
நேசப் பெருவெளியில்..!
நேசம்-1
அந்த காலை நேரத்திலேயே அதீத பரபரப்பாக இருந்தது அந்த வீடு! சீறிப்பாயும் ஏவுகணையைப் போல் குக்கர் விசில் சத்தம் சூழ்நிலையை நிறைத்துக் கொண்டிருந்தது.
படுக்கையறைக்கும் வரவேற்பறைக்கும் நான்கு முறைக்கு மேல் நடந்து ஓய்ந்துவிட்டு மணியைப் பார்த்தாள் அவள். கடிகாரத்தில் நேரம் ஏழு முப்பத்தி ஐந்தை தொட்டு நின்றது.
“ஐயோ! லேட் ஆகிருச்சு! ம்மா பஸ் வந்துரும்! இப்போ தான் குக்கரில் விசிலே வருது!” கண்ணாடி முன்னால் நின்று தலையைப் பின்னியபடியே கத்திக் கொண்டிருந்தாள் அவள்.
“நான் என்னடி பண்ணட்டும்? எத்தனை வேலையைத்தேன் நான் ஒத்தைக்கு பார்க்கிறது? எனக்கு ரெண்டு கைதேன் இருக்கு!” சலித்தபடியே பதில் சொன்னாலும் மகளுக்கு தேவையானதை அவசரமாய் செய்துக் கொண்டிருந்தார் செல்வி.
“செல்வியக்கா! எம்புட்டு நேரமா நிக்கிறது? ஒரு பால் பாக்கெட் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டு போயேன்!” வெளியிலிருந்து சத்தம் கேட்கவும், அடுப்புத் தீயைக் குறைத்துவிட்டு,
“இந்தா வந்துட்டேன்!” எனக் குரல் கொடுத்தபடியே அடுக்களையின் பக்கவாட்டிலிருந்து கதவின் வழியே சென்றவர், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்துக் கொடுத்தார்.
“புள்ளை ஸ்கூலுக்கு கிளம்புறா அதேன்!” எனச் சமாளிப்பாய் சொன்னபடியே பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு சில்லறையை எடுத்துக் கொடுத்தார் செல்வி.
“ம்க்கும்! உன் மவ இன்னைக்குதேன் ஸ்கூலுக்கு கிளம்புறாளா? நெதமும் இதே பாடு தானே?” எனச் சொன்ன அந்தப் பெண்மணி சென்றுவிட,
“ம்மா! இன்னும் என்னம்மா செய்றே? பஸ் பக்கத்தில் வந்துருச்சு!” என்ற மகளின் குரலில் பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினார் செல்வி.
“இந்தா வந்துட்டேன் டி!”
“எனக்கு சாப்பாடு காலைக்கும் சேர்த்தே வச்சிடும்மா! நான் பஸ்ஸில் போகும் போது சாப்பிட்டுக்கிறேன்!” என்றவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“நெதமும் உன்னோட இதே பொழைப்பா போச்சு. நேரமே எழுந்துக்கிறதுக்கு என்ன? காலைச்சாப்பாட்டுக்கு இட்லியும், மதியத்திற்கு புதினா சாதமும் வச்சிருக்கேன் டி மறக்காமல் சாப்பிடு!” என செல்வி சொல்ல,
“ம்ம்!” என்றபடியே வாசலுக்குப் போய் செருப்பை அணிந்தவள்,
“ம்மா! அப்பா எங்கே? பஸ் ஸ்டாண்டில் என்னைப் போய் விடணுமே? போச்சு போ! இன்னைக்கு லேட்டுதேன்! அந்தப் பிரின்ஸிபல் என்னைப் பார்வையாலே எரிச்சுப்புடும்!” எனப் பதறினாள்.
“என்னத்துக்குடி இப்படி பதறி என்னையும் பயமுறுத்துற? உன் கூட ரெண்டுநாள் இருந்தால் போதும், ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போல! அப்பா காய்கறி வாங்க மார்க்கெட் போயிருக்காரு! இப்போ வர்ர நேரந்தேன்!” எனச் சொன்ன செல்வியின் பதில் அவள் காதில் ஏறவே இல்லை.
