Loading

அத்தியாயம் 1

 

“மாடர்ன் டான்ஸ் ஸ்டுடியோ” என்று மின்னிய பெயர் பலகையை தாங்கிய கட்டிடத்தின் விளக்குகள் அந்த இரவு நேரத்திலும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

 

“ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட்…” என்று உள்ளே கேட்ட சத்தத்தை தொடர்ந்து, “போதும் மச்சி. இன்னும் எவ்ளோ நேரம் தான் ப்ராக்டிஸ் பண்றது?” என்று ஒருவன் வினவினான்.

 

“நாளான்னைக்கு பெர்ஃபார்மன்ஸ் வச்சுக்கிட்டு, இன்னும் கோ-ஆர்டினேஷனே வரல.” என்ற சாத்விக், “ஓகே கைஸ், இப்போ வேணும்னா ஒரு குட்டி பிரேக் எடுத்துட்டு வாங்க. இன்னைக்கு கோ-ஆர்டினேஷன் சரியா வராம உங்களை.விடப் போறது இல்ல.” என்றவனை தொடர்ந்து பல குரல்கள் ஆதங்கமாக ஒலித்தபடி அந்த அறையை விட்டு அகன்றன.

 

அதை ஒரு பெருமூச்சுடன் பார்த்த சாத்விக்கோ, ஓரமாக நின்றிருந்தவளை நோக்கி நடந்தான்.

 

“ஹே ஆரா, என்னாச்சு உனக்கு? இன்னைக்கு ஏன் இவ்ளோ தடுமாற்றம்?” என்று சாத்விக் வினவ, அவனால் ‘ஆரா’ என்று அழைக்கப்பட்ட ஆராதியாவோ அமைதியாக சுவரை வெறித்தபடி நின்றிருந்தாள்.

 

அவளருகே இருந்த அவளின் தோழிகளில் ஒருத்தியான ஜோஸ்ஃபின், “வேற என்ன காரணமா இருக்கப் போகுது சாத்வி, மேடம் இன்னும் நம்மகிட்ட கூட காட்டாத அவங்க பாய் ஃபிரெண்டோட சண்டையா இருக்கலாம்.” என்று கூற, மதுமதி அவளை தடுத்தாள்.

 

சாத்விக்கோ ஒரு கணம் ஆராதியாவை கூர்மையாக பார்த்தவன், “நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் ஆரா, உன் பெர்சனல் எல்லாம் இந்த ஸ்டுடியோக்கு வெளிய வச்சுட்டு உள்ள வான்னு. டான்ஸ் வெறும் உடலோட அசைவுகள் மட்டுமில்ல, அது மனசுல இருந்து வெளிவரனும். நவ் டேக் அ பிரேக், அண்ட் பீ பேக்.” என்று அழுத்தமாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.

 

அப்போதும் ஆராவிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

 

அதைக் கண்ட மதுமதி, “தியா, பிரேக் போயிட்டு வரலாம் வா.” என்றழைக்க, ஆராதியாவோ அந்நாளில் முதல் முறையாக வாயை திறந்து, “நான் வரல. நீங்க போயிட்டு வாங்க.” என்றாள்.

 

அதைக் கேட்ட ஜோஸ்ஃபினோ, “அதான் சொல்றாளே வா நாம போவோம். அவ கற்பனைலயே காதலிக்கட்டும். கண்ணு முன்னாடி பெர்ஃபெக்ட்டா ஒருத்தன் காதலை சொல்லியும் ஒத்துக்காதவ, முகம் தெரியாத ஒருத்தனை காதலிச்சா, இப்படி தான் நடக்கும்.” என்று பேசிக் கொண்டே போக, மது தான் அவளை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

 

“ஜோஸ், அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு. அதுல யாரு இருக்கணும்னு அவ தான் முடிவு பண்ணனும். அவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல. இந்த மாதிரி நேரத்துல நாம தான் அவளுக்கு துணையா இருக்கணும். அதை விட்டுட்டு கண்டதை பேசி நீயே அவளை இன்னும் காயப்படுத்தாத.” என்றபடியே அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றாள் மது.

