Loading

 

அந்தி மாலையை வழித்துக் துடைத்து விழித்தெழுந்தது அந்தகாரம். மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் இருண்மையும் ஏகாந்தமே. வானில் உள்ள மேடை அரிதாரம் பூசி அலங்காரத் திட்டாய் காட்சியளிக்கும். கண் விழிக்கும் வின்மீண்கள், கால் முளைத்த மேகக் கூட்டங்கள், தெவிட்டாத நிலவென்று வின் மேடை விடியலை அரங்கேற்றும்வரை, அலங்காரப் பாவையாய் பவனி வருவாள்.

 

ஆனால் மனம் சூனியமாய் இருக்கும்பொழுது, வானின் கருமைப் படர்ந்த வெட்டவெளி நம்மை விழுங்கிவிடும்‌. மிணுக்கும் வின்மீணோ, பூரண நிலவோ  வெள்ளியாய் வெளிச்சம் பாய்ச்சினாலும், மனச்சுவரை ஊடுருவல் செய்ய இயலாது. ஆக மனதின் தோற்றப்பிழை, பிம்பமாய் வானில் பிரதிபலிக்கும். 

 

அப்படி ஒரு இரவை, பலகணியின் மூடப்பட்டிருந்த கண்ணாடியின் வழியே வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். இடைவரை நீண்டிருந்த கூந்தலை பின்னலிடாமல் விரித்து விட்டிருந்தாள். மிளகாய்ப் பழமாய் சிவந்திருந்த உதடு, அழுது கரைந்து வீங்கியிருந்த கன்னம், களங்கம் நிறைந்த நிலவாய் விழிப்பாவைகள் என்று அலங்காரம் துறந்த அலங்கோலமாய் காட்சியளித்தாள். கட்டிலுடன் கைகள் கட்டப்பட்டிருந்தது. அதை இழுத்து இழுத்துப் பார்த்தாள். ஆனால் அவிழ்க்க முடியவில்லை. 

 

தன்னை கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கும் அன்னையை முறைத்தாள். அவள் மனம் பாழும் கிணற்றுக்குள் வட்டமிடும் வவ்வால்கள் போல் படபடத்தது. அவனின் குரல் இரண்டு நாட்களாக கேட்கவில்லை அவளுக்கு. அவன் ஏன் பேசவில்லை. தன் மேல் கோபமாக இருக்கிறானா? இப்படியெல்லாம் ஒருநாளும் இருந்ததில்லை அவன். அன்பின் மறுவுருவம் அவன். அவனின் குரல் கேட்டாலே போதும், அவள் வாழ்ந்துவிடுவாள். அவளின் பிழைகளைப் பொறுப்பவன். அவனிடம் உரையாடக் கூடாது என்று அவளை கட்டி வைத்திருக்கும் அவளின் அன்னையின் மேல் சொல்லால் விளக்க முடியா கோபம் அவளுக்கு. அவனுடனான அவளின் உறவை முச்சந்தியில் கடைப்பரப்பும் எண்ணம் அவளுக்கில்லை. அவர்களின் உறவை உளவறிய முற்படும் முட்டாள்களின் மேல் கோபம் அவளுக்கு. 

 

அமைதியாய் வானை வெறித்துப் பார்த்தவளுக்கு, அமைதி என்பது கிஞ்சித்தும் இல்லை. மனதின் போராட்டங்களுக்கு முடிவுரை எழுதிவிட்டாள். இனி அவனைக் காணாது வாழ முடியாது என்று தீர்க்கமான அறுதியொன்று எழுதிவிட்டாள். விழிகள் சலித்துப் போகும் அளவு அவனை பார்க்க வேண்டும். வார்த்தைகள் தீர்ந்து போகும் அளவு அவனுடன் கதைக்க வேண்டும். சலிக்குமா என்ன? தீர்ந்து போகுமா என்ன? என்று வினாவும் அவளின் சிந்தனைகளுக்கு பின்னால் உலா வந்தது. இதை நினைத்து அவளது உதட்டில் சிறிதாய் புன்னகை ஒன்று தோன்றியது. மனதில் மலர்ச்சி தோன்றியது. வானம் அழகாய் ஒளிர்ந்தது. வின்மீண் கொத்துகள் பூத்துக் குலுங்கியது. அழற்சியின் பிடியில் சிக்கித் தவித்த உள்ளம், ஊமத்தைப் பூவாய் மொட்டவிழ்ந்தது.

