அத்தியாயம் – 4
“அன்புள்ள என்னவனுக்கு,
உன் இதழ் எழுதுவது…
எங்கேயடா இருக்கின்றாய்? எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போகிறார்களாம். ஒருவேளை அது நீயாக இருப்பாயா? இல்லை விதி என்னும் சதியால் நான்கைந்து வரன்களுக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருப்பாயா? அறியாமலும் தெளிவில்லாமல் இங்கொருத்தி அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னொரு சந்தேகம் வேறு என் மனதை நச்சரித்துக் கொண்டு இருக்கின்றதடா? எனக்கு காதல் எல்லாம் உன்னோடுதான் என்ற முடிவினில் நானிருக்க ஒரு வேளை நீ எவளோ ஒருத்தி பின்னே சுற்றிக் கொண்டு இருப்பாயா? என்ற கேள்வி வேறு என் மனதில். ஆயிரம் காதல் இருந்துவிட்டுப் போகட்டும் உனக்கு. ஆனால், உனக்கு உரிமைப்பட்டவள் நான் ஒருவள் என்பதை மறந்து விடாதே. எதிர்காலம் என்றால் உனக்கு நான்தான். நினைவிருக்கட்டும்.
ஆனால், இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது, பார்த்து பேசியே இராத உன்னிடம் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பேதை நான்.
விரைவில் உன் கரம் சேரும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கும் இதழவள்.”
காலையிலிருந்தே மனது ஏதோ சரியில்லாததைப் போல்தான் இருந்தது இதழினிக்கு. அதுவும் நேற்று பூங்காவில் பார்த்த மனிதர் சொன்ன வார்த்தைகள் இன்னும் இன்னும் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தன் தந்தையிடம் இதழ் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று வருகைப் புரிந்தார் தந்தையுடன் பயின்ற, பணியாற்றிய நண்பர் தேவநந்தன்.
“என்ன மிஸ்டர் இளமாறன் ரிட்டயர்டு ஆனா ஃப்ரென்ட்டயும் மறந்துடணும்னு நினச்சிட்டிங்க போல.?” என்றபடியே அருகில் வந்தார் தேவநந்தன்.
தன் நண்பனைப் பார்த்ததில் இன்ப அதிர்ச்சி இளமாறனிற்கு என்றால், இவர் திகழின் அப்பாவாகிற்றே என்ற அதிர்ச்சி இதழிற்கு.
‘ஆஹா! திகழோட அப்பா மிலிட்டிரி மேன்னா? அடேய் பிரவீனு, அந்த பிள்ள அப்பாவே கராத்தே பழகி இருக்குன்னு சொன்னேன் கேட்டியாடா.? உனக்கு சங்குதான்டி. ரிப் ஃபார் பிரவீன்’ என்று மனதிற்குள்ளேயே தன் நண்பனிற்கு மலர்வளையம் வைத்துவிட்டாள்.
“வாங்க மிஸ்டர் தேவநந்தன். நீங்களும்தான் பேசி வச்சதேயே மறந்துட்டீங்க? அத பத்தி ஒரு முடிவும் எடுக்கல” என்றபடி இருவரும் முட்டிக்கொண்டு நிற்க, இதழிற்குதான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
“ஹலோ.. ஹலோ…! நிறுத்துங்க ஓல்டு மேன்ஸ்! ப்பா, யாரு இவரு.?” என்று முகத்தில் குழப்பத்தைத் தாங்கிக் கேட்டாள்.
“இதழ்மா! நீ உடனே வீட்டுக்கு போ.! அப்பா அப்ரோம் வரேன்.” என்று அவளை விரட்ட,
“இப்போ எதுக்கு மிஸ்டர், என்னோட மருமகள மிரட்டுறீங்க?” என்று முறைத்தார் தேவநந்தன்.
‘எதே!’ என்று ஒரு பார்வை பார்த்தாள் இதழ்.
‘ஒருவேள இவரோட பையனதான் மம்மி மாப்பிள்ளையா ஃபிக்ஸ் பண்ணி இருப்பாங்களோ? வெய்ட் அன்ட் வாட்ச்’ என்று அமைதியானாள்.
