“கார்த்தி” என்றதுமே திரும்பிப் பார்த்தாள்.
“ஹப்பா வந்துட்டியா.. வீடு பூட்டி இருக்கே.. நான் வர்ரேன்னு சொன்னதும் ஓடிட்டாளோனு நினைச்சேன்”
“ஏய்.. அப்படியெல்லாம் ஓட மாட்டேன். பக்கத்துல வாக் போயிருந்தேன்” என்றவள், வீட்டைத்திறந்து உள்ளே சென்றாள்.
உள்ளே வந்த கார்த்திகை, அப்போது தான் வருணிகாவை கவனித்தாள்.
“ஹேய்.. ப்ரக்ணண்ட்டா இருக்கியா? கன்க்ராட்ஸ்டா” என்று கூறி அணைத்துக் கொள்ள வருணிகா புன்னகைத்தாள்.
“செம்ம.. எத்தனை மாசம்?”
“மூணு தான் முடியப்போகுது..”
“செம்மடா…”
“சரி உட்காரு. டீ போட்டு கொண்டு வரவா?”
“ம்ம்.. நானும் வர்ரேன்.”
தோழிகள் இருவரும் பொதுவாய் சில விசயங்களை பேசியபடி, தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து அமர்ந்தனர்.
தேனீரை குடித்து முடிக்கும் வரை, கார்த்திகை எதெதோ பேசினாள். குடித்து முடித்ததும், தோழியின் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
“உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் வருணி”
“என்ன விசயம்?”
“உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்கார்?”
“இது தான் முக்கியமான விசயமா? நல்லா இருக்காரு”
“சந்திரா உன் ஃப்ரண்ட் தான?”
“என்ன கேள்வி இது?”
“சந்திரா கிட்ட இப்பவும் பேசுறியா?”
“ம்ம். பேசுவேனே. அப்போ அப்போ பேசுவேன்”
“ஓ..”
“ஏன்?”
“உன் கிட்ட ஒன்னு சொல்லனும். ஆனா நீ இருக்க நிலைமை தான்…”
“என்ன இழுக்குற? என் நிலைமைக்கு என்ன?”
“ஓகே. இவ்வளவு தூரம் வந்துட்டு சொல்லாம போக எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல”
தீர்க்கமான முடிவை எடுத்தவள், தன் கைபேசியை எடுத்து வருணிகாவின் கையில் கொடுத்தாள்.
அதை யோசனையாக வாங்கிப்பார்த்தாள். பார்த்தவள் கண்கள் விரிந்தது. அதில் சில படங்கள் இருந்தது.
ஹரிஹரனும் சந்திராவும் ஒரு இடத்தில் அமர்ந்து, ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் ஒரு படம். அடுத்தது, அவர்கள் இருவரும் கை கோர்த்து, சாலையை கடப்பது போன்று. அடுத்தது, இருவரும் சினிமா தியேட்டருக்குள் சிரித்தபடி நுழைவது. கடைசியாக இருவரும் பேசியபடி நடந்து செல்வது.
கடைசியில் ஒரு கானொளியை இயக்கினாள். அதில், இருவரும் சாப்பிட்டு விட்டு, பில் கட்டி விட்டு, சிரித்து பேசியபடி கிளம்பினர். அந்த ஹோட்டலுக்கு வெளியே சென்றதும், இயல்பாக சந்திரா அவனது கையைப்பிடித்துக் கொண்டு நடக்க, அவனும் சிரித்தபடி எதோ சொல்லிக் கொண்டே, சற்று தூரம் நடந்தனர். இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறும் வரை கானொளி இருந்தது.
இமை சிமிட்ட மறந்து, அப்படியே அமர்ந்து விட்டாள் வருணிகா. அவளது முக பாவனையை கவனித்த கார்த்திகை, தண்ணீரை எடுத்து வந்தாள். அவள் கையில் இருந்த கைபேசியை பறித்துக் கொண்டு, தண்ணீரைக் கொடுத்தாள்.
