Loading

அத்தியாயம் 16

வெற்றியின் பேச்சில் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலயே என்று ஆச்சர்யத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி குமார் கொண்டு வந்த முலப் பத்திரத்தை எடுத்து அவர்களிடம் காட்டினான்.

“இங்க பாருங்க‌ இதான் எங்க நிலம். இது அவன் இடம். என் இடத்து வழியா தான் அவன் இடத்துக்கு போக முடியும்” என்று மூலப்பத்திரத்தில் இருந்த வரைபடத்தைக் காட்டினான்.

‘செமடா காட்டான். நீ இந்த அளவுக்கு பிரிலியன்டா’ என்று மனதில் மெச்சிக் கொண்டாள் மதி.

நிலத்தை வாங்க வந்தவனும் “ஆமா தமிழு. உன் நிலத்துக்கு பாதை இல்லை” என்று தமிழிடம் சொல்லி விட்டு “இங்க பாரு வெற்றி. இந்த இடத்துல நாங்க அட்டைக் கம்பெனி கொண்டு வரப்போறோம். உன் நிலத்தையும் சேர்த்து நல்ல விலைக்கு வாங்கிக்கிறேன். நீ என்ன சொல்ற?” என்றான்.

“அடிங்க… நான் அவனயே விற்க வேண்டானு சொல்லிட்டு இருக்கேன். நீ என் நிலத்தையேக் கேட்குறியா?. உன்கிட்ட நிலத்தை விற்குற அளவுக்கு எங்களுக்கு எந்த பஞ்சமும் வரல. என்கிட்ட அடி வாங்குறதுக்கு முன்னாடி இங்கிருந்து கிளம்பிரு. நீ சம்பாத்தியம் பண்றதுக்கு விவசாய நிலம் தான் கிடைச்சதா?” என்றான் வேஷ்டியை மடித்துக் கட்டி நாக்கைக் கடித்துக் கொண்டு அவனை விரட்டிக் கொண்டிருந்தான் வெற்றி.

“ஏய் வெற்றி.. நான் யாரு என்னனு தெரியாம பேசிட்டு இருக்குற. சந்தைல கமிஷன் கடை மொத்தமாக ஏலம் எடுத்துருக்குற ரத்தினசாமியோட மச்சான் நான். அப்புறம் நீ விளைவிக்குற ஒன்னும் விலைக்கு போகாது. எவனும் வாங்காத மாதிரி பண்ணிடுவேன்” என்று ஆவேசமானான் .

“ஏன்டா என்கிட்ட வாங்கி அதை வித்து லாபம் பார்க்குற உங்களுக்கே இவ்வளவு திமிரு இருந்தா… விதை போடுறதுல இருந்து வெள்ளாமை எடுக்குற வரைக்கும் உழைக்குற எங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும். பண்றத பண்ணிக்கோ போடா” என்று அசால்டாக சொல்லி விட்டு அவனை அங்கிருந்து கிளப்பினான்.

“தமிழ் வா இவனை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுனு எனக்குத் தெரியும்” என்று தமிழை அழைக்கவும் “இனி இதுக்கு ரொம்பவே வருத்தப்பட போற வெற்றி” என்று தமிழும் கிளம்பி விட்டான்.

அவர்கள் செல்லவும் “ஏன் வெற்றி ஏற்கனவே காய்கறிக்குலாம் விலை இல்லைனு சந்தையிலே பிரச்சனை நடந்துச்சே அன்னைக்கு. இப்போ இந்தப் பிரச்சனை தேவை தானா?. எதுனாலும் பார்த்து பண்ணு” என்றாள் மதி.

“அதுக்காக அப்படியே விட முடியுமா?. இங்க மட்டும் தான் சந்தை இருக்கா. தமிழ்நாட்டுல எத்தனை கடை இருக்கு. பார்த்துக்கலாம் விடு. வா நாம வீட்டுக்கு கிளம்பலாம்” என்று இருவரும் வீட்டிற்குக் கிளம்பினர்.

