Loading

 
 
 
 
 
 
 
 
 
 
வெற்றுடலில் கருப்பு வேட்டி அணிந்து கொண்டு, அருகிலிருந்த சிறு சிறு மண்டை ஓடுகளால் ஆன மாலையை கழுத்திலும், கையிலும் அணிந்து கொண்டு, அதேபோல் பெரிய உத்திராட்ச மாலை கழுத்தில் அணிந்துகொண்டு…. இடுப்பில் பல முடிச்சிடப்பட்ட  சிகப்பு அருணாக்கயிறு இருக்க….இத்தனை நாள் கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை எரித்து சாம்பலாக்கி சேமித்து வைத்திருந்த சாம்பலை கை நிறைய அள்ளி உடலிலும் கை , கால்களிலும் பூசிக்கொண்டு தன் தந்தையின் புகைப்படத்தை வணங்கிவிட்டு கிணற்றுப் பகுதியிலிருந்து…மெல்ல தேவிகாவின் உறைவிடத்தை நோக்கி நகர்ந்தான் சுகுமாறன். நடந்து வரும் பொழுது சுகுமாறன் முகத்தில் சொல்ல முடியாத ஆனந்தம். இது அவனுக்கு பழக்கப்பட்ட வேலையாவே இருந்தாலும் ஏனோ பல தடைகளை தாண்டி… நடக்குமோ நடக்காதோ என அச்சம் கொண்டு தவித்திருந்த எண்ணத்திற்கு விடுதலையாக இன்னும் சிறிது நேரத்தில் தேவிகாவின் உடலை கைப்பற்றி எரிக்க போகிறான். தேவிகா தான் சுகுமாறனின் கையில் சிக்கிய… 18வது பெண். இன்னும் மூன்றே மூன்று பெண்களை பலி கொடுத்து விட்டால் சுகுமாரனின் எண்ணங்கள் முழுமையாக நிறைவடைந்து விடும். அந்த ஆனந்தக் களிப்பிலே… நடையில் துள்ளலை கூட்டி நடந்து கொண்டிருந்தான். வரும்பொழுது தனது நண்பனுக்கு தகவலை சொல்லி விட்டு…. வழக்கம்போல் கிணற்றுக்கு அருகில் தந்தையின் உடலை கொண்டுவர ஆணையிட்டிருந்தான். ஆணையிட்ட அடுத்து ஆறு நிமிடங்களில் தேவிகா புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்திருந்தான் சுகுமாறன். ஏற்கனவே தினமும் இரவு 12 மணி போல் தேவிகாவின் உடலுக்கு பூஜை செய்துவிட்டு சமாதியின் மீது தந்தை கொடுத்துவிட்டு சென்றிருந்த மாந்திரீக சாம்பலை நீரில் கரைத்து தெளித்து விட்டு செல்வது வழக்கம். இன்று தேவிகாவின் உடலை தோண்டி எடுப்பதால் அதே பூஜைகளை செய்து விட்டு எந்த சாம்பல் கரைசலையும் மேலே தெளிக்காமல் அதற்கு பதிலாக பல மலர்கள் கொண்டு சமாதியை அலங்கரித்தான்.
 
அலங்கரித்து முடித்ததும் சமாதியின் எதிரில் அமர்ந்து… ஏதேதோ முனுமுனுத்தபடி கைகளை மேலே தூக்கி வணங்கிவிட்டு எழுந்து நின்றான். மூன்று முறை சமாதியை சுற்றி விட்டு வலது புறமாக இருந்த சம்மட்டியால்…. சமாதியை தோண்ட ஆரம்பித்தான்.  ஒரே ஆளாய் சமாதியை தோண்டுவதில் எந்த சிரமமும் இல்லை போல சிறிது நேரத்திலே ….. அழுகிய நிலையில் இன்னும் சில வாரங்களில் எலும்புக் கூடாக மாற இருக்கும் தேவிகாவின் உடலை கண்டுவிட்டான். 
 
