Loading

ருத்துவமனை முன் கார் நின்றதும் அவள் இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருக்க, “ஃபிளவர் என்ன இது சின்னப் பிள்ள தனம்? ஒன்னுமில்ல டா. ஒரு டாக்டர் நீ, நீ தைரியமா இருந்தா தான உன்கிட்ட வர்ற பேஷன்ட்ஸ் தைரியமா இருப்பாங்க. நீயே இப்படி உம்முனு இருந்தா அவங்களுக்கு எப்படி உன்மேல நம்பிக்கை வரும்?” என்றான் ஹரிஹரன்.

எதுவும் பேசாமல் காரைவிட்டு இறங்கியவள், “நான் போய்ட்டு வரேன் டா. நீ பாத்துப் போஎன்க, “கொஞ்சம் சிரியேன்என்றான் ஹரி.

போதுமாஎன அவள் முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி சிரித்து வைக்க, “ப்பாநைட் நேரத்துல குழந்தை புள்ளைய பயமுறுத்தாத ஃபிளவர்என, கண்களை இறுகமூடி தலையை ஆட்ட, அவனை முறைத்தவாறே இதழ்களில் புன்னகை உறைய மருத்துவமனைக்குள் நுழைந்தாள் மலர்விழி.

அவள் உள்ளே சென்றவுடன், தனது காரை எடுத்துக் கொண்டு வீடுநோக்கி புறப்பட்டான் ஹரிஹரன்.

அரசு மருத்துவமனை என்பதால், பகலிலே அங்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருந்தது. இரவில் ஒன்றிரண்டு நோயாளிகளைத் தவிர, இரண்டு செவிலியர்கள் மட்டும் இருந்தனர். உள்ளே நுழைந்த மலர்விழியை கண்ட செவிலியர்கள், அவளிடம் வர,

பெரிய டாக்டர் டியூட்டி முடிஞ்சு கிளம்பிட்டாரா சிஸ்டர்?” என்றாள் மலர்விழி. “அவரு இப்போ தான் மேடம் கிளம்பி போனாரு, நீங்க வந்துருவீங்கனு சொல்லிட்டு தான் போனாரு. நீங்க உள்ள போய் இருங்க மேடம். தூக்கம் வந்தா தூங்குங்க, இங்க நைட் நேரத்துல பேஷன்ட்ஸ் யாரும் வரமாட்டாங்கஎன்றார் ஒரு செவிலியர்.

முதல் நாள் பணியே தூக்கமா என நினைத்தவளுக்கு, அந்த ஊர் மக்களின் அறியாமை கோபத்தை உண்டாக்கியது. பணத்தை வாரி இறைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற துணிபவர்கள் ஏனோ இலவசமாக அரசே ஏற்படுத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற தயக்கம் காட்டுகிறார்கள் என நினைத்தவாறே,

இல்லங்க சிஸ்டர். நான் ஒருதடவ ரவுண்ட்ஸ் போய்ட்டு ரூம்க்கு போறேன். இங்க எத்தனை பேஷன்ட்ஸ் இப்போ இருக்காங்க?” என அவர்களின் மருத்துவ அறிக்கைகளையும் வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கான வார்டில் நுழைந்தாள்.

ஒவ்வொருவராகப் பார்த்து அவர்களின் தற்போதைய உடல்நிலை வரை விசாரித்துத் தெரிந்துக் கொண்டவள், தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு வர இரவு பத்தை கடந்திருந்தது.

அவள் வரும்போது செவிலியர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, காற்று வாங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனை அவளுள் சிறு பயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

ஊரிலிருந்து சற்று தள்ளித் தான் மருத்துவமனை இருக்க, அதனைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் தோட்டங்களும் தரிசு நிலங்களும் தான். மருத்துவமனை முன் பேருந்து நிலையம் கூட அமையவில்லை. இரண்டு கிலோமீட்டர் தள்ளியே பேருந்து நிலையம் இருக்க, அங்கு இறங்கி தான் மருத்துவமனைக்கு நடந்துவர வேண்டிய சூழல்.

இதனாலும் கூட மக்கள் தங்களுக்கு ஒன்றென்றால் இங்குவர தயக்கம் காட்டுகிறார்கள். தூக்கமும் வர மறுக்க, அலைப்பேசியில் மூழ்கினாள் மலர்விழி.

இரவு பதினோரு மணிபோல், வெளியே ஆட்டோ சத்தம் கேட்க, அறையிலிருந்து வெளியே வந்தவள் என்னவென்று எட்டிப் பார்த்தாள்.

