Loading

  • இனியனின் சிறுபிள்ளைத்தனமான செயலைக் கண்டு யாழினி சிரித்ததற்காக இவ்வளவு நேரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்த இனியன், வீட்டினுள் தாத்தாவுடன் சிரித்துப் பேசி விளையாடி கொண்டிருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்து அவனையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.

சற்று முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த இனியனா இது. இப்போது எதுவும் நடக்காதது போல் தாத்தாவுடன் சிரித்து பேசி க்கொண்டு அமர்ந்து இருக்கிறாரே

என்று வியந்தவாரே அவனின் அருகில் வந்து அவனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். 

தன் அருகில் வந்து நிற்கும் மனைவியை பார்த்து, “என்ன?” என்று கேட்டான்.

அவளும், “ஐ அம் சாரி” என்று அவனை தயக்கமாக பார்த்தாள். 

“இட்ஸ் ஓகே” என்று சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு தாத்தாவுடன் பேசத் தொடங்கினான். 

அவளின் அருகில் நின்ற பாட்டி, “பார்த்தாயா? அவன் இப்படித்தான். அவன் தாத்தா அவனை சமாதானப்படுத்தினால், உடனே அழுகையை நிறுத்தி விடுவான். அப்படி என்னதான் அவர்களுக்குள் பேசிக் கொள்வார்களோ தெரியாது” என்று சொல்லிக் கொண்டே அவரும் இனியனின் அருகில் அமர்ந்து கொண்டார். 

சிறிது நேரத்திற்கெல்லாம் ஒவ்வொருவராய் அங்கு கூட பேச்சும் கலாட்டவும் ஆக நேரம் கடந்தது. அப்பொழுது அறிவுமதி யாழினியிடம், “அண்ணி பியூட்டி பார்லரில் இருந்து வந்திருக்காங்க. ட்ரையல் மேக்கப் செய்ய. வாருங்கள்” என்று அழைத்தாள். 

“அச்சோ. எனக்கு மேக்கப் எல்லாம் வேண்டாம் அறிவுமதி. சாதாரணமாகவே இருந்து கொள்கிறேன்” என்று அவள் தயக்கமாக கூறினாள். 

உடனே ஆதிமூலம், “நீ சாதாரணமாக இருந்து கொள்வாய். அதில் பிரச்சனை ஒன்றும் உனக்கு இல்லை. ஆனால் எங்கள் அந்தஸ்திற்கு கொஞ்சமாவது உன்னை பொருத்தமான நபராக ஆக்கத்தான் இந்த ஒப்பனை எல்லாம். உன் விருப்பத்தை இங்கு யாரும் கேட்கவில்லை. போய் மேக்கப் போடு” என்று அதிகாரமாக சொன்னார்.

அவர் கூறியதை கேட்டதும் அவமானமாக உணர்ந்த யாழினி, “உங்கள் அளவுக்கு வசதி இல்லாவிட்டாலும், எங்கள் ஊரில் நாங்களும் கொஞ்சம் வசதியானவர்கள் தான்” என்று ஆதிமூலத்திடம் கூறினாள்.

“ஆமாம் ஆமாம்… வசதியானவங்க தான். அடுத்த வேலை போடுறதுக்கு டிரஸ் கூட இல்லாம அனுப்புனவங்க, வசதியானவங்க தான். என்னை எதிர்த்து எதிர்த்து பேசாம நான் சொல்றதை கேட்டு நடந்துக்கோ” என்று அவளிடம் சொல்லிவிட்டு, தன் மகளைப் பார்த்து, “இங்கே பார் அறிவு, அது வேண்டாம் இது வேண்டாம் என்று எதுவும் அவள் சொல்லக்கூடாது. நம்ம அந்தஸ்துக்கு என்னென்ன பண்ணனுமோ, அதை எல்லாமே கண்டிப்பா நடக்கணும். புரியுதா?” என்று மகளையும் மிரட்டி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டார்.

அவர் பேசியதை கேட்டு யாழினியின் கண்கள் கலங்கிவிட கண்ணீர் வடியும் முன்பே அதை கண்களை சிமிட்டி மறைத்துக் கொண்டாள்.

