Loading

மறுநாள் மதியம் துருவ் கண் விழித்தவன் தன் அருகில் அமர்ந்து இருந்த சகோதரனிடம் முதலில் கேட்டது ஜெய்யைப் பற்றித் தான்.

“அண்…அண்ணா… ஜெய்… ஜெய்…” என அடித்த அடியில் பேசக் கூட திராணியற்று துருவ் அழ, அவனை சமாதனப்படுத்த வழி அறியாது அவனை அணைத்துக் கொண்டான் முத்துராசு.

துருவ், “எனக்கு ஒன்னுன்னா அவன்… அவன்… முதல்ல வந்து நிற்பான்ணா… ஆனா என்னால அவன… காப்பாத்த… முடியாம போயிடுச்சேண்ணா…” எனக் கதறி அழுதான்.

முத்துராசு, “நீயி என்னலே பண்ண முடியும்… நீயி அவன் கிட்ட அந்த புள்ள கூட பார்த்து பழகுன்னு சொன்னியே… உன் மேல எந்தத் தப்பும் இல்ல… அவன் நேரம்… நம்மள வுட்டு போய்ட்டான்…” என்கவும் முத்துராசுவை அணைத்துக் கொண்டு அழுத துருவ் திடீரென விலகி, “அ…அண்..அண்ணா… நிரு… நிரு… நிரு நல்லா இருக்கால்ல… சொல்லுங்கண்ணா…” என முத்துராசுவைப் போட்டு உலுக்க,

“அருணி இன்னும் கண்ணு முழிக்கல துருவ்…” என முத்துராசு கூறவும் அதிர்ந்தவன், “நான் உடனே நிருவ பார்க்கணும்ணா…” என்ற துருவ் கையிலிருந்த ஐவியைக் கழட்டி எறிய முயற்சிக்க, “எலேய்… என்னலே பண்ணுற… அமைதியா இரு… அந்தப் புள்ளைக்கு ஒன்னும் ஆகாதுலே…” என முத்துராசு துருவ்வைத் தடுக்க முயன்றான்.

துருவ், “என்னை விடுண்ணா… நிருவ நான் பார்க்கணும்… ஜெய்ய இழந்தது போல என்னால நிருவையும் இழக்க முடியாதுண்ணா… அவ நான் கூப்பிட்டா வருவா… எனக்கு தெரியும்…” என ஏதேதோ உளறியவன் முத்துராசு சொல்ல சொல்லக் கேட்காமல் தட்டுத் தடுமாறி அவ் அறையிலிருந்து வெளியே சென்றான்.

வேறு வழியின்றி முத்துராசு துருவ்வை அருணிமா இருந்த அறைக்கு அழைத்துச் செல்ல, வாடிய கொடியாய் கட்டிலில் படுத்திருந்தவளைக் கண்டு கண்ணீர் உகுத்தான் துருவ்.

அவளின் அருகில் சென்றவன், “நிரு… ப்ளீஸ் எழுந்திரு… நீயும் என்னை விட்டு போயிடாதே டி…” என துருவ் அழவும் அவன் தோளில் கரம் பதித்த முத்துராசு, “எலேய்… அழுவாதேலே… அருணிக்கு ஒன்னும் ஆகாது…” என்க,

அருணிமாவின் கரத்தை தன் கரத்தினுள் வைத்துப் பிடித்துக் கொண்ட துருவ் அருணிமாவின் முகத்தையே சற்று நேரம் பார்த்தபடி இருந்தான்.

முத்துராசு, “எலேய்… உன் கைல இரத்தம் வருதுலே…” என அதிர்ந்து கூற, அப்போது தான் தன் கரத்தை அவதானித்தான் துருவ்.

அவனின் கையில் குத்தியிருந்த ஐவியைக் கழட்டி வீசியதில் அவ் இடத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

“அந்தப் புள்ள செத்த நேரத்துல கண்ணு முழிச்சிடும்லே… நீயி வா காயத்துக்கு மருந்து போடலாம்…” என முத்துராசு அழைக்கவும் மனமே இன்றி தன் சகோதரனுடன் கிளம்ப துருவ் அருணிமாவின் கரத்தை விட்டு விட்டு எழுந்து நடக்க,

இருவரும் அறை வாயிலை அடையும் போது, “மாமா…” எனக் கத்திக் கொண்டு எழுந்தாள் அருணிமா.

