அறையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை தவிர எந்தவொரு சத்தமும் அந்த அறையில் இல்லை. பேசவேண்டும் என கூறி அமர வைத்தவன் அசாத்திய அமைதியுடன் ஏதோ சிந்தனையில் இருக்க, நிமிடங்கள் தாண்டி மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தது. “ஹலோ. பேசனும்னு சொல்லிட்டு எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” எனக் கேட்டாள் ரதி.
“அமைதியா இல்ல. யோசிச்சுட்டு இருந்தேன்.” என சிவா கூறவும், “என்ன பேசறதுனு யோசனையே இல்லாமதான் என்னை உட்கார சொன்னீயா? உன் பேச்சை போய் கேட்டேன் பாரு.” என்றபடி ரதி வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து விட்டாள்.
“ஹேய். இரு இரு.” என அவளது கைகளை பற்றி மீண்டும் அமரவைத்தவன், “அது இல்ல இது வேற யோசனை.” என்றவன் அவளது கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டான். “ம்ப்ச்ச். நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்கற. முதல்ல கையை விடு.” என அவள் உதறவும், சிறு புன்னகையோடு அவளது கைகளை விட்டுவிட்டு தனது கரத்தில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தான்.
இப்போது அவனது புன்னகை சற்றே விரிய, “டைம் அப். இப்ப நீ தாராளமா போகலாம்.” என்றதும், லேசான அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள், “அப்ப ஏதோ பேசனும்னு சொன்ன. இப்ப போக சொல்ற.” என வாய் விட்டே கேட்டு விட்டாள்.
“ஓ ஆமா இல்ல. ஒன்னுமில்ல. ஐ லவ் யூ.” என சிவா கூறியதில், “இடியட் இதை சொல்லவா இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வைச்ச? என கோபமாகி கத்தி விட்டாள் ரதி. “கூல் ரதி. இப்ப மணி என்ன தெரியுமா? ஒன்பது. இந்நேரம் அங்க கல்யாணம் நின்னு போய் எல்லாரும் நீ ஓடி போயிட்டதா நம்பி இருப்பாங்க. சோ இனிமேல் நீ போனாலும் அந்த கல்யாணம் நடக்காது. எப்படி என் டிராமா?” என கண்சிமிட்டி கேட்டான் சிவா.
அப்போதுதான் ‘இந்நேரம் தன்னை அங்கு தேடிக் கொண்டு இருப்பார்களே’ என்றே உரைத்தது அவளுக்கு. “டேய். நீ நினைச்சதை நடத்திட்ட இல்ல. உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்டா.” என்றவள், வேகமாக அவனை தள்ளி விட, படுக்கையில் சென்று விழுந்தான் அவன். அருகில் இருந்த ஃப்ளவர் வாஷை எடுத்து ஓங்கும் நேரம் அறைக்கதவு சட்டென திறந்தது.
ரதி திரும்பி பார்க்கும்போது, அழகான இளம்பெண் ஒருத்தி அங்கு நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் ரதியின் கோபம் சற்றே மட்டுபட, அவளோ நிலைமையை சட்டேன யூகித்து வேகமாக உள்ளே வந்து அவள் கையில் இருந்ததை வாங்கியவள், “அண்ணி என்ன காரியம் பண்ண பார்த்தீங்க. எங்க அண்ணா ரொம்ப பாவம் அண்ணி.” என்றாள்.
அதற்குள் சிவாவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றவன், “நல்லவேளையா நீ வந்த நந்துமா. இல்லனா என் கபாலம் காலி ஆகியிருக்கும். இருந்தாலும் உன் அண்ணிக்கு இவ்வளவு கோபம் ஆகாதும்மா. புருஷன்ங்கற ஒரு பயம் இருக்கா பாரு.” என்றான்.
“புருஷன்னா உங்களுக்கு பயப்படனுமா அண்ணா? இதுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். இவரை இன்னும் இரண்டு அடி போடுங்க அண்ணி.” என நொடியில் கட்சி தாவினாள் அவள். ரதியோ இருவரது பேச்சுவார்த்தையை கேட்டு அதிர்ந்து போய் நிற்க, பாவம் அதை இருவருமே கவனிக்கவில்லை.
ரத்னா திருமணம் நின்று விட்டதாக உறவுகளிடம் கூறிவிடுமாறு கூற, இன்னும் பெரிதாக அழ ஆரம்பித்து விட்டார் சாவித்திரி. செல்வபதியோ யாரை சமாதானம் செய்வது என அறியாமல் குழம்பி நிற்க, அதற்குள் விஷயம் கேள்விப்பட்ட முக்கிய உறவினர்கள் அறைக்கு வெளியே கூட ஆரம்பித்தனர்.
ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக் கொள்ள அந்த இடமே சந்தைக்கடையை கூச்சல் நிறைந்ததாக மாற, ரத்னாவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அப்போது, “ஹேய் எல்லாரும் கொஞ்சம் வாயை மூடுறீகளா?” எனக் கேட்டபடி கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் அந்த மூத்த பெண்மணி.