 

எங்கோ மணியோசை இவளின் எண்ணங்களுக்கு இசையாய். அவளின் கட்டுக்களைப் பாதி அவிழ்த்த நிலையில் அன்னை அவசரமாய் அறையை விட்டு வெளியில் செல்ல, காத்திருந்த தருணம் கையில் கிட்டியது அவளுக்கு. உண்ணா விரதமும் உறங்கா விரதமும் தராத விடுதலை இன்னும் சற்று நேரத்தில் அவள் கைகளில் தவழப் போகிறது.

 

ஒரு கையில் தளர்த்திய கட்டுக்களை சிரமத்துடன் அவிழ்த்தாள். மறுகையில் கட்டப்பட்ட கட்டையும் வேகமாக அவழித்தாள். மிகவும் விரைந்து செயல்பட்டாள். திடீரென உடலில் புகுந்திருந்த உத்வேகம் அவளுக்கு பலமடங்கு சக்தியை வாரி வழங்க, அவள் நினைத்ததைவிட வேகமாக செயலாற்றி முடித்தாள்.

 

வேகமாக பலகணியின் திட்டுமேல் ஏறி நின்றவள், “உன் கூடவே வந்துடுறேன் தீபன்” என்று‌ கூறி குதித்துவிட்டாள். 

 

உள்ளே ஏதோ சத்தம் கேட்டு விரைந்து வந்த அவளின் அன்னை கமலாவின் விழிகளுக்கு அங்கிருந்த வெற்று அறையே விருந்தாகியது. கட்டிலில் எட்டுமாத குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. பதறியவர் குளியல் அறையை திறந்து பார்த்தார். அங்கும் தன் மகள் இல்லாமல் போக, சிந்தனையுடன் பலகணி சென்றார். அதற்குள் கீழே கூட்டம் கூடிவிட்டது. கீழே கேட்ட இரைச்சலில் விரைந்தோடினார். அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நாட்களாக அவரின் மகள் மொழி இறந்துவிடுவேன் என்று மிரட்டியதாகவே எண்ணினார். 

 

காவல் துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்து நின்றது. கமலாவால் கதறி அழுவதைத் தவிற ஒன்றும் செய்ய முடியவில்லை. 

 

ஆறாவது மாடியில் இருந்து குதித்திருக்கிறாள். அப்படி என்ன குறை வந்தது இவளது வாழ்வில். எட்டுமாதக் குழந்தையை இப்படி அனாதையாக்கிவிட்டு செல்ல அவளுக்கு எப்படி மனம் வந்தது. சில நாட்களாகவே அவரது மகள் அவளாகவே இல்லையே. அவள் ஒரு விசித்திர உலகில் உலா செல்ல, அதை புரிந்து கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர். 

 

ரத்த வெள்ளத்தில் அவளைக் காண பரிதவித்தது பெற்ற மனம். சற்று முன் உருட்டி உருட்டி பார்த்த விழிப்பாவைகள் நிலைகுத்தி ஓரிடத்தில் இருந்தது. வலியை அனுபவித்த வேதனை அவள் முகத்தில் இல்லை. மாறாக புன்னகை உறைந்திருந்தது. மொழி என்று கதறி அழுதார் அவர்.

 

அதன்பிறகு என்ன நிகழ்ந்ததென்று அவருக்கே தெரியாது. மொழியின் கணவன் இன்பன் வந்தான். அதிர்ச்சியில் அழுகை வரவில்லை. உடல் கூராய்வு முடித்து மொழியின் உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. 

 

இரண்டு கதவையும் திறந்தான் இன்பன். அவளைக் கூடத்தில் கிடத்தும்படி கட்டளைப் பிறப்பித்தான். 

 

“இன்பா…”‌அதீத சத்தத்துடன் அழைத்தார் அவனின் தந்தை.

 

அவன் அவரைத் திரும்பி கேள்வியாய் பார்க்க, “அவளை உள்ள எடுத்துட்டு வரக்கூடாது” என்றார் மொட்டையாக.

 

“ஏன்” என்று வினவ வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அவரின் காரணம் அவன் நன்கு அறிவான்.

 

“அப்பா..” என்று அவனும் அலறினான்.

 

“ஏய்.. சொல்லி வைடி உன் பிள்ளைக்கு.. அந்த கேடுகெட்டவ வீட்டுக்குள்ள வரக்கூடாது” மனைவியிடம் காய, அவரும் மகனுக்கு பரிந்து கொண்டு வந்தார்.

