஏனோ ருத்ராவிற்கு பிடிக்கவில்லை. எதையும் மனதோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று செங்கோட்டையன் சொன்னது நினைவுக்கு வர அமைதியாக அதைக் கடந்து உள்ளே சென்றாள்.

தூரத்தில் கட்சியை சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான் மருது. ருத்ராவை பார்த்ததும் அவனது கண்கள் அவனை அறியாது பொறாமையில் பளபளத்தது.

தன்னுடைய வார்டில் அவளுக்கு எந்த வாக்கும் போகக்கூடாது என்பதற்காகவே பல லட்சங்களை வாரி இறைத்து எதிர்க்கட்சியோடு கூட்டு சேர்ந்து கள்ளாட்டம் ஆடுகிறான்.

இது எதுவும் தெரியாமல் உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி. மருதுவின் ஆதரவாளர்கள் அவளை எதிர்த்து எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் கனகராஜ்ஜிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

கண்ணால் பார்த்ததால் மட்டும் எதையும் முடிவு எடுக்ககூடாது, முழுதாக தெரிந்து கொண்டே முடிவெடுப்போம் என்று அவர்களை நெருங்கினாள். யாரோ அவள் தலையில் பாராங்கல்லை போட்டது போல இருந்தது சற்று முன் அவள் கண்ட காட்சி.

அவளது கட்சியை சேர்ந்தவரே, “விசிறி சின்னத்திற்கு பதிலாக ஏ.சி சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பணத்தை கொடுத்தார்.

இதை பார்த்தவளுக்கு ரத்தக்கண்ணீர் வராத குறை தான் . தனக்கு இந்த வெற்றி எவ்வளவு முக்கியம் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

இவர்களை நம்பினால் எளிதில் கிடைக்கக்கூடிய வெற்றி கூட தட்டிச் செல்லும் என்று யோசித்தவள், வேகமாக தனக்கு நம்பிக்கை கூறிய சிலரை அழைத்து மருதுவை அந்த சாவடியில் இருந்து அகற்ற வழி செய்தாள்.

பின் அந்த சாவடிக்கு வேற நபர்களை நியமித்து, அவர்கள் வேலையை சரியாக செய்கிறார்களா என்று கூட இரண்டு மணி நேரம் அதிகம் இருந்து பார்த்தாள். அவர்கள் சரியாக செய்யவே அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

அவள் மகிழுந்துவிற்கு அருகே கொலைவெறியுடன் மருது நின்றிருக்க, அவளை அற்பப்புழுவை போல் பார்த்தாள். பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டு, அப்படி ஒரு நபர் அங்கு இல்லை என்பது போல் நடந்தாள்.

அவன் அருகே வரும் சமயம் கூட இருந்தவர்களிடம் அடுத்து செல்ல வேண்டிய இடத்தைப் பற்றி விவாதம் செய்தவாறு காரை உயிர்ப்பித்தாள். அவனை வேண்டும் என்றே தவிர்த்தவளுக்கு அவன் மீது கொலைவெறி வந்தது. எதுவாக இருந்தாலும் மாலை அறுமணிக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று புறப்பட்டாள்.

அடிப்பட்ட பாம்பு பழிவாங்கும் என்பதை மறந்த ருத்ரா அடுத்த வேலைக்கு சென்று விட்டாள். தன்னை அவமானப் படுத்தியவளை பதிலுக்கு கருவறுக்கும் நாளுக்காக காத்திருந்தான் மருது.

************

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்