அதிர்ச்சியில் இருந்தவள், தண்ணீரை குடித்தப்பின்பு தான் தெளிந்தாள். படபடக்கும் இதயத்தோடு கார்த்திகையை திரும்பிப் பார்த்தாள்.
“ரிலாக்ஸ் வருணி. இந்த மாதிரி நேரத்துல ஓவரா ஸ்ரெஸ் எடுத்துக்க கூடாது. பேபிக்கு நல்லது இல்ல.”
அவள் தோழியை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளது அதிர்ந்த முகமும் நடுங்கிய கைகளையும் பார்த்த கார்த்திகை, வேகமாக அணைத்துக் கொண்டு, முதுகை தடவிக் கொடுத்தாள்.
“ரிலாக்ஸ் ரிலாக்ஸ்..” என்று மெதுவாக தடவிக் கொடுத்தாள்.
தோழி கோபப்பட்டு கத்தி இருந்தாலோ, அல்லது அழுதிருந்தாலோ கூட கார்த்திகை சாதாரணமாக கடந்து இருப்பாள். இப்படி அதிர்ந்து போய் அமர்ந்து இருப்பவளை பார்க்க, பாவமாக இருந்தது. ஆனால், விசயம் பெரியது. அதைச்சொல்லாமல் விட்டால், பின்னால் அவளை குற்ற உணர்வே கொன்று விடும்.
“சாரி வருணி. எனக்கு வேற வழி தெரியல. உன் கிட்ட இதை பத்தி சொல்லாம போனா.. பின்னாடி இது எவ்வளவு பெரிய பிரச்சனையில வந்து முடியும்னு தெரியாது. சாரி”
கார்த்திகை மன்னிப்பு கேட்டு பேசிய பிறகே, வருணிகா அதிர்ச்சியிலிருந்து வெளி வந்தாள். கண்களில் கண்ணீர் கோர்க்க விலகினாள்.
“இது எங்க… எங்க எடுத்தது?”
“பெங்களூர்ல.”
வருணிகா, அவள் கையிலிருந்த கைபேசியை பார்த்தாள். கண்ணீர் கண்ணை தாண்டி உருண்டது.
“தினமும் ஊர் சுத்தி இருக்காங்க இல்ல?”
தழுதழுத்த குரலில் கேட்டாள்.
“ம்ம்.. நான் பெங்களூர்ல தான் இப்போ இருக்கேன். எனக்கு அங்க தான் வேலை. உன் ஹஸ்பண்ட்டயும் சந்திராவையும் பர்ஸ்ட் டைம் பார்க்கும் போதே, எதோ தப்பா தெரிஞ்சது. அதான் போட்டோ எடுத்தேன். நிறைய இடத்துல அவங்கள பார்க்கவும், சந்தேகம் பெருசாகிடுச்சு. அப்பவும், போட்டோ பொய், மார்ஃபிங்னு சொல்லிடுவாங்களோனு விடியோ எடுத்தேன். இத உடனே உனக்கு அனுப்பலாம்னு இருந்தேன். பட் நேர்ல பேசிக்கலாம்னு தோனுச்சு. நேத்து தான் ஒரு ஃபேமிலி பங்சன்காக இங்க வந்தேன். உன்னை மதுரைக்கு வந்து பார்க்கனும்னு இருந்தேன். நீ சென்னையிலயே இருக்க”
“…..”
“உனக்குத்தெரியுமா? சந்திராவும் உன் ஹஸ்பண்ட்டும் பழகுறது?”
வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு, மறுப்பாக தலையசைத்தாள். அழுகையை அடக்குகிறாள் என்று கார்த்திகைக்கும் புரிந்தது.
வருணியை தோளோடு அணைத்துக் கொண்டாள்.
