Loading

 

வீரா சமைத்துக் கொண்டிருந்தான். லட்சுமி, தாமரை வந்து பேசி விட்டு சென்றதை சொல்லிக் கொண்டிருந்தார்.

“உன் முடிவு தெரியாம, நான் ஜாக்ஷிய பத்தி சொல்லவும் இல்ல. நீ என்ன முடிவு பண்ணிருக்க? ஜாக்ஷி கிட்ட பேசுனியா?”

‘அவ பேசுனத கேட்டா நீங்க தாங்க மாட்டீங்களே’ என்று நினைத்தவன், “பேசிருக்கேன் அப்பத்தா. அவங்களும் யோசிக்கிறதா தான் சொல்லுறாங்க. கொஞ்ச நாள் போகட்டும் பொறுங்க” என்று விட்டான்.

“சரிபா.. உங்கம்மா பேசுனாளேனு கேட்டேன்”

“அவங்கள அவங்க ரெண்டு மகனுக்கு பொண்ணு பார்க்குறதோட நிறுத்த சொல்லுங்க. வீரா வாழ்க்கையில அவங்களுக்கு அந்த அளவு உரிமையில்ல”

“பெத்தவள இப்படி எல்லாம் பேசாதடா”

“அப்ப அவங்க மூக்க நுழைக்காம இருக்கனும்”

“நானே சொல்லி அனுப்பிட்டேன். நீ கோபப்படாத”

“சரி விடுங்க. நீங்க சாப்பிட்டீங்களா?”

“இப்ப தான். நீ சாப்பிடலயா?”

“செஞ்சுட்டு இருக்கேன்.”

“தனியாவே இருந்து தனியாவே சமைச்சு சாப்பிடுற”

“என்ன செய்ய? என் அப்பத்தா பேரன விட ஊரு முக்கியம்னு வர மாட்டேங்குறாங்களே”

“அந்த அப்பத்தா உனக்கு பொண்டாட்டிய அனுப்பி வைக்க பார்க்குதுடா பேராண்டி”

“நான் சுதந்திரமா இருக்கது உங்களுக்கு பிடிக்கல. ஆளாளுக்கு எனக்கு கல்யாணம் பண்ண ரெடியாகிட்டீங்க”

“எல்லாம் ஒரு சுய நலம் தான். மருமக வந்துட்டா பொறுப்ப அவ தலையில தள்ளிட்டு நான் ஊர சுத்திட்டு வருவேன்ல?”

“நான் ஊர் சுத்த முடியாதே, அத யோசிச்சீங்களா?”

“நீ தனியா சுத்தாதங்குறேன். ஜோடி போட்டு பொண்டாட்டியோட சுத்து”

“விட மாட்டீங்களே! சரி நான் சாப்பிடுறேன். எனக்கு வேலையும் இருக்கு”

“சரிபா”

அழைப்பை துண்டித்து விட்டு சாப்பிட அமர்ந்தான். அவனே சமைத்தது. ஓரளவு கற்றுக் கொண்டான். அவசரமாக உள்ளே தள்ளி விட்டு கணினியை திறக்க, ஜகதீஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது.

புருவம் சுருங்க எடுத்தான்.

“சொல்லுங்க பாட்டி. நல்லா இருக்கீங்களா?”

“நல்லாருக்கேன் வீரா. வீட்டு பக்கம் வர்ரதே இல்லையே?”

“வேலையில பிசியாகிட்டேன். என்ன விசயம்?”

“ஜாக்ஷி ஒன்னு சொன்னா, அத பத்தி கேட்கலாம்னு கூப்பிட்டேன்”

“லிவ் இன்னா?” என்று கேட்கும் போதே அவனுக்கு சிரிப்பு வந்தது.

“ம்ம். நாம ஒரு பக்கம் போனா, இவ ஒரு பக்கம் போறாளே? அதான் சாக் ஆகிட்டேன்”

வீரா சிரித்து வைத்தான்.

