Loading

 

 

அடுத்த ஒரு வாரம் அவளுக்கு இதே சிந்தனை தான் ஓடியது. சரியாக சாப்பிடுவது உடலை பேணுவது என்று, எல்லாம் மேனகாவின் அதட்டலில் நடந்தது தான். ஆனால் மனம் மட்டும் இதே விசயத்தை யோசித்துக் கொண்டிருந்தது.

 

ஹரிஹரன் வேறு, ஒரு வாரத்திற்கு பெங்களுர் செல்வதாக சொல்லிவிட்டு இரண்டு வாரமாக பெங்களூரில் இருந்தான். அவனோடு பேசவும் முடியவில்லை.

 

விசயத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணிக்க ஆரம்பித்து இருந்தாள். முன்னால் நடந்தவைகளை, மேனகா சொன்னதோடு ஒப்பிட்டுப்பார்த்தாள். கிட்டத்தட்ட பொருந்தியது.

 

அவளது முக்கியமான நோட்டுக்கள் எல்லாம் தொலைந்து போகத் தான் செய்தது. அதன் பிறகே, எதையும் நோட்டில் வைக்கும் பழக்கம் இல்லாமல், எல்லாவற்றையும் அறிவில் ஏற்றிக் கொண்டாள். மனதில் இருப்பது தொலையாது என்று தீவிரமாக படித்து விடுவாள்.

 

அதன் பிறகு நோட்டுக்கள் தொலைந்து போனாலும், அவள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. சில வருடங்களில், தொலைந்து போவதும் நின்று விட்டது. இதெற்கெல்லாம் சந்திரா தான் காரணமா?

 

அடுத்து அந்த படிப்பையும், அவள் படிக்காமல் கெடுக்க, ஆயிரம் வழி சந்திரா சொன்னது இப்போது புரிந்தது.

 

பள்ளியில் படிக்கும் போது, பொது தேர்விற்கு தயாராகும் நேரம், “சினிமாவுக்கு போகலாம்” என்று வற்புறுத்துவாள்.

 

அதற்கு வருணிகா மசியவில்லை என்பதால், ஒரு வாரத்திற்கு பேசவில்லை. வருணிகாவோ.. ஏதோ தோழியின் சாதாரண கோபம். பிறகு பார்க்கலாம் என்று பரிட்சையில் மூழ்கி விட்டாள். அது போல் தான் அடுத்த முறையும் நடந்தது. இம்முறை சினிமா விட்டு, அவளது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அழைத்தாள்.

 

அங்கு செல்ல வருணிகாவிற்குக் கூட ஆசை வந்தது. ஆனால், தெய்வா அனுப்ப முடியாது என்று மறுத்து விட்டார். எவ்வளவு கெஞ்சியும் அவர் மசியவில்லை. சித்தியை மீறும் தைரியம் எல்லாம் வருணிகாவிற்கு இருந்தது இல்லை. அதனால் முதலில் சோகமாக இருந்தாலும், பிறகு பரிட்சையில் மூழ்கி மற்றதை மறந்து விட்டாள்.

 

அது எல்லாம் இப்போது நினைவு வந்து, ஒன்றோடு ஒன்று பொருந்தி, விளங்காத, புரியாத பல விசயங்களுக்கு அர்த்தம் கொடுத்தது.

 

கல்லூரியில் கூட, சந்திராவின் உறவு முறையில் ஒரு பையன் வந்து, வருணிகாவின் மேல் காதல் அது இது என்று உளறி, அதற்கு சந்திராவும் ஆதரவு தெரிவித்தாள்.

 

வருணிகா தான், “இது எல்லாம் பிடிக்காது. இப்படி நடந்து கொண்டால் வீட்டில் சொல்லி விடுவேன்” என்று மிரட்டி இருந்தாள்.

 

எல்லாமே திட்ட மிட்ட சதியா? அல்லது இப்படித் தான் என்று நினைத்துப் பார்ப்பதால், அப்படித் தெரிகிறதா?

