Loading

“என்னலே… நான் சொன்னது போல செஞ்சியா…” என மாரி கைப்பேசியில் யாரிடமோ வினவ, “எல்லாம் உனக்காக தான்லே செய்யுறேன்… எனக்கு சுத்தமா பிடிக்கலேல நீயி சொல்றது… அம்புட்டும் உன் மேல உள்ள பாசத்தால தான் செய்யுறேன்… என்னை ஏமாத்திட மாட்டேலே..” என மறுமுனையில் இருந்து பதில் வரவும்,

 

மாரி, “என்னலே நீயி… நான் சொன்னத மட்டும் நீயி செய்… மிச்சத நான் பார்த்துக்குறேன்… சரிலே… ஏதாவது சொதப்பி வெச்சிற மாட்டியேலே..” என்க, “அடப்போயா… ஆளும் மண்டையும் பாருலே… அவிய எல்லாம் ஒரு ஆளுன்னு என் கிட்ட சொல்லி இருக்க பார்த்தியா… சரிலே… நான் ஃபோன வெச்சிடுறேன்… எங்க ஐயன் வர நேரமாச்சு… அவிய பார்த்தா வையுவாருலே…” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் தன் கன்னத்தில் இருந்த பெரிய வடுவை விரல்களால் தடவிய மாரி, ‘நீயி தப்பான இடத்துல கைய வெச்சிட்டியேலே… உன் கதைய முடிச்சிட்டு தான் இந்த மாரிக்கு மறு வேலை… எலேய் முத்துராசு… உன்ன ஒரே வெட்டா வெட்டி போடுறது ஒன்னும் எனக்கு அம்புட்டு பெரிய காரியம் இல்லலே… ஆனா அது உனக்கு வலிக்காது… உன்ன ஒரே முறைல வெட்டி கொல்லுறத விட துரோகத்தால ஒவ்வொரு நிமிஷனும் நீயி துடி துடிச்சி சாவணும்லே…’ என தன் மனதில் கூறிக் கொண்டான்.

 

அப்போது அங்கு வந்த ராஜதுரை, “எலேய் மாரி… இங்குட்டு என்னலே பண்ணுறீய… நான் சொன்ன காரியம் என்ன ஆச்சு… எல்லாம் தயாரா இருக்கா…” என்க,

 

“ஆமாய்யா… அம்புட்டும் சரியா இருக்கு… நீயி போய் கையெழுத்த போட்டுட்டு வரது தான் பாக்கி… சாயங்காலமா போய்ட்டு வரலாமுங்கய்யா…” என மாரி கூறவும் புன்னகையுடன் அவன் தோளில் தட்டிக் கொடுத்த ராஜதுரை, “இதுக்கு தான்லே ஒரு வாரிசு வேணும்குறது… அந்தக் கழுதைய படிக்க வெச்சதே எனக்கு ஒத்தாசையா இருக்கும்னு தான்லே… ஆனா அது போற போக்கே தப்பா இருக்கு… எதுக்கும் அவ மேல ஒரு கண்ணு வெச்சிட்டு இருலே… அந்த ****சாதிக்காரங்களுக்கு ஒன்னுன்னா ரொம்ப துள்ளுறா…” என்றார்.

 

மாரி, “நீயி அவள பத்தி கவலைப்படாதீய ஐயா… நான் அதுக்கு ஒரு வழி பண்ணுறேன்… ஐயா… முதல்ல அந்த ***சாதிக்காரங்கள அடக்கி வைக்கணும்… அந்த நாயி முத்துராசு வந்ததும் அவிய நம்மளையே எதிர்க்க தயாராகிட்டாய்ங்கலே…” எனக் கோபமாகக் கூற, “எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோலே… எனக்கு கட்சி ஆபீஸ்ல கொஞ்சம் சோலி கிடக்குது… நான் கிளம்புறேன்… சாயங்காலமா நாம போய்ட்டு வரலாம்லே… அந்தக் கழுதைய எங்குட்டும் வெளிய விட்டுறாதே…” என்று விட்டு சென்றார் ராஜதுரை.

