மாமியார் மனசு!
“சின்ன சின்ன ஆசை..
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை..
முடிந்து வைத்த ஆசை…
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை…”
என்று அலைபேசி மணி ஒலிக்க, அதை கவனித்த பூங்கொடி “ஏய் திவ்யா, போன் அடிக்குது பாரு.. நீ இன்னுமா ரெடி ஆயிட்டு இருக்க?” அடுக்களையில் தோசை ஊற்றியவரே குரல் கொடுத்தாள்..
“இதோ ரெடி ஆயிட்டேன் மா..” என்றவள் ஹாலில் இருந்த போனை எடுத்தவாறே அதை அட்டன்ட் செய்து “ஹலோ” என்றாள்..
“ம்ம்.. சொல்லு காயூ, நான் ரெடி ஆயிட்டேன்.. இதோ சாப்பிட்டதும் கிளம்பிடுவேன்.. நீ கிளம்பியாச்சா?” என்றாள்.. எதிர்முனையில் அவள் தோழி காயத்ரி..“ம்ம் நான் கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு டி.. சீக்கிரம் வா.. நான் திரும்ப வீட்டுக்கு சீக்கிரம் போகணும் இல்ல..?” என்றாள் சலித்தவாறே..
“ஹூம்ம்.. சரி சரி உடனே கிளம்பறேன்..” என்று போனை அணைத்துவிட்டு சமையலறையில் நுழைந்தாள்.. “யாரு காயத்ரியா?” அம்மா கேட்க தலையசைத்து விட்டு சாப்பிடுவதில் மும்முரம் காட்டினாள்.. “அம்மா போதும் இதுக்கு மேலே எனக்கு தோசை ஊத்தாதே, நீ சாப்பிடு..” என்று சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கை கழுவினாள்…
“ஏய் என்ன இவ்ளோ தான் சாப்பிடுவியா? இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் வைச்சுட்டு, கொஞ்சமாவது உடம்பு தேறினா தான் பார்க்க நல்லா இருக்கும்.. இவ்ளோ நாள் நீ எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம் டி.. இனி உனக்கு எதுன்னாலும் நான் தான் பதில் சொல்லணும்… ஒழுக்கமா இன்னும் ரெண்டு தோசை சாப்பிட்டுவிட்டு கிளம்பு..” என்று அதட்டினாள் அம்மா வழக்கம்போல…
“அய்யோ அம்மா ஆரம்பிச்சுட்டியா?? நான் காயூவ எவ்வளவு வருஷம் கழிச்சு பார்க்கப் போறேன்னு உனக்கே தெரியும் இல்ல?? அவளப் பார்க்க போறதே பெரிய விஷயம்.. இப்போ போய் நான் லேட் பண்ணினா அவ டென்ஷன் ஆயிடுவா… நான் வந்து கூட உனக்காக சாப்பிடுறேன்.. சரியா.. என் செல்ல அம்மா…” என்று கொஞ்சி விட்டு தப்பியோடிய சந்தோஷத்தில் வெளியே வந்து தன் ஸ்கூட்டியை கிளப்பினாள்…
அடுத்த கால் மணி நேரத்தில் அந்த ஊரின் பேர் போன டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழைந்தாள்.. பார்க்கிங் செய்து விட்டு திரும்பிய போது கேண்டினில் அமர்ந்திருந்த காயத்ரி கையசைத்தாள்… நேரே அங்கே சென்று அமர்ந்தவள் காயத்ரியை ஒரு ஆழமான பார்வை பார்த்தாள்…
“எவ்ளோ நாள் ஆச்சு காயூ உன்ன பார்த்து… லாஸ்ட் ஆ உனக்கு குழந்தை பிறந்தப்போ பார்க்க வந்தேன்… கரெக்டா??” என்றாள் திவ்யா.. “ஹும்ம்” என்று பதிலுக்கு சோர்வாய் தலையாட்டினாள் காயத்ரி…
“சரி உன் குட்டி பையன் எப்படி இருக்கான்?? அவன் பேர் நகுல் தான?? அவனையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே.. நானும் பார்த்த மாறி இருந்திருக்கும்.. அண்ணா எப்படி இருக்கார்.??” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் வைத்தாள்..
