Loading

இரவு உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர். சச்சினை நெஞ்சில் போட்டு உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. நந்து மெத்தையில் விழுந்ததுமே அலைபேசியை எடுத்து, அவனது ‘அன்னம்மா’விற்கு (ஜனனிக்கு) வழக்கம் போலக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

இருளில் சூழ்ந்திருந்த அலைபேசியின் திரை வெளிச்சம் கொண்டு மலர, என்னவென்று எடுத்துப் பார்த்தாள் ஜனனி.

“அன்னம்மா” என்று அனுப்பி இருந்தான். இவளும் “சொல்லு” என்று அனுப்பினாள்.

“கோபமா?”

“ரொம்ப.”

“ஏன்டி?”

“என்ன ஏன்? நீ சொன்னதையும் செஞ்சதையும் யாராவது பார்த்திருந்தால் நம்மளைப் பற்றி என்ன நினைச்சிருப்பாங்க?”

“அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்குக் கவலை இல்லை… நாம என்ன நினைக்கிறோமோ அதான் முக்கியம் அன்னம்மா! வாழ்க்கையில கனவுல மட்டுமே பார்த்த காட்சிய நேர்ல பார்த்த சந்தோஷத்துல இருக்கேன். முதல்லெல்லாம் அந்த கனவு ஏக்கமா மாறும்… ஆனா இப்போ அதை நிறைவேத்தச் சொல்லி உத்வேகத்தைக் கொடுக்குது. நிச்சயம் என் ஆசை, கனவை நிறைவேற்றியே தீருவேன்” என்று தீர்க்கமாகச் சொல்லியபடி குறுஞ்செய்தி அனுப்பினான்.

“அப்படி என்ன காட்சி அது?” எனப் புருவம் சுருங்கி யோசித்தவள், அதைத் தட்டச்சு செய்து கேட்டாள்.

“அதுவா… நீ, நான், நம்ம பிள்ளைனு மூணு பேரும் உட்கார்ந்து சாப்பிட்டோமே! எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா அந்தக் காட்சி! வாழ்க்கையில நடக்கவே நடக்காதுன்னு நினைச்சேன்… இனி இதான் உன் வாழ்க்கைன்னு சொல்லாமல் சொன்னது போல இருந்தது. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா தூங்கப் போறேன்” என்று உற்சாகமாய்க் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“நந்து, நான் சொல்றதைக் கேளேன்” என்று கெஞ்சுதலாக அனுப்பி வைக்க, அவனோ “ப்ளீஸ் டி… ரொம்ப சந்தோஷமா இருக்கேன், அதைக் கெடுக்கிறது போல எதுவும் சொல்லாத!” என்று அனுப்ப, அவளிடம் பதில் இல்லை.

“அன்னம்மா…”

“ம்ம்…”

“எனக்கு இப்போ ஒரு கற்பனைத் தோணுது, சொல்லட்டுமா?”

“என்ன அது?”

“நீ, நான், நடுவுல சச்சின்னு ஒரே மெத்தையில… எங்க ரெண்டு பேரையும் தூங்க வைக்க நீ ரொம்பச் சிரமப்படுறது போல ஒரு கற்பனை! நினைச்சுப் பார்க்கவே அழகா இருக்குல்ல?” என்று அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு இவள் தேகம் சிலிர்த்தது. வாசிக்கும் போதே அவளும் அதைக் கற்பனை செய்துவிட்டாள்.

அழகான கற்பனைதான், ஆனால் நிஜமாகச் சாத்தியமில்லை என்று இவள் எண்ணிக் கொண்டிருக்க, அவனோ அதை நிஜமாக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருந்தான்.

“இதெல்லாம் நல்லா இல்ல இளா! நீ வேற ஒரு பொண்ணை…” என்று கைப்பேசியில் தட்டச்சு செய்யும் போதே, தவறுதலாக விரல் பட்டுச் செய்தி சென்றுவிட…

“வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கையில எனக்காக எழுதப்பட்ட பெயர் ஜனனி தான். உனக்கு உன் வாழ்க்கையை முழுமையாக்க வந்தது இந்த இளநந்தன் தான். எனக்கு அட்வைஸ் சொல்லி என் மனசை மாத்த நினைக்காம, போய் உன் மனசை மாத்து. குட் நைட், லவ் ட்ரீம்ஸ்!” என்று அதோடு முடித்துவிட்டு, அலைபேசியைத் தூரப் போட்டுவிட்டுக் கனவில் அவளுடன் சஞ்சரிக்கச் சென்றுவிட்டான்.

