தன்னவனின் அணைப்பில் சுகமாய் இருக்க. சிறிது நேரத்தில் அவளின் வயிறு சத்தம் போட ‘ அவனை விட்டு விலகி ரெஸ்ட் ரூம் நோக்கி வேகமாக சென்றாள் ‘. அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே குளிக்க சென்றான்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்தவன்
ஹாலுக்கு வர அங்கு சாப்பாட்டை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் நுவலி.
அடியேய்.! நீ இன்னும் குளிக்கவில்லை டி. இப்படி சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கியே?.குளிக்க தான் இல்ல , உங்களுடைய பற்களையாவது தேய்த்து விட்டீங்களா.?
அதெல்லாம் தேய்த்து விட்டேன்.
பசிக்கும் போது சாப்பிடனும் நல்ல நேரம் பார்த்துக் கொண்டு இருக்க கூடாது. எனக்கு பசி வந்து விட்டது என்னுடைய வயிறு கூட சத்தம் போட்டு சொல்லிவிட்டது. சரி உன்னையும் சாப்பிட கூப்பிடலாம் என்று நினைத்தேன் ஆனா நீயோ இப்ப தான் குளிக்க போனாய் . எதற்கு உன்னை தொந்தரவு பண்ணனும் , நீ உன்னுடைய வேலை பாரு , நான் என்னுடைய வேலை பார்க்கின்றேன். தன்னுடைய பசியினால் தட்டில் முழு கவனத்தையும் பதிக்க.,
நீ புத்தகத்தில் படித்தது இல்லையா.? புருசன் சாப்பிட்ட பிறகு தான் பொண்டாட்டி சாப்பிடனும் என்று. அதனை உனக்கு சொல்லிக் கொடுக்க இல்லையா ? அட்லீஸ்ட் சாப்பிடுவதற்கு முன்னாடி புருசனை கூப்பிடலாம்னு எதாவது எண்ணம் கூட தோன்ற வில்லையா.? உன்னுடைய மண்டையில் இருக்கும் குட்டி மூளைக்கு தோன்றவில்லையா?.அத்தையை நான் ரொம்ப மிஸ் பண்றேன் .
இவ்வளவு நேரம் சாப்பாடு தான் முக்கியம் என்று இருந்தவள் “அத்தை ” என்ற வார்த்தையைக் கேட்டதும் பொங்கி விட்டாள். அவனின் முன்பு எழுந்து நின்று “என்ன அத்தை …. அத்தையினு கூவுற ? இன்னொரு முறை அத்தைனு உன்னுடைய வாயில் இருந்து வரட்டும் அப்பறம் இருக்கு டி உனக்கு. ஆமா நீ ஏதோ சொல்லிக்கொண்டு இருந்த தானே ” புருசன் சாப்பிட்ட பிறகு பொண்டாட்டி சாப்பிடனும் ” என்று .அப்படி ஒரு ஆசை உன்னுடைய மனதிற்குள் இருந்தால் அதை அடியோடு அழித்துவிடும் புரிந்ததா?. உனக்கு பசி எடுத்தா நீ தான் சாப்பிடனும், எனக்கு பசி எடுத்தா நான்தான் சாப்பிடனும். உனக்கு பசி எடுத்து நான் சாப்பிட்டேன் என்றால் நீ தான் பசியில் இறந்து போவ புரிந்ததா?.
அவனின் முன்பு சாப்பிட்டுக்கொண்டு இருந்த கையை நீட்டி பேசிக்கொண்டு இருந்தாள்.
அவள் பேச …. பேச அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தவன் தீடீரென அவனின் முன்பு இருந்த அவளின் விரல்களை பிடித்து கடித்துவிட்டான்.
“ஆ” வலிக்கிறது டா எருமை. உங்க வீட்டில் சாப்பாடு போட்டு தானே வளர்த்து விட்டாங்க இல்ல தினமும் எலும்பு துண்டை போட்டு வளர்த்து விட்டாங்களா.? எதுக்கு டா என்னுடைய விரல்களை கடித்த.? வலி எனக்கு தானே!