“ஹூம்ம் எல்லாரும் நல்லா இருக்காங்க.. நான் என் பையன கூட்டிட்டு வந்தா, உன்ன மீட் பண்ணத வீட்டுல சொல்லிடுவான்.. அவன் பயங்கரமா வாயடிப்பான்.. அப்பறம் நான் என்ன நெனச்சு உன்னப் பார்க்க வந்தேனோ அது எல்லாமே ஸ்பாயில் ஆயிடும்.. இங்க ஒரு முக்கியமான மேரேஜ் பங்க்ஷன் அதான் எல்லாரும் பேமிலியா வந்தோம்.. அவரோட மாமா வீட்டுல தான் ஸ்டே பண்ணிருக்கோம்.. அவங்க கொஞ்சம் மளிகை சாமானம் வாங்கனும்னு நேத்து சொன்னாங்க.. அப்போதான் எனக்கு ஒரு யோசனை, உன்ன மீட் பண்ண இது தான் நல்ல சான்ஸ்னு, நான் கடைக்கு போறேன்னு சொல்லி கிளம்பி வந்துட்டேன்.. அதனால தான் உன்ன கூட அர்ஜென்ட்டா வர சொல்லி மேசேஜ் பண்ணேன்.. எங்கே ரொம்ப லேட் பண்ணிடுவியோன்னு பயத்துலதான் வெளில வந்துட்டு உனக்கு கால் பண்ணினேன்…” என்றாள் காயத்ரி ஒரு வித பய உணர்வோடு…
“ஏன் காயூ உனக்கு இவ்ளோ பயம்..?? நீ ரொம்ப தைரியமான பெண்ணாச்சே?? காலேஜ்ல கூட எல்லார்கிட்டயும் தைரியமா எதிர்த்து பேசுவியே?? இப்போ அதெல்லாம் எங்கே காணாம போச்சு..? உன் குழந்தைய பார்க்க வந்தப்போ கூட நீ என் கிட்ட அதிகமா பேசவே இல்ல.. என்னால இன்னும் நம்ப முடியல, இது நீ தானானு சந்தேகமா இருக்கு..” என்றாள் திவ்யா நம்ப முடியாத பார்வையில்..
“ஹூம்ம் எல்லா பொண்ணுங்களோட வாழ்க்கையும் மேரேஜ்க்கு முன்னாடி அப்படி தான் இருக்கும் திவி.. மேரேஜ் ஆயிட்டா எல்லாமே தலைகீழ்.. நமக்குன்னு நாம வாழவே முடியாத ஒரு சூழ்நிலை.. ஏன் நம்ம அப்பா, அம்மாவப்பத்தி கூட அதிகமா யோசிக்க முடியாத ஒரு நிலை.. அவங்களப் பார்க்க கூட எவ்வளவு யோசிச்சு அவரோட வீட்டுல எல்லார்கிட்டயும் பர்மிஷன் வாங்க வேண்டியிருக்கு தெரியுமா??” அவள் சொல்லும் போதே கண்களில் சிறிதாக கண்ணீர் எட்டிப்பார்த்தது..
அவளை சமாதானப்படுத்த முயன்றவளாய் திவ்யா அவள் அருகில் போய் அமர்ந்து கொண்டு அவளைத் தேற்றினாள்.. “இப்போ கூட பாரு எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல அவங்கள போய் ஒரு தடவ பார்க்க கூட என்னால முடியல.. இப்போ இந்த பங்க்ஷன் தான் ரொம்ப முக்கியம் பாரு, உடனே கிளப்பி கூட்டிட்டு வந்துட்டாங்க.. ஆனா, எங்கம்மா நான் கஷ்டப்படக்கூடாதுன்னு போன் பண்ணி நான் நல்லா தான் இருக்கேன், நீ நல்லபடியா போயிட்டுவானு எனக்கு சமாதனம் சொல்றாங்க.. இத எங்கே போய் நான் சொல்றது??” என்றவளைத் தேற்ற முயன்று தோற்றவளாய் அமர்ந்திருந்தாள் திவ்யா..
ஒருவாறு சமாளித்தவாறே காயத்ரி தன் அழுகையை அடக்கியவாறு பேசினாள். “ஸாரி திவி, உனக்கு மேரேஜ் ஆகப்போற டைம்ல நான் இதெல்லாம் பேசி உன்ன பயமுறுத்த நெனைக்கல, என்னால என் பீலிங்க்ஸ கண்ட்ரோல் பண்ண முடியாம அழுதுட்டேன்.. ஏன்னா என்னால இத வேற யார் கிட்டயும் சொல்ல முடியாது.. என் நிலைமை அப்படி.. உன் கிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சு” என்றாள் காயூ..