அவன் ‘ஆஃப்லைன்’ சென்றதைக் காட்டியதும், ஜனனி அலைபேசியைத் தூரமாக வைத்துவிட்டு, சச்சினின் முதுகை வருடியபடி உறங்காமல் நந்துவைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

மறுபுறம், அலைபேசியைப் பார்த்தபடி ஜம்பமாக அமர்ந்திருந்தான் விபு! அறைக்கதவை அடைத்துவிட்டு, பால் குடுவையுடன் வெட்கத்துடன் நடந்து வந்து அவனிடம் நீட்டினாள் ஜோவிகா. அவனும் அலைபேசியைத் தூரம் வைத்துவிட்டுப் பால் குடுவையை வாங்கியபடி இவளைப் பார்த்து அதிர்ந்து போனான்.

“என்னடி இது?”

“வெட்கம்டா விபு.”

“வெட்கமா? எதுக்கு?” என அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன், பாலை ஒரு மடக்கு பருக… அவளோ, “இன்னைக்கு நமக்கு முதலிரவு இல்ல… அதான்” என்றாள். உடனே பதற்றமாக, “மொத்தமா குடிச்சிடாதடா” எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே அவனுக்குப் புரையேறிப் பாலை வெளியே துப்பினான்.

“ப்ச்…” என அவனை முறைக்க…

“என்னது முதலிரவா? என்னடி சொல்ற? அதெல்லாம் கொண்டாடி மாசக்கணக்கு ஆயிடுச்சு! இப்போ வந்து முதலிரவுங்கற?” என்று வாயைத் துடைத்தபடி கேட்டான். அவளோ அவனிடமிருந்த பால் குடுவையை வாங்கித் தன் வாயில் ஊற்றிக் கொண்டு, இதழைத் துடைத்தபடி, “இன்னைக்கு நீ என்ன பண்ண?” என்றாள்.

“நான் என்ன பண்ணேன்?” என அவன் யோசிக்க, “ம்ம்… இன்னைக்கு நீ எனக்குத் தாலி கட்டியிருக்க! அதனால இன்னைக்கு நமக்கு முதலிரவு” என்று சற்று முன் இருந்த வெட்கம் மறைந்து சாதாரணமாகப் பேசினாள்.

“ஓ… இன்னைக்குத் தாலி கட்டினதால முதலிரவா? சரிதான். இப்போ என்ன பண்ணனும்?”

“முதலிரவு அன்னைக்கு என்ன பண்ணோமோ அதை பண்ணனும்” என்றாள் லேசாக வெட்கப்பட்டு.

“நாம முதலிரவு அன்னைக்குத் தூங்கத்தானே செஞ்சோம்? அதையே பண்ணிடுவோமா?” என்று நக்கலாக அவன் கேட்க, அவளோ ஒரு நிமிடம் காளியாக மாறிப் போனாள்.

“சரி சரி தாயே! இன்னைக்கு முதலிரவுதான், என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம்! அதுக்காக ஏன் கோபப்படுற?” என்று அவளை இழுத்து மடியில் அமர வைத்துக் கொண்டான். அவளும் குழந்தையாய் அவனுக்குள் அடங்கிப் போனாள். அவளது கழுத்திலும் காது மடலிலும் அவன் தன் மீசையாலும் உதட்டாலும் கவிதை எழுதத் தொடங்கினான்.

“விபு…” எனக் கிறங்கிய குரலில் அவனை அழைக்க, அவனும் முத்தமிட்டுக் கொண்டே “ம்ம்…” என்றான்.

“நந்து மாமாவுக்கும் ஜனனி அக்காவுக்கும் நடுவுல எதுவும் ஓடுதா?” எனக் கேட்கவும், சட்டென விலகி அவள் முகம் பார்த்தான்.

“ஏன் அப்படி கேக்குற?”

“நந்து மாமா, நீலகண்டன் மாமா கிட்டப் பேசினாலும் அவரோட பார்வை என்னவோ ஜானு அக்கா மேலதான் இருந்தது. நான் நல்லாக் கவனிச்சேன். அந்தப் பார்வையில ஏதோ இருக்கு” என்று சொல்ல, விபு “என்ன இருக்கு?” என்றான்.

“ம்ம்… சம்திங் இருக்கு! சரியில்லை” என்றாள்.