 

இவை அனைத்தையும் ஆராதியா கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

 

‘நான் தான் தப்பு பண்ணிட்டேனா?’ என்ற சிந்தனையிலேயே இருந்தவள், அந்த நேரத்தில் அங்கு அவளைத் தவிர யாரும் இல்லை என்பதை உணரவே இல்லை.

 

அதை மட்டுமா உணரவில்லை? நடுநிசிக்கு சிலமணி நேரங்கள் இருந்தாலும், ஆட்கள் யாரும் இல்லாததால், மயான அமைதியை பூசிக் கொண்ட அந்த இடத்தில், அந்த சூழலுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ‘டக் டக்’ என்ற காலடி சத்தமும், அந்த சத்தம் அவளைத் தான் நெருங்குகிறது என்பதையும் தான் உணரவில்லை.

 

தானும் தன் குற்றவுணர்வும் என்ற மோனநிலையில் இருந்தவளை சமீபித்திருந்தது அந்த உருவம்.

 

தீவிர சிந்தனையில் இருந்தவளின் பின்னே, அந்த உருவத்தின் மூச்சுக்காற்று அவளின் பின்கழுத்தில் மோதும் நெருக்கத்தில் இருந்தபோது தான், அந்த வித்தியாசமான சூழலை உணர்ந்தாள் ஆராதியா.

 

தன்னைச் சுற்றி இருக்கும் ஆபத்தை அவளின் மூளை கிரகித்து அவள் திரும்புவதற்கும், அந்த உருவத்தின் கையிலிருந்த கத்தி, அவளின் முன்கழுத்தை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

 

சற்று முன், அவளின் பின்கழுத்தை அந்த உருவத்தின் மூச்சுக்காற்று உரசியதைப் போல, இப்போது அவளின் முன்கழுத்தை அந்த உருவத்தின் கரத்திலிருந்த கத்தி நன்றாகவே உரசியது.

 

அதன் விளைவாக கத்த கூட முடியாதவள், அந்த உருவத்தின் முகத்தை பார்த்து அதிர்ந்தபடி, “நீயா?” என்று ஒற்றை வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள், அந்த கத்தி அதன் கூர்மையை அவளின் உடலில் பல இடங்களில் சோதித்து பார்த்திருந்தது.

 

விளைவு, கோடு கோடாக செந்நிற திரவம் அவள் உடலிலிருந்து வெளியேற, அவளும் சிறிது சிறிதாக அவளின் சுயயுணர்வை இழக்க ஆரம்பித்தாள்.

 

அவ்வுருவமோ பதற்றமே இல்லாமல், அவள் உடல் உயிரில்லாமல் தொய்ந்து விழும் நேரம் வரை இருந்து பார்த்து ரசித்து விட்டே அவ்விடத்தை விட்டு அகன்றது.

 

அடுத்த பத்து நிமிடங்கள் வரை, ஆராதியாவின் உயிரற்ற சடலம் அதே இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது.

 

அதை முதலில் கண்டது ஜோஸ்ஃபின் தான்!

 

மதுவின் இடைவிடாத அறிவுரைகளால் கடுப்பாகி இடையிலேயே இடைவேளையிலிருந்து வந்த ஜோஸ்ஃபின், இப்படி ஒரு காட்சியை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.

 

திகைத்த முகத்துடன், திரும்பாமலேயே பின்புறம் நடந்த வந்து கொண்டிருந்த ஜோஸ்ஃபினைக் கண்ட மதுவோ, முதலில் புரியாமல், பின்பு கண்டதும் புரிந்தவளாக அதிர்ந்து போனாள்.

 

இவர்களின் வரிசையில் அடுத்து வந்த சாத்விக்கும் சேர்ந்து கொள்ள, மற்ற இருவரைப் போல திகை நிலையிலேயே இருக்காமல், தன்னை மீட்டுக் கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்தவன் அவனே.

 

அடுத்த கால் மணி நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக மாறியது. அந்த பகுதியின் காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஷ், அங்கு வரும்போதே ஊடகவியலாளர்கள் இருப்பதைக் கண்டு எரிச்சலானான்.

