Loading

வருடம் 2008

பத்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்த பின்பான விடுமுறை தினங்கள்..

கால் விரல்களில் நகப்பூச்சு இட்டுக் கொண்டிருந்த நவீனாவின் கவனத்தை, அன்னை சித்ராவின் குரல் கலைத்தது.

“என்னம்மா..?”

“ரெடி ஆகிட்டியா நவீ.?”

“ஹான் ரெடி ரெடி.!” என்றவள் தன் கணிணி வகுப்பிற்கான புத்தகங்களை எடுத்துக் கொண்டு தயாராக, “அப்படியே போற வழியில விநாயகர் கோவிலுக்குப் போய் ஒரு விளக்கு மட்டும் போட்டுடுடேன்!”

“அம்மா இந்தச் சாமி, கோவில் எல்லாம் உன்கிட்டயே வச்சிக்கோ.. என்வரைக்கும் கொண்டு வராதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..?”

“நான் எனக்காகவா சொல்லுறேன், உனக்காகத் தான குட்டிமா..?”

“ப்ச்ச் போம்மா.. என்ன எனக்காக.? ஏன் எனக்குப் பதிலா உன் சாமி வந்து பரிட்சை எழுதுவாரா.?”

“வாய்ப் பேசாத நவீ. இதெல்லாம் ஒரு நம்பிக்கை! சாமி இருக்கோ இல்லையோ.. எல்லாம் நல்லதாவே நடக்கணும்ற உள்ளுணர்வோட, கஷ்டங்களை எல்லாம் சாமிக்கிட்டச் சொல்லும் போது.. மனசுல இருந்து பாரம் இறங்கின மாதிரி இருக்கும்!”

“என் மனசுல எந்தப் பாரமும் இல்ல, இறக்கி வைக்கிறதுக்கு! ஆளை விடு, நான் கிளாஸூக்குக் கிளம்புறேன்!”

“நவீ.. நான் இன்னைக்கு வீட்டுக்குத் தூரம்டா. கோவிலுக்குப் போக முடியாது, அதுனால தான் உன்னைப் போகச் சொல்லுறேன்!”

“வீட்டுக்குத் தூரம்னா.. சரியானதுக்கு அப்புறம் போ. என்னை எதுக்காகப் போகச் சொல்லுற..?”

“இல்லமா.. போன வாரம் ஒரு ஜோசியரைப் பார்த்தேனா..” என்றவரின் பேச்சில் இடைநுழைந்தவள், “திரும்பவும் ஜாதகம் ஜோசியம்னு ஆரம்பிச்சிட்டியா நீ..?”

“ப்ச்ச்.. சொல்லுறதைக் கேளு!”

“ம்ம்.. சொல்லு!”

“உனக்கு இப்ப நேரம் சரியில்லயாம். அதுனால மூணு மாசத்துக்குத் தொடர்ந்து விநாயகருக்கு விளக்குப் போட சொன்னாங்க. உன்னைத்தான் செய்யச் சொன்னாங்க, ஆனா நீ கோவிலுக்குப் போகமாட்டியேன்னு தான்.. உனக்குப் பதிலா நான் போயிக்கிட்டு இருக்கேன்!”

“ஓஹோ..” எனத் தாயை முறைத்தவள், “அதெல்லாம் என் நேரம் நல்லாதான் இருக்கு. யாரோ காசை வாங்கிட்டு எதுவோ சொன்னாங்கன்னு, என்னைப் போட்டு இம்சை பண்ணாத ம்மா நீ!

என்னால கோவிலுக்கு எல்லாம் போக முடியாது!” என்றவள், சித்ராவிற்கு மறுமொழி பேச வாய்ப்பளிக்காது வீட்டிலிருந்து வெளியேறினாள்.

செல்லும் மகளை வருத்தத்துடன் பார்த்திருந்தவர்.. பின் பெருமூச்சு வெளியிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

கணிணி வகுப்பில் நுழைந்தவளின் கண்கள் அவனைத் தான் முதலில் தேடியது. ஆளைக் காணவில்லை, ‘இன்னும் வரலயோ..?’ என்ற சிந்தனையுடன் தனக்கான இடத்தில் சென்று அமர்ந்தாள்.

அவன் ஆகாஷ், நவீனாக்குத் தனிப்பட்ட முறையில் வகுப்பு எடுப்பவன். புதியதாகப் பகுதி நேரமாகப் பணியில் இணைந்திருந்தவன் என்பதால், முதலில் ஒருவருக்கு மட்டும் வகுப்பு எடுக்கும் படி கட்டளை இட்டிருந்தார்.. அந்தக் கிளையின் பொறுப்பாளர்.

“ஹாய்.. ஹலோ.. குட் ஈவ்னிங்..” என வரிசையாகப் பலவித குரல்கள் கேட்க.. அவன் வந்துவிட்டதை உணர்ந்த நவீனா எதிர்பார்ப்போடு அறையின் கண்ணாடி கதவையே பார்த்திருந்தாள்.

இடக்கையால் தன் கண் கண்ணாடியைச் சரிசெய்த படி, வலக்கரத்தால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் இருபத்திநான்கு வயது ஆகாஷ்.