ஆனால்,  அதன் மீதிருந்து எந்தவித துர்நாற்றமும் அடிக்காமல் போக… பிணமும் எவ்வித எடையும் இல்லாமல் போக… குழம்பியபடியே அவ்வுடலை மேலே தூக்கினான். பின் உடலிலிருந்த மணல்களை தள்ளிவிட்டு….. உற்று நோக்க அது அழுகிய உடலே இல்லை. பிணத்தை போல்  பொம்மை உடலை… துணியால் சுற்றப்பட்டு அழகாக சுகுமாறன் கையில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதை அறியாத சுகுமாறன்… முதலில் அதிர்ந்து பின் குழம்பி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வேகவேகமாக இன்னும் ஆழமாக தோண்ட ஆரம்பித்தான். அப்பொழுதும் எதுவும் கிடைக்காமல் போக ஒருவித பரபரப்புக்கு ஆளாகி… அருகில் தோண்டிப் பார்த்தான். அத்தனை இடங்களையும் தோண்டியும் தேவிகாவின் உடல் கிடைக்காமல் போக… ஆங்காரம் கொண்டு அந்த பிண பொம்மையை அடித்துக் கொண்டிருந்தான். 
 
சிறிது நேரத்திலே சுகுமாறன் பின்னால் பெரும் வெளிச்சம் தோன்ற…. முதலில் புரியாமல் அடித்துக்கொண்டிருந்த சுகுமாரன் பின் நிதானித்து பொறுமையாக தன் முதுகு பின்னால் தலையை திருப்பி பார்க்க்,
 
 
அங்கே… உடலை இறுக்கியும் இறுக்காமலும் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு, கருப்பு நிற கால் சட்டையில்… தலைமுடி முழுவதுமாக மேலே ஏற்றி கொண்டையிட்டு, வலது காதில் ஊடலை ( ப்ளூடூத் ) மாட்டி கொண்டு ஒரு கையில் டார்ச் லைட்டும்… மறுகையில் சற்றுமுன் நடந்த அனைத்தையும் ஒளிப்பதிவு செய்யும் சிறு புகைப்பட கருவியையும் ( கேமரா)  பிடித்த வண்ணம் நின்றிருந்தாள்..  ஆரதி.  
 
( கயல்விழி ஊருக்கு வர அன்னைக்கு முத்துவேல் கூட ஒரு பொண்ணு வந்ததா  பதிவு 3 ல் படிச்சு இருப்பீங்க…. அந்தப் பொண்ணுதான் ஆரதி)
 
முதலில் புரியாது விழித்த சுகுமாறன்… ஆரதிக்குப் பின்னால் நின்றிருக்கும் மகி, தூரன் மற்றும் கயல்விழியை பார்த்ததும் புரிந்துகொண்டான் தான் வசமாக சிக்கி இருப்பதை. உடனே அங்கிருந்து எழுந்து ஓட பார்க்க.. மகியும், தூரனும் ஆளுக்கொரு பக்கமாய் அவனை பிடித்துக் கொண்டனர். 
 
“என்ன … பொழுது சாஞ்சா மனநலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்து நிற்கிற சுகுமாறன் அவர்களே எதுக்கு அவசரமா ஓடுறீங்க. உங்கள நாங்க திடீர்னு பிடிக்கல. பல நாளா காத்திருந்து.. இன்னைக்கு தான் உங்கள பிடிக்கணும்னு  பிடிச்சிருக்கோம். இத கூட புரிஞ்சுக்காம ஓட பாக்குறீங்க…. எங்கள கண்டு அவ்ளோ பயமா? கவலைப்படாதீங்க… உங்கள நல்லபடியா இந்த உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இதோ இந்த கையில இருக்கு பாருங்க… புகைப்படக்கருவி இத இவ்வளவு நேரமா கை வலிக்க நீங்க பண்ண வீர சாகசங்களை பதிவு செஞ்சிருக்கேன். நாளையில இருந்து உலகமே உங்கள தான் பார்க்க போகுது. உங்க உலக முன்னேற்ற செயலுக்கு.. பல பாராட்டுக்களும் கிடைக்கப் போகுது…. ” என்று ஆரதி சுகுமாரனிடம் பேசிக் கொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் கயல் சத்தமே வராமல் அங்கிருந்து புறப்பட்டாள் கிணற்று பகுதியை நோக்கி.
 
************************
 
யாருக்கும் தெரியாமல் அந்த கிணற்று பகுதிக்கு வந்த கயல்விழியின் கண்ணிற்கு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுகுமாறனின் தந்தை சடலத்திற்கு பூஜைகள் நடத்தி கொண்டிருக்கும் அந்த உருவமே பட்டது. சத்தமே இல்லாமல் அந்த உருவத்தை நெருங்கிய கயல்…. அருகில் இருந்த கட்டையை  எடுத்து ஓங்கி அடிக்க ஆரம்பித்தாள். 
 