அச்சச்சோ ,ஐயம் ரியலி சாரி டி. நான் சும்மாதான் விளையாட்டுக்கு கடித்தேன். அவளின் கையை பிடித்து அவளின் விரல்களின் மீது மெதுவாக ஊதி விட ஆரம்பித்தான். அவளின் சுருங்கி முகத்தைப் பார்த்ததும் தன்னைத்தானே மனதிற்குள் திட்டிக் கொண்டான்.
அவனின் அக்கறையில் நெகிழ்ந்து போனவள் , உள்ளுக்குள்ளே பட்டாம்பூச்சி பறந்து கொண்டு இருந்தது. அவனிடம் தன்னுடைய கையை கொடுத்தவளுக்கு அவனின் மூச்சுக்காற்று அவளின் உடலைத் தீண்ட கண்மூடி அந்த நொடியை இரசித்து கொண்டு இருந்தாள்.
” உந்தன் சுவாசம் என்னை
தீண்டவே
காலங்கள் கடந்து
காத்திருந்தேன் “
அவள் அசையாமல் நிற்க ,அவளின் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் தன்னுடைய மனதிற்குள் மெதுவாக சிரித்துக்கொண்டே அவளின் கண்ணத்தை நறுக்கென்று கடித்து வைத்தான்.
இந்த முறை உண்மையாகவே வலியில் அவள் கத்த , சில நொடிகளில் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வர தயாராக நின்றுக்கொண்டு இருந்தது. நுவலி, தன்னுடைய மனதிற்குள் ‘அடப்பாவி லாஸ்ட் டைம் சும்மா வலிக்கிற மாதிரி நடித்ததை கண்டு பிடித்து விட்டானோ ? இப்ப உண்மையாகவே வலிக்கிற மாதிரி கடித்து வைத்துவிட்டான் ‘ அவள் தன்னுடைய கண்ணீரை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியாமல் துளி …. துளியாய் கண்ணத்தில் விழுந்தது.
அவளை இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன் “என்னனு தெரியவில்லை டி ..? உன்கிட்ட மட்டும் விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது “.
தோனும் டா தோனும் . என்னப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ?? “ஆ” வலிக்கிறதே பேச கூட முடியவில்லையே. அச்சச்சோ என்னோட சாப்பாடு நல்ல பசி இந்த எருமை இப்படி வந்து கெடுத்து விட்டானே. இப்ப என்னப் பண்ணலாம் என்று யோசிக்க ,அவளை யோசிக்க விடாமல் அவளின் வயிறு மறுபடியும் சத்தம் போட்டது. அந்த சத்தம் அவனின் காதுகளுக்கும் கேட்க ” சரி நீ போய் சாப்பிடு டி ”
எங்கடா என்ன சாப்பிட விட்ட .? சிவனேனு தானே நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன் இப்ப வந்து என்னுடைய கண்ணத்தை டேமேஜ் ஆக்கிவிட்டு போய் சாப்பிடுனு சொல்ற? என்னால பேச கூட முடியவில்லை. கண்ணத்தில் கைவைத்து கொண்டு அமைதியாக கீழே உட்கார்ந்துக் கொள்ள .
மெதுவாக புன்னகையுடன் அவளின் அருகில் உட்கார்ந்துக் கொண்டு அவளின் காயம் பட்ட கண்ணத்தில் மெதுவாக ஊதி விட்டவன், அவளுக்கு வலிக்காத மாதிரி கண்ணத்தில் மெதுவாக தன்னுடைய இதழ் பதித்து காயத்திற்கு மருந்து போட்டு விட்டான்.
அவளோ அமைதியாக அவனின் செய்கையையே இரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளின் மனதிற்குள் அவனின் இந்த மருந்து இன்னும் வேண்டும் …. வேண்டும் என தோன்றியது.
