Loading

அன்று காலையிலேயே ரகுவரன் சுசித்ராவை அழைத்துக் கொண்டு சஜீவ்வின் வீட்டுக்கு வந்திருந்தார்.

 

ஈஷ்வரி அவர்களை வரவேற்று அமர வைக்க,

 

பிரபுவோ பெயருக்கு வரவேற்றார்.

 

தன் மகனின் வாழ்க்கையை இவர்கள் நாசமாக்கினார்கள் என பிரபுவுக்கு மூவர் மீதும் கோவம் இருந்தது.

 

ஆனால் நேரடியாக அதை அவர்களிடம் காட்டியதில்லை.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்க தன் பாட்டுக்கு பேப்பர் படித்தார்.

 

வந்தவுடனே சுசித்ரா, “எங்க அத்த சர்வாவ காணோம்… இன்னும் தூங்கிட்டு இருக்கானா…” என ஆர்வமாக ஈஷ்வரியிடம் கேட்டாள்.

 

ஈஷ்வரி, “இல்ல சுச்சி.. காலைல இருந்தே அவன் வீட்டுல இல்ல.. ஏதாவது வேலையா வெளிய போய் இருக்கானா இருக்கும்…” என்க,

 

“அவன் யூ.எஸ் போய்ட்டான்…” என பிரபு பேப்பரிலிருந்து பார்வையை அகற்றாமலே கூற மூவரும் அதிர்ந்தனர்.

 

ஈஷ்வரி, “என்னங்க சொல்றீங்க… என் கிட்ட கூட சொல்லல… திடீர்னு யூ.எஸ் போக என்ன அவசியம் வந்தது…” என்க,

 

பிரபு, “உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ற மாதிரியா நீ நடந்துக்கிட்ட… அவன் வர்க் பண்ணுற கம்பனில இருந்து ஏதோ மீட்டிங் ஒன்ன அட்டன்ட் பண்ண சொல்லிட்டாங்க… அதான் நைட்டே என் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்…” என மறைமுகமாக ஈஷ்வரியை குத்திக் காட்டினார்.

 

பிரபுவின் பதிலில் ஈஷ்வரி சற்று சமாதானமடைய,

 

சுசித்ராவோ, “அதுக்கெதுக்கு சர்வாவ போக சொன்னாங்க… சர்வாவ விட பெரிய பதவில இரூக்குறவங்க தானே பொதுவா போவாங்க… சர்வா ஜஸ்ட் சாதாரண எம்ப்ளாயி தானே…” என சந்தேகமாகக் கேட்கவும் பிரபுவுக்கு கோவம் வந்தது.

 

“ஏன்.. என் பையன் எதுல கொறஞ்சி போய்ட்டான்… அவனுக்கு ஏதாவது நல்லது நடந்தா உங்களுக்கு பொறுக்காதே…” என பிரபு கூற,

 

சுசித்ரா, “அப்படி சொல்ல வரல மாமா…” என பிரபுவை சமாதானப்படுத்த பார்க்க,

 

ஈஷ்வரி, “நீங்க சும்மா இருங்கங்க… கட்டிக்க போற அவளுக்கு இல்லாத உரிமையா…” என பிரபு ஏதும் கூறி பிரச்சினை வராமலிருக்க அவர் வாயை அடைத்தார்.

 

ரகுவரன், “சரிம்மா.. அதெல்லாம் விடு.. மாப்பிள்ளை மீட்டிங் முடிஞ்சி வந்துடுவான் தானே… நான் வந்ததே முக்கியமான விஷயத்த பத்தி பேசத் தான்…” என்கவும் ஈஷ்வரி அண்ணனைக் கேள்வியாகப் பார்க்க,

 

பிரபுவிற்கு அவர்கள் வந்த நோக்கம் புரிந்து போனது.