துருவ் அவசரமாக அருணிமாவிடம் ஓட, முத்துராசு மருத்துவரை அழைக்கச் சென்றான்.

“நிரு… நிரு…” என துருவ் அழைக்கவும் பாய்ந்து அவனைக் கட்டிக் கொண்ட அருணிமா, “மா..மா… மாமா… உனக்கு ஒன்னும் ஆகலயே… நீயி நல்லா இருக்க தானே…” எனப் பயத்தில் அழுது கொண்டே கேட்க, “எனக்கு ஒன்னும் இல்ல நிரு… பாரு… நான் நல்லா இருக்கேன்…” என துருவ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே முத்துராசு மருத்துவருடன் அங்கு வரவும் அவர்களைக் கண்டு பயந்த அருணிமா துருவ்வை இன்னும் ஒட்டிக் கொண்டவள், “அவியல போக சொல்லுலே மாமா… எனக்குப் பயமா இருக்கு…” என்கவும் அவளின் புதிரான செய்கைகளைப் புருவ முடிச்சுடன் நோக்கினான் துருவ்.

அருணிமாவின் அருகில் சென்ற முத்துராசு அவளின் தலையை வருடியவன், “அருணி… நல்லா இருக்கியா புள்ள…” என அன்பாகக் கேட்கவும் அவசரமாக அவனின் கரத்தைத் தட்டி விட்ட அருணிமா, “யாரு நீயி… என் பக்கத்துல வராதே… எனக்குப் பயமா இருக்குலே…” என்கவும் துருவ்வும் முத்துராசுவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

துருவ், “டா…டாக்டர்… நிரு ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குறா?” எனக் கேட்டான் அதிர்ச்சி மாறாமல்.

மருத்துவர், “இவங்க தலைல பலமா அடிபட்டதால இருக்கும்னு நினைக்கிறேன்… நான் எங்க ஹாஸ்பிடல் நியுராலஜிஸ்ட்ட கூட்டிட்டு வரேன்… அவங்க செக் பண்ணிப் பார்த்துட்டு என்னன்னு சொல்லுவாங்க…” என்றவர் நரம்பியல் நிபுணரை அழைத்து வரச் செல்ல,

அருணிமா முத்துராசுவைப் பயத்துடன் பார்த்தபடி துருவ்வை அணைத்துக் கொண்டு இருந்தாள்.

அதனைக் காண துருவ், முத்துராசு இருவருக்குமே வருத்தமாக இருந்தது.

சற்று நேரத்தில் மருத்துவர் இன்னொரு பெண் மருத்துவருடன் வந்தவர், “இவங்க டாக்டர் ஷாலினி… நியுராலஜிஸ்ட்…” என அவரை அறிமுகப்படுத்தினார்.

ஷாலினி, “இவர் யாருன்னு தெரியுதாமா?” என அருணிமாவிடம் துருவ்வைக் காட்டிக் கேட்கவும் அருணிமா துருவ்வின் முகத்தைப் பார்க்க, அவன் கண்ணசைக்கவும், “மாமா” என்றாள்.

பின், “அப்போ இவர் யாருன்னு தெரியுதாமா?” என முத்துராசுவைக் காட்டி மருத்துவர் கேட்கவும் இட வலமாகத் தலையசைத்தாள் அருணிமா.

“நீங்க ரெண்டு பேரும் வெளியே இருங்க… நான் இவங்கள கொஞ்சம் டெஸ்ட் பண்ணணும்…” என மருத்துவர் கூறவும் துருவ் வெளியேறப் பார்க்க, “மாமா போகாதேலே… எனக்குப் பயமா இருக்கு…” என அருணிமா கூறிக் கொண்டு இருக்கும் போதே அவளுக்கு மயக்க ஊசியைக் குத்தினார் மருத்துவர்.

சில நொடிகளில் அருணிமா மயங்கி விட, அவளை வருத்தத்துடன் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான் துருவ்.