இரு பெண்மணிகள் கர்ப்பிணி பெண்ணொருத்தியை தாங்கிப் பிடித்தவண்ணம் உள்ளே அழைத்துவர, உடனே பரபரப்பானாள் மலர்விழி.

சிஸ்டர் இங்க கொஞ்சம் வாங்கஎன்றவாறே அந்தப் பெண்ணிடம் ஓடியவள், “என்னாச்சு மா, ரொம்ப வலி இருக்கா?” என்றவாறே அந்த பெண்ணைப் பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்ல, செவிலியர்கள் இருவரும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய பணிகளைச் செய்யத் துவங்கினர்.

அந்தப் பெண்ணை அழைத்து வந்தவர்களுள் ஒருவர், “பிரசவ வலி வந்தது தெரியாம இருந்துட்டா போல டாக்டர். பனிகுடம் உடைஞ்சுருச்சு, அதான் அவசரத்துல ஆட்டோலயே கூட்டிட்டு வந்துட்டோம். என் மருமகளையும் பேரபிள்ளையும் காப்பாத்துங்க டாக்டர்என்றார் கண்களில் கவலை படர.

நீங்க கவலப்படாதீங்க மா, கொஞ்சம் வெளிய இருங்கஎன்றவள், அவர்களை வெளியே அனுப்பி விட்டு செவிலியரிடம், “சிஸ்டர் நீங்க இதுக்கு முன்னாடி பண்ண ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் எல்லாம் அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு வாங்கஎனப் பணித்தவள்,

சிஸ்டர் நீங்க பிபி செக் பண்ணுங்கஎன்றவள் பரபரப்பாகச் செயல்பட, வெளியே அவர்களிடம் பேசிவிட்டு உள்ளே வந்த செவிலியர், “டாக்டர் அவங்க கிட்ட எந்த ரிப்போர்ட்ம் இல்லயாம் டாக்டர். ஆஸ்பத்திரியே போகாம வீட்டுலயே பிரசவம் பாக்க நினைச்சுருப்பாங்க போல. பனிக்குடம் உடைஞ்சதால தான் கடைசியா இங்க கூட்டிட்டு வந்துருக்காங்க. புள்ளை வேற சின்னப் புள்ளையா தெரியுது டாக்டர், பதினாறு பதினேழு தான் இருக்கும்போல. ரொம்ப கிரிட்டிக்கலான கேஸ் டாக்டர். இங்க பாக்க வேண்டாம், பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிறலாம்என்றவரை, எரிக்கும் பார்வை பார்த்தவள்,

இரண்டு உசுரு உயிருக்குப் போராடிட்டு இருக்கு சிஸ்டர். இந்த நேரத்துல இப்படி பேசலாமா? முதல்ல குழந்தையோட இதயத் துடிப்பு நார்மலா இருக்கானு செக் பண்ணுங்கஎன்றவள், அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

செவிலியர் இருவருக்கும் இதில் உடன்பாடு இல்லை என்பதைவிட பயம் தான் அதிகமானது. ஆனால் மருத்துவரின் பேச்சைத் தட்ட முடியாத சூழ்நிலை என்பதால் மேலும் எதுவும் வாதிடாமல் அவள் பணித்த வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

குழந்தையின் இதயத் துடிப்பும், அந்தப் பெண்ணின் பிபி, சுகர் அனைத்தும் சரி விகிதத்தில் இருக்க, ஆண்டவனை மனதில் பிராதித்துக் கொண்டே குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தாள் மலர்விழி.

புஷ் பண்ணு மாபுஷ் புஷ்என அவள் கூறிக் கொண்டே இருக்க, அந்த இளம்பெண்ணோ மூச்சை இழுத்து வெளியே விட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

மூச்ச இழுத்து பிடிச்சு விடு மாஎன்றவாறே வெளியே வரத் துவங்கி இருந்த குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில் இருந்தாள் மலர்விழி.

குழந்தையின் கழுத்து வரை வெளியே வந்திருக்க, தலைப்பாகம் மட்டும் இன்னும் தாயின் வயிற்றிலிருந்து வெளிவர முயற்சித்துக் கொண்டிருந்த நேரம், குழந்தையின் தாயால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டாள்.

ரிலாக்ஸ்இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணு மா. அவ்ளோ தான்எனத் தன்னால் ஆனமட்டும் அந்த பெண்ணிற்கு அவள் எடுத்துரைத்துக் கொண்டே குழந்தையைப் பிரசவிக்க முயல, சில நிமிட போராட்டத்திற்கு பிறகு குழந்தை முழுவதுமாக வெளியே வந்தது.