அனிச்சையாய் பாவையின் முகம் மலர.. கால்களும் எழுந்து நிற்க, “குட் ஈவ்னிங் சார்!” என்றாள் நவீ.

“குட் ஈவ்னிங் கேர்ள்!” என வசீகரிக்கும் புன்னகையைச் சிந்தியவன், “கிளாஸை துடைக்கவே மாட்டியா நீ, பாரு விரல் அச்சு எல்லாம் தெரியிது!” என்றபடி அவள் அணிந்திருந்த கண்ணாடியைக் கழட்டி, துடைத்து அணிவித்துவிட்டான்.

அவளது தேகம் ஒருநொடி சிலிர்த்து அடங்க, “ஓகே.. கிளாஸை ஆரம்பிக்கலாமா..?” என அருகில் அமர்ந்தவன், பெண்ணவளின் தோளில் உரசியபடி எட்டி கணிணியை உயிர்ப்பித்தான்.

அந்தத் தீண்டலில் பரவச நிலைக்கே சென்றாள் பதினைந்து வயது பருவ மங்கை நவீ.

தலைத்திருப்பி அவனது முகத்தை நோக்கியவளின் பார்வையை உணர்ந்தவன், “நேத்து நான் கொடுத்த ப்ரோகிராம் எல்லாம் எழுதிட்டியா நவீ..?”

“ம்ம்..” என அவள் தலையசைக்க, “ஓகே.. ப்ரேகிராமை சிஸ்டம்ல போட்டு எனக்கு அவுட்புட்டைக் காட்டு!” என்றவனின் கண்கள் எதிரே இருந்த கணிணியை ஒருமுறை தொட்டு அவளிடம் வர.. அவனது கருவிழிகளின் அசைவிற்குத் தன் பார்வையைத் திருப்பினாள் நவீ.

கைகள் விசைப்பலகையில் இயங்கி.. மனதையும் மூளையும் பணியில் அவளது கவனத்தை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன.

நவீயை அவளது செயலில் விட்டுவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் ஆகாஷ்.

கிளையின் பொறுப்பாளரைப் போய்ப் பார்க்க, “என்ன ஆகாஷ், ஒர்க் எல்லாம் எப்படிப் போகுது..?”

“ம்ம்.. ஓகே சார். பட் ஒரே ஒரு ஸ்டூடண்ட்க்கு மட்டும் தான்னு…” என அவன் இழுக்க.. மெலிதாய்ப் புன்னகைத்தவர், “புதுசா ஆரம்பிச்சிருக்கப் பிரான்ச். ஸ்டூடண்ட்ஸ் வர்றதுக்குக்குக் கொஞ்சம் நாளாகும்! அதுனால தான் எல்லாரும் பார்ட் டைமா ஒர்க் பண்ணுறாங்க!

உங்க பெஸ்டைக் கொடுங்க, சீக்கிரமே ஃபுல் டைமா மாத்திடலாம்!” என அவர் நம்பிக்கைக் கொடுக்க.. சம்மதமாய்த் தலையசைத்துவிட்டுச் சென்றான்.

“நவீ.. என்ன பண்ணீட்டியா..?” என்றவனின் குரலுக்கு அவள் வாடிய முகத்தைப் பதிலாகக் கொடுக்க.. சின்னதாய்ச் சிரித்தவன், “என்னாச்சு..?”

“நானும் நாலஞ்சு தடவை டிரைப் பண்ணிட்டேன் சார், ஆனால் அவுட்புட் தப்பாவே வருது! இதுக்கு முன்னாடி எனக்கு இப்படி ஆனதே இல்ல!”

“அதெல்லாம் சின்ன ப்ரோகிராம்ஸ் நவி. பட் இது கொஞ்சம் பெருசு.. இப்பதான ஃபர்ஸ்ட் டைம் போடுற? போகப் போக உனக்கு வந்திடும், கீப் டிரை!” என்றவன், அவள் செய்திருக்கும் பிழைகளைப் புத்தகத்தில் திருத்திக் கொடுத்தான்.

“சிஸ்டம்ல இதை எல்லாம் கரெக்ஷன் பண்ணீட்டுப் போட்டுப் பாரு!” என்றிட, நவீயும் செய்யத் துவங்கினாள்.

அதற்கான விடைச் சரியாய் வந்துவிடவே.. முகம் மலர்ந்தவளைப் பார்த்துச் சிரித்தவன், “மத்த ப்ரோகிராம்ல என்னென்ன மிஸ்டேக் விட்டிருக்கன்னு, வீட்டுக்குப் போய் நீயே கண்டுபிடிச்சுக் கரெக்ஷன் பண்ணு! ஒன் ஹவர் கிளாஸ் முடிஞ்சது, கிளம்பு!”

“ஆனா சார்.. எனக்கு இன்னுமே குழப்பம் தீரல. அதெப்படி கமா, கொட்டேஷன் போடுறதை எல்லாம் எரர்ல காட்டுது!”

“நவீ.. கம்ப்யூட்டருக்கு தெரிஞ்சது எல்லாமே கோடிங் மட்டும் தான். நீ அந்தக் கோடிங்கை நல்லா புருஞ்சுப் படிச்சிகிட்டாலே போதும்! ஈசியா ப்ரோகிராம் எழுதிடலாம்! இது என்னோட நம்பர், ஏதாவது டவுட் இருந்தா கால்பண்ணிக் கேளு!”