 

ரகுவரன், “சுச்சிக்கும் வயசு போய் கிட்டே இருக்கு… அஞ்சி வருஷமா நாங்களும் காத்திட்டு இருக்கோம்… ஆனா நீ இன்னும் மாப்பிள்ளை மனச மாத்தல… போற போக்க பாத்தா அஞ்சி வருஷத்துக்கு முன்ன மாதிரியே நடந்துரும் போல இருக்கு…” என்க,

 

“அப்படி எதுவும் நடக்காதுண்ணா… என் பையன் என் பேச்ச கேட்பான்… நிச்சயம் சுச்சி தான் என் வீட்டு மருமக..” என ஈஷ்வரி கூற பிரபு பக்கென சிரித்து விட்டார்.

 

மூவரும் அவரை முறைக்க, “பேப்பர்ல ஒரு ஜோக் வாசிச்சேன் மச்சான்… அதான் சிரிப்பு வந்துட்டு…” என்ற பிரபு மீண்டும் நகைத்தார்.

 

கோவமாக எழுந்த சுசித்ரா, “அத்த…. சர்வா வந்தா எனக்கு சொல்லுங்க… முதல்ல சர்வாவ கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு மருமகள் ஆகனும்… அப்போ தான் சில பேர் அடங்குவாங்க…” எனக் கூறி பிரபுவை முறைத்தவள்,

 

“வாங்கப்பா போலாம்…” என ரகுவரனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

அவர்கள் சென்றதும் ஈஷ்வரி பிரபுவிடம், “என்னால முடியாதுன்னு நெனக்கிறீங்களா.. யாரு என்ன பண்ணாலும் சுச்சி தான் இந்த வீட்டு மருமகள்… ஒழுங்கா பையன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிற வழிய பாருங்க…” எனக் கோவமாகக் கூறி விட்டு சென்றார்.

 

பிரபு, “ஒரு தடவ உன்ன நம்பி என் பையன் ஏமாந்ததுக்கு ஒவ்வொரு தடவையும் அதுவே நடக்காது…” என நினைத்துக் கொண்டார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ்

 

காலை நேரம் அழகாக விடிய மெதுவாக துயில் கலைந்து எழுந்தாள் நித்ய யுவனி.

 

எழுந்து அமர்ந்தவள் சில நொடிகளில் தான் கட்டிலில் தூங்கியது புரிய அவசரமாக தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டாள்.

 

நித்யா, “நாம ஹால்ல தானே தூங்கினோம்… இப்போ எப்படி பெட்ல இருக்கேன்…” என யோசிக்கும் போது பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

 

சஜீவ் டவலால் முகத்தைத் துடைத்த படி வெளியே வந்தவன் நித்யா எழுந்திருப்பதைக் கண்டதும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

 

அவனை முறைத்த நித்ய யுவனி, “நீ தான் என்ன தூக்கிட்டு வந்து இங்க படுக்க வெச்சியா… நான் தான் சொல்லி இருக்கேன்ல என்ன தொடக் கூடாதுன்னு…” என்க,

 

“தூக்கிட்டு வந்து படுக்க வெச்சது கூட தெரியாம நல்ல கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு… இப்போ சும்மா என் கூட சண்டைக்கு வரியா… இருடி பொண்டாட்டி உனக்கு நல்ல வேலை செய்றேன்…” என மனதில் நினைத்துக் கொண்ட சஜீவ்,

 

நித்ய யுவனி கூறியதைக் கேட்டு அதிர்ந்தது போல் பொய்யாகக் காட்டிக் கொண்டவன்,

 

“என்ன யுவி சொல்ற… நைட் நடந்த எதுவுமே உனக்கு ஞாபகம் இல்லயா…” எனக் கேட்டான்.

 

சஜீவ்வின் கேள்வியில் நித்ய யுவனி உண்மையாகவே அதிர்ந்தாள்.

