வானத்து நிலவு காற்றின் அசைவிற்கேற்ப மேககூட்டத்தினூடே மெல்ல மெல்ல நகர்ந்து சென்று கொண்டிருப்பதை காவ்யா இமைக்கால் பார்த்துக்கொண்டிருந்தாள். சில சமயம் வெளியில் வந்து பளீரென ஒளியைச் சிந்துவதும் மறுகணமே மேகக் கூட்டத்தினுள் மறைந்து கொள்வதுமாய் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது நிலவு. ஏனோ இந்த நிலவைப் பார்க்கையில் காவ்யாவிற்கு காலையில் கருணை இல்லத்தில் பார்த்த அந்தக் குழந்தையின் கள்ளமில்லாத பால் வடியும் முகமே அதில் தெரிந்தது. இல்லத்திலிருந்து வீட்டிற்கு வந்ததிலிருந்து அந்தக் குழந்தையைச் சுற்றிச் சுற்றியே அவளது மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் காவ்யா தான் வளர்ந்த கருணை இல்லத்திற்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுடன் காலையிலிருந்து மாலை வரை செலவிடுவாள். அவர்களுக்குப் பிடித்தமான கதைகள் கூறுவது, விளையாடுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது என அவர்களிற்குத் தேவையான அனைத்தையும் செய்வாள். இந்த விடுமுறை நாளின் போதும் இல்லத்திற்கு குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக சென்றபோது அவ்வில்லத்திற்கு புதிய வரவாக பிறந்து சில நாட்களேயான அழகிய பெண் குழந்தை ஒன்றைப்பார்த்தாள். அக் குழந்தையை பார்த்தவர்கள் யாரும் மறுபடியும் பார்க்காமல் இருக்க முடியாது. அவ்வளவு அழகு. சுருள் சுருளாக கருமையான தலைமுடி, அழகிய வட்டமுகம், திராட்சை போன்ற சின்னஞ்சிறு கருவிழிகள், செப்பு போன்ற சிறிய வாய், குட்டி மூக்கு, மாசு மருவில்லாத சருமம் என ஒட்டு மொத்த அழகோடு பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடித்தது அச்சிறு குழந்தை.
அக் குழந்தையைப் பார்த்துவிட்டு மனம் கனக்க இல்லத்தலைவியின் அறையை நோக்கிச் சென்றாள். அவளைப்பார்த்ததும் இல்லத்தலைவி அன்புடன் வரவேற்றார். காவ்யா புதிதாக வந்த அக் குழந்தையைப் பற்றி அவரிடம் விசாரித்தாள். அக் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் அக் குழந்தையின் தாயாரின் உறவினர்களால் இங்கே விடப்பட்டாள் என்றார். அக் குழந்தையின் பெற்றோர் எங்கே எதற்காக இச் சிறு குழந்தையை இங்கே விட்டுச் சென்றார்கள் என்ற காவ்யாவின் கேள்விகளுக்கு அவரளித்த பதில்களைக் கேட்டவளிற்கு மனசெல்லாம் வலித்தது.
அக் குழந்தையின் தாயார் பதினெட்டு வயதான இளம்பெண். ஏற்கனவே குடும்பத்தினை உடைய ஒருவரால் காதலித்து ஏமாற்றப்பட்டதன் காரணத்தினாலேயே இக் குழந்தை கருவில் இருக்கும் போதே வெறுத்து ஒதுக்கியுள்ளார். குழந்தை பிறந்த பின்னரும் அவர் குழந்தை மீது அன்பு செலுத்தவில்லை. அவருக்கு வீட்டினர் வேறு திருமணம் செய்து வைக்க இருப்பதனால் அதற்கு இக் குழந்தை இடையூறாக இருப்பதனால் இங்கே விட்டுச் சென்றுவிட்டார்கள். பிறந்து சில நாட்களேயான இக் குழந்தையை எத்தனை பேர் நன்றாக கவனித்தாலும் ஒரு தாயால் கிடைக்கும் அன்பினை சிறு வயதிலேயே அந்த இறைவன் கிடைக்காமல் செய்து விட்டானே என்று கண்ணீர் கசிய கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த காவ்யாவிற்கும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. கனத்த மனதுடன் வீட்டிற்கு வந்து அக் குழந்தையின் நினைவுகளுடன் இயந்திரத்தனமாக வீட்டுவேலைகளில் ஈடுபட்டாள்.
