Loading

“எவன்லே அந்த எடுபட்டபய… காலங்காத்தால வந்து கதவைத் தட்டிட்டு இருக்கான்… இவியலால ஒரு சோலிய ஒழுங்கா முடிக்க முடியுதா…” என வெகு நேரமாக வாசல் கதவு வேகமாகத் தட்டப்படும் ஓசையில் எரிச்சலுடன் கூறியவாறு அலமேலு சென்று கதவைத் திறக்க,

 

“ஹாய் ஆத்தா…” எனப் புன்னகையுடன் கை அசைத்தான் ஒரு நெடியவன்.

 

அலமேலு, “யாருக்கு யாருலே ஆத்தா… போக்கத்தவனே… நான் என்ன உன்ன பெத்தேனா இல்ல வளர்த்தேனாலே… வந்துட்டான் ஆத்தா கீத்தான்னு சொல்லிட்டு…” எனக் கோபமாகக் கூறவும் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்ட எதிரில் இருந்தவன்,

 

“என்னைத் தெரியலையா ஆத்தா…” என்றான் சோகமாக.

 

அதில் புன்னகைத்த அலமேலு, “உன்ன எப்படிலே தெரியாம போகும்…” என்கவும் எதிரிலிருந்தவன், “அதானே பார்த்தேன்…” எனப் புன்னகையுடன் கூற,

 

“பனை மரத்துக்கு பாதி வளர்ந்து கெட்டு இருக்க… உன்ன எப்படிலே என் கண்ணுக்கு தெரியாம போகும்…” என அலமேலு கோபமாகக் கூறவும் சோகமாக முகத்தைத் தொங்கப் போட்டான் எதிரில் இருந்தவன்.

 

வெளியே கேட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்து கொட்டாவி விட்டபடி எழுந்து வந்த முத்துராசு, “என்ன ஆத்தா இம்புட்டு காலங்காத்தால சத்தம் போட்டுட்டு இருக்கீய… என்னாச்சு…” என்கவும் முத்துராசுவின் பக்கம் திரும்பிய அலமேலு,

 

“எழுந்திட்டியா ராசா… ஆத்தா உன்ன எழுப்பிட்டேனாலே… எல்லாம் இந்த எடுபட்ட பயலால… காலங்காத்தால வந்து வம்பு பண்ணிட்டு இருக்கான்…” என வாசலில் நின்றிருந்தவனை முறைத்துக் கொண்டு கூற,

 

வாசலை எட்டிப் பார்த்த முத்துராசு அங்கு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தவன், “எலேய் கஜா… எப்போலே வந்தீய…” என்கவும் இவ்வளவு நேரம் அலமேலின் திட்டை வாங்கிக் கொண்டிருந்த கஜாவோ, “வந்து ரொம்ப நேரம் ஆச்சுண்ணே… நம்ம ஆத்தா தான் வந்த நேரத்துல இருந்து என்னை வையுறாப்புலே….” என்றான் சோகமாக.

 

அலமேலு, “யாருலே இவன்… உன் கிட்ட காசு ஏதாவது கேட்டு வந்திருக்கானாலே… ஒத்தப் பைசா கொடுக்காதேலே…” என முத்துராசுவிடம் கூறவும் அதனைக் கேட்டு சிரித்தான் முத்துராசு.

 

கஜா, “அண்ணே….” என சிணுங்க, தன் சிரிப்பை அடக்கிய முத்துராசு, “ஆத்தா… இவன் என் கூட தான் சீமைல இருந்தான்… எனக்கு எல்லா சோலிலையும் ஒத்தாசையா இருப்பான்… ரொம்ப நல்ல பயலுத்தா..” என்க,

 

“அப்படியாலே…. எல்லா சோலியும் தெரியுமா இவனுக்கு… சரியான நேரத்துல தான்லே வந்து இருக்கான்… ஒத்தையா வீட்ட பார்த்துக்குறது கஷ்டமா இருந்ததுலே… இனிமே இந்த பய புள்ள கிட்ட சொல்லி எல்லாம் செஞ்சிக்கிறேன்…” என அலமேலு கூறவும் முத்துராசு மீண்டும் சிரிக்க, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான் கஜா.

