Loading

    நெஞ்சத்தில் தஞ்சமானவளே02

 

ஆரண்யா தான் திருச்சி வந்து விட்டதை ராகவிற்கு அழைத்து சொல்லி விட அவளது உடல் நிலை பற்றி எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என யோசித்து கொண்டு இருந்தான் முகில்.

“அவளுக்கு  ஃபோன் பண்ணி நாமளே கேட்டுடலாமா இந்த நேரத்தில் கூப்பிட்டா தப்பா நினைப்பாளோ…  அவ எப்படி இருக்கான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது….!!”  தவித்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. ஆனால் அவளுக்காக ஏன் நாம் தவிக்கிறோம் என்று தான் அவன் உணரவில்லை.

நான் யாருக்கும் காத்திருப்பதில்லை என்ற ரீதியில் கதிரவன் கீழ் திசையில் உதித்து விட்டான்.

மறுநாள் காலையில் எழுந்தவனுக்கு பயணம் செய்த களைப்பும் தூங்காததன் விளைவும் கண்கள் சிவந்து எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. கூடவே இனாமாக தலைவலியும் சேர்ந்து கொள்ள மீண்டும் படுத்து கொண்டான்.

“என்னாச்சு முகில் ….ஏன் மறுபடியும் படுத்துட்ட…  நேத்து வாமிட் எடுத்தது ஒரு மாதிரி இருக்கா… நான்  டேப்லட் வாங்கிட்டு வரவா ??”என அக்கறையாக கேட்டான் ராகவ்.

(முகில் ராகவ் இருவரும்  ஒரே அறையில்  தான் தங்கி இருந்தனர் … சென்னை  தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் மாடி போர்சனில் வாடகைக்கு குடி இருந்தனர் இருவரும்…  ராகவ் தஞ்சாவூரை  சேர்ந்தவன்…  அங்கே உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்தவன்  சம்பளம் சற்று கூடுதலாக கிடைக்கும் என்ற காரணத்தால் சென்னைக்கு வந்து எம்கே கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.  ஒரு வருடத்திற்கு முன்பு  முகில் வந்து  கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு சேர பொருளாதார பிரச்னை காரணமாக இருவரும் ஒரே அறையில் தங்கி வாடகைபணத்தையும் ஹோட்டலுக்கு உணவுக்காக செலவிடும் பணத்தையும் மிச்சம் பிடிக்கின்றனர் . ஆரம்பத்தில் முகில் தான் மிகவும் கஷ்டப்பட்டான்…. அவனுக்கு சமைக்க தெரியாமல் கை காலை சுட்டு ஏதோ தோசை ஊற்றும் அளவிற்கு வந்து விட்டான்.  ராகவிற்கு சமைக்க தெரிந்ததால் பெரும்பாலும் அவனே சமைத்திடுவான்…. இவர்கள் நட்பு இவ்வாறு வளர்ந்து இருந்தது )

“ம்ம்ம்ஹ்ம் சரி டா….  கண்ணெல்லாம் ரொம்ப எரியுது …நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்…” என கண்களை மூடி படுத்திருந்தவன் மனக்கண்ணில் ஆரண்யா நின்றிருந்தாள் தேவதையாக…இதற்கு மேலும் சமாளித்திட இயலாது என்று எண்ணியவன் வேகமாக ஆரண்யாவின் கைபேசி எண்ணை நினைவுக்கு கொண்டு வந்து  அதை தன் அலைபேசியில் பதித்து அழைத்து விட்டான்.

அவள் எப்படி பேசுவாள் என்ன பேசுவாள் என தனக்குள் ஒரு உரையாடல் நிகழ்த்தி தான் என்ன பேச வேண்டும் என யோசித்திருக்க எதிர் முனை காட்டு கத்தலாக கத்தியது.

“ஹலோ யாரது….  ஃபோன் பண்ணா பேச மாட்டீங்களா… ?? எத்தனை தடவை ஹலோ சொல்றது…  சும்மா  போன் பண்ணிட்டு பேசாம வைக்கிறதே வேலையா போச்சு…. எந்த லூசா இருந்தாலும் கையில கெடைச்ச…  கொத்து பரோட்டா போட்டுடுவேன் ” என கட் செய்து விட்டது. 