“ஹே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல காயூ. நான் உன்னோட பெஸ்ட் பிரன்ட்.. நீ என்கிட்ட எதுன்னாலும் சொல்லலாம்.. ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு… இந்தா இந்த ஜூஸ குடி” என்று அவளிடம் நீட்டினாள் திவ்யா.. பிறகு யோசித்தவாறே கேட்டாள். “இதெல்லாம் நீ அண்ணன் கிட்ட சொல்லலாம் இல்ல??” என்றவளை ஒரு பார்வை பார்த்தாள் காயத்ரி..
“ஹூம்ம்… அதெல்லாம் என்னைக்குமே நடக்காது திவி.. அங்கே எங்க மாமியார் வைச்சது தான் சட்டம்.. எல்லாரும் அதுபடி தான் நடக்கணும்.. அது எங்க மாமனாரா இருந்தாலும் சரி, அவரா இருந்தாலும் சரி.. எல்லாரையும் அப்படியே பழக்கிட்டாங்க.. திடீர்ன்னு போய் நாம அத மாத்தணும்னு நெனச்சா முடியுமா?? அவரும் இங்க இப்படி தான், நீ அதுக்கு தகுந்த மாதிரி பழகிக்கோனு ஒரே வார்த்தைல சொல்லிட்டார். அதுக்கு மேல நான் என்ன பேச.” என்றாள் விரக்தியாக..
எதையோ யோசித்தவளாய் இருந்தாள் திவ்யா.. “சரி விடு, நான் பாரு என்னோட கஷ்டத்த உன் கிட்ட சொல்லிட்டே உன் விஷயத்த கேட்க மறந்துட்டேன்..” என்றவள் திவ்யாவின் முகம் திருப்பிக் கேட்டாள்.. “இப்போவே முகத்துல கல்யாணக் கலை வந்துடுச்சு போல.. அப்பறம், மாப்ள எப்படி..?? உன் கிட்ட நல்லா பேசறாரா, பழகறாரா? அவங்க வீட்டுல எல்லாம் ஓகே தானே.?” என்று அவள் பதிலை எதிர்பார்த்து சிறிது உற்சாகமானாள்..
“ம்ம்.. அவர் பேர் அர்ஜூன்.. அவங்க வீட்டுல இவர் ஒரு பையன், அப்பறம் ஒரு பொண்ணு.. காலேஜ் படிச்சுட்டு இருக்கா.. அவங்க பேமிலில எல்லாருமே பிசினஸ் தான்.. அவரும் எம்.பி.ஏ முடிச்சுட்டு அவங்க அப்பா கூட தான் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார்.. சீக்கிரமே வேற பிசினஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கார்.. அவங்க வீட்டுல இப்ப வரைக்கும் எல்லாரும் நல்லா தான் பழகறாங்க.. இருந்தாலும், எனக்கு ஜாயின் பேமிலி ஒத்து வருமான்னு தெரியல அதனால அவர் கிட்ட தனிக்குடித்தனம் போலாம்னு சொல்லிருக்கேன்..” என்றதும் காயத்ரி அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்..
“ஏய் என்ன சொல்ற திவி, நிஜமாலுமா கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே இதப் பத்தி பேசிட்டியா?? அவர் என்ன சொன்னார்..” என்று ஆர்வமாய்க் கேட்டாள் அவள்.. “ஹும்ம்… முதல்ல எங்க வீட்டுக்கு வந்து பாரு.. அதுக்கப்பறம் நீயே டிசைட் பண்ணுன்னு சொல்லிட்டார்..” என்றாள் சிறிது குழப்பத்தோடு..
“ம்ம்ம்.. பரவாயில்ல திவி கொஞ்சம் தெளிவான ஆளா தான் இருப்பார் போல.. ஆனா, உங்க வீட்ல நீ இப்படி சொன்னதுக்கு எதுவும் சொல்லலையா??” என்றாள்..