 

முத்துராசு, “ஆத்தா.. நீ போய் தம்பிங்கள எழுப்புத்தா… இவன் கூட நான் கொஞ்சம் பேச இருக்கு…” என்கவும் துருவ்வையும் ஜெய்யையும் எழுப்பச் சென்றார் அலமேலு.

 

அலமேலு சென்றதும் கஜாவின் பக்கம் திரும்பிய முத்துராசு, “என்னலே… திடுதிப்புன்னு வந்து நிக்கிறீய… ஏதாவது பிரச்சினையா…” என்க,

 

“இல்லண்ணே… உன் கூடவே இருந்து பழகிட்டேன்… இப்போ அங்குட்டு நான் மட்டும் தனியா இருக்க போரடிச்சதுண்ணே… அதுவுமில்லாம நீயி ஊருக்கு வந்ததுமே கால் பண்ணி ஏதோ பிரச்சினைனு நம்மாளுங்கள அனுப்பி வைக்க சொன்னீய… உனக்கு ஏதாவது பிரச்சினையோன்னு தான்ணே காலங்காத்தால பஸ்ஸ பிடிச்சு வந்துட்டேன்…” என்றான் கஜா.

 

“சரியான சமயத்துல தான்லே வந்திருக்கீய… இனிமே நமக்கு இங்குட்டு தான் சோலி…” என்றான் முத்துராசு.

 

_______________________________________________

 

“ஐயா… ஃபேக்டரியில வேலை எல்லாம் பாதிலயே நிக்கிது…” என்க,

 

ராஜதுரை, “ஏன்லே… ஆளுங்க யாரும் வேலைக்கு வரலயாலே…” எனக் கேட்டார்.

 

அவர் முன் நின்றிருந்தவன், “ஆமாங்க ஐயா… நேத்து நடந்த கலவரத்துல அந்த கீழ் சாதிக்கார பயலுங்க வேலைக்கே வரல ஐயா…” என்கவும் ஆவேசமானவர்,

 

“என்னலே சொல்ற… அவியலுக்கு அம்புட்டு தைரியமா… பயம் விட்டு போச்சாலே… என்னை விட்டா யாருலே அவியலுக்கு வேலை குடுப்பான்… நம்ம மாரிய வெச்சி அவிய கிட்ட சொல்ல சொல்லுலே இன்னைக்கு வேலைக்கு வரலைன்னா அம்புட்டு பேரையும் வேலைல இருந்து தூக்குறோம்னு…” என்றார் ராஜதுரை.

 

_______________________________________________

 

துருவ், “எங்கண்ணா போறோம்…” என காலையிலேயே இருவரையும் எழுப்பி வெளியே அழைத்து வந்த முத்துராசுவிடம் கேட்க,

 

“பொறுமையா இருலே… உனக்கே போனதும் புரிஞ்சிடும்…” என முத்துராசு கூறியதும் அமைதியாகினான் துருவ்.

 

ஜெய் தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவனையே அடிக்கடி தலையை உயர்த்திப் பார்க்க,

 

அவனோ, “என்னை லவ் பண்றியாலே…” என்கவும் அதிர்ந்தான் ஜெய்.

 

ஜெய்யின் முகம் போன போக்கைப் பார்த்து அவனுடன் வந்த கஜா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, தன்னால் இயன்ற அளவு கஜாவை முறைத்தான் ஜெய்.

 

காலையில் முத்துராசு கூறியதும் அலமேலு  துருவ்வையும் ஜெய்யையும் எழுப்ப, ஜெய் மாத்திரம் எழுந்திருக்கவில்லை.

 

சற்று நேரம் கழித்து ஜெய் எழுந்து அறையிலிருந்து கண்களை கசக்கிக் கொண்டு வெளியே வர திடீரென எதன் மீதோ மோதி நின்றான்.