அவளின் சோகம் முகத்தை கண்ட பாட்டி அவளின் தோள்பற்றி, “இங்கே பார் யாழினி. அவன் இப்படி பேசுகிறான் என்று நீ வருத்தப்படாதே. அலங்காரம் பண்ணிக்கிட்டா தான் விசேஷத்துல போட்டோ புடிக்கும் போது அழகா இருக்கும். அதுக்கு தான் அவன் அப்படி சொல்லி இருப்பான். நீ எதையும் மனசுல வச்சுக்காத” என்றார்.

யாழினியோ, “இல்லை பாட்டி. இதுவரை நான் மேக்கப் செய்ததில்லை. அதனால் தான் சொன்னேன். ஆனால் அவர் இப்படி பேசியது எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது”என்றாள் சோகமாக. 

“இங்க பாரு. அவரு இவரு என்று சொல்ல கூடாது. இனியனுக்கு அவன் சித்தப்பா. அப்படின்னா உனக்கு சின்ன மாமாவும் வரும். அதனால நீ அவன மாமா என்றும் அபிராமியை அத்தை என்றும் சொல்லணும். புரியுதா?” என்று என்று அவள் நாடி பிடித்து கேட்டார்.

அவளும் “சரி பாட்டி” என்று சொல்லிவிட்டு, அறிவு மதியிடம் “போகலாமா?” என்று கேட்டாள்.

அறிவுமதியும் தன்னுடைய அறைக்கு யாழினியை அழைத்துச் செல்ல, அங்கு இரு பெண்கள் இவளுக்காக காத்திருந்தனர்.

யாழினியிடம் ஒரு உடையை கொடுத்து, “இதை போட்டுக்கோங்க அண்ணி என்றாள். 

“இப்ப எதுக்கு அறிவுமதி. இந்த சுடிதார் நன்றாக தானே இருக்கிறது” 

“இல்லை அண்ணி. இதை போட்டுக்கோங்க. இப்போ என் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க” என்று சொல்லி அவள் கையில் உடையை கொடுக்க, வான் வண்ண நீலத்தில் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட அழகான லெகங்கா. 

அதை போட்டுக் கொண்டு வந்தாள் யாழினி. “வாவ் அண்ணி. சூப்பரா இருக்கீங்க” 

“ஆனா அறிவுமதி. முதுகு ரொம்ப தெரியுது. எனக்கு கூச்சமா இருக்கு. இந்த டிரஸ்ஸ தூக்கிட்டு என்னால நடக்கவே முடியாது போல இருக்கே. எவ்வளவு வெயிட்டா இருக்கு? இந்த துப்பட்டா எதுக்குனே தெரியல? இவ்ளோ டிரான்ஸ்பரண்ட்டா இருக்கு” என்று ஒன்றன்பின் ஒன்றாக சொல்லி கொண்டே இருந்தாள் யாழினி.

“அச்சோ அண்ணி. அதெல்லாம் ஒன்னும் தெரியாது. அழகா தான் இருக்கு” என்று சொல்லி அங்க அங்கிருந்த பெண்களிடம், அவளின் தலை அலங்காரத்தைப் பற்றியும், முக அலங்காரத்தை பற்றியும் சொல்ல, வந்திருந்த பெண்களும் யாழினியை அலங்கரிக்க தொடங்கினர். 

அவள் முடியை வைத்தே அவளின் முதுகை மறைத்தவாறு அலங்காரம் செய்து, முகத்துக்கும் ஒப்பனை செய்தனர். அவர்கள் ஒவ்வொரு முறை முகத்தின் அருகே கையை கொண்டு வரும் பொழுதும், “அதிகமா போடாதீங்க. லைட்டா போடுங்க. லைட்டா போடுங்க” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் யாழினி. 

“அச்சோ அண்ணி. நீங்க ஃப்ரீயா இருங்க. அவங்களுக்கு தெரியும்” என்று யாழினியை சற்று அமைதியாக இருக்கும்படி மிரட்டினாள் அறிவுமதி.

ஒப்பனை ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் அறிவுமதியின் தோழிகளும் நெருங்கிய சொந்தக்காரர்களும் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்.

ஒப்பனை முடித்து தேவதை போல் தரா தயாராகி நின்றாள் யாழினி. அறிவுமதியும் அவளது தோழிகளும் யாழினியை பார்த்து, “வாவ்… சூப்பரா இருக்கீங்க அண்ணி” என்று மகிழ்ச்சியாக பாராட்டினர்.

