Loading

அத்தியாயம் 2

 

வார நாளின் காலை நேர பரபரப்பு சற்றும் குறையாத வகையில், பள்ளி செல்லும் குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன், ஆட்டோ துவங்கி, பணிக்கு செல்பவர்கள் அரக்கப்பறக்க ஓட்டிச் செல்லும் கார், டூ-வீலர் என்று அனைத்து வாகனங்களின் சத்தமும் காதை பிளந்தாலும், அதற்கெல்லாம் சற்றும் அசையாதவளாக அடித்துப் போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

 

காரணம், கதவு ஜன்னல் அனைத்தையும் மூடிவிட்டு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கும் குளிரூட்டியாக கூட இருக்கலாம்!

 

அவளின் உறக்கத்தை கலைக்கவென்றே பிறப்பெடுத்தது போல அலறியது அவளின் அலைபேசி.

 

முதல் இரண்டு ஒலிகளுக்கு அசைந்து கொடுத்தாளேயன்றி விழிகளை திறக்கவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் பயிற்சியின் காரணமாக அவளின் கரம் தானாக அலைபேசியை உயிர்ப்பித்து செவியருகே கொண்டு சென்றிருந்தது.

 

மறுமுனையில் என்ன கூறினார்களோ, அத்தனை நேரம் திறப்பதற்கு சிரமப்பட்ட விழிகள் பட்டென்று திறந்து கொள்ள, “இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்.” என்று வாயும் தன் பங்குக்கு வார்த்தைகளை கொட்டியது.

 

அதன்பின்னர் எங்கு நிதானமாக யோசிக்க நேரம் இருக்கப் போகிறது?

 

தன் காலை பணிகளை விரைவில் முடித்து வந்தவள், அந்த காக்கிச்சட்டையின் பொத்தான்களை மாட்டியவாறே கண்ணாடியை பார்க்க, அவள் கண்களிலோ செவ்வரியோடி இருந்தது.

 

‘உஃப், லேட் நைட் வந்ததால, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஸ்டேஷன் போலாம்னு நினைச்சா, அதுக்குள்ள இன்னொரு கேஸ் வந்துடுச்சு!’ என்றவளின் மனக்குரலைக் கண்டு, அவளுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றோ, கட்டாயத்தின் பெயரில் இந்த பணியில் சேர்ந்திருக்கிறாள் என்றோ நினைத்தால், அது தவறான யூகமாகும்.

 

தன் சிறுவயதிலிருந்தே தந்தையை பார்த்து பார்த்து வளர்ந்தவளுக்கு காவல்துறை மீதும், காக்கிச்சட்டை மீதும் காதல் வராமல் போனால் தான் ஆச்சரியம்!

 

அவள் வல்லபி ஐ.பி.எஸ்!

 

காவல்துறை அவளின் கனவு வேலை. அந்த கனவுக்காக இராப்பகலாக உழைத்தவள் அவள். அவள் உழைப்பு பலன் தரும் வகையில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் ஆனவள்.

 

அவளின் பயிற்சி காலம் முடிந்து, இதோ கடந்த ஆறு மாதங்களாக காவல் உதவி ஆணையராக பணியாற்றி வருபவள்.

 

தன் கனவுக்காக இத்தனை ஆண்டுகள் செலவு செய்தவள், இப்போது அதற்காகவே சலித்துக் கொண்டால், அதற்கு காரணம் தூக்கம் மட்டுமே!

 

காவல்துறை பணியில் எவ்வளவு நாட்டமோ, அதே அளவு நாட்டம் உறக்கத்தின் மீதும் இருந்தால், அவள் என்னதான் செய்வாள்.

 

ஆனால், இந்த சலிப்பெல்லாம் அவளின் படுக்கையறை வரையில் தான். அதை விட்டு வெளியே வந்துவிட்டால், உறக்கம் எல்லாம் அவளின் விழிகளைக் கூட தழுவாது.

 

இதோ, ஒருவழியாக தன் படுக்கையறையை விட்டு வெளியே வந்தவளை, அவளின் அன்னை பிடித்துக் கொண்டார்.

 

“ஏண்டி இவ்ளோ லேட்டு?” என்று வாய் கேள்வி கேட்டாலும், கரங்கள் மகளுக்கான காலையுணவை எடுத்து வைத்துக் கொண்டு தான் இருந்தன.