 

_______________________________________________

 

“மனசும் வயசும் ஒரசுதடி ஒன்னுமே புரியல…

எல்.ஈ.டி போல எரியுதடி காதல் தந்த கரண்ட்டுலே…

ராவோடு.. ராவாக.. சொன்ன ஒத்த வார்த்தை…

ரணகளமா களவரமா நெஞ்சிக்குள்ளே பூத்த…

என்னாச்சோ… ஏதாச்சோ… என்னுள்ளே… அச்சச்சோ…”

 

எனப் புன்னகையுடன் பாடியவாறு வீட்டிற்குள் நுழைந்த ஜெய்யின் காலடியில் வந்து விழுந்தது ஒரு துடப்பக்கட்டை. 

 

ஜெய் அதிர்ந்து ஒரு அடி பின்னே நகர்ந்தவன் கீழே இருந்த துடப்பக்கட்டையை பார்த்து விட்டு தலையை உயர்த்தி தன் எதிரே பார்க்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவாறு நின்றிருந்தார் அலமேலு.

 

ஜெய், ‘அடி ஆத்தி… என்னலே நம்ம ஆத்தா அலமேலு ராஜமாதா சிவகாமி ரேஞ்சுல முறைச்சிட்டு கிடக்குது…’ என மனதில் நினைத்தவன், “இன்னைக்கு வூட்ட பெருக்கலயா ஆத்தா… ஓஹ்… உனக்கு குனிஞ்சி வேலை செய்றது கஷ்டமா இருக்குதா… நீயி ஒன்னும் கவலைப்படாதே ஆத்தா… நானே இன்னைக்கு வூட்ட பெருக்குறேன்…” எனக் கீழே விழுந்த துடப்பக்கட்டையைக் கையில் எடுக்க, வேகமாக வந்து அதனை அவனிடமிருந்து பறித்த அலமேலு துடப்பக்கட்டையாலே ஜெய்யின் காலில் ஒரு அடி போட்டார்.

 

“ஆஹ்… வலிக்கிது ஆத்தா…” என ஜெய் குதித்தவாறு கத்தவும் மறு காலில் இன்னொரு அடி போட்ட அலமேலு, “நல்லா வலிக்கட்டும்லே… என் புள்ளய அடிச்சி அவன கஷ்டப்படுத்திட்டு துரைக்கு மட்டும் பாட்டு கேக்குதாலே…” எனக் கோபமாகக் கேட்டார்.

 

ஜெய், “ஓஹ்.. உன் செல்ல மயேன அடிச்சிட்டேன்னு தான் இம்புட்டு ஆத்திரப்படுறியா ஆத்தா…” என்க,

 

“அவன் இன்னும் ரூம விட்டு வெளியவே வரலலே… திங்கிறதுக்கு கூட வரல… பாவம்லே என் புள்ள… உன் தடிமாட்டு கையால அடிச்சது ரொம்ப வலிச்சு இருக்கும்…” என அலமேலு கூறவும் அவரைப் பொய்யாக முறைத்த ஜெய்,

 

“ஆமா… சின்ன குழந்தை உங்க மயேன்… நாம அடிச்சா ஐயாவுக்கு வலிச்சி இருக்குமாம்லே… போவியா ஆத்தா…” என்றான்.

 

அலமேலு, “ஒழுங்கா போய் அவன வெளிய கூட்டிட்டு வாலே… இல்ல இன்னைக்கு நீயி பட்டினி தான்…” என ஜெய்யின் தலையில் இடியை இறக்கி விட்டுச் செல்ல, “ஆத்தா…” எனக் கத்தினான் அதிர்ச்சியில்.

 

அவர் அவனைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து செல்லவும், “எல்லாம் என் தலையெழுத்துலே…” எனப் புலம்பிய படி துருவ்வின் அறைக்குச் சென்றான் ஜெய்.

 

ஜெய்யைக் கண்டு தன் கரத்திலிருந்த புகைப்படத்தை தலையணையின் கீழ் மறைத்து வைத்த துருவ் அவசரமாக தன் கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டான்.

 

ஜெய், “எலேய்… என்னலே பண்ணிட்டு இருக்க… பசிக்குது… வாலே போய் திங்கலாம்…” என்க,

 

துருவ், “உனக்கு பசிச்சா நீ போய் கொட்டிக்கோ… என்னை எதுக்கு கூப்பிடுற…” என பதிலளிக்கவும், “எதுக்குன்னு உனக்கு தெரியாதாலே…” என்றான் ஜெய் முறைப்புடன்.