 

ஜெய் நெற்றியைத் தேய்த்தபடி, “இங்குட்டு எப்படி திடீர்னு தூண் வந்தது… இதுக்கு முன்னால இருக்கலயே…” என்றவாறு தலையை உயர்த்திப் பார்த்தவன் தன் கண்களை அகல விரித்தான்.

 

ஜெய்யை விட நன்கு உயரமாக முறுக்கேறிய உடம்புடன் நின்றிருந்தவனைக் கண்டு பயந்தவன், “நான் எதுவும் செய்யலலே… இந்த துருவ் பய தான் அந்தாளு கிட்ட போய் வம்பு பண்ணினான்… நான் வேணாம்னு தான்லே சொன்னேன்…” என ராஜதுரையின் ஆள் என நினைத்து கத்தவும் அவன் தலையில் அடித்த துருவ்,

 

“டேய்… அவர் அண்ணன் ஃப்ரெண்டுடா… போய் சீக்கிரம் கிளம்பு… அண்ணா எங்கயோ போகணும்னு சொன்னாரு…” என்கவும் கஜாவை ஏற இறங்கப் பார்த்த ஜெய், “ப்ப்பாஹ்ஹ்… என்ன பாடிலே… இவிய என்னத்தைய தான் திங்குவாய்ங்களோ… இம்புட்டு வளர்ந்து இருக்காய்ங்க… நம்ம அண்ணன் தான் அப்படி இருக்காருன்னு பார்த்தா இந்தாளு அதுக்கும் மேல இருக்கான்… சூதானமா இருந்துக்கோலே ஜெய்… இவனோட ஒரே அடியில நாம மண்ணுக்குள்ள புதைஞ்சிடுவோம்… நம்ம பாடி இதெல்லாம் தாங்காதுலே…” எனத் தனக்கே கூறிக் கொண்டு அவசரமாக அங்கிருந்து ஓடினான்.

 

கஜா கேட்ட கேள்வியில் விளித்த ஜெய் அவனின் சிரிப்பைக் கண்டு கஜாவை முறைக்க, கஜா தன் கையை முறுக்கிக் காட்டவும், “தோ.. வந்துட்டேன்ணே…” என்றவாறு முத்துராசுவிடம் ஓடினான்.

 

நேற்று வீடுகள் எரிந்த இடத்திற்கு முத்துராசு அவர்களை அழைத்து வந்திருக்க, 

 

துருவ், “எதுக்குண்ணா இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க… இது என்ன புதுசா இருக்கு…” என புதிதாக கட்டப்பட்டிருந்த ஓலை வீடுகளைப் பார்த்துக் கேட்க,

 

“நம்மாளுங்க கிட்ட சொல்லி நான் தான்லே கட்ட சொன்னேன்… அந்த சாதி வெறி பிடிச்ச நாய் தான் இவிய வூட்டையெல்லாம் எரிச்சிட்டான்… இவிய எங்க தங்க முடியும்… அதுவும் பொட்டச்சிங்களையும் வெச்சிக்கிட்டு…” என்ற முத்துராசு சுற்றி பார்வையை செலுத்தியவன் அங்கு நின்ற தன் ஆட்களில் ஒருவனை அழைத்து, 

 

“என்னலே… நம்மாளுங்க மட்டும் தான் இருக்காய்னுங்க… ஒரு பயலையும் காணலையே…” எனக் கேட்டான்.

 

“அது வந்துண்ணே… நம்மாளுங்க எம்புட்டு சொல்லியும் கேட்காம அவிய அந்த ராஜதுரையோட ஆளுங்க வந்து கூப்பிட்டதும் அவிய கூட அந்தாளோட ஃபேக்டரிக்கே வேலைக்கு போய்ட்டாய்ங்கண்ணே..” என்கவும் கோபமடைந்த முத்துராசு,

 

“ச்சே… இவியலுக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையாலே… அந்தாளு அவிய சாதிய அம்புட்டு கேவலமா பேசியும் அந்தாளு கிட்டயே வேலைக்கு போயிருக்காய்னுங்களே…” என்றவன், “வாலே.. அந்த ஃபேக்டரிக்கு போலாம்…” என ராஜதுரையின் தொழிற்சாலைக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

 

_______________________________________________

 

தன் ஆஃபீஸ் அறையில் அமர்ந்து கணினித் திரையில் தொழிற்சாலையில் நடக்கும் வேலைகளை வக்கிரச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜதுரை.