 

“எ…. என்… என்ன நடந்துச்சு நைட்டு…” என பதற்றத்துடன் நித்யா கேட்கவும்,

 

மனதுக்குள் சிரித்துக் கொண்ட சஜீவ்,

 

கையை உயர்த்தி சோம்பல் முறித்தவன்,

 

“என்ன செல்லம் இப்படி கேட்டுட்ட… நைட்டு நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லயா… நீ ஹால்ல தூங்கிட்டு இருந்தியாம்… மாமா அப்படியே உன்ன அழகா தூக்கிட்டு வந்து……” என நிறுத்த,

 

“வந்து………. ” என பதட்டமாக கேட்டாள் நித்ய யுவனி.

 

சஜீவ்விற்கு நித்ய யுவனியின் முகத்தைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

கஷ்டப்பட்டு அடக்கியவன், “போ யுவி… இப்படி ஓப்பனா கேட்டா நான் எப்படி சொல்லுவேன்… எனக்கு வெக்கமா இருக்குல்ல…” எனக் கூறி முகத்தை மூடி வெட்கப்படுவது போல் நடித்தான் சஜீவ்.

 

அவனைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்த நித்ய யுவனி,

 

சஜீவ்வின் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டு கொண்டவள் அவனை முறைத்து கோவமாக கட்டிலில் இருந்த தலையணை ஒன்றை எடுத்து சஜீவ் மீது எறிந்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

நித்ய யுவனி வீசிய தலையணையை கேட்ச் பிடித்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

 

பல வருடம் கழித்து மனம்‌ விட்டு சிரித்திருந்தான் சஜீவ் சர்வேஷ்.

 

நித்ய யுவனி குளித்து உடை மாற்றி வர சஜீவ்வோ கட்டிலில் அமர்ந்து ஆழ்ந்த யோசணையில் இருந்தான்.

 

அவனைக் கண்டும் காணாதது போல் நித்ய யுவனி கடந்து செல்லப் பார்க்க,

 

சஜீவ்வின் யுவி என்ற அழைப்பில் நின்றாள்.

 

நித்ய யுவனியின் அருகில் வந்த சஜீவ், “யுவி… நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த பத்தி பேசணும்…” என்க,

 

“நீ வெட்டியா பேசுறதெல்லாம் கேட்டுட்டு இருக்க எனக்கு டைம் இல்ல…” என அலட்சியமாகக் கூறி விட்டு அங்கிருந்து சென்றாள் நித்ய யுவனி.

 

சஜீவிற்கு நித்ய யுவனியின் செயலில் அடக்க மாட்டாமல் கோவம் வந்தது.

 

ஆனால் தன் மீது தவறு இருப்பதால் அமைதியாக இருந்தான்.

 

அடுத்து வந்த நாட்களிலும் சஜீவ் பலமுறை நித்ய யுவனியுடன் பேச முயன்றும் அவள் இடம் கொடுக்கவில்லை.

 

நாட்கள் வேகமாகக் கடந்த நிலையில் நித்ய யுவனி, சித்தார்த் வந்த மருத்துவ முகாம் நிறைவு பெற்றது.

 

முகாம் நடத்திய ஹாஸ்பிடலால் அங்கு வந்திருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் சிறிய பாராட்டு விழா ஒன்று நடத்தினர்.

 

அது முடிந்து வரவே இரவானது.

 

மறுநாள் இந்தியாவுக்கு கிளம்ப முடிவு செய்திருந்தனர்.

 

ஹாஸ்பிடலில் இருந்து ஃப்ளாட்டுக்கு வரும் வழியில் நித்ய யுவனி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்ட சித்தார்த்,

 

“என்னாச்சு நிது… ஏன் ஒரு மாதிரி இருக்க… ஏதாவது ப்ராப்ளமா…” என்க,

 

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு சித்… இந்த சரவேஷ் பண்ண வேலைய அம்மா அப்பா எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… தலையே வெடிச்சிரும் போல இருக்கு…” எனக் கூறி கண்ணீர் வடித்தாள் நித்ய யுவனி.