“இந்த போட்டோஸ் மட்டும் வச்சு, அவங்கள தப்பா நினைக்கனும்னு நானும் சொல்ல மாட்டேன். நீ பேசிப்பாரு. எந்த பிரச்சனையும் இல்லனா, நான் முதல்ல வந்து உன் ஹஸ்பண்ட் கிட்ட மன்னிப்பு கேட்குறேன்”
“இது… இது அப்படித்தான் இருக்கு. வெறும் ஃப்ரண்ட்டா தோணல” என்று கதறும் குரலில் வருணிகா சொல்ல, கார்த்திகையின் கண்கள் கலங்கி விட்டது.
தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு, தோழியை தேற்றினாள்.
“இத நாம நல்லதா யோசிப்போம் வருணி. எதுக்கும் பேசிப்பாரேன்”
“அப்போ நீ ஏன் நல்லதா யோசிக்கல?”
“அது…”
“இன்னும் எதாச்சும் இருக்கா? இருந்தா இப்பவே சொல்லிடு. இதுக்கு மேல எதையும் மறைச்சு என்ன ஆக போகுது?”
“வருணி..”
“சொல்லு.. சொல்லிடு கார்த்தி”
பார்வையை தழைத்தவள், “அவங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்டேன்” என்றாள்.
“என்ன பேசுனாங்க?”
“அது..”
“சொல்லிடு”
“நீங்க வந்தப்புறம் தான், வாழ்க்கையோட நல்ல பக்கங்கள பார்க்குறேன்னு சந்திரா சொன்னா. அதுக்கு… அதுக்கு உன் ஹஸ்பண்ட்.. உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன்னு சொல்லிட்டு….”
“சொல்லிட்டு?”
“கையைப்படிச்சு நெஞ்சுல வச்சுக்கிட்டாரு”
வருணிகா இடிந்து போனாள்.
‘இன்னொரு பெண்ணிடம், உனக்கு எல்லாமுமாக நான் இருப்பேன் என்று, திருணமான ஒருவன் சொல்வலு தவறல்லவா?’
‘அப்படியென்றால் நான் ஏமாந்து விட்டேனா? இல்லை ஏமாற்றப்பட்டேனா?’
ஹரிஹரன் பெங்களூர் சென்று வந்து, இத்தனை நாட்கள் ஆகிறது. இப்படி ஒரு விசயத்தை பற்றிச் சொல்லவே இல்லையே?
சந்திரா கூட, இடையில் ஒரு நாள் நலம் விசாரிப்பது போல் பேசினாளே..? மேனகாவின் பேச்சைக்கேட்டு, அவளிடம் சரியாக எதற்கும் பதில் சொல்லாமல் விட்டாளே. அப்போது கூட, உன் கணவனை எனக்குத் தெரியும் என்று சொல்லவில்லையே..?
“வருணி..” என்று கார்த்திகை அழைத்ததும், அழுத கண்ணோடு நிமிர்ந்து பார்த்தாள்.
“உன் வீட்டுல இருக்கவங்க கிட்ட சொல்லிடலாமா?”
“வேணாம். வேணாம் இது யாருக்கும் தெரிய வேணாம்.”
“…”
“நான் இதுல என்ன இருக்குனு கண்டு பிடிக்கிறேன். தெரிஞ்சுக்கிறேன். இது என் கண்ணுக்கும் உன் கண்ணுக்கும் தப்பானதா இருந்து, அவங்க மனசு சுத்தமா இருந்தா வீணா அவங்க பேர கெடுத்த மாதிரி ஆகிடும். ஒரு வேளை.. இது.. இது உண்மையா இருந்தா, எல்லாரும் கஷ்டப்படுவாங்க. உடனே சொல்லி அவங்கள நோகடிக்கவும் தோணல. நான் பார்த்துக்கிறேன்”
“நான் இருக்கேன் வருணி. நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். சந்திராவ கூப்பிட்டு என்னனு கேட்போம். அதுக்கு முன்னாடி உன் ஹஸ்பண்ட் கிட்ட பேசு. அப்புறம் முடிவு பண்ணலாம்”
வருணிகா தலையாட்டும் போது, கார்த்திகையின் கைபேசி இசைத்தது.