அவள் மயக்கமடைந்துவிட, குழந்தையின் இதயத்துடிப்பை சரிபார்த்தவளின் மனம் படபடத்தது.

அவள் எது நடக்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ அதுவே நடந்தேறியிருந்தது. குழந்தை வெளிவரும் போராட்டத்திலேயே மூச்சுவிடத் திணறி, உயிரற்ற கூடாகிருந்தது.

குழந்தைக்கு இருதய சுவாசமூட்டல் (Cardiopulmonary Resuscitation) முதலுதவி அளித்தும் பயனற்றுப் போனது. அதேநேரம் குழந்தையின் தாயிற்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட, “சிஸ்டர் அந்தப் பொண்ண கேர் பண்ணுங்கஎன்றவாறே அவள் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருந்தாள்.

உடனிருந்த செவிலியர், “இதுக்கு தான் மேடம் நான் அப்பவே சொன்னேன். பேசாம நாம பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சுருந்தா இப்போ பிரச்சனை இருக்காதுன்னுஎன்க,

அவளின் அக்னி பார்வையில் அந்த செவிலியர் அமைதியானார். குழந்தைக்கு உயிரூட்டப் போராடிக் கொண்டிருந்த வேளை வெளியே காத்திருந்த அந்தப் பெண்ணின் மாமியார் கதவைத் திறந்து உள்ளேவர முயன்றவர்,

அங்கு உயிரற்று கிடந்த குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மலர்விழியோ தாயையும் சேயையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்க, அவரோஅய்யோ என் பேர பிள்ளைய கொன்னுட்டாங்களேஎனத் தலையில் அடித்துக்கொண்டு அழத் துவங்க,

செவிலியர்கள் அவரை வெளியே அனுப்ப போராடினர். “தயவு செய்து எங்கள தொந்தரவு பண்ணாதீங்க மா. உங்க மருமகளோட நிலை சிரியஸ்ஸா இருக்கு, அவங்கள காப்பாத்த விடுங்கஎன செவிலியர் கூறி, அவரை வெளியேற்ற முயற்சி செய்தார்.

அவரோ அதனைக் காதில் வாங்காமல் குழந்தையின் அருகே வர முயல, அவரை ஒரு வழியாக வெளியே அனுப்பி கதவைச் சாத்தியவர்கள், அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஆனால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போக மலரின் கண்களில் கண்ணீ்ர் வழிந்தோடத் தொடங்கியது. அவளிடம் வந்த செவிலியர்,

மேடம் இதுக்குமேல இந்தக் கேஸ்ஸ இங்க வச்சுருந்தா நமக்குதான் தேவையில்லாத அவஸ்தை. பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சுருவோம் மேடம்என்க, அவளால் எதுவும் பேச முடியாமல் கலங்கிப் போய் இருக்க, அதற்குமேல் எதுவும் பேசாமல் அந்த செவிலியரே மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணைப் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

அந்தப் பெண்ணின் கணவன் ஒருபுறம் வாதிட்டுக் கொண்டிருக்க, அந்தப் பெண்ணின் மாமியாரோ, “எங்க புள்ளைய இப்படி அநியாயமா கொன்னுட்டியே டி பாவி. இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாதுஎன சாபமிட,

கண்களை இறுக மூடிச் சுவரில் சாய்ந்தாள் மலர்விழி. போக வேண்டிய இரு உயிர்களில் தன் முயற்சியால் ஒன்றை காப்பாற்றி இருந்தாலும், பழிசொல் என்னவோ அவள்மேல் தான் விழுந்தது.

செவிலியர்கள் தான் அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, போகும்போது, அந்த மாமியாரோ, “உன் வயித்துல புள்ள பூச்சியே அண்டாது. எங்க புள்ளைய கொன்ன பாவம் உன்ன சும்மா விடாதுஎன மண்ணை வாரித் தூற்றியவர், அங்கிருந்து செல்ல மலர்விழியின் கண்கள் இறுக மூடி இருந்தது.

வந்த மொத நாளே போலீஸ் கேஸ் வரைக்கும் கொண்டு போய்ருவா போலஎன செவிலியர் மற்றொருவரிடம் புலம்பிவிட்டு,

இதுக்கு தான் மேடம் அப்பவே வேண்டாம்னு சொன்னேன். சாவ போன பிள்ளைய காப்பாத்தியும் என்ன கிடைச்சுது, கடைசில சாபம் தான் விட்டுட்டுப் போறாங்க. இதுல அந்த புள்ளையோட புருஷன் போலீஸ்க்கு போவேன்னு சொல்லிட்டுப் போறான்என்க,

அவருக்கும் எந்தப் பதிலும் அளிக்காமல் அறைக்குள் சென்றாள் மலர்விழி. அப்பொழுது அவளின் அலைப்பேசி ஒலிக்க, அதனை எடுத்துப் பார்த்தவள் ஹரிஹரனின் பெயர் திரையில் மின்னியது. அதனை ஏற்க, “ஃபிளவர் என்ன தூக்கமா? ஆளே இல்லாத கடைல யாருக்கு மா டீ ஆத்தற?” என அவன் நக்கலடிக்க, அவளோ அழுகையை மட்டுமே பதிலாக அளித்தாள்.