திடீர் தாக்குதலில் கைகளை தலையில் தாங்கிய வண்ணம் எழுந்து நின்று திரும்பிப் பார்க்க…. கண்ணில் அப்பட்டமான அதிர்ச்சி. 
 
“என்ன அதிர்ச்சியா இருக்கா? என்னைய இங்க சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டியே! ஆனா என்ன பண்ண இன்னைக்கு நீ என் கையில சிக்கனும்னு  விதி போல..” என்று கயல்விழி கூற…
 
என்னமோ சரியில்லை என்று யூகித்து அந்த உருவம் … ” ஏய்!!! நீ எப்படி இங்க வந்த? எனக்கு கொஞ்ச நாளாவே சந்தேகமா இருந்துச்சு இவ என்னடா அமைதியாக இருக்காளே ஒருவேளை என்னை கண்டுபிடிச்சிட்டியான்னு! என்னோட சந்தேகம் சரி ஆகிடுச்சு. சரி வந்ததும்தான் வந்துட்ட… எங்களுக்கு அடுத்த பொண்ண தேடுற வேலை மிச்சம். உன்னையவே அடுத்தபலிக்கு பயன்படுத்திக்கலாம். அதான் எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சே… எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாதுன்னு நீயே சாக வந்துட்டியா கயல்விழி. உன் ஆசையை நான் கண்டிப்பா நிறைவேத்துற”  என மர்ம சிரிப்பை சிரித்தவாறு கயல்விழியின் முடியை இறுக்கமாக பற்றி கழுத்தை நெரித்து பின்னால் தள்ளி கொண்டே மரத்தில் வெறியோடு ஓங்கி அடித்தது. அடித்த வேகத்தில் மொத்தமாக கீழே சரிந்த கயல்விழியின் முடியை  திரும்பவும்  இறுக்கிப் பிடித்து மேலே தூக்கி கன்னத்தில் விடாமல் ஓங்கி ஓங்கி அடித்தது அந்த உருவம். கயல்விழியும் பதிலுக்கு அந்த உருவத்தை தாக்க… அதில் மேலும் வெறியாகி கயல்விழியை கீழே தள்ளிவிட்டு பூஜைக்குப் பயன்படுத்திய கத்தியை எடுத்து வந்து… அடி வயிற்றில் ஓங்கி குத்த செல்ல
 
 
 
 
அவர்களுக்கு வெகு அருகிலிருந்து கேட்டது ஆரதியின் குரல்…..
 
 
 
“கட்டபொம்மன்ன்ன்…..”
 
 
“மரியாதையா கயல்விழியை விட்டுடுடூடூடூடூ…….. இல்லன்னா இங்க இருந்து நீ உயிரோட தப்ப முடியாது. ஏற்கனவே உன் கூட்டாளி சுகுமாறன் எங்க கையில சிக்கிட்டான். அதுவுமில்லாம நீங்க பண்ண எல்லாத்துக்கும் ஆதாரம் இப்போ என் கையில இருக்கு. இனிமேலும் உன்னால தப்பிக்கவே முடியாது. மரியாதையா கயல்விழியை விட்டு ஒதுங்கி நில்லு. இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… ஏற்கனவே உன் மேல கொலைவெறியில இருக்க.. ஒரு போலீஸ்காரனா இருந்துட்டு தப்ப தட்டிக் கேட்காம நீயே அந்த தப்புக்கு துணையா இருக்க வெட்கமா இல்ல…” என்று பேசிக்கொண்டே கட்டபொம்மனின் அருகில் சென்ற ஆரதி அவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி விட்டு ஓங்கி கன்னத்தில் அறைந்தாள். ஏற்கனவே கயல்விழியின் வருகையால் பதட்டத்தில் இருந்த கட்டபொம்மன் ஆரதியை யாரென்று தெரியாவிட்டாலும் தான் வசமாக சிக்கி விட்டதை உணர்ந்து மேலும் அதிர்ச்சியாகி நிற்க ஆரதியின் அடியில் மீண்டான்.
 
