Loading

ராமாயி அப்பாயியின் எதிர்பார்ப்பை மேலும் காத்திருக்க வைக்காமல் பாரிவேந்தன் தோட்டத்திலிருந்து வீடு வந்து சேர்ந்திருக்க, வண்டி சத்தம் கேட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ராமாயி.

வண்டியை நிறுத்திவிட்டு சாவியை விரலில் மாட்டி ஆட்டியபடியே அவன் வர, “பேராண்டி…!” என அவர் இழுக்க, ‘ஏதோ சரியில்லயே!’ என மனதினுள் நினைத்துக் கொண்டவன்,

ப்பாயி?” என்றவாறே அவர் அருகே அவன்வர, அவன் கரத்தைப் பற்றித் தன்னருகே அமர வைத்தார் ராமாயி.

அவன் மனதினுள் புலம்பிக் கொண்டே அவர் அருகே அமர, “ஏன்டா பேராண்டி, அந்த மலரு புள்ள உன்னைப் பாக்க வந்துச்சாமே! அப்படியா?” என்க, ‘இந்த கெழவிக்கு மட்டும் எப்படிதான் எல்லா விசயமும் வந்து சேருதோ!’ என நினைத்தவன், “மலர அவ வீட்ல விட்டுட்டு வர்றதுக்குள்ள விசயம் இங்கவர வந்துருச்சா ப்பாயி?” என்றான் பாரி.

அத விடு டா, நான் கேள்விப்பட்டது உண்மையா?” என அவன் அருகில் குனிந்து, மெதுவாக வினவ, “இப்போ ஏன் ப்பாயி இப்படி கிசுகிசுக்கிற?” என்றான் பாரிவேந்தன்.

இவன் ஒருத்தன், அவன் பாட்டனாட்டமே நம்ம ஒரு கேள்வி கேட்டா அவன் ஒரு பதில் சொல்றதுஎன்றவர், “என் காதுக்கு வந்த விசயம் உண்மையானு சொல்லு டா பேராண்டிஎன்றார் ராமாயி.

ஆமா ப்பாயி, மலரு வந்துருந்தாஎன்க, “என்ன சொன்னா டா?” என அவர் ஆவலாய் கேட்க, அவள் வந்து கூறியதைக் கூற அவர் முகம் வாடிப் போனது.

இதுக்காகத் தான் அவ உன்ன பாக்க வந்துருந்தாளாக்கும்எனத் தாவாகட்டையை சிலுப்ப,

அப்பாயி நீ இழுக்கற இழுவைய பாத்தா வேற ஏதோ நினைச்சுருப்ப போல! இப்போ எதுக்கு என்னை உக்கார வச்சு இத்தன கேள்வி கேட்கற?” என்றான் பாரிவேந்தன்.

ஒன்னுமில்ல, போ உள்ள உன் ஆத்தா உனக்குச் சோறு பொங்கி வச்சுட்டு காத்திருக்கா. போய் கொட்டிக்கோ!” என்றவர், முனகியவாறே தன் பேரன்மேல் உள்ள கோபத்தை பாக்கில் காட்டிக் கொண்டிருந்தார்.

உனக்கு எப்போ பாத்தாலும் இதே பொழப்பா போச்சு ப்பாயி, இன்னொரு தடவை இப்படி யாராவது ஏதாவது சொன்னாங்கனு என்கிட்ட கேட்ட அப்புறம் அவ்ளோ தான்என்றவன் வீட்டினுள் நுழைய,

ரேவதி அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார். அவன் உணவுண்ண அமர, அந்தநேரம் பார்த்து யாழினி கோபமாக உள்ளே நுழைந்தாள்.

மாமா இன்னிக்கு உங்கள பாக்க அந்த மலரு வந்துருந்தாளாமே!” என உள்ளே நுழைந்தவுடன் அதிரடியாய் வினவ, பாதி உணவில் இருந்தவன், அவளைப் பார்த்து நிதானமாக, “ஆமா, இப்போ அதுக்கு என்ன யாழு?” என்றான்.