அருணிமாவைப் பரிசோதித்து விட்டு மருத்துவர் வெளியே வர, “டாக்டர்… நிருக்கு என்னாச்சு?” என துருவ் பதறிக் கேட்க, “அவங்க தலைல பலமா அடிபட்டதால அவங்களோட மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு… ஒரு சின்ன குழந்தையோட மனநிலைல தான் அவங்க இருக்காங்க இப்போ… அவங்களுக்கு உங்கள மட்டும் தான் ஞாபகம் இருக்குன்னு நினைக்கிறேன்… நீங்க அவங்கள பார்த்துக்குற விதத்துல தான் அவங்க குணமடைய வாய்ப்பு இருக்கு… அவங்களுக்கு வேற எந்தப் பிரச்சினையும் இல்ல… அவங்கள மன்த்லி வன்ஸ் செக்கப் கூட்டிட்டு வாங்க… பயப்பட எதுவும் இல்ல… சீக்கிரம் குணமடைவாங்கன்னு நம்புங்க…” என்று விட்டுச் செல்ல, மடிந்து அமர்ந்தான் துருவ்.

முத்துராசு, “சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்லே…” என துருவ்விற்கு ஆறுதலாகக் கூற, “நிருவ இப்படி என்னால பார்க்க முடியலண்ணா… என்னைக் காதலிச்சத தவிர அவள் வேற என்ன தப்பு பண்ணா?” என துருவ் அழ, “எலேய்… என்னலே சின்னக் குழந்தை போல அழுதுட்டு இருக்க… வா என் கூட…” என்ற முத்துராசு துருவ்வை அலமேலு இருந்த அறைக்கு அழைத்துச் செல்ல, அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்த துருவ்வின் நடை வாசலிலே தடைப்பட்டு நின்றது.

“அண்…ணா… அம்மாவுக்கு…” என அதிர்ச்சியில் வார்த்தை வராது தடுமாற, முத்துராசு அவனிடம் நடந்ததை விளக்கவும் அலமேலுவின் அருகில் அமர்ந்து அழுதான் துருவ்.

அந்த சத்தத்தில் கண் விழித்த அலமேலு, “துருவ் கண்ணா… நீயி நல்லா இருக்கியாலே?” என அழுது கொண்டே கேட்க, “எனக்கு ஒன்னும் இல்லம்மா…” என அவரை அணைத்துக் கொண்டு அழுதான் துருவ்.

அலமேலு, “என் புள்ள என்னை வுட்டு போய்ட்டான்லே… என் ஜெய் இந்த ஆத்தாவ தவிக்க வுட்டுட்டு போயிட்டான்…” என அலமேலு கதறியவர் சற்று நேரத்தில் மயங்கினார்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்ட துருவ் முத்துராசுவிடம், “நான் என் ஜெய்ய கடைசியா ஒரு தடவ பார்க்க வேணும்ணா…” என்க, முத்துராசுவிடம் பதில் இல்லை.

“உன் கிட்ட தான்ணா சொல்றேன்…” என துருவ் கூறவும், “மன்னிச்சிருலே… கத்தி குத்துனதுல அவனுக்கு நிறைய இரத்தம் போயிடுச்சு… அதனால டாக்டர் அவன் உடம்ப ரொம்ப நேரம் வெச்சிட்டு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு… அதனால நான்… நான் தனியா ஜெய்யோட காரியத்தை பண்ண வேண்டியதாப் போச்சுலே…” என முத்துராசு கூறவும் ஆத்திரத்துடன் அவன் சட்டையைப் பிடித்த துருவ், “ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க… ஏன்… என் ஜெய்ய என் கிட்ட காட்டாமலே அவன எரிச்சிட்டீங்களா? கடைசியா ஒரு தடவ கூட என்னால என் ஜெய்ய பார்க்க முடியலயேண்ணா…” எனக் கோபத்தில் ஆரம்பித்து தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதான் துருவ்.

தன் சகோதரனின் அலறலைக் கேட்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிய முத்துராசு நேரே சென்று நின்ற இடம் ஜெய் இருந்த அறை.

ஜெய் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, முத்துராசுவின் அரவம் கேட்டு எழுந்தவன், “என்னாச்சுண்ணே? துருவ்வும் தங்கச்சியும் நல்லா இருக்காய்ங்க தானே…” என்க, “இதுக்கு மேல என்னால நீயி உசுரோட இருக்குறத மறைக்க முடியாதுலே… ஆத்தாவும் துருவ்வும் இப்படி உடைஞ்சி போய் அழுறத என்னால வேடிக்கை பார்க்க முடியல… வாலே இப்பவே போய் ரெண்டு பேர் கிட்டயும் உண்மைய சொல்லலாம்…” என முத்துராசு கூறவும்,