 

“ம்மா, கொஞ்சமாச்சும் மனசாட்சியோட பேசு! நான் வீட்டுக்கு வந்ததே ஒரு மணிக்கு தான்.” என்றவளும் அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டே தான் பேசினாள்.

 

“ப்ச், அதுக்காக காலைல வாக்கிங், எக்சர்சைஸ் எல்லாம் ஸ்கிப் பண்ணுவியா?” என்று கேட்ட தாயை வாயில் வைத்த இட்லியுடன் பார்த்தவள், “ஆனாலும் ம்மா, ரொம்ப தான் போலீஸ்கார் பொண்டாட்டியா பேசுற.” என்று கூறியவள், ஓடிச்சென்று கைகளை கழுவிவிட்டு வர, அவளை பரிவுடன் பார்த்தார் அவளின் அன்னை திகம்பரி.

 

“போலீஸ்காரருக்கு பொண்டாட்டி மட்டுமா நான்? இந்த போலீஸ்காரிக்கு அம்மாவும் தான?” என்றவருக்கு, “போதும் போதும் ஒரு சென்டிமெண்ட் சீனை ஆரம்பிக்காத. ஒரு முக்கியமான கேஸ். உன் போலீஸ்காருக்கு தெரியுமான்னு தெரியல.” என்று பதில் கூறியவாறே அவள் வெளியே வர, அவளின் வாகனம் அவளை ஏற்றிக்கொள்ள சரியாக அங்கு வந்து சேர, தன் அன்னையிடம் விடைபெற்று கிளம்பினாள்.

 

இப்போது அவளின் கைக்கு வந்திருக்கும் வழக்கினால், அவளின் விருப்ப உறக்கம் பறிபோவது மட்டுமல்ல, அவளின் வாழ்விலும் பல மாற்றங்களை சந்திக்கப் போகிறாள் என்பதை அப்போது அறியவில்லை வல்லபி.

 

*****

 

சம்பவ இடத்திற்கு வல்லபியின் வாகனம் வந்து நிற்க, அதிலிருந்து கம்பீரமாக இறங்கினாள் அவள். வீட்டிலிருந்தவளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் தோற்றத்திலேயே சில வித்தியாசங்களை கூறிவிடலாம். அதனினும் மேலாக, அவள் உடல்மொழியும் அதில் தெரிந்த உறுதியும் கம்பீரமும், தானாகவே அவளுக்கு மரியாதையை அள்ளித் தந்தது.

 

உள்ளே செல்லும்போதே, அந்த பகுதியின் காவல் ஆய்வாளர் பிரகாஷ் அவளருகே வந்தான்.

 

“மேம், விக்டிம் பேரு மகதி. ஏ.ஆர் இன்ஜினியரிங் காலேஜ்ல ஃபைனல் இயர் ஈ.ஈ.ஈ படிச்சுட்டு இருந்துருக்காங்க. கழுத்துல ஆழமான வெட்டுக் காயம் இருக்கு. மத்தபடி கை, கால்னு எல்ல இடத்துலயும் காயங்கள் இருக்கு. காஸ் ஆஃப் டெத், – நிறைய பிளட் லாஸா இருக்கலாம்னு ஃபாரென்சிக் ஆஃபிசர் சொல்றாங்க. ஆனா, அட்டாப்சி முடிஞ்சா தான் எதையும் கன்ஃபார்மா சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க.” என்று அவள் கேட்கும் முன்னரே, வழக்கைப் பற்றிய தகவல்களை கூறியிருந்தான் பிரகாஷ்.

 

அதைக் கேட்டவாறே மகதியின் வீட்டிற்குள் நுழைந்தாள் வல்லபி. அது ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு. நான்காவது மாடியில் உள்ள அந்த வீட்டில் தான் மகதி தங்கி கல்லூரி சென்று வந்திருக்கிறாள்.

 

கூடம், சமையலறை, ஒரு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், மகதியின் படுக்கையறையில் தான் அவளின் சடலம் உல்ளது என்பதை பிரகாஷ் கூறியிருந்ததால் வல்லபி நேராக அந்த அறைக்குள் சென்றாள்.

 

அந்த பத்துக்கு பத்து அறையின் மத்தியில், கட்டிலருகே மண்டியிட்டவாறு, கழுத்து பின்னே சரிந்து கிடக்க, அங்கு ஏற்பட்டிருந்த வெட்டுக் காயத்தினால் தோள் பிளந்து, ரத்தம் வழிந்தபடி விகாரமாக காட்சியளித்தது மகதியின் சடலம்.