அவனின் பதிலில் அவள் முகம் அக்னி போல் கோபத்தில் மலர, “எதுக்கு அவ உங்கள பாக்க வரணும்?” என்றாள்.

அவளின் கோபம் புரியாமல், “என்னாச்சு யாழு?” என்றார் ரேவதி. “அத உங்க பையனவே கேளுங்க அத்தை. அவகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு? இதுல, அவள வீடுவரைக்கும் வண்டில கொண்டுபோய் விட்டீங்களாமே!” எனத் தன் கோபத்தை மொத்தமாய் வார்த்தைகளில் கொட்டினாள்.

அவனோ நிதானமாகக் கைகழுவி விட்டு, ரேவதி நீட்டிய துண்டை வாங்கி கையைத் துடைத்துக் கொண்டே எழுந்தவன், “அதுல என்ன இருக்கு யாழு? என்கிட்ட ஒரு விசயத்த காதுல போட வந்தா, மதிய நேரம் வெயில் வேற. அதான் வீடுவரைக்கும் கொண்டுபோய் விட்டுட்டு வந்தேன்என்றான் பாரிவேந்தன்.

எனக்கு இதெல்லாம் பிடிக்காதுனு தெரிஞ்சே இப்படி பண்ணா எனக்கு என்ன மரியாதை மாமா?” எனக் கோபத்தில் மூக்கு புடைக்க வினவ,

இங்க பாரு யாழு, எனக்கு நீ எப்படியோ அதே மாதிரி தான் மலரும். அவளும் என் மாமன் மவ தான், அவள பாக்க கூடாது பேசக் கூடாதுனு சொல்ற உரிமை உனக்கு இல்லஎன வார்த்தைகளில் கடினத்தை ஏற்றிக் கூறியவன், “ம்மா, நான் தோட்டம்வரைக்கும் போய்ட்டு வரேன். கொஞ்சம் வேல இருக்குஎன்றவாறே அவன் கிளம்ப, ரேவதிக்கு தான் அவனின் பேச்சால் தர்மசங்கடமானது.

கோபத்தில் நின்றிருந்த யாழினியிடம், “அவன் ஏதோ கோபத்துல இருப்பான் போல யாழு, அதான் அந்தக் கோபத்துல உன்கிட்ட இப்படி பேசிட்டுப் போறான். நீ இத நினைச்சு கொழப்பிக்காத மாஎன்றவர், தன் வேலையைப் பார்க்கச் செல்ல, “ச்சே. எப்போ பாத்தாலும் மலரு மலரு. அவ அப்படி என்ன சொக்குப் பொடி போட்டு மயக்குனாளோ. கல்யாணம் முடியட்டும், அப்புறம் பேசிக்கறேன்என முணுமுணுத்தவள் தன் வீட்டிற்குச் செல்ல, உள்ளே நடந்தவைகளை கவனித்துக் கொண்டிருந்த ராமாயி, “போற போக்க பாத்தா எதுவும் சரியாப் படலயே. இந்த பய வேற ஒரு பக்கம் முறுக்கிக்கிட்டு போறா, அவ ஒரு பக்கம் முறுக்கிக்கிட்டு போறா. கடைசில அவன் மாமன் நிலம தான் இவனுக்கும் வந்துரும் போலயே!” என்றவர் தீவிரமாக இதற்குத் தீர்வு காண யோசிக்க ஆரம்பித்தார்.

நிலவு தன் ஆதிக்கத்தை நிலமகளின் மீது செலுத்தத் தொடங்கிருக்க, அவரவர் வீடுகளில் வேலை செய்த களைப்பில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். கிராமமே அமைதி பூமியாய் இருக்க, சுந்தரபாண்டியனின் இல்லத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

கமலம் கணவனுக்கும், மகனுக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருக்க யாழினியும் அவர்களுடன் அமர்ந்தாள். சிறிது சாப்பாட்டிலேயே சுந்தரபாண்டியன் எழுந்துகொள்ள, “இது போதுமாங்க, கொஞ்சமா தான் சாப்ட்ருக்கீங்கஎன்றார் கமலம்.

