அத்தியாயம்-4
இடம்: டொரோண்டோ
நேரம் இரவு ஏழு மணியைத் தொட்டிருக்க… அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலுடன் பாரும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததால் பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன.
பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக இருந்தாலும் அது அது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இரு மஞ்சள் நிற கோடுகளுக்குள் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது.
வெள்ளிக்கிழமை என்றால் வீக்கெண்ட் மூடுக்கு சென்றுவிடும் அந்நாட்டவர்கள், அந்த வெள்ளிக்கிழமையிலும் ஆண், பெண் நண்பர் குழுக்களாகவும், இளம் மற்றும் வயது முதிர்ந்த காதல் ஜோடிகளாகவும், தனிமையில் சிலரும் என்று ஹோட்டலுக்குள் சென்ற வண்ணமிருந்தனர்.
தன் நான்கு சக்கர வாகனத்தை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்த நளன் பார்கிங்கில் காலி இடத்தை தேடினான்.
அருகில் அமர்ந்திருந்த வினோத், “நளா, அங்க ஒரு லாட் இருக்கு பாரு” என்று இரண்டு வரிசைக்கு அப்பால் இருந்த இடத்தைக் காட்டவும், தன் நான்கு சக்கர வாகனத்தை லாவகமாக வலுக்கிக் கொண்டு போய் அந்த இடத்தில் பக்காவாக நிறுத்தினான் நளன்.
அடர் நீல வண்ண உயர்தர முழுக்கை சட்டையும் கருப்பு நிற கோட்டும் அணிந்து, டேன் (tan) நிற ஷூ காலில் பளபளக்க, தன் கோட்டின் பட்டனை மாட்டிக்கொண்டே ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கினான் நளன்.
மறுபுறம் அடர் மெரூன் வண்ண முழுக்கை சட்டையும் கருப்பு நிற கோட்டும், கருப்பு நிற ஷூவும் அணிந்து இறங்கினான் வினோத்.
இறங்கிய இருவரும் ஹோட்டலுக்குள் நுழைய, அங்கே ரிசப்ஷனில் “ஹொவ் மே ஐ ஹெல்ப் யூ” என்ற நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு இளம் பெண் வினவவும்,
“நாங்க கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ஓட பார்ட்டிக்கு வந்திருக்கோம், பார்ட்டி எங்க நடக்குது” என்று நளன் ஆங்கிலத்தில் கேட்கவும், அந்த பெண் அவர்கள் இருவருக்கும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வழி காட்டினாள்.
அவள் காட்டிய வழியில் சென்ற இருவரும் ஒரு பெரிய கதவை அடைந்தனர். அந்த இரு கதவுகளின் அருகே நின்றிருந்த இரு காவலாளிகளும் அவர்களைக் கண்டதும் கதவை திறந்து விடவும் இருவரும் பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் வந்தனர்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே நின்றிருந்த சுந்தர் அவர்களை கண்டுவிட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்தார்.
“கம் கம் உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்று இருவரையும் முன்னே அழைத்துச் சென்றார்.
“சாரி சார் நாங்க லேட் பண்ணீட்டோமா?” என்ற நளனுக்கு
“நோ நோ யூ ஆர் அட் கரெக்ட் டைம், வாங்க” என்றார்.
பெரிய விசாலமான அமைப்பு கொண்ட அந்த ஹாலில் வட்ட வட்டமாக மேசைகள் இடப்பட்டிருக்க அதனைச் சுற்றி நாற்காலிகள் இடப்பட்டு மேஜை மற்றும் நாற்காலிகளில் வெள்ளை வண்ண உறைகள் போர்த்தப்பட்டிருந்தது.
அங்கே ஆண்டனி மற்றும் சிலரும் ஒரு மேசையில் அமர்ந்திருக்க, அனைவருக்கும் கை குலுக்கிய நளனும் வினோத்தும் அவர்களுடன் அமர்ந்தனர்.
சுந்தர் அருகில் அமர்ந்திருந்த வினோத் “என்ன சார் நீங்களும் நாங்களும் மட்டும் தான் பார்ட்டியில இருப்போம்ன்னு நினைச்சோம், இங்க இவ்வளவு பேரு இருக்காங்க” என்றான் சுற்றிலும் பார்த்தபடி.
“எஸ் வினோத், இங்க நம்ம மட்டுமில்ல கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ல சம்மந்தப்பட்டவங்க, அதாவது உங்கள மாதிரி டீலர்ஸ் அண்ட் எங்களை மாதிரி பார்ட்னர்ஸ் எல்லாருக்கும் 2 மந்த்ஸ் ஒன்ஸ் ஒரு கெட் டுகெதர் அரேஞ்சு பண்ணுவோம், சோ அதுக்கு தான் எல்லாரும் இங்க வந்திருக்காங்க” என்றார்.
