Loading

நான்கு வருடங்களுக்கு பிறகு……..

விவசாய பூமியில் கொஞ்சம் கொஞ்சமாக புதுமை புகுத்தி தங்களின் வளர்ச்சியை காட்டிக்கொண்டிருக்கும் நடுத்தர கிராமம் தான் பூவிலங்குடி. பொழுது புலர்ந்து இதமான தென்றலை வீசி கொண்டிருக்க, அச்சூழலை  அனுபவித்து உறங்கி கொண்டிருந்த இருவரையும், அவர்களின் தூக்கத்தை தொடரவிடாதபடிக்கு  இடையூறு செய்தது திண்ணையில் இருக்கும் பாட்டியின் புலம்பல்கள். நண்பனுக்கு முன்னே அதை செவியில் வாங்கிய செந்தூரனுக்கு பாட்டியின் புலம்பல்கள் ஒன்றும் புரியாமல் இருக்க, தன் நண்பனை எழுப்பிய கையோடு அழைத்து சென்றான் பாட்டியிடம்.

பாட்டியோ, “இந்த ஊருக்கு எப்பவுமே விடிவு காலம் வராதா? எப்பதான் இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு தருவியோ ஆத்தா. பொம்பள பிள்ளைங்க ராத்திரி நேரத்துல வெளிய போக கூடாதுன்னு சொன்ன கேக்குதுங்களா…… இப்ப பாரு அநியாயமா ஒரு உசுரு போய்டுச்சே. அப்படியே ராச்சாத்தி கணக்கா இருப்பா…. அவளுக்கு முடிவு அந்த கிணறு தான்னு கடவுள் எழுதிட்டான் போல. இந்த ஊரே சாபத்துல அழிஞ்சிடும் போலயே ராசா. அதுக்குதான் உன்னையும் உன் அக்காவையும் இந்த ஊர் பக்கம் வர வேணாம்னு வெளியவே தங்கி படிக்க வைக்கிறோம். நீ உடனே கெளம்பு ராசா. இந்த ஊரே உனக்கு வேணாம். உன் கூட வந்த தம்பியையும் கூட்டிட்டு போய்டுய்யா ராசாஎன நடந்த விபரீதத்தை அறிந்து பயம் கொண்டு பேசினார்.

அய்யோ பாட்டிஇப்ப என்ன ஆச்சு எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க. சின்ன புள்ளைல இருந்தே இந்த கதையை சொல்லித்தான் என்னைய இந்த ஊரு பக்கமே வரவிட மாட்ட. இப்பவும் அதையே சொல்லாம என்ன விஷயம்னு சொல்லு பாட்டி.”

ஏய்யா உனக்கு விஷயம் தெரியாதாஅதான் அந்த கிணத்துல நம்ம ஊர் தலைவர் பொண்ணு இறந்து கெடக்காமே ராசா. இன்னும் 6 மாசத்துல கல்யாணம் பண்ணலான்னு நேத்து தான் அவங்க அம்மா ஆசையா பேசிட்டு போனா. என்ன ஆச்சுன்னே தெரியலைய்யா இன்னைக்கு அந்த பொண்ணு உசுரு இல்லாம போச்சி. இந்த ஊருக்கே சாபம் விடாது போலையே. யாராச்சும் சாமியாரை கூட்டிட்டு வந்து பாருங்கன்னு  சொன்னா கேக்குறாய்ங்களா……… ” என தன் பேரப்புள்ளை மகேஷ்க்குகாலையில் நடந்த செய்தியை பயத்தோடு கூறிக்கொண்டிருந்தார் பாட்டி .

செந்தூரன் , “என்ன பாட்டி சொல்றிங்க? மகேஷ் அடிக்கடி என்கிட்ட இந்த விஷயம் பத்தி சொல்லுவான். ஆனா எனக்கு இதுல பெருசா நம்பிக்கை இல்லை. அப்படியே தொடர்ந்து பேய்யேபண்ணுதுன்னு சொன்னாலும் அதுக்கான காரணம் தான் என்ன? அதுவும் தொடர்ந்து பொண்ணுங்களை மட்டுமே கொல்ல காரணம் என்ன? என்ன ஏதுன்னு தெரியாமயே நீங்களும் இத்தனை வருசமா பொண்ணுங்களை பறிகொடுத்துட்டு சும்மா இருக்கீங்க. மகி வாடா அங்க என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரலாம்.”