இல்ல கமலா, போதும். பசியில்லஎன்றவாறே கைக் கழுவச் செல்ல, கமலம் அவருக்குக் கேட்கும்வண்ணம்அங்க சாப்ட்டா பசிக்கத் தான் செய்யாது. என்ன பண்ண, நான் என்னத்துல கொற வச்சேன்னு தெரியலஎனப் புலம்ப,

இப்போ எதுக்கு குணாவ இதுல இழுக்கிற கமலா? பசி இல்லாததால தான் சாப்ட முடியலஎன்றார் சுந்தரபாண்டியன்.

ஆமா ஆமா. உங்களுக்கென்ன இந்த வீடு இல்லனா அந்த வீடு, எனக்கு இதான தலையெழுத்து. அந்த ஆண்டவன் என் தலைல மட்டும் இத்தனைய அனுபவினு எழுதி வச்சுட்டுப் போய்ட்டான், அனுபவிச்சுத் தான ஆகணும்எனத் தன் மனகுமறல்களைக் கொட்டத் தொடங்க

ம்மாஇப்போ நான் சாப்டவா வேணாமா?” என சண்முகம் கடுப்பாக வினவ, “நான் பேசுனா தான் இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு எல்லாம் எரிச்சலா இருக்கும் போல. இனி நான் எதுவும் பேசல, என்னமோ உங்க இஷ்டத்துக்கு பண்ணுங்கஎன சேலை முந்தானையில் கண்ணைக் கசக்கினார்.

உப்…” என்றவன், பாதி சாப்பாட்டிலேயே சண்முகம் எழுந்திரிக்க, அதனைக் கண்ட கமலம், “நீ ஏன் டா எந்திரிச்ச, ஏன் உனக்கும் என் சாப்பாடு பிடிக்கலயா?” என்றார்.

இந்த வீட்டுல என்னிக்குத் தான் நிம்மதியா திங்க முடியுது!” என அவன் புலம்ப, “இப்போ உன் அம்மாளுக்கு என்னதான் பிரச்சனையாம். ஏன் இப்படி மூக்க சிந்திக்கிட்டு இருக்கிறா?” என்றார் சுந்தரபாண்டியன் தன் மகனிடம்.

அத உங்க பொண்டாட்டிகிட்டயே, ச்சே ச்சே மூத்த பொண்டாட்டிகிட்டயே கேளுங்க. என்கிட்ட ஏன் கேட்குறீங்க?” என்றான் கடுப்புடன் சண்முகம்.

தன் மனைவியின் அருகில் அமர்ந்த சுந்தரபாண்டியன், “இப்போ என்னாச்சுனு இப்படி அழுகற கமலா?” என்றார் பொறுமையாய்.

பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறத பாருஎன சண்முகம் முணுமுணுக்க, “அவருக்கு நடிக்கச் சொல்லியா கொடுக்கணும் ண்ணா! இப்படியே தான இத்தனை நாளா நம்மள ஏமாத்திக்கிட்டு இருக்காரு. இப்போ அவரோட மாப்பிள்ளைக்குக் கூட இந்த நடிப்ப கத்து குடுப்பாரு போலஎன இதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த யாழினியும் தன் பங்கிற்கு தன் கோபத்தையும் வெளிப்படுத்தினாள்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவர், “மூணு பேரும் இப்போ ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு நான் என்னத்துல குறை வச்சேன் சொல்லுங்க. உனக்குப் பிடிச்சத தான டா இப்போவரை பண்ணிக்கிட்டு இருக்க, நான் ஏதாவது மறுப்பு சொல்லி இருக்கனா?” என சண்முகத்தைப் பார்த்துக் கேட்டவர், யாழினியிடம்,

நீ கேட்டதுக்காகத் தான இப்போ கல்யாணத்தையே வச்சுருக்கேன் யாழு மா. இதுவரை உனக்கு ஏதாவது பண்ண மாட்டேனு சொல்லி இருக்கனா?” என்றார்.