பின்னர் அறிவுமதி தன் அண்ணியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வர அங்கு ஒரு பகுதியில் இருந்த பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, சிறிதாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது.

அங்கிருந்த ஏற்பாட்டை பார்த்து வியந்த யாழினி, தன் அருகில் நின்ற அறிவுமதியிடம் “நான் ரூமுக்கு போகும்போது இருந்த ஹாலுக்கும் இப்ப இருக்கிற ஹாலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அதுக்குள்ள ஒரு கல்யாண மண்டபத்தை போலவே ரெடி பண்ணிட்டீங்களே!” என்று வியந்தாள். 

“பின்ன? என் இனியன் அண்ணன் கல்யாணம் என்றால் சும்மாவா?” என்று சொல்லிவிட்டு, “ஹாய் ஃபிரண்ட்ஸ்” என்று அனைவரையும் அழைத்தாள்.

அனைவரும் வந்ததும், “இதுதான் எங்கள் இனியன் அண்ணனின் மனைவி யாழினி” என்று அறிமுகப்படுத்திவிட்டு, இனியனையும் அழைத்தாள். 

இனியனும் அங்கு வர, அவனைப் பார்த்த யாழினி கண்களை விரித்தாள். அவனும் ஆச்சரியமாக விரித்த யாழினியின் விழிகளை பார்த்துக்கொண்டே அவளின் அருகில் வந்து நின்றான். 

அவளின் உடையின் வண்ணத்திலேயே அவனின் சட்டை இருந்தது. அவ்உடையில் அவன் மேலும் கம்பீரமாக தெரிய, கண்களை அவனை விட்டு அவளால் நகட்ட முடியவில்லை. 

அவள் பார்வையில் இனியனுக்கு வெட்கம் தோன்ற, “ஏய் பொண்டாட்டி. என்னை ஏன் இப்படி பாக்குற?” என்று எல்லோருக்கும் கேட்கும் படி சொல்லிவிட்டான். 

அவ்வளவுதான் யாழினிக்கு அவன் அப்படி சொன்னதும், ‘இப்படி அவர் சொல்லும்படி பார்த்துக் கொண்டு இருந்து விட்டோமே’ என்று வெட்கமும், அதை இவர் இவ்வளவு சத்தமாக சொல்லி விட்டாரே என்று அவமானமும் பட்டு தலையை குனிந்து கொண்டாள்.

இனியனின் சொல் கேட்ட அறிவுமதியின் தோழிகள் யாழினியை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இப்படியே பேச்சு சந்தோசமாக அனைவரும் பேசிக் கொண்டிருக்க, வந்திருந்த பெண்களுக்கு மெஹந்தி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள் அறிவுமதி. அதன்படி ஒவ்வொருவரும் மருதாணி வைத்துக்கொள்ள யாழினியின் இரு கைகளிளும் இரு பெண்கள் மருதாணி வைக்க தொடங்கினார்கள்.

அந்த இடமே ஆடல் பாடல் என்று கலை கட்டியது. உணவு பஃபே முறையில் உணவு மேஜையில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவரவர் வேண்டியதை எடுத்து உண்டனர்.

பாட்டும் கும்மாளமாக நேரம் ஓட, அனைவரும் உணவு உண்ட பிறகு அவரவர் வீட்டிற்கு கிளம்பினார். அதற்குள் இரு கைகளிலும் யாழினிக்கு மருதாணி வைத்துவிட, அவளது காலுக்கு வைக்க தொடங்க, “இங்கு வைத்து வைக்க வேண்டாம். எனது அறைக்குச் சென்று விடலாம்” என்று சொல்லிவிட்டாள்.

அன்றைய பொழுது அப்படியே மகிழ்ச்சியாக கழிந்தது. 

அழகு நிலையத்திலிருந்து வந்தவர்கள் சொல்லிவிட்டு சென்றது போல் மருதாணி கையை களைந்ததில், அழகாக செந்நிறத்தில் அவளது கைகளில் பிடித்திருந்தது. 

மறுநாள் காலையில் பாட்டியிடமும் தாத்தாவிடமும் தன் கைகளை காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தாள். காலை உணவுக்கு கீழே வந்த இனியன் அவளை பார்த்துவிட்டு பார்க்காதது போல் கோபமாக சென்றுவிட்டான். 