தமிழுக்கு அந்த நிலத்தை உடனே விற்கும் அளவிற்கு எந்த பணத்தேவையும் இல்லை‌. ஆனாலும் வெற்றிக்கு இடைஞ்சல் குடுப்பதற்காகவே ரத்தினசாமியின் மச்சான் திருமுருகனுடன் கைகோர்த்துக் கொண்டான். அதுவும் அவன் விவசாயத்தையும் பாதுகாக்க தான் வெற்றி அவ்வாறு செய்தான் என்று புரிந்து கொள்ளாமல் அவன் அன்று அவமானப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு அவன் மீது வன்மம் வளர்த்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று அலைகிறான். திருமுருகனும் அவன் மாமா ரத்தினசாமியும் அவர்கள் வேலைக்கு தமிழை யூஸ் பண்ணிக் கொண்டனர். ஏதாவது பிரச்சனை என்றால் அவனை கைகாட்டி விடலாம் என்று. அவனும் அது புரியாமல் வெற்றிக்கு எவ்வாறு தொல்லை குடுக்கலாம் என்பதிலே குறியாக இருந்தான்.

சென்னை, ஐஜி அலுவலகம். ரவிச்சந்திரனை “கடத்தல் கேஸில் எப்படி அந்தப் பென்டிரைவ்வில் இருந்த ஆதாரம் அழிந்து போகும். அன்னைக்கு நைட் என்கிட்ட காண்பிக்கும் போது இருந்தது காணாமப் போகுதுனா? அந்த அளவுக்கு கேர்லெஸா இருந்துருக்கேங்க. நீங்களே இப்படி இருந்தா உங்களுக்கு கீழே இருக்குறவங்களை என்ன சொல்றது” என்று ரவிச்சந்திரனை தொலைபேசியில் வருத்தெடுத்துக் கொண்டிருந்தார் ஐஜி. அவர் சஸ்பென்ட்டில் இருப்பதால் “நீங்க சஸ்பெண்ட் முடிஞ்சு வர்றதுக்குள்ள அன்அபிஸியலா அந்தக் கேஸ் என்ன ஏதுன்னு பாருங்க” என்று ஆர்டர் போட்டு விட்டு தொலைபேசியைத் துண்டித்தார்.

அழைப்பைத் துண்டித்து விட்டு வாங்கும் சம்பளத்திற்கு அரசுக்கு விசுவாசமாக இல்லாமல் வாங்கிய காசுக்கு குற்றவாளிக்கு விசுவாசமாக அவனுக்கு அழைத்து “சார் நீங்க சொன்னபடி செய்யச் சொல்லியாச்சு. எப்படியும் இந்த சஸ்பென்ஷன் டைம்குள்ள கண்டுபிடிச்சுடுவான். அப்படியே கண்டுபிடிக்காட்டாலும் அந்த ஆதாரம் வெளில வராத வரைக்கும் நமக்கு பிரச்சனை இல்லை. நீங்க கவலைப்படாதிங்க சார். இந்தக் கேஸ்ல உங்க பேர் வெளில வராத அளவுக்கு நான் பாத்துக்கிறேன்” என்று குற்றத்தைத் தடுப்பவரே குற்றம் செய்வனுக்கு விலை போனார். எதிரில் இருந்தவனும் “உனக்கு பணம் வீடு வந்து சேரும்” என்று அழைப்பைத் துண்டித்தார்.

ஐஜியிடம் பேசிய ரவியோ ‘இது எப்படி நடந்திருக்கும்?. பென்டிரைவ் மாறல. உள்ள இருக்குற ஆதாரத்தை மட்டும் அளிச்சுட்டு எம்ட்டி பைல் வச்சுருக்காங்க. அப்படினா யாரோ வேனும்னே பண்ணது மாதிரி இருக்குது. அதுவும் இல்லாம இந்த ஐஜி வேற ஏன் நாம சஸ்பென்ஷன்ல இருக்கும் போதும் இந்தக் கேஸை தோண்டுறாரு’ என்று பலவாறு சிந்தனையில் இருந்தார்.