 

உடனே துருவ் அறையிலிருந்து வெளியேறி, “மா… பசிக்கிதுமா.. சாப்பாடு எடுத்து வைங்க..” என்றவாறு உணவு மேசையில் அமர்ந்தான்.

 

துருவ் சாதாரணமாக இருப்பதைக் கண்ட மகிழ்ச்சியில், “தோ வரேன்லே…” என்றவாறு உணவைக் கொண்டு வந்து மேசை மீது வைத்ததும் துருவ் தட்டில் போட்டு சாப்பிட, “எங்கலே ஜெய்…” என்றவாறு அலமேலு திரும்பிப் பார்த்தார்.

 

அங்கு தான் ஜெய் அவர்களை முறைத்தவாறு நிற்க, அவனிடம் சென்ற அலமேலு, “எலேய் கண்ணா… ஆத்தா மேல கோவமாலே… ஆத்தா சும்மா தான்யா உன்ன மிரட்டினேன்… வந்து திங்கு ராசா…” என்கவும் புன்னகைத்த ஜெய் சென்று துருவ்வின் அருகில் அமர்ந்து கொண்டான்.

 

அவர்களுக்கு பறிமாறி விட்டு அலமேலு செல்லவும் ஜெய், “எலேய்.. மன்னிச்சிருலே… ஏதோ ஆத்திரத்துல அடிச்சிட்டேன்… கண்டுக்காதே… நீயி ஏதோ காரணத்தோட தான் அப்படி செஞ்சிருப்பீயன்னு எனக்கு தெரியும்…” என்றவன், “டேய் துருவ்… நாம போய் அந்தப் புள்ளய பார்த்துட்டு வரலாமாலே..” எனக் கேட்க, 

 

“ஆமாடா.. நீ போனதும் அவ அப்பன் அப்படியே உன்ன வெத்தலை வெச்சி உள்ள கூப்பிட்டு கொஞ்சுவாரு பாரு… அந்தாளுக்கு சும்மாவே எங்களைக் கண்டா ஆகாது… சும்மா காமெடி பண்ணிட்டு…” என்றான் துருவ்.

 

“அது எனக்கு தெரியாதாலே… நாம போலாம்.. ஏதாவது வழி கிடைக்கும்…” என ஜெய் கூறவும், 

 

துருவ்,”ஹம்ம்.. சரி..” என்க, ஜெய் சந்தேகமாக அவனை நோக்கினான்.

 

ஆனால் துருவ் தன் பாட்டில் உண்ணவும் ஜெய்யும் உண்பதைத் தொடர்ந்தான்.

 

துருவ்விற்கும் அருணிமாவைக் காண வேண்டும் போல இருந்தது. அவளின் கலங்கிய கண்கள் துருவ்வை வேறு எதுவும் செய்ய முடியாமல் ஆட்டிப் படைத்தன. அதனால் தான் ஜெய் கேட்டதும் சம்மதித்தான்.

 

இருவரும் சாப்பிட்டு முடித்து அலமேலுவிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினர்.

 

_______________________________________________

 

ராஜதுரையும் மாரியும் எங்கோ கிளம்பிச் செல்வதை தன் அறை ஜன்னல் வழியாகப் பார்த்த அருணிமா வெளியே செல்வதற்காக தயாராகினாள்.

 

ஆனால் அறையிலிருந்து வெளியேறி வந்தவளின் முகம் உடனே வாடியது.

 

ஏனெனில் ராஜதுரையின் ஆட்கள் வாசலில் கேட் போட்டது போல் நின்றிருக்க, அவர்களைத் தாண்டி வெளியே செல்வது என்பது இயலாத காரியம்.

 

மீண்டும் தன் அறைக்கே திரும்பி வந்து வாடிய முகத்துடன் கட்டிலில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவளின் மூளையில் திடீரென ஒரு திட்டம் உதிக்கவும் அவளது முகம் மலர்ந்தது.

 

அதன்படி தன் அறை ஜன்னலைத் திறந்து மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தவள் கீழே ராஜதுரையின் ஆட்கள் யாரும் இருக்காததால் ஜன்னல் வழியாக கீழே புற்றரையின் மீது குதித்தாள்.