 

முதல்முறை இத்தனை விகாரமாக ஒரு கொலையினை நேரில் கண்டதால் வல்லபிக்கு ஒரு மாதிரி இருந்தாலும், சில நொடிகளிலேயே தன்னை மீட்டுக் கொண்டு, அந்த அறையை சுற்றி பார்வையிட்டாள்.

 

தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளுக்காகவும், மற்ற தடயங்களுக்காகவும் அவ்வறையை சோதனை செய்து கொண்டிருக்க, வல்லபி அவர்களின் வேலைக்கு இடையூறு நேராத வகையில், வேறாதவது கண்களில் சிக்குகிறதா என்று பார்த்தாள்.

 

படுக்கையறையை ஒட்டி சிறிய பால்கனி இருக்க, அதன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்ற வல்லபியின் விழிகள் வெளியே இருக்கும் நிலவரத்தை கணிக்க முயன்றது.

 

என்னதான் கொலை நடந்த இடம் என்றாலும், அது சற்று பணக்காரர்கள் வசிக்கும் இடம் என்பதால், பலரும் அவரவர்களின் வேலைகளை பார்க்க சென்றுவிட, வெளியே ஊடகவியலாளர்களும் மற்றும் சிலருமே இருந்தனர்.

 

அனைத்தையும் கூர்ந்து கவனித்தவளின் விழிகளில் விழுந்ததன பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மலர்கள்.

 

அந்த மலர்ச்செடிகளுடனே வேறுவகை செடிகளும் இருப்பதைக் கண்டவள், அப்போது தான் அதைக் கவனித்தாள். பால்கனியில் மட்டுமல்ல, வீட்டிற்குள்ளும் பல இடங்களில் பலவகை சிறிய செடிகள் காணப்பட்டன.

 

‘க்கும், செடிக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை கொஞ்சம் தனக்கும் கொடுத்துருக்கலாம்!’ என்று நினைக்க மட்டுமே முடிந்தது வல்லபியினால்.

 

பின்னர், பிரகாஷிடம் திரும்பியவள், “எனி ஒப்பினியன்ஸ்?” என்று வினவ, அவனோ, “வீட்டுக்குள்ள எந்த ஃபோர்ஸ்ட் என்ட்ரியும் இல்ல மேம். அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் கிட்டயும் விசாரிச்சுட்டு இருக்காங்க. சந்தேகப்படுற மாதிரி யாரும் வரலன்னு சொல்றாரு. தீபன் அவரை டீடெயில்லா விசாரிச்சுட்டு இருக்காரு. ஃபாரன்சிக் ஆஃபிசர்ஸ் கிட்ட கேட்டவரை கொலைக்கான தடயம் எதுவும் கிடைக்கலன்னு சொல்றாங்க.  ஃபிங்கர்பிரின்ட்ஸ், ஃபூட்பிரண்ட்ஸ், ஹேர்-ஃபாலிக்கில்ஸ் எல்லாத்தையும் சேகரிச்சுட்டு இருக்காங்க. அதை சோதிச்சு பார்த்தா தான் உறுதியா சொல்ல முடியும்னு சொல்றாங்க. கத்தி விக்டிம் பக்கத்துலேயே தான் இருக்கு. அதுல இருக்க ஃபிங்கர்பிரிண்ட்ஸும் எடுத்துருக்காங்க. என்னைக் கேட்டா, இது ஒரு சூசைட்டா இருக்க தான் சான்ஸ் அதிகம் மேம்.” என்று தன் யூகங்களை கூறினான்.

 

அதே சமயம் வல்லபியோ, மகதியின் உடலிலிருந்த காயங்களை ஆராய்ந்து பார்த்தாள். கழுத்தில் இருந்த வெட்டுக் காயத்திற்கும், மற்ற இடங்களிலிருந்த வெட்டுக் காயங்களிற்கும் வித்தியாசம் இருந்தது.

 

“எனக்கு இது சூசைட் போல தெரியல பிரகாஷ். சூசைட்டா இருந்தா, கழுத்துல இருக்க காயமே போதுமே இறந்து போக. மத்த இடங்கள்ல இருக்க காயம் சந்தேகத்தை தருது.” என்று யோசனையுடன் வல்லபி கூற, “மேபி, அவங்க ரொம்ப டிப்ரெஷன்ல இருந்துருக்கலாமே மேம்.” என்றான் பிரகாஷ்.