“இந்த கிழி கிழி கிழிக்கிறாளே எந்த ஊரு காரியா இருப்பா !!” என்று யோசித்தவன் மீண்டும் அழைக்கலாமா என யோசித்து இருக்க  வாங்கிய அர்ச்சனையில் வந்த தூக்கம் கூட காணாமல் போய் விட்டது முகிலுக்கு.

மாத்திரை வாங்கி வந்த ராகவிற்கு முகிலை கண்டு குழப்பமானது.

“என்னடா தூங்கி இருப்பன்னு நினைச்சேன் இப்படி  மந்திரிச்சு விட்ட மாதிரி உட்கார்ந்து இருக்க….  ஏதாவது தர்காவுக்கு தான் போகலாமா டா” என கேட்டவனை கண்களை சுருக்கி முறைத்தான் முகில்.

“சரி சரி முறைக்காத…  பல்லு விளக்கிட்டு வா  … நான் காபி தரேன் அதோட சேர்த்து இந்த டேப்லட்டையும் போட்டுடு “என அவன் கையில் திணித்து விட்டு  காபி கலக்க சென்றான்….ராகவ்.

அதற்குள் முகிலின் அலைபேசி அடிக்க அதை எடுத்து பார்த்தவன் உடனே கட் செய்தான்.

மீண்டும் மீண்டும் கைபேசி அலறிக் கொண்டு இருக்க…  ராகவ் எட்டி பார்த்து விட்டு .,”ஏன் டா அந்த  ஃபோனை எடுத்தா தான் என்ன  …வாரா வாரம் உனக்கு இதே வேலையா போச்சு டா ஃபோன் அடிச்சுட்டே இருக்கும் ஆனா எடுக்க மாட்ட…. யார் னு கேட்டா சொல்லவும் மாட்ட …. புரியாத புதிர் டா நீ… ” என்றபடி காபியை கொடுத்து விட்டு தானும் குடிக்க ஆரம்பித்தான்.

“புதிர் தான் மச்சி ஆனால் அந்த புதிர் விலக நாள் இருக்கு…  சரியா ரொம்ப தேங்க்ஸ் டா காபி செம டேஸ்டா இருக்கு….   நீ இல்லைனா  ஹோட்டல் ல சாப்பிட்டே என் நாக்கை இந்நேரம் அடக்கம் பண்ணி இருப்பேன்…  ” என்றான் முகில்.

“சரி சரி ரொம்ப ஐஸ் வைக்காத… ஆமா இன்னைக்கு லஞ்ச் என்ன செய்யட்டும்…  பிஷ் வாங்கிட்டு வரவா…  ??”எனும் போதே  கதவு தட்டப்பட்டது.

“யார் டா அது !!” என கதவை திறக்க அங்கே கீழ் ஃபோர்சனில் குடி இருக்கும்… வீட்டு ஓனரின் மனைவி நின்று இருந்தார்.

“வாங்க ஆன்ட்டி கூப்பிட்டு இருந்தா நானே வந்திருப்பேனே … !!”பேருக்கு சொல்லி வைத்தான் ராகவ் கையில் இருந்த பாத்திரத்தை கண்டு அரண்டபடி…

“அது ஒண்ணும் இல்ல ராகவ் நேத்தைக்கு நைட் மீன் குழம்பு வச்சோம் அதான் உங்களுக்கு தரலாம் னு நினைச்சா நீங்க வெளியூர் போன நினைவு அப்போ தான் வந்தது… லேட் நைட் வந்திங்களா அதான் இப்ப சாப்பிடுவீங்கனு காலையிலேயே கொண்டு வந்தேன்…. ” என ராகவ் கையில் பாத்திரத்தை கொடுக்கும் போதே முகில் பின்னால் இருந்து முணுமுணுத்தான்  “ம்ம்க்கும் இன்னைக்கு நம்ம தெருவில் இருக்கிற எந்த நாய்க்கு டயேரியா வரப் போகுதோ.. ??” என்க ராகவ் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான்.

ஏனெனில் அந்த ஆன்ட்டியின் சமையல் அவ்வளவு பிரமாதமாக இருக்கும்….  ராகவ் வந்த புதிதில் தெரியாமல் அவரது சமையலை உண்டு விட்டு ஒரு நாள் முழுவதும் ரெஸ்ட் ரூமிலேயே கிடந்தான் அந்த அனுபவமே முகிலின் முணுமுணுப்பிற்கு காரணம்….