மாட்டிக்கொண்ட.. அதிர்ச்சியிலும், ஒரு பெண் அறைந்த அவமானத்திலும், சினம் கொண்ட கட்டபொம்மன் ஆரதியை அடிக்க வர.. அதை புரிந்து கொண்ட ஆரதி லாவகமாக கட்டபொம்மனின் கைக்கு சிக்காமல்  நன்றாக அலையவிட்டு பின், தான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலையை அவனிடம் காட்ட மொத்தமாக ஆடித்தான் போனான் கட்டபொம்மன்.
சிறிது நேரத்திலே சுருண்டு விழுந்த கட்டபொம்மனின் கை கால்களை கட்டிவிட்டு மகிக்கு இங்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாள். பின் இருவரும் அங்கே வர கட்டபொம்மனை சுகுமாறன் வைத்திருக்கும் இடத்திற்கு நால்வரும் அழைத்துச் சென்றனர்.
 
“கயல் உனக்கு என்ன அவ்வளவு அவசரம். இது எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ண எனக்கு கட்டபொம்மனை பிடிக்க தெரியாதா? சிலநேரம் கோபத்தை விட நிதானம் முக்கியம். நான் மட்டும் வர லேட் ஆகி இருந்தா இந்நேரம் கத்தி குத்து வாங்கி… நான் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாம பண்ணி இருப்ப” என கடிந்து கொண்ட ஆரதிக்கு  “முடியல ஆரதி க்கா … நீங்க அன்னைக்கு ஹாஸ்பிடல்ல எங்க மூணு பேர் கிட்டயும்  உண்மையை சொன்ன நிமிஷத்துல இருந்து ஒவ்வொரு நாளும் எப்படா இவனுங்கள பிடிப்போம் னு வெறியோட இருந்த. அதுவும் இந்த கட்டபொம்மனை சும்மா விட எனக்கு மனசே வரலை. அதான் நானே நேர்ல பார்த்து குறைந்தபட்சம் இரண்டு அடியாது அடிக்கணும்னு நெனச்சுட்டு இருந்தேன். சாரிக்கா! நான் வேணும்னு பண்ணல.” என தலைகுனிந்து பதிலளித்தால் கயல்விழி.
 
 
அன்று மருத்துவமனையில்…
 
கயல்விழி மருத்துவமனைக்கு வருமாறு கைபேசியில் அழைத்தது ஆரதிக்கு தான். கயல் கைப்பேசியை அணைத்த அடுத்த இரண்டு நிமிடத்தில் மூவர் இருக்கும் அறைக்குள் நுழைந்தால் ஆரதி.
 
“என்ன தம்பிகளா! வாங்கின அடிக்கு எந்திரிக்க முடியாம இருக்கீங்களோ!! எதுக்கு உங்களுக்கு இந்த வீர சாகசம்.” என்று கைகளை குறுக்கே கட்டிய வண்ணம் கேலியாக பேசிய ஆரதியை முறைத்துப் பார்த்த மகியை சிறிதும் கண்டு கொள்ளாமல் தூரனிடம் , ” சொல்லுங்க என்னமோ கண்டு பிடிச்சிட்டதா கயல் சொல்றா உங்கள அடிச்சது யார்னு தெரிந்துக்கிட்டிங்களா ? இல்ல அங்க வேற ஏதாச்சும் கண்டுபிடிச்சிங்களா?” என ஆரத்தி கேள்வி எழுப்ப
 
“நாங்க சொல்றோம் முதல்ல நீங்க எப்படி அங்க வந்தீங்கன்னு சொல்லுங்க? உங்களுக்கும் அக்காவுக்கும் எப்படி பழக்கம்? எங்க கிட்ட எல்லாத்தையும் சொன்ன அக்கா உங்கள மறைக்க காரணம் என்ன? யாருன்னு தெரிஞ்சும் எதுக்கு இன்னும் அமைதியா இருக்கீங்க? என ஆரதியை போலீஸ் விசாரணை செய்யும் தூரனை பார்த்து சிறிதாக சிரித்துவிட்டு…
 
