அத்தியாயம் -19
துருவ்வின் அக்கா தேவி, இரவு உணவை சமைத்து கொண்டிருந்தாள்.
“ஏங்க அண்ணி உங்களுக்கு சிரமம். அதான் அவரு வெளியே வாங்கிகலாம்னு சொன்னாருல”
“அட நீ வேற ஏம்மா பழனி போனது தான் போனோம். அங்க ஒரு வண்டி பஞ்சாமிர்த டப்பாவ அள்ளி போட்டு ஒவ்வொரு சொந்தகாரங்க வீட்டுக்கும் போய் ரவுண்டு அடிக்கற கேப் புல்லா வெளி சாப்பாடு தான். இவர வெச்சிட்டு, சொன்னாவும் கேக்க மாட்டாரு. சரி வண்டிய கெளம்புங்கனு பின்னாடி போறத தவர வேற வழி என்ன? இன்னிக்காவுது வீட்டு சாப்பாடு சாப்டுறேன். எனக்கு எல்லாம் ஒரு சிரமமும் இல்ல, நறுக்கி வெச்சி இருக்க தக்காளிய கொடு. இந்த ஹஸ்பண்ட்ஸ்னாலே ஒரே நச்சுஸ் தான்ல..”
ஆமோதிப்பாய் சிரித்து தலையசைத்தாள் சாத்வி.
” ஐ… சந்தவையா..! சூப்பர் சூப்பர் எனக்கு போடுக்கா மொதல்ல, எவளோ நாள் ஆச்சு சாப்பிட்டே ” உச்சு கொட்டி கொண்டே ஆசையாய் அவன் உண்ண ஆரம்ப்பிக்க,
“ஏன் டா நீ சாப்பாடவே இல்லயா? உனக்கு தான் சந்தவைனா உயிராச்சே. வாரம் ஒரு தடவ செய்ய சொல்லி அம்மாவ டார்ச்சர் பண்ணுவ”
” எங்கக்கா நானு இவள செஞ்சு கொடுனு கேப்பேன். அது எல்லாம் ரொம்ப டைம் ஆகும் முடியாதுனு சொல்லிருவா, உன் தம்பி ரொம்ப பாவம். ஆண்கள்னாலே பாவம் தான் என்ன மாமா “
” அடேய் என்ன ஏன்டா கோர்த்து விடுற!? உங்கக்கா கிட்ட எல்லாம் முன்ன மாறி அடி வாங்குற தெம்பு எனக்கு இல்லப்பா “
அனைவரும் சிரிக்க, சாத்வி தான் சங்கடமாக நெளிந்தாள். அந்த சிரிப்பில் அவளால் ஒன்ற முடியவில்லை.
ஏன் என்றால் துருவ் சொன்ன விஷயம் அப்படி.
பல முறை அவனிடம் கூறி இருக்கிறாள், விளையாட்டாக கூட பிறர் முன்பு அவளை விட்டு கொடுத்து பேச கூடாது என்று..!
கேட்டால் உள் அர்த்ததோடு சொல்லவில்லை என்று பேச்சை முடித்து கொள்வான். ஆனால் அவளிற்கு தான் அவனின் அந்த செயல் மிகவும் பாதிப்பை கொடுக்கும்.
பெண்களுக்கே உரிய குணம் தேவை இல்லாத சிந்தனைகளில் சிலந்தி வலை கட்டுவது.
‘என்னமோ நா அவருக்கு சோறே போடாம கொடும பண்ணுற மாறி சொல்லுறாரு. அவங்க இத போய் அப்படியே அத்தை கிட்ட சொன்னா அவங்க என்ன பத்தி என்ன நெனைப்பாங்க? உடனே அம்மா கிட்ட சொல்லிருவாங்க, அப்றம் அம்மா அதுக்கும் ஒரு நாள் சேத்தி வெச்சு கிளாஸ் எடுப்பாங்க’
அவன் விட்ட சொல் அம்பு எங்கே எல்லாம் செல்கிறது பார்த்தீர்களா?
“என்ன சாத்வி பிளேட்ல போட்டது அப்படியே இருக்கு ” தேவியின் குரலில் சுயம் பெற்றவள்.