பின் தன் மனைவியிடம் திரும்பியவர், “அவங்கள விடு கமலா, உனக்கு நான் இதுநாள் வரை எதுல கொற வச்சேன் சொல்லு? இல்ல நீ கேட்டத ஏதாவது செய்யாம விட்ருக்கனா?” என்றார் சுந்தரபாண்டியன்.

இப்போ நீங்க செய்றதுல குத்தம்னு ஏதாவது சொன்னோமா ப்பா? எல்லாத்தையும் பண்ணீங்க தான், இல்லனு சொல்லல. ஆனா, இன்னொரு குடும்பமும் உங்களுக்கு இருக்கே. அது தான உங்களுக்கு முக்கியமா தெரியுது?” என சண்முகம் தன் மனக்குமறலைக் கொட்ட,

அவரோ கமலத்திடம், “நீ சொல்லு கமலா, இந்தக் குடும்ப தலைவனா நான் எதுலயாவது கொற வச்சுருக்கனா?” என்க,

இதுவரை அமைதியாய் இருந்தவர் இப்போது வாய் திறந்தார். “என்னமோ செஞ்சேன் செஞ்சேனு சொல்றீங்க மாமா. ஆனா, இதெல்லாம் விட எங்களுக்கானவரா மட்டும் இருக்கணும்னு நாங்க நினைக்கிறதுதான் இப்போ உங்களுக்குத் தப்பா படுதுல்ல.

சோத்துக்கோ இல்ல, பணத்துக்கோ நீங்க கொற வச்சது இல்ல தான் மாமா. ஆனா அதவிட ஒரு பொண்ணுக்கு முக்கியமானது நீங்க எனக்கு மட்டுமே சொந்தங்கிறது. அத எந்தப் பணத்தாலயும் சரிகட்ட முடியாது. உங்களுக்கு என்னைப் பிடிக்கலனா நம்ம கண்ணால பேச்ச எடுக்கும்போதே பிடிக்கலனு நிறுத்தி இருந்தா இவ்ளோ தூரம் நான் உங்கள கேள்வி கேட்க வேண்டி இருக்காது. எந்த பொண்டாட்டிக்குத் தான் தன் புருஷன இன்னொருத்திக்கும் பங்கு போடச் சம்மதிப்பா?” என இத்தனைநாள் மனதினுள் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியைத் தன் கணவனிடம் கொட்டி விட்டார்.

அவரும் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை தான். பிறந்த வீட்டில் இளவரசியாய் வாழ்ந்தவர், இங்கும் ராணியாய் தான் வலம் வந்தார். ஆனால், காலம் அப்படியே போக விடாமல் இடையே குணவதியை அவர்கள் வாழ்வில் கொண்டுவர, அன்றிலிருந்து அனைத்தும் தலைகீழாய் மாறிப் போகின.

அவரின் கோபம் கூடத் தன் கணவன் இன்னொருத்திக்கும் சொந்தம் என்பதுதான். அதனால்தான் அடிக்கடி தன் கோபத்தை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்துவார்.

அவரின் கேள்வியில் உள்ள நியாயம் சுந்தரபாண்டியனுக்கும் புரியத் தான் செய்தது. ஆனால் பாழாய்ப் போன மனம் எங்கு, எப்பொழுது, எப்படி மாறும் என்று கணிக்க இயலாதே. அன்று அவர் மனதைக் கட்டுப்படுத்தி இருந்தால், இன்று இந்தக் கேள்வியைக் கேட்கும் அளவிற்கு வந்திருக்காது.