“என்ன சரியில்லை? அவன் பார்வை சரியில்லைனு சொல்றியா?”

“இல்ல இல்ல… ஏதோ ஒன்னு சரியில்லைன்னு சொன்னேன். அவர் பார்வை சரியில்லைன்னு சொல்லல! அவர் பார்வையில் ஏதோ ஒன்னு இருக்கு. என் கணிப்புச் சரின்னா அவர் பார்வையில காதல் இருக்கு. அவர் ஜனனி அக்காவை விரும்புறார்னு நினைக்கிறேன்” என்று அவள் சொல்ல, அவன் ஆச்சரியப்படவில்லை.

“அவன் பார்வையில காதல் இருக்குனு நீ எப்படி சொல்ற?”

“காதலிச்சதுக்கு அப்புறம் உன் பார்வை எப்படி இருந்ததோ, அப்படித்தான் ஜனனி அக்காவை நந்து மாமா பார்க்கிற பார்வையும் இருந்தது!” என்றதும் விபுவின் இதழ்களில் மெல்லிய புன்னகை.

“நிஜமாவே அவங்க காதலிக்கிறாங்களா?”

“அவன் காதலிக்கிறான்… ஆனா ஜானு இல்ல” என்றவன் நடந்ததைச் சொல்ல, “இப்போ எப்படி அவங்களைச் சேர்த்து வைக்கிறது?” எனக் கேட்டாள் ஜோவிகா.

“நாம ஏன் சேர்த்து வைக்கணும்? விதியே அவங்களைச் சேர்த்து வைச்சிடும். வேணும்னா அப்பப்போ அந்த விதிக்கு நாம ஹெல்ப் பண்ணலாம். ஆனா நந்துவோட காதலே ஜனனியோட மனசை மாத்திடும். அவங்க சேர்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான் தீர்க்கமாக.

“கண்டிப்பா சேரணும் விபு! உன்னோட சந்தோஷமா வாழ்ந்தாலும், ஜானு அக்காவை நினைச்சு எனக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கு. அது போகணும்னா அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். நந்து மாமாவோட அவங்க சேர்ந்து வாழணும். கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்” என்று கண்கள் மூடி ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ததைப் பார்த்து அவன் நெகிழ்ந்து போனான். மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான்.

“குழந்தைகளோட பிரார்த்தனையைக் கடவுள் சீக்கிரமா கேட்பாராம். உன்னோட பிரார்த்தனையும் சீக்கிரமா நிறைவேறிடும்” என்றான் புன்னகையுடன்.

“நான் என்ன குழந்தையா?”

“ஆமாம்! நீ எனக்குக் குழந்தைதான்” என்றான் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியபடி.

“அப்போ இந்தக் குழந்தை கேட்டது கிடைக்குமா?” என்று அவனது சட்டைப் பொத்தானைத் திருகியபடி, “என்னோட விளையாட இன்னொரு குழந்தை வேணும்” என்று வெட்கத்துடன் சொல்ல…

“என்னடி, என்னை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்றியா? நான் ஏகபத்தினி விரதன்னு உனக்குத் தெரியாதா?” என அவன் கிண்டல் செய்ய, “எனக்குக் குழந்தை வேணும்னுதான் கேட்டேன், உன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லல! அப்படி மட்டும் சொல்லுவேன்னு கனவுல கூட நினைச்சுப் பார்த்திராத! வெட்டிப் போட்டிடுவேன்” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள்.

பயந்தது போல அவன் வழிய, இவளோ கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ள… அவள் முகத்தைத் திருப்பி இதழோடு இதழ் பொருத்தி மன்னிப்புக் கேட்க, அங்கே காதல் அரங்கேற்றம் மெல்லத் தொடங்கியது.

மறுநாள் விடியலில், நீலகண்டன் அதிகாலையிலேயே எழுந்து நண்பர்களுடன் கோவிலுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சச்சினைக் கிளப்புவது வழக்கமாக அவரது பொறுப்புதான். இன்று அவர் இல்லாததால் ஜனனியால் சமாளிக்க முடியவில்லை. வள்ளி பாட்டியாலும் பேரனைச் சமாளிக்க முடியாது.

ஜனனி சமையல் ஒரு பக்கம், சச்சின் ஒரு பக்கமென ஓடிக்கொண்டிருந்தாள். பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மகனை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. நந்து வாங்கிக் கொடுத்த விளையாட்டுப் பொருட்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் சச்சின் அடம் பிடித்தான்.