” ஆ.. இல்ல அண்ணி போதும் சாப்பிட முடில ” என்றவள் கையை கழுவி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு அறைக்குள் சென்று விட்டாள். அவளின் இந்த தீடிர் செய்கையில் அதுவரை கலகலப்பாக இருந்த உணவு மேஜை அமைதியாக, துருவ்விற்குள் கோவம் எட்டி பார்த்தது.
‘எல்லார் முன்னாடியும் இப்படியா நடந்துக்கறது. என்கிட்ட இருக்க கோவத்த ஏன் இவங்க மேல காட்டனும்’ உள்ளுக்குள் கொதித்தவன் அதை வெளிக்காட்டி கொள்ளாது பேச்சை மாற்றினான்.
” அப்றம் மாமா என் மருமவன்ன அங்க விட்டுட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கீங்க போல புருஷனும் பொண்டாட்டியும்..!”
தேவியும் வேலுவும் இரவு இவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் கிளம்புவதாக தான் இருந்தது.
சாத்வியும் தேவியும் உள் அறையில் படுத்து கொள்ள, துருவ்வும் வேலுவும் ஹாலில் பாய் விரித்து படுத்து கொண்டனர்.மகிஷாவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அவளை தூங்க வைத்தாள் தேவி.
சாத்வி அவளின் கைக்கு ஆயின்மென்ட் தடவி, க்ரிப் பேண்டேஜ் போட்டு கொண்டு இருந்தாள்.
” சொன்னா நா ஹெல்ப் பண்ணுவேன்ல எதயும் வாய தொறந்து கேக்கறதே இல்ல.. ” என்றவள் சாத்வியிடம் இருந்து க்ரிப் பேண்டேஜை வாங்கி அவளிற்கு போட்டு விட்டாள்.
“துருவ் அப்படி சொல்லிட்டானு கோவமா?” அவளின் உள்ளம் அறிந்து கேட்க,
“ம்ம்ம் ” என்றாள் தலை கவிழ்ந்து.
நாதனார் என்னும் உறவு முறையையும் தாண்டி, இருவருக்குள்ளும் பரஸ்பர நல்ல நட்பு இருக்கிறது. மாமியார் மருமகள் வாக்குவாதத்தில் கூட சாத்வியின் பக்கமே கொடி புடிப்பாள் தேவி..!
“சரி விடு, அவன பத்தி தான் தெரியும்ல”
” போங்க அண்ணி..! எவளோ நாள் தான் பொறுத்து பொறுத்து போறது. இவரு இப்போ மாறுவாரு அப்போ மாறுவாருனு..! ப்ச் வாழ்கையே வெறுத்திருச்சு ” அவள் பேச்சிலேயே ஒரு வித விரக்தி மனநிலை தெரிய, லேசாக கண் கலங்கினாள் சாத்வி.
” தினம் ஒரு சண்ட, தினம் ஒரு பிரச்னை ஆஃபிஸ்ல தான் உயிர எடுக்கறாங்கனா, இவ வீட்டுல அதுக்கு மேல வெச்சு செய்யறா மாமா . நான் ஒன்னும் கடவுள் இல்லயே தப்பே பண்ணாம இருக்கறது..!? ஈனா ஊனா மூஞ்ச திருப்பிக்கறா, என்ன பிரச்னைனு கண்டு புடிச்சி அத சரி பண்ணறதுக்குள்ள அடுத்த சண்ட வந்துருது. இது தான், இப்படி தானும் வாய தொறந்து சொல்லறதும் கிடையாது, நாம ஏதாவுது சொன்னாலும் புரிஞ்சிக்கறதும் கிடையாது..! கல்யாணம் ஆனா பசங்க லைப் காலினு ஃபிரண்ட்ஸ் சொல்லும் போது அப்போ புரில, இப்போ புரிது..!”