“ரெண்டு பேரும் தப்பான மேற்படிப்பை எடுத்துட்டீங்க. நீங்க ரெண்டு பேரும் போலீஸா இருக்க வேண்டியது. உங்ககிட்ட என்னை பற்றி சொல்லணும் தான் இங்க வந்ததே. அன்னைக்கு தூரனை காப்பாற்றியது நான்தான்… என்னோட பேர் ஆரதி. நான் ஒரு பத்திரிக்கை நிருபர். நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்களே! ஒரு ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நான் கயல்விழி படிக்கிற கல்லூரி ஆண்டு விழாவுக்கு போயிருந்தேன். கல்லூரியில பைக்கை நிறுத்திட்டு போன் பேசிட்டே போகும் பொழுது தெரியாம கயல்விழி மேல இடிச்சுட்ட… அதுதான் கயல்விழியை நான்  முதல்ல பார்த்த தருணம். அப்போ என்னுடைய பர்ஸ் கீழே விழுந்திருச்சு போல நான் பார்க்கல…  கயல் தான் கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு வந்து கொடுத்தா. நானும் நன்றி சொல்லி… அவகிட்ட என்னை அறிமுகமாக்கிக  என்னோட பேர் ஆதி னு சொன்ன. கேட்டதும் ஒரு மாதிரி தடுமாறி உங்க பேரு ஆதியா ன்னு கேட்டா. ஆமா ஆனா ,முழு பேரு ஆரதி னு சொன்னதும் தான் தாமதம் அப்படியே கொஞ்ச நேரமா அசையாம பார்த்ததுட்டு இருந்தவ மயக்கம் போட்டு விழுந்துட்டா. 
 
எனக்கு ஒண்ணுமே புரியல. எதுக்காக பேர கேட்டதும் மயக்கம் போட்டு விழுந்தான் னு. கொஞ்ச நேரத்துல எந்திரிச்ச கயல் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு எதுவும் பேசாம போய்ட்டா. ஆனா , அவளோட முகம் மட்டும் என்னோட மனசுல  பதிவாகிடுச்சி . அந்த கல்லூரி கலை விழாவுல பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும், தற்காப்பு பற்றியும் உங்களுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்தால் துணிந்து நின்று போராடனும்னு பேசிட்டு இருந்த. அந்தக் கூட்டத்தில எனக்கு கயல்விழி தெரிஞ்சா. ஆனா அவளோட முகம் தெளிவில்லாம இருந்துச்சு. எதுவோ ஒரு பிரச்சனை இருக்குன்னு மட்டும் நான் புரிஞ்சுகிட்ட. கடைசியா பேசி முடிக்கும் பொழுது உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்தா யார்கிட்டயும் சொல்ல முடியாம ரகசியமா உதவி தேவைப்பட்டால் என்ன தொடர்பு கொள்ளுங்கன்னு   என்னோட மொபைல் நம்பரை அங்கிருந்த அத்தனை பேருக்கும் கொடுத்துட்டு வந்த . ஒரு ரெண்டு மாசம் போச்சு… தொடர்ந்து ஒரு நம்பரில் இருந்து எனக்கு கால் வரும் அட்டென்ட் பண்ணி பேசினா எதுவும் பேசாம போன வெச்சுடுவாங்க. ஆரம்பத்துல எனக்கு இருந்த வேலை பரபரப்புல நான் பெருசா கண்டுக்கல. ஆனா அடிக்கடி அந்த நம்பர்ல இருந்து எனக்கு அழைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு. அப்போதான் கவனிச்சி அந்த நம்பர் யாரு என்னன்னு விசாரிச்ச. அது உங்க அக்கா னும்  தெரிஞ்சுக்கிட்ட. அந்த கலை நிகழ்ச்சி நடந்த ஒரு ஆறு மாசம் கழிச்சு நான் கயல்விழியை சந்திக்க திரும்பவும் அந்த கல்லூரிக்கு போன. முதல்ல என்னை எதிர்பார்க்காத கயல்விழி கொஞ்ச நேரத்திலேயே நான்தான் கால் பண்றன்னு ஒத்துக்கிட்டா. என்ன ஏதுன்னு விசாரிக்கும் போது தான்… எனக்கு பூவிலாங்குடி கிராமத்தை பத்தியும், இங்க நடக்கிற விஷயங்களைப் பற்றியும், தெரிய வந்துச்சு. ஆதி இறந்ததுல ஏதோ மர்மம் இருப்பதாவும், அதை எப்படியாவது கண்டுபிடித்து குடுங்கன்னும் கயல்விழி கேட்டா.
பொதுவாவே எனக்கு சவாலான கேசை சந்திக்க ரொம்ப பிடிக்கும். அந்த எண்ணத்துல தான் இந்த கேசையே எடுத்த. ஆரம்பத்துல இந்த ஊருக்குள் நுழைய எனக்கு வாய்ப்பு கிடைக்கல. சரி கயல் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சதும் அதையே சாக்கா வச்சி அவ பிரிண்ட்டா இந்த ஊருகுள்ள வரலாம்னு ப்ளான் பண்ணோம். ஆனா அதுக்கு கயல் அப்பா  சம்மதிக்கல. அவள இந்த ஊர் பக்கமே வரவிடல.” என தொடர்ந்து பேசிய கலைப்பில் ஆரதி நிறுத்த… அதைத் தொடர்ந்தால் கயல்விழி.
 