“யாருக்கு யாரு மருமக? கொஞ்சம் இடம் கொடுத்தா என்ன வேணா பேசுவீங்களா மிஸ்டர்.” என்று இளமாறன் கத்தியதில் சிரித்துவிட்டார் தேவநந்தன்.
“டேய் இளா” என்று அவர் கட்டித்தழுவ, தானும் சிரித்துக் கொண்டே விட்ட நட்பை புதுப்பித்தனர் இருவரும்.
“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர்ஸ், இங்க என்ன நடக்குது?” அவளுக்குத்தான் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. வந்தார்கள் கத்தினார்கள் இப்போது கட்டித்தழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது.
“இதழ்மா, நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல? என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட்டும் என்கூடவே ரிட்டயர்டு ஆகிட்டான்னு அந்த பய இவன்தான் தேவநந்தன். அஃபிசியலா சொல்லனும்னா கர்னல். தேவநந்தன்.” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
“ஹலோ அங்கிள். நான் இதழினி. வொர்க்கிங் ஆஸ் அ டி.எல் இன் ஐ.டி கம்பெனி.” என்றாள் புன்னகை முகமாக.
“என்ன இது ஃபார்மாலிட்டிஸ்? மாமான்னு சொல்லுமா.” என்றார் இவரும்.
“நந்தா இன்னும் இதழ்கிட்ட விசயத்த சொல்லலடா.” என்றார் இளமாறன்.
“அப்போ நானே சொல்லிடுறேன். இதழ்மா எனக்கு ஒரு ஃபெலோ பையன் இருக்கான். அவன் ஒரு வைல்டு லைஃப் அன்ட் ஜேர்னல் ஃபோட்டோகிராஃபர். அவன கல்யாணம் செய்துக்கிறியா?” என்ற கேள்வியில் இதழ்தான் திருத்திருவென விழித்தாள். இதற்கு எத்தகைய எதிர்வினை புரிவது என்றே அவளுக்குத் தெரியவில்லை.
பின் இளமாறனும் தேவநந்தனும் அவர்களுக்குள் உரையாட ஆரம்பித்துவிட யோசனையுடனே வீட்டிற்கு வந்தாள். அந்த யோசனை இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பிரவீனிற்கும் ஐந்து முறை அழைப்பு விடுக்க அவன் எடுக்காமல் போனதில் இன்னும் கடுப்புடன்தான் இருக்கிறாள் இவள்.
“இந்த எருமைக்கு என்ன கேடு வந்துச்சு? எத்தன தடவ கால் பன்றது பைத்தியக்காரன் எடுத்துத் தொலைய மாட்டிங்குறான். மவனே ‘இதழ்’னு இளிச்சிக்கிட்டு வரட்டும் அவனுக்கு இருக்கு.” என்று கண்டபடி கழுவி ஊத்திக் கொண்டிருந்தாள்.
இவள் திட்டியது அவனிற்கு கேட்டிற்குமோ என்னமோ இதோ வந்துவிட்டான். “இதழ்…” வெளியில் கேட்ட அவனின் குரலில் கடுப்பானது இரண்டு ஜீவன்கள்.
“இவன வர வேண்டாம்னு சொன்னா கேட்கவே மாட்டான்” என்று இளமாறனும்,
“இந்த பைத்தியத்துக்கு இப்போ தான் வழி தெரிஞ்சுதா… இவன” என்று இதழும் ஒன்றாக கதவைத் திறந்து, “இப்போ எதுக்குடா வந்த?” என்று கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பாவம் பிரவீனுக்குத்தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். பின் நினைவு வந்தவனாக, “இதழ், உன்கிட்ட முக்கியமான விசயம் சொல்லணும். உடனே வா” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் இளமாறனும் இதழும் கத்துவதை காதில் வாங்காமல்.
அவளோடு வெளியே வந்தவன், “இங்க பாரு இதழ், நான் ஒரு முக்கியமான விசயமா சொந்த ஊருக்கு போறேன். வரதுக்கு பத்து நாள் ஆகும். மேனேஜ் பண்ணிக்கோடி.” என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்.
“என்ன, பத்து நாளா? அப்டி என்ன தலபோற விசயம்?” என்று அதிர்ந்தவாறே கேட்டாள். சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள் ஆகிற்றே. ஒன்று இரண்டு நாட்கள் என்றால் கூட அவளை சமாளித்து செல்வதில் அவன் படாதபாடு பட வேண்டியதாக இருக்கும். இதில் பத்து நாட்கள் என்றால் இதழால் தாங்கவே முடியவில்லை.
“இதழ்மா, சொன்னா புரிஞ்சுக்கோடி. ரொம்ப முக்கியமான விசயம். நான் போனாதான் சரியா நடக்கும். ப்ளீஸ்… கண்டிப்பா சீக்கிரம் வந்துடுவேன்.” என்றிட,
சட்டென்று அவள் கண்ணில் நீர்க் கோர்த்துக் கொண்டது. “பைத்தியக்கார நாயே.! அயோ உன்னால இப்போ கண்ணு வேற வேர்க்குதுடா. சரி, போய்த்தொல. சீக்கிரம் வந்துடுவதான?” என்று கேட்டவளிற்கு ‘ஆம்’ என்பதுபோல் தலையசைத்தவன், “நான் இல்லன்னு பத்து நாள் நல்லா என்ஜாய் பண்ணுவல?” என்று அவளை சமன்செய்ய முற்பட்டான்.
“இல்லயா பின்ன? உன் இம்ச இல்லாம பத்து நாள், புதிய வானம், புதிய பூமின்னு ஜாலியா இருக்கப் போறேன்” என்று அவளும் நண்பனிற்காக தன்னை சமன்செய்துக் கொண்டாள்.
“சரி நான் கிளம்புறேன்” என்று அவன் புறப்பட, தீர்ந்திடாத குழப்பத்திலும், நண்பனை விட்டு பிரிவதிலும் தளர்ந்தவள் அமைதியாக வீட்டின் வெளியே கிடத்தப்பட்ட மர நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.
அவளுக்கும் புரிகிறது, தான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை என்றும் அவனிற்கும் சொந்த வேலைகள் இருக்குமென்றும். ஆனாலும் அவளிற்கு அதனை கடந்து வரும் வழிதான் அகப்படவில்லை. தற்போது இன்னொரு குழப்பமும் அவளிற்கு உதயமாகியது, “கல்யாணத்துக்கு அப்ரோம் பிரவீன் கூட பேச முடியுமா? இப்போ மாதிரி அப்போவும் அவன் கூட பழக முடியுமா?” இவளுக்கு மட்டுமா இந்த கேள்வி, இதழிற்கு திருமணம் என்று சொன்ன உடனேயே பிரவீன் அதிர்ச்சியாகியதற்கு முதல் காரணமே இது தானே. அவர்களின் நட்பு. நீடிக்குமா? துண்டிக்கப்படுமா?
“தேனு… தேனு” என்று சந்தோசக் கூச்சலில் இல்லம் வந்து சேர்ந்தார் தேவநந்தன். தன் அறையில் இருந்து வந்த தேன்மொழி, “என்னங்க, முகத்துல தௌசண்ட்டு வால்ட் பல்பு எரியுது. என்ன விசயம்?”
“நான் இன்னைக்கு இளமாறன பாத்தேன்டி. எப்டியோ அந்த பயல சம்மதிக்க வச்சுட்டேன். அவனுக்கும் இதுல விருப்பம்தான். இளம்பிறைக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு ஃபோன் பன்றேன்னு சொல்லி இருக்கான்.” என்றதில் தேன்மொழிக்கும் ஏகபோக சந்தோசம்தான்.
அப்போதுதான் அகிலனின் வீட்டில் இருந்து வந்தவன் அன்னை தந்தையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு காரணம் புரியாமல் விழித்தான்.
“என்ன விசயம்மா?” என்றபடியே அவன் உள்ளே வர,
“எல்லாம் உன் கல்யாணம் விசயம்தான்.” என்று புன்னகைத்தார் தேன்மொழி.
அவனுக்கு புஸ் என்று ஆனது. வந்த நாள் முதல் இதைப் பற்றியே பேச்சு என்ற சலிப்பும் தோன்றாமல் இல்லை.