“ஹூம்ம்.. எங்கம்மாக்கு மட்டும் தான் தெரியும்.. அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.. வீடே ரெண்டாயிடும்.. அம்மாவும் சொல்லுவாங்க, குடும்பம்னா ஆயிரம் இருக்கும், வீட்டுக்கு வீடு வாசப்படி, நீ இதெல்லாம் தெரியாமையே இருந்துடுவியா?? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. உங்க மாமியாரப் பார்த்தா அப்படி தெரியலனு, எப்பவும் புராணம் பாடிக்கிட்டே தான் இருப்பாங்க.. நான் அதெல்லாம் சட்டையே பண்றதில்ல.. கல்யாணம் ஆயிட்டா எல்லாமே மாறிடுமா என்ன?? நாம தான் நம்ம சுதந்திரத்த முடிவு பண்ணனும்.. அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது… அதனால தான் அவர் கிட்ட அப்படி சொன்னேன்.. பாக்கலாம் கொஞ்ச நாள் ஒத்து வந்தா பார்ப்பேன்.. இல்லன்னா தனிக்குடித்தனம் தான்…” என்று தன் மனதில் பட்டதையெல்லாம் பேசினாள் திவ்யா… அவளின் தைரியம் காயத்ரிக்கு ஒருவித ஏக்கத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்..
பேசிக்கொண்டே இருந்தவர்கள் அடுத்து உள்ளே பொருட்கள் வாங்கச் சென்றனர்.. அப்போது ஒரு கணம் திகைத்தாள் திவ்யா.. முன்னே சென்ற காயத்ரியின் கை பிடித்து பின்னே இழுத்தாள்.. என்னவென்று தெரியாமல் முழித்த காயத்ரியை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினாள்.. அங்கே…
“ஏய் ஜானகி, எப்படி இருக்க? எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னப் பாத்து.?” குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்த ஜானகி அவர்களைப் பார்த்த சந்தோஷத்தில் திகைத்தாள்..
“ஆங்.. மங்கலம்மா, எப்படி இருக்கீங்க? எப்போ இங்க வந்தீங்க? நீங்க பொள்ளாச்சிக்குப் போனாலும், நம்ம வீதில எல்லாரும் அப்பப்போ உங்களைப் பத்தி பேசிட்டு தான் இருப்போம்.. அப்பறம், வீட்டுல எல்லாரும் சவுக்கியமா?? என்று கேள்விகளைத் தொடுத்தாள் ஜானகி..
ஆனால், மங்கலம்மாவின் முகத்தில் மாறாய் சந்தோஷம் தெரியவில்லை.. “ஹூம்ம்… ஏதோ இருக்கேன் ஜானகி.. கோயம்புத்தூர்ல இருந்த வரைக்கும் எனக்கு எல்லாமே சரியா இருந்தது, பொள்ளாச்சிக்கு ட்ரான்ஸ்பர் ஆகி போனதும் தான் போனோம், எனக்கு எதுவுமே சரிப்படல..” என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன்..
நிலமையை உணர்ந்த ஜானகி, “இதோ ஒரு நிமிஷம் மங்கலம்மா நான் திங்க்ஸ பில் போட கொடுத்துட்டு வரேன், நீங்க கேண்டீன்ல போய் உட்காருங்க..” என்று சொல்லி பில் போடும் இடத்துக்குச் செல்ல மங்கலம்மா வெளியே கேண்டீனில் சென்று அமர்ந்தார்.. அதே நேரம் அங்கே திவ்யா காயத்ரியின் கையை இறுக்கமாக பிடித்தவண்ணம்.. “ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு” என்று அங்கே வேலை பார்ப்பவரிடம் கேட்டாள்..
“பேக் சைடுல இருக்கு..” என்றவளுக்கு “தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு காயத்ரியை அங்கே இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.. நடப்பது ஒன்றும் தெரியாமல் அவளோடு சென்றாள் காயத்ரி..
பின் பக்கமாக சென்றவள் மறைவாக நின்று பார்த்த போது மங்கலம்மா அமர்ந்திருந்த இடத்தின் ஜன்னல் வெகு அருகில் இருந்தது.. அங்கே நின்றால் அவர்களின் உரையாடல் நன்றாகவே அவர்களுக்கு கேட்கும்.. அது தான் திவ்யாவிற்கும் வேண்டும்…
ஜானகி பொருட்களை வாங்கிக் கொண்டு மங்கலம்மா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்ந்தாள்.. “ம்ம்.. இப்போ சொல்லுங்க மங்கலம்மா, அங்க நம்மள சுத்தி எல்லாரும் இருந்தாங்க.. அதான் கொஞ்சம் தனியா உட்காந்து பேசலாம்னு தோணுச்சு.. என்னாச்சு? எல்லாரும் சந்தோஷமா தானே அங்கே குடி போனிங்க?” என்றாள் ஜானகி..