 

“ஏங்க.. என்ன இருந்தாலும்..”

 

“என்ன இருந்தாலும் இல்லைனாலும் இது நடக்கக்கூடாது. கட்டுன பாவத்துக்கு அவன் கொள்ளி போடட்டும். ஆனா இந்த வீட்டுக்குள்ள அவளுக்கு அனுமதியில்லை. அப்படி நான் சொல்றதை மீறி நடந்தா அவனுக்கும் அவன் பிள்ளைக்கும் நம்ம வீட்டில் இடமில்லை” என்று அவர் வெறுப்பை உமிழ, இன்பன் பதிலேதும் கூற முடியாது தவித்தான். அவனுக்கு வேலை வைக்காமல், மொழியின் பிணம் வீட்டிற்கு வெளியில் கிடத்தப்பட்டது. அதன் பிறகு எப்படி காரியங்கள் நிகழ்ந்ததென்று அவனுக்கு நினைவில்லை. தன் மகளுக்கு நிகழ்ந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் வழியாறாது தவித்தார் மொழியின் அன்னை கமலா. 

 

எப்படி வாழ வேண்டியவள், எப்படி வாழ வேண்டும் என்று கனவுகள் சுமந்து நின்றவள், இப்படி அற்பமாய் தன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்டாளே.

 

அவளுடன் சற்று நேரம் உரையாடினால் கவலைகள் காலனின் காலடியில் சரண்புகுந்துவிடும். அவள் வாழ்க்கையின் இலக்கணம் சிரிப்புதான். வயிறு வலிக்க, கண்ணீர் கரிக்க சிரிக்க வைப்பாள். 

 

கடைசிவரை மொழியின் இன்பனாய் இல்லாமல் போய்விட்டோமே என்று மனதிற்குள்ளே வெடித்தான் இன்பன். அவனின் பிரச்சினையை வெளியில் யாரிடமும் பகிர முடியாது. வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

 

எட்டுமாத குழந்தை அவனிடம் இருந்தது. மொழியின் பெற்றோரை அவமதித்து அனுப்பி வைத்தாயிற்று. அனைத்தையும் உணர்வுகளற்ற பொம்மையாய் பார்த்துக்கொண்டே இருந்தான். என்ன நிகழ்கிறது என்று முழுமையாக அவன் உணரவும் இல்லை. உண்டானா உடுத்தானா என்று கேட்டால் அது அவனுக்கே தெரியாது. அந்த நிலையில் வேறு என்னதான் செய்ய முடியும். பிள்ளையின் அருகில் அமர்ந்து, அதன் சிரிப்பைப் பார்த்துக்கொண்டே இருந்தான். 

 

இழப்பின் தன்மை அறியா சிரிப்பு அவனை வெகுவாக ஈர்த்தது. அது மொழியின் சிரிப்பும் என்பதால் கூட இருக்கலாம்.

 

சிரித்த குழந்தை “ம்மா..” என்று‌ அழைக்க, விக்கித்துப் போய் நின்றான் இன்பன். இதைக் கேட்டு மகிழ வேண்டியவள் இப்பொழுது இல்லையே. என்ன செய்வது. விதி புனைந்த அவனது‌ வாழ்வில் ஏற்றங்களும் இறக்கங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது பகடியாடிய விதியைக் குறை சொல்வதால் நிகழ்ந்தவைகள் இல்லை என்றாகிவிடுமா?

 

உருண்டு திரண்டிருந்த உவர்நீர் பிள்ளையின் பட்டுக்கன்னத்தில் பட்டுத் தெறிக்க, முகம் சுருக்கி, கைகால்களை ஆட்டியது. 

 

குழந்தையைத் தூக்கினான். கைகளை ஆட்டியதில் அவன் விழிநீர் துடைக்கப்பட்டது. நடந்த பேரிழப்பை தாங்க முதல் ஆறுதல் மொழி. இதுவரை ஒருவரும் பகிராத ஆறுதல் மொழி தன் குழந்தையிடம் இருந்து அவனுக்கு கிடைத்தது.

 

குழந்தையின் நெற்றியில் முத்தம் ஒன்று வைத்தான் இன்பன். பெயரில் இருக்கும் இன்பம்,  இனி வாழ்வினில் வர வேண்டுமென்றால் அந்த குழந்தையால் மட்டுமே முடியும். இனி அவளுக்காக வாழ்வதென்று முடிவு செய்தவன், குழந்தையை அனைத்துக் கொண்டான்.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்