ஏய்யா உனக்கு ஒன்னும் தெரியாது பேசாம ஊருக்கே திரும்பி போய்டுங்க. இதுலாம் இங்க பழக்கப்பட்ட ஒன்னு. எதையாவது விசாரிக்க போய் உங்க உசுரோடயே விளையாடாதீங்க… ” என்ற பாட்டிக்கு மகியோ,

பாட்டி!! இப்ப எதுக்கு அவன் கிட்ட கோவமா பேசுற. அவனே சொன்னாலும், சொல்லாம இருந்தாலும் நான் அங்க போகத்தான் போறேன். அப்படி எந்த பேய் எங்களை கொல்லுதுன்னு நாங்களும் பார்க்கிறோம். “என பாட்டியிடம் கூறிவிட்டு இருவரும் அந்த ஊர் எல்லையில் உள்ள காட்டிற்கு சென்றனர்.

அவர்கள் சென்று நின்ற நேரம்…. ஊர் ஆண்கள் ஒன்று கூடி கிணற்றில் இருந்து அந்த பெண்ணை மீட்டுக்கும் வேலையில் இறங்கி கொண்டிருந்தனர் . அதை பார்த்த இருவரும் கிணற்றின் அருகில் சென்று பார்க்க , நீரினுள் உடல் உப்பிஆடை விலகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் குப்புற கவுந்தப்படி இருக்க, முகத்தை பார்க்க முடியாமல் போனது செந்தூரனுக்கு.

மகி! என்னடா போலீஸ் யாருமே இல்ல? போலீஸ் வராம எப்படி டா இவங்களே பிணத்தை தூக்கலாம்.” என்றான் செந்தூரன்.

தெரியல தூரா…. இங்க எப்பவுமே இந்த மாதிரி நடக்குற சாவுக்கு போலீஸ் கிட்ட சொல்றதே இல்லை. நானும்  நிறைய தடவ அப்பா கிட்ட கேட்டும் இருக்கேன். ஆனா பதில் என்னமோ பெருசா வராது. இந்த விஷயம் எல்லாம் போலீஸ் கிட்ட சொன்னா நம்மளை தான் சும்மா விடாம கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுவாங்க. அதுமட்டும் இல்லாமல் இதல்லாம் பேய் தான் பண்ணுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்களாம் தூரா.”

இல்லை மகி என்னமோ சரி இல்லை. இதை போலீஸ் கிட்ட சொல்றது சரின்னு படுது. நம்ம வயசு இருக்குமா இந்த பொண்ணுக்கு. அதுவும் இல்லாமல் ஊர் தலைவர் பெண்ணுக்கே இப்படி நடக்கும் போது சும்மா வேடிக்கை பார்க்குற  ஊர்மத்தவங்களுக்கு நடக்கும் போது மட்டும் பேசுமா என்ன?”

ஆமா தூரா நீ சொல்றதும் சரியா தான் இருக்கு. அக்காவை வெளிய தங்கவச்சிட்டு பார்க்க முடியாம அம்மாவும் அப்பாவும் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. அப்போ இதே ஊருல பொம்பள புள்ளைங்கள வச்சிட்டு இருக்க பெத்தவங்க எப்படி பதறிட்டு இருப்பாங்க தினமும். இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும். ” இருவரும் பேசி கொண்டிருக்கும் நேரம்….. கிணற்றினுள் இருந்து வெளியே எடுத்து வந்தனர் அப்பெண்ணை. பெண்ணின் முகத்தை பார்த்த செந்தூரனுக்கு காயங்களோ, தழும்புகளோ தெரியவே இல்லை.

சிறிது நேரத்திலே மேற்கொண்டு இறுதி காரியங்கள் நடக்கதொலைவில் இருந்து பார்த்த வண்ணம் கண்களில் சோகம் தளும்ப துண்டால் வாயை பொத்தி அழுது கொண்டிருக்கும் ஒரு பெரியவர் கண்ணில் பட யாரென்று விசாரித்தான் மகியிடம்.