” அவரோட ஆஃபிஸ், அவரோட வீடு, அவரோட குழந்தை அது தான் முக்கியம் அப்போ நானு..? மூஞ்ச தூக்கி வெச்சிருக்கனும் மட்டும் சொல்ல தெரியுது. ஆனா ஏன் என்னாச்சுனு ஒரு வார்த்த கேக்க முடியாது. தன் சுகமே பெரும் சுகம்..! சோறாக்கி வெச்சேனா பாப்பாவ ரெடி பண்ணேனா அவளோ தான், அதோட என் வேல முடிஞ்சிது. இங்க ஒருத்தி வீட்டில இருக்காளே, அவளும் வேலைக்கு போறாளே ஏதாவுது கேப்போம் புடிப்போம்னு ஒன்னும் கிடையாது. என் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்ல..! “
“சரி மூட் அவுட்டா இருக்காளே அவளுக்குனு அவளோட ஸ்பேஸ் கொடுப்போம்னு ஒதுங்கி இருந்து, அவளுக்காக அவளோ நேரம் வெயிட் பண்ணி அப்றம் வந்து பேசுனா மூஞ்சில அடுச்ச மாறி ‘ ஒன்னும் இல்லனு ‘ வெடுக்குனு சொல்லிட்டு போய்யிரது..! அப்போ அவளுக்காக அவளோ நேரம் வெயிட் பண்ண நா என்ன கிறுக்கா?”
” நா ஒன்னு இல்லனு சொன்னா அப்படியே விட்டுறதா? இன்னொரு வாட்டி கேட்டா அவரு கௌரவம் கொறஞ்சு போய்யிருமா? எப்போ டா என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகலாம்னு பாக்கறது. நா ஒன்னும் இல்லனு சொன்ன உடனே ஓடிறது. “
” அப்போ பேசாம அவன் டிவோர்ஸ் பண்ணிரு சாத்வி. அதான் உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது. அப்படி ஏன் கஷ்டப்பட்டு சேந்து வாழனும் “
“அண்ணி..!!” தேவியின் பேச்சில் மிகவும் அதிர்ந்து போனாள் சாத்வி.
“புரிஞ்சிக்கல புரிஞ்சிக்கலனு சொல்லுறியே துருவா.. நீ அவளுக்கு புரியற மாறி புரிய வெச்சியா?”
வேலுவின் கூற்றில் யோசனையாய் அவரை பார்த்தான் துருவ்.
“சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். ஷாக்க குறை..! நீ சொன்ன காரணம் எல்லாம் மேம்போக்கா இருக்கற உன் பிரச்னைய சொல்லுறது தான். ஆனா உன் ஆள் மனசுல நீ துருவ் கூட சந்தோசமா இருக்கனும்னு தான் விரும்பற. அதுக்கு சாட்சி நா பிரிஞ்சிடுன்னு சொன்னவுடனே உன் மனசு அடுச்சு கிச்சு பாத்தியா அதான். அப்றம் அவன விட்டு பிரியவும் மாட்ட, அதே சமயம் சந்தோசமா சண்ட போடாம ஒத்துமையாவும் இருக்க மாட்டனா என்ன அர்த்தம் ? இந்த தண்டனை யாருக்கு சாத்வி? உனக்கா?இல்ல அவனுக்கா?”
” துருவ் பொதுவாவே பசங்க சைக்காலஜி வேற பொண்ணுங்க சைக்காலஜி வேற. அது மொத தெளிவா புரிஞ்சிக்கோ. சரி இப்படி வெச்சிப்போம், உன்னோட ஆஃபிஸ்ல உன்னோட வேலைய நீ கரெக்ட்டா பண்ணிட்ட, அதுக்கு உன்னோட மேனேஜர் உன்ன பாராட்டராரு. நீ என்ன பண்ணுவ சந்தோசப்படுவ, அதுவே அவரு ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா வந்து சூப்பர் சூப்பர்னு சொன்னா? நீ என்ன யோசிப்ப, லூசா இந்த ஆளுனு யோசிப்ப கரெக்ட்டா?ஆனா இதே விஷயம் பொண்ணுகளுக்கு நடந்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க. பொண்ணுங்க சலிக்காம ஏத்துக்கற ஒரே விஷயம் பாராட்டு மட்டும் தான்.