 

மக்கள் படும் அல்லலைக் கண் குளிரப் பார்த்தவர், “இது தான்லே நீயி அம்புட்டு பேரும் இருக்க வேண்டிய இடம்ல… சம்பளத்த ஏத்தி கேக்குறியாலே… பார்த்தியா… இந்த ராஜதுரைய எதிர்த்தா இது தான் உங்க கதி…” எனக் கூறிக் குரூரமாகப் புன்னகைத்தார்.

 

_______________________________________________

 

முத்துராசு துருவ், ஜெய் மற்றும் கஜாவுடன் ராஜதுரையின் தொழிற்சாலைக்கு வர, அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றனர்.

 

இயந்திரங்களை வைத்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் கீழ் சாதி மனிதர்களை வைத்து செய்து கொண்டிருந்தனர்.

 

தன் வயதுக்கு மீறிய சுமையை சுமந்து கொண்டு ஒரு பெரியவர் செல்ல, பள்ளிக்கூடம் சென்று புத்தகங்களை கரங்களில் ஏந்த வேண்டிய சிறுவர்களோ கற்களை ஏந்திக் கொண்டிருந்தனர்.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேலை எனும் பெயரில் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்க,

 

துருவ், “என்ன நடக்குதுண்ணா இங்க…” எனக் கோபமாகக் கேட்க, முத்துராசு அவனுக்கு பதிலளிக்காது அவர்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.

 

ஜெய், “நேத்து தான் அந்த ராஜதுரை இவிய வூட்டையெல்லாம் கொளுத்தி இவியல ஒன்னும் இல்லாம பண்ணினான்… இப்படி ரோஷமே இல்லாம அடுத்த நாளே வந்து அவன் கிட்டயே வேலை பார்க்குறாய்னுங்களே… இவிய இப்படியே இருந்தா ராஜதுரை என்ன… எவன் வேணாலும் வந்து இவியல இப்படி தான் நடத்துவாய்ங்க…” என அவனும் கோபத்தில் கத்த,

 

முத்துராசு அமைதியாக இருப்பதைப் பார்த்த கஜா, “அண்ணே… நான் வேணா இவிய கூட பேசவாண்ணே…” என்கவும் மறுப்பாகத் தலையசைத்த முத்துராசு, “இல்லலே… இவிய கூட நானே பேசுறேன்…” என்றான்.

 

உடனே கஜா அங்கு வேலையில் இருந்த மக்களை ஏதோ கூறி ஒன்று திரட்டினான்.

 

முத்துராசு தான் தமக்கு தங்க இடம் அமைத்து தந்ததால் அவர்களும் எதுவும் கூறாமல் அங்கு ஒன்று சேர்ந்தனர்.

 

அனைவரும் முத்துராசு என்ன கூறப் போகிறான் என அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

 

“எதுக்காக திரும்ப இந்தாளு கிட்டயே வேலைக்கு வரீங்க…” என்றான் அமைதியாக.

 

“வேற என்னலே பண்ண முடியும்… இது தான் நம்ம நிலமை… கீழ் சாதில பொறந்த பாவத்துக்கு அவிய பண்ணுற அட்டூழியத்தை எல்லாம் சகிச்சிட்டு தான்லே போகணும்…” என ஒருவன் கூற,

 

துருவ், “எதுக்கு சகிச்சிட்டு போகணும்… எதிர்த்து கேள்வி கேட்கலாம்ல…” எனக் கோபமாகக் கேட்க,

 

“நீயி சீமையில இருந்து வந்திருக்குறீய… நல்லா படிச்சவிய வேற… நாம அப்படியாலே… நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இவிய கீழ தான் நாம வேலை பார்க்குறோம்ல… ஒருவேளை உங்க ஆத்தா ஐயன் உங்கள படிக்க வெச்சது போல எங்களையும் எங்க ஆத்தா ஐயன் படிக்க வெச்சிருந்தா அவியல எதிர்த்து கேள்வி கேட்டிருப்போமோ என்னவோ…” என்றான் ஒருவன் வருத்தத்துடன்.

