Loading

அத்தியாயம் 7

“அவனாக இருப்பானோ? ஏன் அவனைப் பார்த்தவுடனேயே இத்தனை இத்தனை மாற்றங்கள் என்னிடம்? அவனோடு இருக்கும் கற்பனை உலகமே தித்திப்பாக இருக்கிறதெனில், அவனோடிருக்கும் என் மொத்த வாழ்க்கையும் தீர்ந்திடாத தாகம் போல் சலிப்பை ஏற்படுத்தாத அமிர்த நீராக அமையுமா? நேரில் பார்த்து எந்தன் முடிவை பகர்வேன் என்று கூறிவிட்டேன். அவனைப் பார்க்கும் நொடிதனில் கண்கள்தான் படபடக்குமே! உதடுகள் பனிக்கட்டியில் உறைந்ததுபோல் தந்தியடிக்குமே! சுரம் கண்ட மேனி நடுநடுங்குமே! அய்யோடா, அச்சடா! ஏனடா என்னை பார்க்கும் முன்னே இம்சை செய்கிறாய்? இதுதான் காதலா? காத்திருப்போம் இருவரும், ஒருவரை ஒருவர் காணும் நொடிக்காக! காதல் ஒரு தீர்ந்திடாத தாகமாய் என்னுள்…

– இவண் இதழ்”

நால்வரும் லே லடாக்கின் மர வீட்டில் பேயறைந்ததுபோல் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு எதிரில் இளையாவும் அகிலனும் தேடி வந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டாள் என்ற செய்தியில் அகிலன் பள்ளதாக்கில் விழ முற்பட அவனைக் காப்பாற்றி அமர்த்தி வைத்திருந்தனர் நம்மவர்கள்.

“அறிவு இருக்காடா உனக்கு? என்ன காரியம் செய்யப் பாத்த? அம்மா அப்பாக்கு நான் என்ன பதில் சொல்றது? வாயத் தொறந்து பதில் பேசுடா?” என்று ஆற்றாமையில் சீறினான் இளையா.

“படிச்சவங்கதான பாஸ் நீங்க? சூசைட் எதுக்கும் தீர்வாகாதுன்னு தெரியாதா?” என்று மறுபக்கம் தற்கொலை முயற்சியை கண்ட அதிர்ச்சியில் பேசினான் அமுதன்.

தன் இருகைகளையும் தலைக்கு கொடுத்து அமர்ந்திருந்தான் அகிலன். தன் காதல் கைவிட்டு சென்ற வலி அவன் கண்களில். கண்கள் இரண்டும் சிவந்து, குளமாகத்தான் இருந்தது.

இளையாவின் பார்வை பிரவீன்மேல்தான் நிலைத்து இருந்தது.

நால்வரும் லே லடாக் வந்து மூன்று நாட்கள் ஆகிறது. அமுதனும் பிரவீனும் இளையா மற்றும் அகிலனுடன் நன்கு பழகிவிட்டனர். நால்வரும் அந்த லடாக்கை சுற்றிப் பார்க்க செல்வதாக இருந்தது. அப்போதுதான் அகிலனும் இளையாவும் எந்த காரணத்திற்காக வந்தனர் என்ற விவரம் மற்ற இருவருக்கும் தெரிய வந்தது.

“நாங்க இங்க சுத்திப் பார்க்கவோ ப்ராஜக்ட் விசயமாவோ வரல ப்ரோ. வேற ஒரு விசயத்துக்காக வந்தோம். அகிலனோட லவ்வர் இங்க இருக்குறதா தகவல் கிடச்சது, அந்த பொண்ண தேடித்தான் வந்தோம், ப்ரோ. சோ, நீங்க போய் மத்த இடத்த சுத்தி பாருங்க.” என்று அவர்களை அலைய வைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இளையபாரதி கூற, பிரவீனுக்கும் அமுதனுக்கும் இந்த வாய்ப்பு இன்னும் வசதியாய் போனது.

“இளையா, முதல்ல நீங்க ரெண்டு பேர். இப்போ நாம நாலு பேர். நாம ஒன்னா சேர்ந்து தேடுனா கண்டிப்பா சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம். ஏன் பிரிச்சு பாக்குறீங்க?” என்ற பிரவீனின் வார்த்தைக்கு அவனால் மறுவார்த்தை பேச இயலவில்லை.

“இல்ல, நீங்க எக்ஸ்ப்ளோர் பண்ண வந்து இருக்கீங்க. இதுல எங்களுக்காக நீங்க ஏன் அலையணும்னுதான் சொல்றேன்.”