அவளின் பார்வையை உணர்ந்தவன் ‘ என்னடி என்னை இப்படி குரு குருனு பார்த்துக்கொண்டு இருக்க.?’
நீ வேணும்னா இந்த மாமனை கடித்துக் கொள்ளலாம் . ஆனா இதுதான் சாக்குனு என்னுடைய கண்ணத்தை தையல் போடுற மாதிரி கடித்து வைத்து விடாதே .’
அப்பறம் என்னால வெளியே தலைகாட்ட முடியாது. அவள் சிரிப்பால் என்று அவன் எதிர்ப்பார்க்க அவளிடமிருந்து எவ்வித ரியாக்சனும் வரவில்லை. அவளின் கீழ் தாடையை பிடித்து ‘ ஏன்டி இப்படி அமைதியா இருக்க? நீ இப்படி இருக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு தெரியுமா? எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் குடு டி ஆனா இப்படி பேசாம இருக்காதே! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் சும்மா விளையாட்டுக்கு தான் கடித்தேன் டி அது உனக்கு இவ்வளவு வலி குடுக்கும்னு எனக்கு தெரியாம போயிடுச்சி டி. பிளிஸ் டி .’
அவளுக்கும் அவன் வருந்துவது வருத்தம் அளிக்க. மெதுவாக அவனைப் பார்த்து புன்னகை செய்தவள் ‘ உனக்கு தண்டனை தானே வேணும் நான் கொடுக்கின்றேன். நீ என்னுடைய கண்ணத்தை கடித்து வைத்ததற்கு தண்டனையா எனக்கு நீ தான் சாப்பாடு ஊட்டி விடனும் .இன்னைக்கு மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் புரிந்ததா?” அவள் சற்று கோவமாக கேட்க .
நல்லாவே புரிந்தது என்னுடைய பொண்டாட்டி அவர்களே! அவன் கூறி சிரிக்க , அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்து விட்டான். அவளை தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு வந்தவன் சாப்பாட்டு தட்டை எடுத்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட ஆரம்பித்தான். அவளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே “பொண்டாட்டி “
ம்.ம்…ம்
அத்தையும் மாமாவும் எங்க போய் இருக்காங்கனு தெரியுமா.?
யாரோ சொந்தகாரர் கல்யாணத்துக்கு போறேன்னு சொன்னாங்க.
அவங்க எத்தனை நாள் கழிச்சி வருவாங்கனு தெரியுமா?
ஒரு வாரம் கழிச்சி வருவதாக சொன்னாங்க.
அவங்க எந்த ஊர் போய் இருக்காங்கனு தெரியுமா.?
ஊட்டிக்கு போய் இருக்காங்க.
அங்க என்ன பேமஸ் னு தெரியுமா டி?
மலர்கள் , டீ, காபி தூள் பேமஸ் னு தெரியும் .
அங்க தான் நிறைய சாக்லேட் தயாரிக்கிற தொழிற்சாலையும் இருக்கு தெரியுமா உனக்கு ?
அப்படினா ‘ இப்பவே அப்பாக்கு போன் போட்டு நிறைய சாக்லேட் வாங்கி வர சொல்றேன்.
உதிரன் ,தன்னுடைய மனதிற்குள் “அவங்க எதுக்கு இரண்டு நாள் கல்யாணத்திற்கு ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு போயி இருக்காங்க ஆனா இவ எதையுமே புரிந்துக் கொள்ளாமல் இன்னும் சாக்லேட் வேணும்னு சொல்றாளே !” இவ அப்பப்ப குழந்தையா மாறிபோறாளா இல்ல எப்பவுமே இப்படித்தான் குழந்தையா இருக்காளா.? நாம தான் ஏதாவது தப்பா யோசித்துக்கொண்டு இருக்கேனா? எதுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி? எதுக்கு தனியா வீட்டுல விட்டுட்டு போய் இருக்காங்க .? அதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோனிலே இருந்து இருக்கலாமே !