“ம்மா! அவரு எப்போ வந்து நான் எப்போ போறது?” எனச் சிணுங்கியவள், காலை உதறியபடியே தெருவில் இறங்கி நடக்கத் துவங்கியிருந்தாள்.
“உனக்கு அழகுநிலான்னு பேர் வச்சதுக்கு பதில், அவசர நிலான்னு வச்சிருக்கலாம்! இருடி ரெண்டு நிமிஷத்தில் அப்பா வந்துருவாரு!” என செல்வி கத்திக் கொண்டிருக்கும் போதே, கடைக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினார் புவியரசன்.
“நான்தேன் வந்துருவேன்னு சொன்னேன்ல்ல? பிள்ளையை என்னைத்துக்கு நடக்க விட்டவ?” என புவியரசன் கேட்க,
“இந்தாருங்க! உங்க மவ நேரமாகிருச்சுன்னு சிலுப்பிக்கிட்டு போறா! பையெல்லாம் கொண்டாங்க! முதலில் அவளைப் போய் பஸ் ஸாண்ட்டில் விட்டுட்டு வாங்க!” எனச் சூழ்நிலை புரிந்து கணவரிடமிருந்து பைகளை அவசரமாய் வாங்கிக் கொண்டு கணவரை அனுப்பினார் செல்வி.
அவளை அனுப்பி வைத்துவிட்டு நிமிர்ந்த பின் தான், இத்தனை நேரமாய் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டார்.
“இந்தப் பொண்ணை நெதமும் ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குள்ளே உசிரு போய் உசிரு வருதுடா சாமி!” எனப் புலம்பியவர், நாற்காலியில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்தார்.
புவியரசன்-செல்வி தம்பதிகளுக்கு மூன்று மகவுகள். மூத்தவன் இனியன். இனியனுக்கு அடுத்துப் பிறந்தவள் தான் அழகுநிலா. நிலாவிற்கு அடுத்ததாய் நீண்ட இடைவெளிக்குப் பின் பிறந்தவன் தான் கவின்.
இரு ஆண் பிள்ளைகளுக்கு மத்தியில் வந்து பிறந்ததாலோ, ஒற்றை பெண் மகவு என்பதாலோ அவளுகாண சலுகைகள் இந்த வீட்டில் கொஞ்சம் அதிகம் தான்.
இனியன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் துறையில் பணியாற்றுகிறான். சென்ற வருடம் தான் அவனுக்கு திருமணம் முடிந்திருந்தது. மனைவி ஷாலினியுடன் சென்னையில் வசிக்கிறான்.
அழகுநிலாவோ, எம்.ஏ பி.எட் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். கடைக்குட்டி கவின் இப்போது தான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
மகளை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் அமர்ந்து தன்னை மீட்டுக் கொண்டவர், கடையையும் மேற்பார்வை பார்த்தபடியே சின்னவனையும் கிளப்பியிருந்தார்.
“கவினு! அம்மா உனக்குப் பிடிச்ச தயிர் சோறுதேன் வச்சிருக்கேன். மிச்சம் வைக்காமல் சாப்பிடணும்!”
“ம்மா! பொட்டேட்டோ!” தாய் ஊட்டிய இட்லியை வாயில் வைத்தபடியே பேசினான் கவின்.
“வச்சிருக்கேன் டா! எல்லா காயும் சாப்பிட்டால்தேன் சத்து கிடைக்கும்! பொழுதுக்கும் உருளைக்கிழங்கா சாப்பிடக் கூடாது! அப்பறம் ஸ்கூலில் அக்காவை நீதேன் சாமி பார்த்துக்கணும்!” சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்ற எண்ணத்தில் சொன்னாரோ என்னவோ?
“ம்மா! அக்கா டீச்சரு! நான் ஸ்டூடண்ட். அவளை எப்படி நான் பார்த்துக்க?!”