சற்று நிறுத்தி “ஓகே ஆண்டனி வி வில் ஸ்டார்ட் தி பார்ட்டி” என்றவர் ஆண்டனியை பேச சொல்லவும்,
இருக்கையில் இருந்து எழுந்த ஆண்டனி அவர் அணிந்திருந்த கோட்டை சரி செய்தவாறு
“கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் பார்ட்டிக்கு வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள், உங்க எல்லாராலும் தான் நம்ம கம்பெனி இவ்வளவு உயரத்தை தொட்ருக்கு, அதுக்கு உங்க எல்லாருக்கும் நம்ம கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் சார்பா வாழ்த்துக்கள்.
நம்ம கம்பெனி இன்னும் உலகம் பூராவும் மக்களை சென்று வெற்றியடைவதற்கு கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ல வேலை செய்யுற நாம தான் முக்கிய காரணம்”, என்றவர் மேலும்,
கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் இடைப்பட்ட இரு மாதங்களில் கண்ட வெற்றிகளை பற்றிப் பேசியவர் இறுதியாக,
“நம்ம கம்பெனி இந்தியாவில் துவங்கப் போற கிளைக்கு டீலர் ஷிப் எடுத்திருக்கவங்க மிஸ்டர் நளன் கார்த்திகேயன் அண்ட் மிஸ்டர் வினோத் சக்கரவர்த்தி” எனவும் நளனும் வினோத்தும் எழுந்து நின்றனர்.
சுற்றிலும் கரகோஷம் எழ, இருவரும் அனைவருக்கும் நன்றி தெவித்தனர். அருகில் அமர்ந்திருந்த சிலர் எழுந்து வந்து கை குலுக்கினர். அனைத்தையும் பெற்றுக்கொண்ட நளனும் வினோத்தும் மீண்டும் அவர்கள் இருக்கையில் அமர்ந்தனர்.
“ஓகே பிரெண்ட்ஸ் என்ஜோய் தி பார்ட்டி, தேங்க்ஸ்” என்ற ஆண்டனி நன்றி சொல்லி அமர்ந்தார்.
ஆண்டனி பேச்சை முடிக்கவும் “ஓகே மிஸ்டர் நளன் அண்ட் வினோத் நீங்களும் பார்ட்டி ஸ்டார்ட் பண்ணலாம், இங்க எல்லாமே கிடைக்கும் எல்லாமே…” என்று எல்லாமில் அழுத்தம் கொடுத்து சொன்னவரை புரியாமல் பார்த்த இருவருக்கும்,
“நம்ம ஊரு பசங்க இன்னமுமா உங்கள மாதிரி அப்பாவியா இருக்காங்க… என்றவர் எல்லாம்னா தண்ணி தம்மு பொண்ணு… உங்க இஷ்டம் போல நீங்க இருக்கலாம், என்ஜோய் யுவர் ஸெல்ப்” என்றார் சுந்தர்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு வெள்ளைக்கார பெண் கையில் மதுக்கிண்ணத்துடன் சுந்தருக்கு ஹாய் சொல்லி அருகில் வரவும் அந்த பெண்ணை இடுப்போடு சேர்த்து அணைத்தவர் அவரது மதுக்கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு அப்பெண்ணுடன் நகர்ந்தார்.
நளனும் வினோத்தும் இருவரையும் மாறி மாறி பார்க்க அடுத்த சில நொடிகளில் ஆண்டனியும் அவர்களிடமிருந்து கழண்டு கொண்டார்.
“டேய் என்னடா இவரு, இவரை பாத்தா ரொம்ப நல்ல மனுஷன் மாதிரி தெரியுது ஆனா பண்ற வேலையை பாத்தியா” என்றான் வினோத் நளனிடம்.
“ஏன் இந்த வேலை பாத்தா அவரு நல்ல மனுஷன் இல்லையா என்ன? நீயும் தான் இங்க வந்ததுல இருந்து ஒரு பொண்ணு விடாம சைட்டு அடிக்கிற, அப்போ நீ கெட்டவனா?” என்றான் நளன்.
“ம்ம் நாம பாத்ததை இவன் எப்போ பாத்தான்” என்று யோசித்தவன்,
“ஆமா… நான் பாத்தது உனக்கு எப்படி தெரியும், அப்போ நீயும் பாத்திருக்க, அப்படித்தானே” என்று குதூகலித்தான் வினோத்.