 

“நவீன், என்ன மேன் இது? இவங்களுக்கு எப்படி அதுக்குள்ள நியூஸ் போச்சு?” என்று தனக்கு கீழ் வேலை செய்பவனைக் கடிந்து கொண்டே உள்ளே நுழைந்தான் ஜெகதீஷ்.

 

“இங்க இருக்க பசங்க யாரோ கொடுத்த தகவல்ல வந்துருக்காங்க சார். இப்போ சமீபமா அதிகரிச்ச கொலைகளால, எங்க இது மாதிரி நியூஸ் கிடைச்சாலும், உடனே அங்க வந்துடுறாங்க. நல்லவேளை அவங்க வரதுக்குள்ள நாங்க வந்துட்டோம். யாரையும் இன்னும் உள்ள அலோவ் பண்ணல.” என்றவாறே ஜெகதீஷுடன் நடந்தான் நவீன்.

 

ஜெகதீஷின் கவனமோ நவீனின் பேச்சில் இல்லாமல், ஆராதியாவின் உடலில் நிலைத்து விட்டது.

 

“என்ன இப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே, உடலை பரிசோதித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்றவன், “ஏதாவது தடயம் கிடைச்சதா?” என்று வினவினான் ஜெகதீஷ்.

 

அவனுக்கும் தெரியும், இந்த கேள்வி இத்தனை சீக்கிரத்தில் கேட்கக் கூடியது அன்று என்பது.

 

ஆனால், அவனோ அவனுக்கு மேலிருப்பவனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே!

 

‘அதுக்குள்ளயா?’ என்ற பார்வையை தந்த அந்த தடயவியல் அதிகாரியோ, “இதுவரை ஃபிங்கர்பிரண்ட்ஸ் எதுவும் கிடைக்கல சார். கொஞ்ச நேரம் கொடுங்க, அப்போ தான் தரோவா எல்லாம் செக் பண்ண முடியும்.” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்து விட்டார்.

 

‘க்கும், நீ இப்படி என்கிட்ட சொல்லலாம். ஆனா, இதையே நான் அவருக்கிட்ட சொல்ல முடியுமா?’ என்று எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, அவனின் அலைபேசி ஒலியெழுப்பியது.

 

யாரென்று பார்த்தவன், ‘ஹ்ம்ம், ஆயுசு நூறு!’ என்றவாறே அழைப்பை ஏற்றான்.

 

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காதபடி, “என்ன ஜெகா, எனி க்ளூஸ்?” என்ற கேள்வி வந்தது மறுமுனையிலிருந்து.

 

“சார், நான் இப்போ தான் ஸ்பாட்டுக்கு வந்தேன். பாடியை இப்போ தான் பார்த்தேன். ஃபாரன்சிக் ஆஃபிசர் கிட்ட கூட இப்போ தான் பேசுனேன்.  இதுவரை ஃபிங்கர்பிரண்ட்ஸ் எதுவும் கிடைக்கலன்னு சொல்றாங்க.” என்று அவன் ஒன்று விடாமல் அனைத்தையும் ஒப்பிக்க, “அப்போ அங்க போய் நீயா எதுவும் கண்டுபிடிக்கல, அப்படி தான?” என்ற மறுமுனையோ, ஜெகதீஷின் பதற்றத்தை அதிகரிக்க, “நான் கிளம்பி வரேன்.” என்றவாறு அழைப்பு துண்டிக்கப்பட்டத்து.

 

‘போச்சு, இன்னைக்கு டிரில் தான் எனக்கு!’ என்று புலம்பியவாறே உள்ளே விசாரிக்க சென்றான் ஜெகதீஷ்.

 

*****

 

புகைப்படக் கருவிகளையும், ஒலிவாங்கிகளையும் தாங்கியபடி அந்த இடத்தை சூழ்ந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு இடையே வந்து நின்றது அந்த வெள்ளை நிற போலீரோ.

 

அங்கிருந்த அனைவரின் கவனமும் அந்த வாகனத்திலேயே இருக்க, முழுதாக இரண்டு நிமிடங்கள் வரை அதிலிருந்து யாரும் இறங்கவே இல்லை.

 

மற்றவர்களின் கவனம் அந்த வாகனத்திலிருந்து சிறிது சிதறிய நேரம், அதன் கதவு பட்டென்று திறக்கப்பட்டு உள்ளிருந்து கம்பீரமாக இறங்கினான் அவன்.