“இளங்கலை முடிச்சதும் இந்த ஊருகுள்ள வந்து ஆதியோட சாவுக்கு காரணம் கண்டு பிடிக்கணும்னு நினைச்ச. ஆனா அப்பா விடாம முதுகலையும்  அதே கால்லூரிலையே  சேத்தி விட்டுடாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த அப்போ தான்… ஆரதி எனக்கு அறிமுகமானாங்க. ஆரதி எவ்வளவு பெரிய திறமைசாலி னு நியூஸ்ல அடிக்கடி பார்த்திருக்க. இவங்க கிட்ட சொன்னா ஆதியோட சாவுக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சு தான் கால் பண்ண.
ஆனா என்னமோ  சொல்ல தைரியம் வரல. ஆரதியே என்னை கண்டுபிடிச்சி வரவும் ரொம்ப நம்பிக்கை வந்துடுச்சி. அதான் இறந்த ஆதியை பத்தி எல்லாத்தையும் சொன்ன. அதுக்கப்புறம் ஆரதி சொன்ன மாதிரி இந்த ஊருக்குள்ள வர பல தடவை முயற்சி பண்ண. ஆனா வர தான் அப்பா அனுமதிக்கல. தேவிகா கொலை பற்றி எனக்கு நீங்க சொல்றதுக்கு முன்னாடியே ஆரதி சொல்லிட்டாங்க. அந்த நேரம் பார்த்து தான் லாக்டோன் வரவும் இதான் சாக்குன்னு நானும் இந்த ஊருக்கு வந்துட்டேன். அதே நேரம் தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாம வரணும்னு ஆரதி சொன்னதால… முத்துவேல் சித்தப்பா கிட்ட இத பத்தி பேசுனோம். முதல்ல சித்தப்பா நம்பலை. அப்புறமா ஆதியை பத்தி முழுசா சொன்னதும் தான் நம்புனாங்கள். அப்போதான் முத்து சித்தப்பா ஒரு விஷயம் சொன்னாரு… ஆதி இறந்த மறுநாள் அங்கு ஒரு பையன் மயக்கத்துல இருந்ததாகவும் நான்தான் எழுப்பி வீட்டுக்கு அனுப்பியதாவும் சொன்னாங்க. அப்போ அது சுகுமாறன் அண்ணாவா இருக்கும்னு எங்களுக்கு தோணிச்சு. நாங்க போட்ட திட்டப்படி இந்த ஊருக்கு வந்தோம். நீங்க அன்னைக்கு என்ன விசாரிச்சது முதல்கொண்டு என்னென்ன நடந்ததோ அது அத்தனையும் தினமும் கால் பண்ணி சொல்லிடுவ ஆரதிக்கு.”
 