நேரம் ஓடிக் கொண்டிருக்க, அவன் பின்னே ஓடிய ஜனனி, அறையிலிருந்து வெளியே வந்த நந்துவின் மீது மோதினாள். அவன் அவள் மீது கை படாதபடி விலகி நிற்க, அவளும் தன்னைச் சமாளித்து விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன அம்மாவும் பையனும் இங்க ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க? கீழே போய் விளையாட வேண்டியதுதானே?” என்றான் நந்து.

அவளோ அவனை முறைத்தபடி, “என்னை பார்த்தால் அவனோட விளையாடுற மாதிரியா இருக்கு? ஸ்கூலுக்குப் போக மாட்டேன், யூனிஃபார்ம் போட மாட்டேன்னு என்னை அலைக்கழிக்கிறான். நீ வேற கடுப்பேத்தாத! ஏற்கனவே உன் மேல கொல காண்டுல இருக்கேன், போயிடு!”

அவனோ புரியாமல், “நான் என்னடி பண்ணேன்?” என்றான்.

“நீ என்ன பண்ணல? அவனுக்கு அத்தனை விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்தியே! அதோட விளையாடுற ஆர்வத்துல ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு நிக்கிறான். ஒழுங்கா அவனை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி வைக்கிற…” என்று சச்சினின் சீருடையை அவன் கையில் கோபமாகத் திணித்துவிட்டுச் சென்றாள்.

அவனோ ஆச்சரியமாகப் பார்த்தான். இதுவும் கூட ஒரு கணவன் மனைவிக்கு நடுவில் நடக்கும் உரிமையோடு கூடிய கோபம் தானே! அவள் எந்த நினைவில் சொன்னாளோ தெரியாது, ஆனால் நந்துவோ அதைத் தன் காதலுக்குச் சாதகமாகவே எடுத்துக் கொண்டான்.

சச்சின் இவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டிருந்தான். குதூகலமான மனதுடன் நந்து அவனை நோக்கி நடக்க, அவனோ தப்பிக்க ஓடினான். “நீ மட்டும் என்கிட்ட வரல, இதையெல்லாம் எடுத்துட்டுப் போய் நானே ரூம்ல வச்சு விளையாடிக்குவேன்” என்றதும், பயந்து போய் வந்தவனைத் தூக்கிக் கொண்டான்.

“மாட்டினியா மவனே!” என அவனை அழைத்துச் சென்று, குளிப்பாட்டித் தயார் செய்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். மகனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தவள், நேர்த்தியாகத் தயாராகி வந்த நந்துவை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“ரெஜிஸ்ட்ரேஷன் விஷயமா வெளிய போறேன்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட அமர்ந்தான். அவளுக்கும் பரிமாறினாள்.

“சச்சின் எப்படி ஸ்கூலுக்குப் போவான்?”

“மாமாதான் விடுவார், இப்போ அவர் இல்லை… நான் தான் விடணும்” என்றாள் மகனுக்கு ஊட்டியபடி.

“நான் கூட்டிட்டுப் போறேன்.”

“எதுல?” என்றதும் அவன் யோசித்துச் சிரிக்க, அவளது வண்டிச் சாவியைத் தூக்கிப் போட்டாள்.

வழக்கம் போலச் சச்சினுக்கு முத்தம் கொடுத்து வண்டியில் அமர வைத்தாள். அதைக் கண்ட நந்துவோ, “எனக்கு இல்லையா?” என்றான்.

ஒற்றை புருவத்தை உயர்த்தியவள், “இல்லை” என்றாள்.

“இருக்கும்… மேடமுக்குக் கொடுக்க மனசு இல்லை. இட்ஸ் ஓகே! ஆனா ஒரு நாள் நீயே கொடுப்ப… ஐ ஆம் வெயிட்டிங்!” என்று அவன் கிளம்பினான்.

அவளுக்குத்தான் சங்கடமாக இருந்தது. உள்ளே புதைந்திருந்த அவளது உணர்ச்சிகளை அவனது பேச்சும் செயலும் மெல்லத் தோண்டி எடுப்பதாகத் தோன்றியது. அவன் பக்கம் மனம் சாயக் கூடாதென்று அவள் கட்டிப்போட, அவனோ அவளைத் தன் பக்கம் இழுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டான். மொத்தமாக வீழும் நாள் வெகுதூரத்தில் இல்லை

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
7
+1
1
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்