ஹே ஃபிளவர், என்னாச்சு, ஏன் அழுகற?” என அவன் பதட்டமாக, அரைகுறையாக அங்கு நடந்த அனைத்தையும் அவள் கூறி முடித்தாள்.

ஒரு டென் மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன் ஃபிளவர். இரு வந்தறேன்என அவன் அவசரமாகக் கிளம்ப எத்தனிக்க, தூக்கம் வராமல் ஹாலில் அமர்ந்திருந்த இந்திரா அவன் அவசரமாக வெளியே கிளம்புவதைக் கண்டு,

இந்த நேரத்துல எங்க டா போற?” என்று வினவினாள். “ஹாஸ்பிட்டலுக்கு இந்துஎன அவன் பரபரக்க,

என்னாச்சு, யாருக்கு என்னாச்சு டா?” என அவனின் பதட்டம் அவளுக்கும் தொற்றிக்கொள்ள, மேலோட்டமாக மருத்துவமனையில் நடந்தவற்றை கூற,

போலிஸ் கேஸ் ஆகாம பாத்துக்கணும் டா. மொதல்ல மலர பாக்கணும், வா நானும் வரேன்என்றவள், இரவு உடைமேல் துப்பட்டாவை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்ப, இருவரும் காரை எடுத்தனர்.

போகும் வழியிலேயே பாரிவேந்தனுக்கும் தகவலளிக்க, உடனே பாரியும் மருத்துவமனைக்குப் புறப்பட்டான்.

இந்த நேரத்துல ஏன்டா பாரி அண்ணாவ தொந்தரவு பண்ற? நம்மளே இத பாத்துக்க மாட்டமாஎன்றாள் இந்திரா.

இல்ல இந்து, இது கிராமம். அவங்ககிட்ட நம்ம பேசறத விட பாரி பிரதர் பேசறது தான் கரெக்ட்டா இருக்கும், அதான். அதுவும் இல்லாம…” என அவன் எதையோ கூற வந்துவிட்டு நிறுத்த,

என்னடா?” என்றாள் இந்திரா. “அத அங்க போய்ப் பேசிக்கலாம் இந்துஎன்றவன் காரில் விரைந்தான். அவர்கள் அங்குச் சேர்வதற்குள் பாரியும் தனது வண்டியில் அங்கு வந்திருந்தான்.

காரை நிறுத்தியவன், காரிலிருந்து இறங்காமல் இருக்க, “டேய், மொதல்ல இறங்கு டாஎன்றாள் இந்திரா.

அவளையும் இறங்க விடாமல் காரின் கதவைச் சாற்றியவன், “கொஞ்சம் நேரம் அமைதியா இருஎன வாயில் விரல் வைக்க,

அங்க மலரு எப்படி இருக்காளோ! நீ என்னடான்னா நீயும் இறங்காம என்னையும் இறங்க விடாம பண்ணிட்டு இருக்க?” எனக் கோபத்துடன் கூறினாள்.

அங்கப் பாருஎன அவன் கைநீட்டிய திசையை நோக்கினாள் இந்திரா. அங்கு பாரிவேந்தன் தனது வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே செல்ல, அதனைக் கண்டவள், “அண்ணாவே வந்துட்டாங்க. வா மொதல்ல போவோம்என அவள் இறங்க முற்பட்டாள்.

காரியத்த கெடுத்துறாத டி. இப்போ நம்மள விட ஃபிளவருக்கு பெரிய ஆறுதல் பாரி பிரதர் தான். அட்லீஸ்ட் இந்தச் சூழ்நிலைலயாவது ஃபிளவர் பாரி பிரதர் கூடப் பேசணும். இப்போ நம்ம போனா அவ பாரி பிரதர கண்டுக்க மாட்டா. சோ, நம்ம கொஞ்சம் நேரம் கழிச்சுப் போகலாம்என்றான் ஹரிஹரன்.

அவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள், “ஏன்டா உன் மூளை இப்படி யோசிக்குது. பாதகத்துலயும் சாதகத்த தேடுறியேஎன அவள் முறைக்க,

அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரணுமா வேண்டாமா?” என்றான் ஹரிஹரன். “சேரணும் தான் டா. ஆனாஅதுக்காக இப்போ இருக்கிற சூழ்நிலைலஎன அவள் முடிக்காமல் அவனைப் பார்க்க,

எந்தக் கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும். இத அப்படி நினைச்சுக்கோஎன அவன் கூலாக இருக்கையில் சாயந்தமர, “இது யாருக்கு சாதகம், மலருக்கா இல்ல உனக்கா?” என்றாள் இந்திரா சந்தேகத்துடன்.

அவளை முறைத்தவன், “அம்மா, தாயே. உன் கற்பனை கோட்டைய கொஞ்சம் கீழ இறக்கி வையு. இப்போ நம்ம அங்க போறோம், அவங்களுக்கே தெரியாம அங்க என்ன நடக்குதுனு பாக்கறோம். சரியா!” என்றவாறே கீழிறங்க, இருவரும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

மலர்விழி இருக்கும் அறையை செவிலியரிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு அங்குச் செல்ல, அங்கு மலர்விழியோ முகத்தை இரு கைகளாலும் இறுக மூடி அமர்ந்திருந்தாள்.

மலரு!” என்ற அழைப்பில் அவள் நிமிர, அவளின் கலங்கிய கண்கள் அவனை உலுக்கியது.

புள்ள!” என அவன் அருகில் செல்ல, எழுந்து அவனை இறுக அணைத்துக் கொண்டவள், “நான் அந்தக் குழந்தைய கொல்லல மாமு. நானும் காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா என்னால முடியல மாமுஎன்று அழுதவளின் தேகம் நடுநடுங்கியது.

அவளின் நடுங்கிய தேகமே அவளின் நிலையை உணர்த்த, அவளைத் தனக்குள் புதைத்துக் கொண்டவன், “இங்க பாரு புள்ள, ஏன் இப்போ இப்படி அழுகற? போற உசுர காப்பாத்த நீ போராடி ஒரு உசுர காப்பாத்திட்ட, அவங்க சொன்னா நீ கொன்னதா ஆகிருமா புள்ளஎன அவளைத் தேற்ற முற்பட,

இல்ல மாமு. அந்தப் பச்சக் குழந்தைய என் கைல…” என அவள் கூற வந்ததைக் கூற முடியாமல் திணறியவளின் தேகம் தூக்கிப் போட்டது.

ஒன்னுமில்ல புள்ள. இங்க பாரு, ஒன்னுமில்ல. நான் பாத்துக்கறேன்என அவள் முகத்தைத் தன் கையில் ஏந்தி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க,

அவளின் கரங்கள் இன்னும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தன. ஏற்கெனவே அவள் இன்டர்ன்ஷிப்பில் பிரசவங்கள் பார்த்திருந்தாலும், இன்று தனது ஊரில் தனது முதல்நாள் பணியில் ஓர் உயிர் தன் கண் முன்னே பறிபோனதை அவளால் ஏற்க முடியவில்லை.

அதற்குக் காரணமாக தன்னை அந்தப் பெண்ணின் குடும்பம் சபித்ததை ஏற்க முடியாமல் தவித்தாள் மலர்விழி.

அவளது கண்ணீரை ஓரளவு மட்டுப்படுத்தி அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான் பாரிவேந்தன். இவையனைத்தையும் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹரிஹரனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள் இந்திரா.

அவனோஎப்படிஎன்றவாறே காலரை தூக்கிவிட, “அய்யஎன இதழ் சுளித்தவள், மீண்டும் அங்கு நடப்பவைகளை கவனிக்க ஆரம்பித்தாள் இந்திரா.

அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அதனை அவளிடம் நீட்ட அதனை வாங்கிப் பருகியவள் சற்று தெளிவடைந்தாள்.

அவள் எதிரே அமர்ந்தவன், அவள் கரங்களைத் தன் கரங்களுக்குள் புதைத்து, அவள் கண்களைச் சந்திக்க, அழுததால் அவள் கண்கள் இரண்டும் கோவப்பழமாய் சிவந்திருந்தது.

இப்போ பரவால்லயா புள்ள?” என வினவியவனின் வார்த்தைகளில் அத்தனை மென்மை தேங்கியிருந்தது. அவள் தலை தானாக வலது இடதாக ஆடியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
8
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஹரி சூப்பர் நண்பன்.மலர் பாரி கியூட் ஜோடி.மாமு கூப்பிட்டு விட்டாள் சூப்பர்.

      1. மாமு வா மலர். ஹரி செம.