இன்னிக்கு சாப்பாடு நல்லா இருந்துச்சு, இந்த ட்ரெஸ் உனக்கு அழகா இருக்கு. அம்மா கிட்ட சண்ட போடாம குடும்ப பிரச்னைய அழகா ஹேண்டில் பண்ண. இந்த மாறி சின்ன சின்ன விஷயங்கள் தான் அவங்க ரொம்ப எதிர்ப்பார்ப்பாங்க அத கரெக்ட்டா செஞ்சிட்டாலே பாதி பிரச்சனை இல்ல”
” ஆமா அவனுக்கு அசால்ட் கொஞ்சம் அதிகம் தான். ஆனா மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஹஸ்பண்டுங்கறது இங்க யாருமே கிடையாது சாத்வி அத மொதல்ல புரிஞ்சிக்கோ..! உனக்கு ஏலக்காய்னா சுத்தமா புடிக்காது தானே ஆனா பிரியாணினா ரொம்ப புடிக்கும்ல..? இப்போ ஏலக்காய் இருக்குங்கறதுக்காக பிரியாணிய சாப்பிடாம இருக்க போறியா? இல்ல அத ஒதுக்கி வெச்சிட்டு வயிறார சாப்பிட போறியா? முடிவு உன் கையில் தான் இருக்கு “
” அவ கோவமா இருந்தா சமாதானம் செய்யனும்னு அவசியம் இல்ல. கூட இருந்தாலே போதும், நாம எல்லாம் என்ன தப்பு பண்ணுறோம் தெரியுமா? குடும்பத்துகாக ஓடுறேன் குடும்பத்துகாக ஓடுறேன்னு குடும்பத்த விட்டே ரொம்ப தூரமா விலகி போய்யிரோம். கல்யாணம் ஆனா புதுசுல மானே தேனே பொன்மயிலே கொஞ்சிட்டு அப்றம் அப்படியே விட்டுட்டா என்ன அர்த்தம். மனசுக்குள்ள ஆயிரம் ஆசை வெச்சிருந்து என்ன பண்ணுறது? வெளிய சொன்னா தானே தெரியும்..!”
“எப்பவுமே யாரும் அவங்க அன்ப சொல்லிட்டே இருக்க மாட்டாங்க..!அது அவங்களோட சின்ன சின்ன செயல்கள தான் வெளிப்படும்..! நாம தான் அத புரிஞ்சிக்கனும். ஒன்னும் இல்ல நா வந்து பஞ்சாமிர்த டப்பா கொடுத்தேன்ல, ‘ என்ன கா ஒன்னு மட்டும் கொண்டு வந்துருக்க சாத்விக்கு இது ரொம்ப புடிக்கும், வீட்டுக்கு போய் இன்னும் ரெண்டு டப்பா கூரியர் போட்டு விடுனு சொன்னான் ‘ உன்மேல அக்கறை இல்லாதவனா இப்படி சொல்ல போறான்..! “
இந்த தகவல் சாத்விக்கு புதிது, ஆச்சிரியமாக தேவியை பார்த்தாள்.
“உங்களுக்குனு ஒரு குவாலிட்டி டைம் கண்டிப்பா வெச்சிக்கோங்க, அந்த டைம் போன் கால்ஸ், வேல, வேற எதுவும் இருக்க கூடாது. மொதல உக்காந்து மனசு விட்டு பேசுங்க. எல்லாத்தயும் உள்ளயே அடக்கி வெச்சிக்கிட்டா குப்ப கூடை மாறி வாழ்கையும் நாத்தம் எடுக்க ஆரம்பிச்சிரும்..! எப்பவுமே ஒரு பிரச்னை வந்தா யார் மேல தப்புனு யோசிக்க கூடாது. ரெண்டு பேரும் சேந்து அத எப்படி சரி பண்ணலாம்னு தான் யோசிக்கனும்.
நீயா நானாங்கற போட்டியில் கடைசியில தோத்து போறது உங்க வாழ்கை தான்..!”