“ஆமா கயல் என்ன நடந்தாலும் எனக்கு தகவல் சொல்லிடுவா. நீங்களும் இதை தீவிரமாக விசாரிச்சுட்டு இருந்தீங்க. அதுவும் ஒரு வகையில எனக்கு உதவியா தான் இருந்துச்சு. எதிரிங்க கண்ணு முழுக்க உங்க மேல தான் இருக்கும். அதனாலதான் உங்க கிட்ட எந்த தகவலும் சொல்ல வேண்டாம்னு கயல் கிட்ட சொன்ன. முதல்ல எனக்கு சந்தேகம் வந்தது சுகுமாறன் மேல தான். ஆனா எனக்கு  அவங்க கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருக்கிறதா தகவல் வரவும்…. எனக்கு தெரிஞ்ச டாக்டர் மூலமா அது என்னன்னு விசாரிச்ச. பொதுவா மனநலம் பாதிக்கப்பட்டவங்க முழுநேரமாக இருப்பாங்க. இல்லையா அப்போ அப்போ தன்னோட நினைவை இழப்பாங்க. இந்த மாதிரி குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இழக்க வாய்ப்பு ரொம்ப கம்மி ன்னு சொன்னாங்க. அப்போதான் சுகுமாரன் மேல இருந்த சந்தேகம் இன்னும் அதிகமாச்சு. இதைப்பற்றி கயல் கிட்ட நான் முன்னாடியே சொல்லிட்ட ( அன்னைக்கு சுகுமாறனை பார்த்துட்டு ஆதி மகி தூரன் மூணு பேரும் வரும்போது ஒருத்தர் மட்டும் சிரிச்சாங்கன்னு சொல்லியிருந்தேன் இல்லையா அது கயல்தான் ) சுகுமாறனை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பிச்சேன்.. அப்போதுதான் இதுல சுகுமாறனுக்கு துணையா இன்னொரு ஆள் இருக்கிறது தெரிய வந்துச்சு….” என்று ஆரதி தகவல் சொல்ல…
 
கயலுக்கு இது புதிய தகவலாக இருக்க.. “என்ன ஆரதி சொல்றீங்க! இதைப் பத்தி நீங்க எனக்கு சொல்லவே இல்லை.”
 
“உன்கிட்ட சொல்லக் கூடாதுனு இல்ல கயல்.  எனக்கே… முழுசா தகவல் கிடைக்கல. அதான் சொல்லாம மறைச்சேன். அது வேற யாரும் இல்ல… தேவிகா கொலையை பற்றி கண்டுபிடிக்க யார் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களோ அந்த கட்டபொம்மன் தான்”  என்றதுதான் தாமதம் மூவரும் உட்சபட்ச அதிர்ச்சியாகி ஒருசேர …..என்ன! என்றனர்…
 