“ம்மா.. கிளம்பிட்டேன். ம்ம்” என்றவள் வருணிகாவை பார்த்தாள்.
“சரி நீ கிளம்பு. லேட் ஆகிடுச்சு. ட்ராஃபிக்ல மாட்டிக்காம போ”
“உன்னை தனியா விட்டு..”
“பார்த்துக்குவேன். நீ கிளம்பு லேட் ஆகிடுச்சு பாரு” என்று கார்த்திகையை அனுப்பி வைத்தாள்.
தனியாக அமர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது. கதவை பூட்டிக் கொண்டவள், அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். பார்த்த ஒவ்வொரு படமும், கண்ணில் வந்து போனது. எதுவுமே, இருவரும் வெறும் நண்பர்கள் என்று சொல்வது போல் இல்லை.
அதோடு ஹரிஹரனுக்குத் தான் சந்திராவை தெரியாது. சந்திராவுக்கு ஹரிஹரன் தன்னுடைய கணவன் என்று தெரியுமே. பிறகு ஏன் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட இருவரும் பேசவில்லை?
எல்லாவற்றையும் நினைத்து அழுது, சோபாவிலேயே தூங்கி விட்டாள். யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்க, தூக்கம் கலைந்து எழுந்தாள்.
ஹரிஹரன் தான், தன்னிடம் இருந்த இன்னொரு சாவியால் திறந்து உள்ளே வந்தான்.
அவனை பார்த்ததும், மறந்து போன எல்லாம் நினைவு வந்தது. எழுந்து அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்தாள்.
வருணிகா சோபாவில் இருப்பதை பார்த்து விட்டு, ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்றான். உடையை மாற்றிக் கொண்டவன், எதுவும் பேசாமல் படுத்து விட்டான்.
அவனது செய்கையை வேடிக்கை பார்த்தவள், எழுந்து செல்லவில்லை. அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தாள். பிறகு எழுந்து சென்று, அறைக்குள் இருந்த சிறிய மெத்தை போர்வையை எடுத்துக் கொண்டு, அருகே இருக்கும் அறைக்குச் சென்று விட்டாள். அவளது செய்கையை அவன் கவனிக்கிறான் என்று தெரிந்தாலும், அவள் தயங்கவில்லை.
பக்கத்து அறை சுத்தமாக தான் இருக்கும். அனுராதாவோ சொந்தங்களோ வந்தால் தங்குவதற்காக சுத்தமாகவே வைத்து இருந்தாள். அங்கே சென்று படுத்தவள், பல யோசனைகளில் இருந்தாள்.
இப்போது இருக்கும் நிலையில், இதைப் பேச அவளுக்கு விருப்பமில்லை. ஏற்கனவே சில நாட்களாக, தொட்டதற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுகிறாள். இதிலும் உணர்ச்சிவசப்பட்டு, எதையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது.
அது சரியோ தவறோ, பொறுமையாகவே விசயத்தை கையாள வேண்டும். தனக்கு பொறுமை வரும் வரை, அமைதி காக்க முடிவு செய்தாள்.
என்ன தான் அவள் தெளிவாக யோசித்தாலும், கண்ணீர் வரத்தான் செய்தது. இதை எப்படிக் கையாள்வது என்றே புரியவில்லை. மனம் ஊமையாய் அழுது வடிந்தது. மீண்டும் தாமதமாக தூங்கி தாமதமாகவே எழுந்தாள்.
ஹரிஹரன் இன்றும் இல்லை. பெருமூச்சோடு தன்னை தன் வேலையை கவனித்தாள். இன்று மாதாந்திர பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். தனியாகவே கிளம்பினாள்.
மருத்துவர் முழுமையாக பரிசோதித்தார்.