” நிறை குறை இருக்கறவன் தான் மனுஷன். அப்படி இருந்தா தான் மனுஷனே..!! குறைய மட்டும் பாத்துட்டு இருந்தா வாழ்கை கறையா போய்ரும் சாத்வி. நா இங்க வந்து இப்போ கவனச்சித வெச்சி சொல்லறேன். மகி விஷயத்துல்ல அவன் உன்ன பெருசா எதுக்கும் எதிர்ப்பார்த்துக்கறது இல்ல. அவனால முடிஞ்சத அவனே பண்ணிறான். இன்னிக்கு கூட அவள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துட்டு அவன் தானே குளிக்க வெச்சான்..! இது மாறி யார் செய்வா சொல்லு. பொதுவாவே குழந்தைங்கனா அம்மா தான் பாக்கனும்னு ஒரு எழுதப்படாத சட்டம் நம்ம மேல தினிக்கப்பட்டுருக்கு.
அதுக்குனு குழந்தைங்கள கவனிக்காத அப்பா எல்லாம் தப்புனு சொல்லிற முடியுமா. ஒவ்வொருத்தவங்க இயல்பும் ஒவ்வொரு மாறி சாத்வி. அதுக்கு ஏத்த மாறி அவங்கள புரிஞ்சி முழுசா அவங்கள ஏத்துக்கனும்..! சரி ரொம்ப அட்வைஸ் போட்டு உன்ன டார்ச்சர் பண்ணுறேன்னு நெனைக்கறேன். தூங்கு,ஆனா நா சொன்னத மட்டும் மறந்தராத. எப்படி குழந்த பருவத்துல்ல அவங்கள விளையாட விடனுமோ அதே மாறி தான்,வாழ வேண்டிய வயசுல வாழனும், சிறப்பா வாழனும். அத விட்டுட்டு இந்த கோவம், ஈகோ, டென்ஷன் எல்லாம் எதுக்கு? “
“மாமா இப்போ தெரியுது, ஏன் என் அக்கா கட்டுனா உன்ன தான் கட்டுவேனு ஒத்த கால குதிச்சிதுனு ம்ம்ம்.. பலே ஆள் மாமா நீங்க “
“ஹாஹா.. அட விடு டா.. நம்ம அம்மா அப்பாவோ, நம்ம குழந்தைகளோ, இல்ல நம்ம ஃப்ரண்ட்ஸ், சொந்த பந்தங்களோ யாரும் நம்ம கூட கடைசி வரைக்கும் வர போறது கிடையாது, நம்ம வாழ்கை துணைய தவற..! ஆனா அவங்கள தவற மத்தது எல்லாத்துக்கு நாம் முக்கியதுவம் கொடுக்கறோம். கடைசி காலத்துல்ல ஒருத்தர் கை ஒருத்தர் புடிச்சிக்கிட்டு பழச எல்லாம் நெனச்சி பாக்கும் போது, நம்ம மனசுல ஒரு நிறைவும் உதட்டுல ஒரு சிரிப்பும் இருக்கனும். அப்படி இருந்தா தான் வாழ்கையில்ல நீ ஜெயிச்சுட்டேன்னு அர்த்தம். அப்படி இல்லனா நீ என்ன சாதிச்சி இருந்தாலும் எல்லாமே ஜீரோ தான்..!”
கண்கள் முடினாலும் துருவ்விற்கும் சாத்விக்கும் எண்ணங்கள் ஓயவில்லை..! இவ்வளவு நாள் விடையறியாமல் மனதில் குத்தி கொண்டிருந்த பாரம் சட்டென்று மறந்தது போல் ஒரு உணர்வு. சில விஷயங்கள் நாமே அறிந்தவை தான். இருப்பினும் பிறர் சொல்லும் பொழுது தான் அதை முழுதாக ஏற்றுகொள்கிறோம்.
தேவையான நேரத்தில் உதவி செய்வதற்கு தானே உற்றார் உறவினர்..!
பொருள் தந்து உதவுவதை விட இப்படி தம் அறிவை பகிர்ந்து உதவுவதே பெரும் உதவி ஆகிறது..!
‘செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை. ‘
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
இரவு உணவை சமைத்து கொண்டிருந்தாள் கண்மணி. டாக்டர் கொடுத்திருக்கும் டையட் சார்ட் படி தான் வருணிற்கு உணவு.