 

ராஜதுரை வாசலில் மட்டும் தன் ஆட்களை நிறுத்தி விட்டுச் சென்றதால் அருணிமாவுக்கு அங்கிருந்து செல்வது சுலபமாகியது.

 

யார் கண்ணிலும் படாமல் ஓடியவள் தெரு முனைக்கு வந்ததும் அங்கு இருந்த ஒரு பெண்ணிடம், “யக்கோவ்… இந்த வழியா என் மாமன எங்குட்டாவது பார்த்தீய… நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்காய்ங்களே.. அவிய தான்..” என அருணிமா தெரு முனையில் இருந்து கத்த,

 

“எவன்லே உன் மாமன்… சீமைல இருந்து வந்திருக்கானே ராஜா கணக்காட்டம் ஒருத்தன்… அவனாலே..” எனப் பதிலுக்கு கத்திக் கேட்டாள் அப் பெண்.

 

அருணிமா, “ஆமாக்கா… எப்படி இருக்கு நம்ம செலக்ஷனு… சும்மா சினிமா நடிகன் போல இருக்கான்ல…” என்க,

 

“வெவரம் பத்தாத புள்ளயா இருக்கியேலே… நம்மூரு பொட்டச்சிங்க அம்புட்டு பேரு கண்ணும் உன் மாமன் மேல தான்லே இருக்கு… உனக்கு சக்காளத்தியா வர வரிசை கட்டிட்டு இருக்குறாளுக… நானே ஒரு செக்கன் மயங்கி போய்ட்டேன்னா பார்த்துக்கோயேன்…” என அப் பெண் தெரியாது அருணிமாவிடம் வாயை விட காளி அவதாரம் எடுத்தாள் அருணிமா.

 

“இப்போ தான்லே அவிய சேக்காளி கூட இந்த வழியா போனத பார்த்தேன்லே..” என்கவும் அவர் காட்டிய திசையில் ஓடினாள் அருணிமா.

 

_______________________________________________

 

வீட்டிலிருந்து கிளம்பி வந்த இருவரும் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்க, மாலை வேளை என்பதால் கிராமத்து குமரிகள் சிலர் தெரு ஓரமாய் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

“ஹேய் புள்ள.. அங்க பாருலே… யாருலே அது… ஊருக்கு புதுசா…” என ஒருத்தி கேட்கவும் அனைவரின் பார்வையும் துருவ் மற்றும் ஜெய்யின் பக்கம் திரும்பியது.

 

“அப்படி தான் போல… ஐயோ.. அப்படியே தூக்கிட்டு போய் தாலிய கட்ட சொல்லலாம் போல இருக்குலே.. அதுலயும் இங்குட்டு பக்கம் நெட்டையா ஒருத்தன் வரானே… அவிய அம்புட்டு அம்சமா இருக்கான்லே…” என ஒருத்தி துருவ்வைப் பார்த்து கூற, 

 

“ஏன்டி.. அந்த மத்த பயலுக்கு மட்டும் என்னலே குறை… நீயி சொன்ன பயலு உர்ருன்னே இருக்குதுலே.. ஆனா இந்த பயல பாரு.. எம்புட்டு அழகா சிரிச்சிட்டு வருதுலே..” என ஜெய்யைப் பார்த்துக் கூறினாள் ஒருத்தி.

 

“எலேய் சென்னி… என்னலே நீயி… நாம அம்புட்டு பேரும் அந்த பயலுங்கள சைட் அடிச்சிட்டு இருக்கோம்… நீயி மட்டும் என்னலே தனியா நொண்டிட்டு இருக்கீய..” எனக் கேட்டாள் ஒருத்தி.

 

அவர்களுக்கு முன்னே அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சென்னியம்மாள் ஜெய்யைப் பார்த்து விட்டாள்.

 

ஆனால் அவள் தன் பாட்டுக்கு தனியே விளையாடவும் தான் இவ்வாறு கேட்டனர்.