 

“ம்ம்ம், அதுக்கும் பாசிபிலிட்டிஸ் இருக்கு.” என்ற வல்லபியின் கண்கள் இப்போதும் மகதியின் இறந்த உடலை தான் நோக்கிக் கொண்டிருந்தன.

 

“ஃபாரன்சிக் ரிப்போர்ட் வரவரைக்கும் எதையும் கன்ஃபார்ம் பண்ணிக்க வேண்டாம். கத்தியில விக்டிமோட ஃபிங்கர்பிரிண்ட்ஸ் பதிச்சு அந்த கத்தியை அங்க விட்டுட்டு போறதெல்லாம் பழைய டெக்னிக்கா இருந்தாலும், அதையே ஏன் கில்லர் செஞ்சுருக்க கூடாது? சோ, இது ஒரு ‘வெல் பிளான்ட் மர்டர்’ரா இருக்கவும் வாய்ப்பிருக்கு.” என்றவள், “இவங்க குடும்பத்துக்கு சொல்லியாச்சா?’ என்று கேட்டு பதிலையும் பெற்று கொண்டாள். பின்னர் ஏதோ தோன்ற, மீண்டும் மகதியின் சடலத்தை பார்த்தாள்.

 

பார்வையை அதில் பதித்தபடியே, “பாடியை யாரு முதல்ல பார்த்தது?” என்று வினவ, “பக்கத்து ஃபிளாட்டுல இருக்க துளசிதாஸ் தான் முதல்ல பார்த்துருக்காரு. மகதி மார்னிங் டிஃபன் எப்பவும் அவங்க வீட்டுல தான் சாப்பிடுவாங்கலாம். இன்னைக்கு அவங்க வரலைன்னதும், ஏதாவது பிரச்சனையான்னு பார்க்க, அவருக்கிட்ட இருக்க ஸ்பேர் கீ வச்சு கதவை திறந்து வந்து பார்த்தப்போ தான் பாடியை பார்த்துருக்காங்க.” என்றான் பிரகாஷ்.

 

அதில் வல்லபி பிரகாஷை பார்க்க, அவளின் கேள்வியை புரிந்து கொண்டவனாக, “மகதிக்கு இதுக்கு முன்னாடி பல முறை உடம்பு சரியில்லாம போயிருக்கு. அப்போ எல்லாம் இவங்க குடும்பம் தான் பார்த்துக்கிட்டாங்களாம் மேம். அதனால தான் இந்த வீட்டோட ஸ்பேர் கீ கூட அவங்ககிட்ட இருந்துருக்கு.” என்று கூறினான்.

 

“ஹ்ம்ம், அவரை கூட்டிட்டு வாங்க.” என்றவள், பால்கனி கம்பியில் சாய்ந்து தன் அலைபேசியில் எதையோ பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

 

ஐந்து நிமிடங்கள் கடக்க, அங்கு வந்து சேர்ந்தார் துளசிதாஸ். ஃபார்மல் பேண்ட், பவர் கிளாஸ் சகிதம் வந்த நடுத்தர வயது மனிதர் அவர்.

 

“ஹலோ மேம். என் பேரு துளசிதாஸ்.” என்று அவர் கூற, அவரை மேலிருந்து கீழ் ஆராய்ச்சி பார்வை பார்த்தவள், “என்ன வேலை பார்க்குறீங்க மிஸ்டர். துளசிதாஸ்?” என்று வினவினாள் வல்லபி.

 

“கதிர் நியூஸ் சேனல்ல நியூஸ் ரிப்போர்ட்டரா இருக்கேன்.” என்றவரின் குரலில் கர்வமும் சேர்ந்தே ஒலித்தது.

 

அதைக் கேட்டதும் ஒரு பெருமூச்சு விட்டவள், “நீங்க எப்பவுமே இப்படியா, இல்ல இந்த மாதிரி சிசுவேஷன்ல மட்டும் இப்படியா?” என்று வினவ, மனிதருக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவே இல்லை.

 

அவர் விழிக்க, வல்லபியே, “அதான் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு உங்க சேனலுக்கு நியூஸ் கொடுத்துருக்குறதை சொன்னேன்.” என்றாள்.

 

அதில் அவருக்கு கோபம் வந்துவிட, “மேம், பார்த்து பேசுங்க. நான் ஒரு ரிப்போர்ட்டர்.” என்று கிட்டத்தட்ட மிரட்டினார் என்று தான் கூற வேண்டும்.

