Loading

அந்தப் பெரிய அறையில், இருபது பேர் அமர்ந்து உண்ணும் வகையிலிருந்த அந்த உணவு மேஜையில் இப்போது மூவர் மட்டுமே அமர்ந்து அவர்களது காலை உணவை எடுத்துக் கொண்டு இருந்தனர்.

அந்த மூவரில் ஒருவரான பாமினி,”தீரா இன்னும் எத்தனை நாளுக்கு நீ இப்படி தனியா இருக்கப் போற? உன் தங்கச்சிக்கும், தம்பிக்கும் கல்யாணமாகி ஆளுக்கு இரண்டு குழந்தைங்க பெத்துக்கிட்ட குடும்பமா சந்தோஷமா வாழுறாங்க. ஆனால் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசு நீ இப்படித் தனி மரமா நிக்கிறதா பார்த்தா எனக்கு மனசுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு.” என்று கண்ணில் நீருடன் கூறினார் அவர்.

அவர் தீரா என்று அழைத்தவன் பேச வாயைத் திறக்கும் முன்னர் அந்த இடத்திலிருந்த மற்றொரு நபர்,”பாமினி நீ பேசுறது உனக்கே சரியா படுதா? இவனுக்குக் கல்யாணமாகி ஐந்து வருஷமாகிடுச்சு. அதை மறந்துட்டு பேசுற நீ.” என்று கண்டிக்கும் குரலில் கூறினார் பாமினியின் மாமியார் ரத்னகுமாரி.

“அத்தை நான் சரியா தான் பேசுறேன். என்ன சொன்னீங்க கல்யாணமா? அது சரி!!! கல்யாணமாகி எட்டே மாசத்துல இந்த வீட்டையும் என் பையனையும் விட்டுப் போனவளைப் பத்திப் பேசாதீங்க அத்தை.” என்று பாமினியும் காட்டமாகப் பதில் அளித்தார்.

“என்ன தான் அவள் இந்த வீட்டை விட்டுப் போனாலும் இன்னும் அவள் உன் பையனோட பொண்டாட்டி தான். ஒரு நல்லா அம்மாவா எங்கே இருந்தாலும் அவளைத் தேடிக் கூட்டிட்டு வானு சொல்லிருக்கனும். ஆனால் நீயே இப்படிப் பேசுறியா!” சற்று வருத்தத்துடன் கூறினார் ரத்னகுமாரி.

“அத்தை வேற எப்படிப் பேச முடியும் சொல்லுங்க. குடும்ப அமைப்பில வளராம ஒரு ஆஸ்ரமத்துல வளர்ந்தவள் நம்ம குடும்பத்துக்குச் சரியா வர மாட்டானு நான் தலைப்பாட அடிச்சுக்கிட்டேன். ஆனால் நீங்க யாராவது கேட்டீங்களா? என்னைத் தான சமாதானப்படுத்தினீங்க. இப்போ கஷ்டப்படுறது என் பையன் தான!! இதுல அந்த சீமை சித்ராங்கிய என் பையன் தேடி அலைஞ்சு கூட்டிட்டு வரனுமா!! நல்ல கதையா இருக்கே.” என்று நொடித்துக் கொண்டு கூறினார் பாமினி.

“திரும்பவும் தப்புப் பண்ற பாமினி. இவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே நமக்குத் தெரியாது. அந்தப் பொண்ணை மட்டும் தப்புச் சொல்றது எந்த விதத்தில நியாயம் சொல்லு? ஏன் உன் பையன் எந்தத் தப்பும் பண்ணிருக்க மாட்டானா?”

“அத்தை என் பையன் மேல எந்தத் தப்பும் இருக்காது. எனக்கு அது நல்லாவே தெரியும். அவள் மேல தான் தப்பு இருக்கும்.” என்று பாமினி கூற, அதற்கு ரத்னகுமாரி பதிலளிக்க என்று அந்த இடமே சற்று ரணகளமாகப் பிரச்சனைக்குக் காரணமான தீரா என்கிற தீரன் தனக்கும் அந்தப் பேச்சுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்கிற ரீதியில் சாப்பிட்டு பக்கத்திலிருந்த கிண்ணத்திலிருந்த தண்ணீரில் கையைக் கழுவிக் கொண்டு எழுந்தான்.

அவன் நாற்காலியைப் பின்னால் தள்ளி விட்டு இரண்டடி எடுத்து வைக்க, ரதன்குமாரி,”இப்போவும் பார் அவன் பிரச்சனையைப் பத்தித் தான நாம பேசிட்டு இருக்கோம். கொஞ்சமாச்சும் நம்மளை மதிச்சானா உன் பிள்ளை?” என்று ரத்னகுமாரி கேட்டார்.

பாமினிக்குமே அவனது நடவடிக்கைச் சற்றுக் கோபத்தைக் கொடுத்தாலும் மாமியார் முன்பு அதைக் காட்டாமல் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு,”அவனுக்கு வேலை இருக்கும் அத்தை.” என்றார்.

அதற்கு ரத்னகுமாரி பதில் கூற வருவதற்கு முன்பே தீரன்,”பாட்டி நான் பேசினா மட்டும் நீங்கக் கேட்கப் போறீங்களா இல்லை என்கிட்ட பேசத் தான் போறீங்களா? உங்களுக்குத் தான் உங்க சொந்த பேரனை விட எவளோ ஒருத்தி தான முக்கியம்.” என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாகக் கூறிவிட்டு அவரது பதிலைக் கேட்காமலே அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment