Loading

அத்தியாயம் 8

“அவன் வந்துவிட்டானாம். என் மனதை காணாமலேயே கவர்ந்துவிட்டவன் நாளைக் கழித்து நேரில் வரப் போகிறானாம். அவனுக்கென நானும், எனக்கென அவனும் தனியுலகில் சஞ்சரிக்கும் இந்தத் தருணம்தான் எத்தனை எத்தனை ரசனையாக உள்ளது. காமம் வேண்டாம், கொஞ்சித் தீர்க்க வேண்டாம், எச்சில் பரிமாறும் இதழ் முத்தம் வேண்டவே வேண்டாம்… அவன் மடியில் படுத்துறங்கும் பத்து நிமிடமும் சொர்க்கமே.! அவனை நான் மார்போடு அணைத்திடும் சொச்ச நிமிடமும் சொர்க்கமே. அவனை நேரில் காணும் நொடியே எந்தன் மொத்த வாழ்வுக்கான திருப்பம் துவங்கிடும் நேரம். – காத்திருப்போடு இதழ்”

வாயில் வைத்த தேநீரை சட்டென்று குவளைக்குள்ளேயே துப்பி விட்டான் பிரவீன். எல்லாம் அகிலன் கூறிய செய்தியின் அதிர்ச்சி தான். “நல்லாதானடா போய்க்கிட்டு இருக்கு. இளையாவுக்கு கல்யாணம் வேண்டாம்னு இவன் ஏன் சொல்றான்?” என்று புலம்பியபடியே அறையைவிட்டு வெளியே வந்தான் பிரவீன். அப்போதுதான் திகழும் தன் அறையில் இருந்து வந்தாள்.

‘ஐய், நம்ம ஆளு’ என்று அவன் அவளை கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருக்க, அவனை கிஞ்சித்தும் கண்டுக்கொள்ளளாதவள், அனைவரும் அதிர்ச்சியாக இருப்பதைப் பார்த்து, “என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் இப்டி பேயறைஞ்ச மாதிரி நிக்குறீங்க?”

“என்ன அகில் சொல்ற? ஏன் அப்டி சொல்ற?” என்றவாறே இருக்கையை விட்டு எழுந்தார் தேவநந்தன்.

“என்ன சொன்னாங்க? என்னம்மா ஆச்சு?” என்று மீண்டும் திகழ் கேட்க, “இளையா கல்யாணம் செய்துக்க மாட்டான்னு இவன் சொல்றான்டி” என்றார் தேன்மொழி.

ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், “ஆமா மா, இளையா கல்யாணம் செய்துக்க மாட்டான்.” என்றபடியே அன்னையின் அருகில் வந்தாள் திகழினி.

‘சரியான லூசு கும்பல்ல மாட்டிக்கிட்டோமோ’ என்று பிரவீனால் எண்ணத்தான் முடிந்தது.

“ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கா? எதுல விளையாடணும்னு விவஸ்த இல்ல?” என்று கடிந்த தேன்மொழியை அடக்கிய திகழ்,

“நாங்க ஒன்னும் விளையாடலமா. சீரியஸ்சா தான் சொல்றோம். இளையா கல்யாணம் செய்துக்க மாட்டான்.” என்று அழுத்தமாகக் கூறினாள்.

“டேய், அவங்க ரெண்டு பேரும் என்னடா சொல்றாங்க. நீ பாட்டுக்கு பேசாம அமைதியா இருக்க?” என்று அதட்டினார் தேவநந்தன். இளமாறனோ என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகத்தான் நின்றுக் கொண்டிருந்தார். அமுதனும் பிரவீனும் இது குடும்ப விவகாரம் என்று ஏதும் குறுக்கிடாமல் நின்றுக் கொண்டிருந்தனர்.

‘இவங்க ரெண்டு பேரும் ஏன் இப்போ என்னோட வாழ்க்கைல சூன்யம் வைக்குறாங்கன்னு தெரியலேயே’ என்று மனதிற்குள் புலம்பியவன்,

“எனக்கே ஒன்னும் புரியலப்பா.!” என்றான் அப்பாவியாக.

“இல்லப்பா, அவனுக்குத் தெரியும். அந்த காரணத்த சொல்லாம மறைக்குறான்.” என்றான் அகிலன்.

திகழும் கூட அதையேத்தான் மொழிந்தாள், “நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயம்பா. இளையா சொல்லாம மறைக்குறான். அவன் கல்யாணம் செய்துக்க மாட்டான்.”

“ரெண்டு பேரையும் அறைஞ்சுருவேன். தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைங்கன்னு பாக்குறேன். எதாவது புரியுற மாதிரி பேசுறீங்களா? என்ன நடந்துச்சு? என்ன ஆச்சுன்னு சொல்ல போறீங்களா இல்லையா?” என்று உட்சபட்ச டெசிபலில் கத்தினார் தேவநந்தன்.

‘நல்லா கேளுங்க மாமனாரே! சூசைட் அட்டம்ப்ட் பண்ணதுக்கே இவனுக்கு மூளை குழம்பிடுச்சு போல. இவன்கூட சேர்ந்துக்கிட்டு என் ஆளும் புரியாத மாதிரியே பேசுறா.’ என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர்வார்த்தை தன் மனதிற்குள் வாதித்துக் கொண்டிருந்தான்.

“தேவா, கொஞ்ச நேரம் சும்மா இரு. நீங்க ரெண்டு பேரும் தெளிவா சொல்லுங்கப்பா. நாலு வருசத்துக்கு முன்னாடி என்ன ஆச்சு? ஏன் இளையா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க?” என்று பொறுமையுடன் கேட்டார் இளமாறன்.

“நாலு வருசத்துக்கு முன்னாடி ஜர்னலிசம் படிக்க அவன் போனான். அப்போ ஒரு பொண்ண பாத்து அவளயே நினச்சிக்கிட்டு இந்நாள் வரைக்கும் இருக்கான். அது மட்டும் இல்ல, இவனால ஒரு பொண்ணோட வாழ்க்கையே வீணா போய்டுச்சு. அந்த குற்றவுணர்வுல அப்போவே ஒரு சத்தியம் செய்துட்டான், இனிமே கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு” என்றான் அகிலன்.

‘அடப்பாவி! உன்ன லடாக்குக்கு கூட்டிட்டு போனதுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அத சிறப்பா செஞ்சிட்டடா. இவளுக்கு நான் என்ன பண்ணேன். இந்த விசயம் இவளுக்கு எப்டி தெரியும்        ?’ என்று இளையா யோசித்துக் கொண்டிருக்க,

“தேவா, எந்த விசயமா இருந்தாலும் தெளிவா முடிவு செஞ்சிட்டு போன் பண்ணு, பேசிக்கலாம். பசங்க மேல கை வைக்காத.” என்றபடி வெளியே சென்று விட்டார் இளமாறன்.

மனதளவில் உடைந்த தேவநந்தன் அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டார். “அப்பா” என்று அகிலன், திகழ் மற்றும் இளையா மூவரும் அவர் அருகில் செல்ல, “அம்பது வருச நட்புடா. என்னைக்கும் உன் குடும்பம், என் குடும்பம்னு நானும் சரி, அவனும் சரி பிரிச்சு நினச்சது கிடையாது. இப்போ அவனே என்னைத் தனியா விட்டுட்டு போற அளவுக்கு வச்சீட்டிங்களேடா.” என்றவரின் வார்த்தைகள் உடைந்துதான் போனது.

உடைந்தது தேவநந்தன் மட்டுமல்ல, இளமாறனும்தான். தான் அவசரப்பட்டுவிட்டோமோ, இன்னும் தெளிவான முடிவு வந்த பிறகு இதழிடம் தெரிவித்து இருக்க வேண்டுமோ என்று சிந்தித்தவாறே வீட்டிற்கு சென்றார்.

பிரவீன்தான் தேவநந்தன் அருகில் வந்து, “சார், மாறன் அப்பா உங்கள தனியா விட்டுட்டு போனதா நினைக்காதீங்க. உங்களுக்கும் அவருக்கும் அம்பது வருச நட்புன்னு சொல்றீங்க. அப்ரோம் எப்டி தனியா விட்டுட்டு போவாரு.? அவரு இருந்தா, அவருக்காக நீங்க இளையாவையோ இல்ல திகழையோ காயப்படுத்திடுவீங்கன்னு பயம். கடைசியா கூட பசங்க மேல கை வைக்காதன்னு தானே சொல்லிட்டு போனாரு. நானும் இதழும் செய்யாத சேட்டை கிடையாது. பிறைம்மா கூட அடிச்சு இருக்காங்க. ஆனா, மாறன் அப்பா இது வரைக்கும் எங்க மேல கை வச்சதே கிடையாது. அதுனாலதான் அவர் கிளம்பிட்டாரு. நீங்க மனச விட்டுடாதீங்க. என்ன நடந்துச்சுன்னு முதல்ல விசாரிங்க. அப்ரோம் எந்த முடிவு எடுத்தாலும் அப்பா ஒத்துக்குவாரு. இதழ நான் கன்வீன்ஸ் பண்ணிடுவேன்.” என்று ஆறுதல் அளித்தான்.

உண்மையிலேயே தேவநந்தனிடம் யாரும் இத்தனை நேரம் அமர்ந்து பேசுவது அரிது தான். அதுவும் அவர் கோபமாக இருக்கும் நேரத்தில். 

பெருமூச்சு விட்டவர், “இளையா, நீ நிஜமாவே வேற ஒரு பொண்ண விரும்புறீயா? அன்னைக்கே ரெண்டு பேரும் கேட்டோம்ல? என்ன ஏதுன்னு சொல்லி இருந்தா, பிரச்சனை வந்து இருக்காது தான?” என்றவரின் அருகில் அமர்ந்தவன்,

“அப்பா, நான் யாரையும் லவ் பண்ணலப்பா. நான் ஜர்னலிசம் படிக்கப் போனப்போ ஒரு பொண்ண பாத்தது என்னமோ உண்மை தான். அதெப்டி சொல்றது, இப்போ க்ரஷ்ன்னு சொல்லிட்டு சுத்துற மாதிரி, அப்போ கொஞ்ச நாள் அந்த பொண்ணு மேல ஒரு பிடித்தம், அவ்ளோதான். மத்தபடி காதல் அப்டிங்குற அளவுக்குலாம் போகலப்பா. ஆனா, இன்னொரு விசயம், அகிலன் சொன்ன மாதிரி ஒரு பொண்ணோட லைஃப் போனதுக்கு நான்தான் காரணம். அதுல எந்த சந்தேகமும் கிடையாது. அதுக்கான பிராயசித்தத்த தேடித்தான் லடாக் போனேன். ஆனா, அந்த பொண்ணு இப்போ உயிரோட இல்ல. நீங்க மாறன் மாமா கிட்ட பேசுங்கப்பா. எனக்கு கல்யாணத்துல சம்மதம்.” என்றுவிட்டான்.

இருந்தாலும் தேன்மொழிக்கும், தேவநந்தனுக்கும் ஏதோ ஒன்று நெருடலாக இருந்தது. இன்னும் அவனால் பாதிக்கப்பட்ட பெண் யாரென்று கூறவில்லையே! ஒரு பெண்ணின் வாழ்க்கை சிறு பூசலால் வீணாகி விடக்கூடாது என்று தெளிவாக இருந்தனர் இருவரும்.

“நீ எங்களுக்காக ஒன்னும் ஒத்துக்க வேண்டாம்பா. நாளன்னைக்கு தேதி குறிச்சு இருக்காங்க. நீ நேர்ல இதழ்கிட்ட பேசு. எங்ககிட்ட சொல்ல முடியாத விசயமா இருந்தாலும் நீ இதழ்கிட்ட கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும். இதழுக்கு சம்மதம்னா, கல்யாணம். அவ்ளோதான்.” என்றபடி தன்னறைக்கு சென்றுவிட்டார் தேவநந்தன், அவர் பின்னோடே தேன்மொழியும்.

இளையாதான் தலையில் கைவைத்தபடி அமர்ந்து இருந்தான். அகிலனும் திகழும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, அமுதனும் பிரவீனும் கிளம்ப எத்தனித்தனர்.

“நாங்க கிளம்புறோம் ப்ரோ” என்றபடி முன்னே வந்தவர்களை மூவரும் நோக்கிட,

“பிரவீன் உங்ககிட்ட பேசணும். அதுனால நானும் உங்க கூட வரேன்.” என்று இளையாவும் அவர்களுடன் சென்றான்.

இளையாவும் பிரவீனும் மகிழுந்தில் கிளம்ப, அமுதன் தன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான், தன்னவளின் எண்ணங்களை சுமந்து.

இவர்கள் இந்தபக்கம் சென்றபின், “ஆமா உனக்கு எப்டி இந்த விசயம் தெரியும்?” என்று திகழிடம் கேட்டான் அகிலன்.

“எந்த விசயம்?”

“மறைக்காத திகழ்? நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த விசயம்னு நீ எப்டி சொன்ன? அவன் கல்யாணம் செய்துக்க மாட்டான்னு உனக்கெப்டி தெரியும்?”

“அதுவா… சொல்லணும்னா ஒரு கண்டிசன்?”

“என்ன?”

“நீங்க என்னை லவ் பன்றதா ஒத்துக்கோங்க. நான் சொல்றேன்.”

“அப்டியே அறைஞ்சேனா பாரேன்” என்று கையை ஓங்கியவன், தன் பின்னந்தலையை கோதி எரிச்சலைக் கட்டுப்படுத்தினான்.

“லூசா திகழ் நீ? உன்ன அந்த எண்ணத்துல நான் பாக்கலன்னு சொன்னா கேட்கவே மாட்டியா? இப்போ நானும் இளையாவும் எங்க போனோம்னு தெரியுமா? நான் ஒருத்திய ஏழு வருசமா காதலிக்குறேன்னு தெரியுமா? அவள பாக்க போய் எந்த நிலைமைல நான் திரும்பி வந்தேன்னு தெரியுமா?” என்று அடிக்குரலில் சீறினான் அகிலன்.

“அவங்கதான் இப்போ உயிரோட இல்லயே!” என்றவளின் பதில்தான் அவனை எத்தனை எத்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“உனக்… உனக்கெப்டி தெரியும்?”

“எப்டியோ தெரியும். அதெதுக்கு உங்களுக்கு.? நான் முதல் காதலா இருக்கணும்னு கேட்கலேயே, கடைசிவரைக்கும் உங்களுக்கானவளா இருக்கத்தானே ஆசப்படுறேன். அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிங்குது?” இந்த சொற்களில்தான் எவ்வளவு ஆற்றாமை. 

“என்னோட பொறுமையை ரொம்ப நேரம் இழுத்து பிடிச்சிட்டு இருக்க முடியாது திகழ். நான் எப்படிப்பட்ட வலில இருக்கேன்னு உனக்கு ஏன் புரிய மாட்டிங்குது. உன்ன இதுவரைக்கும் நான் இளையாவோட தங்கச்சியாதான் பாக்குறேன். எனக்கும் நீ…”

“வேண்டாம். என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். இனிமே உங்கள எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். அன்ட், எனக்கு எந்த விசயமும் முழுசா தெரியாது. இளையா இங்க வரதுக்கு ரெண்டு நாள் முன்னாடி நீங்க உங்க வீட்டு மாடில தண்ணியடிச்சிட்டு ஜாக்கிக்கிட்ட பொலம்பிக்கிட்டு இருந்தத கேட்டேன். ‘மகி எங்க இருக்கான்னு தெரியல. நாலு வருசம் முன்னாடி நான் கல்யாணம் செய்துக்காம இளையாவும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு திகழ் மேல வேற சத்தியம் செஞ்சி வச்சி இருக்கான். எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது’ன்னு பேசிக்கிட்டு இருந்தீங்க. அத வச்சு தான் நான் பேசுனேன். இதுவரைக்கும் இதுக்கு பின்னாடி என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. குட் பை.” கண்கள் குளமாக தன்னறை நோக்கி சென்றுவிட்டாள்.

அவள் சென்ற திசையையே சிறிது நேரம் வெறித்தவன், காலம் அனைத்தையும் குணப்படுத்தும் என்ற எண்ணத்தோடு தன் இல்லம் நோக்கி சென்றான்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்