சிறு வயதிலேயே பெற்றோர்களை ஒரு வீதி விபத்தில் இழந்த காவ்யாவை உறவினர்கள் கருணை இல்லத்தில் விட்டுச்சென்றார்கள். அன்றிலிருந்து இன்று வரை கருணை இல்லம் தான் அவளது தாய்வீடு ஆகியது. இல்லத் தலைவி மிகவும் அன்பானவர்கள். எப்போதும் அவரது முகத்தில் சாந்தம் குடிகொண்டிருக்கும். அவரைப் பார்த்தவுடனேயே காவ்யாவிற்கு தனது தாய் மீண்டும் கிடைத்தது போல உணர்ந்துகொண்டாள். அவருக்கும் காவ்யாவினை மிகவும் பிடிக்கும். அவர் இவளது கவலைகளினை குறைக்கும் வகையில் அன்பாக பேசியும் வாழ்க்கையில் என்ன துயரம் நேர்ந்தாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடக்கூடாது என்பதையும் கல்விதான் வாழ்க்கையின் அத்திவாரம் எனவே துன்பத்தை எல்லாம் மறந்து உன் பெற்றோரின் ஆசைக்கமைய நன்றாகப் படிக்கவேண்டும் என்று பல அறிவுரைகளை கூறி அவளைப் படிப்பில் கவனஞ்செலுத்த வைத்தார்.
அதற்கேற்ப காவ்யாவும் நன்றாகப் படித்து ஒரு பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றாள். இல்லத் தலைவியின் ஆசியுடன் கார்த்திக் என்பவரை கரம் பிடித்தாள். அவர்களது வாழ்க்கை ஒரு குழந்தை இல்லையென்ற குறையைத்தவிர இனிதாகவே சென்றுகொண்டிருக்கிறது. அவர்கள் இருவரும் ஒரு குழந்தைக்காக எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் அவை எவையும் பயனளிக்கவில்லை. அதனால் அவர்கள் சற்றுக் கவலையடைவார்கள். பின்னர் தங்களை தாங்களே தேற்றியும்கொள்வார்கள்.
நாம் ஒரு குழந்தைக்காக எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டும் பிரார்த்தனைகள் செய்தும் கிடைக்கவில்லை. ஆனால் குழந்தையின் தாயோ அதனை வெறுக்கின்றார். இல்லாதவர்களுக்குத் தான் அதன் அருமை புரியும். அக் குழந்தையை அநாதையாக வளரவிடக்கூடாது. எனக்கு சிறு வயதிலாவது தாயின் அன்பு கிடைத்தது. அது போல இல்லாமல் இக் குழந்தைக்கு காலம் முழுவதும் அன்பு கிடைக்கச் செய்யவேண்டும் என அக் குழந்தையின் எதிர்காலத்தை பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தவளை வேலையிலிருந்து வீட்டிற்கு வந்த கார்த்திக்கின் அழைப்பு அவளது செவிகளை எட்டவில்லை.
காவ்யாவிற்கு என்ன நடந்தது தான் அழைத்தும் திரும்பிக்கூட பார்க்காது சிலை போல அமர்ந்திருக்கின்றாளே. காலையில் சந்தோசமாகத் தானே இல்லத்திற்குச் சென்றாள் அங்கு தான் அவளது மனதினை கவலைகொள்ளச் செய்யக்கூடிய ஏதோவொரு விடயம் நடந்திருக்க வேண்டுமென்று யோசித்தவாறு சென்று அவளருகில் அமர்ந்து அவளை அழைத்தான். திடீரென தன்னருகில் கேட்ட அழைப்பினால் தன் நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த காவ்யா நடப்பிற்கு வந்தாள். தன் அருகில் கார்த்திக் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்தான் இவ்வளவு நேரமும் தன்னை மறந்து சிந்தித்துக்கொண்டிருந்தேன் என்று நினைத்துப்பார்த்தாள். அவ்வளவு தூரம் தன் மனதில் அக் குழந்தையின் நினைவுகள் நிலைத்துவிட்டன என வியப்படைந்தாள்.