“ஏன்ங்க, பொண்ணு ஃபோட்டோ இருக்காங்க?”
“நான் இளமாறன்கிட்ட கேட்குறேன் தேனு.” அவர்களின் மகிழ்ச்சியினை கலைக்க போகிறோம் என்ற கலக்கத்துடனேயே,
“அம்மா, அப்பா… ரொம்ப முக்கியமான விசயம் ஒன்னு பேசணும்”
“என்னடா?” இருவரும் அவனை நோக்க, “இப்போ தான் **** ஃபுரடக்சன் கம்பெனில இருந்து கால் வந்தது. ஒரு ப்ராஜெக்ட்காக உடனே லடாக்குக்கு போகனும்மா.” என்றான் தயங்கியபடி.
தேவநந்தன் எதுவும் பேசவில்லை. அவனின் தயக்கமும் குழப்பமும் அவருக்கு புரிந்தே இருந்தது. இதுவரை திருமணம் என்ற பேச்சிற்குள் அவனை இழுக்காதது தவறோ என்று ஒரு தந்தையாக அவரை எண்ண வைத்தது.
“இளையா இப்போதான்டா எல்லாம் கூடி வருது. அதுக்குள்ள மறுபடியும் கிளம்பணும்னு சொல்ற?” என்று வருத்தத்துடன் கேட்டார் தேன்மொழி.
“அம்மா, நான் கல்யாணத்துல இருந்து தப்பிக்கணும்னுலாம் போகல. நிஜமாவே ப்ராஜெக்ட்காகத்தான் போறேன். இந்த டைம் பத்து நாள் தான். அதுவும் சொடக்கு போடுற நேரத்துல போய்டும். வந்துடுவேன்மா.”
அப்போது சொடக்கிடும் சத்தம் கேட்க, “எங்க நான் சொடக்கு போட்டேன் பத்து நாள் போகல!” என்று நக்கல் செய்தபடியே வந்தாள் திகழ்.
“கடுப்பேத்துற மாதிரி காமெடி பண்ணாத. கொஞ்ச நேரம் சும்மா இரு. குட்டி சாத்தான்” என்று இறுதி வார்த்தையை மட்டும் முணுமுணுப்பாக முடித்தான்.
தோளைக் குலுக்கியவள் தந்தையின் அருகே அமர, “சரி, நீ போய்ட்டு வா. ஆனா, நீ வந்த உடனே பொண்ணு பாக்கப் போறோம் சரியா?” என்று தன் கடமையிலேயே கண்ணாக இருந்தார் தேன்மொழி.
இளையாவிற்கும் வேறு வழியில்லை. “சரிம்மா.! நீங்க பாக்குற பொண்ண கண்ண மூடிக்கிட்டு தாலி கட்டுறேன் சரியா?”
“பாத்துடா, பக்கத்துல அவங்க அம்மா நிக்கப் போறாங்க.” என்று அவள் பழிப்புக் காட்ட,
“கொஞ்சம் சும்மா இரு திகழ்.” என்று அதட்டினார் தேவநந்தன்.
அதற்கு பின் அவள் வாயைத் திறப்பாள் என்று நினைத்தால் அது நம் தவறு.
“சரி போய் பேக் பண்ணு” என்று அவனை அனுப்பிவிட, “போய் அவனுக்கு எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணுடி” என்று திகழையும் துரத்தி விட்டார் தேன்மொழி.
“அந்த வளந்த மாடுக்கு எடுத்து வைக்க கூட தெரியாதா?” என்று முனகினாலும் அன்னையின் சொல்லுக்காக அண்ணனின் அறைக்குள் விரைந்தாள்.
தன் அருகே இருந்த கணவரின் தோளில் வாகாக தேன்மொழி சாய்ந்துக் கொண்டவர், “இப்போதானேங்க வந்தான். அதுக்குள்ள கால்ல சுடுதண்ணீ ஊத்துன மாதிரி கிளம்புறான். இவனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு பாத்தா ஏன் இப்டி செய்றான்?” என்று தன் வருத்தத்தை வெளிக்காட்டினார்.