 

அதுவரை நிதானமாக பேசிய வல்லபிக்கும் கோபம் வந்துவிட, “ரிப்போர்ட்டர்னா என்ன கொம்பு முளைச்சுருக்கா? போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டா வெயிட் பண்ண வேண்டியது தான. அதுக்குள்ள, வீடியோ எடுத்து உங்க நியூஸ் சேனலுக்கு அனுப்பியிருக்கீங்க. அவ்ளோ டெடிகேஷன் ஹான்?” என்று கத்த, அங்கிருந்த அனைவருமே அவளின் சத்தத்தில் தற்காலிகமாக வேலையை நிறுத்தி அவர்களை தான் பார்த்தனர்.

 

வல்லபிக்கு அவையெல்லாம் பொருட்டே இல்லை. ஆனால், துளசிதாஸோ அவமானத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.

 

“உங்க பக்கத்து வீட்டு பொண்ணு இறந்துருக்கு. அதுவும், இத்தனை நாள் நீங்க கார்டியன் மாதிரி பார்த்துக்கிட்ட பொண்ணு! இதைக் கூட நியூஸா தான் பார்ப்பீங்க இல்ல?” என்று கேட்க, துளசிதாஸ் அப்போது தான் தான் செய்த செயலை எண்ணி குற்றவுணர்வில் குறுகிப் போனார்.

 

“எப்போ பாரு பிரெஸ்னு மைக்கையும் கேமராவையும் தூக்கிட்டு வந்துட வேண்டியது! சூழ்நிலை என்னன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்க்குறீங்களா? உங்களுக்கு உங்க சேனல் டி.ஆர்.பி தான் முக்கியம். அதுக்காக நியூஸை கூட கண்டென்டா மாத்த வேண்டியது! மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, நீங்க பண்றது உங்களுக்கே அசிங்கமா இல்ல?” என்றவளின் கேள்விகள் சாட்டையடியாக தொடர்ந்தன.

 

அவர் பதில் கூறாமல் குனிந்தே இருக்க, சொடக்கிட்டு அவரை தன்னை நோக்கச் செய்தவள், “இதையெல்லாம் கூட விட்டுடலாம். ஆனா, எவ்ளோ தைரியம் இருந்தா டெட் பாடியை டச் பண்ணி கிரைம் சீனை கன்டேமினேட் பண்ணியிருப்பீங்க? ரிப்போர்ட்டர் தான நீங்க? கிரைம் நடந்த இடத்துல எதையும் தொடக் கூடாதுன்னு தெரியாதா?” என்று அவள் சத்தம் போட, என்ன பதில் சொல்வதென்று முழித்தார் துளசிதாஸ்.

 

“பாடில உங்க ஃபிங்கர்பிரிண்ட் கண்டிப்பா இருக்கும். அதனால, எதுன்னாலும் ஃபேஸ் பண்ண தயாரா இருங்க.” என்று அவள் கூற, வெலவெலத்து தான் போனார் மனிதர்.

 

சில மணி நேரத்திற்கு முன்னர், அவர் தன் சேனலுக்கு மகதியின் இறந்த உடலை புகைப்படம் எடுத்து அனுப்ப, அவரின் மேலாளரோ, “ஃபேஸ் சரியா தெரியல துளசி. ஃபேஸ் தெரியுற மாதிரி ஒரு வீடியோ இருந்தா நல்லா இருக்கும்.” என்று கூற, அதை செய்யப் போய், இப்படி தானே சிக்கிக்கொள்வார் என்று அப்போது யோசிக்க தவறிவிட்டார்.

 

வல்லபி கூறிவிட்டு முன்னே நடக்க ஆரம்பிக்க, துளசிதாஸோ, “மேம் பிளீஸ்… நான் தெரியாம பண்ணிட்டேன்.” என்று பின்னாடியே சென்றார்.

 

அதற்குள் வல்லபியின் அலைபேசி ஒலிக்க, பிரகாஷிடம் சைகை காட்டிவிட்டு, அவள் அழைப்பை ஏற்க, பிரகாஷோ துளசிதாஸை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றான்.

 

அழைப்பை ஏற்ற பின்னரும் வல்லபி அமைதியாக இருக்க, சற்று நேரம் பொறுத்து பார்த்த மறுமுனையில் இருந்த நபரோ, “கொஞ்சம் கூட மரியாதையே இல்ல.” என்று முணுமுணுக்க, அது நன்றாக கேட்டும் அமைதியை கைவிடவில்லை அவள்.