 

பிரகதீஸ்வரன் – முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் என்னும் தன் கனவை நிறைவேற்றி, நேர்மை தவறாத காவலனாக, காவல் உதவி ஆணையராக இருப்பவன். அவனின் துணிச்சலான செயல்களும், யாருக்கும் அஞ்சாத அதிரடி நடவடிக்கைகளும், அவன் பெயரை அடிக்கடி ஆணையர் அலுவலகத்தில் உச்சரிக்க காரணமானது.

 

அவனின் நடவடிக்கைகளுள் சில அவனுக்கு பாராட்டுகளையும், பல அவனுக்கு எச்சரிக்கைகளையும் பெற்று தந்தன என்று சொன்னால் மிகையாகாது.

 

அப்படிப்பட்டவன் ஊடகவியாளர்களுக்கும் புதிதல்ல! ஊடகமும் அவனுக்கு புதிதல்ல!

 

இதோ, இந்த சிறு கால தாமதமும் அவனின் யுக்தியே ஆகும். பலரின் எதிர்பார்ப்புகளை சிறிது நேரம் ஏமாற்றி, அவர்களின் கேள்விகளை தாமதப்படுத்தும் முயற்சி.

 

அவர்களின் சிறு கவனச்சிதறலை தனக்கு சாதகமாக்கியவன், விரைந்து உள்ளே சென்று விட்டான்.

 

அவனுடன் வாசலிலேயே சேர்ந்து கொண்ட ஜெகதீஷோ, இடைப்பட்ட நேரத்தில் அவன் விசாரித்ததை வழக்கம் போல ஒப்பிக்க ஆரம்பித்தான்.

 

இரவு நேர நடனப்பயிற்சியில் ஆரம்பித்து, ஆராதியாவை தனியே விட்டுச் சென்றது வரை அனைத்தையும் கூறினான் ஜெகதீஷ்.

 

“விசாரிச்ச வரை யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா ஜெகா?” என்று நடந்து கொண்டே பிரகதீஷ் வினவ, “நோ சார், அவங்க பாடி லாங்குவேஜ் படி பார்த்தா, யாரு மேலயும் சந்தேகம் இல்ல. ஆனாலும், அவங்க சொன்னதை கிராஸ் செக் பண்ண, ஸ்டுடியோல இருக்க சிசிடிவி ஃபூட்டேஜை நவீனை கலெக்ட் பண்ண சொல்லிருக்கேன்.” என்றான் ஜெகதீஷ்.

 

“குட். பேரண்ட்ஸுக்கு சொல்லியாச்சா?” என்று கேட்டவாறே வந்த பிரகதீஷ், அங்கு ஆராதியா இருந்த நிலையைக் கண்டு ஒருநொடி திகைத்து தான் போனான்.

 

ஆராதியாவின் இறந்த உடல் இருந்த நிலை அத்தகையது!

 

கால்கள் மண்டியிடப்பட்டு, கைகள் கோர்க்கப்பட்டு, தலை தொங்கியபடி, ஏதோ மன்னிப்பு வேண்டுவது போல வைக்கப்பட்டிருந்து. கைகள், கால்கள், கழுத்து, மார்பு, வயிறு என்று உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் சரமாரியாக வெட்டுக்காயங்கள் இருந்தன. அவளின் உடலிலிருந்து வழிந்த இரத்தம் தரையில் செந்நிற கோலம் இட்டிருக்க, அதையே உற்று நோக்கின பிரகதீஷ்வரனின் கண்கள்.

 

அந்த உடலை ஒருமுறை சுற்றி வந்து பார்த்த பிரகதீஷ் ஜெகதீஷிடம், “கில்லர் கொலையை ரசிச்சு பண்ணிருக்கணும் ஜெகா.” என்று கூற, ஜெகதீஷோ அதிர்ந்து விட்டான்.