 

ஜெய், “அதுக்காக அவிய என்ன பண்ணாலும் அடங்கி போயிடுவீங்களாலே…” என்க,

 

“வேற என்னலே பண்ண முடியும்… பார்த்தியலா… நேத்து சம்பளத்த ஏத்தி கேட்டதுக்கே எங்க வூட்டையெல்லாம் எரிச்சிட்டாய்னுங்க… அவியல எதிர்த்து வேற பேசினா கொன்னு போட்டுட்டு அவிய பாட்டுக்கு போயிடுவாய்ங்க… இதுல அந்தாளு தான் இந்த ஊரு எம்.எல்.ஏ… கலெக்டர் ஐயா கிட்ட மனு கொடுத்தாலும் வேலைக்கு ஆகாதுலே… ஏன்னா அம்புட்டு பேரும் அவிய ஆளுங்க… எப்படி அவர எதிர்க்க முடியும்… அவியல விட்டா யாருலே நமக்கு வேலை தருவாய்ங்க…” என்கவும், “நான் தரேன்… உங்க புள்ளைங்களையும் படிக்க வைக்கிறேன்…” என்றான் முத்துராசு‌ யோசிக்காமல்.

 

திடீரென கூட்டத்தில் சலசலப்பு கேட்க, துருவ்வும் ஜெய்யும் தம் அண்ணனை பெருமையுடன் நோக்கினர்.

 

ஆனால் அவர்களில் ஒரு வயதானவர், “வேணாம்லே… நீயி எங்களுக்கு பண்ணி இருக்குறதே பெரிய உதவி தான்… இதுக்கு மேலயும் நீயி எங்களுக்கு உதவி பண்ண போய் அது உன்ன தான்லே பிரச்சினைல கொண்டு போய் சேர்க்கும்… இப்படி தான் கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் வந்தாரு… எங்களுக்காக அம்புட்டு பண்ணினாரு… எங்க புள்ளைங்கள கூட படிக்க வைக்க பார்த்தாரு… ஆனா கொஞ்ச நாள்லயே அவிய அந்த மனுஷனையும் எங்க கண்ணு முன்னாடியே கொன்னு போட்டாருலே… நீயி உயிரோட இருக்கணும் தம்பி… நீயி இப்படி சொன்னதே எங்களுக்கு பெரிய விஷயம் தான்…” என்கவும் முத்துராசுவின் கண்கள் கலங்கின.

 

சில நொடிகளில் தன்னை சமன் செய்து கொண்ட முத்துராசு, “இந்த தடவை அப்படி எதுவும் நடக்காதுலே… நான் பொறுப்பு…” என்க, 

 

ஆனால் அவர்கள் யாரும் அவனின் பேச்சைக் கேட்காது கலைந்து சென்றனர்.

 

துருவ், “என்ன பண்ண போறீங்க அண்ணா… இவங்க யாருமே நீங்க சொல்றத கேட்கலையேண்ணா..” என வருத்தப்பட,

 

முத்துராசு, “அடுத்து என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்லே… நாளைக்கு உங்களுக்கு பரீட்சை இருக்குல்ல… போய் படிக்கிற வேலையை பாருங்க… இதுல நீயி தலை போடாதேலே… அண்ணன் பார்த்துக்குறேன்…” என்றான்‌ ஒரு முடிவுடன்.

 

ஜெய், “ஆனா அண்ணே..” என ஏதோ கூற வர,

 

“சொல்றேன்ல… போய் படிக்கிற வேலையை பாருங்க..” என முத்துராசு சத்தமிடவும் துருவ்வும் ஜெய்யும் அங்கிருந்து சென்றனர்.

 

தன் கணினித் திரையில் இவ்வளவு நேரமும் நடந்ததை வேடிக்கை பார்த்த ராஜதுரை அவ் அறையே அதிர சிரித்தார்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்