வேலை விஷயமாக போன் பேசி கொண்டிருந்தான் வருண். சமைத்து முடித்த பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு அவன் எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரைகளை அவனிடம் கொண்டு வந்தாள் கண்மணி.
அவளை பார்த்தவன் அவளை கண்டுகொள்ளாது வெளியே ஹாலில் வந்து போன் பேசினான். இவளும் விட மாட்டேன் என அவன் பின்னாலேயே சுற்றி கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் அடைந்தவன். போனை வைத்து விட்டு அவளை முறைத்தான்.
” இப்படி கண்ண உருட்டுனா பயந்துருவோமா? “
அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,
“ஏன் இத எல்லாம் பண்ணிட்டு இருக்க?”
“உங்களுக்கு தெரியாதா?” என்றவள் சிறு இடைவெளி விட்டு, ” வேற என்ன வேண்டுதல் தான். இப்படி நாளு பேருக்கு சமைச்சி போட்டா நல்ல புருஷன் கிடைப்பானு என் கனவுல மாரியாத்தா வந்து சொல்லுச்சி அதான்..! இப்போ நீங்களா மாத்திரைய சாப்பிடறீங்களா இல்ல நானே ஊட்டி விடட்டா? ” என்றவள் அவனை நெருங்க,
உடனே இரண்டடி பின்னால் சென்றவன். அவளிடம் இருந்து மாத்திரையை பிடுங்கி கொண்டான்.
அதில் சிரித்தவள், “ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும். அடுத்து சாப்பாடு கொண்டு வருவேன். அதயும் இப்படி சமத்தா சாப்பிடனும் ஓகே?”
மூன்று அறை கொண்ட விசாலமான வீடு தான் கார்த்தியுடையது. அதனால் ஆளுக்கு ஒரு அறையில் தங்கி கொண்டனர்.
தூங்கி கொண்டிருந்த வருணிற்கு யாரோ அவன் கையை சுரண்டுவது போல் இருக்க,மெல்ல கண்களை திறந்து பார்த்தான்.
கண்மணி தான் அவன் அருகில் அமர்ந்து அவனை எழுப்ப முயற்சித்து கொண்டிருந்தாள்.
அவளை அருகில் பார்த்தவன் பதறி அடித்து எழ முயற்சிக்க, அவன் வாயை பொத்தி, ” ஷ்ஷ்ஷ்..! கத்திறாதீங்க அப்றம் அந்த காண்டா மிருகம் முழுச்சிக்கிச்சினா என் பிளான் எல்லாம் சொதப்பிரும்..! “
அவளின் கையை தட்டி விட்டவன்,
“என்ன?” என்றான் மெல்லிய குரலில்.
” என் கூட வாங்க உங்க கிட்ட ஒன்னு காட்டனும் ” மணியை பார்க்க மணி அதிகாலை நாலறையை காட்டியது.
‘இந்த நேரத்தில் என்ன ‘ என்று அவன் யோசிக்க,
“வாங்க வாங்க டைம் ஆச்சு ” என்றவள் அவனை பிடித்து இழுக்க, அவள் சொல்லுவதை கேட்காமல் நச்சரிப்பதை விட மாட்டாள் என அறிந்தவன் அவளோட சென்றான்.
மொட்டை மாடிக்கு தான் அழைத்து வந்திருந்தாள், சுற்றியும் ஒரே கும்மிருட்டாக இருக்க,
” இங்க என்ன? ” என்றான் சற்று எரிச்சலாக,
” இருங்க இருங்க சொல்லறேன் ” என்றவள் எதயோ தேடி கொண்டிருந்தாள். தேடியது கிடைத்து விட,
“ஆதீஈஈ..” என உற்சாக குரலோடு அவனை நெருங்கியவள்.
” கொஞ்சம் கும்மிங்க ” என அவன் உயரத்திற்கு எம்பி ஒரு துணி வைத்து அவன் கண்களை கட்டினாள்.
“ஏய்… என்ன பண்ணுற”
“ஒரு நிமிஷம்.. அசையாதீங்க ப்ளீஸ் கொஞ்சம் நேரம் தான் ” என்றவள் அவன் கைகள் பிடித்து கொண்டு கொஞ்ச தூரம் நடக்க வைத்தாள்.