சென்று உணவு மேஜையில் அமர்ந்தான். யாழினிக்கு அவனிடம் கையை காட்ட வேண்டும் என்று ஆசை. எல்லோரும் இருக்கும் பொழுது எப்படி என்று தயங்கிக் கொண்டு பாட்டியிடம், “பாட்டி அவங்ககிட்ட சொல்லுங்க” என்று கண் ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள்.

பாட்டியும் இனியனிடம், “யாழினியின் கையை பார்த்தாயா?” என்று கேட்டார்.

அவர் கேட்ட மறு நொடியே, “நான் பார்க்க மாட்டேன் என்று கோபமாக சொன்னான்.

“ஏன் கண்ணா? அவள் உன்னிடம் காண்பிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தாலள் தெரியுமா?” என்றார்.

“அவள் என் பொண்டாட்டி தானே? அப்படி என்றால் கையை முதலில் என்னிடம் தானே காண்பித்திருக்க வேண்டும்? அவள் ஏன் உங்ககிட்ட காமிச்சா? அதனால நான் கோவிச்சுகிட்டேன். நான் பார்க்க மாட்டேன். போங்க” என்று திரும்பிக் கொண்டான்.

 “உன்கிட்ட காமிக்கணும்னு தான் அவ நெனச்சுக்கிட்டு இருந்தா. நான் தான் கையை விரித்து பார்த்து விட்டேன். இதற்கு போய் கோவித்துக் கொள்ளலாமா?” என்று அவனை சமாதானப்படுத்தினார்.

இருந்தும் அவன் கோபமாகவே திறிய, அவன் பின்னாலையே யாழினி, “இங்க பாருங்களேன். ஒரு நிமிஷம் என்னை பாருங்களேன்” என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாள்.

அவளின் செய்கையை பார்த்து அன்பு செல்வத்திற்கு கோபமாக வந்தது. ‘இவன் பெரிய இவன்னு பின்னாடி கெஞ்சிகிட்டு போறா’ என்று நினைத்துக் கொண்டான்.

இனியனின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, அவனை அழைத்து, அவன் காதில் ஏதோ சொல்ல, உடனே இனியனின் கண் மலர்ந்து. “உண்மையாகவா தாத்தா?” என்று கேட்டான்.

அவரும் ஆமாம் என்று தலையாட்ட, உடனே இனியனும் யாழினி அருகே சென்று, அவளின் மருதாணி போட்ட இரு கைகளையும் பிடித்து பார்த்து ரசித்தான். 

“சூப்பரா இருக்குது. அழகா சிவந்து இருக்கு” என்று தடவி தடவி ரசிக்க, அவனின் தொடுகையில் யாழினிக்கு உடல் சிலிர்த்தது. 

ஒரு வழியாக இனியன் சமாதானமாகி விட, அன்றைய நாள் மகிழ்ச்சியாக கழிந்தது. மறுநாள் காலை ஆதி மூலம் நாம் மதிய உணவுக்கு ஹோட்டலுக்கு சென்று விடுகிறோம் என்று சொல்லிவிட்டார். 

தாத்தா “ஏன்பா சாயங்காலம் ஆறு மணிக்கு மேலே தானே ரிசப்ஷன். ஒரு நான்கு மணிக்கு அங்கு இருப்பது போல் போகலாமே?” என்றார்.

“நம்ம சென்னையோட டிராபிக்ஸ் பற்றி தான் தெரியுமே பெரியப்பா. அதனால காலை சாப்பிட்டதும் அங்கு போயிடலாம். எல்லோருக்கும் அங்கு ரூம் போட்டு இருக்கு. அங்கேயே தங்கியிருந்தால் சாயங்காலம் நமக்கும் கஷ்டமாக இருக்காது” என்று சொல்லிவிட்டார். 

அதுவும் சரியாக பட தாத்தாவும் பாட்டியும் மகிழ்ச்சியாக, தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஹோட்டல் நோக்கி பயணித்தார்கள்.

இரண்டு கார்கள் அவர்கள் வீட்டில் இருந்து ஹோட்டல் நோக்கி கிளம்பியது. சென்னையின் அழகை யாழினி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு வந்தாள். இன்று தான் முதன் முறையாக வெளியே செல்கிறாள்.