 

சித்தார்த் அவளை சமாதானப்படுத்தும் விதமாக,

 

“எதுக்கும் ஃபீல் பண்ணாத நிது… நிச்சயம் அங்கிள் ஆன்ட்டி உன்ன தப்பா நினைக்க மாட்டாங்க… சஜீவ்வும் நல்லவன் தான்… சூழ்நிலை அவன அப்படி பண்ண வெச்சிடுச்சி… நீ அவன் கூட கொஞ்சம் பேசி பாரு…” என்க,

 

நித்ய யுவனி, “ப்ளீஸ் சித்… நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராதே… எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு…” என அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

 

சித்தார்த் மனதில், “இவங்க ரெண்டு பேரும் பேசி இந்த பிரச்சினைய சால்வ் பண்ணினா தான் உண்டு… எங்களால எதுவும் பண்ண முடியாது..” என நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

 

நித்ய யுவனி வரும் போதே சஜீவ் அவளுக்காக ஹாலில் காத்திருக்கக் கண்டான்.

 

அவள் உள்ளே நுழைந்ததுமே சஜீவ், “யுவி… நான் இன்னைக்கு உன் கூட பேசியே ஆகனும்…” என்றான்.

 

நித்ய யுவனியோ அவனைக் கண்டு கொள்ளாது கிச்சன் சென்று ஃப்ரிஜ்ஜிலிருந்த ஐஸ் வாட்டரை எடுத்துக் குடித்து விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

சஜீவ்வும் அவளைப் பின் தொடர்ந்து வந்தவன், “உன் கிட்ட தான் சொல்றேன் யுவி… நான் பேசனும்…” என அமைதியாக ஆனால் அழுத்தமாக சொன்னான்.

 

நித்ய யுவனியோ அவன் கூறுவதை காதிலே வாங்காமல் தன் பாட்டிற்கு வேலை செய்ய,

 

வந்த ஆத்திரத்தில் அருகில் இருந்த ட்ரஸிங் டேபிள் கண்ணாடியில் கையை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்ட சஜீவ்,

 

“அதான் பேசணும்னு சொல்றேன்ல….” எனக் கத்தினான்.

 

சஜீவ்வின் கத்தலில் பயந்து அவன் பக்கம் திரும்பிய நித்ய யுவனி, 

 

கண்ணாடி குத்துப்பட்டு கைகளில் இரத்த வடிய, கண்கள் சிவக்க நின்றிருந்த சஜீவ்வைக் கண்டு பதறி அவனிடம் ஓடினாள்.

 

“உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா… ஏன் இப்படி நடந்துக்கிறீங்க…” எனக் கவலையாக கேட்டவள் இரத்தம் வடியும் அவன் கையைப் பற்ற முயல,

 

தட்டி விட்ட சஜீவ், “எதுக்கு பாசம் இருக்குற மாதிரி நடிக்கிற… நீ தான் என்ன வெறுக்குறேல்ல… நானும் பைத்தியம் போல உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து பேசணும்னு கெஞ்சினா மனுசனா கூட நடத்தினியா நீ என்ன… இப்ப கூட பேசணும்னு சொல்றேன் பெரிய இவ மாதிரி கண்டுக்காம போற…” எனக் கோவமாகப் பேச நித்ய யுவனியின் கண்கள் கலங்கின.

 

ஆனால் எதுவும் கூறாது மீண்டும் சஜீவ்வின் கைப் பற்றி மருந்திடப் பார்க்க,

 

“ச்சீ விடுடி… ” என்று விட்டு கோவமாக அங்கிருந்து சென்றான்.

 

நித்ய யுவனியோ சஜீவ் காயத்துக்கு மருந்து கூட இடாமல் கோவமாக அறையை விட்டு வெளியேறுவதைக் கண்டு கண்ணீர் வடித்தாள்.