தமிழ் திருமுருகனுடன் சேர்ந்து வெற்றிக்கு பிரச்சனை குடுக்க ஆரம்பித்தனர். அவன் தோட்டத்தில் விளைந்த எதையும் சந்தையில் வாங்க விடாமல் செய்தார்கள். காய்கறிகளாவது பரவாயில்லை. மொத்தமாக ஏக்கர் கணக்கில் வரும் வெங்காயம் மக்காச்சோளம் அதைக்கூட அந்தச் சந்தையில் வாங்கவில்லை. வெற்றி முதலில் காய்கறிகள் தானே என்று பக்கத்து ஊரில் இருக்கும் சின்ன சின்ன கடைகள் சூப்பர் மார்க்கெட் என்று விற்றான். ஆனால் தினமும் அவ்வாறு செய்வதில் அலைச்சல் மற்றும் பெட்ரோல் விற்கும் விலைக்கு வண்டியில் அலைந்து திரிவது அதற்கே செலவாகி விட்டதென்றால் இன்னும் கூலி, பயிரிட்டதற்கான செலவு மற்றும் தான் உழைத்த கூலி அதெல்லாம் என்ன செய்வது என்று பெரிதும் மலைத்து விட்டான்.

அவன் படும் பாட்டைப் பார்த்து பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் கட்டியவளுக்கும் ‘சே எவ்வளவு கஷ்டப்படுறான். இதற்கான தீர்வு நிரந்தரமாக யோசிக்காம ஏன் ஒரே மாதிரி அடுத்தவனை நம்பி இவன் உழைச்சதை வச்சு இன்னொருத்தன் சம்பாதிக்குற மாதிரி பண்ணிட்டு இருக்கான். இதற்கான தீர்வு என்ன?’ என்று அவளும் தனக்குத் தெரிந்த வழியில் கூகுளில் தேடலைத் தொடங்கினாள். இவளால் அவள் அப்பாவிற்கும் அவள் வேலை பார்த்த பத்திரிக்கை நிறுவனத்திற்கும் இன்னொரு பிரச்சனை தலைவிரித்தாடக் காத்திருப்பதுத் தெரியாமல்.

இதற்கிடையில் ஊரில் அம்மன் கோவில் திருவிழாற்கான நாள் குறித்து விட்டார்கள். முதல் வாரம் செவ்வாய் கிழமை முடிவு பண்ணி அடுத்த வாரம் செவ்வாய் ஆரம்பித்து வியாழன் வரை மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். செவ்வாய் கிழமை ஊர் சாமிக்கிணறில் நீரெடுத்து மஞ்சள் வைத்து அம்மன் முகம் செய்து தேரில் வைத்து ஊர் சுற்றி வந்து கோவிலில் வைப்பார்கள். புதன் கிழமை காலையில் கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி மொட்டை போடும் நேர்த்திக் கடன் இருப்பவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு மாலை பூ மிதித்தல், கயிறு குத்துதல் போன்ற சடங்குகள் இருக்கும். வியாழன் அன்று செய்து வைத்த மஞ்சள் அம்மனை ஊர் சுற்றி வந்து ஆற்றில் கரைத்து விட்டு அத்தை மாமா மகள் மகன் மேல் மஞ்சள் தண்ணி ஊற்றுவார்கள்.

வீட்டிற்கு வந்த மருமகளின் முதல் வருடம், அதனால் கையில் காப்பு கட்டி முளைப்பாரி எடுக்க வேண்டும் என்று அப்பத்தா ஆர்டர் போட்டாச்சு. திருவிழாவுக்கு ஷாப்பிங் பண்ணிட்டு வந்துரலானு வெற்றியைக் கூப்டு இந்த தடவை மருமக இருக்குறதால நீங்க மட்டுமே ஜவுளிலாம் வாங்கிட்டு வந்துருங்கனு கனிமொழி சொன்னதால மதி மட்டும் வெற்றிக் கூட டவுனுக்கு வந்தாச்சு. சென்னை அளவுக்கு பெரிதாக அதிக கடைகள் இல்லாவிட்டாலும் இவ்வளவு நாள் வீட்டில் அடைந்து கொண்டிருந்தவளுக்கு இதுவே பெரிதாக இருந்தது.