“ஹான்.. த்ரீ.. டூ… ஒன்..!இப்போ கட்ட அவுருங்க சீக்கரம் சீக்கிரம் ” என்றவள் வருணின் கண் கட்டை அவிழ்த்து விட. அவன் கண் முன் தோன்றிய காட்சியில் தன்னை மறந்து அதை பார்த்து கொண்டிருந்தான்.
ஓர் அழகிய சூரிய விடியல்..! அவ்வளவு நேரம் அங்கு ஆட்சி செய்த இருட்டின் கருப்பை மஞ்சள் கதிர்கள் விரட்டியடிக்க, குருவிகளின் கீச் சத்தமும், இதமான வெயிலோடு உறவாடிய தென்றல் ஸ்பரிசமும் அவனுள் ஒரு இதத்தை கொடுத்தது.
” ஒவ்வொரு இருட்டுக்கு அப்றமும் இந்த மாறி ஒரு அழகான விடியலும் இருக்கு. இருட்டு நீளமா இருக்குறனால விடியலே இல்லனு அர்த்தம் கிடையாது..! இருட்டு வலிய கொடுத்தாலும் அதுக்கு அப்றம் வர வெளிச்சம் அதுக்கு மருந்தையும் கொடுக்கும். எப்பவுமே உங்க கூட நா இருப்பேன்..! கண்டிப்பா உங்களுக்கு சரி ஆகிரும் ” கண்மணியின் குரல் அவன் காதில் கேட்டாலும் திரும்பி அவள் முகம் நோக்கும் தைரியம் அவனிற்கு வரவில்லை.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என அவனிற்கே தெரியவில்லை. சொல்லிட்டு அவள் சென்றுவிட்டாள்,ஆனால் அவளின் வார்த்தையின் தாக்கம் அவனுள் இன்னும் இருந்தது.
‘ஏன்.. ஏன்.. ஏன்…? அப்படி என்ன இந்த பெண்ணிற்கு நாம் செய்து விட்டோம். அவளின் அன்பில் திக்குமுக்காடி போனான் வருண். அதுவும் என்னை போல் ஒருவனை எப்படி அவளிற்கு பிடித்தது? உயிருக்கு உயிராய் நேசித்த பெண்ணே சீ.. என உதறி தள்ளிவிட்டு சென்ற பிறகு எல்லாம் அறிந்தும் ஏன் இவள் என்னோட உறவாட நினைக்கிறாள்?
அன்று ஒரு முறை அவனிடம் அவள் சொன்ன வாக்கியம் நினைவிற்கு வந்தது.
“ம்ம்ச் என்ன பாஸு நீங்க இப்படி பேசறீங்க.. நம்பிக்கைதான் நம் வாழ்க்கையின் தும்பிக்கை பாஸ்..!
வேணும்னா பாருங்க நீங்க நெனச்சது எல்லாம் பொய்யினு நிரூபிக்கிற மாதிரி
நீங்க போதும் போதும்னு மூச்சு மூட்டுற அளவுக்கு உங்க மேல எதிர்பார்ப்பில்லாத அன்ப கொட்டோ கொட்டுன்னு கொட்ட ஒருத்தவங்க வருவாங்க, அப்போ உங்களுக்கு தெரியும் இந்த கண்மணி சொன்னது உண்மைன்னு..!”
அவளின் அலாதி அன்பின் முன்பு அவளிடம் கோவம் காட்ட நினைத்தும் தோற்று தான் நிற்க்கிறான் அவன். வேண்டாம் அவளிற்கு நான் வேண்டாம். இப்படி ஒரு நோயாளியை கட்டி கொண்டு அவள் கஷ்டப்பட வேண்டாம். அவன் மனம் ஓலமிட்டது.
அப்பொழுது உனக்கு அவள் வேண்டும் தானே? மனசாட்சி கேள்வி கேட்க திடுக்கிட்டான் வருண்.
அவள் மேல் உள்ள உணர்வின் பெயர் என்ன என்னும் ஆராய்ச்சியில் இறங்க விரும்பவில்லை அவன்.