அவர் தான் மச்சி ஊர் தலைவர். பொண்ணு மேல அவ்ளோ பாசம். சின்ன புள்ளைல ஸ்கூல் படிக்கும் போது டீச்சர் அடிச்சிட்டாங்கன்னு ஸ்கூல்ன்னு கூட பார்க்காம பெரிய கலாட்டாவே பண்ணிட்டாரு. எப்பவும் அவரே ஸ்கூல்க்கு கூட்டிட்டு வருவாரு. பொண்ணு என்ன கேட்டாலும் மறுக்கமா வாங்கி தருவாரு தூரா. அப்படி பட்ட பாசமுள்ள மனுஷன் இதை தாங்குறது ரொம்பவே கஷ்டம் தான். ஒரே பொண்ணு வேற தூரா. அவங்க அம்மாக்கு இப்ப எப்படி வலிக்குமோ நினைச்சாலே பாவமா இருக்கு டா. இத்தனை வருஷம் வளர்த்த பொண்ணு இல்லாமல் இனி வாழ போற வாழ்க்கை முழுக்க நரகம் தான் அவங்களுக்கு. தலைவரும் ரொம்ப நல்லவரு தூரா. ஊருக்காக என்ன வேணாலும் பண்ணுவாரு. இந்த காட்டுக்கு வரவே கூடாதுன்னு பல முயற்சியை அவர் தான் செஞ்சாரு. இப்ப அவர் பெண்ணுக்கே இந்த நிலைமை. ” 

விறுவிறுவென சடங்குகள் நடக்க…. பெண்ணின் அம்மாவும் அப்பாவும் அழுவதை பார்த்து ஊரே அழுதது. பெற்ற ஒரே பெண்ணையும் பறிகொடுத்துவிட்டு அவர்கள் படும் துயரமும், அழுகையும் சொல்லி அடங்காதது.

இடுகாட்டுக்கு எடுத்து செல்ல…. அப்பெண்ணை தூக்கும் நேரம் வந்தது காவல் வாகனம். ஒரு நிமிடம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதில் இருந்து இறங்கினான் 31 வயது மதிக்க தக்க பூவிலாங்குடி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர்  திரு. கட்டபொம்மன். இறங்கியதும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி சத்தமாக… “இங்க யாரு செந்தூரன்?” என கேட்ட கேள்விக்கு, பதிலாக வந்தது செந்தூரனின் நான் தான் சென்ற வார்த்தை.

ஹ்ம்ம்…. சரி யார் நீ? உனக்கு எப்படி இந்த பொண்ணு இறந்த விஷயம் தெரியும்? பெத்தவங்களோ மத்தவங்களோ புகார் கொடுக்காம இருக்கும் பொழுது நீ மட்டும் குடுக்க காரணம் என்ன? உனக்கு அந்த பொண்ணு என்ன உறவு?….” அடுக்கடுக்காக எழுப்பிய கேள்வியில் தூரனே தடுமாற, ஊருக்கும் அப்பெண்ணின் பெற்றோருக்கும் பெரிய அதிர்ச்சி.

சார்! என் பேரு செந்தூரன். ஊரு ஆத்தனூர் பக்கம் இருக்க பெரியமேடு. நானும் இதோ இங்க நிக்குறானே மகேஷ் இரண்டு பெரும் காலேஜ் ஒண்ணா படிச்சிட்டு இருக்கோம் சார். இவன் அடிக்கடி இந்த ஊர்ல மர்மமான முறையில மரணம் நடக்கும்னு சொல்லுவான். அதுவும் இல்லாம அதுல பெண்கள் மட்டும் தான் சாகுறதா சொல்லுவான் சார். எனக்கு இதுல உடன்பாடு இல்லை சார். இந்த ஊருக்கு வந்து இரண்டு நாள் ஆகுதுஇப்ப அவன் சொன்ன மாதிரியே ஒரு சாவு அதுவும் மர்மமான முறையில நடந்திருக்கு சார். அத விட எனக்கு பெரிய குழப்பமே எதுக்கு யாரும் போலீஸ் கிட்ட சொல்லாம மறைக்கணும்னு தான். அதான் சார் என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு நான் உங்களுக்கு தகவல் சொன்னேன்.” என இன்ஸ்பெக்டரை  பார்க்க அவரும் அதே பார்வையை அந்த பெண்ணின் மீது பதித்தார்.