காலையில் ஜவுளிக்கடைக்குள் நுழைந்தவர்கள் இந்தக் கலர் சரியில்லை அந்தப் புடவை டிசைன் சரியில்லை என்று பார்த்து பார்த்து கடையில் வீட்டில் உள்ள அப்பத்தாவிலிருந்து பூங்குழலி வரைக்கும் எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்து முடிய மணி மதியம் நான்கைத் தொட்டது.

‘ஷப்பா இந்த பொம்பளைங்க ஒத்த சேலைய எடுக்குறதுக்கு எம்புட்டு நேரம் எடுக்குறாங்க. அடேய் வெற்றி இனிமே இந்த மாதிரி ஷாப்பிங் பேக்கை தூக்குறதுக்கும் பொறுமையா இருக்குறதுக்கும் பழகிக்கனும் போலயே!. இந்த நேரத்துக்கு நான் காட்டுல எத்தனை வேலையை முடிச்சுருப்பேன்’ என்று மனதுக்குள் நினைத்து விட்டு “சரி வா மதி சாப்டு போயிடலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

“என்னடி சாப்டுற?” என்று அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான்.

“எனக்கு மொத பரோட்டா சாப்பிடனும் வெற்றி. உங்க ஊர்ல பரோட்டா சால்னா நல்லா இருக்கும்னு சொன்னா பூங்குழலி. எனக்கு சாப்பிடனும்” என்கவும் சரி முதலில் இரண்டு பரோட்டாவை எடுத்து வரச் சொன்னான்.

முன்னால் வைத்த தட்டில் வாழை வைத்து அதன் மேல் இரண்டு பரோட்டாவை வைத்து விட்டு சால்னா பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்து விட்டுச் சென்றார்கள்.

“இங்க பாரு மதி இதை ஒவ்வொரு வாயா பிச்சு தொட்டுலாம் சாப்பிட முடியாது. மொத எல்லாத்தையும் மொத்தமா பிச்சு போட்டு அது மேல இந்த சால்னா ஊத்தி தான் சாப்பிட முடியும். இந்த மாதிரி” என்று அவளுக்கு எங்கே சென்னையில் இது போல் டீசென்டாக சாப்பிடுகிறேன் பேர்வழி என்று சாப்பிடத் தெரியாது என்னும் நோக்கில்  சொல்லி விட்டு அவள் புறம் திரும்பியவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

அவள் பக்கத்தில் ஒருவன் இருப்பது கூட கண்டு கொள்ளாமல் பரோட்டாவை பிச்சு போட்டு அதில் சால்னா ஊற்றி சும்மா வழித்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

‘அடிப்பாவி உனக்கா சாப்பிட சொல்லிக் குடுத்துட்டு இருந்தேன். சூரி மாதிரி கோட்ட அழிச்சுட்டு முதல்ல இருந்து சாப்பிடுறேனு சொல்வா போல. இதுல இவங்க என்னை பட்டிக்காட்டானு சொல்றா’ என்று ஆச்சர்யத்தில் சாப்பிடாமல் கூட முழித்துக் கொண்டிருந்தான்.

அவன் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து “என்ன வெற்றி நீ சாப்பிடலை?. என்னைய பார்த்துட்டு உட்கார்ந்து இருக்குற?” என்றாள் அவன் தர்மபத்தினி மதி.

“ம் நீ சாப்பிடுற அழகை ரசிச்சுக்கிட்டு இருக்குறேன். இதுவரைக்கும் பரோட்டாவை  கண்ணுல பார்க்காத மாதிரி இந்த மொக்கு மொக்குற”.

“டேய் காட்டான் கண்ணு வைக்காத. சாப்பாடுனு வந்துட்டா கூச்சமேப் பார்க்க கூடாது. சரி சரி அடுத்து ஆர்டர் பண்ணு” என்று வரிசையாக பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல் என்று உள்ளே தள்ளினாள்.