 

“க்கும், கேஸ் என்ன கண்டிஷன்ல இருக்கு மிஸ். வல்லபி?” என்று மறுமுனையிலிருந்து கேள்வி வர, “ஸ்டார்டிங் கண்டிஷன்ல தான் இருக்கு சார்.” என்று கேள்விக்கான பதிலை கூட அலட்சியமாகவே கூறினாள்.

 

அதைக் கேட்டதும் அந்நபர் பல்லைக் கடிப்பது தெளிவாக கேட்டது வல்லபிக்கு.

 

“இம்மிடியட்டா கமிஷனர் ஆஃபிஸ் வாங்க.” என்று அவர் கூற, “சார், இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு. இப்போ வர முடியாது.” என்று அவள் நிர்தாட்சண்யமாக மறுத்தாள்.

 

“அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண தான் கூப்பிடுறேன். ஜஸ்ட் கம்.” என்று கத்திவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட, அலைபேசியை காதிலிருந்து எடுத்தவள், இத்தனை நேரம் மறைத்து வைத்திருந்த உணர்வுகளை இதழ் சுழிப்பின் மூலம் வெளிப்படுத்தினாள்.

 

அப்போது அங்கு வந்த பிரகாஷிடம் விஷயத்தை கூற, இருவருமே ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர்.

 

செல்லும் வழியில், “மேம், அந்த துளசிதாஸ் டெட் பாடியை டச் பண்ணியிருக்காருன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று வினவினான்.

 

“தலை இருந்த பொசிஷன் வச்சு தான் பிரகாஷ். சூசைட்டா இருந்தாலும், கொலையா இருந்தாலும், கழுத்துல வெட்டுனதுக்கு அப்பறம், தலை கீழ குனிஞ்சபடி தான் இருக்கும். அன்லெஸ், யாராவது அந்த தலையை நிமிர்த்தாத வரை. அதுவுமில்லாம, அந்த ஆளு தலையை தூக்கும்போது  ரத்தம் அவரோட சட்டையிலயும் தெறிச்சுருக்கு. அதை கழுவியும் இருக்காரு. இஃப் ஐ’ம் நாட் ராங், அவரு அதை கிளீன் பண்ணும்போது தான், நீங்க என்கிட்ட கூட்டிட்டு வந்துருக்கணும். அவசர அவசரமா வந்ததுல, சரியா கிளீன் பண்ணாம என்கிட்ட மாட்டிக்கிட்டாரு.” என்று விளக்கினாள் வல்லபி.

 

அவள் விளக்கம் கொடுத்து முடிப்பதற்குள், ஆணையர் அலுவலகம் வந்துவிட்டது.

 

வாகனத்திலிருந்து இறங்கிய வல்லபி நேராக இணை ஆணையரை பார்க்க விரைய, அவளின் பின்னே பிரகாஷும் சென்றான்.

 

மகாதேவ், ஐ.பி.எஸ், இணை ஆணையர் என்று பொறிக்கப்பட்டிருந்த அறைக்குள் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த வல்லபி, அங்கு கண்முன்னே அமர்ந்திருந்தவனைக் கண்டு திகைத்து தான் போனாள்.

 

அடுத்த நொடியே அந்த திகைப்பு, ஏமாற்றம், கோபம், எரிச்சல் என்று பலவகை உணர்வுகளாக உருமாற, அதை வெகு சிரமப்பட்டு வெளியிடாமல் உள்ளேயே வைத்து அடை காத்தாள்.

 

அப்படி ஒருவன் அங்கில்லாததைப் போன்ற பாவனையுடன் நடந்தவள், இணை ஆணையரிடம் தன் வணக்கத்தை தெரிவித்தாள்.

 

“உங்க இன்வெஸ்டிகேஷன் எப்படி போயிட்டு இருக்கு? இதுவரை என்னன்ன கண்டுபிடிச்சுருக்கீங்க?” என்று மகாதேவ் நேராக வழக்கைப் பற்றி கேட்க, சற்று முன் உண்டான எரிச்சல் அவர் பக்கமும் திரும்பியது.

 

எனினும், மேலதிகாரி ஆகிற்றே! அதனால், தங்களின் யூகங்களை அவளும், இடையிடையே பிரகாஷும் கூறினர்.