“அத விடுங்க இப்ப எனக்கு ஒரு உண்மைய சொல்லுங்க”

“என்ன?”

“எதுக்கு என்னை ஜாக்ஷிக்கு பாதுகாப்புனு சொல்லி வேலையில சேர்த்தீங்க?”

“இன்னுமா கண்டு பிடிக்கல?”

“இது வரை டவுட் வரல. ஆனா இப்ப வந்துடுச்சு”

“நீ என்ன நினைக்கிறியோ அதான் விசயம்”

“உங்க பேத்திக்கு இது தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?”

“ஒன்னும் சொல்ல மாட்டா. அவ நேராவே வந்து இப்ப தான் கேட்டுட்டு போறா”

ஜகதீஸ்வரி சலிப்பாக சொல்ல, வீரா ஒரு நொடி புருவம் உயர்த்தி விட்டு, பிறகு வாய்விட்டு சிரித்தான்.

“உங்க பேத்தி ஸ்மார்ட்ங்குறத மறந்துட்டீங்களே பாட்டி”

“அதுக்கு தான் அவ இப்ப அடுத்த வேலைய பார்க்குறா. லிவ் இன் வேணுமாம். லட்சுமி இத கேட்டா என்ன சொல்லுவாளோ?”

“சொல்லுவாங்க.. முடியவே முடியாதுனு”

“அது தான் என் கவலையும். லட்சுமிக்கு முன்னாடி நீ பதில் சொல்லு. என்ன பண்ண போற?”

“பார்க்கலாம். இன்னும் முடிவு பண்ணல”

“முடிவு பண்ணலயா? ஏன்?”

“இன்னும் ரிசல்ட் வரல”

“என்ன ரிசல்ட்?”

“சொல்லிருந்தேனே.. எனக்கு கேன்சர் வர வாய்ப்பு இருக்கானு செக் பண்ண போறேன்னு”

“ஏய்.. அத பண்ணியா நீ?”

பாட்டி அதிர, “ம்ம்.. போன வாரம் அதுக்கு தான் லீவ் போட்டு போனேன். உங்க ஹாஸ்பிடல்ல தான் ஒரு டாக்டர் ரெகமண்ட் பண்ணாரு. போய் பண்ணிட்டு வந்தேன்” என்றான்.

“எங்க?”

“டெல்லில.. ஒரு ஸ்பஷலிஸ்ட் கிட்ட’

“ஓ.. ரிசல்ட் எப்ப வரும்?”

“ஒரு வாரம் கழிச்சு வரும்னு சொன்னாங்க. இன்னும் ரெண்டு நாள்ல வந்துடும்னு நினைக்கிறேன்”

“அது வந்து தான் முடிவு பண்ணுவியா?”

“ஆமா.. உங்களுக்கு பயமா இல்லையா? எனக்கு ஒரு வேளை எதாச்சும் ஆகிட்டா, உங்க பேத்தி வாழ்க்கை வீணா போயிடுமேனு தோணலயா? அப்பத்தா கிட்ட கூட சொல்லாம உங்க கிட்ட சொல்லிருக்கேன். யோசிக்கலயா நீங்க?”

“இப்ப தோணுது தான். ஆனா சாகனும்னு இருந்தா, எதாவது வந்து தான் சாகனும்னு இல்ல. கல்லு தட்டி கூட சாவு வரும். அதுக்காக வாழுற வாழ்க்கைய நரகமாக்கிக்க முடியுமா? நூறு சதவீதம் ஆரோக்கியமான ஒருத்தன ஜாக்ஷிக்கு கட்டி வச்சாலும், நூறு வருசம் வாழுவாங்கனு கேரண்டி தர முடியுமா? வாழ்க்கை நம்ம கையில இருக்க வரைக்கும், கவலை படாம வாழ்ந்துட்டு போயிடனும் வீரா. நான் ஒன்னும் எமோஷனல் டைப் கிடையாது. ஆனாலும் நீ நல்லா இருப்பனு என் மனசு சொல்லுது. ரிசல்ட் வந்தப்புறமே நீ உன் முடிவ எடு. ஆனா ஒன்னு…”

பாதியில் நிறுத்தினார்.