“என்கிட்ட மொபைல் இல்லயே.?”

“உன் பேரண்ட்ஸோடது இருக்கும்ல, அதுல கால் பண்ணு!” என்றவன் தன் கடமையை முடித்துக் கொண்டு கிளம்ப, நவீயும் சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றாள்.

ஒன்றைக் கற்றுக் கொடுத்தால் வெகு விரைவிலேயே அதை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உடையவள் நவீ. அதேபோல் முடியவில்லை என்ற சொல்லின் பொருளையும், அதன் பயன்பாட்டையும் அறியாதவள்.

தனக்குத் தெரிந்திருந்தும், தான் அறிந்திருந்தும், தன்னால் இயலுமென்றாலுமே.. விருப்பமில்லாத பட்சத்தில் மட்டுமே துணிந்து ‘முடியாது!’ என்றிடுவாள்.. வகுப்பிற்கு வருவதற்கு முன், சித்ராவிடம் உரைத்தது போல!

விடுமுறை என்பதால்.. உண்ணும், உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்கள் அனைத்தும்.. புத்தகமும் கையுமாகவே திரிந்தாள் நவீ.

அவளின் தீவிரமான இந்தச் செயலுக்கு.. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒரு காரணமென்றால், ஆகாஷிடம் ஏற்பட்ட ஈர்ப்பு மற்றொரு காரணமாய் இருந்தது. இயல்பான அவனது புன்னகையும், பாராட்டுச் சொற்களும் பொக்கிசமாய்த் தெரிந்தன.

தன்னால் முடிந்த அளவு நிகழ்ச்சி நிரல்களைச் சரியாக எழுதியவள், சந்தேகங்களை மட்டும் கைப்பேசியின் வாயிலாக ஆகாஷிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

மகளின் ஒவ்வொரு அழைப்பின் போதும்.. அவளுக்குச் சந்தேகம் வந்துவிடாத படி இருவரது பேச்சையும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த சித்ரா.. பின் நான்கைந்து நாட்கள் சென்று, நவீயிடம் கொண்டிருந்த நம்பிக்கையால் கைவிட்டு விட்டார்.

ஆசான், மாணவி என்ற உறவை கடந்து ஆகாஷுடன் நவீயின் நெருக்கம் இன்னும் அதிகமானது. தனது பெற்றோர்களிடமும் அவனைப் பற்றி உரைத்து வைத்திருந்தாள்.

அவனும், அவளது பெற்றோரிடம் சில முறைகள் கைப்பேசியில் பேசியிருந்தான். மகளின் பயிலும் ஆர்வத்தைப் பற்றிக் கேட்டறிந்து, தங்களது கடமையினையும் அவர்கள் சரியாகவே செய்தனர்.

கணிணி வகுப்பிற்குச் செல்லத் துவங்கிய ஒன்றரை மாதத்தில், “ம்மா ஒவ்வொரு தடவையும் உன்கிட்டயே ஃபோன் வாங்கிப் பேசுறதுக்குக் கடுப்பா இருக்கு. எனக்குத் தேவைப்படும் போது நீ யார்க்கிட்டயாவது மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்க.

என்னால உடனுக்குடனே சார்கிட்டப் பேசி டவுட் கிளியர் பண்ண முடியல. அதுனால எனக்கொரு ஃபோன் வாங்கிக் கொடு!” என்றாள் நவீ.

“பதினஞ்சு வயசு தான் ஆகுது, உனக்கெதுக்கு ஃபோன்..?”

“அம்மா அம்மா ப்ளீஸ் ம்மா, அப்பாக்கிட்டச் சொல்லி வாங்கிக் கொடும்மா..”

“அதெல்லாம் முடியாது!”

“நல்லா படிக்கணும்னு மட்டும் சொன்னா போதுமா, அதுக்குத் தேவையானது எல்லாம் செஞ்சித்தர வேணாமா..? கம்ப்யூட்டர் கிளாஸ் போன்னு அனுப்புறீங்க, ஆனா லேப்டாப் கேட்டா.. முடியாதுன்னு சொல்லுறீங்க. இப்ப ஃபோனுக்கும் ‘நோ’ன்னு சொன்னா என்ன அர்த்தம்..?”

“நீ சின்னப் பொண்ணுடா, உனக்கு இப்ப எதுக்கு அதெல்லாம்..?”

“அப்ப கம்ப்யூட்டர் கிளாஸ் மட்டும் எதுக்கு..?”

“உன்னோட நாலேஜ்காகத் தான் நவீ.!”

“நான் யார்க்கிட்டப் பேசப் போறேன்.. என்னோட ஃப்ரண்ட்ஸ், அப்புறம் ஆகாஷ் சார்கிட்ட மட்டும்தான? அதுக்குப் போய் இப்படி யோசிக்கிறீங்க.? எனக்கு ஃபோன் வேணும், இல்லையினா நான் கிளாஸூக்குப் போக மாட்டேன்! அதையும் மீறி என்னைப் படிபடின்னு சொன்னீங்கன்னா, அப்புறம் நான் என்ன செய்வேன்னே தெரியாது..!” என்று கோபத்துடன் சென்றாள்.

வேறு வழியின்றி மகளைச் சமாதானம் செய்வதற்காக அடுத்த இரண்டாம் நாள் பொத்தான்கள் வைத்த நோக்கியா கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தார் நவீயின் தந்தை.

தனது தோழிகள் மற்றும் ஆகாஷிடம் கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டாள். கணிணி வகுப்பு தவிர்த்து மற்ற நேரங்களிலும், அவர்களது பேச்சுத் தொடர்ந்தது.

முதலில் பாட சம்பந்தமாக மட்டுமே இருந்த உரையாடல்கள், பிடித்தம், பிடித்தமின்மை, ஆசைகள், கனவுகள், எதிர்கால இலட்சியம் என அனைத்தை நோக்கியும் பயணித்தது.

நவீக்கு ஆகாஷிடம் இருந்த ஈர்ப்பு, அதற்கு அடுத்தக் கட்டத்தை நோக்கி.. சென்று கொண்டிருந்தது. ‘அது காதலாக இருக்குமோ.?’ என்ற சந்தேகம் அவளுக்குள்.

இருந்தும் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காது, தன் மனம் போன போக்கில் பிடித்தமானதைச் செய்து நாட்களை நகர்த்தினாள். இடையில் கல்வியிலும் கவனத்தைச் செலுத்திக் கொண்டாள்.

ஆகாஷிற்கு அவளுக்குள் நிகழும் மாற்றங்கள், சிறிது சிறிதாகத் தெரியத் துவங்கியது. அவனைக் கண்டாலே முகம் மலர்வதும், காரணமின்றிப் பேசத் துடிப்பதும், அருகில் செல்லும் நொடிகளில் தடுமாறுவதும், அவளைப் பற்றி ஏதேனும் பேசும் பொழுது சிலிர்த்துப் பதிலளிப்பதும் எனப் பலவற்றைக் கவனித்தான்.

அவனிடம் இருந்த போலியானவன் தொலைந்து இயல்பானவன் விழித்துக் கொண்டான். ‘தன்னைப் பற்றி, ஒரு பருவப் பெண் அறிந்து கொள்ளத் துடிக்கிறாள்!’ என்ற எண்ணமே, அவனைப் போதைக் கொள்ள வைத்தது.

ஆகாஷ் அப்படி ஒன்றும் நல்லவன் அல்லன். பணிபுரியும் இடத்தில் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஒழுக்கமானவனாய் தன்னைக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் தற்போது நவீயின் செயல்பாடுகள், அவனது உண்மை முகத்தை வெளிக் கொண்டு வந்துவிட்டது.

வகுப்பு நேரங்களில் வேண்டுமென்றே நவீயை நெருங்கி அமர்வது, அவளை உரசிய படியே கணிணியை இயக்குவது, தோளில் கையிடுவது, கன்னத்தை வருடுவது, முழங்காலுக்கு மேல் கைவைப்பது என அவனது செயல்கள் புதிய பரிமாணம் அடைந்தன.

அந்தத் தீண்டல்களில் கூச்சமாய் உணர்ந்து, “சார் ஒருமாதிரி இருக்கு, கையை எடுங்க!” என உரைப்பது அவளின் வாடிக்கையானது.

சில நேரங்களில், “சாரி.. என் ஃப்ரண்ட்ஸ் கூடப் பழகுற நியாபகத்துல கை வச்சிட்டேன்!” என்று விலக்கிக் கொள்பவன்.. பல நேரங்களில், “இதெல்லாம் இப்ப சகஜம் நவீ. உன் அம்மா, அப்பா, ஃப்ரண்ட்ஸ் எல்லாம் தொட்டுப் பேசுறது இல்லையா? அதுமாதிரி தான் இதுவும், ஃபீல் ஃபிரீ..” எனத் தனது தொடுதல்களை இன்னும் அழுத்தத்தோடு தொடரலானான்.

கூச்சத்தோடும், ஒருவித இனம்புரியா உணர்வோடும், காரணமில்லா எதிர்பார்ப்போடும், தேகத்தில் தோன்றும் மெல்லிய ரசனையுடன்.. அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் துவங்கினாள் நவீ.

நாட்களின் நகர்வில் தொடுதல்கள், மேலும் அழுத்தமாகின. பெண்ணவளின் இடையில் விரல்களை வைப்பது, சொல்லிக் கொடுப்பது போல் உடலை அவள்மேல் சரிப்பது, காதோரம் உரசுவது, கழுத்தில் மூச்சுக்காற்றைப் பரவவிடுவது.

முகத்தைப் பக்கவாட்டில் நெருங்கும் போது இடையூறு செய்யும் தனது கண் கண்ணாடியை கழட்டி விடுவது, “சிஸ்டம்ல ஒர்க் பண்ணும் போது தான, ஸ்பெக்ஸ் தேவை. நோட்ல எழுதும் போதெல்லாம் எதுக்கு.?” என அவளையும் கண்ணாடியைக் கழட்ட வைப்பது, “உனக்குக் கண்ணாடி போட்டா நல்லாவே இல்ல நவீ!” என்று அவளைத் தொடர்ந்து அணிவிக்க விடாமல் நேரத்தை நீட்டுவது என அவனின் செயல்கள் எல்லை மீறின.