 

சித்தார்த்துக்கு அழைத்து சஜீவ்வை சற்று பார்த்துக் கொள்ளுமாறு கூறியவள் சுவற்றில் சாய்ந்து,

 

“இதுக்கு தான் நான் உங்கள விட்டு விலகி விலகியே போனேன் சஜு… என்னால நீங்க அன்னைக்கு நடந்து கொண்ட விதத்த மறக்க முடியல… என்னையே அறியாம உங்கள கஷ்டப்படுத்துவேன்னு தான் உங்க கூட பேசக் கூட இல்ல… கடைசில நான் நெனச்ச மாதிரியே ஆகிடுச்சி… இப்போ என்னால நீங்க கஷ்டப்படுறீங்க…” எனக் கூறி காலில் முகம் புதைத்து அழுதாள்.

 

நித்ய யுவனியிடம் கோவமாகக் கத்தி விட்டு வந்த சஜீவ் நேராக சித்தார்த்தின் ஃப்ளாட்டிற்குத் தான் சென்றான்.

 

அப்போது தான் நித்யாவிடம் பேசி விட்டு வைத்த சித்தார்த் சஜீவ் கையில் காயத்துடன் வருவதைக் கண்டவன் அவனை அமர்த்தி காயத்திற்கு மருந்திட்டான்.

 

பின், “என்ன ப்ரோ இப்படி பண்ணுறீங்க… கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா…” என சித்தார்த் கேட்க,

 

சஜீவ், “எவ்வளோன்னு தான் நானும் பொறுமையா இருப்பேன் சித்தார்த்… எத்தனை தடவை அவ கூட பேச முயற்சி பண்ணேன்… அன்னைக்கு ஏன் நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு சொல்லலாம்னு ட்ரை பண்ணா காது குடுத்து கூட கேக்க மாட்டேங்குறா… ஏதோ தேர்ட் க்ரேட் பொறுக்கி போல சீப்பா நடத்துறா…” என்றான்.

 

சித்தார்த்திற்கும் சஜீவ்வின் நிலை புரிந்தது.

 

சித்தார்த், “எனக்கு உங்க நிலமை புரியிது ப்ரோ… பட் யாராவது ஒருத்தராவது பொறுமையா போகணும்ல… அவ தான் பிடிவாதமா இருக்கான்னா நீங்களாவது கொஞ்சம் அமைதியா ஹேன்டில் பண்ண வேணாமா… அவ அந்த விஷயத்துல ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கா… அதனால தான் அப்படி நடந்துக்குறா…” என்க,

 

“ஏன் அவள் மட்டும் தான் கஷ்டப்பட்டாளா… நான் சந்தோஷமாவா இருந்தேன்… யுவிய விட பல மடங்கு வேதனைல நான் இருந்தேன்… அவளுக்குன்னாலும் நான் அவள விட்டு போனது மட்டும் தான் கஷ்டம்… ஆனா நான்… ஒரு பக்கம் என காதல இழந்து… இன்னொரு பக்கம் பெத்த அம்மா பண்ண துரோகம்… அது தெரிஞ்சி இவ கூட பேசலாம்னு பார்த்தா எல்லா வழிலயும் என்ன ப்ளாக் பண்ணி வெச்சிட்டா… 

 

யுவிக்கு பேரன்ட்ஸ், ஃப்ரென்ட்ஸ்னு எல்லாருமே ஆதரவா துணையா இருந்தாங்க… ஆனா நான் யாருமே இல்லாம ஒவ்வொரு செக்கனும் என் யுவிய நெனச்சி துடிச்சேன்… அவ சூசைட் அட்டம்ட் பண்ணினாள்னு கேள்வி பட்டப்போ மொத்தமா ஒடஞ்சிட்டேன்… என் ஒருத்தனால தான் அவளுக்கு இவ்வளவு கஷ்டமும்னு எதுக்கு இன்னும் உயிர் வாழனும்னு கூட நெனச்சேன்… அவள மறக்க முடியாம குடி குடின்னு என்னையே அழிச்சிக்கிட்டேன்…

 

என் மேல தான் தப்பு… நான் இல்லன்னு சொல்லல…. ஆனா ஒரு தடவயாவது என் பக்க நியாயத்தையும் கேக்க ட்ரை பண்ணலாம்ல…” எனக் கூறி வேதனைப்பட்டான் சஜீவ்.