“என்னது?”

“ஜாக்ஷி கண்டீசனுக்கு ஒத்துக்கிட்டா, லட்சுமி கையால பூசை தான் கிடைக்கும். அதுக்கு மட்டும் உடம்பையும் மனசையும் தேத்திக்க”

வீரா வாய்விட்டு சிரித்த படி, கண்ணை துடைத்துக் கொண்டான். மனம் இதமாக இருந்தது.

ஒருவரிடம் மனம் விட்டு பேசுவதே ஆறுதல் தான். கேட்பவர் அதை புரிந்து கொள்வது அதை தாண்டிய வரம்.

லட்சுமி வீராவை வளர்த்தவர். அவரிடம் தாய்மை இருக்கும். தோழமை வரவில்லை. பழகும் நண்பர்களிடம், குடும்பத்தை பகிரும் அளவு மனதில் நெருக்கம் வரவில்லை.

ஜகதீஸ்வரி தான் அவனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அதற்காகவே இந்த உறவு விட்டுப்போகக்கூடாது என்று ஆசைப்பட்டான்.

“உங்க நட்ப நீங்க சமாளிக்க மாட்டீங்களா?’

“என் அக்கா பாவம் பச்சை மண்ணு. லிவ் இன் க்கு அர்த்தம் தெரிஞ்சாலே மயங்கி விழுந்துடுவா. அவ கிட்ட சொல்லி சம்மதம் வாங்கி? என்ன செய்ய போறீங்களோ”

“போறீங்களோவா? அப்ப நீங்க ஹெல்ப்க்கு வர மாட்டீங்களா?”

“நோ சான்ஸ். எனக்கு என் உசுரு முக்கியம். லட்சுமி என்னை கொன்னுடுவா. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சம்மதம் வாங்குங்க. ஆனா எனக்கு ஜாக்ஷி மேல நம்பிக்கை இருக்கு. அவ பேசுனா யார வேணா மடக்கிடுவா”

“அப்ப உங்க பேத்தி திறமைய சீக்கிரமா சோதிச்சுடுவோம்”

“அதுவும் நடக்கும். சரி நான் வைக்கிறேன். எதுனாலும் ஃபோன் பண்ணு” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

பேச்சில் வீராவுக்கு சம்மதம் தான் என்று புரிந்தது. பரிசோதனை முடிவை நினைத்து தயங்கிக் கொண்டிருக்கிறான்.

முடிவு நல்லபடியாக வந்தால், ஊர் கோவிலில் பொங்கல் வைப்பதாக நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டார் பாட்டி.

*.*.*.*.*.*.

மூன்று நாட்கள் கடக்க, வீரா ஜாக்ஷியை அழைத்தான்.

“ஹலோ மீட் பண்ணலாமா?”

“ஆஃபிஸ்ல இருக்கேன். என்ன விசயம்?”

“ஒரு விசயம் சொல்லனும். ஈவ்னிங் பார்க்கலாமா?”

“ஓகே. வீட்டுக்கு வாங்களேன்”

“ஓகே” என்றதோடு வைத்து விட்டான்.

மாலை ஜாக்ஷியின் வீட்டுக்குச் செல்ல, அவளும் அப்போது தான் வந்திருந்தாள்.

“டூ மினிட்ஸ். ஃப்ரஸ் ஆகிட்டு வர்ரேன் உட்காருங்க” என்றவள், சுபத்ராவை அழைத்து அவனை கவனிக்க சொல்லி விட்டு சென்றாள்.

“காபி?”