“ஏன்டி இன்னையோட உலகமே அழியப் போகுதா?. கொஞ்சம் குறைச்சுத் தின்னா தான் என்னவாம்”.

“போடா காட்டான்… இன்னும் ஒரு வாரத்துக்கு கையில காப்பைக் கட்டி விட்டு விரதம் அது இதுனு என் வயித்த காயப்போடாம விடாது உன் அப்பத்தாக் கிழவி. அதுக்கு தான் இப்பவே புல் கட்டு கட்டுறேன். கண்ணு வைக்காம சாப்பிடுடா. பொண்டாட்டியை ஹனிமூன் பிளேஸ்க்கு தான் கூப்டு போக மாட்ட. சாப்பாடு கூடவா வாங்கித்தர மாட்ட?”.

“அதுக்காக ஒரே நாளுல இத்தனை தின்னா எப்படி டி செமிக்கும். சரி அதை விடு. இப்போ ஏதோ மேடம் சொன்னேங்களே?” என்றான் புருவம் உயர்த்தி.

“என்ன சொன்னேன்?” என்று புருவம் சுருக்கி யோசித்தாள்.

“ம் ஹனிமூன் பிளேஸ்க்கு கூப்டு போக மாட்டேங்குறனு சொன்னியே?… வேனா ஹனிமூன் போக டிக்கெட் போடட்டா? ” என்றான் குறும்பாக. அவன் கண்களில் அவளின் பதிலுக்கான ஆர்வமும், பேச்சில் குறும்பும் இளையோடியது.

அதுவரை சிக்கன் லெக் பீஸை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தவள் அவனின் கேள்வியில் வாயும் கையும் வேலை நிறுத்தம் செய்தது. ‘அய்யய்யோ என்ன இப்படிக் கேட்டுட்டோம்?’ என்று திருதிருவென முழித்துக் கொண்டு அவன் குறும்புப் பார்வையில் வெட்கி கன்னங்கள் தானாக சிவப்புச்சாயம் பூச தலை குனிந்து கொண்டாள்.

அவளின் வெட்கச்சிவப்பை சில நிமிடம் ரசித்து விட்டு அவளின் பால் வண்ண முகத்தில் வெட்கச்சிவப்பைத் தொட்டுப்பார்க்கும் எண்ணமதை பின்னந்தலையை அழுந்தக்கோதி கடினப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்து “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். சாப்டு” என்று அவன் கை கழுவச் சென்று விட்டான். அதன் பிறகு அவள் பாடுதான் தின்டாட்டமாக போய் விட்டது. வீட்டில் இருந்து வரும் போது சாதாரணமாக இருந்தவளால் போகும் போது அப்படி இருக்க முடியவில்லை.

ஆணவனின் குறும்புப் பார்வையில் சொல்ல முடியா இதமொன்று இதயத்தை தாக்க உடல் சிலிர்த்து வெட்கம் கூச்சம் என்று மாற்றி மாற்றி வந்ததில் நெளிந்து கொண்டிருந்தாள். அவனும் அவள் படும் பாட்டைப் பார்த்து விட்டு அவளை இயல்பாக்கும் பொருட்டு வேறு பேச்சை எடுத்து பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

இது காதலா?  இல்லை
இது காமமா?
தெரியவில்லை
இளமைப் பசியா? இல்லை
இதயம் தொடும் உணர்வா?
புரியவில்லை
வாய் திறந்து சொல்லாமல்
இரு இதயம் ஒன்றாக
உணரும் உணர்வுக்குப் பெயர்
தேடிக் கொண்டிருக்கின்றனர்
இருவரும்..

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. Sangusakkara vedi

      Super ud sis… Y en darlu tamil ah villan range ku build-up panringa… Pavam aven pacha pulla… Ungalukku venumna Vera yarayavathu villan ah potukonga…

      1. Pandiselvi
        Author

        ரொம்ப நன்றிங்க. விடுங்க குழலியை வைச்சு அவனை மந்திரிச்சு விட்டா திரிந்திடுவான்.

    2. Interesting sis nice ud tamizh eppa dha thirundhuvano therila pavam vetri

    3. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.