“ஸ்கூலில் அவள் இவள்ன்னு பேசக்கூடாது கவினு.. அக்கான்னுதேன் சொல்லணும்! அக்கா யாருக்கிட்டே பேசினாலும் அம்மாகிட்டே சொல்லிப்புடணும்! அக்கா கூடவே சூதானமா வந்துடணும் கவினு!” சின்ன மகனிடம் கட்டளையாய் சொல்லி வைத்தார் செல்வி. ஐந்தாம் வகுப்பில் படித்தாலும் மற்ற பிள்ளைகளை ஒப்பிடுகையில், சிறியவன் என்பதாலேயே ஆயிரம் பத்திரங்கள் சொன்னார் அவர். அழகுநிலாவும், கவினும் ஒரே பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அவள் ஆசிரியை என்பதால் முன்னரே சென்றுவிடுவாள்.
“சரிம்மா! அக்கா என்ன செஞ்சாலும் சொல்றேன். அப்போ எனக்கு நான் கேட்ட பொம்மை வாங்கித் தரணும்!” என தன் வேலையைச் சாதித்துக்கொள்ள முயன்றான் அவன்.
“இப்போவெல்லாம் எதுவும் கிடையாது கவினு! திருவிழாவுக்குதேன் வாங்கித் தருவேன்!” என்றபடியே சின்னவனுக்கு உணவை ஊட்டி முடித்து வாயைத் துடைத்துவிட்டார்.
“எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியா கவினு?” என்றபடியே அவனைக் கிளப்பிக்கொண்டு வெளியே வர அழகுநிலாவை விட்டுவிட்டு திரும்பி வந்து சேர்ந்தார் புவியரசன்.
“இந்தாருங்க! கடையைப் பார்த்துக்கோங்க! நான் தம்பியை பஸ் ஏத்தி விட்டுட்டு வாரேன்!” என்றபடியே தெருமுனையை நோக்கி நடக்கத் துவங்கினார் செல்வி. பள்ளி பிள்ளைகள் செல்வதற்கான பேருந்து தெருமுனை வருவதால் அங்கேயே மகனை ஏற்றிவிட்டுவிடுவார்.
ஆனால் ஆசிரியர்களுக்கான பள்ளிப் பேருந்தைப் பிடிக்க பேருந்து நிறுத்தத்திற்கு தான் செல்ல வேண்டும்.
அதற்காகத்தான் அழகுநிலா அத்தனை அவசரமாய் ஓடியது.
செல்வி கவினை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்ட அதே நேரம், ஆசிரியர்களுக்கான பள்ளிப் பேருந்தில், செல்வி கட்டிக்கொடுத்த இட்லிகளை உண்டுக் கொண்டிருந்தாள் அழகுநிலா.
‘அடேய்! கொஞ்சம் மெதுவாத்தேன் போங்களேன் டா! இம்புட்டு வேகமா போய் நேரடியாய் சொர்க்கத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துடாதீங்க டா!’ யாருக்கும் கேட்காமல் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“ஏய்! அழகி! இன்னைக்கும் சாப்பிடாமலே வந்துட்டியா?” எனக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அழகுநிலாவுடன் பணிபுரியும் கீர்த்தனா.
“இரு டி! தண்ணியைக் குடிச்சுக்கிறேன். இவிங்க வண்டி ஓட்டுற வேகத்துக்கு தண்ணியைக் கூட குடிக்க முடியலை!” என்றவள், வாகனம் நின்றிருக்கும் அந்த நொடி நேர இடைவெளியில் தண்ணீரைக் குடித்துவிட்டு, உணவு டப்பாவையும் ஸ்பூனையும் பத்திரப்படுத்தினாள்.
“உனக்கென்னம்மா எட்டுமணிக்குதேன் நீ வண்டியில் ஏறுற.. நான் ஏழு முப்பத்தி அஞ்சுக்கெல்லாம் ஏறணும். கொஞ்சம் நேரமானாலும் என்னால்தேன் லேட்டுன்னு சொல்லுவாய்ங்க!” என சடைத்துக் கொண்டாள்.