அவர் அமைதியாய் இருக்க, “அவரு அதெல்லாம் நினைச்சிருந்தா இப்படி பண்ணிருப்பாரா ம்மா! இப்பவும் நம்மள விட அந்தக் குடும்பம் தான அவருக்குப் பெருசா தெரியுதுஎன யாழினி கூற,

அப்போ நான் பண்ணது தப்பு தான் கமலா. இப்பவும் நான் அந்தத் தப்ப நியாயப்படுத்த விரும்பல, ஒத்துக்கிறேன். ஆனா, குணா நல்லவ கமலா. என்மேல கோபப்படு, அத நான் ஏத்துக்கிறேன். ஆனா குணா உன் வாழ்க்கைய அழிக்கணும்னு என்னிக்கும் நினைச்சது இல்ல. இப்பவும், அவ உன் பக்கம் தான் பேசுவாஎனத் தன் இரண்டாம் மனைவியை அவருக்குப் புரிய வைத்திடும் நோக்கில் கூற,

ஆமா அவ உங்களுக்கு நல்லவ. இப்போ நான் தான பொல்லாதவளாகிட்டேன். இப்போ என்ன, நான்தான் கெட்டவ, அப்படித் தான! அப்படியே இருந்துட்டுப் போறேன். இத்தனை நாளா என் பிள்ளைகளுக்காகத் தான் இந்த வீட்டுல குப்பைப் கொட்டிட்டு இருந்தேன். அத இன்னும் கொஞ்ச நாளைக்கு பண்ணிட்டு நான் போய்ச் சேர்ந்தறேன், உங்களுக்கும் உங்க காதலிக்கும் தொந்தரவா இருக்க மாட்டேன்என்றவாறே அவர் அறைக்கு எழுந்து செல்ல, வாசலில் சென்று கட்டிலைப் போட்டுப் படுத்தவர் நிலவை வெறித்துக்கொண்டிருந்தார்.

இன்று யோசித்து பலன் இல்லையே. சிறிது நேரங்கழித்து தன் தந்தையின் அருகில்வந்து அமர்ந்தான் சண்முகம்.

அப்பா…” என அழைக்க, “சொல்லு பாஎன்றவர், வானத்தையே வெறித்துக் கொண்டிருக்க, “அம்மாவோட கோபம் நியாயமானது தான ப்பா, அவங்க பக்கமுள்ள கோபத்த புரிஞ்சுக்கிட்டாவது இனி இங்கயே சாப்டலாம்ல ப்பாஎன்றான் சண்முகம்.

உன் அம்மாவ பாத்துக்க இத்தன சொந்தம் இருக்கீங்க டா. ஆனா, குணாவுக்கு என்னைத் தவிர வேற யாரு டா இருக்கிறா? அவ எனக்காக எல்லா சொந்தத்தையும் தூக்கிப் போட்டுட்டு வந்தவ டா, இங்க அவள நலம் விசாரிக்கக் கூட ஆளு இல்ல. ஒத்தப் புள்ளய வச்சுருக்கா, அவ தன்னந்தனியா இருக்கும்போது எப்படி டா என்னால இங்க நிம்மதியா சாப்ட முடியும்?

மதியம் அவ வேண்டாம்னு சொல்லியும் கேட்காம தான் அங்க சாப்டேன், இங்கயும் வந்து திரும்பச் சாப்ட்டதால இப்போ சாப்ட முடியல. அத புரிஞ்சுக்காம உன் அம்மா தான் கண்ணீர் சிந்துறானா நீயும் இப்படி கேட்கறது நியாயமா டா? அவளுக்கு ஒன்னுனா அழக் கூட இந்த உலகத்துல என்னைத் தவிர வேற யாரு டா இருக்கா

ஆனா அவளுக்கு மூணு புள்ளைகனு தான் சொல்லுவா. என்னிக்குமே உங்களையோ மலரயோ பிரிச்சுப் பார்த்தது இல்ல. ஆனா, அவ உங்களுக்கு எதிரியாகிட்டால்லஎன்றவருக்கு என்ன பதில் அளிப்பது எனப் புரியாமல் தவித்தான்.

ஒரு ஆணாய் அவரின் நிலையும் அவனுக்குப் புரியத் தான் செய்தது. ஆனால் தன் அன்னையின் கண்ணில் கண்ணீரைக் கண்டதும் தன் தந்தையின் மேலேயே கோபம் வந்தது.