“இதுல அலைச்சல்ன்னு எதுவும் இல்ல ப்ரோ. ப்ரெண்ட்ஸ்காக இதக்கூட செய்யலன்னா எப்படி? நாங்களும் வரோம்.” என்ற அமுதனின் உறுதியிலும் அகிலனின் வருத்தம் தோய்ந்த முகமும் இளையாவை சம்மதிக்க வைத்தது.

நால்வரும் லே லடாக்கின் கிழக்கு பகுதியில் அதாவது, இந்திய திபெத் எல்லையில் உள்ள பாங்காங் ஏரியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். இங்கு இளையா முன்னரே வந்திருப்பதால் அதைப்பற்றி அமுதனுக்கும் பிரவீனுக்கும் விவரித்துக் கொண்டிருந்தான்.

“இந்த ஏரி பேர் பாங்காங் ஏரி. நாம இப்போ இந்தியா திபெத் பார்டர்ல இருக்கோம். இந்த ஏரி பாதி இந்தியாவுலயும் மீதி திபெத்லயும் இருக்கு. இது கடல் மட்டத்துல இருந்து கிட்டத்தட்ட 4400 மீட்டர் உயரத்துல இருக்கு. இதோட நீளம் 134 கிலோ மீட்டர், அகலம் 5 கிலோ மீட்டர் இருக்கு. இது இந்திய ராணுவத்தோட முக்கிய பகுதியா இருக்கு. சோ, ஜாக்கிரதையா இருக்கணும். இங்க பல பறவைகள் இனப்பெருக்கம் நேரத்துல வரும். முக்கியமா சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி அதிகமா வரும். அப்ரோம், மார்மோத், கியாங்க் விலங்குகளும் இங்க இருக்கும். இதுக்கு டிரக் மூலமா போகலாம். உங்களுக்கு சுத்தி பாத்த மாதிரி இருக்கும், அன்ட் எங்களுக்கு இந்த மலை மேல ஏறி அந்த பக்கம் இருக்குற பள்ளத்தாக்கு வழியா இறங்கி ஏரிய பாக்குறது ரொம்ப பிடிக்கும். அதான், இந்த பக்கம் கூட்டிட்டு போறேன்.” என்று அனைவரும் மலைமேல் ஏறத் தொடங்கினர். அது ஒரு சிறிய குன்று போல் தான் இருந்தது. இருந்தாலும் முன்பின் அனுபவம் இல்லாதவர்கள் சிறிது கடினப்பட்டுத்தான் ஏற வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் அடி பலமாக ஏற்படும்.

அகிலன் முன்னே சென்றுக் கொண்டிருக்க, மூவரும் பேசிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தனர்.

பிரவீனிற்கும் அமுதனிற்கும் மூச்சு வாங்கியது. “ப்ரோ, கொஞ்சம் அவங்க லவ் ஸ்டோரிய சொன்னீங்கன்னா கேட்டுட்டே வருவோம்ல.” என்று மூச்சு வாங்கியபடியே கேட்டான் அமுதன்.

இளையாவின் முகத்தில் சிறு புன்னகை. “டேய், அகிலா நில்லுடா.” என்றபடி நால்வரும் ஒன்றாக ஒரு பாறைமேல் அமர்ந்தனர்.

“அது ஒரு அழகான காதல் காவியம்னு சொல்லலாம் ப்ரோ. நான், அகி ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ப்ரென்ட்ஸ்தான். ட்வல்த் முடிச்சிட்டு ரெண்டு பேரும் விசுவல் கம்யூனிகேசன் கோர்ஸ் ஜாய்ன்ட் பண்ணோம். மகி… அவளும் எங்கக் கூட ஜாய்ன்ட் பண்ணா. சாருக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். ஆனா, அவளுக்கு அவ்ளோவா இன்ட்ரெஸ்ட் கிடையாது. மகிக்கு க்ரைம் ஜர்னலிஸ்ட் ஆகனும்னு ரொம்ப ஆசை. அதுனால காலேஜ் டைம்ல அடிக்கடி க்ரைம் சீன் நடந்த இடத்துலதான் சுத்திட்டு இருப்பா. நல்ல பொண்ணு. அப்டி இப்டின்னு குட்டிக்கரணம் அடிச்சு இவனும் லவ்வ சொல்லி, அவள ஒத்துக்க வச்சுட்டான். அப்ரோம் என்ன, காலேஜ் முழுக்க ஒரே லவ்ஸ்தான். நல்லாதான் எல்லாம் போய்ட்டு இருந்தது. காலேஜ் லாஸ்ட் இயர் பைனல் எக்ஸாம் முடிஞ்சதுல இருந்து மகி எங்க போனான்னே தெரியல. எல்லா இடத்துலயும் விசாரிச்சு பாத்துட்டோம். திடீர்னு எங்க போனா, ஏன் போனா, எதுக்கு போனா ஒன்னும் புரியல. அதுக்கு அப்ரோம் நான் பிஜி படிக்க போய்ட்டேன். இவன் அப்ராட் போய்ட்டான். மகி இங்கதான் இருக்கான்னு என் ப்ரென்ட் சொன்னான்னு இப்போ வந்து இருக்கோம். அவ்ளோதான்.” என்று முடித்தான்.