“ராகவ்… இன்னைக்கு மீன் குழம்பு டேஸ்ட் கொஞ்சம் கம்மியா தானிருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க சரியா !!”என்றவர் கீழே திரும்பி பார்த்து விட்டு .,”ஏன்னா நேத்து மீன் குழம்பு வச்சது என் வீட்டுக்காரர் அதனால தான் சொன்னேன் அவர் கிட்ட சொல்லி விடாத டா சரி நான் வரேன் ” என்று கிளம்ப .,”யப்பா நான் கூட மீன் குழம்பு வேஸ்டா போயிடுமோன்னு பயந்துட்டேன்…  நல்ல வேளை அங்கிள் சமைச்சு என் செலவை மிச்சம் பிடிக்க வச்சுட்டார் ” என சந்தோஷமாய் ராகவ் தோசை ஊற்ற சென்றான்.

“டேய் முகில் நீ சாப்பிட்டு கொஞ்சம் தூங்கிட்டு அப்புறம் குளி சரியா… !!”என்க அவன் இங்கிருந்தே.,” ம்ம்ம்ஹ்ம் “கொட்டினான்.

இருவரும் காலை உணவை அந்த மீன் குழம்பை தோசைக்கு தொட்டு கொண்டு முடித்து விட மதிய உணவிற்காக சாதம் மட்டும் வைத்தால் போதும் என்று பேசிக் கொண்டிருந்தான் ராகவ். 

“ராகவ் வெறும் மீன்குழம்பு மட்டும் எப்படி டா… தொட்டுக் கொள்ள ஏதாவது வேண்டும்….  அப்பளம் ,வடகம் இது போல….  இல்லாட்டி ஒண்ணும் முடியாது…. ” என்றதும் “அப்பளம் தீர்ந்துடுச்சு நான் வாங்கிட்டு வரேன் அப்புறம் உனக்கு ஏதாவது வேணுமா….??”  

“ம்ஹூம் எதுவும் வேண்டாம்….  பாக்கெட் ல காசு இருக்கு எடுத்துக்க….”  ராகவின் முகம் மாறியது.

“ஏன் டா அப்பளம் கூட நான் உனக்கு வாங்கி தர மாட்டேனா….??” என கேட்க

“ப்ப்ச் அப்படி இல்லை டா நீயே உன்  ஃபேமிலிக்கு பணம் அனுப்பி ட்டு இங்கே உன் செலவையும் பார்த்துக்கிற அதான் சொன்னேன்…!!”

“அப்போ சார் மட்டும் என்னவாம்…. நீங்களும் தானே வீட்டுக்கு பணம் அனுப்புறீங்க ??”என்று கேட்க

“ஸ்ஸ்ஸ்…. என் கதை வேற உன் நிலை வேற….  உன் சம்பாத்தியத்தில் தான் உன் மொத்த ஃபேமிலியும் சாப்பிடுறாங்க…  பட் எனக்கு அப்படி இல்லை…  என் ஃபேமிலிக்கு என்னோட சம்பளம் ஜஸ்ட் ஒரு அமவுண்ட் தான் மத்தபடி வேற ஒண்ணுமில்ல… அதனால தான் சொல்றேன்… நீ இப்ப பணம் எடுத்துப்பியா இல்லையா…??” என உரிமையாக கேட்க ராகவ் எதுவும் பேசாமல் எடுத்து கொண்டான்.

ராகவ் சென்றதும் மீண்டும் ஆரண்யாவிற்கு அழைக்கலாமா என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக கைபேசியை எடுத்து அவளது எண்ணை டயல் செய்தான். 

“கடவுளே முன்னாடி பேசின அந்த பொண்ணு ஃபோனை எடுத்திடக் கூடாது” என்று வேண்டிக் கொண்டே  காதில் கைபேசியை வைத்திருந்தான்.

இந்த முறை அதிர்ஷ்டவசமாக ஆரண்யாவே எடுத்தாள். 

“ஹலோ யார் பேசுறது…??”  என அவள் கேட்க எதிர் முனையில் சற்று அமைதி நிலவ…  பக்கத்தில் இருந்தவள் அலறினாள்.