மண்டையை எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது அவனிற்கு. இவ்வளவு மாத காலமாக நம் வாழ்கை இப்படி தான். இது தான் நம் முடிவு என உறுதியாக நினைத்து கொண்டிருந்தவனின் வாழ்வை புரட்டி போட வந்த அன்பு ராட்ச்சஸி அவள்..!
அதன் பின் கண்மணியிடம் அவன் எதுவும் பேசி கொள்ளவில்லை. அவள் முகம் பார்ப்பதையே முழுதாக தவிர்த்து வந்தான்.
அன்று டிரீட்மென்ட் முடிந்தது காரில் மூவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
வழக்கம் போல் வலியில் அவன் முகம் சுருங்க,
“ஹலோ… யப்பா வண்டி ஓட்டுறவரே, அதோ அங்க தெரியுது பாரு பேக்கரி அங்க வண்டிய நிறுத்து. உன் ஃபிரண்டுக்கு கொஞ்சம் பிரெஷ் ஜூஸ் வாங்கி கொடுக்கலாம். கொஞ்சம் ஈனர்ஜிட்டிக்கா பீல் பண்ணுவாரு.” என்றவள், பேக்கரிக்குள் புகுந்தாள். ஆனால் உள்ளே சென்றவள், போன வேகத்தில் வெளியே ஓடி வர அவளின் கலவர முகம் ஏதோ தவறாக இருப்பதை உணர்த்த உடனே காரில் இருந்து இறங்கினான் வருண்.
“என்ன ஆச்சி?” என்றவன் அவளை நெருங்கினான்.
இப்போ வரவா.. அப்போ வரவா என கண்ணீர் துளிகள் முட்டி கொண்டு நிற்க,
“அ.. அப்பா… அப்பா…” என்றவள் அழுது கொண்டே பேக்கரியின் உள்ளே கைக்காட்ட, அங்கு ஒரு தம்பதியினர் பதிமூன்று பதிநான்கு வயதிற்கும் ஒரு சிறுமியோடு அமர்ந்திருந்தனர். அந்த சிறுமியின் அப்பா கேக்கை அவளிற்கு ஊட்டி கொண்டிருந்தார்.அது வேறு யாரும் இல்லை கண்மணியின் தந்தை சுந்தரேசன் தான்..!
அங்கு நிற்க பிடிக்காமல் கால் போன போக்கில் வேகமாக நடந்தாள் கண்மணி.
” ஹேய்..கண்மணி எங்க போற நில்லு ” என்றவன் அவளை இழுத்து பிடிக்க,
முட்டி வந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து கொண்டே, ” எனக்கு வில்லனா இருந்தவரு அப்படியே இருந்து இருக்க வேண்டியது தானே? இப்போ மட்டும் எப்படி நல்லவரா இருக்கறாரு.. ஒரு நாள் கூட எனக்கு இப்படி .. ” சொல்லும் போதே தொண்டை அடைக்க
” அப்பாக்கும் என்ன புடிக்கல, அம்மாக்கும் என்ன புடிக்கல, இப்போ பாசமா இருக்காங்க ஏன் என்கிட்ட அப்படி இல்ல? அப்போ அப்போ நா தான் அவங்களுக்கு வேண்டாத புள்ளையா? நா என்ன தப்பு பண்ணேன்? ஏன் என்னய மட்டும் யாருக்குமே புடிக்க மாட்டீங்குது?” தேம்பி தேம்பி அவள் அழுக. பொங்கி வந்த கண்ணீரோடு அவள் மனதின் ஏக்கம், கோவம், சோகம், ஆசை எல்லாம் கரைந்தோடியது.
அவளின் கண்ணீரை வருணால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
அவள் முகத்தை கையில் ஏந்தியவன்,
‘இங்க என்ன பாரு, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா நா இருக்கேன் உனக்கு, நா இருக்கேன்..!” என்றவன் அவளை இறுக அணைத்து கொண்டான்.
இருவரும் காதலை உரைத்து கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குள்ளும் காதல் மட்டுமே ஆட்சி புரிந்தது.
உரைத்தால் தான் காதலா?
உணர்ந்தாலே அது காதல் தான்..!