தன் இல்லாளின் கூந்தலில் கையை விட்டு வருடிக் கொடுத்தவர், “அவன் வேலைக்காக தானே தேனு போறான். பத்து நாள் தானே வந்துடுவான். அதுக்குள்ள நாம ஆக வேண்டிய காரியத்த பாக்கலாம்.”
“ஏன்ங்க, ஒருவேள இளையா லவ் பன்றானோ? அதான் இப்டி உடனே கிளம்புறானா?”
“உன் கற்பன உலகத்துக்குள்ள என்னையும் இழுக்காத தேனு. லவ் பன்னா இந்நேரம் அவன் சொல்லி இருப்பான்னு உனக்கே தெரியும். பயத்துல தேவையில்லாதத யோசிக்காத.” என்று சமாதானம் செய்தார்.
“எனக்கு புரியலங்க, கல்யாணம்னுதானே சொன்னோம். என்னமோ காட்டுல போய் வாழ சொன்ன மாதிரி இப்டி குழம்பி கிடக்கான்.?”
“காட்டுல போய் வாழ சொன்னாக்கூட உன் பையன் போய்டுவான். கல்யாணம்னு சொன்னதுனாலதான் பயந்துட்டு ஓடுறான்போல. எல்லாம் என் அனுபவம்”
“ஓ! அப்போ ஐயா நீங்களும் காட்டுல போய் வாழ்ந்துடுவீங்களா? அப்டி ஒன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டு வீட்டுல இருக்கணும்னு அவசியம் கிடையாது.” என்று அவர் சிலுப்பிக்கொள்ள,
“அடியே தேனு! ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ. அப்போவும் இப்போவும் பொண்ணுங்களுக்கு சின்ன வயசுல இருந்தே கல்யாணம் அப்டின்னு ஒரு வார்த்தைய சொல்லி அவங்கள அதுக்காக கொஞ்சமாவது ரெடி பன்றோம். ஆனா, பசங்களுக்கு அந்த வயசுல தான் அத பத்தியே பேசுறோம். இத்தன நாள் அம்மா, அப்பா, தங்கச்சின்னு இருந்தவன்கிட்ட இப்போ இனிமே புதுசா உனக்குன்னு ஒருத்தி வர போறா, அவ கூட தான் உன்னோட மிச்ச வாழ்க்கையும்னு சொன்னா அத ஃபேஸ் பன்ற தைரியம் நிஜமாவே பசங்களுக்கு கிடையாது தேனுமா.”
“அப்போ பொண்ணுங்க மட்டும் சொன்ன உடனே ரெடியாகிடுவாங்களா? அவங்களுக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்.”
“நான் இல்லன்னு சொல்லலமா. ஆனா, அதே சமயம் பொண்ணுங்க ஈசியா அந்த சூழ்நிலைய ஏத்துக்குவாங்க. ஆனா, பசங்களுக்கு ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகும்னு சொல்றேன். உங்கள மாதிரி மன தைரியம் எங்களுக்கு இல்லையே!” என்றதில் புரிந்ததுபோல் தலையசைத்தார் தேன்மொழி.
சரியாக அந்நேரம் இளையாவும் தனக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“அம்மா, அப்பா நான் போய்ட்டு வரேன்.” என்று வந்தவனை பூஜை அறைக்கு அழைத்து சென்று திருநீறு பூசி விட்டு அனுப்பி வைத்தார் தேன்மொழி.
வெளியே வந்தவன், அகிலனிற்கு அழைக்க தன் மகிழுந்துவோடு வந்தான் அவன்.
“வீட்ல என்ன சொன்ன ப்ராஜெக்ட் விசயம்னு.”
“நீ?”
“கம்பெனி விசயம்னு சொன்னேன்.”
“சரி சீக்கிரம் போலாம்.” என்றபடி காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது அவர்களின் மகிழுந்து.
“ம்மா, நானும் கிளம்பிட்டேன். பத்து நாளைக்கு எனக்கு போன் பண்ணாதீங்க. நானே விசாரிச்சிட்டு டீடையில்ஸ்சோட வரேன்” என்று பிரவீனும் கிளம்பினான்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1