 

சித்தார்த் பல வித சமாதானம் கூறி கஷ்டப்பட்டு சஜீவ்வை உறங்க வைத்தான்.

 

கணவன் மனைவி இருவருக்குமே அன்றைய இரவு சோகமாகவே கழிந்தது.

 

சித்தார்த் யார் பக்கம் பேச எனப் புரியாமல் தவித்தான்.

 

பின் ராஜாராமுக்கு அழைத்து நாளை நித்ய யுவனி வரும் தகவலைத் தெரிவித்தான்.

 

சஜீவ், நித்யா இருவருமே எப்படியோ உறங்கி விட,

 

சித்தார்த் தான் நாளைய தினம் என்ன நடக்க இருக்கிறதோ என யோசித்தே தூங்க மறந்தான்.

 

மறுநாள் காலையில் மூவரும் கிளம்பி ஏர்போர்ட் சென்றனர்.

 

சஜீவ் நித்ய யுவனியுடன் எதுவும் பேசவில்லை.

 

எங்கே தான் மீண்டும் பேச முயன்று அவள் கண்டு கொள்ளாமல் இருந்தால் தானும் கோவத்தில் அவளை ஏதாவது சொல்லி விடுவோம் என அமைதியாக இருந்தான்.

 

ஃப்ளைட்டில் மூவர் அமரும் இருக்கையில் நித்ய யுவனி ஜன்னல் பக்கம் அமர,

 

அவளுக்கு அடுத்ததாக சஜீவ்வை அமர வைத்தான் சித்தார்த்.

 

பின் தானும் அமர்ந்து கொண்டான்.

 

சஜீவ் அவள் பக்கத்தில் அமர்ந்தும் நித்ய யுவனி எதுவும் கூறாமல் இருந்தாள்.

 

ஃப்ளைட் புறப்பட்டு சில மணி நேரத்தில் எல்லாம் இரவு ஒழுங்காக உறங்காததால் நித்ய யுவனி‌ தூங்கி விழுந்தாள்.

 

ஆனால் அடிக்கடி விழிப்புத் தட்டி எழ,

 

சஜீவ் அவளுக்கு ஏதுவாக சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டு நித்யாவை தன் தோளில் சாய்த்து உறங்க வைத்தான்.

 

அதன் பின் நித்ய யுவனிக்கு விழிப்பு தட்டவில்லை.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த சஜீவ்விற்கு நித்ய யுவனி தன் பக்கத்தில் இருந்தால் எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் எனத் தோன்றியது.

 

பதினைந்து மணித்தியாலங்களில் மூவரும் இந்தியாவை அடைந்தனர்.

 

ஃப்ளைட்டிலிருந்து இறங்கியதிலிருந்து நித்ய யுவனி ஒருவித பதட்டத்தில் இருக்க,

 

சித்தார்த், “டென்ஷன் ஆகாம இரு நிது… எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்…” என்றான்.

 

பின் சித்தார்த் கேப் வர வைக்க,

 

நித்ய யுவனியும் சஜீவ்வும் ஏறினர்.

 

சித்தார்த் ஏறாமலிருக்க, “நீ வரலயா சித்…” என நித்யா கேட்க,

 

“இல்ல நிது… நான் இப்போ வந்தா நல்லா இருக்காது… சஜீவ் இருக்கான்ல… அவன் பாத்துப்பான்… நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் உன்ன வந்து பாக்குறேன்…” என நித்ய யுவனியிடம் கூறிய சித்தார்த்,

 

பின் சஜீவ்விடம், “எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிப்பீங்கன்னு உங்கள நம்புறேன் ப்ரோ… நிதுவ பாத்துக்கோங்க…” என்றான்.