“குழந்தை நல்லா இருக்கு. உங்க பிபி தான் கூடி இருக்கு. சுகர் லெவல் இப்போ பிரச்சனை இல்ல. ஆனா, இதுக்கு மேல கூடிடக் கூடாது. டயட் கரெக்ட்டா மெயின்ட்டைன் பண்ணுங்க”
மருத்துவரின் அறிவுரையை காதில் வாங்கிக் கொண்டாள்.
“டாக்டர்.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”
“சொல்லுங்க”
“எங்க குடும்பத்துல ஒரு பிரச்சனை. யார் கிட்டயும் மனசு விட்டு பேச முடியல. ஒரு சைக்காலஜி டாக்டர் கிட்ட ரெகமண்ட் பண்ண முடியுமா?”
அவளது கோரிக்கையை கேட்டவர், ஆழ்ந்து பார்த்தார். அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை. முதல் முறை குழந்தை உண்டாகும் போது இருந்த சந்தோசம் எதுவும், இப்போது இல்லை. அவளாகவே மனநல மருத்துவரை பார்க்க விரும்பிகிறாள். அதில் தவறேதும் தோன்றாததால், பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.
அடுத்த நாளும் வருணிகாவிற்கு மௌனமாகவே கழிந்தது. மறுநாள் மனநல மருத்துவரிடம் சென்றாள். அங்கு சென்று மருத்துவரிடம் மனம் விட்டுப் பேசினாள். அடிக்கடி தோன்றும் அழுகை, இயலாமை எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள். அவரும் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்தார்.
கணவனிடம் பேச தயங்கி தள்ளிப்போடுவதையும் கூறினாள். அதற்கும் அவர் வழி சொல்லிக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
மனம் விட்டு பேசியதாலோ என்னவோ, அவளது முகத்தில் தெளிவு வந்திருந்தது. நாட்களை மௌனமாக கடக்க ஆரம்பித்தாள்.
அடுத்த மாதம் சாரதாவிற்கு டெலிவரி தேதி கொடுத்திருக்கின்றனர். அதைப் பற்றி அனுராதாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, தெவ்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
காண்ஃப்ரன்சில் போட்டு விட்டாள்.
“என்ன சித்தி.. கலையிலயே போன்?”
“வருணி.. நீ அத்தையாக போறடா. மேனகா மாசமா இருக்கா”
தெய்வாவின் குரலில் துள்ளல் தெரிய, இங்கே வருணிகாவிற்கு சந்தோசம் தாங்கவில்லை.
“வாவ்.. அண்ணிய கூப்பிடுங்க சித்தி”
“இப்ப தான் கோவிலுக்குப்போயிட்டு வாங்கனு அனுப்பி இருக்கேன் வருணி. நடை சாத்துறதுக்குள்ள போயிட்டு வர்ரோம்னு போயிருக்காங்க. வந்ததும் பேசுவா”
“வாழ்த்துக்கள் சம்பந்தி” என்று அனுராதாவும் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“சாரதா பிள்ளை பிறந்ததும் அடுத்து வருணிக்கு. அதுக்கடுத்து மேனகாவுக்கு. வரிசையா நமக்கு வேலை இருக்கு சம்பந்தி. பிள்ளைங்கள வளர்த்தாச்சு. இனி பேரப்பிள்ளைங்கல வளர்ப்போம்”
சந்தோசமாய் அவர் அலுத்துக் கொள்ள, எல்லோரும் நிம்மதியாக சிரித்தனர்.
அடுத்தடுத்த நாட்கள் வருணிகா கணவரிடம் பேசவில்லை. அவனுக்கு சமைக்கவும் இல்லை. அவன் வீட்டில் சாப்பிடவும் இல்லை. அதைப் பற்றி ஒரு கேள்வியும் அவள் கேட்கவில்லை. தனக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டு, நாட்களை ஓட்டினாள்.
அவளது குழந்தைக்காக, அவள் தைரியமாக இருந்தாள். பின்னால் மறைந்து இருப்பது பாம்பாக இருந்தாலும் சரி, பழுதாக இருந்தாலும் சரி. அதை நினைத்து குழந்தையை விட மனமில்லை.