இதில் பெரிதும் அதிர்ச்சி ஆகியது தூரன் தான். ஏனெனில் தான் பேசியவரை கட்டபொம்மன் ஒரு நேர்மையான அதிகாரி. இந்தக் கொலைகளை பற்றி கண்டுபிடிக்க ரொம்ப ஆர்வமா இருந்த ஆள். கேட்ட நேரத்துலலாம் உதவி செஞ்ச நல்ல மனுஷன். தன்னோட மனசுல ரொம்ப பெரிய இடம் கொடுத்து வைத்திருந்த ஒரு நபரை கொலையாளி ன்னு சொன்னதும் தூரனால ஏத்துக்க முடியல. “இல்ல
. இல்ல …இல்ல… கண்டிப்பா கட்டபொம்மன் சார் இதை செய்ய வாய்ப்பே இல்லை. அவரு ரொம்ப நல்லவரு இந்த கேசை பத்தி கண்டு பிடிக்கணும்னு என்னை மாதிரியே அதிகமா துடித்தது அவர்தான்.” என்ற தூரனுக்கு அருகில் அமர்ந்த ஆரதி…
“எனக்கு உன்னோட எண்ணங்கள் புரியுது தூரன். இப்ப கூட உங்ககிட்ட இந்த விஷயத்தை நான் சொல்லியருக்க மாட்டேன். இவ்வளவு தூரம் உயிரைக்கூட மறந்துட்டு உண்மையை கண்டுபிடிக்க போனதால தான் உங்ககிட்ட இப்போ இத சொல்லிக்கிட்டு இருக்க. முதல்ல கட்டபொம்மன் மேல சந்தேகம் வரல. ஆனா , சுகுமாறனை பார்த்துட்டு வர  வழியில கட்டபொம்மன் கிட்ட நீ கயல் பேசின ஆடியோ ஒன்று கொடுத்த ஞாபகம் இருக்கா? (பதிவு 3 ல் கயல் ஆதியை பத்தி சொல்லு போது  தூரன் ஃபோனில் ரகசியமா பதிவு பண்ணுவானே)  அதுக்கு மறு நாளே கட்டபொம்மனும் சுகுமாறனும் பேசிக்கிட்டு இருக்கிறத நான் பார்த்த. ( பதிவு 6 ல இரண்டு உருவம் பேசிக்கிட்டு இருக்கறதா சொல்லி இருப்பேன் அது சுகுமாறனும் கட்டபொம்மனும் தான்) அதுக்கு அப்புறமா தான் கட்டபொம்மனை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பிச்சேன். கட்டபொம்மன் இல்லாத நேரத்துல… அவரோட வீட்டுக்கு போயிட்டு ஏதாச்சும் தகவல் கிடைக்குமா ன்னு தேடிப்பார்த்த…  அங்க தான் எனக்கு ஒரு வளையல் கிடைச்சது. அதுல இருந்து ரத்தக்கரை… கட்டபொம்மன் ஓடதுன்னு தெரிஞ்சுகிட்ட.  அன்னைக்கு உன்னை அடிச்சது கட்டபொம்மன்… மகியை அடிச்சது சுகுமாறன். தினமும் ராத்திரி நேரத்துல ரெண்டு பேரும் அங்கு கூடி பேசிப்பாங்க.இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்  ஆனா அதெல்லாம் இப்போ தெரிஞ்சுகிறதை விட …. நமக்கு வேற வேலை இருக்கு. அவங்க ரெண்டு பேரை பிடிச்சதும் மீதி உண்மையை நீங்களே தெரிஞ்சுக்கோங்க. இப்போ நீங்க ரெண்டு பேரும் பண்ண வேண்டியது எல்லாமே… உங்களை அடிச்சது பேய்ன்னு ஊரையே நம்ப வைங்க. கட்டபொம்மன் கிட்ட கொடுத்த கேச நீ வாபஸ் வாங்கு தூரன். எக்காரணத்தைக் கொண்டும் கட்டபொம்மனுக்கு துளிக்கூட சந்தேகம் வரக்கூடாது. திரும்பவும் சொல்றேன் இந்த கொலைகளை பண்றது சுகுமாறனும் கட்டபொம்மனும் தான். இப்போதைக்கு இந்த உண்மை போதும். ரொம்ப நேரம் நம்ம பேசுறது கூட ஆபத்துதான். நான் கிளம்புற கயல். பசங்க புத்திசாலிங்க… நான் சொன்னதை இந்நேரம் புரிஞ்சிருப்பாங்க. இனிமே அவங்க பாத்துப்பாங்க… நீ தைரியமா இரு. இவங்க பயந்துட்டாங்க ன்னு தெரிஞ்சாலே அவனுக ரெண்டு பேரும் தைரியமா முன்னாடி வந்திடுவாங்க.” என்று மூவருக்கும் கூறிவிட்டு அங்கிருந்து ஆரத்தி கிளம்பி சென்றாள்.
 
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க… “அக்கா அன்னைக்கு நான் உங்கள தப்பா நினைச்சு கட்டபொம்மன் கிட்ட அந்த ஆடியோவை கொடுக்கல. நீங்க சொல்ற தகவல் முழுசா அவங்களுக்கு தெரிஞ்சா ஏதாச்சும் நடவடிக்கை எடுப்பாங்கன்னு தான் அப்படி பண்ண . சாரிக்கா!” என தூரன் மிகவும் வருத்தமாக தெரிவிக்க
..
 
“நீ சாரி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தப்பு பண்ணிட்டு தைரியமாய் வெளியே நடமாடுற  அவனுங்க ரெண்டு பேர் முகத்தையும் கிழிக்கணும். அப்போ தான் எனக்கு நிம்மதி தூரன்.”
 
 
 
 
 
ஆதிய கொன்றது யாரு? பரசுராம் வீட்டில அன்னைக்கு  மறைந்த உருவம் யாரு? ஆதிக்காக காத்திருந்த கயல்விழியை பேசி வீட்டுக்கு அனுப்பி வைத்த நபர் யாரு? தேவிகா அவங்க அம்மா ரெண்டு பேரும் எப்படி இறந்தாங்க? இந்த கொலை எல்லாம் சுகுமாறன் பண்ண காரணம் என்ன?  கட்டபொம்மன் சுகுமாரனுக்கு எப்படி பழக்கம்? இந்த கேள்விக்கு எல்லாம் பதில் அடுத்த பதிவில்.
 
மர்மம் தொடரும் ….
 
 
அம்மு இளையாள்.
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்