 

இறுதியாக, “எனக்கென்னவோ இது சூசைட் மாதிரி தோணல.” என்று வல்லபி கூற, மற்றவர்கள் அவளைக் கேள்வியாக பார்த்தனர்.

 

“முக்கியமா, சூசைட் நோட் எதுவும் கிடைக்கல. மேபி, அந்த பொண்ணோட சோசியல் மீடியா அக்கவுண்ட்ஸ் செக் பண்ணி பார்த்தா, எதுவும் கிடைக்கலாம். என்னதான் டிப்ரெஷன்ல இருந்திருந்தாலும், இப்படி சூசைட் பண்ணியிருக்க முடியும்னு எனக்கு தோணல. என்னோட இன்டியூஷன் படி, இது பக்காவா திட்டமிட்ட கொலையா இருக்கலாம்.” என்றாள்.

 

அப்போது, அதுவரை அமைதியாக இருந்தவனோ, “அப்போ உங்க உள்ளுணர்வை வச்சு கொலைகாரனையும் நெருங்கியிருப்பீங்களே!” என்று கேலியாக கூறினான்.

 

அதில் அவனை நேராக பார்த்து முறைத்தவள், “அஃப்-கோர்ஸ், ஆனா, அதுக்குள்ள தான் என்னை இங்க வர வச்சுட்டீங்களே!” என்று அவள் கூற, “ஹ்ம்ம், உங்க உள்ளுணர்வை வச்சு கொலைகாரனை பிடிச்சாலும், கோர்ட்ல அவனுக்கு எதிரா தீர்ப்பு வர சாட்சி வேணுமே. சாட்சி இருக்கா?” என்றான் அவனும் விடாமல்.

 

“சில பேரை மாதிரி சாட்சி கிடைச்சும், கொலைகாரனை தப்பிக்க வைக்குற போலீஸ் இல்ல நான்.” என்று அவள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேச, இம்முறை அவன் வார்த்தைகளால் அல்ல பார்வையால் அவளை கூறு போட்டான்.

 

அவன் பிரகதீஸ்வரனே. இருவருக்கும் காவல்துறை என்ற கனவில் மட்டுமே ஒற்றுமை. மற்ற அனைத்திலும் எலியும், பூனையுமாக தான் திரிவர்.

 

இதோ, இப்போதும் அவன் பார்வை பாஷையை எல்லாம் அவள் கண்டுகொள்ள கூட இல்லை.

 

இப்படியே விட்டால், இருவரும் சண்டை போட்டே அந்த நாளை ஓட்டி விடும் அபாயம் இருப்பதால், மகாதேவே இருவரிடமும், “ஸ்டாப் இட். ரெண்டு பேரும் ஏ.சி.பிங்கிறதை மறந்துட்டு, இப்படி சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க! உங்க பதவியையும் கடமையையும் ஞாபகம் வச்சுக்கிட்டு, இந்த கேஸை பத்தி டிஸ்கஸ் பண்றதா இருந்தா மட்டும், இந்த மீட்டிங்கை தொடரலாம். இல்லன்னா இப்போவே கிளம்புங்க.” என்று கோபமாக கூற, இருவருமே மன்னிப்பு வேண்டினர்.

 

“வல்லபி, நான் ஏன் உங்க இன்வெஸ்டிகேஷனை பத்தி கேட்டேன்னா, ***** ஏரியால இருக்க ஒரு டான்ஸ் ஸ்டுடியோல நேத்து மிட்நைட் ஒரு பொண்ணோட டெட் பாடி இருக்குறதா தகவல் வந்துச்சு. பிரகதீஷ் தான் அந்த கேஸை ஹேண்டில் பண்றாரு.” என்றவர், சில புகைப்படங்களை வல்லபியின் முன்பு வைத்தார்.

 

அவற்றை எடுத்து பார்த்தவளுக்கு இந்த கலந்துரையாடலுக்கான காரணம் புரிய, மகாதேவை நிமிர்ந்து பார்த்தவள், “இரட்டை கொலையா?” என்று வினவினாள்.

 

அவர் பதில் கூறுவதற்கு முன்பே, “இப்போதைக்கு ரெண்டு. இது தொடரவும் செய்யலாம்.” என்றான் பிரகதீஸ்வரன்.

 

“என்ன சீரியல் கில்லிங்கா?” என்று வல்லபி வினவ, மற்றவர்களுக்கும் அதே கேள்வி தான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்