பிறகு, “பொண்ணோட அம்மா அப்பா யாரு? இங்க வாங்க.”

பரசுராம், “சார் அவள் என் பொண்ணு தான் பேரு தேவிகாஎனக்கு ஒரே மகள். அதுவும் ரொம்பவே செல்லமா வளர்த்துட்டேன் சார். அவ செத்ததை என்னாலையும் என் மனைவியாலையும் தாங்கிக்க முடியல. இதுல நீங்க வேற வந்து அந்த சுமையில் இன்னும் பாரத்தை ஏத்துறீங்களே!!  நியாயமா சார். பெத்த வயிறு படுற பாட்ட புரிஞ்சிக்க முடியலைன்னாலும் உதாசீன படுத்தாதீங்க சார். இதோ இங்க நிக்குற பையன எனக்கு யாருன்னு கூட தெரியாது. அவன் ஏதோ என்னமோ சொல்றான்னு நீங்களும் விசாரிக்க வந்துட்டீங்களே. இங்க இந்த மாதிரி நிறைய சாவு நடந்திருக்கே! அப்போல்லாம் யாரும் வரல? கேக்கல? இப்போ என் பொண்ணுக்கு மட்டும் வந்து நின்னு அசிங்கப்படுத்துறீங்களே. என் பொண்ணு போய்ட்டா சார் இனிமே வரவே மாட்டா. இந்த கொஞ்ச நேரம் தான் அவளை பார்க்கவும் முடியும். அந்த நிம்மதியை மட்டுமாது  குடுங்க சார் எங்களுக்கு. என் பொண்டாட்டிய பாருங்க சார்…. அழ கூட தெம்பில்லாம நிக்குறா. அவளுக்கு இனிமே நான் மட்டும் தான் சார்…. என்ன அவளுக்காவது வாழ விடுங்க….. என கையெடுத்து கும்பிட்டவரை தடுத்த கட்டபொம்மன்,

உங்க உணர்வு எனக்கும் புரியுது. நான் இல்லன்னு சொல்லவே இல்லையே. இங்க நான் வந்து 6 மாசம் ஆகுது. என் காதுக்கும் இந்த தகவல் அடிக்கடி வரும். நானே விசாரணை பண்ணனும்னு நினைச்சிட்டே இருந்தேன். இப்ப இந்த பையன் கம்பளைண்ட் பண்ணிட்டான். அவ்ளோதான் சார் உங்க பொண்ணு போன மாதிரி இனிமே இந்த ஊர்ல எந்த பொண்ணும் பலியாக கூடாதுன்னு நினைச்சி ஒத்துழைப்பு கொடுங்க. என் கிட்ட வந்த கேஸ் எதுவா இருந்தாலும் அதை முடிக்காம விடமாட்டேன். எங்களை  புரிஞ்சிகிட்டு விசாரணைக்கு வழி விடுங்க. இல்லைன்னா நானே விசாரணையை கட்டாயப்படுத்தி நடத்த வேண்டி வரும். அதுவும் இல்லாமல்  தற்கொலையோ, கொலையோ  போலீஸ்க்கு  தெரியாம மறைச்சது பெரிய தப்பு. அதுக்காகவே உங்க பேர்லயும் இந்த ஊர்ல இருக்க அத்தனை பேர் மேலயும் வழக்கு பதிவு செய்ய என்னால முடியும். உங்களுக்கு எது வசதியோ நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.”

கட்டபொம்மன் பேசியதை கேட்ட ஊர் மக்கள் அனைவருக்கும் பயம் எழுந்தது உண்மையே. கொஞ்ச நேரத்தில் மரண வீட்டில் இருந்த ஓலம் நின்று தங்களுக்குள் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தனர். சிறு சத்தம் பெரிய பேச்சாக உருமாற…. கட்டபொம்மன் அவர்களை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார்.