 

எதுவும் விளங்காமல் இருந்தாலும், சிறிதளவு தெளிவு வந்தது. இனி சந்திராவிடம் ஒரு கவனத்தை கொண்டு வர வேண்டும். அவள் அப்படி இல்லாத பட்சத்தில், பிரச்சனை இல்லை. இருந்தால் விலகிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

 

வருணிகா, இங்கு முடிவு செய்யும் முன், காலம் கடந்து இருந்ததை அறிந்தால்?

 

அடுத்த நாட்கள் எல்லாம் ஓடிப்போக, சாரதாவிற்கு வளைகாப்பு ஏற்பாடு நடந்தது. வருணிகா முதலிலேயே மதுரை சென்று விட, மற்றவர்கள் ஒரு நாள் முன்பு வந்து சேர்ந்தனர்.

 

ஹரிஹரனும் ஒரு நாள் முன்பு தான் வந்தான். வளைகாப்பு விழா நல்ல முறையில் நடந்தது. மேனகாவை அமர வைத்து, அவளுக்கு வளையல் பூட்டினர்.

 

அவளுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. குழந்தை பேறு தள்ளி போய்க்கொண்டிருக்கிறது. அதை யாரும் பெரிதாகவும் நினைக்கவில்லை. இரண்டு வருடங்கள் தானே என்று விட்டு விட்டனர். 

 

மேனகாவும் பூபதியும், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனை சென்று சோதித்துப் பார்த்தனர். இருவருக்கும் பிரச்சனை இல்லை. இயற்கையாகவே குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் என்று கூறி இருந்தார் மருத்துவர்.

 

வளைகாப்பு விழா நல்லபடியாக முடிந்து விட, ஹரிஹரன் மட்டும் சென்னை கிளம்பினான் வேலை இருக்கிறது என்று.

 

‘இன்னும் சில நாட்கள் வருணிகா இங்கு தங்கி விட்டு வரட்டும். அடுத்த மாத மருத்துவ பரிசோதனைக்கு வந்து அழைத்துச் செல்வதாக கூறி விட, எல்லோருக்குமே சந்தோசம் தான்.’

 

வருணிகா மேலும் இரண்டு வாரங்கள் மதுரையிலும் தேனியிலும் இருந்து விட்டு, சென்னை கிளம்பினாள். ஹரிஹரனால் வர முடியவில்லை. அதனால், அனுராதாவும் ஏகாம்பரமும் தான் கிளம்பினர். சாரதாவுக்கு துணையாக நகுல் வந்து தங்கி இருந்தான்.

 

மூன்றாம் மாதம் குழந்தையின் வளர்ச்சியில், வருணிகாவின் வயிறு லேசாக உப்பி இருந்தது. அதை பாதுகாப்பாய் பிடித்துக் கொண்டே, சென்னை சென்று சேர்ந்தாள். அங்கு அவளை விட்டு விட்டு, ஒரே நாளில் பெரியவர்கள் திரும்பி விட்டனர்.

 

அன்று இரவு ஹரிஹரனிடம் ஒன்றும் பேசவில்லை. அடுத்த நாள் விடுமுறை.

 

ஹரிஹரன் எங்கோ கிளம்பிக் கொண்டிருக்க, “எங்க கிளம்பிட்டீங்க? இன்னைக்கு லீவ் தான?” என்று வந்து நின்றாள்.

 

“ப்ச்ச்”

 

“என்ன?”

 

“உனக்கு எதுக்கு அது? உன் வேலையைப் பாரு”

 

“ஒரு நிமிஷம் நில்லுங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?”

 

“பிரச்சனையா?”

 

“ஆமா பிரச்சனை தான். குழந்தை உண்டாகி இருக்கேன்னு தெரிஞ்சதுல இருந்து, நீங்க என் கிட்ட சரியா பேசுறது கூட இல்ல. உங்களுக்கு இது பிடிக்கலையா? நம்ம குழந்தை உங்களுக்கு வேணாமா?”

 

கண்கலங்கி கண்ணீர் வடியக் கேட்டாள். எதற்காக இந்த கண்ணீர் என்று, அவளுக்கே புரியவில்லை. அவளது ஹார்மோன் சுரப்பிகள் செய்யும் பாடு.