“ஏய் ஆரு ஃபோனை குடு அந்த  லூசுப் பயலா தான் இருக்கும்…  கொஞ்ச நேரம் முன்னாடி அந்த  ஃபோன் பைத்தியம் தான் பண்ணிட்டு பேசாமல் இருந்தது …குடு நான் பேசுறேன் உனக்கு பேச தெரியாது…. “என பிடுங்க  அங்கே முகில் சத்தமிட்டான்.

“ஆரண்யா நான் முகில்…  எம்கே கம்ப்யூட்டர் சென்டர் சென்னை பிராஞ்ச் “என்றான் அவசரமாக…

“தீரு இது எனக்கு வந்த  ஃபோன் நீ போ…” என கூறி விட்டு,”  சாரி சார்  சொல்லுங்க” என்றாள்…. ஆரண்யா.

“அது…  உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா னு கேட்க தான் கால் பண்ணேன்… வாமிட் எடுத்திட்டே இருந்தீங்களா அதனால் தான் “என்று சொல்ல வந்ததை ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டான் முகில் .

“அது அப்பவே சரி ஆகிடுச்சு சார்…  அம்மா காலையில் எழுந்ததும்  எலுமிச்சை ஜூஸ் கொடுத்தாங்க சரி ஆகிடுச்சு சார்…  உங்களுக்கு பரவாயில்லையா நீங்களும் தானே வாமிட் எடுத்தீங்க… ” என தடுமாறி ஒரு வழியாக அவளும் கேட்டு விட்டாள்.

“ம்ம்ம்ஹ்ம்…  தலைவலி வந்திடுச்சு ராகவ் டேப்லட் கொடுத்தான்…  காபி போட்டு குடிச்சேன் இப்போ பரவாயில்லை…. !!”

“நீங்க உங்க வீட்டில் இல்லையா….  ராகவ் சார்…  அது வந்து நான் என்ன கேட்க வந்தேன் னா ??”

மென்மையாக புன்னகைத்து விட்டு .,”நான்  ராகவோட வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கேன்… அப்பா அம்மா எல்லாம் வேற இடத்தில் இருக்காங்க…” என்றான்.

“ஓஓஓ….  அப்போ சாப்பாடு எல்லாம் நீங்களே சமைச்சுப்பிங்களா சார்…  எனக்கு  காபி கூட போட தெரியாது…  அச்சோ டைம் ஆகிடுச்சே…. சார் நான் வச்சிடுறேன்” என்க

“ஹான்…  ஆரண்யா மொபைல் உங்க கிட்ட தானே இருக்கும்…”

“சார் இது என் வீட்டில் உள்ள ஃபோன்…  எனக்கு தனியா  ஃபோன் கிடையாது…  கல்யாணம் ஆன பின் தான் எனக்கு ஃபோன் வாங்கி தருவதாக சொல்லி இருக்காங்க…”  என வெகுளியாக பேசியவளை மிகவும் பிடித்து விட்டது முகிலுக்கு.

“அப்போ உங்க கிட்ட எப்படி பேச முடியும்…  சரி அதை விடுங்க நீங்க தயவு செஞ்சு என் நேம் சொல்லி கூப்பிடுங்க…  சார் வேண்டாமே” என்று கூற .,”ம்ம்ம்” என தலையாட்டினாள் ஆரண்யா.

அங்கிருந்து ஒருத்தி சத்தமாக சொன்னாள்…. ” சரி ன்னா தலையாட்ட கூடாதுடி வாயைத் திறந்து சொல்லனும்…”என்க முகில் சிரித்துக் கொண்டே “அது யாருங்க ஆரண்யா…. ??” என்றான்.

“அது என்னோட சிஸ்டர் சார்….  அது வந்து….  முகில்…” என மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அவனது பெயரை கூறி விட்டாள்.

“ம்ம்ம்ஹ்ம் தட்ஸ் பெட்டர்… ஓகே ஆரண்யா நான்  வச்சிடுறேன் “என கட் செய்தான்.

“ப்பா…..  என்ன வாய்ஸ் பா சூப்பரா இருக்கு… இடையில் அந்த டிஸ்டர்பென்ஸ் மட்டும் இல்லை னா இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம்… ” என சலித்து கொண்டான் முகில்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே ஆரண்யாவை பிடித்து கொண்டு வம்பு செய்து கொண்டிருந்தாள் அவளது சகோதரி.