“அவ்ளோதானா? நான் கூட ஒரு கொசுவர்த்தி சுருள் சுத்துவீங்க, நிறய ரொமான்ஸ் சீன்லாம் வரும், பின்னாடி ஒரு மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க்னால பிரிஞ்சு போய்ட்டாங்க. ஆனா, இவருக்கு அவங்க மேல இருந்த காதல் இன்னும் போகல, அதான் தேடி வந்து இருக்காருன்னு சொல்லுவீங்கன்னு நினச்சா, சப்புன்னு முடிச்சீட்டிங்களே ப்ரோ?” என்று பாவமாகக் கேட்டவனை இளையாவும் அகிலனும் வினோதமாகத்தான் பார்த்து வைத்தனர்.

“இது ஒன்னும் கதை இல்லயே. அதுவும் இந்த லவ், ரெண்டு பேரோட ப்ரைவசி சம்பந்தப்பட்ட விசயம். ப்ராக்டிகல்லா சொல்லணும்னா இந்த அளவுக்குதான் ப்ரோ சொல்ல முடியும். கதை கதையா சொல்ல இது ஒன்னும் சீரியலும் இல்ல, நாம ஆக்டர்ஸ்சும் இல்ல. ரொம்ப கற்பனை செய்யாதீங்க ப்ரோ.” என்று சிரித்தான் இளையா.

உண்மைதான், ஒருவருடைய கடந்த கால நிகழ்வை விவரிக்க முதலில் அவர்களது அனுமதி வேண்டும். பின், அதை எத்தனை சரியாக சொல்லவேண்டும் என்று நம் வார்த்தைகளில் கவனம் வேண்டும் தானே.

இளையாவை பிரவீனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நம் ராட்சசியை சமாளிக்க இவன் நிச்சயம் சரியாக இருப்பான் என்றே தோன்றியது. கனவுலகில் தன் துணையை எண்ணி நாட்களைக் கடத்துபவளுக்கும் நிஜ உலகில் ஒவ்வொரு விசயத்தையும் நிதர்சனமாகப் பார்ப்பவனுக்கும் திருமணம் வாழ்வு ஒத்து வருமா? இன்னாருக்கு இன்னார் என்பது எத்தனை எத்தனை சத்தியம் பாருங்களேன்.

நால்வரும் ஒருவித எதிர்ப்பார்ப்புடனேயே அந்த ஏரிக்கரையை அடைந்தனர். அப்போதுதான் அந்த செய்தி இடியென தாக்கியது நால்வருக்கும். ஆம், இளையாவும் அகிலனும் தேடி வந்த அவர்களது தோழியும் அகிலனின் காதலியுமான மகி அங்கு தற்கொலை செய்துக் கொண்டாள் என்று அக்கம்பக்கத்தினர் கூறிய வார்த்தையில் இருவரும் உடைந்து போயினர். அகிலனின் மூன்று வருடக் காதல், நான்கு வருட பிரிவு, இதோ இனி கைசேராத அவனின் காதல்.

முற்றிலுமாக உடைந்துவிட்டான் அகிலன். பிரிவுதான் எத்தனை விகாரமானது. உள்ளுக்குள் இருக்கும் உயிரை வேரோடு பிடுங்குவதுபோல் மரண வலியை அல்லவா தந்துவிட்டு செல்கிறது. உடலின் கடைசி சொட்டு குருதி வற்றுவது போல் ஒரு வலி. மூவரும் எவ்வளவோ ஆறுதல் கூறியும் தன்னிலை திரும்பவில்லை அவன். அந்த ஏரியிலிருந்து இன்னொரு பக்கம் இருக்கும் மலை பக்கம் மீண்டும் பயணத்தைத் தொடர, பள்ளத்தாக்கை நோக்கி சென்றான் அகிலன். அகிலனையே பார்த்துக் கொண்டிருந்த பிரவீன் அவன் பின்னோடே செல்ல, அவன் செய்யவிருந்த விபரீதம் புரிந்து சட்டென்று அவனை பிடித்து இழுத்தான்.

அதில் மிகவும் அதிர்ந்தது என்னவோ இளையாதான். தான் மட்டும் அன்று அவனோடு இருந்திருந்தால் அவள் பிரிந்து சென்றிருக்க மாட்டோளோ என்ற குற்றவுணர்ச்சி அவனை மேலும் தாக்கியது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன், “இங்க இருந்து பட்ட வரைக்கும் போதும். நாங்க கிளம்புறோம் ப்ரோ. நீங்க சுத்தி பாத்துட்டு வாங்க. பட், பிரவீன் உங்களோட இந்த ஹெல்ப்ப நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்” என்று அவன் கூற,

புன்னகையோடு நின்றவன், “ப்ரென்ட்ஸ்குள்ள இந்த ஃபார்மாலிட்டிஸ் தேவை இல்லன்னு நினைக்குறேன். இதுக்கு மேல நாங்க சுத்திப் பார்க்க என்ன இருக்கு? நாங்களும் உங்களோடேயே வரோம்” என்றதில் இளையாவும் ஒப்புக்கொண்டான். நால்வரும் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர்.

“ஹலோ, மாறா! ஒரு சந்தோசமான விசயம்டா.”

“என்னது தேவா?”

“இளையா ப்ராஜக்ட்ட சொன்ன டேட்டுக்கு முன்னாடியே முடிச்சிட்டான். இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துடுவான்டா” என்றார் தேவநந்தன்.

“சூப்பர்டா. எப்போன்னு தேதிய குறிச்சிட்டு சொல்லு.” என்று மகிழ்வோடு இணைப்பைத் துண்டித்தார் இளமாறன்.

“பிறை… பிறை…”

“சொல்லுங்க…” என்றவரை சமையலறை வரை தேடிச் சென்ற இளமாறன் அவரின் தோளில் கையைப் போட்டு, “மாப்ள, இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துடுவாராம். தேதிய முடிவு செஞ்சுட்டு தேவா கூப்டுறேன்னு சொன்னா.” என்றவருக்குத்தான் அத்தனை மகிழ்ச்சி. இதனை இதழும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தன் அலைபேசியில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த இளையாவின் புகைப்படத்தை பெரிதாக்கி ரசித்தவள், “சீக்கிரம் வந்துடு. உன்கிட்ட நிறைய பேசணும்… உம்மா” ஏனோ, இதற்கே அவளுக்கு வெட்கம் பிடுங்கியது.

“பிறை, எல்லாமே சிறப்பா செய்யணும்டி. அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.”

“ரொம்ப எக்ஸ்பக்ட் செய்யாதீங்க. இதழ் நேர்ல பாத்துட்டுதான் முடிவ சொல்றேன்னு சொல்லி இருக்கா.” என்றதில், இளமாறன் அவரை முறைத்தார். ‘நான் கொஞ்ச நேரம் சந்தோசமா இருந்தா இவளுக்கு பொறுக்காதே.!’ பாவம் அவராலும் உள்ளுக்குள் புலம்பத்தான் முடிந்தது.

நால்வரும் நேராக சென்றது இளையாவின் வீட்டிற்குத்தான். நள்ளிரவு இரண்டு மணியளவில் அவர்களின் மகிழுந்து வந்து நின்றது. முன்னரே தன் தந்தையிடம் நண்பர்களோடு வருகிறேன் என்று அவன் சொல்லி விட்டதால் மகிழுந்து சத்தம் கேட்டவுடனேயே தேவநந்தன் கதவை திறந்தவிட்டார். பிரவீனுக்கு மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அப்பா என்றாலே பயம் என்ற கண்ணோட்டம் மாறி இப்படியும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாய் அவரைப் பார்த்தான். பிரவீனிற்கு இளையாவின் தங்கைதான் திகழ் என்பது தெரியாது, தேவநந்தனையும் அவனிற்கு தெரியாது.

நால்வரும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று விட்டார். அடுத்தநாள் ஒவ்வொருவருக்கும் ஒருவித அதிர்ச்சியுடனேயே காத்திருந்தது.

நால்வரும் தயாராகி வெளியே வர, கூடத்தில் கம்பீரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் தேவநந்தனும் இளமாறனும்.

வெளியே வந்த பிரவீனுக்கோ பேரதிர்ச்சி என்றால், அமுதனோ வந்த வழியே அறைக்குள் சென்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். இவர் பார்த்து கேள்விக்கணைகளை துளைத்தால் இதுவரை போட்ட திட்டம் எல்லாம் பாழாகிவிடுமே.

“தேனு, பசங்க எழுந்திரிச்சிட்டாங்கமா. காஃபி, டீ எடுத்துட்டு வாயேன்.” என்றவரின் குரலுக்கு, திரும்பி பார்த்த இளமாறனும், “நீங்க ரெண்டு பேரும் என்னடா இங்க இருந்து வரீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டார்.

‘செத்தோம்.’ என்று மனதிற்குள் அவர்களால் நினைக்கத்தான் முடிந்தது.

“அதிருக்கட்டும்பா, நீங்க எங்க இங்க?” என்ற பிரவீனின் கேள்விக்கு முறைத்தவர்,

“என்னோட பிரெண்டு வீட்டுக்கு நான் எப்போ வேணா வருவேன். அத உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லடா. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.”

“இது என்னோட பிரெண்டு வீடுப்பா.” என்று மட்டும்தான் அவன் சொன்னான்.

“ஓ, அதுனால நான் உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லன்னு சொல்றீயாடா?”

“அய்யோ, அப்பா. நான் அப்டி சொல்லல!” ‘இவர்கிட்ட எது பேசுனாலும் குதர்க்கமாவே பேசுவாரே’ என்று அவன் நினைத்து முடிக்கவில்லை, “பதில் சொல்லுடா. இதழ் கூடவே உன்ன சேரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். இப்போ மாப்ள கூட வேற சேர்ந்து சுத்துவீயா?” என்று அவர் கேட்டதில் நால்வரும் விழித்தனர்.

“மாப்ளயா?” என்று பிரவீனும்,

“இதழா?” என்று இளையாவும், ஒருசேர ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அப்போது தேநீர் கொண்டு வந்த தேன்மொழி, “ஆமாடா. உனக்கு இளமாறன் அங்கிள் பொண்ணு இருக்கால்ல இதழினி, அவளத்தான் பாத்து வச்சி இருக்கோம். நாளான்னைக்கு பொண்ணு பாக்கப் போறோம்.” என்றார் புன்னகை முகமாக.

“அம்மா, அதுக்குள்ளயா?”

“நீ என்ன சொல்லிட்டு போன? நான் திரும்ப வந்தவுடனேயே யார சொல்றீங்களோ அவங்க கழுத்துல கண்ண மூடிட்டு தாலிய கட்டுறேன்னு தான சொன்ன? இப்போவே நான் தாலிலாம் கட்ட சொல்லல. போய் பொண்ண மட்டும் பாத்து வருவோம்னு சொல்றேன்.”

“அதிருக்கட்டும், நீ ஏன்டா அந்த பசங்கள இப்டி மொறைக்குற? உனக்கு தெரிஞ்ச பசங்களா?”

“எனக்கு தெரியாது. ஆனா, தெரியும்.”

“என்னடா குழப்புற?”

“தோ, அமுதன் இருக்கான்ல, பிறையோட ஒரு கேஸ்ல வொர்க் பண்ணியிருக்கான். இதோ, இவன் என் பொண்ணு இதழோ ப்ரென்ட். இவனாலதான்டா அவ ரொம்ப வாயடிக்குறா. சமாளிக்க முடியல. இவன உடனே இங்க இருந்து போக சொல்லுடா.”

“டேய், வீட்ல இருக்குறவங்க கிட்ட அப்டி சொல்ல முடியாது. நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.”

“ஏன் ப்ரோ, அவரு உன்ன இப்டி கழுவி ஊத்துறாறே? எல்லாத்தையும் கேட்டுட்டு எப்டி இப்டி அமைதியா இருக்க?”

“உங்களுக்கு புதுசு, எனக்கு சின்ன வயசுல இருந்து கேட்குறதுதானே. பழகிடுச்சு ப்ரோ” என்றவன் அவரின் பேச்சுகளை கேட்டும் கேட்காததுபோல் தனக்கான தேநீர் கோப்பையை எடுத்துக் கொண்டு உள்அறைக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கவனித்தான் இளையாவும் திகழும் ஒன்றாக இருந்த குடும்பப் புகைப்படத்தை.

“ஏய், நம்ம ஆளு. அடியே இதழ், என்னோட லவ்வுக்காக நீயே அந்த வீட்டுக்கு மருமகளா போக போறத நினச்சு என்னோட கண்ணுல ஆனந்த கண்ணீர் ஏரியா வழியுதுடி” என்று நினைத்தவன், பூரிப்போடு அந்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான், “இளையா கல்யாணம் செய்துக்க மாட்டான்” என்ற அகிலனின் சொல் கேட்டு அனைவரும் அதிர்ந்து நின்றனர், இளையாவும்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்