 

“இப்ப எதுக்கு சீன் போட்டுட்டு இருக்க நீ?”

 

“சீனா?”

 

“ஆமா. சும்மா கண்ண கசக்கிக்கிட்டு.. போய் வேற வேலை இருந்தா பாரு”

 

“ம்ஹும்.. மாட்டேன். உங்களுக்கு எதோ பிரச்சனை. அது என்னனு சொல்லுங்க. நான் எதாவது தப்பு பண்ணிட்டனா? ஏன் என் கிட்ட பேசக்கூட மாட்டேங்குறீங்க?”

 

“ஏய்.. இப்ப என்னங்குற? ஆமா பிரச்சனை தான். என் பிரச்சனையே நீ தான். உன்னை ஏன்டா கல்யாணம் பண்ணேன்னு இருக்கு. ஏமாத்துக்காரிய கல்யாணம் பண்ணிட்டேனேனு கடுப்பா இருக்கு. உன் மூஞ்சிய பார்க்கவே பிடிக்கல. இங்க இல்லாதப்போ நிம்மதியா இருந்தேன்‌. வந்துட்டா உசுர வாங்க. ச்சே”

 

கத்தி விட்டு, அவளது அதிர்ந்த முகத்தை கூட பார்க்காமல் வெளியேறி விட்டான்.

 

வருணிகா அப்படியே சில நிமிடங்கள் நின்று விட்டாள்.

 

‘என்ன பழி இது? எதற்காக இந்த பழி?’

 

எவ்வளவு யோசித்தும் பதில் கிடைக்காமல் போக, அவனிடமே கேட்க நினைத்து பார்க்க, அவன் அங்கு இல்லை. வேகமாக கைபேசியை எடுத்து அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவில்லை.

 

காரணமில்லாமல் கணவன் கொண்ட கோபத்துக்கு, எதற்கென்றே தெரியாமல் அவளும் அழுது கரைந்தாள். இது வரை இருவருக்குள்ளும் சண்டை என்று வந்தது இல்லை. இது தான் முதன் முதலாக அவன் கோபப்படும் தருணம். முதல் சண்டையில் எல்லாமே முடிந்து விட்டதாக தோன்றியது.

 

அரை மணி நேரம் அழுது ஓய்ந்த பின்பு, அவளாகவே தெளிந்து வேலைகளை பார்த்தாள். இது தான் பலரின் வாழ்க்கை. துக்கப்பட்டால் தேற்ற ஆள் இருக்காது. அழும் வரை அழுதுவிட்டு, தானே தன்னை தேற்றிக் கொள்ள வேண்டும்.

 

அப்படித்தான் வருணிகாவும் அமைதியாகி வேலையை பார்த்தாள். அன்று முழுவதும், கணவன் பேசிய வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அர்த்தம், அடுத்த நாள் அவள் கேட்காத, எதிர் பார்க்காத இடத்திலிருந்து வந்தது.

 

அன்றைய இரவு அவன் வந்ததும் சாப்பிடாமல் படுக்கச் செல்ல, வருணிகாவிற்கு தாங்கவில்லை. ‘கோபமாக இருந்தாலும் பட்னியாக இருப்பது தவறல்லவா?’

 

“சாப்பிட்டு படுங்க” என்றதற்கு அவனிடம் பதில் இல்லை.

 

“உங்கள தான். சாப்பிட்டு வந்து படுங்க. எடுத்து வச்சுட்டேன்”

 

வேகமாக அவள் பக்கம் திரும்பியவன், அவள் வயிற்றை பார்த்து விட்டு ஒரு நொடி நிதானித்தான்.

 

“நீ சாப்பிட்டியா?”

 

“ம்ம்”

 

“அப்போ தூங்கு”

 

“உங்களுக்கு?”

 

“வேணாம். வெளிய சாப்பிட்டுட்டு தான் வந்தேன்”

 

“நான் இல்லாதப்போ வெளிய சாப்பிட்டீங்க. இப்பவும் அப்படி ஏன் சாப்பிடுறீங்க? உடம்பு கெட்டுப்போகும்”

 

“உன் அக்கறைக்கு நன்றி. மனுசன நிம்மதியா விடு. இல்லனா வீட்டுக்கே வராம போயிடுவேன்”

 

பல்லைக் கடித்துக் கொண்டு பேசியவன், வேகமாக புரண்டு படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.