 

“சார்! யூ மீன் சைக்கோ கில்லிங்?” என்று ஜெகதீஷ் வினவ, “ஹ்ம்ம், எஸ். கீழ இருக்க ரத்தத்தை பாரு. பாடி இப்போ இருக்க இடத்தை தாண்டியும் வழிஞ்சுருக்கு. கில்லர் கத்தியால குத்தினதும், விக்டிம் கீழ ஹரிசாண்டலா விழுந்துருக்கணும். அப்படி விழுந்ததால தான், ரத்தம் அந்த ஏரியாலையும் வழிஞ்சுருக்கு. அதுக்கு அப்பறம் தான் கில்லர் தன்னோட சைக்கோ தனத்தை காமிச்சுருக்கான். ஹீ டிஸ்ப்ளேட் ஹிஸ் மர்டர் விக்டிம். இஃப் ஐ’ம் நாட் ராங், அவனோட அடையாளத்தையும் விட்டுட்டு தான் போயிருப்பான்.” என்றான் பிரகதீஸ்வரன்.

 

அப்போது ஆராதியாவின் உடலை கூராய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முற்படும்போது தான் அதை கவனித்தான் பிரகதீஷ்வரன்.

 

ஆராதியாவின் கால் பாதத்தில் ‘எஸ்’ என்ற ஆங்கில எழுத்தோடு, மறுபக்கம் திரும்பிய இன்னொரு ‘எஸ்’ எழுத்து பின்னி பிணைந்திருப்பது போன்று இருந்தது.

 

அதை பார்த்தபடியே, “இது சைக்கோ கில்லிங் மட்டுமில்ல ஜெகா. இட் மே பி அ சீரியல் கில்லிங்.” என்றான் பிரகதீஸ்வரன்.

 

*****

 

அடுத்தடுத்த நிமிடங்கள் அவர்களுக்கு நிதானமாக அமரக் கூட நேரமில்லாமல் கழிந்தன.

 

பிரகதீஸ்வரன் முதலில் தன் பங்குக்கு அங்கிருந்தவர்கள் அனைவரையும் கண்காணித்து விசாரித்தான்.

 

அன்றைய நடன பயிற்சியின் இயக்குனரான சாதவிக்கிடம், “உங்க பிரெண்டோட கேஸ் கொஞ்சம் சீரியஸ் தான். நாங்க கொலையாளியையும் கொலைக்கான காரணத்தையும் கண்டுப்பிடிக்கிற வரை கொஞ்சம் கேர்ஃபுல்லாவே இருங்க. அப்பறம், நாங்க எப்போ கூப்பிட்டாலும், விசாரணைக்கு வர மாதிரி இருக்கும். ஹோப் யூ அண்டர்ஸ்டெண்ட். உங்க மத்த பிரெண்ட்ஸ் கிட்டயும் சொல்லிடுங்க.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

“எனக்கு புரியுது சார். எங்களுக்குமே இது எதிர்பார்க்காத அதிர்ச்சியான விஷயம் தான். இந்த சூழலை புரிஞ்சுக்க கொஞ்சம் டைமாகும். ஆனா, கண்டிப்பா உங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். எப்படியாவது எங்க ஆராவை கொன்ன கில்லரை கண்டுபிடிச்சுடுங்க.” என்று வருத்தமாக கூறிய சாத்விக், “இப்போ நாங்க எல்லாரும் கிளம்பலாமா சார்?” என்று வினவினான்.

 

“யாஹ், டேக் கேர்.” என்று சாத்விக்கை அனுப்பிய பிரகதீஷ்வரனின் பார்வை என்னவோ செல்பவனை தான் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

 

அவன் அவனின் குழுவினரிடம் சென்று பேசி, அவர்களை வழியனுப்புவதையும், இறுதியாக ஜோஸ்ஃபின் மற்றும் மதுமதியிடம் ஆறுதலாக பேசுவதையும் கண்ட பிரகதீஷ்வரனுக்கு, ஜோஸ்ஃபின் கூறிய சாத்விக்கின் ஒருதலை காதல் சிறு சந்தேக விதையை தூவியிருந்தது.

 

சில நொடிகள் தன் யோசனையில் ஆழ்ந்திருந்த பிரகதீஷ்வரனை, “சார், சிசிடிவி ஃபூட்டேஜ் ரெடி.” என்று கையோடு அவனை அழைத்துச் சென்றான் ஜெகதீஷ்.