“ஹூம்ம் சந்தோஷமா?? அதெல்லாம் சும்மா ஜானகி.. என்னத்த சொல்ல… மருமகள்னு எனக்கு ஒருத்தி வாய்ச்சிருக்கா பாரு.. எங்கிருந்து தான் அவள புடிச்சேன்னு தெரியல..” என்று புலம்பியவளைப் பார்த்த ஜானகி “ஏன் மங்கலம்மா இப்படி சொல்றிங்க.?? உங்க மருமக நல்ல பொண்ணு தானே.. நீங்க பார்த்து தானே கட்டி வைச்சிங்க.. அப்பறம் என்ன பிரச்சினை..??” என்றாள்..
“அவ தான் என் பிரச்சினையே ஜானகி.. எல்லாமே அவளால் வந்த வினை.. மருமகள்னா எப்படி இருக்கணும், குடும்பத்துக்கு கட்டுப்பட்டு, பெரியவங்க என்ன சொல்றாங்களோ அத ஏத்துக்கிட்டு அவங்க இஷ்டப்படி தான நடக்கணும்.. ஆனா, இவ வந்த ரெண்டு வருஷத்துலயே என் பையன அவ கைக்குள்ள போட்டுக்கிட்டா, அப்பறம் அவரையும், அவ பேச்சை கேக்கற மாதிரி மாத்திட்டா.. என் குடும்பமே இப்போ தலைகீழ்.. என்னய எங்க வீட்டுல யாரும் மதிக்கறதே இல்ல… அவர் கூட இப்போ என் பேச்சை கேக்கறதில்ல.. கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு, இன்னும் அவ வயித்துல ஒரு புழு பூச்சி கூட உண்டாகல.. கேட்டா ஏதேதோ காரணம் சொல்றாங்க.. இப்போ கூட இங்க பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட்க்கு தான் வந்திருக்கோம்… என்னால ரொம்ப நேரம் அங்க இருக்க முடியல, கொஞ்சம் ஜூஸ் குடிக்கலாமேன்னு அப்படியே வெளியே வந்துட்டேன்.. நீ கடைக்குள்ள போறத நான் பார்த்தேன், அதான் அப்படியே பேசிட்டு போலாமேன்னு வந்தேன்..” என்று கடகடவென தன் கதையை ஒப்பித்தாள் மங்கலம்..
ஒரு நிமிடம் யோசித்த ஜானகி, “ சரி உங்க பொண்ணு மாலதி எப்படி இருக்காங்க மங்கலம்மா??” என்றதும் அவர் முகத்தில் ஒரு சின்ன புன்னகை..
“ம்ம்.. அவ நல்லா இருக்கா ஜானகி.. இன்னும் அமெரிக்கால தான் இருக்கா.. பேரன் படு சுட்டி.. போன மாசம் அவ மாமனார்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஆபரேஷன்னு இங்க வந்திருந்தாங்க.. ஒரு மாசம் பக்கமா இங்கயே தான் இருக்க வேண்டியதா போச்சு.. அப்பறம், ஒரு வாரம் பொள்ளாச்சில வந்து இருந்தா.. அவங்க மாமியார் வீட்டுல ஏகப்பட்ட வேலை.. பாவம், அவளுக்கும் இங்க வந்தா தானே ரெஸ்ட்.. எப்படியோ ஒருவழியா அதுக்கப்றம் அமெரிக்கா கிளம்பிட்டா..” என்று அலப்பறையைக் காட்டினார் மங்கலம்..
ஒரு பார்வை பார்த்த ஜானகி, “எப்படி மங்கலம்மா உங்களால இப்படி மனசாட்சியே இல்லாம பேச முடியுது?” என்றாள் சற்று கோபத்துடன்.. இதை எதிர்பார்க்காத மங்கலம், “ஏன், நான் அப்படி என்ன பேசிட்டேன்.? என்றாள்..