 

மீண்டும் ஒரு அதிர்ச்சி.

 

‘வீட்டுக்கு வர மாட்டானா? ஏன்? அதற்குள் நானும் திருமண வாழ்வும் இவனுக்கு வெறுத்து விட்டதா? எதற்காக இந்த அலட்சியம்? அப்படி என்ன தவறைச் செய்தாள்?’

 

“நீங்க பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல” என்று கோபமாக பேச தான6 நினைத்தாள்.

 

ஆனால், அவளது கட்டுப்பாட்டை மீறி குரல் உடைந்தது.

 

‘ச்சே.. இப்போ எல்லாம் எல்லாத்துக்கும் அழுகை வருது. நான் இவ்வளவு வீக் இல்லையே’ என்று அவளை அவளே திட்டிக் கொண்டாள்.

 

இது அவளது தவறில்லையே. அவளது உடலில் வரும் மாற்றங்கள். அதை அனுசரித்து பாதுக்காக்க வேண்டியவன் தான், அதோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். தைரியமான அவளையும் சூழ்நிலை கண்ணீர் சிந்த வைத்து விட்டது. அதைப் பார்த்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

 

“இந்த பொம்பளைங்களே இப்படித்தான். அழுது காரியம் சாதிக்கிறது”

 

“அப்படி எத்தனை பேர பார்த்தீங்க? பொம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லுறீங்க?”

 

“நீ அழுறத நிறுத்திட்டு பேசுறியா? இப்படி அழுதுக்கிட்டே பேசுனா, என்னமோ நான் தான்‌உன்னை கொடுமை படுத்தி அழ வைக்கிற மாதிரி இருக்கு”

 

“ஆமா.‌ கொடுமை தான் பண்ணுறீங்க. உங்களுக்கு என் மேல கோபம்னா என்னனு நேரா சொல்லனும். மூஞ்சிய கூட பார்க்காம, எதுவும் சொல்லாம உங்க இஷ்டத்துக்கு போவீங்க வருவீங்க. கேட்டா எரிஞ்சு விழுவீங்க. வீட்டுக்கே வர மாட்டேன்னு சொல்லுவீங்க. நான் அமைதியா வேடிக்கை பார்க்கனுமா? இதே மாதிரி நானும் என் இஷ்டத்துக்கு போயிட்டு வந்தா, சும்மா இருப்பீங்களா?”

 

கண்ணீர் வழிந்து தொண்டை அடைத்த போதும், மனதில் தோன்றியதை கேட்டு விட்டாள். அதோடு, கோபப்பட வேண்டிய நேரத்தில் அழுது வைக்கும் தன்னையே வெறுத்தாள்.

 

அவள் பேச்சில் உண்மை இருந்தது. அது ஹரிஹரனுக்கும் புரிந்தது. ஆனால், அந்த உண்மையை பிடிக்கவில்லை. அது கொடுத்த குட்டை வலிக்க வலிக்க தாங்க முடியாது அவனது ஈகோ தடுத்தது.

 

“போறதுனா போடி. நான் ஒன்னும் தேடி வர மாட்டேன். என்னை கேள்வி கேட்காத. எரிச்சல கிளப்பிக்கிட்டு. அழுது டிராமா போட்டா நீ ரொம்ப நல்லவனு நினைக்கனுமா?”

 

எரிந்து விழுந்தவன் வேகமாக அங்கிருந்து வெளியேறி, வேறு அறைக்குள் சென்று விட்டான்.

 

வருணிகாவிற்கு அழுகை அழுகை ஒரே அழுகை. வயிற்றைப்பிடித்துக் கொண்டு அழுகை மட்டுமே.

 

“அழக்கூடாது.. அழக்கூடாது” என்று கண்ணை துடைக்க துடைக்க, கண்ணீர் நின்றபாடில்லை.