காவ்யாவிடம் என்ன பிரச்சனை ஏன் உன் முகம் எல்லாம் சோகமாகவுள்ளது என வினாவினான். இன்று இல்லத்தில் பார்த்த குழந்தை பற்றி கண்ணீரோடு கூறினாள். அதன் பெற்றோர் செய்த தவறிற்காக எதுவுமே அறியாத இச் சிறுகுழந்தை அநாதையாக எதிர்காலத்தில் வாழக்கூடாது. நமக்குத்தான் குழந்தைகள் இல்லையே நாம் இக் குழந்தையை நமது குழந்தையாக தத்தெடுத்துக்கொண்டால் எமக்கும் குழந்தை இல்லாத குறை தீருவதோடு அக் குழந்தைக்கும் ஒரு பெற்றோர் கிடைப்பார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தன்னுடைய கணவரைக் கேட்டாள்.
அவள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும் காரணத்தினால் கார்த்திக் உடனடியாகவே தனது பூரண சம்மதத்தை தெரிவித்ததுடன் எமக்கு குழந்தை இல்லாத குறையை தீர்ப்பதற்காகவே இக் குழந்தையை உன் கண்களில் காட்டியிருக்கின்றார் என கூறி நன்றியை செலுத்தியதுடன் உனது பிரார்த்தனை வீண்போகவவில்லை எனவும் கூறினான். காவ்யாவும் சந்தோசமாக இறைவனுக்கு நன்றி கூறி நாளை காலையிலேயே கருணை இல்லத்திற்குச் சென்று அக் குழந்தையைச் சட்டபூர்வமாக தமது மகளாக தத்தெடுத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கார்த்திக்குடன் கலந்தாலோசித்தாள்.
அடுத்த நாள் காலை அவர்களுக்காகவே விடிந்தது போல மிகவும் அழகாகவே புலர்ந்தது. அவர்கள் இருவரும் கருணை இல்லத்திற்குச் சென்று இல்லத்தலைவியிடம் நாங்கள் அக் குழந்தையினை சட்டப்படி தத்தெடுத்து தமது மகளாக வளர்க்கின்றோம் அக் குழந்தையை எங்களிடம் தாருங்கள் எனக் கேட்டார்கள். அவர்களது குழந்தையில்லாத கவலை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தவராகையால் அவர்களது கோரிக்கையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் சட்டப்படி தத்தெடுக்க மேற்கொள்ளவேண்டிய நிகழ்வுகள் நடந்தேறின. அக் குழந்தை கார்த்திக் காவ்யா தம்பதியினரின் செல்ல மகளாகினாள். அவர்கள் இருவரும் அக் குழந்தைக்கு நிலா என்று இல்லத்தலைவியின் ஆசியுடன் பெயரிட்டு அன்றைய மதிய உணவை அனைத்துக் குழந்தைகளுக்கும் தாமே பரிமாறி அவர்களுடன் உண்டு மகிழ்ந்து அன்றைய நாளை சந்தோசமாக கழித்தார்கள்.
இப்போது நிலா அநாதை அல்ல. அவளுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். கார்த்திக் காவ்யா தம்பதியினரும் குழந்தையில்லாதவர்கள் இல்லை. அவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றவே நிலா வந்திருக்கிறாள். இவர்களது சந்தோசத்தைப் பார்த்த இல்லத்தலைவி உங்களைப் போல அனைவரும் இருந்தால் உலகில் யாரும் அநாதைகளில்லை என்று கூறி சந்தோசமாக வழியனுப்பிவைத்தார். நிலாவின் வரவை எதிர்பார்த்து அவர்களின் வீடூ விழாக்கோலம் பூண்டு ஆவலுடன் காத்திருக்கின்றது.
முற்றும்
அழகான கதை சகோ 😍…
காவ்யாவின் வலி அழகாக காட்டியிருந்திங்க… காலம் தாழ்த்தாமல் தம்பதிகள் எடுத்த முடிவும் அழகு… 💝
நன்றி சகி 😍😍