கூட்டத்தில் ஒருவர் , “இங்க பாரு பரசு.. அய்யா சொல்றதும் சரியாத்தான் இருக்கு. இதை எவ்ளோ நாளைக்கு இப்படியே விட முடியும் சொல்லு. ராணி மாதிரி வளர்த்த உன் பெண்ணுக்கே இந்த நிலைமைன்னா அப்போ எங்க வீட்டு பொண்ணுங்க நிலைமை எப்படி இருக்குமோ. பேசாம அய்யா சொல்ற மாதிரி விசாரணை பண்ணட்டும். நம்ம முடிஞ்ச அளவுக்கு அவருக்கு துணையா நிற்போம். இந்த கொலைகளை பண்றது இறந்து போன பேய்ன்னு தெரிஞ்சிட்டா மேற்கொண்டு என்ன பண்ண முடியுமோ அதையும் அய்யாவே பண்ணி கொடுத்துட்டு போகட்டும். நீ என்ன சொல்ற ….. சரின்னு  சொல்லு பரசு .”

பரசுராமன்,பெரியவர் பேசிய வார்த்தையை  கேட்டதும் இது சரி வருமா என்ற எண்ணம் வர தன் மனைவியை பார்த்தார். அவரோ இன்னமும் தன் பெண்ணை பார்த்தபடி சிலைக்காக அமர்ந்திருக்க செய்வதறியாதுமனைவியை கேட்காமலே  சம்மதித்தார்.

கட்டபொம்மன், “சரி நீங்க என்ன சொல்றிங்கன்னு பார்க்கத்தான் நான் அமைதியா இருந்தேன். நீங்க வேணாம்னு சொல்லி இருந்தாலும் நான் கண்டிப்பா கேட்டிருக்க மாட்டேன். நீங்களும் சரின்னு புரிஞ்சிகிட்டு சம்மதம் சொல்லிட்டீங்க. முதல் கட்ட விசாரணையா தேவிகா உடலை கூராய்வுக்கு அனுப்பி வைக்கனும். முடிவு என்னனு வரட்டும்அதுவே பாதி குழப்பத்தை தீர்க்கும். அதுவரைக்கும் இந்த ஊர்ல இருக்க எல்லாருமே என் விசாரணைக்கு காட்டுப்படணும். அப்புறம் செந்தூரன் நீங்க எங்கையும் போக கூடாது. கம்பளைண்ட் குடுத்தவங்கன்ற முறையில உங்க கிட்ட விசாரிக்க வேண்டி இருக்கு.” என்ற இன்ஸ்பெக்டருக்கு  சம்மதமாய் தலையசைத்தான் செந்தூரன்.

அப்புறம் பரசுராம் உங்க பொண்ணு இறந்து கிடந்த அந்த கிணத்துக்கு நான் போகணுமேஎங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?…”

மகேஷ், “சார் எனக்கு தெரியும் நானே உங்களை கூட்டிட்டு போற சார். அதுவும் இல்லாமல் உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும் சார். கூட பெரியவங்க வந்தா இல்லாத கதையை சொல்லி நம்மளையே குழப்புவாங்க. உங்களுக்கு சரின்னா நானும் தூரனும் வரோம் சார். “என கேட்க  சிறிது நேரம் யோசித்த கட்டபொம்மன்….. “சரி வாங்க போகலாம். அதுக்கு முன்னாடி நான் சில வேலைகளை முடிக்க வேண்டி இருக்கு. அது வரைக்கு இரண்டு பெரும்  கான்ஸ்டபிள் கூட இருங்க.” என அனுப்பிவைத்த கட்டபொம்மன் மனதில்

அப்படி இந்த ஊருல எந்த பேய் இருக்குன்னு நானும் பார்க்குறேன். இதுக்கு பின்னாடி என்னமோ பெருசா இருக்குன்னு புரியுது. இனிமே இந்த ஊருல ஒரு உயிர் கூட போகாது…. போகவும் விடமாட்டேன்…’

என்றவருக்கு தெரியவில்லை இன்றைய இரவே ஒரு உயிர் போக போகிறது என்று.

மர்மம் தொடரும்….

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்