Loading

டீசர் 3

 

அதுவரை சுற்றிலும் பார்வையை படர விட்டபடி இருந்தவன், தன்முன் அமர்ந்திருந்த பெண்ணவளின் பேச்சில் புருவம் சுருங்க அவளைப் பார்த்தான்.

 

கவர்ந்திழுக்கும் கண்கள், அழகுக்கு அழகு சேர்க்கும் எடுப்பான மூக்கு, சிரிப்பால் கட்டி இழுக்கும் இதழ்கள் என்று சர்வ லட்சணமும் பொருந்திய பெண்ணாக அவளை ரசித்துப் பார்த்தான் என்று நினைத்தால், அது உங்கள் தவறு!

 

எப்போதும் கணினியுடன் நேரத்தை கழிப்பதால், உணர்வுகளை வெளிப்படுத்த மறந்து விட்டவனிடம், ரசிப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

 

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால், அவனிடம் ‘காதல்’ என்பதை உள்ளீடு செய்தால், ‘எரர் 404 நாட் ஃபவுண்ட்’ என்பதே வெளியீட்டாக வரும்!

 

இனி, அவனுக்கானவள் வந்து அவனை அவளுக்கேற்றார் போல மாற்றி அமைத்தால் மட்டுமே, காதல் போன்ற உணர்வை அவனிடம் எதிர்பார்க்க முடியும்.

 

ஆனால், அது அவ்வளவு எளிதா என்ன?

 

இயந்திரனாகிப் போனவனை மீண்டும் மனிதனாக மாற்றப் போகும் நாள் எதுவென்று பொறுத்திருந்து பார்ப்போம்!

 

“ஹலோ, சார்!” என்று அவன் முன் கைகளை அசைத்தவள், “நீங்க இப்படி தான் அடிக்கடி ஸ்லீப் மோடுக்கு போயிடுவீங்களா?” என்று கேட்டவளை, இப்போது முறைத்து பார்த்தான் அவன்.

 

“சரி சரி, உடனே கோப ஸ்மைலியை முகத்துல ஒட்ட வச்சுக்காதீங்க. நீங்க ப்ரொஃபெசர் தான்னு ஒத்துக்குறேன். அதுக்காக, எந்நேரமும் இப்படி பசங்களை சூப்பர்வைஸ் பண்ற மாதிரி தான் முகத்தை வச்சுக்கணுமா?” என்று சலித்துக் கொண்டவள், முன்னே சற்று சரிந்து மெல்லிய குரலில், “ஒன்னு சொல்லவா? உங்களுக்கு செம சார்மிங் ஃபேஸ். சிரிச்சா, அவ்ளோ அம்சமா இருக்கும்! ஆனா, ஏன் சிரிக்க மாட்டிங்குறீங்க? ஃபோட்டோ எடுக்கும்போது கூட சிரிக்க கூடாதா என்ன?” என்று அவன் அவள் கேட்ட கேள்விக்கு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் தான் கூற வந்ததை முழுவதுமாக கூறிவிட்டே ஓய்ந்தாள்.

 

அதற்கும் அவனிடம் எந்த பதிலும் இல்லை!

 

பார்வையிலும் எந்த மாற்றமும் இல்லை. கைகளை மட்டும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, இம்முறை சற்று தீவிரமாக அவளை நோக்கினான்.

 

“கேள்வி கேட்டா கூட பேச மாட்டீங்களா? ஓஹோ, வாத்தில, கேள்வி மட்டும் தான் கேட்க வருமோ?” என்று நக்கலாக கூற, “வாட்ஸ் யுவர் நேம்?” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

 

“எதே! வாத்திக்கு என் பேரே தெரியாதா?” என்று வெளிப்படையாகவே அதிர்ந்தவள், சில நொடிகள் இடைவெளி விட்டு, “உண்மையை சொல்லுங்க. உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? அதை சொல்ல தான் மீட் பண்ண வந்தீங்களா?” என்று வினவினாள்.

 

அதற்கும் புருவ சுழிப்பு மட்டுமே அவனிடம்!

 

“உஃப், இதுக்கும் வாயே திறக்க மாட்டிங்களா? பாவம், உங்க லவர்.” என்று அவள் சொன்னதும் தான் தாமதம், “ஜஸ்ட் ஷட்டப், இப்போ எதுக்கு தேவையில்லாம என் லவரை எல்லாம் இழுக்குற?” என்று அடிக்குரலில் சீறினான்.

 

‘அப்போ நிஜமாவே லவர் இருக்கு போல!’ என்று மனதிற்குள் நினைத்தவளுக்கு முனுக்கென்று குத்த தான் செய்தது. இப்போது திருமணம் வேண்டாம் என்று இருந்தவளை புகைப்படத்திலேயே கவர்ந்தவனாகிற்றே. சிறு வருத்தம் இருக்கத்தானே செய்யும்.

 

எனினும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ப்ச், உங்களுக்கு ஆள் இருக்குன்னா, அதை முன்னாடியே சொல்ல வேண்டியது தான! எதுக்கு இப்படி என்னை அலைய வைக்குறீங்க?” என்று எரிச்சலாக கூறிக் கொண்டிருக்கும்போதே, அவளின் அலைபேசி ஒலிக்க, அதில் தெரிந்த அவள் அன்னையின் பெயரைக் கண்டதும் அவர் மீது அவளின் கோபம் திரும்பியது.

 

அழைப்பை ஏற்று திட்டி தீர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு அவள் அதை ஏற்க, மறுபுறம் சொன்ன செய்தியில் பேசக் கூட தோன்றாதவளாக, எதிரில் அமர்ந்திருந்தவனை அவ்வப்போது பார்த்தபடி அந்த அழைப்பை கேட்டு முடித்தாள்!

 

“சோ, இப்போயாவது பேரை சொல்லுவீங்களா, மிஸ்…?” என்று கேலியாக இழுத்தவனை நோக்கி சமாளிப்பு புன்னகையை வீச, அதே நேரம் அவளின் அலைபேசிக்கு ஏதோ செய்தி வந்த ஒலியும் கேட்டது.

 

கண நேரத்தில் இருவரின் கண்களும் அவளின் அலைபேசியில் பதிய, அவளும் வேகமாக என்ன செய்தி என்று பார்க்க, அதில் வந்திருந்ததோ ஒரு புகைப்படம்!

 

அதைக் கண்டவனின் கண்களுடன் சேர்ந்து முகமும் இறுகிப் போனது.

 

ஏன் என்பதை கதையில் விரிவாக காண்போம்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.