அவரைக் கண்டதும், “அத்தை. நானே இவன் வாழ்க்கையை கெடுத்துட்டேனே.” என அவரிடம் கூறிக் கொண்டு சாவித்திரி அழவும், “ஹேய். நிறுத்து முதல்ல. உனக்கென்ன தனியா சொல்லனுமா. நீ எதுக்கு இப்ப இங்க ஒப்பாரி வைச்சுட்டு இருக்க. கொஞ்சம் பொறுமையா இரு.” என கோபமும், சமாதானமுமாக கூறினார் ரத்னாவின் பாட்டி காந்திமதி.
“எப்படி அத்தை அழாம இருக்க முடியும். எப்படியெல்லாம் என் பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். யாரு கண்ணு பட்டதோ இப்படி ஆகிடுச்சே.” என சாவித்திரி புலம்பி தீர்க்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ போய் ஆகவேண்டிய வேலையை பாரு.” என்ற காந்திமதி, “எல்லாரும் போய் உட்காருங்க. கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என வெளியில் நின்றவர்களை பார்த்து உரைத்தார்.
உடனே அங்கிருந்த கூட்டம் கலைந்து செல்ல, உள்ளிருந்தவர்கள் முகமோ குழப்பத்தை தத்தெடுத்து இருந்தது. “என்னம்மா சொல்ற? கல்யாணம் நடக்குமா? அதான் அந்த பொண்ணு மண்டபத்துலயே இல்லையே.” என்றபடி செல்வபதி விழிக்க, “ஏன்டா அவ இல்லனா, என் பேரனுக்கு கல்யாணமே ஆகாம போய்டுமா?” எனக் கேட்டார் அவர் இலகுவாக.
அவர் கூற வருவது புரியாமல் இருவரும் யோசனையில் நிற்க, ரத்னா தான் அவர் அருகில் வந்து, “பாட்டி. ஏன் இவங்களை இப்படி போட்டு குழப்பிட்டு இருக்க? ஏதாவது பேசிட்டு இருக்காம நடந்ததை ஏத்துக்கிட்டு நாம கிளம்பறதுதான் நல்லது. எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் ஆறப்போட்டு அப்பறமா பார்த்துக்கலாம்.” என்றான் ரத்னா நிதானமாக.
“ஆறப்போட்டுட்டு போறதுக்கு கல்யாணம் என்ன ஆக்கி வைச்ச சோறா. இந்தா பாருய்யா. நீ முழு மனசோட இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னு எனக்கு தெரியும். முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்வாங்க. முதல்முறை அவங்க வீட்டுக்கு போனப்பவே எனக்கு எதுவும் சரியாப்படல.
நீங்க எல்லாரும் சம்மதம்னு சொன்னதால நானும் என் மனசுல இருக்கறதை சொல்லாம விட்டுட்டேன். ஆனா இப்ப இவ்வளவு ஆனப்பொறவும் நான் அமைதியா இருந்தா என் வம்சம் தழைக்காதுனு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். நீ போய் கிளம்பி வந்து மணவறையில உட்காரு. மத்ததை நான் பார்த்துக்கறேன்.” என்றார் அவர் உறுதியாக.
அப்போதும் ரத்னா அசராமல், “பாட்டி, நடந்தது தப்பாவே இருக்கட்டும். அதுக்காக ஒரு தப்பை சரி பண்றேனு இன்னொரு தப்பை நீ பண்ணீட்டு இருக்காத. நீ என்ன யோசிக்கறன்னு எனக்கு தெரியும். நான் தப்பா ஒரு முடிவை எடுத்துட்டேனு, ஊர் பேர் தெரியாதவளை எல்லாம் என்னால கல்யாணம் பண்ணீக்க முடியாது. அது சரியாவும் இருக்காது என வாதாடினான் ரத்னா.
“அப்ப நான் சொல்றதை நீ கேட்க மாட்ட அப்படித்தானே?” என காந்திமதி அழுத்தமாக கேட்க, ரத்னாவின் மௌனமே அவன் எண்ணத்தை கூறியது. “சரி. நீ கேட்க வேண்டாம். அதே மாதிரி நான் சொல்றதையும் கேட்டுக்கோ. இனிமேல் எனக்கும் உன் குடும்பத்துக்கும் உள்ள உறவுக்கு எந்த அர்த்தமும் இல்ல. இன்னையில இருந்து நான் ஒரு அனாதைன்னு சொல்லிக்கறேன்.” என்றார் ஒரே போடாக.
அதைக் கேட்டு பதறிய சாவித்திரி, “அத்தை. என்ன வார்த்தை சொல்லீட்டீங்க. அவன் சின்ன பையன் அத்தை. அவன் பேச்சுக்காக நீங்க எங்க உறவே வேண்டாம்னு சொல்வீங்களா?” எனக் கேட்க, “ஆமா சாவித்திரி. இப்ப ஓடிப் போனாளே அவளை என்ன இவன் ஆசைப்பட்டா ஒத்துக்கிட்டான்.