“உங்களுக்கே தெரியுமே, நீங்க எவ்வளவு நாள் மாலதிக்கு குழந்தை உண்டாகலன்னு புலம்பி இருப்பிங்க..? ரெண்டு வருஷம் கழிச்சு தானே அவளுக்கும் குழந்தை உண்டாச்சு.. இப்போ உங்க மருமக உண்டாகலன்னு ரொம்ப சாதாரணமா அவள குறை சொல்றிங்க.. ஒரு விஷயம் யோசிச்சுப் பாருங்களேன்.. அது கண்டிப்பா அவளோட குறையா தான் இருக்கணுமா? ஏன் உங்க பையன் கிட்ட குறை இருக்கக் கூடாதா? மாலதிக்கு லேட் ஆச்சுன்னா, அப்போ உங்க பையனுக்கு லேட் ஆகறதில எதுவும் தவறில்லையே?? அதுக்கு உங்க வீட்டுக்கு வந்த மருமகள் தான் காரணம்னு நீங்க நெனச்சிங்கன்னா அது உங்க அறியாமைன்னு தான் சொல்லணும்..” என்ற ஜானகியின் பேச்சில் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார் மங்கலம்..
“உங்க பொண்ணு அமெரிக்கால இருக்கான்னு எவ்ளோ பெருமையா சொல்றிங்க.. வருஷக்கணக்குல அங்கேயே இருக்கறவங்க ஏதோ ஒரு தடவ இங்க வந்து இருக்கறதுக்கு அவங்க மாமியார் வீட்டுல இருந்தா ரெஸ்டே இல்லன்னு சொல்றிங்க.. நீங்க மட்டும் உங்க மருமக கூடவே இருக்கணும்னு எப்படி நினைக்கறிங்க.?” என்ற கேள்விக்கு மங்கலத்திடம் பதிலில்லை…
“உங்கள பொறுத்தவரைக்கும் மருமகள்னா எப்படி இருக்கணும்.? குடும்ப வேலைகளையும், எல்லா பொறுப்புகளையும் சுமக்கணும், எப்பவும் உங்களுக்கு சேவை செய்யணும், உங்க பேச்சை தட்டாமக் கேக்கணும், உங்களைக் கேக்காம எதையும் பண்ணக் கூடாது, எதிர்த்து எதையும் பேசக் கூடாது.. மீறி பேசினா அவ திமிர் பிடிச்சவ, அடங்காதவ அப்படிதானே.?” ஜானகியின் குரலில் ஒரு காட்டம் தெரிந்தது..
“சரி, உங்க பையனும், மருமகளும் ஒரு நாளாவது சுதந்திரமா நடு வீட்டுல ஒண்ணா உட்காந்து பேசி பாத்திருக்கிங்களா, சந்தோஷமா இருக்காங்களான்னு ஒரு நாளாவது கேட்டிருக்கிங்களா? இல்ல சந்தோஷமா போயிட்டு வாங்கன்னு எங்கயாவது வெளில தான் அனுப்பியிருகிங்களா? இதெல்லாம் எதுவும் பண்ணாம, உங்களுக்கு தேவையான ஒரு விஷயம் நடக்கலன்னா மட்டும் உங்களால ஏன் அத தாங்கிக்க முடிய மாட்டிங்குது..?” ஜானகி விடாமல் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் மங்கலம்..
“ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட்ன்னு வந்திருக்கேன், ரொம்ப நேரம் அங்க இருக்க முடியலன்னு சொல்றிங்களே, இதுவே மாலதிக்காக இருந்தா இப்படி தான் சொல்லுவிங்களா..? கூடவே இருந்து அவள அக்கறையா கவனிச்சுக்க மாடிங்களா? அப்போ பொண்ணுன்னா உசத்தி, மருமகள்னா கீழயா? இதுவே மாலதியோட மாமியார் உங்கள மாதிரி பண்ணிருந்தா நீங்க ஒத்துப்பீங்களா..?” சராமாரி கேள்விகள் ஜானகியிடம்..
“பொதுவா இந்த சமூகத்த பொறுத்த வரைக்கும் மருமகள்னா இப்படி தான் இருக்கணும்னு ஒரு வரைமுறைய கடைபிடிச்சுட்டு இருக்காங்க.. ஆனா, யாருமே கல்யாணம் முடிஞ்சு புதுசா வர பொண்ணோட மனச புரிஞ்சுக்கணும்னு நெனைக்கறது இல்ல.. பிறந்ததிலிருந்து கூடவே இருந்த குடும்பத்த விட்டுட்டு வர பொண்ணு கிட்ட எல்லா விஷயங்களையும் சரியா செய்யணும்னு எதிர்பார்க்கறது எந்த விதத்துல நியாயம்.? வந்த உடனே எல்லோரைப் பத்தியும் தெரிஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்.. எல்லாமே பொறுப்பா செய்யணும்.. ஒரு சின்ன தப்பு செஞ்சா கூட அத சொல்லி, சொல்லி அவ மனச நோகடிக்கறது.. அவ பாவம், தெரியாம செஞ்சிருப்பான்னு யாருமே நெனச்சு பாக்கறதில்ல.. வீட்டுக்கு வந்த மகாலட்சுமிய நாமளே திட்டி வெளியே விரட்டி விடுற கதை தான் இப்போ நிறைய பக்கம் நடக்குது..”