 

பின் கேப் புறப்பட நித்ய‌யுவனிக்கோ பெற்றோரை நினைக்கவே பயமாக இருந்தது.

 

அவள் கண்கள் கலங்கவும் சஜீவ் ஆறுதலாக அவள் கை மீது தன் கை வைத்து, 

 

“அழாதே யுவி… நான் பாத்துக்குறேன்…” என்றான்.

 

அவன் கையைத் தட்டி விட்ட நித்ய யுவனி, “நீ தான் பாத்துக்கனும்… ஏன்னா இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான்… எதை பத்தியுமே யோசிக்காம அப்படி ஒரு காரியம் பண்ணிட்டு இப்போ நல்லவன் போல பேசுறியா…” எனக் கோவமாகக் கேட்டாள்.

 

சஜீவ் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க,

 

வீடு வரும் வரை நித்ய யுவனி அழுது கொண்டே இருந்தாள்.

 

நித்ய யுவனியின் வீட்டின் முன் கேப் நிறுத்தப்பட ராஜாராமும் வசந்தியும் வாசலிலே அவளுக்காக காத்திருந்தனர்.

 

கேப்பிலிருந்து வேகமாக இறங்கிய நித்ய யுவனி, “அப்பா……” என ஓடிச் சென்று ராஜாராமை அணைத்துக் கொண்டு அழுதாள்.

 

நித்யாவின் அழுகையைக் கண்டு பதறிய வசந்தியும் ராஜாராமும்,

 

“என்னாச்சு யுவனிம்மா… ஏன் அழுதுட்டு இருக்க… இங்க பாரும்மா…” என அவளை சமாதானம் செய்ய,

 

நித்ய யுவனியோ விடாமல் அழுதாள்.

 

அப்போது நித்ய யுவனியின் லக்கேஜுடன் சஜீவ் கேப்பிலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வர இருவரும் அவனைக் கேள்வியாய் நோக்கினர்.

 

ஜனனி மூலம் ஏற்கனவே சஜீவ்வைப் பற்றி அறிந்திருந்தார் ராஜாராம்.

 

ஆனால் தற்போது தன் மகளுடன் சஜீவ் எப்படி வந்திறங்கினான் என அவருக்கு யோசனையாக இருந்தது.

 

நித்ய யுவனி அழுது கொண்டே இருக்க,

 

ராஜாராம் மற்றும் வசந்தியிடம் வந்த சஜீவ் பட்டென இருவரின் காலிலும் விழவும் அதிர்ந்த ராஜாராம்,

 

“என்னப்பா கால்ல எல்லாம் விழுந்துட்டு… என்னாச்சு…‌ முதல்ல எழுந்திரு…” என்றார்.

 

சஜீவ்வோ எழாமல், “தயவு செஞ்சி என்ன மன்னிச்சிருங்க மாமா…” என்க,

 

சஜீவ்வின் மாமா என்ற வார்த்தையில் வசந்தி, ராஜாராம் இருவரும் புரியாமல் முழித்தனர்.

 

ராஜாராம், “எதுக்குப்பா மன்னிப்பு கேக்குற… முதல்ல நீ எழுந்திரு…” என்க,

 

“இல்ல மாமா…‌ முதல்ல நீங்க என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க… அப்போ தான் நான் எழுந்திருப்பேன்…” என்றான்.

 

ராஜாராம், “சரிப்பா மன்னிச்சிட்டேன்…” என்கவும் சஜீவ் எழுந்தான்.

 

ராஜாராமிடமிருந்து விலகிய நித்ய யுவனியோ சஜீவ்வை முறைத்துப் பார்த்து விட்டு வீட்டுக்குள் ஓடினாள்.

 

வசந்தி, ராஜாராம் இருவரும் வீட்டுக்குள் ஓடும் மகளைப் புரியாமல் பார்த்து விட்டு சஜீவ்விடம் திரும்பினர்.

 

சஜீவ், “உள்ள போய் பேசலாமா மாமா..” என்க,

 

ராஜாராம் அவனை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்