காலை நேரம் என்பதால் அதிக பேருந்து நெரிசல் இருந்ததால் சில இடங்களில் அவர்களது கார் ஊர்ந்து ஊர்ந்து சென்றது. இனியனுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமா போய் கொண்டிருந்தது. முன்னாள் அமர்ந்திருந்த தாத்தாவிடம் “தாத்தா டிரைவரை சீக்கிரம் ஓட்ட சொல்லுங்க” என்று சிணுங்கி கொண்டே இருந்தான்.

டிராபிக்காக இருக்குது இதை கூட புரிஞ்சுக்காம இவரு ஏன் சொல்லிக்கிட்டே இருக்காரு என்று மனதில் நினைத்துக் கொண்ட யாழினி, இனியனிடம், “கொஞ்சம் முன்னாடி பாருங்க. அந்த வண்டி எல்லாம் போனா தானே நம்ம கார் நகரும்” என்று பொறுமையாக அவனிடம் சொன்னாள். 

“இது கூட எனக்கு தெரியாதா? ஒன்னு பண்ணு நீ இறங்கி போயி முன்னாடி உள்ள காரை ஸ்பீடா போக சொல்லு. போ” என்று கோபமாக கத்தினான். 

அவன் கத்தியதும் யாழினியின் முகம் வாடிவிட்டது. 

உடனே தாத்தா இனியனை பார்த்து, “இனியா அமைதியாக இரு. இப்பொழுது ஏன் பேத்தியை கோபித்துக் கொள்கிறாய்? என்று சற்று அழுத்தமாக கேட்டார்.

உடனே உதட்டை பிதுக்கிக்கொண்டு அழுவதற்கு தயாராகி விட்டான் இனியன். “பாரு… உன்னால தான் தாத்தா என்ன திட்றாரு. இதுவரைக்கும் என் தாத்தா என்னை திட்டினதே இல்லை” என்று அழ, 

அவனின் அருகில் இருந்த பாட்டி, “அழாத இனியா. தாத்தா உன்னை திட்டவில்லை” என்றார். 

ஒரு வழியாக நகர்ந்து நகர்ந்து ஹோட்டலுக்கு வந்தது இனியனின் கார். ஹோட்டலை பார்த்து ஆவென்று வியந்தாள் யாழினி.

சென்னையை விட்டு வெளியே இருப்பது போல் தோன்றினாலும் இவ்வளவு பெரிய பேலஸ் போல இருக்கும் ஹோட்டலைக் கண்டு வியந்தாள். 

ஆதிமூலம் இன்னும் வராததால் இவர்கள் ரிசப்ஷனில் காத்திருக்க, அங்கு தொங்கும் விளக்குகளையும் அந்த இடங்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி. இனியனும் இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயம் இல்லை என்பது போல் அமைதியாக அங்கிருந்த மேக்சினை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.

பாட்டியும் முதல் முறை தான் அங்கு வருவதால், “நல்ல பெருசா தான் கட்டி இருக்காங்க. இல்லைங்க” என்று நரசிம்மனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக ஆதி மூலமும் வந்து விட அன்புச்செல்வன் சென்று விசாரித்து தங்களுக்கான அறையில் அனைவரையும் தங்கச் செய்தான். பின்னர் தாத்தாவை அழைத்துக் கொண்டு ரிசப்ஷன் ஹாலையும் சென்று பார்த்து வந்தான். இப்படியாக அன்றைய வேலைகளை தாத்தாவும் அன்புச்செல்வம் ஆதி மூலமும் பார்த்துக் கொண்டார்கள்.

இனியன் குடும்பம் இங்கு வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பிரசன்னாவும் அங்கு வந்து விட்டான். 

“அப்பாவை அழைத்து வரவில்லையா?” என்று கேட்டார் நரசிம்மன் தாத்தா.

“இல்லை தாத்தா. சாயங்காலம் வந்து விடுவதாக சொன்னாங்க. இன்னைக்கு ஆஸ்பிட்டல்ல ஏதோ இன்ஸ்பெக்ஷனாம். கண்டிப்பாக அப்பா இருக்கணுமாம். அதுதான்” என்றாள். 

அதன் பிறகு சாப்பிட்டு எல்லோரையும் சிறிது ஓய்வெடுக்க சொல்ல, இனியனும் பிரசன்னாவும் ஒரு அறையில் இருந்து கொண்டனர். அறிவுமதியுடன் யாழினி தங்கி கொண்டாள்.