“ஏன், என்னையே எடுத்துக்கோங்க.. எங்க மாமியார் இருந்த வரைக்கும் ஒரு வார்த்த கூட என்கிட்ட நல்லபடியா பேசினது கிடையாது. எதுக்கெடுத்தாலும் திட்டு தான், அதே ஏதாவது நல்லதா செஞ்சா கூட பாராட்ட மனசு வராது.. மாறா அதுக்கும் ஏதாவது குத்தம் கண்டுபுடிச்சு பேசுவாங்க.. எல்லாத்தையுமே தாங்கிட்டு தான் இருந்தேன்.. கடைசில படுக்கையில இருக்கும் போது என் கையை புடிச்சு உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப, நான் சொன்னத எதுவும் மனசுல வைச்சுக்காத, குடும்பத்த நல்லபடியா பார்த்துக்கோன்னு சொல்லிட்டு இறந்தாங்க.. அந்த வார்த்தையை கேட்க எனக்கு முப்பது வருஷம் ஆச்சு.. ஏன் அத உயிரோட இருக்கும் போதே சொன்னா, அதுல என்ன வரப் போகுது..” என்று சிறிது கலங்கியே விட்டாள் ஜானகி..
இதை சற்றும் எதிர்பாராத மங்கலம், “ஜானகி எதுக்கு அழற.?” என்றார்.. “ஒண்ணும் இல்ல மங்கலம்மா பழச நெனச்சுப் பார்த்தா எனக்கு எப்பவுமே இப்படி தான் அழுகை வரும்.. நீங்க என்ன தப்பா நெனைக்கதிங்க, என்னடா இவ இப்படியெல்லாம் நம்மள குத்தி காமிச்சு பேசறாளேன்னு.. நான் உங்களுக்கு உண்மைய புரிய வைக்கணும்னு தான் பேசறேன்..” என்ற ஜானகியின் சொல்லில் உண்மை இருந்தது..
“ஒரு மாமியாரோட மனசு எப்படி இருக்கணும்னு தெரியுமா? நாமளும் ஒரு வீட்டுக்கு மருமகளா இருந்தவங்க தானே.. நாம புதுசா ஒரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி வந்தப்போ என்னென்ன தயக்கம் இருந்துச்சோ அதே உணர்வு தானே புதுசா வர பொண்ணுக்கும் இருக்கும்னு அத புரிஞ்சுக்கிட்டு, அவ கிட்ட ஒரு அம்மாவா வேண்டாம், ஒரு நல்ல தோழியா பழகி ஒவ்வொண்ணையும் சொல்லிக் கொடுத்தாலே போதும்.. அவளுக்கு வர சந்தேகங்களும், நேர்மறையான எண்ணங்கள் கூட மாறிடும்.. ஆனா, அது தான் இங்க பல பேரோட பிரச்சினை.. பல நேரங்கள்ல தன் பொண்ணு என்ன தப்பு பண்ணாலும் சரி போன்னு ஏத்துக்கற மனசு, சில நேரங்கள்ல மருமகளா வர பொண்ணு பண்ற தப்ப ஏத்துக்க மாட்டிங்குது.. அத சரி பண்ணிட்டாலே மாமியார்-மருமகள்ன்ற உறவு எந்த சிக்கலும் இல்லாம என்னைக்கும் நிலைச்சு நிற்கும்..” என்று சொல்லி முடித்தாள் ஜானகி..
ஜானகியின் பேச்சு மங்கலத்தின் நெஞ்சில் ஈட்டியாய் குத்தியிருந்தாலும், அதில் இருக்கும் உண்மையை அவர் உணராமல் இல்லை..