“ரெண்டு பேருக்குமே கொண்டு வா”

உடனே தலையாட்டி விட்டு சுபத்ரா சென்று விட்டாள். ஜாக்ஷி உடை மாற்றி வரும் போது, சுபத்ரா வீராவிடம் பேச முயற்சித்துக் கொண்டிருக்க, வீரா புரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

“என்ன புரியலயா?” என்று ஜாக்ஷி சிரித்தபடி வர, “புரியுது ஆனா புரியல” என்றான் அவன்.

சுபத்ரா ஜாக்ஷியிடம் சொல்ல, “நைட் டின்னர் சாப்பிடுங்கனு கேட்குறா” என்றாள்.

“அது புரியுது. அதுக்கடுத்து தான் புரியல”

“கருவாட்டு குழம்பு வைக்க போறாளாம். புடிக்குமானு கேட்குறா”

“ஓஓ அதானா? பிடிக்கும் தான். ஆனா..”

“நான் தடுக்கலாம் மாட்டேன். பயப்படாதீங்க. நீ போய் செய்”

ஜாக்ஷி சொன்னதும் சுபத்ரா சந்தோசமாக உள்ளே ஓடினாள்.

“அவளுக்கு ரெண்டு பேருக்கு மட்டுமே சமைக்குறதுல கொஞ்சம் கடுப்பு. பாதி நாள் பிஸ்னஸ் லன்ச்னு நான் வர மாட்டேன். ஒரே ஆளா சமைச்சு சாப்பிட சொல்லுறீங்கனு சினுங்கிட்டே இருப்பா. எப்பாவவது எதாவது பண்ணா, பாட்டிக்கு கொடுத்து அனுப்பி மனச தேத்திப்பா. இன்னைக்கு நீங்க கிடைச்சுட்டீங்க.”

“நல்ல பொண்ணுல? ஆனா சின்ன பொண்ணா இருக்கா. படிக்கலயா?”

“கேட்டேன். படிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. இருபது தான் ஆகுது”

“ஓஹோ”

“நீங்க என்ன விசயமா வந்தீங்க?”

ஃபைலை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“உங்க கேள்விக்கு யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னேன் இல்லையா? பதில் இது”

திறந்து பார்த்து விட்டு, “மெடிக்கல் ரிப்போர்ட்டா? நானும் உங்களுக்கு கொடுக்கனுமா என்ன?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவளது கேள்வியில் புன்னகை மலர்ந்தாலும், “படிச்சு பாருங்க” என்றான்.

ஜாக்ஷி படித்தாள். பாதிக்கு மேல் புரியவே இல்லை.

“நான் பயாலஜில ரொம்ப வீக். இது என்னனு நீங்களே சொல்லிடுங்களேன்”

அப்பாவியாக அவள் கேட்க, வீராவுக்கு சிரிப்பு தான் வந்தது.

“இது என்னோட மெடிக்கல் ரிப்போர்ட். எனக்கு கேன்சர் வர சான்ஸ் இருக்கானு செக் பண்ணேன். அந்த ரிப்போர்ட்”

“வாட்?”

“உங்களுக்கு என் ஃபேமிலி பத்தி தெரியாதுல? என் அப்பாவ என் பாட்டி தத்தெடுத்து தான் வளர்த்தாங்க. அப்பா கேன்சர்ல தான் இறந்து போனாரு. கேன்சர் பரம்பரை வியாதியா இருக்கவும் வாய்ப்பு இருக்கு இல்லையா? அத தான் செக் பண்ணேன்”

ஜாக்ஷி அதிர்ச்சியும் குழப்பமுமாக அந்த காகிதங்களை பார்த்தாள். அதில் இருந்த தேதி கண்ணில் விழுந்தது.

“லீவ் போட்டு டெல்லி போய் செக் பண்ணீங்களா?”

“ம்ம்”

“எதுக்கு இது?”

வீரா பெருருமூச்சு விட்டான்.

“இல்ல இத்தனை வருசமா இல்லாம.. இது ஏன் திடீர்னு? கல்யாண பேச்சு பேசுனதாலயா?”