இனியனுடன் இல்லை என்றதும் அன்புச்செல்வன் அடிக்கடி அறிவுமதியின் கதவை தட்டி ஏதாவது ஒன்று கேட்டு வந்து கொண்டு இருந்தான். 

அவர்கள் இருந்த அறையில்தான் அனைத்து பொருட்களுமே இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அறிவுமதி, “அண்ணா தயவுசெய்து எங்க ரெண்டு பேருக்கும் வேறொரு ரூம் கொடுத்து விடு. இப்படி ஓயாமல் நீ வந்து கதவைத் தட்டிக் கொண்டிருந்தால், நாங்கள் எப்படி ஓய்வெடுப்பது. நான்கு மணிக்கு ப்யூட்டிஷியன்ஸ் வந்துவிடுவார்கள். அதற்குள் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கலாம் என்று பார்த்தால், நொய் நொய் என்று நீ வந்து கொண்டே இருக்கிறாய்” என்று எரிச்சலாக சொல்லிவிட்டாள். 

அவளும் தான் யாழினி வந்ததிலிருந்து அண்ணனின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

அவனின் எண்ணத்தை அறியாத யாழினியோ, “ஏன் அறிவுமதி? அவர் பொருட்கள் எடுக்க தானே வருகிறார். பரவாயில்லை. நான் வேண்டுமென்றால் முழித்து இருக்கிறேன். நீ கொஞ்சம் ஓய்வெடு” என்றாள்.

“சாரி சாரி” என்று சொல்லிவிட்டு, “வேணும்னா நீங்க ரெண்டு பேரும் என்னோட ரூமுக்கு போங்க. நான் இந்த ரூம்ல இருந்துகிறேன்” என்றான். 

“சரி. நாங்கள் அங்கு செல்கிறோம். தயவு செய்து இனிமேல் அங்கு வந்து எங்களை தொந்தரவு செய்யாதே!” என்று யாழினியையும் இழுத்துக் கொண்டு அவன் சொன்ன அறையை நோக்கி செல்ல… இனியனின் அறைக்காதவை திறந்து கொண்டு பிரசன்னா வெளியே வந்தான்.

“என்ன அறிவுமதி? எங்க போகிறாய்?” என்று யாழினியை பார்த்துக் கொண்டே அறிவுமதியிடம் கேட்க, 

அவளோ “அண்ணன் ரூம்ல போயி தங்கிக்க போறோம். எல்லா பொருட்களையும் எங்கள் ரூமில் தான் வைத்திருக்கிறான். ஓயாமல் வந்து கதவை தட்டிக்கிட்டே இருக்கிறான்” என்று அண்ணனின் மேல் இருந்த எரிச்சலில் அனைத்தையும் சொன்னாள்.

“சரி. அது கடைசியில் இருக்கிறது. நீங்கள் இருவரும் இங்கிருந்து கொள்ளுங்கள். நான் இனியனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறேன்” என்று அறைக்குள் வந்து அங்கு கார்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருக்கும் இனியனிடம், “இனியா வா. நாம் அடுத்த அறைக்குச் செல்வோம் என்று அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அறிவுமதிக்கும் இது சரியாவே பட்டது. ஒருவேளை யாழினியை பார்ப்பதற்காக ஏதாவது காரணத்தைச் சொல்லி அங்கு வந்து கதவை தட்டலாம் என்று நினைத்துக் கொண்டாள். 

இனி என்ன நடந்தாலும் பிரசன்னா பார்த்துக் கொள்வார் என்று நினைத்துக் கொண்டாள். 

சற்று நேர ஓய்வுக்குப் பிறகு கதவு தட்டும் சத்தத்தில் தான் இருவருமே எழுந்தனர். யாராக இருக்கும் என்று பார்க்க, பிரசன்னா தான் இருவருக்கும் தேநீரும் ஸ்நாக்ஸும் கொண்டு வந்திருந்தான். 

அவற்றை அங்கு வைத்துவிட்டு பியூட்டிஷியன் வந்துவிட்டார்களாம். இருவரும் டீ குடித்து ரெடியானதும் எனக்கு ஃபோன் செய். நான் அவர்களை அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, “வேறு யாருக்கும் ஃபோன் செய்யாதே!” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றான் பிரசன்னா.

தொடரும்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்