“மெதுவா பேசு டி! ப்ரின்ஸிபல் நம்ம பஸ்ஸில்தேன் இன்னைக்கு வருது!” கிசுகிசுப்பாய் கீர்த்தனா சொல்ல,
“யாத்தே!” முணுமுணுப்பாய் சொன்ன அழகுநிலாவும் கீர்த்தனாவும் கல்லூரித் தோழிகள். கல்லூரிகால நட்பு இப்போது வரை தொட்டுத் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
“எதுக்குடி இம்புட்டு சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வர்ரதுக்கு உன் வீட்டுப் பக்கத்திலே ஏதாவது ஸ்கூல் பார்க்கலாமே டி!”
“தம்பி படிக்கிறானே டி! அவனுக்காகத்தேன் இந்த ஸ்கூலுக்கு வர்ரேன்.!”
“அவன் இன்னும் படிச்சு முடிக்க ஏழு வருஷமாகும்! என்னையவெல்லாம் கல்யாணம் முடிச்சு எப்போடா பத்தி விடுவோம்ன்னு இருக்காய்ங்க எங்க வீட்டில்! நீ என்னடி இப்படி சொல்ற?” என ஆச்சரியமாய்க் கேட்டாள் கீர்த்தனா.
“எங்க வீட்டு நிலமைதேன் உனக்கே தெரியுமே டி! இப்போதைக்கு இங்கேதேன்!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பேருந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைய,
“இன்னைக்கு ப்ரேயர்க்கு நானும் ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லிருக்கேன் டி! கவிதா மிஸ் கூப்பிட்டாங்க! அப்பறம் பார்க்கலாம் டி!” எனச் சொன்னபடியே வாகனத்திலிருந்து இறங்கி நடந்தவளுக்கு திருமணம் பற்றியோ, அதன் பின்னான வாழ்வைப் பற்றியோ எந்த எதிர்பார்ப்புகளோ, ஆசைகளோ, கனவுகளோ இல்லை. அவள் அன்னை சொல்வது தான் அவர்கள் வீட்டில் நடக்கும். மதுரையில் மட்டுமல்ல அழகுநிலாவின் வீட்டிலும் மீனாட்சி ஆட்சி தான்.
******
“புள்ளை வந்துருவான்ல்ல?” வாசலையே பார்த்தபடி வினவினார் மாதவி.
“வந்துருவான் டி! என்னத்துக்கு இப்படி பதறிக்கிட்டு நிற்கிறவ? அவன் நம்ம புள்ளைதேன்!” எனச் சொன்னபடி அழுத்தமாய் மனைவியைப் பார்த்தார் இந்திரன்.
“ம்க்கும்! பெத்த எனக்கு தெரியாதாக்கும் என் புள்ளைன்னு! ஊர் ஊராக அலைஞ்சு திரிஞ்சுட்டு இப்பத்தேன் இங்கண இருக்க நேரம் கூடி வந்துருக்கு. திரும்ப அவன் அடுத்த ஊரைப் பார்த்து போறதுக்குள்ளே கல்யாணத்தை முடிச்சு வச்சுப்புடணும்!” எனச் சொன்னபடியே கணவனை அர்த்தமாய் பார்த்தார் மாதவி.
“செஞ்சுருவோம் மாதவி! முதலில் அவன் வரட்டும்! வந்ததும் வராததுமா அவன்கிட்டே எதையும் சொல்லி வைக்காதே! அவன் குணம்தேன் உனக்குத் தெரியுமே?!” மனைவியை எச்சரித்து வைத்தார் இந்திரன்.
“எப்படியும் பேசித்தானே ஆகணும்? எம்புட்டு வருஷத்துக்கு இப்படி ஒத்தையில் ஊர் ஊராகச் சுத்திக்கிட்டு திரிவான்.? நான் மட்டுமே பேசினால் அவன் கோவந்தேன் படுவன். பெத்த அப்பனா நீங்களும் கொஞ்சம் பேசலாம் தப்பில்லை.!”