மூளை, ‘நீ என்ன செய்யிற நவீ, இதெல்லாம் தப்பில்லையா.?’ என எச்சரிக்கை விடுக்க.. மனமும் உடலும், ‘இதுல என்ன இருக்கு, சும்மா தொட்டுப் பேசுறாரு! அவ்வளவு தான.?’ என்று சமாதானம் உரைத்து, எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியது.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை..

சிறப்பு வகுப்பு இருப்பதாய்க் கூறி நவீயை கணிணி மையத்திற்கு வரும்படி உரைத்திருந்தான் ஆகாஷ். சித்ராவிடமும் கைப்பேசியின் மூலம் அனுமதிப் பெற்றிருந்தான்.

எவரும் அற்ற அந்த வெறுமையான அலுவலகத்தைக் கண்ட நவீ.. சற்றே தடதடக்கும் மனதுடன் தனது வழக்கமான இடத்திற்குச் சென்று அமர்ந்தாள்.

சில நொடிகள் அமைதி காத்தவள் கைப்பேசியில் ஆகாஷிற்கு அழைப்பு விடுக்க, “ஏய் நவீ இங்க தான் இருக்கேன். என்ன பயந்திட்டியா..?” என்றபடி உள்ளே வந்தான்.

“ஸ்பெஷல் கிளாஸ்னு சொன்னீங்க, சென்டரே எம்டியா இருக்கு..?”

“அதுவா.. கம்ப்யூட்டரை சர்வீஸ் பண்ணுறதுக்கு ஆள் வந்தாங்க. சென்டர்க்கு வந்து என்னைப் பார்த்துக்கிற சொல்லியிருந்தாரு சார். சும்மாதான இருக்கப் போறோம், அதுனால உனக்குக் கிளாஸ் எடுக்கலாம்னு நினைச்சேன்!”

“ஆனா சர்வீஸ் பண்ணுற ஆளுங்க யாரையும் காணோமே..?”

“இப்பதான் கால் பண்ணாங்க, நாளைக்கு வர்றாங்களாம். நீயும் வந்திட்ட, ஒரு அரை மணி நேரம் கிளாஸ் எடுக்கவா..?”

எவரும் இல்லாமல் தாங்கள் இருவர் மட்டும் இருப்பது அவளுக்குச் சற்றுப் பயத்தைக் கொடுத்தாலும்.. ஆகாஷிடம் இருந்த பெயரிடப்படாத உணர்வும், ‘அரை மணி நேரம் தான..?’ என்ற எண்ணமும், அவளைத் தலையசைக்க வைத்தது.

முதல் பதினைந்து நிமிடம் வகுப்பைத் தான் எடுத்தான் ஆகாஷ், சில சில தீண்டல்களோடு. அது வழக்கம் தான் என்பதால், நவீ பெரியதாய்க் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் அதற்கு அடுத்தடுத்த நொடிகள் அவனின் நெருக்கம் அதிகமானது.

“நவீ.. நீ ரொம்ப அழகா இருக்க..!” என்றவனின் இதழ்கள் அவளின் காது மடலில் பதிந்து கன்னத்தில் உரச, “சார்.. என்ன இப்படி எல்லாம் செய்யிறீங்க, ப்ளீஸ் தள்ளி உட்காருங்க!” என்றவள், தானே விலகி அமர்ந்தாள்.

“ஏன், உனக்குப் பிடிக்கலையா..?”

“தெரியல.. ஆனா ஏதோ பயமா இருக்கு. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்!” என எழுந்தவளிடம், “ஏய்.. நான் சும்மா உன்கிட்ட விளையாட்டுக்குத்தான் அப்படி நடந்துக்கிட்டேன். உட்காரு, வந்ததுக்கு ரெண்டு மூணு ப்ரோகிராம் போட்டுட்டுப் போ!” என்றான் ஆகாஷ்.

அவள் குழப்பத்துடன், “நீங்க அப்படி நடந்துக்கக் கூடாது ஓகேவா.?” என்றிட, “சரி!” என்றவன் தள்ளி அமர்ந்தான். அதன்பின் எவ்வித சீண்டலும் செய்யவில்லை அவன். நவீயும் படிப்பில் கவனமாகிவிட, நேரம் சென்றதே தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடந்திருந்தது.

எதார்த்தமாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்த நவீ, “அச்சச்சோ இவ்வளவு நேரமாச்சா, நான் கிளம்புறேன் சார்!” என்றபடி எழ.. அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அடியில் சிக்கியிருந்த துப்பட்டாவினால் தடுமாறி ஆகாஷின் மீதே சரிந்தாள்.

எதிர்பாராது நடந்த நிகழ்வைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டவன்.. அவனது முகத்தில் உரசிய பாவையின் முகத்தை ஒருகையால் பற்றி, இதழ்களோடு இதழ் சேர்த்தான். மற்றொரு கையோ பருவ மங்கையின் மார்பில் அழுத்தமாய்ப் பதிந்தது.

அதுநாள் வரை உள்ளத்து உணர்வுகளில் திளைத்திருந்தவள், அந்த நொடி.. அதன் மயக்கம் தெளிந்து, நடக்கும் நிகழ்வின் விபரீதத்தை உணர்ந்து கொண்டாள்.