அவன் அப்பனும் நீயுமா கைக்காட்டினீங்க. சரின்னுட்டான். அதே இப்ப நான் ஒருத்தியை காட்டுனா முடியாதுனு சொல்றான். அப்படீன்னா நீங்க எல்லாரும் ஒரே குடும்பம். நான் தனிதானே. என் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை.” என அவரது ஆதங்கத்தை கொட்டினார் காந்திமதி.
“அம்மா. ரத்னா அந்த அர்த்தத்துல சொல்லல. இந்த சம்பந்தம் பேசி முடிச்சு எத்தனை நாள் ஆச்சு. ஆனா இப்படி ஒரு சிக்கல் இருக்கும்னு நம்மளால கண்டுபிடிக்க முடியலயே. அவசரமா கல்யாணம் பண்ணி எந்த பிரச்சனையும் வந்திட கூடாதுன்னு தான்.” என செல்வபதி உதவிக்கு வர, காந்திமதியோ பதில் கூறாமல் பிடிவாதமாகவே நின்றார்.
சில நிமிடங்கள் யோசித்த ரத்னா, “சரி பாட்டி. நீங்க சொல்ற மாதிரி நான் கல்யாணம் பண்ணீக்கறேன். பொண்ணு யாருன்னு கூட சொல்ல வேண்டாம். ஆனா ஒரு கண்டிஷன்.” எனக் கூறி நிறுத்த, “என்ன ரத்னா ஆளாளுக்கு கண்டிஷன் போட்டுட்டு இருக்கீங்க?” என்றார் சாவித்திரி.
“இது பாட்டிக்கு மட்டும் இல்லம்மா. உங்க எல்லாருக்கும் சேர்த்துதான். கல்யாணம் முடிஞ்ச அப்பறம், இப்படி வாழு அப்படி வாழுன்னு யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண கூடாது. எனக்கு பிடிச்ச மாதிரி தான் நான் இருப்பேன். அது மட்டுமில்ல, கல்யாணத்துல அந்த பொண்ணுக்கு சம்மதமான்னு கேட்டுட்டு ஏற்பாட்டை பண்ணுங்க.” என மறைமுகமாக தன் சம்மதத்தை உரைத்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.
“என்ன அத்தை இவன் இப்படி சொல்றான். அவன் பிடிவாதக்காரன் அத்தை. வீம்புக்குன்னு ஏதாவது பண்ணி வைக்க போறான். அப்பறம் அவன் வாழ்க்கையே வீணா போயிடும் அத்தை.” என ஒரு தாயாக சாவித்திரி கவலை கொள்ள, “அதெல்லாம் கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போயிடும். என் பேத்தி வந்து எல்லாத்தையும் மாத்திடுவா. நீ பயப்படாம வா. பொண்ணு கேட்டுட்டு வரலாம்.” என்றபடி அவர்களை கூட்டிக்கொண்டு கிளம்பினார் காந்திமதி.
அங்கே சென்று அவர் காட்டிய பெண்ணை பார்த்ததும் சாவித்திரிக்கு தலை சுற்றலே வந்துவிட்டது. நல்லவேளையாக செல்வபதி வரும் வழியில் ஒரு வேலையாக நின்று விட்டார். “அத்தை என்ன வேலை பண்ண பார்த்தீங்க? இவங்க எப்படி கல்யாணத்துக்கு வந்தாங்க. அச்சோ வாங்க அவர் வர்றதுக்குள்ள உள்ள போய்டலாம்.” என்றார் சாவித்திரி படபடப்பாக.
“என்ன பண்ணாங்க? நான்தான் அவளை கல்யாணத்துக்கு கூப்பிட்டேன். அவளுக்கு இந்த வீட்ல இல்லாத உரிமையா? நீ வா போய் பேசலாம்.” என காந்திமதி அழைக்க, “இவங்ககிட்ட என்ன பேச போறீங்க? பொண்ணோட அம்மா இவங்களுக்கு தெரிஞ்சவங்களா? இவங்க பார்த்து சொன்ன பொண்ணுன்னு தெரிஞ்சா அவர் கட்டாயமா சம்மதிக்கவே மாட்டாரு.” என்றார் சாவித்திரி.
“அப்படீன்னு நான் சொன்னேனா? நீ என்ன இப்படி தொடை நடுங்கியா இருக்க? பொம்பளைங்க நினைச்சா நாட்டு பிரச்சினையே தீர்க்கலாம். இது நம்ப வீட்டு பிரச்சனைதானே? பார்த்துக்கலாம் வா.” என அவர் தெம்பூட்டிவிட்டு முன்னேற, “அத்தை இந்த மண்டபத்துலயே வேற பொண்ணை பார்க்கலாம் அத்தை. இவங்க சொல்ற பொண்ணு வேண்டாம்.” என்றார் சாவித்திரி.
“இவ சொல்ற பொண்ணுன்னு நான் சொன்னேனா?” என அவர் கேட்கவும், இலேசாக திரும்பிய சாவித்திரியின் மூச்சு, “இவ பெத்த பொண்ணைத்தான் நம்ப ரத்னாவுக்கு கேட்கப் போறோம்.” என்றதில் மீண்டும் உள்ளேயே சென்றுவிட, சாவித்திரி மயங்காமல் அவருடன் வந்தது அவருக்கே ஆச்சர்யம்தான்.