“நான் பிடிச்ச முயலுக்கு மூணுகாலுன்னு திரியறவன்கிட்டே என்னத்தை பேசச் சொல்ற? வேலைன்னு வந்துட்டா குடும்பத்தையே மறந்துறான் உன் மயன். நாளைக்கு வீட்டுக்கு வர்ர பொண்ணையும் மறந்துட்டு திரிஞ்சான்னா என்ன செய்வ?” மகனின் குணம் அறிந்தவராய் கேட்டார் இந்திரன்.
“அதெல்லாம் எம் மயன் மாறிருப்பான்! முப்பது வயசு ஆகப் போகுது! இன்னுமா அப்படியா இருப்பான்?”அன்னையாய் மகனுக்கு பரிந்து வந்தார் மாதவி.
“உன் மயன்தானே நல்லா மாறியிருப்பான். தனியாவே இருந்து பழகி அதுதேன் வாழ்க்கைன்னு மாறிட்டான் உன் மயன்.” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மாடிப்படிகளில் இறங்கி வந்தான் அவர்களின் இளைய மகன் ஹரீஷ்.
“அடேய் கரீஷு! உன் அண்ணன் ரூமில் கிடந்த உன் குப்பையெல்லாம் எடுத்துட்டியா? அவன் வந்தான்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்.!” என மாதவி சொல்ல,
“எம்மா! தயவு செஞ்சு என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடாதம்மா! என்னத்துக்கும்மா இந்தப் பேரை வச்சீங்க? பேசாமல் பேரே இல்லாதவன்னு பேர் வச்சிருங்க!” எனக் கோபமாய் சொன்னான்.
“ஏன்டா! பேர் சொல்லி கூப்பிட்டதுக்கா இம்புட்டு பேச்சு பேசுற? கரீஷுன்னு தானேடா கூப்பிட்டேன்?” பாவமாய் சொன்னார் மாதவி.
“ம்மா! என் பேர் ஹரீஷ் புரியுதா?”
“ஏன்டா மகனே, பேரு வச்ச எங்களுக்கு தெரியாதா? உனக்கு நேரத்துக்கு சோறு வச்சதுதேன் நாங்க செஞ்ச தப்பு!” என அவனைப் பெற்றவர் என்பதை நிரூபித்தார் மாதவி.
“ப்பா! நீங்களாச்சும் அம்மாகிட்டே சொல்லுங்களேன்? எனக்கு என் பேரே பிடிக்காமல் போயிருச்சுப்பா!”
“விடுடா ஹரிஷ்! உங்க அம்மாவுக்கு உன் பேரை அப்படித்தேன் கூப்பிட வருது! உங்க அம்மாவை சொல்லியெல்லாம் திருத்த முடியாது!” என இந்திரன் சொல்லிக் கொண்டிருக்க,
“ஏன்டா, சின்னப் புள்ளையிலிருந்து இப்படித்தேன் கூப்பிடுறேன்.. அப்போவெல்லாம் ஈஈன்னு பல்லைக்காட்டி இளிச்சுட்டு, இப்போ கொஞ்சம் வளர்ந்ததும், பெத்தவள் கூப்பிடுறதே தப்பா தெரியுதோ?” எனப் புரியாமலே புலம்பினார் மாதவி.
“உன்கிட்டே பேசி என்னால் ஜெய்க்க முடியாதும்மா! என்னை விட்டுரு! எப்பவும் போல என்னைச் சின்னக்குட்டின்னு கூப்பிட்டுக்கோ! இந்த கரீஷுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை!” எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான் ஹரீஷ்.
“சரி, விடுடா! இன்னைக்கு நீ காலேஜ் போகலையா?” எனக் கேட்டார் இந்திரன்.
“அண்ணன் வரட்டும்! அவனைப் பார்த்துட்டு அப்பறம் போறேன்!” என்ற ஹரிஷ் பல் மருத்துவப் படிப்பில் இறுதியாண்டில் இருக்கிறான்.