என்னங்க யோசித்துக் கொண்டு இருக்கீங்க ?? சாப்பாடு ஊட்டி விடுங்க எனக்கு.
அவளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டே , “பொண்டாட்டி …என்னுடைய செல்ல பொண்டாட்டி”
நான்தான் உங்க பொண்டாட்டி சொல்லுங்க.
அத்தையும் மாமாவும் ரெண்டு நாட்களில் போய் வர கல்யாணத்திற்கு எதற்கு ஒரு வாரம் ஆகும் என்று கூறிவிட்டு போனாங்கனு தெரியுமா.?
அவங்களுக்கு வயசு ஆகிவிட்டதுல அதனால பொறுமையாக போய் கல்யாணத்தைப் பார்த்துவிட்டு பொறுமையாக சொந்த பந்தங்களிடம் பேசிவிட்டு அப்படியே கொஞ்சம் ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு வர ஒரு வாரம் தேவைப்பட்டது போல அவங்களுக்கு ,இதனால கூட ஒரு வாரம் ஆகும் என்று நம்மகிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாம் தானே!.
அவங்க அந்த காரணத்துக்கு ஒன்னும் போகவில்லை டி. இவளை எல்லாம் என்னப் பண்றது “அடேய் மாமா ஏன்யா ஏ இவளுக்கு சாக்லேட் வாங்கி குடுத்தே என்னுடைய கல்யாண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வச்சி இருக்க? “ஒரு சாக்லேட் மொத்த கல்யாண வாழ்க்கையும் காலி”.
வேற எந்த காரணத்திற்கு போய் இருக்காங்க சொல்லுங்க.?
“அவங்களுக்கு உன்னை மாதிரி சாக்லேட் சாப்பிடுற குட்டி பாப்பா வேணுமா “அதற்காக போய் இருக்காங்க.
இப்பவே அப்பாவுக்கு போன் போட்டு சொல்லுங்க ” அவங்க வாங்கி வர சாக்லேட் எல்லாம் எனக்கு மட்டும் தான். என்னை போல இருக்கிற பாப்பாக்கு எல்லாம் தர முடியாது “.
” இவளை எல்லாம்” பொறுமையா இருடா ….பொறுமை கல்யாண வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் தன்னை சமாதானம் செய்துக் கொண்டவன் அவளிடம், இங்க பாருடா நான் வேலைக்கு போனபிறகு உனக்கு துணையா யாராவது இருக்கனும் தானே!
ஆமாம் இருக்கனும்.
அதற்காக தான் அத்தையும் மாமாவும் நம்மை தனியா விட்டுட்டு போய் இருக்காங்க.
என்னங்க லூசு மாதிரி பேசுறீங்க ? நம்ம ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போனா எப்படி நீங்க வேலைக்கு போகும் போது எனக்கு துணையா யார் இருப்பாங்க? நான் என்ன சின்ன குழந்தையா? அப்படி எனக்கு துணை வேண்டும் என்றால் அப்பா , அம்மா ,அத்தை மாமா, பாட்டி எல்லோரும் எனக்கு துணையாக தான் இருப்பாங்க.
எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்லடி உனக்கு சொல்லி புரியவைக்க .
உனக்கு சாப்பாடு போதுமா? இன்னும் வேணுமா?
எனக்கு போதும் .வயிறு புள்.
அப்ப போய் சுட்டி டி.வி பாரு, இல்லனா சாக்லேட் எடுத்து சாப்பிடு அவளிடம் கூறிவிட்டு கையை கழுவிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான்.
நீங்க சாப்பிடல?