முடிந்த வரை வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல், அக்கம் பக்கத்தினருடன் பேசினாள். காலையும் மாலையும் நடை பயிற்சியை மறக்காமல் செய்தாள். சரியான உணவுகளை எல்லாம் உண்டாள்.
ஆனால், மனம் மட்டும் உளவியல் மருத்துவர் கொடுத்த விளக்கங்கள், தீர்வுகளிலேயே இருந்தது.
இதோ அதோ என்று நாட்களும் கடந்து செல்ல, ஒன்பதாவது மாத முடிவில், மருத்துவர் சொன்ன தேதியிலேயே, சாரதாவிற்கு பேற்று வலி வந்தது. மருத்துவமனையில் அட்மிட் ஆக கிளம்பிக்கொண்டிருந்தவர்கள் பேற்று வலியில் உடனே கிளம்பினர்.
உடனே மருத்துவமனையில் அனுமதித்து, சில மணி நேரங்களில் பெண் குழந்தையை பெற்று எடுத்தாள் சாரதா..
சென்னையிலிருந்து, வருணிகாவும் ஹரிஹரனும் முதலிலேயே கிளம்பி விட்டனர். அதனால் அவர்கள் வந்து சேர்ந்ததும், பிள்ளை அவர்கள் கையில் கொடுக்கப்பட்டது.
வருணிகா பிள்ளையை வாங்கிக் கொஞ்சினாள். சாரதாவை உரித்து வைத்து இருந்தாள் குழந்தை.
வருணிகாவே குழந்தையின் கழுத்தில் தங்கத்தில் செயின் போட்டு விட, “என்ன அண்ணி வெறும் செயினா? தோடு மோதிரம்னு நிறைய வாங்கிட்டு வருவீங்கனு பார்த்தனே” என்று சாரதா கிண்டல் பேசினாள்.
“பொண்ணுனு தெரியாதுல.. அதான் செயின். இப்போ பாப்பா வந்தாச்சுல.. பாரு.. உனக்கு உங்கம்மா கொடுக்காத சீர எல்லாம், என் மருமகளுக்கு நான் கொடுக்குறேன். பார்த்து கண்ணு வச்சுடாத”
“அடேங்கப்பா..”
சாரதா சிரிக்க, வருணிகாவும் சிரித்தாள்.
அனுராதா கூட இன்னும் பிள்ளைக்கு என்று எதுவும் வாங்கவில்லை. வாங்கக்கூடாது என்ற ஐதீகம் தான் அவரை கட்டிப்போட்டிருந்தது.
ஆனால் ஊரில் இருந்து வரும் போதே, செயினை வாங்கி வந்து போட்ட மகன் மருமகளை மெச்சிக் கொண்டார். இது, சாரதாவின் புகுந்த வீட்டில் காலத்துக்கும் பேசப்படும் ஒன்றல்லவா?
அவர் திருப்தியாய் மகனை பார்த்து புன்னகைக்க, அவன் தான் சங்கடப்பட்டுப்போனான். இந்த செயின் எப்படி வந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை. வருணிகா எப்போது வாங்கினாள் என்றே தெரியாத போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு அந்த பாராட்டை ஏற்றுக் கொள்வது?
வருணிகாவிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். இரண்டு நாட்கள் அங்கே இருந்து விட்டு, சாரதா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
வருணிகாவும் ஹரிஹரனும் கிளம்ப, “புள்ளையோட அலைய வைக்காத ஹரி. பேசாம நீ மட்டும் கிளம்பு. இவ இங்க இடுக்கட்டும்” என்றார் அனுராதா.
“இல்ல அத்த. ரெகுலர் செக் அப் போகனும். அங்க தான் சரி. வளைகாப்பு முடிஞ்சா தேனியில தான இருக்கப்போறேன். அப்போ பார்த்துக்கலாம்”
வருணிகா பேசி சமாளித்துக் கிளம்பி விட்டாள்.