“ஏன் காலேஜ் போகலைன்னு உங்கண்ணே வந்து வையப் போறான் வாங்கிங்க!” என மாதவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது. அவர்கள் எண்ணத்தின் நாயகனே கண் முன் வந்து நின்றிருந்தான்.
“ராசா! எப்படி இருக்க?”
“ஹாய் அண்ணா!”
“வாப்பா! நல்லா இருக்கியா?”
என்ற விசாரிப்புகளுக்கு தலையசைப்பை பதிலாய் கொடுத்தபடியே பயணப் பொதிகளுடன் உள்ளே வந்து நின்றான் அவன்.
“இளைச்சு கறுத்து கரியோடாகப் போய்ட்டியே ராசா!” திண்ணிய உடல்வாகுடன் நின்றவனைப் பார்த்து மாதவி சொல்ல சட்டென சிரித்துவிட்டான் ஹரிஷ்.
“என்னத்துக்குடா சிரிக்கிறே? என் புள்ளையைச் சொல்றேன்னு உனக்குப் பொறாமை!” என மாதவி சொல்ல,
“ம்மா! போதும்! என்னைப் பார்த்தால் இளைச்சு போன மாதிரி தெரியுதா? சும்மா பேசணும்ன்னு பேச வேணாம்! நான் குளிச்சுட்டு கிளம்பணும்!” என்றவன் தன் அறையை நோக்கிச் செல்ல,
“இன்னைக்கேவா? ரெண்டுநாள் பொறுத்து போகலாமே!” எனச் சொன்ன மாதவி, அவன் முறைத்த முறைப்பில் அப்படியே அமைதியாகிப் போனார்.
“டேய், ஹரீஷ்! காலேஜ் கிளம்பலையா? முதலில் காலேஜ் போற வழியைப் பாரு!” எனத் தம்பியை விரட்டியவன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
“அவன்கிட்டே எதையாவது பேசுவீங்கன்னு பார்த்தால், பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நிக்கிறீங்க.?” மகனின் செவியில் விழாதவாறு குரலை தாழ்த்திப் பேசினார் மாதவி.
“வந்ததும் வேலைக்கு கிளம்புறான்.. அவன்கிட்டே என்னத்தை பேசச் சொல்ற? நீ இவனை நம்பி கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி வை, அன்னைக்கும் வேலை இருக்குன்னு ஓடுவான்! அப்பறம் அந்தப் பொண்ணு கழுத்தில் நீதேன் தாலி கட்டணும்! பார்த்துக்கோ!”
“ம்க்கும்! என்கிட்டே மட்டும் ஊரு வாய் பேசுங்க! உங்க மயன்கிட்டே ஒண்ணும் பேசாதீங்க!”
“கிளம்பி வந்தான்னா நீங்க ஏன் ஆஃபீஸ் போகலைன்னு என்னை விரட்டுவான்! நான் கிளம்புறேன்! நீயாச்சு உன் மயனாச்சு!” எனச் சொன்னவர், தான் மேலாளராய் பணிபுரியும், கூட்டுறவு வங்கியை நோக்கி தன் பயணத்தைத் துவக்கினார்.
“அம்புட்டு பக்கிகளும் நம்மளை அம்போன்னு அத்துவிட்டு போயிருச்சுங்க! இவன்கிட்டே எப்படி பேசுறது?” என அவர் கையைப் பிசைந்தபடி நிற்க, கிளம்பித் தயாராகி அறையிலிருந்து வெளியே வந்தான் அவன். காவல் துறையினருக்கான சீருடை அணிந்து மிடுக்குடன் நடந்து வந்தவனின் தோரணை இராஜ கம்பீரத்துடன் இருந்தது.
அவன் தோள்பட்டையில் மின்னிக் கொண்டிருந்த மூன்று நட்சத்திரங்கள் அவனின் பதவியைச் சொல்லாமல் சொன்னது. எல்லாவற்றிற்கும் மேலாக அவன் மார்பு பட்டையில் மின்னிக் கொண்டிருந்த அவனின் பெயர் “அதிவீரன்” என்ற பெயர் அந்த சீருடைக்கு கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்தது. பணி மாறுதல் என ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்போது தான் சொந்த ஊரான மதுரைக்கு வந்திருக்கிறான். மதுரையின் தெற்கு பகுதிக்கான டி.எஸ்.பியாக இன்று அவன் பொறுப்பேற்க வேண்டும்.