“ஏன், மங்கலம்மா எதுமே பேச மாட்டிங்கரிங்க…” என்று அவரின் கையைப் பிடித்தாள் ஜானகி.. “ஒண்ணும் இல்ல ஜானகி.. நீ பேசினது நூத்துக்கு நூறு உண்மை.. நான் வளர்ந்த விதம் அப்படி.. பரவாயில்ல, இனி நான் எப்படி நடந்துக்கனுமோ அப்படி நடந்துப்பேன்.. நான் வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சுன்னு நெனைக்கறேன்.. அங்க ஹாஸ்பிடல்ல எல்லாரும் எனக்காக காத்திருப்பாங்க, டாக்டர் என்ன சொல்றாங்கன்னு நானும் போயி கேக்கறேன்.. நான் என் மருமகள்க்கும் சேர்த்து ஜூஸ் வாங்கிட்டு போறேன்.. அவ ரொம்ப அசதியா இருந்தா..” என்றவரைப் பார்த்து கண்களால் நன்றி சொன்னாள் ஜானகி..
“சரி, நான் அடுத்த டைம் உன்ன பார்க்கும் போது நல்ல சேதியோட சந்திக்கிறேன்” என்றார் மங்கலம்..
அப்போது ஜானகி அவரிடம் ஒன்றை மறந்தவளாய் “ஆங், மங்கலம்மா ஒரே நிமிஷம் என் பையன் அர்ஜூன்க்கு ஜூன் மாசம் கல்யாணம் வைச்சிருக்கேன்.. உங்களுக்கு பத்திரிக்கை வைக்க வீட்டுக்கு வரேன்.. சரியா.?” என்றாள் ஜானகி..
“அப்படியா, ரொம்ப சந்தோஷம் ஜானகி.. கண்டிப்பா கல்யாணத்துக்கு குடும்பத்தோட வரேன்.. உனக்கு வரப் போற மருமகள் ரொம்ப கொடுத்து வைச்சவ.. சரி எல்லாரையும் கேட்டதா சொல்லு..” என்று தான் ஆர்டர் செய்த ஜூசை வாங்கிக் கொண்டு ஞானம் கிடைத்த புத்தராய் விடை பெற்றார் மங்கலம்..
அதுவரை அங்கு நடந்த அனைத்தையும் ஜன்னல் அருகே சிலையாய் கேட்டுக்கொண்டிருந்த திவ்யாவிற்கு தன்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.. முதலில் இருந்து எதுவும் புரியாமல் நின்றிருந்த காயத்ரிக்கோ, கடைசியிலே தான் எல்லாம் புரிந்தது..
“ஏய் என்னாச்சு திவி..?? வா அவங்க போயிட்டாங்க..” என்று திவ்யாவை இழுத்துக்கொண்டு வந்து கேண்டீனில் அமர வைத்தாள் காயத்ரி..
“இந்தா கொஞ்சம் தண்ணி குடி..” என்று தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள் அவளிடம்.. குடித்து முடித்தவளிடம் “இத நான் எதிர்பார்க்கல.. நிஜமா நீ கொடுத்து வைச்சவ திவி.. உனக்கு கிடைக்கப்போற வாழ்கையை நெனச்சு ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன்.. அவங்க மேல ஒரு பெரிய மரியாதையே வருது.. ம்ம்.. இப்போ நீ என்ன பண்ணணும்னு நெனைக்கற??” என்று கேட்டாள்..
அவள் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தவள் “நான் இப்போவே அர்ஜூன் கிட்ட போன் பண்ணி இனிமேல் தனிக்குடித்தனம் பத்தி யோசிக்கவே போறதில்லன்னு சொல்லப் போறேன்..” என்று சொன்னாள் கண்களைத் துடைத்தவாறே..
அந்த பதிலை எதிர்பார்த்தவளாய் தன் தோழி திவ்யாவை ஆரத் தழுவிக்கொண்டாள் காயத்ரி.
வாவ் ஜானகி கேரக்டர் சோ நைஸ்..இப்படி ஒரு மாமியார் எல்லா மருமகள்களுக்கும் கிடைத்தால் வாழ்க்கை இன்பமயம்தான்..மருமகளை மகளாய் பார்த்தாலே பாதி பிரச்சினைகள் முடிந்ததைப்போல்..மங்கலம்மாவும் அவங்க தவறை உணர்ந்துட்டாங்க..திவியும் தனிக்குடித்தன ஐடியாவை கேன்சல் பண்ணியாச்சு.. அருமையான படைப்பு
Thank you