“ப்ளீஸ்ணே… தயவு செஞ்சி புரிஞ்சுக்கோ… நமக்கும் நம்ம சனத்துக்கும் நியாயம் கிடைக்கணும்னா இதை பண்ணி தான் ஆகணும்… இப்போ நான் துருவ் முன்னால உசுரோட போயி நின்னா அவனுக்கு அந்த ராஜதுரைய பழி வாங்கணும்ங்குற எண்ணம் வராதுலே… நான் செத்துட்டேன்னு அவன் நினைச்சா தான்ணே அந்த வெறியிலயே அவன் படிச்சி அந்த சாதி வெறி பிடிச்ச நாயை ஒன்னும் இல்லன்னு பண்ணுவான்…” என்றான் ஜெய்.

முத்துராசு, “நீயி சொல்றது சரியா இருக்கும்லே..‌. ஆனா என்னால அவன இப்படி பார்க்க முடியல… இது வரைக்கும் என் துருவ் இப்படி உடைஞ்சி போய் நான் பார்த்தது இல்ல… அருணிய நெனச்சி வேற அவன் கஷ்டப்படுறான்லே…” என்ற முத்துராசு அருணிமாவைப் பற்றிக் கூறவும் முதலில் அதிர்ந்த ஜெய்,

“நீயி ஒன்னுத்துக்கும் வருத்தப்படாதேண்ணே… துருவ்வுக்கு தங்கச்சி மேல அம்புட்டு காதல் இருக்கு… இம்புட்டு நாளா அவன் அதைக் காட்டிக்கல… அவன் காதலால சீக்கிரமாவே தங்கச்சிய சரி பண்ணிருவாண்ணே… நீயி ஆத்தாவ பார்த்துக்கோலே…” என்றான்.

அதன் பின் வந்த நாட்களில் அலமேலு ஜெய்யை நினைத்து அடிக்கடி சுகயீனமுறுவதால் அவரை மருத்துவமனையிலேயே வைத்திருந்தனர்.

துருவ்வின் பரீட்சை பெறுபேறுகளும் வந்து அதில் அவன் சிறப்புத் தேர்ச்சி பெற்று இருக்க, துருவ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அருணிமாவுடன் அவனை சென்னை அனுப்பி வைத்தான் முத்துராசு.

அங்கு துருவ் இல்லாத சமயத்தில் அருணிமாவைப் பார்த்துக் கொள்வதற்காக அருணிமாவின் மருத்துவர் ஷாலினியின் பரிந்துரையில் ஒரு தாதியையும் நியமித்தான்.

சென்னையில் சிவில் பரீட்சையை எழுதிய துருவ் அதில் சித்தியடைந்து ஆட்சியர் ஆக, முதலில் ஆறு மாதம் ஒடிஷாவில் பயிற்சிக் காலம் இருந்தது.

ஆனால் துருவ் அருணிமாவை விட்டுச் செல்ல யோசிக்க, அவளும் துருவ்வை செல்ல விடாது அழுது புரண்டாள்.

ஷாலினி நியமித்த தாதியே அருணிமாவை முழுநேரம் பார்த்துக் கொள்வதாகக் கூறவும் அருணிமாவிடம் பல சமாதானம் கூறி இறந்த முத்துராசின் கனவை நிறைவேற்ற ஒடிஷா சென்றான் துருவ்.

ஆனால் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வந்து அருணிமாவை பார்த்து விட்டுச் செல்வதை துருவ் வழமையாக்கி இருந்தான்.

இடையில் முத்துராசுவும் அடிக்கடி அருணிமாவைக் காண வர, அவள் ஓரளவு முத்துராசுவுடன் நெருக்கம் ஆகி இருந்தாள்.

ராஜதுரையும் மாரியும் தம்மை எதிர்த்தவர்களை கொன்று விட்ட வெற்றிக் களிப்பில் இருக்க, இந்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கு எதிரான அத்தனை ஆதாரத்தையும் சேகரித்தான் ஜெய்.

துருவ்வின் பணியில் இருந்த நேர்மையும் பொறுப்பும் அனைவரையும் கவர்ந்து விட, ஆறு மாத பயிற்சிக் காலத்துக்குப் பின் அவனுக்கு அவனது சொந்த ஊரான திருவம்பட்டியிலேயே பணி இடமாற்றம் கிடைத்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்