மார்பை விரல்களால் அளவீடு செய்தவனின் நடத்தையில் அதிர்ந்து, தன் முழுப் பலத்தையும் திரட்டி சட்டென்று எழுந்து நின்றாள். ஏதோ தவறு செய்து விட்டதைப் போல், மனம் தவித்தது.

கலங்கியிருந்த அவளின் கண்களைக் கண்டவன், “என்னாச்சு நவீ..?”

“என்ன சார் இப்படியெல்லாம் செய்யிறீங்க..?”

“என்ன செஞ்சேன் நான், நீயாதான் என்மேல விழுந்த..!”

“ஆனா சார்..” என்றவளுக்கு அதற்கு மேல் தொண்டை வலியெடுக்கத் துவங்கியது. பேச்சே வரவில்லை, அழுகைதான் வந்தது.

தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு அவசரமாய் அங்கிருந்து வெளியேறினாள், கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு!

“நவீ.. நவீ..” என அழைத்தபடி பின்னோடு வந்தவனுக்கு, மனதில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டது. ‘வெளியே எவரிடமும் இங்கு நடந்ததைச் சொல்லிவிட்டால்?’ என்ன செய்வது எனச் சிந்தித்தவன்.. அவசரமாய் அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

அதன்பின் இரண்டு நாட்கள் நவீ வகுப்பிற்கு வராமல் போகவே, கைப்பேசியில் அழைப்பு விடுத்தான் ஆகாஷ். எதிர்ப்பக்கம் சித்ரா.. ‘மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் நான்கு நாட்கள் விடுமுறை!’ எனப் பதிலளித்தார்.

அவர் இயல்பாகப் பேசியதை வைத்து, ‘அவள் நடந்த எதையும் உரைக்கவில்லை!’ என நிம்மதி மூச்சுவிட்டவன், நவீ வகுப்பிற்கு வரும் நாளுக்காகக் காத்திருந்தான்.

போர்வையைப் போர்த்திப் படுத்திருந்த சிறுமியால் நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்கவே இயலவில்லை. அவன் இயல்பாய் உரசும் போது சுகமாய் உணர்ந்த தேகம், பெண்ணையின் அங்கங்களைத் தீண்டும் பொழுது ஏனோ அருவருத்துப் போனது.

ஒருபுறம் அவன் தொட்ட இடமெல்லாம் ஒருவிதமாய் அரிப்பெடுப்பதாய்த் தோன்ற.. நகங்களால் கீறித் தன்னையே காயப்படுத்திக் கொண்டாள் நவீ. மறுபுறமோ ‘நல்லவேளை உடைக்கு மேலே தான் தீண்டினான்!’ என ஆசுவாசம் அடைந்தது பெண்மையின் மனம். நேரம் நகர நகர அதை நினைத்தே காய்ச்சல் கண்டது அவளின் தேகம்.

இதழ்கள், கன்னம், காது, கழுத்து எனக் காயமாய் இருந்த மகளைப் பார்த்த சித்ரா.. அதிர்ச்சி கலந்த பயத்துடன் விசாரிக்க, “என்னென்னு தெரியல ம்மா. உடம்பெல்லாம் அரிக்குது. என்னால அதைச் சகிச்சிக்கவே முடியல. அருவருப்பா இருக்கிற மாதிரி தோணுது ம்மா!” என அழுத மகளை, ஆறுதலாய் அணைத்துக் கொண்டார் தாயானவர்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவளுக்கான சிகிச்சையை அளித்து, அத்தோடு காய்ச்சலுக்கான மருந்தையும் வாங்கி வந்தார் சித்ரா.

தவறு செய்து விட்டதாய் எண்ணிய நவீக்கு.. குற்ற உணர்வின் காரணமாக அன்னையிடம் நடந்ததை உரைக்கும் தைரியம் இல்லாது போனது.

எப்பொழுதும் ஈன்றவரின் சொல்லுக்கு எதிராகப் பேசி வாதம் செய்பவள், அதன்பின் சித்ரா சொல்பவையைத் தலையாட்டி ‘சரி’ என்று ஏற்றுக் கொள்ளத் துவங்கினாள்.

ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் விளக்கேற்றும் சமயத்தில், “ஜோசியர் இதைத்தான் பொண்ணுக்குக் கண்டம் வரும்னு சொன்னாரா? பொம்பளைப் பிள்ள கடவுளே, முகமெல்லாம் கீறலோட இருந்தா நல்லாவா இருக்கும்..?

வெளியப் போகும் போது யாராவது ஏதாவது சொல்லீட்டா, மனசு சங்கடப்படுவா. அது அவளோட எதிர்காலத்தையே பாதிச்சா, எங்க நிலைமை என்னாகும்.?

அந்த அரிப்பெல்லாம் சீக்கிரமே குணமாகி, என் பொண்ணு பழையபடியே ஆகிடணும் சாமி!” என வேண்டிக் கொண்டவர் திருநீரை எடுத்து வந்து.. படுத்திருந்த நவீயின் முகம், கை, கால்களில் தேய்த்துவிட்டார்.