“என்ன ஆருக்குட்டி…  உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஃபோன் எல்லாம் வருது…  ஃபோன் லயே குழையுறாரே….  ஒரு வேளை கண்டதும் காதலா இருக்குமோ ??”என ஆரண்யாவின் தங்கை தீர்த்தன்ய விசாலினி கேட்க

“தீரு சும்மா இரு தாத்தா காதுல விழுந்துடப் போகுது” என சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கூறியவள் பின் மெதுவாக.,” வண்டியில் வரும் போது வாமிட் பண்ணிட்டேனா அதான் கேட்டு இருக்கார் வேற ஒண்ணுமில்ல நீயா எதையாவது கற்பனை செய்யாதே அப்புறம் வேலைக்கு போறதும் கட் ஆகிடும்….”  என்றாள் பதட்டத்துடன்.

“சரி சரி ஏதோ என் ட்வின் சிஸ்டர் ஆச்சேனு மன்னித்து விடுறேன்…. அப்புறம் அவர்பார்க்க எப்படி இருப்பார் ஆள் சூப்பர்  ஃபிகரா….  ம்ம்ம் சொல்லு சொல்லு…. ” வம்பு செய்து கொண்டிருக்க அவர்களது அம்மா கனகம் உள்ளே வர பேச்சு நின்று போனது.

“என்னங்கடி நான் வந்ததும் பேச்சை நிப்பாட்டிட்டிங்க …. ஏதாவது மறைக்கிறிங்களா என் கிட்ட ???”  

“அச்சோ குடும்ப குத்து விளக்கே !!!  உன் கிட்ட ஏதாவது மறைக்க முடியுமா…  நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்….  வேற ஒண்ணுமில்ல நீங்க போய் உங்க டியூட்டியை பாருங்க…..  “என தீர்த்தன்யா கிண்டலாக பேசி அனுப்பி வைத்தாள்.

“ஏய்…. பொம்பளை பிள்ளைக மாதிரி ஒழுங்கா இருங்க… ஏதாவது உன் பெரிய அக்கா போல வேலை பார்த்து வச்சீங்க..  அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வச்சிடுவார் உங்க தாத்தா அந்த நினைவு இருக்கட்டும் புரியுதா….  சரி வந்து ரெண்டு பேரும் பாத்திரத்தை கழுவி வைங்க … “என முறைப்புடன் சென்றார்.

“யப்பா அவர் சும்மா இருந்தாலும் இந்த அம்மா சொல்லி தருவாங்க போல முடியலை என்னால…  சரி டி வா போகலாம் இல்லை இன்னொரு தடவை வந்து கூப்பிடுவாங்க “என சமையலறைக்குள் புகுந்தனர்.

ஆரண்யவிஷாலினி குடும்பம் பற்றிய சிறு அறிமுகம்

பெற்றோர் 

வரதராஜன் – கனகலெட்சுமி

அக்கா – பிரசன்னலெக்ஷ்மி கல்லூரியில் படிக்கும் போதே காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் ஏற்கவில்லை இன்று வரை …. அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட யாருக்கும் தெரியாது.

அண்ணா – இளம்பரிதி  தந்தையுடன் இணைந்து அவர்களது அரிசி ஆலையை கவனித்து கொள்கிறான்…  பிகாம் படித்து உள்ளான். வயது இருபத்து ஏழு ஆகிறது

ஆரண்யவிஷாலினி -தீர்த்தன்யவிசாலினி இருவரும் இரட்டை சகோதரிகள் முகம் உடல் வாகு மட்டும் தான் ஒற்றுமை….  குணத்தில் இருவரும் இரு துருவங்கள்….  ஆரண்யா அமைதி சற்று அதிகமான பொறுமைசாலி என்றால் தீர்த்தன்யா பொறுமை என்றால் என்ன அது எந்த கடையில் விற்கிறது என கேட்கும் ரகம்….  இருவரும் கேரமல் வண்ண அழகிகள்… வயது இருபத்து ஒன்று ஆகிறது.

இவர்களை சுற்றி தான் நம் கதைக்களம் செல்லவிருக்கிறது.  காதல் கதை தான்… 

காதலை அறவே வெறுக்கும் குடும்பத்தில் வாழும் நாயகிகள்…  தன் குடும்பம் பற்றிய ரகசியம் எதுவும் சொல்லாத நாயகன் இவர்களை காலம் எவ்வாறு இணைக்கிறது என்று காணலாம்.

…. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்