அவன் எங்கே அங்கு இருந்தான் இதை கேட்டு திருப்பி பதில் கூற. தன்னுடைய அறைக்கு வந்தவன் என்னன்னவோ ஆசையெல்லாம் வச்சி இருந்தேன் . “இத்தனை வருடங்களா நான் கட்டி வச்சிருந்த கோட்டையை இடித்து தர மட்டமாக ஆக்கி விட்டாளே” பாதகத்தி .என்னையும் இப்படி புலம்ப விட்டு விட்டாளே ! தன்னுடைய கைவிரலை மடக்கி கண்ணத்தில் கைவைத்து யோசித்துக்கொண்டு இருந்தான்.
எதுக்கு இப்படி என்னை சாக்லேட் சாப்பிட சொல்லிவிட்டு வேகமாக அறைக்கு போய் விட்டாரு ? சாப்பிட கூட இல்ல இன்னும் இவரு. ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டுக்கொண்டு அவர்களின் அறைக்கு கொண்டு சென்றாள். அவன் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு இருக்க, அவனின் அருகில் உட்கார்ந்தவள் “ஏங்க சாப்பிடாமா வந்து விட்டீங்க?”
சாப்பாடு ரொம்ப முக்கியமா இப்ப? என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது.
அவன் அமைதியாக இருக்க. இங்க பாருங்க எம்புட்டு கோவம் இருந்தாலும் சாப்பாட்டு மேல கோவத்தை காட்ட கூடாது. நானே உங்களுக்கு ஊட்டி விடுகின்றேன் வாயை திறங்க, சாப்பாட்டை எடுத்து அவனின் வாய் அருகில் கொண்டு செல்ல,
இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு என்று நினைத்தவன் அமைதியாக வாயை திறந்து சாப்பிட ஆரம்பித்தான்.
முகத்தை மட்டும் எதையோ பறி கொடுத்தவன் போல வைத்துக்கொண்டு இருந்தான்.
ஏங்க இப்படி அமைதியா இருக்கீங்க? எதாவது பிரச்சனையா உங்களுக்கு? எதுவா இருந்தாலும் சொல்லுங்க சரி பண்ணலாம். இந்த உலகத்துல தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. பிரச்சனை என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக அதற்கு தீர்வு என்றும் ஒன்று இருக்கும் புரிந்ததா’ எதை பற்றியும் கவலைப்படாமல் இருங்கள்.
“கடவுளே காப்பாத்து ” சின்ன குழந்தை எல்லாம் தத்துவம் பேசுது. இதை எல்லாம் அமைதியா கேட்க வேண்டும் என்று என்னுடைய தலையில் எழுதி வைச்சி இருக்கு போல .
நீங்க ரொம்ப எதையோ ஆழமா யோசித்துக் கொண்டு இருக்கீங்க ? உங்களுக்கு மகிழ்ச்சி தர மாதிரி ஒரு விசயம் சொல்ல ? அவள் கண்கள் மின்ன அவனைப் பார்த்து கேட்க.
இப்ப என்ன குச்சி மிட்டாய் வேணுமா ? என்ற ரீதியில் தலையை தூக்கி அவளைப் பார்க்க.
இந்தாங்க கடைசி வாய் சாப்பாடு வாங்கிகோங்க என்று அவனுக்கு ஊட்டி தட்டை டேபிளில் வைத்து விட்டு ” அவனைப் பார்த்து இன்னைக்கு நைட் அம்மா இல்லாததால் நான் தான் சமைக்க போறேன். அதுவும் என்னுடைய இத்தனை வருடத்தில் இப்ப தான் முதல் முறையா சமைக்கப் போறேன் “. அதுவும் உங்களுக்காக தான். அவள் கூறிவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கு செல்ல,
உதி, என்னது இத்தனை வருசத்துல இப்பதான் முதல்முறையா சமைக்க போறாளா? அடேய் மாமா என்னை ஏமாற்றிவிட்ட .கல்யாணத்துல சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே யோசித்து உஷார் ஆகியிருக்க வேண்டும் இப்ப என்னப் பண்ண கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு புலம்பிக் கொண்டு இருந்தான்.