“டேய் என்னோட பார்வை வேற… உன்னோட பார்வை வேற…” என்று நளன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அருகே ஒரு இளம் பெண் மது ட்ரேயுடன் அவர்கள் மேஜை அருகில் வந்தாள்.
இருவரும் ஆளுக்கொரு கிளாசை கையில் எடுத்துக்கொள்ள, அப்பெண் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
“ஆங்… என்ன சொன்ன என்னோட பார்வை வேறு உன்னோட பார்வை வேறா, ஆமா இவரு பெரிய சிஐடி சங்கரு” என்றவனை முறைத்தவன்,
“இல்ல வினோ நீ பொண்ணுங்களை பிடிச்சு பாக்குற, நான் ஏன் டா இந்த உலகத்துல இந்த பொண்ணுங்க பொறக்குதுகன்னு நெனச்சு வேண்டா வெறுப்பா பாக்குறேன்” என்றவன் கையில் வைத்திருந்த மதுக்கிண்ணத்தை முழுவதுமாக வாயில் சரித்தான்.
கிளாஸை மேசையில் வைத்தவன் “வலிக்குது வினோ, என்னால முடியலை, நான் எப்படி இந்தியா வரப்போறேன்னு எனக்கு தெரியலை, ரொம்ப பயமா இருக்கு டா, செத்துரலாம் போல இருக்கு ” என்றவன் அவன் இடது பக்க நெஞ்சில் கை வைத்தான்.
“ஹேய் என்ன நளா நீ… இப்படிலாம் பேசாத ப்ளீஸ், நளா அம்மா அப்பா நீ இப்படி பேசுறத பாத்தா ரொம்ப கஷ்டப்படுவாங்க. விட்டுடு நளா எல்லாத்தையும் மறந்திரு” என்றான் வினோத் கெஞ்சும் தொனியில்.
“ஹா… மறக்குறதா, எப்படி டா மறக்க முடியும்… சொல்லு என்னோட நிலைமையில நீ இருந்தா உன்னால முடியுமா?” என்றான் கேள்வி கேட்கும் விதமாக.
“டேய் நளா புரியுது டா ஆனா… நானா இருந்தா கண்டிப்பா மறக்க முயற்சி பண்ணுவேன், உன்னை மாதிரி மறக்க வேண்டியதை திரும்ப திரும்ப நெனச்சுகிட்டே இருந்தா எப்படி டா மறக்க முடியும்,
நீ நடந்ததவே நெனைச்சு உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிற, முழுசா ரெண்டு வருஷம் ஆச்சு, நீ இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருந்தா நல்லவா இருக்கு, நாம இந்தியா போகும் போது அங்க எவ்வளவோ மாறியிருக்கலாம், அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என்றான் வினோத் கெஞ்சும் குரலில்,
“நீ சொல்றது புத்திக்கு புரியுது, ஆனா மனசுக்கு புரிய மாட்டேங்கிதே” என்றவன் இதோடு ஒரு முழு பாட்டிலை முடித்திருந்தான்.
“டேய் நளா உனக்கு ரொம்ப அதிகமாயிருச்சு போதும் வா வீட்டுக்கு போகலாம்” என்று வினோத் இருக்கையில் இருந்து எழுந்தான்.
“டேய் வினோ நீ தானே சொன்ன நடந்தத மறக்க சொல்லி, நான் மறக்க போறேன், வா நாம டான்ஸ் ஆட போகலாம்” என்றான் நளன் குளறியபடி.
“டேய் நளா…” என்றவன் குரல் காற்றோடு கலக்க,
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, அங்கிருந்த டிஜெ வின் மெல்லிய இசை மதுவின் மயக்கத்தில் இருந்தவர்களுக்கு மேலும் மயக்கத்தைக் கொடுக்க, ஆண்களும் பெண்களும் அங்கே அவர்களுக்குள் தொலைந்து கொண்டிருந்தனர்.
வினோத்தின் கைபிடித்து இழுத்த நளன் மேடை ஏறினான்.
முதலில் என்ன செய்வானோ என்று பயந்து நளன் மேல் கண்ணாக இருந்த வினோத், அவன் தானாக ஆடிக் கொண்டிருக்கவும் அவனும் ஆட ஆரம்பித்தான்.
தனியாக ஆடிக்கொண்டிருந்த நளன் அருகில் ஒரு பெண் வரவும் சுதாரித்த வினோத் நின்று அங்கு நடப்பதை பார்க்கலானான்.