“இல்ல. எனக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி செக் பண்ணி வைக்கனும். இல்லனா என்னை கட்டுறவள அம்போனு விட்டுட்டு, நான் செத்து போயிட்டா அவ பாவம்னு ஒருத்தவங்க சொன்னாங்க. சோ”

சட்டென ஜாக்ஷியின் முகம் இறுக ஆரம்பித்தது.

“யாரு?”

“என்னை பெத்த அம்மாவும் அவங்க ஹஸ்பண்ட்டும் தான்”

‘ஹவ் டேர்? நேர்ல பார்க்குற அன்னைக்கு அவங்கள பேசிக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

“அதுக்காக? அதுக்காக போய் செக் பண்ணீங்களா? என்ன வீரா நீங்க?” என்று அவள் அதிருப்தியாக கேட்க, “எமோஷனலாகனும் இல்ல மேடம். பிராக்டிக்கலா யோசிங்க. இப்ப பையனுக்கும் பொண்ணுக்கும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்குற ஜெனரேஷன்க்கு வந்தாச்சு. நான் முன்னாடியே செக் பண்ணி பார்க்கனும்னு தான் ஆசைப்பட்டேன். இடையில தான் இந்த கல்யாண பேச்சு வந்துடுச்சு. ரிசல்ட் வர்ர வரைக்கும் முடிவெடுக்க வேணாம்னு தான் வெயிட் பண்ணேன்”

ஜாக்ஷி சமாதானமாகி, மீண்டும் காகிதத்தை பார்த்தாள். வாய்ப்பு மிக மிக குறைவாக கிட்டத்தட்ட வரவே வராது எனும் அளவு இருந்தது.

“சோ?” என்று புருவம் உயர்த்தி அவள் கேட்க, “சோ? பதில் சொல்லிட்டேனே” என்றான்.

“இல்லையே.. ரிபோர்ட்ட கொடுத்தீங்க. பதில் வாய்ல சொல்லவே இல்லையே?”

சிரித்து விட்டு, “ஓகே எனக்கு உங்க லிவ் இன் ஐடியா ஓகே. ஆனா பாட்டிங்க கிட்ட சம்மதம் வாங்க வேண்டியது உங்க பொறுப்பு” என்று விட்டான்.

“என் பாட்டிய பத்தி கவலை இல்லை. அவங்க உங்கள ஆஃபிஸ்க்கு கூட்டிட்டு வந்ததே இதுக்கு தான்”

“தெரியும்”

சட்டென புருவம் சுருங்க, அவனை சந்தேகமாக பார்த்தாள்.

“நோ நோ நானும் இப்ப தான் அத கெஸ் பண்ணேன். முன்னாடியே தெரியாது”

“நிஜம்மா? நம்பலாமா?”

“சத்தியமா. தெரிஞ்சுருந்தா கண்டிப்பா வேணாம்னு தான் சொல்லிருப்பேன். எனக்குத் தெரியாது”

இப்போது சந்தேகம் கோபமாக மாறியது.

“ஏன் வேணாம்னு சொல்லிருப்பீங்க?”

“உங்க மேல எனக்கு அப்ப இன்ட்ரஸ்ட் இல்லையே”

“ஓஹோ.. வேற யாரையும் லவ் பண்ணீங்களா?”

“லவ்? இல்ல.. நிறைய கிரஸ் வேணா இருந்துருக்காங்க”

பட்டென ஜாக்ஷிக்குள் பொறாமை வந்து அமர்ந்தது.

“கிரஸ்?”

“அது இல்லாம எப்படி?”

“அப்ப என்னை பார்த்து உங்களுக்கு பெருசா பிடிக்கல?”

“அப்படி சொல்ல முடியாது. நீங்க என் டைப் இல்லனு வேணா சொல்லலாம்”

இப்போது வெளிப்படையாக முறைத்தாள்.