 

வெகுநேரம் நீடித்த அமைதியைக் கலைத்த ஜெய், “எதுக்குலே அவர் கிட்ட போய் வம்பு பண்ணினீய… அந்தாளு பண்ண வேலையால உன்னால எக்சேமே எழுத முடியாம போய் இருக்கும்…” எனக் கோபப்பட,

 

துருவ், “அதான் எழுதிட்டேனே.. இன்னும் எதுக்கு அதையே சொல்லிட்டு இருக்க…” என்றான் சலிப்பாக.

 

“டேய்… வெறும் எக்சேம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு… அந்தாளு நெனச்சா என்ன வேணாலும் பண்ணுவான்லே… பார்த்து சூதானமா இரு… இன்னைக்கு அந்தாளோட பார்வையே வயித்துல புளிய கறச்சிடுச்சு..” என்றான் ஜெய்.

 

துருவ்வுடன் வந்து கொண்டிருந்த ஜெய் சென்னியைப் பார்த்து விட, “எலேய் துருவா… நீயி முன்னாடி போலே.. நான் வெரசா வரேன்…” என சென்னியைப் பார்த்தபடி கூற, அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்த துருவ் ஜெய்யின் பார்வை சென்ற இடத்தைக் கண்டு தலையிலடித்துக் கொண்டவன், “வம்பு தும்புல மாட்டாம வந்து சேரு..” என்று விட்டு சென்றான்.

 

ஜெய், “எலேய் சென்னியம்மாள்…” என அங்கிருந்து கத்தவும் சென்னி பல்லைக் கடிக்க, மற்ற பெண்டிர் அதிர்ச்சியடைந்து, “எலேய் சென்னி.. உனக்கு முன்னமே அந்தப் பயல தெரியுமாலே… அதான் கண்டுக்காம இருந்தியா… இம்புட்டு உரிமையா கூப்பிடுறான்…” என ஒருத்தி கேட்க,

 

“அந்தப் பயலுக்கு இன்னைக்கு இருக்குலே…” என்று கோபமாகக் கூறி விட்டு ஜெய்யை நோக்கி நடந்தாள் சென்னியம்மாள்.

 

சென்னி தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஜெய் அவளைப் பார்த்து கையசைத்து, “எப்படி இருக்கீய புள்ள…” எனப் புன்னகையுடன் கேட்க,

 

இடுப்பில் கையூன்றி அவனை முறைத்த சென்னி, “என்னலே வேணும் உனக்கு… யாரு நீயி.. எதுக்கு அம்புட்டு பேர் முன்னாடி என் பேர ஏலம் விட்டுட்டு இருக்கியேலே…” என்க,

 

“உன் பேரு தானேலே சென்னியம்மாள்… நான் உன்ன தானே காதலிக்கிறேன்… அப்போ உன்ன தானே கூப்பிட முடியும்..” என சென்னியம்மாளை அழுத்தமாக கூறிய ஜெய் அப்பாவி போல் கேட்டான்.

 

அதைக் கேட்டு பல்லைக் கடித்த சென்னி, “எலேய்.. மருவாதையா இங்குட்டிருந்து ஓடிருலே… உன் சீமையில இருக்குற பொட்டச்சிங்க போல இல்லலே நம்மூரு பொட்டச்சிங்க… ரொம்ப பேசினா நாக்க அறுத்துப்புடுவேன்…” என மிரட்டவும் ஒரு நிமிடம் அதிர்ந்தான் ஜெய்.

 

_______________________________________________

 

ஜெய்யை விட்டு சற்று தூரம் நடந்து வந்த துருவ்வின் முன்னால் திடீரென மூச்சிறைக்க வந்து நின்றாள் அருணிமா.

 

அவளைக் கண்டு துருவ்வின் முகம் ஒரு நொடி மலர, உடனே அதனை மறைத்துக் கொண்டவன் அருணிமாவைக் கடந்து செல்லப் பார்க்க அவனது கையைப் பற்றி நிறுத்தினாள் அருணிமா.

 

துருவ் அமைதியாக இருக்க, “எனக்கு ஒன்னுன்னா துடிச்சி போயிடுறியாலே..” என அருணிமா புன்னகையுடன் கேட்டாள்.

 

துருவ் பதில் கூறாது அமைதியாக இருக்கவும், “எங்குட்டும் போயிறாதே மாமோய்.. இந்தா வந்துடுறேன்லே..” எனக் கெஞ்சலாய் கேட்டு விட்டு அப் பெண்களை நோக்கி ஓடினாள்.

 

வழமையாக அருணிமாவின் பேச்சைக் கண்டு கொள்ளாது நடப்பவனால் இன்று ஏனோ அவ்வாறு செய்ய முடியவில்லை.

 

சென்னியம்மாள் சென்றதும் மீண்டும் தம் விளையாட்டைத் தொடர்ந்த பெண்களின் அருகில் வந்த அருணிமா, “எலேய்.. இங்க பாருலே…” என்க,

 

“ஹேய் அருணி.. வாலே நீயும் ஆட்டத்துக்கு..‌” என ஒருத்தி புன்னகையுடன் கூற, “நான் ஒன்னும் உங்க கூட ஆட்டத்துக்கு ஒன்னும் வரலலே… எவலே அது என் மாமன் மேல கண்ணு வைக்கிறது..” என்றாள் முறைப்புடன்.

 

“என்னலே சொல்ற.. யாரு உன் மாமன்…” என ஒருத்தி புரியாமல் கேட்கவும், “அதோ.. அங்குட்டு நிக்கிறானே ஒரு பயலு.. அவிய தான்லே..” என துருவ்வைக் கை காட்டி கூறினாள் அருணிமா.

 

“என்ன‌ டீ சொல்ற… இது எப்போ இருந்துலே…” என அதிர்ச்சி மாறாமல் கேட்க, “நான் அவியல ரொம்ப நாளா லவ் பண்ணுறேன்லே.. அவியலும் தான்… ஒழுங்கா வேற ஆளைப் பாரு… வந்துட்டாய்ங்க எனக்கே சக்காளத்தி ஆக…” என்று கோபமாகக் கூறி விட்டுச் செல்ல, அவ்வளவு நேரம் அவர்களில் துருவ்வை ரசித்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ஏனைய பெண்கள் நகைக்கவும் உதட்டை சுழித்தாள் அவள்.

 

_______________________________________________

 

ராஜதுரையுடன் ஒரு வேலையாக வந்திருந்த மாரியின் கைப்பேசி ஒலி எழுப்ப, திரையில் தெரிந்த பெயரைக் கண்டு கைப்பேசியை எடுத்துக் கொண்டு எழுந்தான் மாரி.

 

ராஜதுரை, “யாருலே இந்த நேரம் கால் பண்றது.. சீக்கிரமா பேசிட்டு வாலே… நேரமாச்சு..” என்கவும் சரி எனத் தலையசைத்து விட்டு வெளியே சென்ற மாரி அழைப்பை ஏற்றான்.

 

மாரி, “என்னாச்சுலே.. நான் ஒரு முக்கியமான காரியமா ஐயன் கூட வந்திருக்கேன்லே… அப்புறம் பேசுறேன்…” என்க,

 

“ஒரு நிமிஷம் இருலே… இங்குட்டு அந்த கீழ் சாதிக்காரப் பயல பார்க்க உன் தங்கச்சி வந்து இருக்கா…” என மறுபக்கம் கூறப்படவும் மர்மச் சிரிப்பை உதிர்த்த மாரி, “அந்தக் கழுதை நேரா அங்குட்டு தான் வரும்னு எனக்கு தெரியும்லே… நான் வேணும்னு தான் வாசல்ல மட்டும் ஆளுங்கள வெச்சிட்டு வந்தேன்…” என்றான்.

 

“அதானே பார்த்தேன்… நீயாவது அம்புட்டு ஏமாளியா இருக்குறதாவது… எனக்கு உன் கிட்ட பிடிச்சதே இது தான்லே…” என்கவும் சிரித்த மாரி, “சரிலே… நீயி அந்தக் கழுதைய கண்டுக்காம இரு… அதை நான் பார்த்துக்குறேன்… நீயி ஃபோன வைலே… நான் வூட்டுக்கு போயி பேசுறேன்..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

பின் மாரி உள்ளே நுழையவும் ராஜதுரை, “வாலே உள்ளார போலாம்… நேரமாச்சு…” என அவனை அழைத்துக் கொண்டு செல்ல, உள்ளே நடந்தை அவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

 

இருவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றனர்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்