 

“நான் ஏன் இவ்வளவு வீக்கா இருக்கேன். அய்யோ..” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

 

எழுந்து சென்று தண்ணீரை குடித்து, தன்னை ஓரளவு நிதானப்படுத்தினாள். இதோடு சென்று கணவனிடம் பேச வேண்டும். மீண்டும் அழ கூடாது என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டாள்.

 

அதே போல் அவன் இருந்த அறைப்பக்கம் சென்று பார்த்தாள். கதவை உள் பக்கமாக பூட்டி இருந்தான். மீண்டும் கண்ணீர் வெளியே வரத்துடிக்க, அவசரமாக துடைத்தாள்.

 

“இருக்கட்டும். எவ்வளவு தூரம் போறாருனு பார்க்குறேன். பார்த்துட்டு இதுக்கு முடிவு பண்ணுறேன்.”

 

வேகமாக அடுத்த அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்தாள். தூக்கம் தான் வரவில்லை. அவன் பேசிய வார்த்தைகளை மனதில் ஓட்டிப் பார்த்தாள்.

 

இப்போதும் அவன் பேசியதற்கு அர்த்தம் விளங்கவில்லை. எதற்கு இந்த அளவு கோபம் என்றே அவளுக்குப்புரியவில்லை. யோசித்து யோசித்து தலைவலி வந்து, விடியும் நேரம் வரை விழித்திருந்து, தாமதமாக தான் உறங்கி எழுந்தாள்.

 

காலையில் விழிக்கும் போது, கணவன் வீட்டில் இல்லை என்று உணர்ந்து கொண்டாள். அவன் இருந்தாலும் பேசி பிரச்சனை தான் அதிகமாகும். மாலை வரட்டும். பொறுமையாக பேசலாம் என்று முடிவு செய்தாள்.

 

அன்றாட வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து இருக்க, கைபேசி கத்தி அழைத்தது.

 

எடுத்துப்பார்த்தாள். அவளது கல்லூரித்தோழி கார்த்திகை.

 

“ஹாய் கார்த்தி.. எப்படி இருக்க?”

 

“பார்ரா.. என்னை மறக்காம இருக்க”

 

“நீ தான் மறந்துட்ட.. நான் இல்ல”

 

“ஆமா மறந்ததால தான் நானே உனக்கு கால் பண்ணுறனா?”

 

“சரி‌சரி கோவப்படாதமா. எப்படி இருக்க? எங்க இருக்க?”

 

“இதுக்கு நான் அப்புறம் பதில் சொல்லுறேன்.‌ நீ எங்க இருக்க? மதுரையிலயா? திருச்சிலயா?”

 

“ரெண்டுலயும் இல்ல. சென்னையில இருக்கேன்.”

 

“இங்கயா? எப்போ வந்த?”

 

“கல்யாணம் முடிஞ்ச ஒரே மாசத்துல வந்துட்டேன். நீயும் சென்னையில தான் இருக்கியா?”

 

“இப்போ ஒரு ட்ரிப்னு வந்துருக்கேன். உன்னை பார்க்கனுமே”

 

“வீட்டுக்கு வா கார்த்தி. அட்ரஸ் அனுப்புறேன்”

 

“ஓகே. வீட்டுக்கு வந்து பேசுறேன். இங்க ரிலேட்டிவ் வீட்டு பங்சன். முடிச்சுட்டு ஈவ்னிங் வர்ரேன். ஓகே?”

 

வருணிகாவும் சம்மதித்து விட்டு முகவரியை அனுப்பி வைத்தாள். மதிய உணவை உண்டு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தவள், மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு, தன்னை கவனிக்கும் வேலையில் இருந்தாள்.

 

மதுரையில் இருந்த வரை மொட்டை மாடியில் நடப்பாள். இங்கு வெளியே பார்க் ஒன்று இருக்க, அங்கு சென்று நடந்தாள். அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் எல்லோரையும் பார்த்துப் பேசி பல நாட்கள் ஆகிறது. அவர்களிடம் பேசி அளவாளாவி விட்டு, நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வர, கார்த்திகை வந்து விட்டாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்