 

*****

 

அந்த சிசிடிவி காட்சிகளை கிட்டத்தட்ட ஐந்தாறு முறை பார்த்து விட்டனர் இருவரும். முதல் முறை பார்த்தபோதே, சரியாக ஆராதியாவை தனியே விட்டு அனைவரும் சென்ற நொடியிலேயே சிசிடிவி செயலிழந்திருந்ததை கண்டு விட்டனர்.

 

ஒருவித ஏமாற்றம் பரவினாலும், வேறு ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்.

 

“ஜெகா, சிசிடிவி செக் பண்ணவரை, ஒன்னு அந்த கில்லர் ரொம்ப தெளிவா ஸ்கெட்ச் போட்டு, டான்ஸ் குரூப்ல இருக்க ஒருத்தரோட ஹெல்ப்போட கொலையை பண்ணியிருக்கணும், இல்லன்னா அந்த கில்லர் இந்த டான்ஸ் குரூப்ல ஒருத்தனா இருக்கணும். வேற யாரும் உள்ள வந்ததுக்கான அறிகுறியே இல்ல. நீ என்ன பண்ணு, நவீனோட சேர்ந்து, இந்த டான்ஸ் ஸ்டுடியோ, அதை சுத்தி இருக்க சிசிடிவி ஃபூட்டேஜை செக் பண்ணுங்க. லாஸ்ட் ஒன் வீக்ல இருந்தே செக் பண்ணுங்க. ஏதாவது சந்தேகப்படுற மாதிரி இருந்தா உடனே இன்ஃபார்ம் பண்ணுங்க. அப்பறம், ஃபாரன்சிக் ஆஃபிசர்ஸ் கூட டச்ல இருந்து, அப்பப்போ டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டே இரு.” என்று கட்டளைகளை பிறப்பிக்க, ஜெகதீஷும் அவனிட்ட பணிகளை பார்க்க விரைந்தான்.

 

பிரகதீஷ்வரனோ கடிகாரம் சுட்டிக்காட்டிய நான்கு மணியை அலட்சியப்படுத்தி, தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.

 

மறுமுனையில் சிறிது நேரத்திற்கு பிறகு அழைப்பு ஏற்கப்பட்டதும், “இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி டா.” என்று சம்பிரதாயமாக மன்னிப்பை வேண்டினான் பிரகதீஸ்வரன்.

 

அவனின் நண்பன் அஷோக்கோ, “டேய், உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா?” என்று சலித்தவன், “சரி சொல்லு, என்ன விஷயம்?” என்று கொட்டாவி விட்டவாறே கேட்க, “உங்க ஊர்ல ஒரு சீரியல் கில்லர் இருந்தானே, ‘தி எஸ் கில்லர்’, அவனோட கேஸ் டீடெயில்ஸ் வேணும்.” என்றான் பிரகதீஸ்வரன்.

 

அதைக் கேட்ட அஷோக்கின் கொட்டாவி கூட காணாமல் போனது.

 

“பிரகா, எஸ் கில்லரை பத்தியா கேட்குற? அவன்… அவன் தான் ஜெயில்ல இருக்கானே? ஒருவேளை… அவன் தப்பிச்சுட்டானா?” என்று அஷோக் பதற ஆரம்பிக்க, “ரிலாக்ஸ் டா. அதெல்லாம் ஒன்னுமில்ல. இங்க அதே மாதிரி பேட்டர்ன்ல கொலை நடந்ததா எனக்கு தோணுது. அதான் கிராஸ் செக் பண்ண கேட்டேன்.” என்றான் பிரகதீஸ்வரன்.

 

“உஃப், காலைலயே இப்படியா பிரஷர் ஏத்துவ? இரு அனுப்பி வைக்கிறேன்.” என்றவாறே அழைப்பை துண்டித்தான் அஷோக்.

 

அஷோக்கிடமிருந்து தகவல்களுக்காக காத்திருந்த பிரகதீஷ்வரனின் மனமோ, இந்த வழக்கு மேலும் சிக்கலாகும் என்று கட்டியம் கூறியது.

 

அவன் நினைத்தது போலவே, அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில், மற்றொரு உயிர் உடலை விட்டு நீங்கியிருந்தது!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
19
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்