காவல்துறைக்கான பிரத்யோக சீருடையில் வெளியே வந்தவனிடம் எப்பபடிப் பேச்சைத் துவக்குவதெனப் புரியாமல், கையைப் பிசைந்தபடியே நின்றவர்,
“சாப்பிடுறியா அதி?” தயக்கமாகவே கேட்டார்.
“நானே எடுத்து சாப்பிட்டுப்பேன்.. நீங்க போங்கம்மா!” எனச் சாதாரணமாய் சொன்னவன், கை கழுவி விட்டு, உணவு மேஜையில் அமர்ந்து இட்லியைத் தட்டில் எடுத்து வைத்து உண்ணத் துவங்கியிருந்தான்.
கிடைத்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட்டுவிட்டு செய்வதறியாமல், மகனையே பார்த்துக் கொண்டு நின்றார் மாதவி.
“என்கிட்டே எதாவது சொல்லணுமா?” உணவில் கவனம் போல் காட்டிக் கொண்டாலும், தன்னிடம் தான் கேள்வி கேட்கிறான் என்பது மாதவிக்குப் புரிந்தது.
“அது ஒண்ணுமில்லை அதி! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற?”
“இப்படியேன்னா? எப்படி? எனக்கென்ன நல்லா தானே இருக்கேன்?” என நிமிர்ந்தவனின் குரல், எதுவாக இருந்தாலும் நேரடியாகக் கேள் எனச் சொல்லாமல் சொன்னது.
“அது வந்து.. உன் கல்யாணம்.. நானும்..அப்பாவும் முடிவு.!” எனத் திணறினார் அவர்.
“பண்ணிக்கிறேன்.!” என அவன் வாயிலிருந்து உதிர்ந்த ஒற்றை வார்த்தையில், மனம் குளிர்ந்து போனது மாதவிக்கு.
என நிதானமாக எழுந்து நின்றவன், எதிரில் நின்ற தாயைத் தான் உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் என்ன இருந்ததென மாதவியால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
“நிஜமாவே தான் சொல்றியா அதி? அப்பாக்கிட்டே பொண்ணு பார்க்க சொல்லட்டுமா?” மகனின் மனநிலையை மட்டுமல்ல, தன்னையும் தெளிவுபடுத்திக் கொள்ளவே கேட்டார் மாதவி.
“ம்ம்ம்!” ஒற்றை எழுத்தில் அவன் சொன்ன பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாய் தோன்றியது மாதவிக்கு.
‘இந்த கரீஷ் பையன் வாயைத் திறந்தால் மூட மாட்டேங்குறான். இந்த பெரிய எருமை பதில் சொல்லக் கூட வாயைத் திறக்க மாட்டேங்குது! எல்லாம் தலையெழுத்து!’ மனதுக்குள் புலம்பியவர், ஸிங்க்கில் தட்டைக் கழுவி வைத்துக் கொண்டிருந்த மகனைத்தான் பார்த்தார். அவன் முக பாவனைகளிலிருந்து எதையும் அறிய முடியாவிட்டாலும் அவன் சம்மதத்தின் பின் ஏதோ பூகம்பம் காத்திருப்பதாகத்தான் மாதவிக்குத் தோன்றியது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆரம்பம் சூப்பர். மாதவி சூப்பர்.
மிக்க நன்றி கலை மா ❤💜
நைஸ் ஸ்டார்ட் 😍😍😍
அதிவீரன் அழகுநிலா 💞 சூப்பர் நேம்ஸ் 🥰
என்ன உடனே சரின்னு சொல்லிட்டான் 🤔 இதுக்கா மாதவி இவ்வளவு பயந்தாங்க 😅