“இப்ப மட்டும் நான் மாறிட்டனா? எதுக்கு மேன் இத கொண்டு வந்து கொடுக்குற?” என்று ஃபைலை தூக்கி அவன் முன்னால் போட்டு விட்டாள்.

அதை குனிந்து எடுக்காமல், கன்னத்தில் கை வைத்து அவளை பார்த்தவன், “நீங்க மாறல அதே ஜக்கம்மா தான். நான் தான் மாறிட்டேன்.” என்றான் சிரிப்போடு.

“வாட்? ஜக்கம்மாவா?” என்று அதிர்ந்தாள்.

“முதல் தடவ பார்த்தப்போ, மொத்த குடும்பத்தையும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்குனப்போ ஜக்கமாவே தான்னு தோனுச்சு.”

“மிஸ்டர் வீரபத்திரன்”

“எஸ்.. மீ?”

“ஜக்கம்மானு பட்ட பேரு யார கேட்டு வச்சீங்க?”

“பட்ட பேரெல்லாம் கேட்டு வைக்க மாட்டாங்களே”

ஜாக்ஷி பல்லைக்கடித்து முறைக்க, வீரா தோளை குலுக்கி சிரித்தான்.

“எனக்கு லிவ் இன் வேணாம் போ” என்று அவள் கோபமாக கூற, “ஃபைன். வேற பொண்ண பார்க்க வேண்டியது தான்” என்று சாதாரணமாக சொல்லி அவளை மேலும் கடுப்பேத்தி வைத்தான்.

“வெளிய போ மேன்”

“அப்ப கருவாட்டு குழம்பு?”

“கடுப்பேத்திட்டு கருவாடு வேணுமா? ஒன்னும் கிடையாது. போ”

“இப்படி ஆசை காட்டி ஏமாத்த கூடாது. உங்க லிவ் இன் இல்லனா பரவாயில்ல.. குழம்பு….”

“இவன..” என்று ஜாக்ஷி எழுந்து விட, “ஓகே ஓகே.. நான் வேணும்னா இனிமே அப்படி கூப்பிடல. போன்ல கூட உங்க பேர ஜாக்ஷினு மாத்திடுறேன். போதுமா?” என்றான் பவ்யமாக.

“ஃபோன்ல இந்த பேரையா வச்சுருக்க?”

“அது வந்து..”

அவனது ஃபைலை தூக்கி அவன் மீதே எறிந்தாள்.

“உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, என் பேர ஜக்கம்மானு சேவ் பண்ணி வச்சுருப்ப?”

“ஜக்கம்மா.. சாரி ஜாக்ஷி.. அமைதி அமைதி..”

ஜாக்ஷி அடுத்து எதை எடுத்து எறியலாம் என்று பார்க்க, சுபத்ரா வந்து நின்றாள்.

“என்ன கோபமா இருக்கீங்க? என்னாச்சு?” என்று அவள் புரியாமல் கேட்க, “இவனுக்கு சோறு கிடையாது. வெளிய துரத்து இவன..” என்றாள் ஜாக்ஷி.

வீரா பாவமாக பார்க்க, சுபத்ரா புரியாமல் பார்த்தாள்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தான இருந்தாங்க?’ என்று குழம்பியவள் வீராவை பார்த்தாள்.

“உன் கருவாட்டு குழம்புக்காக வெயிட் பண்ணா, சோறு இல்லனு சொல்லுறாங்க சுபத்ரா. நீயே நியாயத்த கேளு”

“பேசாத மேன்.. என்னை பார்த்து ஜக்கம்மானு சொல்லிட்டல..” என்றவள் சீறி எழ, சுபத்ரா சிரித்து விட்டாள்.

“இப்ப நீ ஏன் சிரிக்கிற?”

சுபத்ரா அவளுக்கு பதில் சொல்லாமல் வீராவை பார்த்து, “பேரு சூப்பர்” என்று விட்டாள்.