சிறுமிக்கு அன்னையின் வெகுளித்தனத்தையும், தன் மீதான அன்பையும் நினைத்துக் கண்கள் கலங்கியது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுபுறம் திரும்பிப் படுத்தாள்.

அதன் பின்பான நாட்களில் கணிணி வகுப்பிற்குச் சென்றவள்.. தள்ளி அமர்ந்தே பாடத்தைக் கவனித்துவிட்டு, ஆகாஷின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தாள்.

அவன் பலவாறாகப் பேச முயன்றும், நவீ அதற்கு இடம் கொடுக்கவில்லை. பாடம் சம்பந்தமான சொற்கள் தவிர்த்து, மற்ற எவையும் அவளது செவிப்புலனைக் கடந்து உள் நுழையவில்லை.

முன்னர்ச் சிறு சந்தேகம் என்றாலும் அவனுக்கு உடனே அழைப்பு விடுத்து ஒருமணி நேரம் உரையாடுபவள், அந்த நிகழ்வுக்குப் பின் எத்தனை பெரிய சந்தேகம் என்றாலும் தானே முயன்று அதைச் சரிசெய்யத் துவங்கினாள். விடையே கிடைக்காது போனாலும், அவனுக்கு அழைக்கக் கூடாது என்பதில் மட்டும் மிக உறுதியாய் இருந்தாள்.

ஆனால் அதற்கு மாற்றாக ஆகாஷிடம் இருந்து அவளுக்கு அழைப்புகள் வரத் துவங்கின. பலநேரம் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பவள், சில நேரங்களில் அன்னை அல்லது அவளது தந்தையிடம் பேசும்படி கைப்பேசியைக் கொடுத்து விடுவாள்.

மறுநாள் வகுப்பிற்கு வரும்போது.. ஆகாஷ் அதைப்பற்றி விசாரித்தால் அவளிடமிருந்து மௌனமே பதிலாக வரும்.

அன்றும் அப்படித்தான் அவன் விசாரிக்க.. “அடிக்கடி கால் பண்ணா வீட்டுல யாரு என்னன்னு கேட்க மாட்டாங்களா?”

“என்னைத்தான் உங்க வீட்டுல தெரியுமே..?”

“அதுக்குன்னு நான் பேசணுமா..?”

“ஏன் பேச மாட்டியா நவீ? எனக்குத் தெரியும் நீ என்மேல இருக்கிற கோபத்துல தான் இப்படி நடந்துக்கிறன்னு!”

அவள் அமைதிக் காக்க, “உனக்கு என்னைப் பிடிக்கும், அது தெரிஞ்சதால தான்!” என்றவனை அவள் அதிர்ச்சியுடன் நோக்கி, “அதுக்காக இப்படியா, என்னை என்னன்னு நினைச்சீங்க..?”

“நவீ நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. அன்னைக்கு ஏதோ தெரியாம அப்படி நடந்திடுச்சு. ப்ளீஸ் மறந்திடேன். இனிமேல் நான் அப்படி நடந்துக்க மாட்டேன். நீ பேசாம இருக்கிறது எனக்கு ஸ்ட்ரெஸா இருக்கு! என்னை உன்னோட அண்ணனா நினைச்சு, அதை மன்னிக்கக் கூடாதா..?”

அவனது வார்த்தையில் திடுக்கிட்டவள், “ச்சீ.. எப்படி இப்படி நாக்குக் கூசாம பேச முடியுது உன்னால.? உன் தங்கச்சிக்கிட்ட இப்படிதான் நடந்துப்பியா.? இதுநாள் வரைக்கும் நான்தான் மனசுல கற்பனையை வளர்த்து, தப்புச் செஞ்சிட்டதா நினைச்சிக்கிட்டு இருந்தேன்.

ஆனா இன்னைக்குத்தான் புரியிது தப்பு என்மேல இல்ல, நீதான் தப்பானவன்னு!” எனக் கண்கள் சிவக்க உரைத்துவிட்டு வெளியேறினாள்.

நவீயின் கணிணி பயிற்சியும் முடியும் தருவாயில் இருக்க.. அதன்பின்பு வகுப்பிற்குச் செல்வதையே தவிர்த்தவள், இடையில் ஒருநாள் மட்டும் சென்று தேர்வினை எழுதி, தனக்கான சான்றிதழைப் பெற்று வந்தாள்.

தன் அருகில் அமர்ந்திருந்தவளைக் கண்டு ஒரு பெருமூச்சு விட்ட ஆகாஷ், “ஹோ.. இதுனால தான், நான் என்னோட லவ்வை சொன்னப்ப அக்செப்ட் பண்ணலயா நீ..?”

மறுத்துத் தலையசைத்தவள், “இல்ல.. அந்தத் தொடுதலை என்னால இப்ப வரைக்கும் மறக்க முடியல, முடியும்னும் தோணல. அதுனால கல்யாணமே செஞ்சிக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

திடீர்னு நீ வந்து உன்னோட பேர் ஆகாஷ், என்னை லவ் பண்ணுறேன்னு சொன்னதும், பட்டுன்னு கோபம் வந்திடுச்சு. அதான் எதைப் பத்தியும் யோசிக்காம உன்னை அறைஞ்சிட்டேன்.