அவனுக்கு எப்பொழுதும் தன் தந்தைமேல் மட்டும் தான் கோபமே தவிர குணவதியின் மேல் இல்லை. அவர் தெரிந்து தன் அம்மாவின் வாழ்வை பறித்தவர் இல்லையே. இன்னும் சொல்லப் போனால் தன் தந்தையால் ஏமாற்றப்பட்டவர் தானே அவரும் என நினைப்பவன்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் பேசத் தூண்டும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வான். அவரை நேரடியாக உறவு கொண்டாட முடியாத நிலை. தனக்கே இப்படி என்றால் தன் தந்தையின் நிலை

மலர்விழியிடமும் அவன் இன்றுவரை பேசியதில்லை. அவளிடம் பேச எண்ணினாலும் தன் தங்கையின் கோபம் ஞாபகத்திற்கு வர, உடனே அதனைக் கைவிட்டு விடுவான்.

எதுவும் பேசாமல், “நீங்கக் கொஞ்சம் நேரம் தூங்குங்க ப்பா. நாளைக்கு காலைல வெள்ளனே எந்திரிக்கணும்என்றவாறே அவன் எழுந்து செல்ல, இதனை எல்லாம் தன் வீட்டு வாசலில் கட்டிலில் படுத்திருந்த பாரிவேந்தனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.

உங்க நிலைமைல தான் இப்போ நானும் நிக்கறேன் மாமா. என் வாழ்க்கைய அக்காவும் தங்கச்சியும் தான் மாத்திமாத்தி விளையாடுறாங்க. ஒருத்தி என் மனச புரிஞ்சிக்க மாட்டேங்கிறா. இன்னொருத்தி என் மனச புரிஞ்சிருந்தும் என்னைக் கஷ்டப்படுத்துறா. இதுக்கெல்லாம் எப்போ முடிவு வரும்னு தெரியலஎனப் புலம்பியவனை நித்திராதேவி ஆட்கொள்ள, இரவு மெல்லமெல்ல நீண்டுக் கொண்டே சென்றது.

காலையில் எழுந்ததிலிருந்தே ஹரிஹரன் ஏதோ சிந்தனையிலேயே சுற்ற, ‘என்னாச்சு கரிச்சட்டிக்கு! எந்தக் கோட்டைய பிடிக்க இப்படி பலத்த யோசனைல இருக்கான்என எண்ணியவள், அவனிடம்என்னடா கரிச்சட்டி, ஏதோ தீவிரமா யோசிப்ப போல. எந்தக் கோட்டைய பிடிக்க இப்படி பலத்த யோசனை?” என ஒற்றைப் புருவம் உயர்த்தி அவள் வினவ,

எல்லாம் வாழ்க்கைய பத்தி தான்என்றான் ஹரிஹரன். “காலைலயே காமெடி பண்ணாத டாஎன்றவள், அங்கிருந்து நகர, “என்னிக்குத் தான் டி என்னை சீரியஸ்ஸா பேச விட்ருக்கீங்க?” என்றவன்,

ஏன் நாங்கலாம் எங்க வாழ்க்கைய பத்தி யோசிக்கவே மாட்டோமா?” என்றான் ஹரி. “அப்படியா, சொல்லுங்க சார். உங்க வாழ்க்கைய பத்திஎன்றாள் நக்கலாய்.

நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் ஃபிளவர்என்க, “வாட்ஏதாவது உளறாத டாஎன அவள் அலட்சியமாய் பதிலளிக்க, “சீரியஸ்ஸா தான் சொல்றேன் ஃபிளவர், உண்மையாலுமே ஒரு பொண்ண லவ் பண்றேன்என்றான் ஹரிஹரன் சற்று அழுத்தமாக.

அந்த அன்லக்கி கேர்ள் யாரு டா கரிச்சட்டி?” என்றவாறே அவன் தோளில் கைப்போட, அவன் கூறிய பெயரில் அவள் அதிர்ந்துபோய் நின்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மலர் அப்பா இருகல்யாணம் பண்ணிய தால் மாட்டிட்டு விழிக்கிறார்.பாரி ஹரி இவங்க நிலைமை எப்படியோ?.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    3. ஹரி யாழ் தானே நீ விரும்புவர் ?🤔🤔🤔