நளன் அருகில் வந்த அந்த பெண் “ஹே ஹான்சம், கேன் ஐ ஜாயின் வித் யு?” என்று கை நீட்டவும்,
“எஸ் அஃப்கோர்ஸ்” என்ற நளன் பாடலுக்கேற்ப அப்பெண்ணுடன் ஆடத் தொடங்கினான்.
அப்பெண்ணின் விரல் பிடித்து சுற்றியவன், அப்பெண்ணின் இடுப்போடு கைகோர்த்து அந்த பெண்ணை மிக நெருக்கத்திற்கு கொண்டு வந்தான்.
அப்பெண்ணின் இடக்கை நளனின் கோட்டின் மேல் இருக்க அந்த பெண்ணின் முதுகுப்புறம் தரையை நோக்கியவாறு அவள் கண்களை ஏறிட்டவன், வேகமாக அவளிடமிருந்து விலகினான். “ஹனி…” என்ற முனகலுடன்.
விலகியவன் வேகமாக அவன் உடையையும் கையையும் மாறி மாறி தட்டிவிடவும்,
“ஹே வாட் ஹப்பெண்ட், கம் ஆன்” என்றாள் அப்பெண்.
“நத்திங், ஐ ஆம் சாரி” என்றவன் வேகமாக மேடையை விட்டு இறங்கி அந்த ஹாலின் வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த வினோத் “நல்ல வேலை அந்த பொண்ண கீழ போடலை, அதுவரைக்கும் தப்பிச்சோம்” என்று நெஞ்சில் கை வைத்தவன் நளன் பின்னே ஓடினான்.
நளனுடன் இணைந்தவன் “டேய் கார் கீயை கொடு நான் டிரைவ் பண்றேன்” என்றான்.
நளனும் அவனால் டிரைவ் பண்ண முடியாததை உணர்ந்து அவனும் எதுவும் பேசாமல் கார் கீயை வினோத்திடம் கொடுத்தான்.
இருவரும் ஜி லைசென்ஸ் வைத்திருந்தவர்களாதலால் எந்த பிரச்சனையும் இல்லை. அதாவது கனடாவில் லைசென்ஸ் வகைகளில் ஜி லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மது அருந்தியிருந்தாலும் வாகனத்தை ஓட்டலாம், இல்லையென்றால் அங்கிருக்கும் போலீஸிடம் மாட்டிக் கொள்வார்கள்.
காரை ஸ்டார்ட் செய்த வினோத் வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்க, டிரைவர் சீட் அருகே சீட்டை நன்றாக பின்னே இறக்கிவிட்டு சாய்ந்து அமர்ந்திருந்த நளனின் கண்கள் வெளியே தெரிந்த வானத்தை வெறித்தது.
காரினுள் அமைதி நிலவ அதை குலைக்கும் வண்ணம் “நான் சொன்னேன்ல டா என்னால முடியாதுன்னு, நீ தான் கேக்கலை, என்னால அவளை இன்னும் மறக்க முடியலை டா, இங்க இங்க இருந்து என்ன சாவடிக்கிறா” என்றான் வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு, அவன் தலையிலும் நெஞ்சிலும் கைவைத்து…
நண்பனின் நிலையை ஏற்கனவே உணர்ந்திருந்த வினோத்தும் “சரி விடு நளா, யாருக்கும் எதையும் மறக்க கொஞ்ச நாள் தேவைப்படும், உனக்கு இன்னும் கொஞ்சம் அதிக நாள் தேவைப்படும் போல” என்றான்.
“இல்லை வினோ, என்னால எப்பவுமே என்னோட ஹனிய மறக்க முடியாது, என்னோட உயிர் என்னை விட்டு போனால் தான் அது நடக்கும்” என்றான் வானில் தெரிந்த நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டு அழுத்தமாக.
“உண்மை தான் – ஒருவன்
உணர்வுகளில் வாழ ஆரம்பிப்பது
உண்மையான காதலில் தான்!
நானோ! அவளிடம்
காதல் வயப்பட்டேனா! (இல்லை)
அவளை நேசித்தேனா! (இல்லை)
அவளுடன் அன்புவயப்பட்டேனா!
(இல்லை)
என்னால் கூற இயலவில்லையா?
அறியவில்லை!
- உன்முன் – ஏன்?
உன்னுள் என்னின்
ஆழ்கடலின் சந்தோஷத்தில்
ஏற்றிச் செல்கிறாய்? …”
இந்த நாவலை ஆடியோ வடிவில் நீங்கள் கேட்க விரும்பினால் உங்களுக்காக லிங்க் https://www.youtube.com/@SofiRanjithNovels