கடைசியா நீ என்னைப் பார்த்தப் பார்வை, யாரோ செஞ்ச தப்புக்கு உனக்குத் தண்டனைக் கொடுத்திட்டோமோன்னு ஒருமாதிரி குற்ற உணர்ச்சியை உருவாக்கிடுச்சு.

மனசு கேட்கல, மன்னிப்புக் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்! சாரி..!” என்றவள் எழுந்து தன் உடையில் ஒட்டியிருந்த மண் துகள்களைத் தட்டிவிட்டு நடக்க, “நவீ..” என்றபடி பின்தொடர்ந்தான் அந்தக் கடற்கரை மணலில் ஆகாஷ்.

“ப்ளீஸ் இனிமேல் லவ் அது இதுன்னு சொல்லிக்கிட்டு வராத!”

“ஓகே.. அப்ப கல்யாணம் செஞ்சிக்கலாம்!”

அவள் முறைத்துவிட்டு நடக்க, “உன்னால ஒரு ஆணோட தொடுகையைத் தான ஏத்துக்க முடியாது, கணவனோட அரவணைப்பை உன் உடம்பு அக்செப்ட் பண்ணிக்குமான்னு தெரிஞ்சிக்கலாம்!”

“சட்அப் ஆகாஷ்!”

“ப்ளீஸ் நவீ.. அது பருவ வயசுல தெரியாம நடந்தது, அதைப்போய் இப்ப வரைக்கும் நினைச்சிக்கிட்டு இருக்க..!”

“தெரியாம நடந்ததா?” என வறண்ட முறுவலை உதிர்த்தவள், “தெரிஞ்சே தான் நடந்திச்சு. ஒருவேளை அன்னைக்கு நான் ஒருநிமிசம் தடுமாறி இருந்தாலும், இன்னைக்கு என் வாழ்க்கை எப்படித் திசைமாறிப் போயிருக்குமோ..?”

“அதைத்தான் நானும் சொல்றேன். பதிமூணு வருசத்துக்கு முன்னாடியே அவ்வளவு போல்டா.. யாருக்கிட்டயும் சொல்லாம அந்த ஸ்விட்சுவேஷனை ஹேண்டில் பண்ணியிருக்க! இப்பப்போயி ஃபேமிலி லைஃபை நினைச்சு இப்படிப் பயப்படுற..?

நான் இருக்கேன், டிரை பண்ணிப் பார்க்கலாமே! ஒருவேளை உன்னால முடியலைனா ரெண்டு பேருமே கவுன்சிலிங் எடுத்துக்கலாம்!” என்றவனை அவள் இன்னதென்று புரியாத உணர்வுடன் நோக்க, “மே ஐ..?” எனக் கையை நீட்டினான் ஆகாஷ்.

எந்தப் பிரதிபலிப்பும் காட்டாது சிலையென உறைந்து நின்றவளின் கையை அவன் எட்டிப் பற்றிட, அவளின் கண்களில் இருந்து அனிச்சையாய் ஒருதுளி நீர் வெளியேறி.. இருவரின் இணைந்த கையின் இடைவெளிக்குள் நுழைந்து உள்ளங்கையில் பரவியது ஈரம்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

9 Comments

 1. Nerthiyana azhagana story sis. Unmaiya nadakura nigazhva azhaga unga ezhuthukal la kaati irukinga. Unga writing Ku ennoda salute! All the best sis ❤️

 2. Super sis!!! Really amazing!! Now a days, so many kids suffering like this, facing so many issues like this from school itself, they have to face everything bold with parents and have to trust parents, parents also keep trust and love in your kids and hear all problems like friends, then only they will share all things!!! It’s emotionally issue, in childhood days if they suffer like this then their future??? Really good solution to all!!! Hats of you sis!!!! Superbbbbb

 3. மிக அருமை 👌👌👌. யதார்த்தம். இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கதை. பெண்குழந்தைகள் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.❤️❤️❤️ வாழ்த்துக்கள் 💐💐💐

 4. ரொம்ப அருமையான கதை அக்கா . இந்த காலத்து பிள்ளைகளுக்கு தேவையான கதை . போல்ட் அ எப்படி ஹேண்டில் பண்ணணும். னு அழகா சொல்லி இருக்கீங்க . சூப்பர் அக்கா 👏👏👏

 5. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

 6. Wowww… 😍💞💞💞👌👌👌… கடைசி வரிகள் really awesome…. Excellent story 👍🏻👍🏻👍🏻👍🏻…

  1. மனம் கவர்ந்த மங்கை பருவத்தை
   மன்றாடி மீட்டவளு(னு)க்கு வாழ்த்துக்கள்

 7. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

 8. சிஸ் இந்த தலைமுறைக்கு தேவையான படைப்பு..தன்னை நல்லவனாய் காட்டிக்கொண்டது கூட மன்னிக்கலாம்..அப்படி ஒரு செயலை செய்துட்டு அண்ணானு சொன்னது இருக்கே🙂🙂🙂..நவீயோட குற்ற உணர்வும் அதுக்கு அவளே தண்டித்ததும் இறுதியில் வந்த ஆகாஷும் செம்மமமமம சிஸ்..சூப்பர் கதை.. வாழ்த்துக்கள் 💐