வீராவுக்கு அவள் பேசியது புரியவில்லை. ஆனால் ஜாக்ஷிக்கு புரிந்ததே.

“அடிங்க.. என்னடி கிண்டலா?” என்று ஜாக்ஷி அவளையும் முறைக்க, “என்ன சொன்னா?” என்று கேட்டான் வீரா.

“சொல்ல முடியாது போ”

“மேடம்.. ஜாக்ஷி மேடம்.. இவ்வளவு பிரஷ்ஷர் ஆகாது மேடம். ஃப்ரியா விடுங்க. நீ போமா. போய் குழம்ப நல்லா வை. இவங்கள நான் பார்த்துக்கிறேன்” என்று சுபத்ராவை அனுப்பி வைத்தான் வீரா.

ஜாக்ஷி முறைத்தபடியே இருக்க, “இப்ப உங்க பாட்டிக்கு விசயத்த சொல்லலாமா? வேணாமா? வேணாம்னா சொல்லுங்க, என் பாட்டிக்கு போன போட்டு வேற பொண்ண பார்க்க சொல்லுறேன்” என்று வீரா தீவிரமாக கேட்க, “ஒன்னும் தேவையில்ல. நானே பேசிக்கிறேன்” என்றாள் கடுப்பாக.

“அப்ப சரி. அப்பத்தா கிட்டயும் பேசிடுங்க ஜக்கம்மா”

“சரிங்க வீரபாண்டிய கட்டபொம்மன்”

கிண்டலாக அவள் சொல்ல, வீரா வாய் விட்டு சிரித்தான்.

“நல்ல பெயர் பொருத்தம் தான்”

கேட்டதும் அவள் முகத்திலும் புன்னகை வந்தது.

“ஜக்கம்மா ஆளு வீரபாண்டியனா தான இருக்கனும்.” என்று வெடுக்கென கேட்டவள், உடனே கைபேசியை எடுத்தாள்.

“பாட்டிக்கு சொல்லுவோம். ப்ளான போட்டு உங்கள இங்க வர வச்சது அவங்க தான? அவங்க ப்ளான் வொர்க் அவுட் ஆகிடுச்சுனு சொல்லுவோம்”

“முதல்ல இந்த போங்க வாங்கவ விட்டுரலாமே?”

“ஓகே வீரா? நோ பத்ரா? ஓகே பத்ராவே நல்லா இருக்கு”

“எனக்கு ஜக்கம்மா தான் பிடிச்சுருக்கு”

“பப்ளிக்ல அப்படி கூப்பிட்டு பாரேன். அப்புறம் இருக்கு”

“வேணாமா? ஜாக்ஷியே சுருக்குனது.. இத என்னனு சுருக்குறது? ஜாக்? அய்ய.. வேணாம். ஜானு? வடமாநிலத்துல பொண்டாட்டிய ஜானு தான் கூப்பிடுவாங்கனு கேள்வி பட்டேன்”

“நான் உன் பொண்டாட்டியா?”

“காதலியயும் கூப்பிடலாம்”

“நாம லவ்வர்ஸா?”

“இல்லையா?”

“நான் எப்ப உன் கிட்ட லவ் சொன்னேன்?”

“இப்ப சொல்லேன்”

“முடியாது. ஜக்கம்மா குறி தான் சொல்லுவா‌. லவ் யூ சொல்ல மாட்டா”

இதைக்கேட்டு வீரா சிரித்து விட, ஜாக்ஷியும் சிரித்தாள்.

அந்த சிரிப்பை நிறுத்துவது போல் கைபேசி இசைத்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
25
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. அடேயப்பா… இந்த ஜக்கம்மாவுக்கு என்னாம்மா கோபம் வருது..?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. ஜக்கம்மா வீரா லவ் வந்துடுச்சு

    3. இரண்டு பேருக்குள்ளும் லவ் ஆரம்பித்து விட்டது. இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் வைத்துக் கொண்ட பெயர் அருமை. ஜக்கம்மா செம.